இவர் பாஞ்சால நாட்டரசன் யாகசேனனின் மகள் பாஞ்சாலி எனவும் குறிக்கப்படுவாள்; இவளைப் பஞ்ச கன்னியரில் ஒருத்தி என்றும் கூறுவர்; அகலிகை, திரெளபதி, சீதை, தாரை, மண்டோதரி என்பவர்கள் பஞ்ச கன்னியர்களாகக் கூறப்படுகிறார்கள். இவள் யாகசேனன் வளர்த்த வேள்வித் தீயினில் தோன்றியவள். இவள் முற்பிறப்பில் நளாயினி என்னும் பெயர் உடையவளாக இருந்து மெளத்கல்ய முனிவரைக் கணவராகப் பெற்றிருந்தாள். அவர் மெளத்கல்ய முனிவர் நளாயினியின் கற்புடைமையைச் சோதித்தறிய விருப்பம் கொண்டார். குட்ட வியாதி கொண்டவர் போல் நடந்தும் நளாயினியின் கற்புடைமையைக் கண்ட முனிவர் மனம் மகிழ்ந்து உனக்கு வேண்டியது என்ன? என்று கேட்க, அவள் நின் நீங்காத அன்பே வேண்டும் என்று கேட்டாள். நளாயினி இப்பிறப்பு முடிந்து இறந்தாள். பின் இந்திரசேனை என்னும் பெயருடன் மறு பிறப்பை அடைந்து மெளத்கல்ய முனிவரையே சார்ந்தாள். அவர் இல்வாழ்வைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். எனவே, இந்திரைசேனையின் கருத்திற்கு இணங்காமல் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யும்படி கூறினார் சிவபெருமான். சிவபெருமான் இவள் முன் தோன்றி அருள் செய்தபோது, ‘எனக்குக் கணவனைத் தருவீராக’ என்று ஐந்து முறை வேண்டினாள். இவர் முற்பிறப்பில் இவள் தன் கணவனின் ஐந்து வடிவங்களோடு இன்பம் நுகர்ந்தமையைக் கருத்தில் கொண்டு அவ்வாறே ஆகுக என்றார்; சிவபெருமானால் பிலத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திரர்கள் ஐவரையும் பார்த்து ‘நீவிர் இந்திர சேனைக்குக் கணவர் ஆகுங்கள்’ என்றார். அவ்வாறே அந்த ஐவரும் நிலவுலகத்தில் பாண்டவர்களாகப் பிறந்து திரெளபதியைத் திருமணம் செய்தார்கள் என்று ஒரு புராதனக்கதை கூறப்படுகிறது. இக்கதை முற்பிறப்புடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவதாகும்.
யாகசேனன் நடத்திய சுயம்வரத்தில் அர்ச்சுனனால் வெற்றிபெற்றுக் கொண்டுவரப்பட்ட திரெளபதி குந்தியின் கட்டளைப்படி ஐவரையும் மணக்க வேண்டியவளானாள். அப்போது வியாசர் திரெளபதியின் முற்பிறப்பை யாகசேனனிடம் எடுத்துச்சொல்லி இத்திருமணத்தை நடத்துக என்றார். தெளமிய முனிவர் தருமனுக்கு முறைப்படி திருமணச்சடங்குகளை நடத்திப் பின் முறைப்படி மற்றைய நால்வருக்கும் திருமணம் நடந்தது. பாண்டவர்கள் செய்த இராசசூய வேள்விக்கு வந்திருந்த துரியோதனனை இவள் இகழ்ந்து நகைத்தற்காக அவன் சினங்கொண்டான். துரியோதனன் பாண்டவர்களைச் சூதாட்டத்திற்கு அழைத்து அவர்களின் நாடு நகரங்களை இழக்கச் செய்து அடிமைப்படுத்தினான். அவன் திரெளபதியைத் தன்தொடையின்மீது அமரச்சொல்லியும் தன்னைக் கணவராக ஏற்றுக்கொள்ளும்படியும் துன்புறுத்தினான். திரெளபதி மறுத்ததால், அவன் துச்சாதனனை ஏவி அவளது துகிலை உரியச் சொன்னான். கிருட்டிணன் அருள்பெற்றுத் துகில் வளரப்பெற்றாள். மறுபடியும் சூதாடி அடிமையிலிருந்து விடுபட்டுச் சபதங்கள் பல செய்து அவள் பாண்டவருடன் வனவாசம் சென்றாள்.
வனவாசத்தின் இறுதியாண்டில் மறைந்து வாழ்வதற்காக விராடநாட்டினைப் பாண்டவர்கள் அடைந்தனர். விராடன் மனைவி சுதேட்டிணைக்கு வண்ணமகளாக விரதசாரிணி என்ற பெயரில் திரெளபதி மறைந்து வாழ்ந்தாள். கீசகன் என்பவன் இவளை அடைய முற்பட்டபோது வீமன் (பீமன்) அவனை வதம்செய்து கொன்றான். பாண்டவர்கள் வெளிப்பட்டுத் தங்கள் உரிமைகளுக்காகப் பாரதப்போரில் ஈடுபட்டுத் துரியோதனனை அழித்தனர். அவன் அழிவிற்குப் பின்னரே தன்னுடைய அவிழ்ந்த கூந்தலைத் திரெளபதி முடிந்து கொண்டாள். திரெளபதிக்கும் பாண்டவர்களுக்கும் தோன்றிய குழந்தைகள் உபபாண்டவர்கள் எனக் குறிக்கப்பட்டனர். தருமனுக்குப் பிரதிவிந்தனும் பீமனுக்குச் சுருதசோமனும் அர்ச்சுனனுக்குச் சுருதகீர்த்தியும் நகுலனுக்குச் சதாநீகனும் சகாதேவனுக்கு சுருதசேனனும் பிறந்தனர். பாரதப்போரின் முடிவில் உபபாண்டவர்களைப் பாண்டவர்கள் எனத் தவறுதலாகக் கருதி அசுவத்தாமன் கொன்றான். திரெளபதியைத் திரெளபதியம்மன் என்ற பெயரில் கருநாடகத்திலும் தமிழ்நாட்டிலும் தெய்வமாக வணங் கப்படுகிறாள். கும்பகோணத்தில் உள்ள திரெளபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் சிலையும் அரவான் சிலையும் இருக்கின்றன. சில இடங்களில் விழாவின் போது தீமிதித்தல் முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெறுகிறது (பாலுசாமி, 2009: 607 – 608).
போர்க்களத்தில் ஒருநாள் பாண்டவர்களுக்கும் கண்ணனுக்கும் திரெளபதி உணவினைப் பரிமாறிக் கொண்டிருந்தாள். கண்ணன் சைகைமூலம் பாண்டவர்களைக் காக்கும்படி வேண்டினார். திரெளபதியும் கண்ணன் இலையிலே நீர்வார்த்துச் சைகை மூலமாகக் கண்ணனிடம் அதை ஒப்புக்கொண்டாள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அருச்சுனன் அன்றிரவு கண்ணனிடம் சைகை மூலம் நீங்களும் திரெளபதியும் என்ன பேசிக் கொண்டீர்கள்? என்று கேட்டான். இப்பாரதப்போரில் பாண்டவர்களாகிய உங்கள் ஐவருக்கும் உயிர்ப்பிச்சை கேட்டேன் என்று அவன் பதிலுரைத்தான். அப்பொழுது அருச்சுனன் உயிர்ப்பிச்சையினைக் கொடுக்கத் திரெளபதிக்கு என்ன சிறப்பு இருக்கிறது? இறைவனாக நீங்கள் இருக்க அவளிடம் கேட்பது வியப்பாக உள்ளது? என்றான். உடனே கண்ணன், அவள் யார் என்பதைப் போர்க்களத்தில் சென்றுபார் என்று கூறினார். அதன்படி அருச்சுனன் போர்க்களத்திற்குச் சென்று பார்த்தான். அங்கு ஆகாய உருவமாகப் பெரிய காளி வடிவம் கொண்ட ஒருத்தி அனைத்து உடல்களையும் விழுங்கிக்கொண்டிருந்தாள். இதனைக் கண்டு அருச்சுனன் பயந்து கண்ணனிடம் வந்து கண்ணா அங்கு பெரிய உருவமாகிய காளி அல்லவா இருக்கிறாள். அவள் யார்? என்று கேட்க, அதற்குக் கண்ணன் உன் மனைவியான திரெளபதியே நடக்கும் பாரதப்போரில் அனைத்து உயிர்களையும் அழித்து விழுங்கக் கூடியவள். அவளிடம்தான் உங்கள் ஐவரின் உயிரையும் காக்கும்படிக் கேட்டேன். திரெளபதியும் எனக்குக் கண்ணால் சைகை காட்டி நீர்வார்த்து உங்கள் ஐவரின் உயிருக்கும் உத்தரவாதம் அளித்தாள் என்றார். மேலும் அவர் அருச்சுனனிடம் திரெளபதி அதர்மத்தை அழிக்கக்கூடிய சக்தியாகும். அதனால் அவதார நோக்கில் நான் வரும்பொழுது அக்கினியில் இவளும் பிறந்து வளர்ந்தாள் எனக் கூறி அமைதிப்படுத்தினான். ஆகவே, திரெளபதி பாரதப்போரில் பகலில் சாந்தமுடன் இருந்து இரவில் பாரதப்போருக்குக் காரணமானவர்களை உயிர்ப்பலி வாங்கும் காளியாகிறாள் என்ற நம்பிக்கையும் மக்களிடம் நிலவி வருகிறது (ஜெயவாணிஸ்ரீ,2002:17). தமிழ்நாட்டில் திரெளபதி தெய்வமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையினைக் காணமுடிகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே திரெளபதியம்மன் வழிபாடு காணப்படுகிறது. பாரதக்கதையை விழாவாக நடத்திக்காட்டும் இந்த விழாவில் முதன்மையாக இருப்பது திரெளபதியே. இதற்குத் திரெளபதி கற்புத்தெய்வம் என்பது மட்டும் காரணம் அல்ல. அதாவது கற்புத்தெய்வம் என்பதற்காகத் திரெளபதி வழிபடு கடவுள் நிலையை அடையவில்லை. இந்த வழிபாட்டில் மாரியம்மன் போன்ற தெய்வமாகவே திரெளபதியின் தெய்வத் தன்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. வடதமிழகப்பகுதியில் வழிபடப்படும் மற்ற பெருந்தெய்வ வழிபாட்டில் உள்ள சடங்குகளும் முறைகளுமே திரெளபதி வழிபாட்டிலும் பின் பற்றப்படுகிறது. இதையெல்லாம் தொகுத்துப்பார்க்கும்போது கதைக்காகவோ கதையில் திரெளபதி பாத்திரம் பெற்றுள்ள ஏற்றமான நிலைக்காகவோ இந்த வழிபாட்டில் திரெளபதி தெய்வமாக்கப்படவில்லை. இங்குள்ள பெருந்தெய்வ வழிபாடே பாரதக்கதையில் பொருத்தமான திரெளபதியை வழிபாடு தெய்வமாக மாற்றுவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது எனக் கருதலாம் என்கிறார் இரா.சீனிவாசன் (பி.மஞ்சுளா, 2011: 04 – 05).
சங்க இலக்கியச் செய்யுட்களைப் பாரதக்கதையோடு தொடர்புபடுத்தும் முறைமை
சங்க இலக்கியங்களில் பாரதக்கதை நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பதாகச் சான்றோர் பெருமக்கள் கருதுகிறார்கள். அவ்விலக்கியங்களில் இடம்பெற்றுள்ள கதைகள் உண்மையான நிகழ்வுகளா? அல்லது உரையாசிரியர்கள் எழுதிய கட்டுக்கதைகளா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது தமிழ்ச்சமூகத்தின் கடமையாகும். தமிழ் இலக்கியங்களுக்கு முதன்முதல் உரை எழுதப்புகுந்தோர் தங்களுடைய எண்ணத்திற்கு ஏற்றாற்போல் உரை எழுதி இருக்கிறார்கள். பின்னாளில் உரை எழுதப்புகுந்தோரும் ஆய்வுரைகளைப் படிக்கமாலும் பின்பற்றாமலும் ஆய்வு நோக்கில் உரை எழுதாமல் முன்னோர் எழுதி வைத்த உரையே சிறந்த உரை என்று எண்ணி எழுதிவைத்துள்ளனர். அவ்வுரைகளில் பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அவைகளில் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகைகளில் பலவும் ஏற்றுக்கொள்ள முடியாத வகைகளில் சிலவும் உள்ளன. பல வரலாற்றுக் குறிப்புக்கள் மயக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன. அவைகளை எல்லாம் போக்குகின்ற கடமை ஆய்வாளர்களுக்கு உண்டு. அவைகளில் சில கூறுகளை ஆய்வாளர்கள் களைந்தாலே அது ஆய்வுலகிற்கு அவர்கள் ஆற்றும் சிறந்த பணியாக விளங்கும். தொண்டைமண்டலப் பகுதிகளில் நடைபெறும் திரெளபதியம்மன் வழிபாடு குறித்துச் சிறிய அளவில் இங்கு ஆய்வு நிகழ்த்தப்பெற்றாலும் அவற்றினுடைய உள்கட்டமைப்பு, வெளிக்கட்டமைப்பு, தோற்றம், வளர்ச்சி, வழிபாட்டுத்தன்மைகள், அவ்வழிபாடு தமிழகம் வந்த வரலாறு, அதனுடைய நோக்கம், அதனுடைய போக்கு, அதனுடைய எண்ணம் போன்ற கூறுகளை உற்று நோக்க வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் மாரியம்மன் வழிபாடு பின்பற்றப்பட்டுள்ளது. மாரியம்மன் வழிபாடு குறித்துப் பல ஆய்வாளர்கள் ஆய்வுகள் நிகழ்த்தியுள்ளனர். தொன்மையான தமிழகத்தின் முக்கிய வழிபாடாக விளங்கிய மாரியம்மன் வழிபாடு கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சிசெய்த பல்லவர் ஆட்சிக்காலத்தில் மாரியம்மன் வழிபாட்டோடு இணைத்துத் திரெளபதியம்மன் வழிபாடும் கொண்டாடப்படுகிறது. இது தமிழகத்தின் ஆட்சிமாற்றத்தின் போது ஏற்பட்ட வழிபாட்டு முறையாகும். அவ்வழிபாட்டு முறைகள் தமிழகத்தில் குறிப்பாகத் தொண்டைமண்டலப் பகுதிகளில் இடம்பெற்றுத் திகழ்ந்தன.
சங்க இலக்கியங்களில் பஞ்சபாண்டவர்கள் மற்றும் துரியோதனனாதியர் பற்றிய குறிப்புகள் காணப்படுவதாகச் சான்றோர் பெருமக்கள் கருதுகின்றனர். அவர்கள் அதற்கு ஏற்றாற்போல் சங்க இலக்கியப்பாடல்களைச் சான்று காட்டுகின்றார்கள். அவர்கள் சான்று காட்டும் பாடல்கள் அவர்களைப் பற்றியது தானா? அவர்கள் கருதுவது உண்மையிலேயே அத்தினாபுரத்தை அரசாண்ட பஞ்சபாண்டவர்களா? துரியோதனனாதியரா? சங்க இலக்கியக் காலக்கட்டத்திற்கும் வியாசர் எழுதிய பாரதக் காலக் கட்டத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டியது ஓர் ஆய்வாளருடைய கடமையாகும். சங்க இலக்கியங்களில் அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களிலும் காப்பிய இலக்கியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை போன்ற நூல்களிலும் சைவ, வைணவ இலக்கியங்களான பன்னிரு திருமுறை, நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் ஆகிய நூல்களிலும் பாரதக் குறிப்புகள் காணப்படுகின்றன. பக்தி இலக்கியக் காலமாகிய கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தோன்றிய பல நூல்களில் பாரதக் குறிப்புகள் இறையியல் நோக்கில் காட்டப்பட்டுள்ளது. தமிழ்மொழி இலக்கியங்களில் இறையியல் நோக்கில் வடமொழிப் பண்பாட்டு நூல்களின் தொடர்கள் ஏற்பட்டுள்ளன. அப்போது, தமிழ் இலக்கியங்களில் மொழிக்கலப்பும் பண்பாட்டுக் கலப்பும் இனக்கலப்பும் இறையியல் நோக்கில் மட்டும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. ஆனால், சங்க இலக்கியங்கள் என்று கருதப்படுகின்ற அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை போன்ற நூல்களிலும் காப்பிய இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களிலும் பாரதக்கதைக் குறிப்புகள் நேரடியாகப் பொருள் படும்படியாகக் காணப்படுகின்றனவா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்நூல்களின் பாடலடிகளை முதன்மையாகக் கொண்டு ஆய்வு நிகழ்த்திய சான்றோர் பெருமக்கள் கூறிய கருத்துக்களின் உண்மைத்தன்மையை மேன்மேலும் தக்க சான்றுகள் காட்டி ஆய்வு நிகழ்த்திக் காட்ட வேண்டும். அப்போது அதனுடைய உண்மைத்தன்மையைச் சிறப்பாக அறியமுடியும். சங்க இலக்கியங்களில் பாரதக்கதைக் குறிப்புகள் நேரடியாகப் பொருள்விளங்கும்படி காணப்படுகின்றனவா என்பதையும் அல்லது உவமைகளின் வாயிலாகக் காணக்கிடக்கின்றனவா என்பதையும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் கூறுகின்ற விளக்கங்களையும் இங்குக் காணலாம்.
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் சேரமன்னர்களுள் ஒருவன். இவனை உதியன் என்றும் உதியஞ்சேரல் என்றும் உதியஞ்சேரலன் என்றும் மாமூலனாரும் கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானும் பாடியுள்ளார். பாண்டவரும் துரியோதனனாதியோரும் பொருதகாலத்து இருதிறத்துப் படைகட்கும் பெருஞ்சோறிட்டு இச்சேரமான் நடுநிலைபுரிந்தான் என்பது பற்றி, இவன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனப்படுகின்றான் (துரைசாமிப்பிள்ளை, 2002: 4). வானவரம்ப, பெரும, நீ, அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் (பொன்மணி) தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின் கட்படுந்துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய் என்று புறநானூற்றின் 2 வது பாடல் கூறுவதை,
வான வரம்பனை, நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈர்ஐம் பதின்மரும் பொருது களத்தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
(புறம்.2:12-16)
என்ற பாடலடிகள் காட்டுகின்றன. இப்பாடலுக்கு உரையும் விளக்கமும் கூறிய ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை பாரதப்படைகளுக்குப் (இரு படைக்கும்) பெருஞ்சோறாகிய மிக்க உணவை வரையாது வழங்கினான் என்றும் இமயத்து அடிப்பகுதியில் நடந்த பாரதப்போர் நிகழ்ச்சியில் சேரமான் செய்த நடுநிலை உதவியை இவர் நேரில் கண்டறிந்தவர் எனத் துணிதற்கு இடனாகிறது என்றும் கூறுகிறார் (துரைசாமிப்பிள்ளை,2002:6-7). வானவரம்ப! பெரும! நீ பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் போர்க் களத்தின் கண் படுந்துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய் என்று உ.வே. சாமிநாதையர் (1971), ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (2002), கோ. இளையபெருமாள் (2006), வ.த. இராம சுப்பிரமணியம் (2000), பாலசுப்பிரமணியன் (2004), இன்னும் பிற உரையாசிரியர்களும் மேற்கூறிய கருத்துக்கு ஏற்பவே உரையை எழுதியுள்ளனர். முன்னோர் எழுதிய உரையைப் பின்பற்றியே பின்னாளில் உரை எழுதப்புகுந்தோர் அனைவரும் அவற்றைப் பகுத்துப் பார்க்காமல் உரையை எழுதியுள்ளனர் என்பது கருதத்தக்கது.
அகநானூற்றின் 233-ஆம் பாடலில் உதியன் சேரலாதன் பாரதப்படைகளுக்குப் பெருஞ்சோறு அளித்ததாக வரலாற்றுப்பதிவு காணப்படுகிறது. வீரம் நிறைந்த குதிரைப் படையையும் பகைவரிடம் தோல்வியுறாத வலிமையையும் உடையவனாய் துறக்கம் அடைந்த தன் முன்னோர்க்குத் தென் புலத்தார்க் கடனாக உதியன் சேரல் சோறு அளித்தப்போது அதை உண்ணுதற்குச் சுற்றிலும் இருந்த பேய்க்கூட்டம்போல அவை தோன்றும் எனும் உவமையின் வாயிலாகப் பாரதக்கதை குறிப்புக் காணப்படுவதை,
மறப்படைக் குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல்இசை
முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை
கூளிச் சுற்றம் குழீஇஇருந் தாங்கு (அகம்.233: 6-10)
என்ற அகநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன. பதிற்றுப்பத்தின் இரண்டாவது பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றிக் குமட்டூர்க்கண்ணனார் பாடியது. அதில் 14 வது பகுதியாக இடம்பெற்றுள்ள சான்றோர் மெய்ம்மறை எனும் தலைப்பில் பாரதக்கதைக் குறிப்புக் காணப்படுகிறது. போர் புரிவதில் மேன்மையுற்ற துரியோதனன் முதலிய நூற்றுவர்களோடு அவர்களுக்குத் துணை வலியாக அமைந்தவன் அக்குரன் என்ற வள்ளல். அவனைப் போன்ற வள்ளல் தன்மை உடையாய் என்று அதற்கு விளக்க உரை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஈரைம்பதின்மர் எனும் சொல் துரியோதனன் முதலிய கெளரவர் நூற்றுவரைக் குறிப்பிடுவதாக,
போர்தலை மிகுத்த ஈர்ஐம் பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை
அக்குரன் அனைய கைவண் மையையே (பதி. பத்து. 5-7)
என்ற பாடலடிகளால் அறியமுடிகிறது. உ.வே.சாமிநாதையர் ஈரைம்பதின்மர் என்பது துரியோதனன் முதலிய கெளரவர் நூற்றுவர் என்று உரை கூறியுள்ளார் (1994:16). ச.வே. சுப்பிரமணியனும் (2009:41) துரியோதனன் முதலிய கெளரவர் நூற்றுவர் என்று விளக்கம் அளித்துள்ளார். இவர்களைப் போன்றே பிற உரையாசிரியர்களும் விளக்க உரை கொடுத்துள்ளனர். இவர்கள் கூறிய உரைகள் எல்லாம் அவர்களுடைய கூற்றுகளாகவே அமைகின்றன. சங்க இலக்கிய மூலப்பாடல்களுக்கும் அவர்கள் கூறிய உரைகளுக்கும் பொருத்தமில்லாமல் இருக்கின்றன என்பது கருதத்தக்கது.