நான் கரித்துண்டின் காலத்தை பானையோடுகளுக்கு மேல் ஏற்றக்கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். என் நண்பர்கள் சிலர் உங்கள் வாதம் தெளிவாக இல்லை, இன்னும் விளக்கிச் சொல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள். சரி, தமிழக ஊடகவியலாளர்களுக்கும், மார்க்சிய பேரொளிகளுக்கும் கூடப் புரிகின்றபடி விளக்க முயல்கிறேன்.
மக்கள் புழங்கும் எந்த இடத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ரங்கநாதன் தெரு, தி நகர். அத்தெருவில் நடப்பவர்கள் வயது ஒரே மாதிரி இருக்குமா? 90 வயது கிழவர்களும் இருக்கலாம். தாய்கள் தூக்கிச் செல்லும் ஒரு வயது கூட ஆகாத கைக்குழந்தைகளும் இருக்கலாம்.இவர்கள் ஒரே தளத்தில் இயங்குவதால் இவர்கள் வயது ஒன்றாக இருக்கும் என்று சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது. ஆனால் தோராயமாக இவர்கள் வயது சில மாதங்களிலிருந்து நூறுக்குள் இருக்கலாம் என்று சொல்ல முடியும்.
இன்னொரு உதாரணம்.
நீங்கள் சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு ஆதிச்சநல்லூரில் இருக்கும் முதுமக்கள் தாழி இருக்கிறது. உங்களைச் சுற்றி பலர் இருக்கிறார்கள். எல்லாம் ஒரே தளத்தில் இருக்கின்றன. எனவே உங்கள் வயதுதான் முதுமக்கள் தாழியின் வயது என்று சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது. ஆனால் தோராயமாக அங்கு இருப்பவர்கள் வயதுகளின் எல்லைகளைக் கணிக்க முடியும். அப்படிக் கணிக்கும் போது முதுமக்கள் தாழியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் அது அங்கு இயல்பாகப் புழங்குவது இல்லை. கொண்டுவரப்பட்டது. துருத்திக் கொண்டிருக்கும் எதுவும் புள்ளியல் கணிப்பின் எல்லைக்கு வெளியேதான் இருக்கும்.
இப்போது ஓர் அகழ்வாய்வு செய்யும் இடத்தை எடுத்துக் கொள்வோம்.
பொருள்கள் எவ்வாறு புதையுண்டு போகின்றன? மக்கள் தாங்கள் புழங்கிக் கொண்டிருக்கும் இடத்தை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட பிறகு அந்த இடம் இயற்கையால் ஆக்கிரமித்துக் கொள்ளப்படுகிறது. அப்போது அங்கு மக்கள் விட்டுச் சென்ற பொருள்கள் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு போகின்றன. இது நடப்பது ஒரே நாளில் அல்லது ஒரே ஆண்டில் நடக்கும் என்று சொல்ல முடியாது. இடத்தைப் பொறுத்து சில நூற்றாண்டுகள் கூட ஆகலாம். தவிர பூமி சும்மாயிருப்பதில்லை. அதில் நிகழும் மாற்றங்களினால் கீழே இருக்கும் பொருள் மேலே வரலாம். மேலே இருக்கும் பொருள் கீழே போகலாம். மேலும் அந்த இடத்திற்கு மக்கள் திரும்ப வந்தால் அவர்கள் வீடுகள் கட்டுவதற்கும் கிணறு வெட்டுவதற்கும் நிலத்தைத் தோண்டுவார்கள். அப்போதும் கீழே இருக்கும் பொருள் மேலே வரலாம். மேலே இருக்கும் பொருள் கீழே போகலாம்.
இவற்றையெல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டுதான் அகழ்வாய்வாளர்கள் சில விதிகளை வைத்திருக்கிறார்கள்.எளிமைப்படுத்திச் சொல்கிறேன். முதல் விதி இது
தோண்டப்படும் அடுக்குகளில் கீழே இருக்கும் அடுக்கு வயதில் மூத்ததாக இருக்கும். அதற்கு மேலே இருக்கும் அடுக்கு அதை விட வயதில் இளையதாக இருக்கும். அடுக்குகள் என்றால் என்ன? ஒரு இடத்தில் மனிதன் பல நூற்றாண்டுகள் வாழ்ந்திருக்கும் தடையங்கள் அங்கு புதைந்து கிடக்கும். அவற்றின் காலங்களை வைத்து அடுக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. சங்க கால அடுக்கு, பல்லவர் கால அடுக்கு, சோழர்கள் கால அடுக்கு போன்றவை. இவ்வடுக்குகளில் கிடைப்பவை அந்தந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே சங்ககால அடுக்கு கீழே இருக்கும். சோழர் கால அடுக்கு மேலே இருக்கும். பல்லவர்கால அடுக்கு இடையே இருக்கும்.
இரண்டாவது விதி இது: ஒரு அடுக்கின் வயது அதில் கிடைக்கும் ஆக இளைய பொருளின் வயதாகத்தான் இருக்க முடியும். இந்த விதியே ஒரு அடுக்கில் கிடைக்கும் பொருட்களின் வயது ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை வலியுறுத்துகிறது. மேலும் தோண்டும் போது கிடைத்த பொருள்கள் எல்லாம் கிமு முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்று வைத்துக் கொள்வோம். அதே தளத்தில் 19ம் நூற்றாண்டு காசு ஒன்று கிடைத்தால் அது எப்படி அங்கு வந்தது என்பதை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். 19ம் நூற்றாண்டு காசின் வயதை மற்ற பொருட்களுக்கு ஏற்ற முடியாது. அல்லது காசின் வயதும் கிமு முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குள் இருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம் மிக எளிதானது. ஒரு பொருள் மற்றொரு பொருளின் அருகில் புதைந்து கிடப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் அருகாமையில் இருக்கின்றன என்ற ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு ஒரே வயது என்று சொல்ல முடியாது.
கீழடியில் மூன்று அடுக்கள் நிர்ணயிக்கப்பட்டன. ஆகக் கீழே உள்ள அடுக்கு கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்று மிகத் தோராயமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அங்கு கிடைத்திருக்கும் பொருட்களை ஒத்திருப்பவை மற்ற இடங்களில் கிடைத்திருக்கின்றன. அவற்றின் காலகட்டம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் இவற்றின் காலமும் அதே காலகட்டத்தில் இருக்கலாம் என்ற ஊகத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. இதுவும் சரி என்று சொல்ல முடியாது. இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு குழியில் கிடைத்த ஒரே கரித்துண்டை வைத்துக் கொண்டு அதன் வயதுதான் சுற்றியுள்ளவற்றின் பொருட்கள் மீது ஏற்ற முடியாது. கரித்துண்டின் வயதே பானையோடுகளுக்கு இருக்காது என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா? இல்லை. உறுதியாகச் சொல்ல முடியாது. இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதுவரை கிடைத்திருக்கும் மற்றைய ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது மிகக் குறைவான வாய்ப்பே இருக்கிறது. கீழடியில் தொடர்ந்து மனிதர்கள் இயங்கிக் கொண்டிருக்கும் தடையங்கள் இருக்கின்றன. எனவே இந்த இடத்தைக் கலைக்கப்படாதது (undisturbed) என்று சொல்ல முடியாது. எனவே மிகக் கவனத்தோடு முழு ஆய்வும் முடிந்தபிறகுதான் பானைத்துண்டுகளின் வயதை நிர்ணயிக்க முடியும்.
இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது கரித்துண்டின் வயதுதான் பானைத்துண்டுகளின் வயது என்று இன்றே உறுதியாகச் சொல்ல முடியுமென்றால் ஒன்று தமிழகத் தொல்லியல் துறையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது ஊடகவியலாளராக இருக்க வேண்டும் அல்லது அமர்நாத் ராமகிருஷ்ணாவாக இருக்க வேண்டும் அல்லது மார்க்சியப் பேரொளிகளாக இருக்க வேண்டும் அல்லது இவர்கள் சொல்வதை நம்புபவர்களாக இருக்க வேண்டும்.
அகழ்வாராய்ச்சியை கேலிக்கூத்தாக ஆக்குவதைத்தான் இவர்கள் எந்த வெட்கமும் அறவுணர்வும் இன்றிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.