இற்றைக்குச் சற்றொப்ப 45 ஆண்டுகட்கு முன்பு, யாம் மும்பையில் வேர் பிடிக்க முயன்று கொண்டிருந்த காலை, ஒரு சனிக்கிழமை பின்மாலையில், அப்போது மும்பையில் வருமான வரித்துறை அதிகாரியாகப் பணி புரிந்த, பின்னாளில் கேரள மாநில கேடர் I.A.S. அதிகாரியான, ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘இராமானுசன்’ ஆகிய திரைப்படங்கள் இயக்கிய, நண்பர் ஞான. ராஜசேகரன், எம்மை B.A.R.C. குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார். BARC என்றால் பாபா அடாமிக் ரிசர்ச் செண்டர் (Bhaba Atomic Research Centre). அதில் பணி புரிவோருக்கான குடியிருப்பு. அணுசக்தி நகர். அப்போது நான் தமிழ் எழுத்தாளனாகும் முயற்சியில் முனைந்திருந்தேன்.
BARC யில் பணி புரிந்த, தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வமுடைய இரு பாலருமான இளைய விஞ்ஞானிகள் சிலர், மாதம் ஒரு முறை, குறிப்பாக சனிக்கிழமை முன்மாலையில் கூடி, அதிகாலை வரை நவீன இலக்கியம் பேசுவார்கள். முதலும் கடைசியுமாக, அன்று ஞான. ராஜசேகரனுடன் கலந்து கொண்டேன். நான் போயிருந்த இரவின் பாடுபொருள் பூமணியின் படைப்புகள்.
பூமணியின் கதைகளில் ஒன்றை வாசிக்க ஆரம்பித்த இளைஞர்- நானும் அந்தக் காலகட்டத்தில் 27 வயதான இளைஞன் தான் – பூமணியின் கதாபாத்திரம் ஒன்று குசு விட்ட இடத்தில் நிறுத்தினார். அங்கிருந்து தொடங்கியது, இலக்கியத் தர மதிப்பீடு உரையாடல். ‘இப்படியா அசிங்க அசிங்கமா எழுதறது? குசு, பீ, மயிருன்னு எல்லாம்?’ என்பதுவே உரையாடலின் சாராம்சம்.
அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுத்தாளர்கள் அத்தகு சொற்களைக் கையாள்கிறார்கள் என்பதவர் தீர்மானம். பெரும்பாலும் அவர்கள் சிறு நகரங்களில் பிறந்து வளர்ந்திருக்கலாம், பெற்றோர் அரசு, தனியார் நிறுவன ஊழியராக இருக்கலாம். இல்லங்களில் சில சொற்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம். அன்றாடப் பயன்பாட்டில் குசு என்பது அபான வாயு எனவும், Gas எனவும், பீ மலமாகவும், குண்டி பிருஷ்டமாகவும், முத்தம் சும்பனமாகவும், தழுவுதல் ஆலிங்கனமாகவும், எச்சி உச்சிஷ்டமாகவும் மாட்டு மூத்திரம் கோமயமாகவும் இருக்கலாம்.
எம்மொழிச் சொல் பயன்படுத்தினாலும்- அபான வாயு, Gas, குசு எதானாலும்- அந்தச் சொல் சுட்டும் பொருள் ஒன்றுதானே! குசு என்றால் நாறவும், அபான வாயு என்றால் மணக்கவுமா செய்யும்? எம்மூரில் ஒரு பெரியவர், அம்மன் கோயில் கொடைக்கு நாதசுரம் வாசிக்கும் கம்பர், வசமானதோர் சங்கதி போடும்போது ‘ஓழ்!’ என்பார். அவருக்கு ஓழ் என்பது பேஷ், சபாஷ், பலே, அப்பிடி என்பது போல் ஒரு ரசனை ஒலி மட்டுமே. இன்னும் உற்சாகமானதாக இருந்தால் ‘ஓழ்! ஓழ்!’ என்று அடுக்குத் தொடராக அல்லது இரட்டைக் கிளவியாகச் சொல்வார். ஓழ் எனும் சொல் நாகரீகமான, மேம்பட்ட சமூக தளத்தில் புழங்கு மொழியாக இல்லை. கெட்ட வார்த்தை என்று ஒதுக்கப்பட்ட சொல். ஆனால் அலுவலகங்களில், மால்களில், உயர்தரத்து உணவு விடுதிகளில், கல்லூரி வராந்தாக்களில், ‘**** Yaar”, “**** yaar” என்றால் அது சட்டையில் தெளித்துக் கொள்ளும் வாசனைத் திரவியம்.
கிராமத்தான் பல நூற்றாண்டுகளாக, தனது மூதாயின் மூதாயின் மூதாய் பயன்படுத்திய சொற்களை இயல்பாக இன்னும் பயன்படுத்துகிறான். அதை எழுத்து வடிவில் கையாண்டால் கெட்ட சொல், கொச்சை, slang, வட்டார வழக்கு, and what not? ஆனால் வேற்று மொழிச் சொல்லாக, அதே பொருளில் எழுதினால், அது பண்பாட்டின் செம்மணிப் பூண். ஈதென்ன ஓர வஞ்சனை? “டேய் ஊம்பி!” என்றால் அது கெட்ட வார்த்தை, “சும்பப் பயலே!” என்றால் அரிதாரம்.
வெகு சாதாரணமாக சமூகத்தில் இன்றும் வழங்கப் பெறும் சொல், ‘பொச்செரிப்பு’. பொறாமை என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். பேரகராதி பொச்செரிப்பு எனும் சொல்லை பொச்சு+எரிப்பு என்று பிரித்துத் தருகிறது. எரிப்பு எனில் எரிச்சல், பொச்சு என்றால் என்ன? பொச்சு எனும் சொல்லைத் தெலுங்கும் கன்னடமும் பயன்படுத்துகின்றன, நாம் கொள்ளும் பொருளிலேயே. பேரகராதி பொச்சு என்றால் பெண்குறி மயிர், பெண்குறி, மலத்துவாரம், மயிர்க்கொத்து என்கிறது. மூலத்திலே கடுப்பு, குண்டி காந்தல், குண்டி எரிச்சல் என்று அன்றாடம் சாதாரண மக்கள் பயன்படுத்துகிறார்கள். உனக்கு என்னத்துக்குப் பொறாமை என்று கேட்பதுவே பொருள். மாற்றுச் சொற்கள், அவ்வளவே! மயிர் கொத்து, பெண்குறி மயிர், பெண்குறி, மலத்துவாரம் என்பன எங்ஙனம் கெட்ட சொல் ஆகும்? பொச்செரிப்பு என்பதைப் பொச்சரிப்பு என்றும் சொல்கிறோம். பொச்சு+அரிப்பு என்றே அச்சொல் பிரியும். பொச்சு எனும் சொல்லுக்கு பலாப்பழம், மாம்பழம் போன்ற பழங்களின் சேதாரமான பகுதி என்றும் பொருள் தரப்படுகிறது.
பொச்சம் என்றும் சொல்லுண்டு நம்மிடம். பொய், குற்றம், அவா, தேங்காய் மட்டை, உணவு என்னும் பொருள்கள். பொச்சாத்தல் என்றால் மறதி. அவையறிதல் அதிகாரத்துக் குறள் பேசுகிறது.
‘புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச் சொல்லுவார்’
என்று. நல்லோர் வீற்றிருக்கும் அவையில் நயம்பட உரைக்க வல்லவர்கள், மறந்தும் புல்லோர் இருக்கும் அவையில் வாய் திறக்கக் கூடாது என்பது பொருள். பொச்சாவாமை என்றோர் அதிகாரமே உண்டு குறளில். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக் கோவை, பொச்சாவார் என்ற சொல்லை, மறந்து போகார் எனும் பொருளில் ஆள்கிறது. மறதி உடைய மாந்தரை, பொச்சாப்பன் என்றார். பொச்சை என்றால் குற்றம் என்றும், தொப்பை, வயிறு என்றும் அகராதிகள் கூறுகின்றன.
என்றாலும் பொச்சு என்றால் கெட்ட வார்த்தை நமக்கு. பெண்குறியும், ஆசன வாயும் உறுப்புகள் தாமே! அவற்றுள் கேவலம் எங்கே வந்தது? ‘பொச்சை மூடிக்கிட்டுப் போ!’ என்றால் அது வசவு. கொங்கு நாட்டில் தாராளமாகப் புழங்கப்படும் வசவு அது. உண்மையில் பொச்செரிச்சல் என்றாலும் வசவுதான். எனினும் வசவு வேறு, வார்த்தை வேறு அல்லவா?
‘பொச்சு’ போல, பொது இடங்களில் மக்கள் புழங்கக் கூசும் மற்றொரு சொல், குண்டி. எனதாச்சரியம், குண்டி என்ற சொல் ஏன், எதனால், எப்போது கெட்ட சொல் ஆயிற்று என்பதில். ஊர்களும், சிற்றூர்களும் எவ்விதமான அறைப்பும், கூச்சமும் இன்றி சர்வ சாதாரணமாகப் புழங்கும் சொல். ‘குடிச்சுக் குண்டி வெடிச்சுச் செத்தான்’, ‘குளத்துக்கிட்டே கத்தீட்டுக் குண்டி கழுவாமல் போனான்’, ‘அண்டி உறைப்பும் இல்லே, குண்டி உறைப்பும் இல்லே’, ‘பணக்காரக் குண்டிக்குத் தடுப்புப் போடுவான்’, ‘குண்டீலே ரெண்டு மிதி மிதிச்சாத்தான் சரிப்பட்டு வருவான்’, ‘ஒழுங்காக் குண்டி கழுவத் தெரியாது, அவன் நாயம் பேச வாறான்’ என்று எத்தனை வழக்குகள்! மலையாள சினிமாவில் அடிக்கடி கேட்கும் வாசகம், “குளம் எத்தற குண்டி கண்டிற்றுண்டு, குண்டி எத்தற குளம் கண்டிற்றுண்டு?” என்பது. பசி எடுத்தால் தெரியும் என்பதற்கு, “குண்டி காஞ்சால் வருவான்!” என்பார்கள்.
இறுமாப்பைச் சொல்ல, குண்டிக் கொழுப்பு என்றோம். இந்தியில் ‘காண்ட் மேம் ஜர்பி ஹை’ என்பார்கள். காண்ட் என்றால் குண்டி, ஜர்பி என்றால் கொழுப்பு. உடுக்கத் துணிக்குப் போக்கில்லை என்று சொல்ல, குண்டித் துணிக்கு வழியில்லை என்றோம். ஆசன எலும்பைக் குண்டி எலும்பு என்றோம். ஆசிரியர்கள், ‘குண்டித் தோலியை உரிச்சுருவேன்’ என்றார்கள் நான் பள்ளியில் வாசிக்கையில். ‘கஞ்சிக்கு வழியில்லே, குண்டிக்குப் பட்டு கேட்கிறது! என்றார்கள் பெண்கள். Buttocks என்ற சொல்லை குண்டிப் பட்டை, சூத்தாம் பட்டை என்றோம்.
என்ன விந்தை என்றால் பிருஷ்டம், புட்டம், buttocks எனும் சொற்களைப் புழங்க நமக்கு எந்த நாணமும் இல்லை. குண்டி என்று சொல்ல அவமானப்படுகிறோம். தமிழ் எழுத்தாளர்களே கூட, குண்டி எனும் சொல்லை சோப்புப் போட்டு, அலசி, காய வைத்து, மடித்து, ஆசனவாய், அடிப்பக்கம், பின் பக்கம் என்று மழுப்புகிறார்கள்.
பேரகராதி, குண்டிக்காய் என்ற சொல்லுக்கு, buttocks என்றே பொருள் சொல்கிறது. குண்டம், குண்டி எனும் சொற்களுக்குப் பன்றி என்று பொருள். குண்டலி எனும் சொல், மயிர், மான், பாம்பு இவற்றைக் குறித்தது. குண்டிகம் என்றால் துகள். குண்டிகை என்றாலோ கமண்டலம், குடுக்கை மற்றும் தேங்காய்ச் சிரட்டை. சிரட்டை என்ற சொல்லுக்கு தொட்டி, கொட்டாங்கச்சி என்று நான் பொருள் சொல்ல வேண்டும்.