பழனி என்றால் அங்கிருக்கும் முருகன் கோயிலும், அங்கு கிடைக்கும் பஞ்சாமிர்தமும், பக்தர்களின் மொட்டைத் தலையும்தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டில் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் பழனிக்கு தென்மேற்குத் திசையில் சுமார் 12 கிலோமீட்டரில் இருக்கிறது பொருந்தல் என்ற சிற்றூர். அங்கு 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழ்வாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட நெல் இப்போது இந்திய வரலாற்றையே மாற்றி எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையின் தலைவராக இருக்கும் பேராசிரியர் கா.ராஜன் தலைமையிலான குழுவினர்தான் அந்த அகழ்வாய்வை மேற்கொண்டார்கள். அந்த அகழ்வாய்வின்போது ஒரு ஜாடியில் சுமார் இரண்டு கிலோ அளவுக்கு நெல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்துபோன ஒருவரைப் பல்வேறு பொருட்களோடு வைத்துப் புதைக்கும்போது அந்த நெல்லையும் அத்துடன் வைத்துப் புதைத்திருக்கிறார்கள். கருக்கழியாமல் இருந்த அந்த நெல் தொல் தமிழரின் வரலாற்றைத் தன்னோடு இத்தனைகாலமும் பாதுகாத்து வந்திருக்கிறது.
பேராசிரியர் கா.ராஜன், தற்போதிருக்கும் முக்கியமான தமிழகத் தொல்லியல் அறிஞர்களில் ஒருவர். மைசூர்ப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அவர் துவாரகா, பூம்புகார், ராமாபுரம், பெரியபட்டினம், கொடுமணல், மயிலாடும்பாறை, தாண்டிக்குடி ஆகிய அகழ்வாய்வுகளில் பங்கேற்றவர்.தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்களைக் கண்டறிந்திருக்கும் பேராசிரியர் கா.ராஜன் இதுவரை பதினைந்து ஆராய்ச்சித் திட்டங்களை நிறைவு செய்திருக்கிறார். கேம்ப்ரிட்ஜ் பலகலைக் கழகம், லண்டன், டோக்யோ, பாரீஸ் ஆகிய நகரங்களில் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் முதலானவற்றில் வருகைதரு பேராசிரியராக அவர் பணியாற்றுகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இதுவரை எட்டு நுல்களை எழுதியிருக்கும் அவர் அறுபதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
பொருந்தல் அகழ்வாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட நெல், விவசாயம் செய்து விளைவிக்கப்பட்டதா அல்லது தானே விளைந்த வகையைச் சேர்ந்ததா என்று முதலில் கண்டறியப்பட்டது. அதை ஆராய்வதற்காக, இலங்கையில் உள்ள தொல்லியல் பட்டமேற்படிப்பு மையத்தில் பணிபுரியும் டாக்டர் பிரேமதிலகேவை பாண்டிச்சேரிக்கு வரவழைத்து அங்கிருக்கும் ஃப்ரென்ஞ்ச் இன்ஸ்டிட்யூட்டின் சுற்றுச்சூழல் துறையோடு இணைந்து ஆராயச் செய்தார்கள். அந்த பரிசோதனையில் அந்த நெல் பயிர் செய்யப்பட்டு விளைவிக்கப்பட்டதென்றும் அது ஒரிஸா சடீவா இண்டிகா (Oryza sativa indica) என்ற நெல் வகையைச் சேர்ந்தது என்றும் கண்டறியப்பட்டது.அந்த நெல்லின் காலத்தை அறிவியல்ரீதியில் கணிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் இருக்கும் 'பீட்டா அனலிடிக் லேப்' என்ற ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட புதுவிதமான ஏ.எம்.எஸ் (AMS - Accelerator Mass Spectrometry) என்ற பரிசோதனையில் அந்த நெல்லின் காலம் கி.மு.490 என அறிவியல்ரீதியாகக் கண்டறியப்பட்டு இப்போது அந்த அறிக்கை பேராசிரியர் ராஜன் அவர்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பெருங்கற்படைச் சின்னம் ஒன்று ஏ.எம்.எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
பொருந்தல் நெல்லின் காலக் கணிப்பு தமிழர்கள் பன்னெடுங்காலமாக வேளாண் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மட்டும் எடுத்துக்காட்டவில்லை, அவர்கள் அசோகன் காலத்துக்கு முன்பே எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தி வந்தார்கள் என்பதையும் நிரூபணம் செய்திருக்கிறது. அதே புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண்ணாலான புரிமனை ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் இருக்கின்றன. அது ஜாடிகளை வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் புரிமனை ஆகும். அதில் ‘வயிர’ என்று தமிழ் பிராமியில் எழுதப்பட்டிருக்கிறது. நெல்லின் காலம் கி.மு 490 எனக் கண்டறியப்பட்டிருப்பதால் அத்துடன் கிடைத்த இந்த தமிழ் பிராமி எழித்துப் பொறிப்பின் காலமும் அதேதான் என்பது உறுதி.
"இந்தியாவில் கிடைத்த வரிவடிவங்களில் நன்கு படித்துணரப்பட்ட வரிவடிவம் பிராமி வரிவடிவமாகும். பிற வரி வடிவங்களான சிந்துசமவெளி எழுத்துகள், குறியீடுகள் போன்றவை இன்னும் முழுமையாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் படித்துணரப்படவில்லை" தமிழகத்தைப் பொருத்தவரை குறியீடுகளுக்கு அடுத்ததாகக் கிடைக்கும் வரிவடிவம் பிராமி வரிவடிவம் ஆகும். அதை அசோகன் பிராமியோடு ஒப்பிட்டு தமிழ் பிராமி என அதற்கு ஐராவதம் மகாதேவன் போன்ற சில தொல்லியல் அறிஞர்கள் பெயரிட்டுள்ளனர். அச்சொகன் பிராமிக்குப் பிறகுதான் தமிழ் பிராமி வந்திருக்கவேண்டும் என அவர்கள் கற்பனை செய்துகொண்டதால் தமிழ் பிராமி எழுத்துக்களைக் காலக் கணிப்புச் செய்யும்போது குத்து மதிப்பாக கி.மு இரண்டாம் நூற்றாண்டு எனச் சொல்லி வருகிறார்கள். அவர்களின் வாதத்தை பொருந்தல் அகழ்வாய்வு செல்லாமல் ஆக்கிவிட்டது.
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், ஏராளமான தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகளைக்கொண்ட பானை ஓடுகள், நாணயங்கள் முதலானவற்றை வெளிப்படுத்தியிருக்கின்றன. கொற்கை, ஆதிச்சநல்லூர், மாங்காடு, கொடுமணல் எனப் பல்வேறு இடங்களிலும் இந்த ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இன்னும்கூட தமிழ் வரிவடிவத்தின் தொன்மையை ஏற்றுக்கொள்வதில் ஐராவதம் மகாதேவன் போன்றவர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. ’ஒரு இடத்தில் ஒரு ஆதாரம் கிடைத்தால் மட்டும் போதாது அங்கேயே பல சான்றுகள் கிடைக்கவேண்டும்’ என்று ஒருவாதத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். அதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது இன்னொரு தொல்லியல் அறிஞர்” இதென்ன வாதம்? ஒரு குழந்தைதான் பெற்றிருக்கிறான் எனவே அவனை ஆண் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னும் பல குழந்தைகளை அவன் பெற்றால்தான் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்வதுபோல் அல்லவா இருக்கிறது இவர்களது வாதம்?" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். "மற்ற விஷயங்களில் ஒரு சான்றை வைத்துக்கொண்டு ஏற்றுக்கொள்கிறவர்கள் தமிழ் பிராமி விஷயத்தில் மட்டும் ஒன்று போதாது பல சான்றுகள் வேண்டும் என்று கேட்பது ஏன்?" என்றும் வினவினார்.
பொருந்தல் அகழ்வாய்வு சங்க காலம் குறித்த விவாதத்திலும், இந்தியாவின் வரிவடிவம் எங்கிருந்து தொடங்கியது என்ற விவாதத்திலும், இந்திய வரலாறு, பிராகிருதத்துக்கும் தமிழுக்கும் இருக்கும் உறவு ஆகியவை குறித்த விவாதங்களிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். சங்க இலக்கியப் பிரதிகளின் காலத்தை மிகவும் பின்தள்ளி அவை கி.பி ஏழு, எட்டாம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று ஹெர்மன் டீக்கன் போன்ற சமஸ்கிருத ஆய்வாளர்கள் முன்வைத்துவரும் அதிரடியான கருத்துகளுக்குச் சரியான பதிலை அளிப்பதாக பொருந்தல் அகழ்வாய்வு அமைந்துள்ளது. "பொருந்தல் மட்டுமல்ல சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்தவொரு ஊரிலும் அகழ்வாய்வு செய்து பாருங்கள் அங்கே கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஆதாரங்கள் பலவற்றை நீங்கள் காணலாம்" என ஆணித்தரமாக பேராசிரியர் கா. ராஜன் குறிப்பிடுகிறார்.
பொருந்தலில் கிடைத்த தமிழ் பிராமி பொறிப்பு ‘வயிர’ என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து அது ‘வஜ்ர’ என்ற பிராகிருதச் சொல்லின் தமிழாக்கம்தான். கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இங்கு பிராகிருதத்தை மொழிபெயர்க்கும் நிலை இருந்ததா? என்று சில ஆய்வாளர்கள் கேட்டிருக்கிறார்கள். இதைப்பற்றிச் சில மொழியியல் அறிஞர்களிடம் கேட்டேன்.இந்த ஆண்டுக்கான ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருதைப் பெற்றிருக்கும் பேராசிரியர் செ.வை.சண்முகம் அவர்கள் ஔவை எழுதிய புறநானூற்றுப் பாடலான ‘நாடா கொன்றோ...' என்ற பாடல் தம்மபதப் பாடல் ஒன்றோடு பொருந்திப்போவதையும் ஏறத்தாழ அதன் மொழிபெயர்ப்பாகவே விளங்குவதையும் தெ.பொ.மீ அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டப்பட்டியிருப்பதை எடுத்துக்கூறி சங்க காலத்திலேயே பன்மொழிக் கல்வி இருந்திருப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றார். தமிழறிஞர் இராம.கி என்பவரோ ”வய் > வயி > வயிர்தல் = கடினமாதல், கூர்மையாதல். வயிர்தல் > வயிரம் உடைக்க முடியாத அளவுக்குக் கடினமான கல் என்ற கருத்து இங்கேஉள்ளடங்கியுள்ளது” எனக் குறிப்பிட்டு,” வயிரம் அந்தக் கால நாவலந்தீவில் தென்னிந்தியப் பகுதியிற்றான் கிடைத்தது.உலகத்தின் பேர்பெற்ற வயிரங்கள் இங்கிருந்து தான் வெட்டியெடுக்கப்பட்டன.முத்து, மாணிக்கம், பவளம், பொன் ஆகியவை இங்கிருந்து பன்னெடுங்காலம் கிடைத்தது போல், வயிரமும் பெரும் அளவில் இங்கிருந்து கிடைத்திருக்கப் பெரும் வாய்ப்பு உண்டு. அவற்றைக் குறிக்கும் சொற்களும் பெரும்பாலும் தென்மொழிச் சொற்களாக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்” என்று தெரிவித்தார்.
பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களில் பொழுதுபோக்கு சார்ந்த பொருட்கள் அதிகம். தந்தத்தால் செய்யப்பட்ட தாயம், விளையாட்டுப் பொருட்கள், கண்ணாடி மணிகள் ஆகியவை ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன. உற்பத்தி சார்ந்த கருவிகளை விடவும் இத்தகைய பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட பொருட்கள் தான் அங்கு ஏராளமாகக் கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமின்றி, "ஒரே ஒரு கல்லறையில் 8000 கன்ணாடி மணிகள் கிடைக்கும்போது அவர்கள் எந்த அளவுக்கு மேம்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்று நாம் உணரமுடிகிறது. பொருந்தல் பகுதியில் நாங்கள் அகழ்வாய்வு செய்திருப்பது ஒரு சதவீதம்தான். அந்த ஐந்து ஹெக்டேர் நிலப்பரப்பையும் அகழ்வாய்வு செய்தால் குறைந்தபட்சம் பத்து லட்சம் மணிகளாவது கிடைக்கும். அந்த மணிகள் எல்லாம் அவர்களால் வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட மணிகள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். வேண்டாம் என்று ஒதுக்கியதே அவ்வளவு இருக்கும்போது அவர்கள் எவ்வளவு மணிகளை உற்பத்தி செய்திருப்பார்கள், அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு வளமாக இருந்திருக்கும் என்பதை நாம் ஊகிக்கமுடிகிறது.” என்கிறார் பேராசிரியர் ராஜன்.
பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணியாற்றும் வரலாற்றுத் துறைக்குச் சென்று நான் அவரைச் சந்தித்தபோது தன்னையே தனது ஆய்வுக்கு அர்ப்பணித்துக்கொண்ட அபூர்வமான ஒரு ஆய்வாளரைச் சந்திக்கிறோம் என்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது. குடும்பத்தினரைப் பிரிந்து தனது ஆய்வுகளுக்குத் துணையாக இருக்கும் ஆய்வு மாணவர்களோடு தங்கியிருக்கும் பேராசிரியர் ராஜன் அந்த மாணவர்களையும் தனது சொந்த செலவில்தான் பராமரித்து வருகிறார். தொல்லியல், அகழ்வாராய்ச்சி போன்ற துறைகளில் ஈடுபடுவதற்கு இளைய தலைமுறையினர் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்பதை வருத்தத்தோடு அவர் தெரிவித்தார். "இப்போதுள்ள வசதிகளை வைத்துக்கொண்டு ஒரு இடத்தை முழுதுமாக அகழ்வாய்வு செய்து முடிக்க சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகும்" என்று அவர் சொன்னபோது தமிழ்நாட்டில் இருக்கும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆயிரக்கணக்கான இடங்களை அப்படி ஆய்வு செய்ய எவ்வளவு காலம் ஆகுமென எண்ணி மலைத்துப்போனேன். இதில் அரசாங்கங்களின் உதவி மட்டுமல்ல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் பங்கேற்பும் அதிகரிக்கப்படவேண்டும்.முதல் கட்டமாகத் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துப் பலகலைக் கழகங்களிலும் தொல்லியல் துறைகள் உருவாக்கப்பட வேண்டும். அவை ஒவ்வொன்றும் ஒரு இடத்தைத் தேர்வு செய்து அகழ்வாய்வை மேற்கொள்ளவேண்டும். பல்கலைக் கழகங்களில் தற்போதிருக்கும் வரலாற்றுத் துறைகள் எழுதப்பட்ட வரலாறுகளைப் படித்துக்கொடுக்கும் வேலையைத்தான் பெரும்பாலும் செய்கின்றன.அங்கு பணியாற்றுகிறவர்கள் வரலாற்றுப் பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களாகவே இருக்கின்றனர். அவர்களில் வரலாற்றறிஞர் (Historian) எனச் சொல்லத் தக்க எவரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த அவலநிலையை மாற்றுவதற்கு நமது உயர்கல்வி நிறுவனங்கள் முன்வரவேண்டும்.