தொல்லியல் அகழாய்வுகள்! - C.P.சரவணன், வழக்குரைஞர் தினமணி 02.10.2019) =================================================== தொல்லியல் (Archaeology) என்பது மனிதன் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை ஆய்வு செய்து பண்பாட்டை அறிந்து கொள்வது ஆர்க்கியாலஜி (தொல்லியல்) என்பது கிரேக்க சொல்லாகிய ஆர்காய்ஸ் மூலம் பெறப்பட்டது. ஆர்காய்ஸ் என்றால் பழமை என்றும், லோகோஸ் என்றால் அறிவியல் என்றும் வழங்கப்படுகின்றது.
நம்முடைய முந்தைய சமுதாயங்கள் விட்டுச் சென்ற தடயங்கள் மூலம் பண்டைய வரலாற்றை மறுபதிவு செய்வதால் தொல்லியல் ஆய்வு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தொல்லியல் மற்றும் வரலாறு ஆகிய இரண்டுமே பண்டைய சமுதாயத்தை மனித ஆய்வு செய்கின்றன. கிடைக்கின்ற பழம்பொருட்களைக் கொண்டு மனிதனின் பண்பாட்டை ஆய்வு செய்து வரலாற்றுக்கு மற்றுமொரு ஆய்வு நெறியினைத் தொல்லியல் தருகின்றது.
தொல்லியலில் அகழ்வாய்வு தொல்லியலில் அகழ்வாய்வு என்பது தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்தல், செயற்படுதல் (processing), பதிவு செய்தல் என்பவற்றை ஒருங்கே குறிக்கிறது. இச்சொல் இன்னொரு பொருளிலும் பயன்படுத்தப்படுவது உண்டு. இது ஒரு களத்தை ஆய்வு செய்வதற்கான வழிமுறையைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். இப்படியான அகழ்வாய்வு ஒரு குறிப்பிட்ட தொல்லியல் களம் அல்லது தொடர்புள்ள பல களங்களோடு சம்பந்தப்படுவதுடன், இது பல ஆண்டுகள் நடத்தப்படவும் கூடும்.
அடிப்படை வகை தற்காலத் தொல்லியலில் இரண்டு வகையான அடிப்படை அகழ்வாய்வு வகைகள் உண்டு: 1. ஆய்வுக்குரிய அகழ்வாய்வு - ஒரு இடத்தில் முழு அளவிலான அகழ்வாய்வைச் செய்வதற்கான நேரமும், இடமும் இருக்கும்போது இவ்வகை அகழ்வாய்வு நடத்தப்படுகின்றது. இது தற்போது, போதிய நிதியையும், தன்னார்வ உழைப்பையும் பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வியாளர்கள் மற்றும் தனிப்பட்ட அமைப்புக்களினால் கைக்கொள்ளப்படுகின்றது. அகழ்வின் அளவு வேலைகள் நடைபெறும் காலத்தில் வேலைகளை இயக்குபவரால் தீர்மானிக்கப்படுகின்றது.
2. வளர்ச்சி சார்ந்த அகழ்வாய்வு - இது தொழில்முறைத் தொல்லியலாளர்களால் செய்யப்படுகிறது. தொல்லியல் களம், கட்டிடச் செயற்பாடு போன்ற வளர்ச்சித் திட்டங்களினால் பாதிக்கப்படும் நிலை வரும்போது இவ்வகை அகழ்வாய்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுவாக வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்துபவர்களே இவ்வாய்வுக்கான நிதியையும் வழங்குவர். இத்தகைய சூழ்நிலைகளில் நேரம் மட்டுப்பட்டதாக இருப்பதுடன், ஆய்வுகளும் வளர்ச்சித் திட்டத்தினால் பாதிப்புறும் இடங்களை மட்டுமே கவனத்தில் கொள்கின்றன. வேலையாட்களும் பொதுவாக அகழ்வாய்வு செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர்.
தொல்லியல் அகழாய்வுகள் (Archaeological Excavations) இந்தியா விடுதலை அடைவதற்கு முன் அலெக்சாண்டர் ரீயா என்பவரால் பெருங்கற்கால தாழிப் பகுதிகள் கொண்ட இடங்களான மதுரை சிற்றூர் பகுதிகளான பரவை மற்றும் அனுப்பானடியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு இப்பகுதியின் தொன்மை உணர்ந்து மத்திய தொல்லியல் துறை 1976 ஆம் ஆண்டில் டி.கல்லுப்பட்டியில் முறையான அகழாய்வினை மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக தொல்லியல் துறை கோவலன் பொட்டல் (1979-80), அழகன்குளம் (1986-87, 1990-91, 1992-93, 1994-95, 1996-67, 1997-98, 2014-15, 2016-17) மற்றும் மாங்குளம் (2006-07) போன்ற பகுதிகளில் அகழாய்வினை மேற்கொண்டது. அந்த அகழாய்வுகளில் வைகை நதி வங்கக் கடலில் கலக்கும் பகுதியில் உள்ள அழகன்குளம் அகழாய்வு முக்கியத்துவம் கொண்டது ஆகும்.
இந்த ஆய்வில் சங்க கால பாண்டிய துறைமுகப் பட்டணமாக அழகன்குளம் விளங்கியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
கீழடியில் தொல்லியல் அகழாய்வுகள் (Archaeological Excavations at Keeladi) அண்மையில் தமிழர் பண்பாட்டு புகழ் பரப்பி வரும் கீழடி அகழாய்வு பகுதியானது 110 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேல் அதிக சிதைவில்லாமல் தென்னந்தோப்புகளால் பாதுகாக்கப்பட்டு 9 51’29"" வடக்கு அட்ச ரேகைக்கும், 98 11’69"" கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடையே அமையப் பெற்றுள்ள ஒரு தொன்மை நகரிய குடியிருப்பு மற்றும் தொழிற்கூடப் பகுதி ஆகும்.
தமிழகத்தின் ஒரு கோயில் நகரமாக திகழும் மதுரை நெடுஞ்சாலை வழியே கிழக்கு தென்கிழக்காக 13 கி.மீ. தொலைவில் கீழடி அமைந்துள்ளது. கீழடி அகழாய்வுப் பணி இடத்தின் வடக்கே 2 கி.மீ. தொலைவில் வைகை ஆறு செல்கிறது. கிழக்கு பகுதியில் உள்ள மணலூர் கிராமத்தின் வடக்கில் ஒரு கண்மாய் அமைந்துள்ளது.
வட கிழக்கில் உள்ள இயற்கை நீர்நிலை காட்சியளிக்கின்றது. இது போலவே அகரம் என்னும் ஊர் கீழடியின் தென்கிழக்கே அமைந்துள்ளது. மேற்கே கொந்தகை என்னும் ஊர் ஓர் எல்லையாக விளங்குகிறது. இவ்வாறு சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் ஊரணிகள், கண்மாய்கள் என இயற்கை அரண்களாக பெற்று வரலாற்று தொடக்க கால முதல் சமகாலம் வரை மனித வாழிடத்திற்கு உகந்ததாக திகழ்கிறது.
முந்தைய ஆண்டுகளில் ( 2014-15, 2015-16 மற்றும் 2016-17) இப்பகுதியில் மத்திய தொல்லியல் துறையில் அகழாய்வு பிரிவு, பெங்களூர் பிரிவு அகழாய்வு மேற்கொண்டது. கீழடியின் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகளை தமிழக அரசு தொல்லியல் துறை முறையே 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தி வருகிறது. இந்த அகழ்வாய்வுகளில் இப்பகுதியில் புதைந்துள்ள கட்டடப்பகுதியையும், அரும்பொருட்களையும் வெளிக்கொணரும் வண்ணம் பெரும்பரப்பு அகழாய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. ஐந்தாம் கட்ட கீழடி அகழாய்வானது முறைப்படுத்தப்பட்ட முறையில் நேர்த்தியுடன் நடந்து வருகிறது. கீழடி அகழாய்வின் முதன்மைத் தரவுகள் (2017-18) நான்காம் கட்ட அகழாய்வில் 5820 அரும்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
இவை பண்டைய பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் செங்கற் கட்டுமானங்கள், சுடுமண் உறைக் கிணறுகள், மழை நீர் வடியும் வகையில் விரல்களால் அழுத்தி பள்ளம் இடப்பட்ட அமைப்பைக் கொண்ட கூரை ஓடுகள் போன்றவையாக காணப்படுகின்றன.மேலும், அரும்பொருட்களும் விலை உயர்ந்த தங்க அணிகலன் பகுதிகள், உடைந்த பகுதிகள், செப்பு பொருட்கள், இரும்பு கருவி பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள் வட்ட செல்கள், சுடுமண் காதணிகள், கண்ணாடி மற்றும் விலை உயர்ந்த மணி கற்கள் (அகேட் சூதுபவளம், ஸ்படிகம்) அக்கால மட்பாண்ட ஓடுகள் (கருப்பு சிவப்பு, கருப்பு, சிவப்பு பூச்சு மட்கலப் பகுதிகள்) ரௌலட்டட் மட்பாண்டங்கள் அரட்டின் ஓடுகள் ஆகியனவும் வெளிக் கொணரப்பட்டன.
பெரும்பாலான மட்பாண்டங்களில் கீறல்களும், குறியீடுகளும், வடிவங்களும் காணப்பட்டன. இவை சுடுவதற்கு முன்பும் பின்பும் பொறிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இவ்வகழாய்வில் கணிசமான எண்ணிக்கையில் (50க்கும் மேற்பட்ட) தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இப்பொருட்கள் வாயிலாக கீழடி பகுதியில் பண்டைய காலத்தில் தமிழர் நாகரிகம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்ததும், இப்பகுதி மதுரையின் கிழக்கு திசை நீட்சியாக விளங்கியிருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது.
எனவே, கீழடியில் மறைந்துள்ள தொல்பொருட்களை வெளிக்கொணர வேண்டியது காலத்தின் தேவை என்பதை கருத்திற்கொண்டு வரும் காலங்களில் தமிழ் சமுதாயத்தில் தொன்மை மிக்க பண்பாட்டு செல்வங்களை வெளிக்கொணரும் வகையில் அகழ்வாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன.
கீழடி அகழாய்வின் முதன்மைத் தரவுகள் (2017-18) (Key Findings – Keeladi Excavation) நான்காம் கட்ட அகழாய்வில் 5820 அரும்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவை பண்டைய பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் செங்கற் கட்டுமானங்கள், சுடுமண் உறைக் கிணறுகள், மழை நீர் வடியும் வகையில் விரல்களால் அழுத்தி பள்ளம் இடப்பட்ட அமைப்பைக் கொண்ட கூரை ஓடுகள் போன்றவையாக காணப்படுகின்றன.
மேலும், அரும்பொருட்களும் விலை உயர்ந்த தங்க அணிகலன் பகுதிகள், உடைந்த பகுதிகள், செப்பு பொருட்கள், இரும்பு கருவி பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள் வட்ட செல்கள், சுடுமண் காதணிகள், கண்ணாடி மற்றும் விலை உயர்ந்த மணி கற்கள் (அகேட் சூதுபவளம், ஸ்படிகம்) அக்கால மட்பாண்ட ஓடுகள் (கருப்பு சிவப்பு, கருப்பு, சிவப்பு பூச்சு மட்கலப் பகுதிகள்) ரௌலட்டட் மட்பாண்டங்கள் அரட்டின் ஓடுகள் ஆகியனவும் வெளிக் கொணரப்பட்டன.
பெரும்பாலான மட்பாண்டங்களில் கீறல்களும், குறியீடுகளும், வடிவங்களும் காணப்பட்டன. இவை சுடுவதற்கு முன்பும் பின்பும் பொறிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இவ்வகழாய்வில் கணிசமான எண்ணிக்கையில் (50க்கும் மேற்பட்ட) தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இப்பொருட்கள் வாயிலாக கீழடி பகுதியில் பண்டைய காலத்தில் தமிழர் நாகரிகம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்ததும், இப்பகுதி மதுரையின் கிழக்கு திசை நீட்சியாக விளங்கியிருக்க என்பதும் புலனாகிறது.
எனவே, கீழடியில் மறைந்துள்ள தொல்பொருட்களை வெளிக்கொணர வேண்டியது காலத்தின் தேவை என்பதை கருத்திற்கொண்டு வரும் காலங்களில் தமிழ் சமுதாயத்தில் தொன்மை மிக்க பண்பாட்டு செல்வங்களை வெளிக்கொணரும் வகையில் அகழ்வாய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழகத்தில் நிலவிய சங்ககால பண்பாட்டு வரலாற்றாய்வில் ஒரு திருப்புமுனை (A turning point in the cultural historiography of sangam Age)
பழந்தமிழர் பண்பாட்டின் சிறப்பம்சங்களை உலக அரங்கில் நிலை நிறுத்தும் நோக்கோடு, தமிழ்நாடுஅரசு தொல்லியல் துறை, கீழடி அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களைப் புகழ்பெற்ற அறிவியற்கூடங்களுக்கு அனுப்பி ஆய்வு முடிவுகளைப் பெற்றுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட ஆய்வு முடிவுகளைத் தொல்லியல் அறிஞர்கள் கொண்ட குழு ஆராய்ந்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. அதன் சிறப்புக்கூறுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழடி பண்பாடு (Keeladi 2600 years old culture) கீழடியில் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் போதுசேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு (Beta Analytic Testing Laboratory) அனுப்பப்பட்டன. பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப் பெற்ற கரிமத்தின் காலம் கி.மு. 580 என்று கணக்கீடு செய்யப்பட்ட ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. இக்காலக்கணிப்பின்படி, கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.1-ஆம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக கீழடி விளங்கியிருக்க வேண்டும் எனத்தெரிகிறது.
இந்த ஆய்வு முடிவுகளைக் கவனமாக ஆய்வு செய்த பிரபல தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா.இராஜன், பழந்தமிழரின் தொன்மை தொடர்பாக இதுவரை நிலவி வந்த சில கேள்விகள் மற்றும் கருதுகோள்களுக்கு உறுதியான விடைகள் / சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன என்று கருதுகிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் நகரமயமாதல் கி.மு.3-ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் தொடங்கியது என இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகளின் மூலம் வைகை நதிக்கரையில் நகரமயமாதல் கி.மு.6-ஆம் நூற்றாண்டிலிருந்து, தொடங்குகிறது என்பது தெளிவாகிறது.
இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இதுவரை தமிழ்-பிராமி எழுத்துவடிவத்தின் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என அழகன்குளம், கொடுமணல், பொருந்தல் அகழாய்வுகளின்படி கருதப்பட்டு வந்தது.
எனினும், தற்போது கிடைத்திருக்கும் கீழடி அகழாய்வில் கிடைத்த அறிவியல் ரீதியான காலக்கணிப்புக்கள் தமிழ்-பிராமியின் காலம் மேலும் நூறாண்டுகள் (கி.மு. 6-ஆம் நூற்றாண்டு) பழமை வாய்ந்தது என்னும் முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. எழுத்து பொறிப்பு பெற்ற பானை ஓடுகள் கிடைக்க பெற்றுள்ளதின் மூலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டளவிலேயே தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளதை நிலைநிறுத்த முடிகிறது. எழுத்தறிவு தொடங்கிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. இக்கருத்தாக்கதில் பெரும் மாற்றத்தை கீழடி ஆய்வு முடிவுகள் ஏற்படுதியுள்ளன என்றால் மிகையாகாது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கம் அகழாய்வில் கண்டறியப்பட்ட முதற்கட்ட பழையகற்கால (Lower Palaeolithic) கருவிகள் 15 இலட்சம் ஆண்டுகள் என்றும், இரண்டாம் கட்ட பழையகற்கால (Middle Palaeolithic) கருவிகள் 3,85,000 ஆண்டுகள் பழமையானது என்றும், கற்கருவிகளை காசுமோசெனிக்-நியூக்லைட் எனப்படும் இயலுலக புவிபரப்பியல் ஒளி ஆய்வு (Cosmogenic-Nuclide Burial Dating Method) செய்ததில் இக்கால முடிவுகள் பெறப்பட்டன எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போன்று நுண்கற்காலத்தைச் (Microlithic / Mesolithic Period) சேர்ந்த கற்காலக் கருவிகள் திருநெல்வேலிப் பகுதியிலும், வைகை மற்றும் குண்டாறு ஆற்று படுகைகளிலும், புதிய கற்காலப் பண்பாடுகளின் கருவிகள் தமிழகத்தின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் கிடைத்துள்ளன. அதன் அடுத்தக் காலக்கட்டமான இரும்புக் காலத்தைச் சார்ந்த சேலம் வட்டாரத்திலுள்ள மாங்காடு மற்றும் தெலுங்கனூர் ஊரிகளிலுள்ள பெருங்கற்படை ஈமச் சின்னங்களில் கண்டறியப்பட்ட மாதிரிகளிலிருந்து இரும்புக் காலம் கி.மு. 2000 என காலக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் முதுமக்கள்தாழி அகழாய்வில் இருந்து சேகரிக்கப்பட்ட கரிமம் காலக் கணக்கீடு செய்யப்பட்டதில் இதனின் காலம்கி.மு. 8-ஆம் நூற்றாண்டு என்று வரையரை செய்யப்பட்டுள்ளது. தற்போது கீழடி அகழாய்வில் சேகரிக்கப்பட்ட ஆறு கரிம பகுப்பாய்வுகளின் முடிவுகள் கீழடியின் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்று தெரிய வருகிறது.
அண்மைக்கால அகழாய்வுகளும், அறிவியல் ரீதியான காலகணிப்புகளும், தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15 இலட்சம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதும், தற்போதைய கீழடி ஆய்வுகள் மூலம் தமிழகத்தின் தொடக்க கால வரலாறு காலத்தில் (Early Historic Period) கி.மு. 6-ஆம் நூற்றாண்டளவில் மக்கள் எழுத்தறிவு பெற்று விளங்கி இருந்தனர் என்பது உறுதியாகிறது.
தமிழர் தொன்மை - வியக்க வைக்கும் கட்டுமானப் பொருட்கள், கட்டட தொழில்நுட்பம்! C.P.சரவணன், வழக்குரைஞர் (தினமணி 02.10.2019) ============================================== பழங்காலத்திலேயே செங்கற்களைப் பயன்படுத்தியுள்ளனர் தமிழ் மக்கள். இன்று நாம் கட்டும் கட்டடங்கள் சில ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்காத நிலையில், 2600 வருடங்கள் கழிந்து தன் நிலைத் தன்மையை பறைசாற்றுகின்றன.
கட்டுமானப் பொருட்களின் பகுப்பாய்வு (analysis of the structural remains) கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள் மற்றும் சுடுமண்ணாலான உறைகிணற்றின் பூச்சு ஆகியவற்றின் மாதிரிகள் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துக்குப் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன. இவை ஒவ்வொன்றிலும் சிலிக்கா மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றின் கலவை மற்றும் தன்மை குறித்து விரிவான அறிக்கை பெறப்பட்டுள்ளது.
செங்கல் மற்றும் கூரை ஓடுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக சிலிக்காவும், பிணைப்புக் காரணியாக அதிகளவு (7%) சுண்ணாம்பும் கலந்துள்ளதையும்; சுண்ணாம்புச் சாந்து, 97 சதவீதம் சுண்ணாம்பு கொண்டிருந்ததையும் உற்று நோக்கும் பொழுது அக்காலக்கட்ட மக்கள் மிகத் தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வருகிறது. மேற்படி சுண்ணாம்பு சாந்தில் 97 சதவீதம் சுண்ணாம்பு இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவித்திருப்பதால் மிகவும் வலிமையாக இன்று வரை நீடித்திருப்பதற்கு இதுவே சான்றாகும்.
கட்டட தொழில்நுட்பம் (structural engineering ) தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் இரண்டு கட்ட அகழாய்வுகளில் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழாய்வில் 13 மீட்டர் நீளமுள்ள மூன்று வரிசை கொண்ட சுவர் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சுவரில் 38x23x6 அளவு மற்றும் 38x26x6 அளவு கொண்ட இரண்டு விதமான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க:கீழடி ஸ்பெஷல்: சிவகங்கை மாவட்டம் கீழடி அறிமுகம்!
செங்கல்லின் அகலம் மட்டுமே சிறிது மாறுபட்டு இருக்கிறதே தவிர நீளம் மற்றும் தடிமன் ஆகியவை ஒரே அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவை, தமிழகத்தில் சங்ககாலத்தைச் சார்ந்த பிற தொல்லியல் இடங்களில் காணப்படும் செங்கற்களைப் போல்1:4:6 என்ற விகிதாச்சார அளவிலேயே காணப்படுவதால் அக்காலகட்டத்தில் கட்டுமானத்தில் காணப்படும் தொழில்நுட்பத்தை உய்த்து உணரலாம்.
சில பகுதிகளில் தரைத்தளம் கண்டறியப்பட்டுள்ளது. நன்கு சன்னமான களிமண்ணைக் கொண்டு தரைத்தளம் அமைத்து, செங்கற்களைக் கொண்ட பக்கச்சுவர்களை எழுப்பியுள்ளனர். தூண்கள் நட்டு மேற்கூரை அமைக்க ஏற்படுத்தப்பட்ட துளைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இத்தூண்கள் மரத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான சான்றுகள் அகழாய்வில் கிடைக்கப் பெறவில்லை. எனினும், அகழாய்வில் இரும்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதை வைத்து மரச்சட்டங்களை இரும்பு ஆணிகள் கொண்டு பொருத்தியிருக்க வேண்டும் என்று கருதலாம்.
அகழாய்வின் ஒரு பகுதியில் ஏராளமான கூரை ஒடுகள் சரிந்து விழுந்து பரந்து கிடைத்ததற்கான அடையாளங்கள் ஆவணப்படுத்துப்பட்டுள்ளன. இக்கூரை ஓடுகளின் தலைப் பகுதியில் இரண்டு துளைகள் காணப்படுகின்றன. மரச்சட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மேற்கூரையின் மீது கீழிலிருந்து மேலாக சுடுமண்ணாலான கூரை ஓடுகள் வேயப்பட்டிருப்பதுடன், அவை கீழே விழாமல் இருக்க அத்துளைகளில் நார் அல்லது கயிறு கொண்டு கட்டியிருக்க வாய்ப்புள்ளது.
மேற்கூரை மீது விழும் மழை நீர் எளிதில் கீழே வரும் வகையில், கூரை ஓடுகளில் விரல்களால் மிக அழுத்தி உருவாக்கப்பட்ட நீர் வடியும் பள்ளங்கள் காணப்படுகின்றன.
இந்த கட்டுமான அமைப்புகளை சங்க காலத்தில் நிலவிய, வளர்ந்த சமூகத்தின் அடையாளமாக பார்க்கலாம். தற்போது அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. செங்கல் கட்டுமானங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட பின்னர், இக்கட்டுமானத்தின் பயன்பாடு குறித்து முழுமையாகத் தெரியவரும்