தொண்டைமண்டலப் பகுதிகளில் பல்வேறு சிறுதெய்வ வழிபாடுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் போன்ற வழிபாடுகள் பண்டைக்காலத்திலும் இடைக்காலத்திலும் காஞ்சிமாநகர் பகுதிகளில் காணப்பட்டுள்ளன. தற்போது இச்சிறுதெய்வ வழிபாடுகள் காஞ்சிமாநகர் பகுதிகளில் காணப்படவில்லை. ஆனால் சமணசமய பெளத்தசமயக் கோயில்களில் ஐயனார், சாஸ்தா வழிபாடுகள் காணப்படுகின்றன (வேங்கடசாமி,2003:125-126).
ஐயனார்
ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் என்னும் பெயர்களையுடைய தெய்வம் ஊர்த்தெய்வமாக இப்போது இந்துக்களால் வணங்கப்படுகிறது. இந்தத் தெய்வம் பெளத்தம், சமணம் எனும் இரு சமயங்களிலிருந்து இந்து மதத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பெளத்தமதத்திலிருந்து சாஸ்தா என்னும் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதைப் பெளத்தமும் தமிழும் என்னும் நூலில் எழுதப் பட்டுள்ளது. சமணர்களுடைய கோவில்களில் இத்தெய்வத்தை இன்றும் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாகச் சமணர் இதனை இன்றும் வணங்குகின்றனர். இத்தெய்வத்திற்குப் பிரம்மயட்சன், சாத்தனார் முதலிய பெயர்களை அவர்கள் கூறுகின்றனர். ஜினகாஞ்சியில் உள்ள திருப்பருத்திக்குன்றத்துச் சமணக்கோயிலில் இத்தெய்வத்தின் உருவம் பூசிக்கப்படுகிறது. ஏனைய சமணத்திருக்கோவில்களிலும் இத்தெய்வத்தின் உருவம் பூசிக்கப்படுகிறது. இது சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட சிறுதெய்வங்களில் ஒன்றாகும். சமணர்களாக இருந்து இந்துக்களாக மாறிய ஆருகதர்களால் இது இந்து மதத்தில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும். பெளத்தமதத்திலிருந்தும் சமணமதத்திலிருந்தும் ஐயனாரை (சாஸ்தாவை) இந்துக்கள் ஏற்றுக்கொண்டனர். பெளத்த ஐயனாருக்கும் சமண ஐயனாருக்கும் உள்ள வேற்றுமையாதெனில், பெளத்த ஐயனாருக்கு வாகனம் குதிரை; சமண ஐயனாருக்கு வாகனம் யானை ஆகும். சைவக்கோவில்களில் பிள்ளையார் அல்லது முருகன் எவ்வாறு போற்றப்படுகின்றனரோ அவ்வாறே சமாணக் கோவில்களில் ஐயனார் எனப்படும் பிரம்மயட்சன் பூசை முதலிய சிறப்பும்பெற்று இன்றும் விளங்குகின்றார் (வேங்கடசாமி, 2003 : 125 - 126).
தொண்டைமண்டலத்திற்கு உட்பட்ட மறைந்துபோன சமணக்கோவில்கள், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றையும் மறையாமல் உள்ள சமணக்கோவில்கள், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றையும் பின்வருமாறு காணலாம். கீழ்க்காணும் குறிப்புக்கள் அனைத்தும் சீனி.வேங்கடசாமி எழுதிய சமணமும் தமிழும் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டவைகளாகும் (2003 : 131 - 152).
சென்னைமாவட்டம்
மயிலாப்பூர்: சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பண்டைக்காலத்தில் சமணக்கோவில் ஒன்று இருந்தது. இந்தச் சமணக்கோவிலில் நேமிநாத தீர்த்தங்கரர் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோவிலில் எழுந்தருளியிருந்த நேமிநாதரைப் போற்றிப் பாடிய நூல் திருநூற்றந்தாதி என்பதாகும். திருநூற்றந்தாதியைப் பாடினவர் அவிரோதியாழ்வார் என்பவராவர். இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர் சமணராக மாறி இந்நூலை இயற்றினார் என்பர். திருநூற்றந்தாதியின் முதல் செய்யுள் பின்வருமாறு அமைகிறது:
மறமே முனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட்
கறமே பொழியு மருட்கொண்டலே யதரஞ் சிறந்த
நிறமே கரியவொண் மாணிக்கமே நெடுநா லொளித்துப்
புறமே திரிந்த பிழையடி யேனைப் பொறுத்தருளே.
அருகக்கடவுள் மயிலாப்பூரில் கோவில்கொண்டிருந்தார் என்பதைத் திருக்கலம்பகம் எனும் நூல்,
மயிலாபுரி நின்றவர் அரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவர் அலர்பூவி னடந்தவர்
என்று கூறுகிறது. மயிலாப்பூர்ப் பத்துப்பதிகம், மயிலாப்பூர் நேமி நாதசுவாமி பதிகம் என்னும் செய்யுள்களும் சமணர்களால் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேமி நாதர்கோவில் மயிலாப்பூர்க் கடற்கரையில், இப்போது சாந்தோம் கோவில் என்று கூறப்படுகிற கிறித்துவரின் தோமையார்கோவில் இருக்கும் இடத்தில் இருந்தது. பிறகு ஒரு காலத்தில் கடல்நீர் இக்கோவிலை அழித்துவிடும் என்று அஞ்சி இக்கோவிலில் இருந்த அருகக்கடவுளின் திருமேனிகளைச் சித்தாமூர் என்னும் ஊரில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள். இங்குள்ள ஒருகல் எழுத்துச்சாசனம்,
வட்பட நேமிநாத ஸ்வாமிக்(கு)க்
குடுத்தோம் இவை பழந்தீ பரா
என்று கூறுகிறது. இதனால் நேமிநாதர்கோவில் இங்கு இருந்த செய்தி உண்மை என்பது அறியப்படும். தோமையார் கோவிலுக்கு எதிரில் உள்ள அனாதைப்பிள்ளைகள் விடுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னே சமணக்கடவுள் உருவங்கள் இருந்தன என்று தொல்பொருள் ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதன் அருகில் உள்ள கன்னிப்பெண்கள் மடத்தில் ஒருபெரிய சமணத்திருவுருவம் இருந்ததையும் அது இப்போது அவ்விடத்தில் புதைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மயிலாப்பூர் நேமிநாதர் பேரால் இயற்றப்பட்ட நூல் நேமிநாதம் என்பதாகும். நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் எனும் சமணர் மயிலாப்பூரில் இருந்தவர் என்பர். வேறு சமணக்கடவுள் உருவங்கள் மயிலாப்பூர் ஆயர் வீட்டிலும் உள்ளன. இவை தோமையார்கோவில் தோட்டத்தில் பூமியில் இருந்து கிடைத்தவைகளாகும். மயிலாப்பூரில் இருந்த வேறு இரண்டு சமண உருவங்கள் சீனி. வேங்கடசாமி தன்னுடைய நண்பர் ஒருவரிடம் இருக்கின்றன என்று கூறியிருக்கிறார் (வேங்கடசாமி, 2003 :131-132).
காஞ்சிபுரம் மாவட்டம்
உத்தரமேரூர்: இந்த ஊர் சுந்தரவரதப் பெருமாள்கோவிலில் ஆதிநாதர் (இருஷபதேவர்) திருவுருவம் இருக்கிறது. இங்கு முற்காலத்தில் சமணர் இருந்திருக்க வேண்டும்.
ஆநந்தமங்கலம்: இவ்வூர் ஒலக்கூர் இரயில் நிலையத்திலிருந்து 5 மைல் தூரத்தில் உள்ளது. இங்கு கற்பாறையில் சமணத்திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்களின் நடுநாயகமாக உள்ளது ஆனந்ததீர்த்தங்கரரின் உருவம். இத்தீர்த்தங்கரரின் பெயரே இவ்வூருக்கும் பெயராக அமைந்திருக்கிறது. ஆனந்ததீர்த்தங்கரருக்கு ஒரு யஷி குடைபிடிப்பதுபோன்றும் மற்றொரு யஷி சாமரை வீசுவதுபோன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை கொண்ட பரகேசரிவர்மனுடைய (பராந்தகன் 1) 38ஆவது ஆண்டில் (கி.பி.954-இல்) எழுதப்பட்ட சாசனம் இங்கு உள்ளது. இங்கு ஜினகிரிப்பள்ளி இருந்ததென்றும் வினபாசுரகுருவடிகள் மணவர் வர்த்தமானப்பெரியடிகள் என்பவர் இவர் நாடோறும் இப்பள்ளியில் ஒரு சமண அடிகளுக்கு உணவுகொடுக்கும் பொருட்டு 5 கழஞ்சு பொன் தானம் செய்ததையும் இச்சாசனம் (அரசாணை) கூறுகின்றது. இவ்வூரில் இப்போது சமணர் இலர். சுற்றுப்புற ஊர்களிலிருந்து சமணர் தைத் திங்களில் இங்கு வந்து பூசைசெய்து செல்கின்றனர்.
சிறுவாக்கம்: இவ்வூரில் இருந்த சினகரம் இடிந்துகிடக்கிறது. இங்குள்ள அரசாணையால் இச்சினகரத்துக்கு திருகரணப்பெரும்பள்ளி என்பது பெயர் என்றும் இதற்கு நிலங்கள் தானம் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது.
பெரியகாஞ்சிபுரம்: இங்குள்ள ஒருதோட்டத்தில் சமணத்திருவுருவம் ஒன்று இருக்கிறது. பெரிய காஞ்சிபுரத்துக்குப்போகும் பாதையில் ஒரு சமணத்திருவுருவம் இருக்கிறது. காமாட்சியம்மன் கோவிலில் இரண்டாவது பிரகாரத்தில் சமண உருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. யாதோத்காரி பெருமாள்கோவில் அருகில் ஒரு சமண உருவம் இருக்கிறது.
மாகறல்: இங்கு ஆதிபட்டாரகர் (இருஷபதேவர்) கோவில் ஒன்று உள்ளது. இவ்வூர் அடிப்பட்ட அழகர் கோவிலில் இரண்டு சமண உருவங்கள் உள்ளன. இவ்வூர் திருமாலீஸ்வரரைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். சம்பந்தர் இங்கு வந்தபோது இங்கிருந்த சமணர் துரத்தப்பட்டனர் என்று இவ்வூர் ஐதீகம் கூறுகிறது. இங்குள்ள ஆதிபட்டாரகர் கோவில் இப்போது சிதலமைடைந்து கிடக்கிறது. சீனி.வேங்கடசாமி தன்நண்பர் ஒருவருக்கு இவ்வூரிலிருந்த சமண தீர்த்தங்கரரின் கல்சிலை ஒன்று கிடைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் ( 2003 : 132 - 133).
ஆர்ப்பாக்கம்: இவ்வூர் மாகறலுக்கு ஒரு மைல் தூரத்தில் உள்ளது. ஆரியப்பெரும்பாக்கம் என்பது இதன் சரியான பெயர். இங்கு ஆதிநாதர் கோவில் உள்ளது.
விஷார்: இதும் மாகறலுக்கு அருகில் உள்ள ஊர். இங்கும் சிதைந்துபோன சமணத்திருவுருவங்கள் காணப்படுகின்றன.
குன்னத்தூர்: (திருபெரும்பூதூர் வட்டம்): இங்குள்ள திருநாகேஸ்வரர் கோவிலில் உள்ள சாசனம் (அரசாணை) பெரியநாட்டுப்பெரும்பள்ளி என்னும் பள்ளியைக் கூறுகிறது. இது சமணப்பள்ளியாக இருக்கக்கூடும். இந்த வட்டத்தில் அம்மணம்பாக்கம் என்னும் இனாம் சிற்றூர் ஒன்று உண்டு. இப்பெயர்கள் இங்கு சமணர் இருந்ததைக் குறிக்கின்றன.
கீரைப்பாக்கம்: (முந்தைய செங்கல்பட்டு வட்டம்): இவ்வூர் ஏரிக்கருகில் உள்ள கற்பாறையில் உள்ள சாசனம் (அரசாணை) கி.பி.9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. கீரைப்பாக்கத்துக்கு வடக்கே தேசவல்லப ஜினாலயம் என்னும் சமணக்கோவிலைக் குமிழிகணத்து யாபனீய சங்கத்தைச் சேர்ந்த்த மகாவீரகுருவின் மாணாக்கர் அமரமுதல் குரு கட்டினார் என்றும் சமணசங்கத்தாரை உண்பிக்கக் கட்டளை ஏற்படுத்தினார் என்றும் இந்தச் சாசனம் (அரசாணை) கூறுகின்றது.
திருப்பருத்திக்குன்றம்: ஜினகாஞ்சி என்பது இதுவேயாகும். இங்கு எழுந்தருளியுள்ள அருகக்கடவுளுக்குத் திரைலோக்கியநாதர் என்றும் திருப்பருத்திக்குன்றாழ்வார் என்றும் சாசனங்களில் (அரசாணைகளில்) பெயர் கூறப்படுகின்றன. மல்லி சேன வாமனாச்சாரியார் மாணவர் பரவாதிமல்லர் புஷ்ப சேனவாமனாச்சார்யர் என்னும் முனிவர் இக்கோவில் கோபுரத்தைக் கட்டினார் என்று இங்குள்ள ஒரு சாசனம் (அரசாணை) தெரிவிக்கின்றது. இக்கோவிலில் உள்ள குராமரத்தடியில் இவ்விரு ஆசாரியர்களின் பாதங்கள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன. மல்லிசேன வாமனாசாரியார் மேருமந்தரபுராணத்தையும் நீலகேசி என்னும் நூலுக்குச் சமயதிவாகரம் என்னும் உரையையும் இயற்றியுள்ளார். இந்நூல்கள் இரண்டும் பிரபல சமணப்பெரியாராகிய ராவ்சாகிப் அ.சக்கரவர்த்தி நயினார் M.A.,I.E.S. அவர்களால் அச்சிடப்பெற்றுள்ளன. இரண்டாயிரம் குழிநிலம் இக்கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் (அரசாணை) கூறுகிறது. விஷார் என்னும் சிற்றூரார் விக்கிரமசோழ தேவரது 13வது ஆண்டில் இக்கோவிலுக்கு நிலம் விற்ற செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது. கைதடுப்பூர் சிற்றூர் அவைத்தார் திருப்பருத்திக்குன்றத்து ரிஷிசமுதாயத்தாருக்குக் கிணறு தோண்டிக்கொள்ள நிலம் தானம்செய்த செய்தியை மற்றொரு சாசனம் கூறுகின்றது. இக்கோவிலில் உள்ள குராமரத்தைப் புகழ்ந்து கீழ்க்கண்ட பாடல் பாடப்பட்டுள்ளது:
தன்னளவிற் குன்றா துயராது தன்காஞ்சி
முன்னுனது மும்முனிவர் மூழ்கியது – மன்னவந்தன்
செங்கோல் நலங்காட்டும் தென்பருத்திக் குன்றமர்ந்த
கொங்கார் தருமக் குரா.
சைதாப்பேட்டைவட்டத்தில் மாங்காடு சிற்றூர்க் காமாட்சியம்மன் கோவில் கல்வெட்டில் பள்ளிச்சந்தம் நிலம் கூறப்படுகிறது. இவ்வட்டம் திருஆலம் தர்மீஸ்வரர் கோவில் சாசனம் தேமீஸ்வரமுடைய மகாதேவரைக் குறிப்பிடுகிறது. இது நேமிநாதர் கோவிலாக இருக்கக்கூடும். முந்தைய செங்கல்பட்டு வட்டத்தில் அம்மணம்பாக்கம் என்னும் சிற்றூர்களும் மதுராந்தகம் வட்டத்தில் அம்மணம்பாக்கம் என்னும் சிற்றூர்களும் பொன்னேரி வட்டத்தில் அருகத்துறை அத்தமணஞ்சேரி என்னும் சிற்றூர்களும் திருவள்ளுர் வட்டத்தில் அம்மணம்பாக்கமும் உள்ளன. இவை இங்கு சமணர் இருந்ததைத் தெரிவிக்கின்றன.
புழல்: சென்னைக்கு வடமேற்கே 9 மைல் தூரத்தில் புழல் என்னும் சிற்றூர் உண்டு. இங்கு ரிஷபதேவருக்கு (ஆதிநாதர் பகவானுக்கு) ஒருகோவில் உண்டு. இதனால் புழல் சிற்றூர் பண்டைக்காலத்தில் சமணச்சிற்றூராக இருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டுச் சிற்பமுறையில் அமைந்திருந்த இந்தக் கோவிலின் கோபுரம் பழுதாகிவிட்டபடியால், சென்னையிலுள்ள சில வடநாட்டுச்சமணர் இக்கோவிலை வடநாட்டுச் சிற்பமுறையில் புதுப்பித்துள்ளனர். இக்கோவிலில் இப்போதும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வில்லிவாக்கம்: இவ்வூரில் வீற்றிருக்கும் கோலத்தில் ஒரு சமணத்திருவுருவம் உள்ளது.
பெருநகர்: (பென்னகர்) காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம், மதுராந்தகத்திலிருந்து வடமேற்கே 19 மைல் தொலைவில் உள்ளது. இந்தச் சிற்றூர்க் கிழக்கே சமணக்கோவில் ஒன்று இடிந்து கிடக்கிறது. இக்கோவில் கற்களைக்கொண்டுபோய் இவ்வூர்ப் பெருமாள்கோவிலைக்கட்ட உபயோகப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது (வேங்கடசாமி, 2003 : 132 - 136).
முந்தைய வடஆர்க்காடு மாவட்டம் (வேலூர்)
கச்சூர்: காளாஸ்தி ஜமின் என்றழைக்கப்படும் கச்சூர் திருவள்ளூருக்கு வடக்கே 12 மைல் தொலைவில் உள்ளது; கச்சூர் மாதரபாக்கம் உள்ளது. இங்கு ஒரு சமண பஸ்தி உள்ளது.
நம்பாக்கம்: காளாஸ்தி ஜமின். இது திருவள்ளூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 9 மைலில் உள்ளது. இங்கு முன்பு ஒரு சமணக்கோவில் இருந்ததென்றும் பிற்காலத்தில் அக்கோவில் சைவக்கோவிலாக மாற்றப்பட்டதென்றும் கூறப்படுகிறது. இச்சைவக்கோவிலுக்கு மண்டிஸ்வர சுவாமி கோவில் என்று பெயர் வழங்கப்படுகிறது.
காவனூரு: குடியாத்தம் வட்டம், குடியாத்தத்திலிருந்து கிழக்கே 8 மைல் தொலைவில் உள்ள இந்தக் சிற்றூரில் சமணத்திருவுருவங்கள் உள்ளன.
குகைநல்லூர்: குடியாத்தம் வட்டம், திருவல்லம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 3 மைல் தொலைவில் உள்ள இவ்வூரில் சமண உருவங்கள் உள்ளன.
கோழமூர்: இது குடியாத்தம் வட்டம், குடியாத்தத்திலிருந்து கிழக்கே 3 மைல் தொலைவில் விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 3 மைல் தொலைவில் உள்ளது. இங்கு சமணச் சின்னங்கள் காணப்படுகின்றன.
தென்னம்பட்டு: இது குடியாத்தம் வட்டம்; ஆம்பூர் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 5 மைல். இச்சிற்றூரின் தெற்கே 100 கெஜ தூரத்தில் ஒருகல்லில் செதுக்கப்பட்ட ஓர் உருவம் காணப்படுகிறது. இவ்வுருவம் முன்பு சமணக்கோவிலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
திருமணி: இது விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 4 மைல் தொலைவில் உள்ளது. இங்கு சமண உருவங்கள் காணப்படுகின்றன.
பெருங்கங்கி: வாலாஜாபேட்டை வட்டம். வாலாஜாபேட்டைக்கு வடக்கே 9 மைல் தொலைவில் உள்ள இவ்வூர் சமணரின் முக்கிய சிற்றூராகும். இங்கு ஏரிக்கரையிலும் கலிங்கின் அருகிலும் சிற்றூரில் பெரிய மரத்தடியிலும் சமண உருவங்கள் உள்ளன.
சேவூர்: இது ஆரணி ஜாகீர்; ஆரணியிலிருந்து வடமேற்கே 2 மைல் தொலைவில் உள்ளது. இங்கு ஒரு பழைய சமணக்கோவில் உள்ளது.
திருமலை: (வைகாவூர் திருமலை) இது போளூர் வட்டம்; போளூரிலிருந்து வடகிழக்கே 6 மைல் தொலைவிலும் வடமாதி மங்கலம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 மைல் தொலைவிலும் உள்ள குன்றின்மேல் நேமிநாத தீர்த்தங்கரரின் திருவுருவம் பாறையில் பெரியதாகச் செதுக்கப்பட்டு161/2 அடி உயரத்தில், மிகக்கம்பீரமாகக் காணப்படுகிறது. குந்தவை ஜினாலயம் என்று சாசனங்களில் இதற்குப் பழையபெயர் கூறப்படுகிறது. சோழ அரசர் குடும்பத்தில் பிறந்த குந்தவை என்னும் அம்மையாரால் இது அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சமணத்திருவுருவங்களில் இவ்வுருவமே பெரியது என்று கருதப்படுகிறது. இக்குன்றின் அடிவாரத்திலும் இரண்டு சமணக்கோவில்கள் உள்ளன. இக்குன்றில் இயற்கையும் செயற்கையுமாக அமைந்துள்ள குகையில் சோழர்காலத்து ஓவியங்கள் சிதைந்து காணப்படுகின்றன. இவற்றில் சமவ சரணம் போன்ற சித்திரம் ஒன்று சிதைந்து காணப்பட்டுள்ளன. பாறையில் சில சிற்ப உருவங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. செயங்கொண்ட சோழமண்டலத்துப் பங்கள நாட்டுநடுவில் வகை முகைநாட்டுப் பள்ளிச்சந்தம் வைகாவூர்த்திருமலை ஸ்ரீகுந்தவை ஜினாலயம் என்று கல்வெட்டுக் கூறுகின்றது (S.I.IVOL.NO.98). கடைக்கோட்டூர்த் திருமலைப்பாவாதி மல்லா மாணாக்கர் அரிஷ்டநேமி ஆச்சாரியார் ஒரு திருமேனி (திருவுருவம்) இக்கோவிலில் செய்து வைத்ததாக இன்னொரு கல்வெட்டெழுத்துக் கூறுகின்றது. பொன்னூர் மண்ணை பொன்னாண்டை மகள் நல்லாத்தாள் என்பவர், ஸ்ரீவிஹார நாயக்கர் பொன்னெயில் நாதர் (அருகர்) திருவுருவம் அமைத்து இக்கோவிலுக்குக் கொடுத்த செய்தி இங்குள்ள மற்றொரு கல்வெட்டுக் கூறுகின்றது. பல்லவ அரசர் தேவியார் சிண்ணவையாரும் இளைய மணிமங்கை என்பவரும் இக்கோவிலுடைய ஆரம்ப நந்திக்கு நந்தா விளக்குக்காக முறையே அறுபதுகாசும் நிலமும் கொடுத்தசெய்தியை இன்னொரு கல்லெழுத்துக் கூறுகின்றது. கோராஜ கேசரிவர்மன் என்னும் இராசராச தேவர் காலத்தில், குணவீரமாமுனிவர் என்னும் சமணர் நெல்வயல்களுக்கு நீர்பாயும் பொருட்டுக் கணிசேகர மருபோற் சூரியன் கலிங்கு என்னும் பெயருடன் ஒரு கலிங்கு கட்டினர் என்பதை இங்கு ஒரு பாறையில் எழுதப்பட்டுள்ள கீழ்க்கண்ட செய்யுள் கூறுகின்றது (S.I.I.VOL.NO.94):
அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடைய சோழன்
அருண்மொழிக்கு யாண்டிருபத் தொன்றாவ தென்றும்
கலைபுரியு மதிநிபுணன் வேண்கிழான் கணிசே
கரமருபொற் சூரியன்றன் றிருநாமத்தால் வாய்
நிலைநிற்குங் கலிங்கிட்டு நிமிர்வைகை மலைக்கு
நீடுழி இருமருங்கும் நெல்விளையக் கொண்டான்
கொலைபுரியும் படையரசர் கொண்டாடும் பாதன்
குணவீர மாமுனிவன் குளிர் வைகைக் கோவே.
விடால்: இது வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள இரண்டு குன்றுகளில் இயற்கையாயமைந்த இரண்டு குகைகள் உள்ளன. குகைகளின் முன்புறத்தில் இரண்டு மண்டபங்கள் உள்ளன. மண்டபங்களில் ஒன்றைப் பல்லவ மன்னன் என்பவனும் மற்றொருன்றை இராசகேசரிவர்மன் (ஆதித்தியன்) என்பவனும் கட்டியதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகிறபடியால் பல்லவ அரசனும் சோழ மன்னனும் இவற்றைக் கட்டியதாகக் கொள்ளலாம். இக் குகைகளில் பண்டைக்காலத்தில் சமணமுனிவர் தங்கியிருந்தனர். குண கீர்த்திபடாரர் வழி மாணாக்கியார் கனக குரத்தியாரையும் அவர் வழி மாணாக்கியாரையும் பாதுகாத்த செய்தி இங்குள்ள கல்வெட்டுக் கூறுகின்றது. இவ்வூருக்குச் சிங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆராந்திமங்கலம் என்று கல்வெட்டுக் கூறுகின்றது.
புனதாகை: (பூனாவதி அல்லது திருவத்தூர்) முந்தைய இது வடஆர்க்காடு மாவட்டம் செய்யாறு வட்டத்தில் ஆனக்காவூருக்கு ஒரு கல்தொலைவில் இருக்கிறது. பண்டைக்காலத்தில் சமணர் இருந்த ஊர். இங்கு ஒரு சமணக்கோவிலும் இருந்தது. ஒரு சைவர் வளர்த்த பனைமரங்கள் யாவும் ஆண்பனையாகப் போவதைக்கண்டு இவ்வூர்ச் சமணர் ஏளனம் செய்ய, அதனைப் பொறாத சைவர் அக்காலத்தில் அங்குவந்த ஞானசம்பந்தரிடம் கூற, அவர் பதிகம்பாடி ஆண்பனைகளைப் பெண்பனையாகச் செய்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவ்வூரிலிருந்த சமணக்கோவில் இடிக்கப்பட்டுத் தரைப்பகுதி மட்டும் காணப்படுகிறது. இக்கோவில் கற்களை எடுத்துக்கொண்டுபோய் இவ்வூருக்கருகில் உள்ள திருவோத்தூர்ச் சைவர் கோவிலைக்கற்றளியாகக் கட்டினார்கள் என்று கூறப்படுகிறது. இவ்வூர்ச் சமணக்கோவில் பாழ்படவே, இக்கோவிலைச் சேர்ந்த இரண்டு சமணத்திருவுருவங்கள் வெளியே தரையில் கிடப்பதாகவும் இவ்வுருவங்களுக்கருகில் உள்ள குட்டையில் இக்கோவில் செம்புக்கதவுகளும் ஏனைய பொருள்களும் புதைந்துகிடப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வூர் வயலில் கிடந்த ஒரு சமணத்திருவுருவத்தை அரசாங்கத்தார் கொண்டுபோய்ச் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்திருப்பதாகத் தெரிகிறது. திருவோத்தூர்த் தலபுராணத்திலும் இவ்வூரில் சமணர் இருந்த செய்தி கூறப்படுகிறது.
திருவோத்தூர்: இது முற்காலத்தில் சமணர் செல்வாக்குப்பெற்றிருந்த நகரம். திருஞானசம்பந்தர் இவ்வூருக்கு வந்தபோது இங்கு சைவ சமணக் கலகம் ஏற்பட்டுச் சமணர் துரத்தப்பட்ட செய்தியை இவ்வூர்த் தலபுராணமும் பெரியபுராணமும் கூறுகின்றன. இவ்வூர்ச் சிவன்கோவிலில் சமணர் துரத்தப்பட்டசெய்தி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது என்பர். இவ்வூர் மக்கள் இவ்வூருக்கு அருகில் உள்ள புனாவதி என்னும் கிராமத்தில் முன்பு சமணக்கோவில் இருந்ததென்றும் அக்கோவில்களைக் கொண்டுவந்து திருவோத்தூர்ச் சிவன்கோவில் கட்டப்பட்டதென்றும் கூறுகின்றனர். புனாவதி சிற்றூரின் வெட்டவெளியில் இரண்டு சமண உருவங்கள் காணப்படுகின்றன. இதற்கருகில் உள்ள குட்டையில் சமணக்கோவிலின் செப்புக்கதவுகள் முதலியன புதைந்து கிடக்கின்றன என்று கூறப்படுகிறது.
திருப்பனம்பூர்: இது காஞ்சிபுரத்திலிருந்து பத்துமைலல் தொலைவில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இமசீதளமகாராசன் அவையில் பெளத்தர்களுடன் சமயவாதம்செய்து வெற்றிபெற அகளங்கன் ஆசாரியார் என்னும் சமணசமயகுரு இச்சிற்றூரில் தங்கியிருந்தார். இங்குள்ள சமணக்கோவிலுக்கு முனிகிரி ஆலயம் என்று பெயர். இது இம்முனிவரை ஞாபகப்படுத்தும் பொருட்டு ஏற்பட்டபெயர் என்று தோன்றுகிறது. இவ்வாலயத்தின் மதிற்சுவரில் இவ்வாசிரியரின் நினைவுக்குறியாக இவருடைய பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவுக்குறியாக இவர் திருவடிகளைக்கொண்ட ஒரு மண்டபமும் இங்கு உண்டு. இத்திருவடிகளுக்கு மாசிமாதத்தில் பூசை நடந்துவருகிறது. இச்சிற்றூரில் பழைமையும் புதுமையுமான இரண்டு சமணக்கோவில்கள் உண்டு. இங்கு சமணர் இப்போதும் உள்ளனர். இதற்குக் கரந்தை என்றும் பெயர் வழங்கப்படுகிறது. இக்கரந்தைக்கோவிலில் இடிந்துசிதைந்துபோன பழையகோவில் ஒன்றிருக்கிறது. இக்கோவில் கட்டிடம் சமவசரணம் போன்று அமைந்துள்ளது. இக்கோவிலில் சாசனங்களும் காணப்படுகின்றன. கோவில் கோபுரவாயிலில் கீழ்க்கண்ட பாடல் எழுதப்பட்டுள்ளது:
காவுவயல் சூழ்தடமும் கனத்தமணிக் கோபுரமும்
பாவையர்கள் ஆடல்களும் பரமமுனி வாசமுடன்
மேவுபுகழ்த் திருப்பறம்பை விண்ணவர்கள்
போற்றிசெய்யத்
தேவரிறை வன்கமலச் சேவடியைத் தொழுவோமே.
பூண்டி: வடஆர்க்காடு மாவட்டம் வாலாஜப்பேட்டை வட்டத்தைச் சார்ந்ததும் ஆர்க்காட்டிலிருந்து ஆரணி செல்லும் வழியில் உள்ளதுமான இவ்வூரில் பொன்னிவன நாதர்கோவில் என்னும் ஒரு சினகரம் உள்ளது. இக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு அழகிய ஆசிரியப்பாவினால் அமைந்து இக்கோவில் வரலாற்றினைக் கூறுகிறது. அதில் செயங்கொண்ட சோழ மணடலந்தன்னில் பயன்படுசோலைப் பல்குன்றக்கோட்டத்து வேண்டியது சுரக்கும் மேயூர் நாட்டுப்பூண்டி என்பது காண்டகு திருநகர் என்று இவ்வூர் கூறப்படுகின்றது. இங்கிருந்த பொன்னிநாதர் என்னும் சமணப்பெரியார் வீரவீரன் என்னும் அரசனுக்குச் சிறப்புச்செய்ய அவன் மகிழ்ந்து என்ன வேண்டுமென்று கேட்க அவர் வேண்டுகோளின்படி இக்கோவிலை அமைத்து வீரவீர சினாலயம் என்னும் பெயரிட்டு சிற்றூர்களையும் இறையிலியாகக்கொடுத்தான் என்று மேற்படி ஆசிரியப்பா கூறுகிறது. இக்கோவிலிலிருந்த செம்பு உருவச்சிலை ஆரணிக்கோவிலுக்குக் கொண்டுபோய் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வட்டாரத்தில் உள்ள சமணர்கோவில்களில் இக்கோவில் மிகப்பழைமையானது.
வள்ளிமலை: முந்தைய வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் உள்ள மேல்பாடிக்கு அருகில் உள்ளது வள்ளிமலை எனும் சிற்றூர். இச்சிற்றூரில் உள்ள குன்று கற்பாறைகளால் அமைந்துள்ளது. இக்குன்றின் கிழக்குப்பக்கத்தில் இயற்கையாக அமைந்த ஒருகுகை உண்டு. இதன் அருகில் கற்பாறையில் இரண்டு சமண உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சமண உருவங்களின் கீழ் கன்னடமொழியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டினால், இங்குள்ள குகையை உண்டாக்கியவன் இராசமல்லன் என்னும் கங்ககுல அரசன் என்பது தெரியவருகிறது. மேற்கூறப்பட்ட சமணஉருவங்களின் கீழ்ப்பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் ஒன்று அஜ்ஜ நந்தி பட்டாரர் இந்தப் பிரதிமையைச் செய்தார் என்றும் மற்றொரு கல்வெட்டு ஸ்ரீபாணராயரின் குருவாகிய பவணந்தி பட்டாரரின் மாணவராகிய தேவசேன பட்டாரரின் திருவுருவம் என்றும் மற்றோர் கல்வெட்டு பாலசந்திர பட்டாரரது சீடராகிய அஜ்ஜநந்தி பட்டாரர் செய்த பிரதிமை என்றும் கோவர்த்தன பட்டாரர் என்றாலும் அவரே என்றும் கூறுகின்றன. இங்குள்ள சமண உருவங்களைக் கொண்டும் கல்வெட்டுக்களால் அறியப்படும் பெயர்களைக் கொண்டும் இது சமணர்களுக்குரியது என்பது வெள்ளிடைமலைபோல் விளங்குகின்றது. ஆகவே, பண்டைக்காலத்தில் இந்த மலையும் சிற்றூரும் சமணர்களுக்கு உரியதாய் அவர்களின் செல்வாக்குப்பெற்றிருந்தது என்பது துணியப்படும்.
பஞ்சபாண்டவர் மலை: ஆர்க்காடு நகரத்துக்குத் தென்மேற்கில் நான்கு மைல் தூரத்தில் பஞ்சபாண்டவர்மலை என்னும் பெயருள்ள கற்பாறையான ஒரு குன்று உள்ளது. இக்குன்றுக்குப் பஞ்சபாண்டவர்மலை என்று பெயர் கூறப்பட்டபோதிலும் உண்மையில் பஞ்சபாண்டவருக்கும் இந்த மலைக்கும் யாதொருதொடர்பும் இல்லை. இதற்கு வழங்கப்படும் இன்னொருபெயர் திருப்பான்மலை ஆகும். இந்த மலையின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள செயற்கைக்குகையில் ஏழு அறைகள் பன்னிரண்டு தூண்களுடன் காணப்படுகின்றன. இந்தக் குகைக்குமேலே ஒரு கற்பாறையில் சமண உருவம் ஒன்று தியானத்தில் அமர்ந்திருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. தென்புறத்தில் இயற்கையாக அமைந்த ஒரு குகையும் அதில் நீர் உள்ள சிறுசுனையும் காணப்படுகின்றன. இக்குகையினுள் கற்பாறையில் ஒரு பெண் உருவம் இடக்கையில் சாமரைபிடித்துப் பீடத்தில் அமர்ந்திருப்பது போன்றும் இதன் வலப்பக்கத்தில் ஓர் ஆண் உருவம் நின்றிருப்பது போன்றும் செதுக்கப்பட்டுள்ளன. பெண் உருவம் அமர்ந்திருக்கும் பீடத்தின் முற்புறத்தில் குதிரைமேல் ஓர் ஆள் இருப்பது போன்றும் ஓர் ஆண் உருவமும் ஒரு பெண் உருவமும் நின்றிப்பது போன்றும் காணப்படுகின்றன. இக்குகையின் வாயிற் புறத்தின்மேல் உள்ள பாறையில் கீழ்க்கண்ட கல்வெட்டுப்பொறிக்கப்பட்டுள்ளது. நந்திப்போத்தரசற்கு ஐம்பதாவது நாகசந்தி குரவர் இருக்க பொன்னியாக்கியார் படிமம் கொத்துவித்தான் புகழாளை மங்கலத்து மருத்துவன் மகன் நாரணன். எனவே, நந்திப்போத்தரசன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் நாகநந்தி என்னும் குருவுக்காக நாரணன் என்பவன் பொன் இயக்கி என்னும் பெயருள்ள உருவத்தை அமைத்தான் என்பது இந்தக் கல்வெட்டின் கருத்து. இக்குகையில் காணப்படும் சாமரை பிடித்தபெண் உருவம் இதில் குறிப்பிட்ட பொன் இயக்கியின் உருவம் என்றும் அதன்பக்கத்தில் நிற்கும் ஆண் உருவம் நாகநந்தி என்பவரின் உருவம் என்றும் அது கருதப்படுகிறது. இந்த மலையில் பொறிக்கப்பட்டுள்ள இன்னொரு கல்வெட்டும் உள்ளது. அது கி.பி.984-இல் அரசாட்சிக்கு வந்த இராசராசசோழனுக்குக் கீழ்ப்பட்ட இலாடராசன் வீரசோழன் என்பவனால் பொறிக்கப்பட்டது. அதில் இந்த மலை படவூர்க்கோட்டத்துப் பெருந்திமிரி நாட்டுத்திருப்பான் மலை என்று கூறப்பட்டுள்ளது. இந்த இலாடராசன் வீரசோழன் தன் மனைவியுடன் இந்த மலையில் இருந்த கோவிலுக்கு வந்து தெய்வத்தை வணங்கியபோது அவன் மனைவி இக்கோவிலுக்குத் தானம் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள அதற்கு உடன்பட்டு அவ்வரசன் கூறகன்பாடி கற்பூர விலையையும் அந்நியாயவால தண்ட இறையையும் இக்கோயிலுக்குப் பள்ளிச் சந்தமாகக் கொடுத்தான். இக்கல்வெட்டின் கடைப்பகுதி, இப்பள்ளிச் சந்தத்தைக் கொல்வான் கங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங்கொள்வார் என எழுதப்பட்டுள்ளது. இது வல்லதிப் பள்ளிச் சந்தத்தைக் கெடுப்பார்; இத்தர்மத்தை ரஷிப்பான் பாததூளி என்தலை மேலன; அறமறவற்க அறமல்லது துணையில்லை என்று முடிகின்றது. இந்தச் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கூறகன்பாடி சிற்றூர் என்பது பஞ்ச பாண்டவர் மலைக்குக் கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் உள்ள கூறம்பாடி என்னும் சிற்றூர் என்று கருதப்படுகிறது. இந்த மலையில் காணப்படும் சமணவுருவமும் இயக்கி உருவமும் மலைக்குகையில் உள்ள அறைகளும் சாசனத்தில் கூறப்படும் நாகநந்தி குரவர், பள்ளிச்சந்தம் என்னும் பெயர்களும் இந்த மலை ஒருகாலத்தில் சமணர்களுக்குரியதாயிருந்தது என்பதை அணுவளவும் ஐயமின்றித் தெரிவிக்கின்றன.