கடந்த வியாழக்கிழமை (19-09-2019) அன்று தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி-4 ஆய்வின் முடிவுகளானவை வெறும் தமிழ் – இந்திய வரலாற்றினை மட்டுமன்றி, தென்னாசிய வரலாற்றினையும் சேர்த்தே மாற்றி எழுதவேண்டிய ஒரு தேவையினை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆய்வு முடிவுகளில் சில ஏற்கனவே ஊடக மட்டங்களில் பேசப்பட்டு வந்த செய்திகள்தான் என்றபோதும், அவை அறிவியல் சான்றுகளுடன் அரசினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது முதன்மையானதே. ஏறக்குறைய 45 ஆண்டுகளிற்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு மாணவனால் கண்டெடுக்கப்பட்ட ஒரு தொல் பொருள், ஒரு ஆசிரியரின் (பாலசுப்பிரமணியம்) கவனத்தினைப் பெற்றதிலிருந்து கீழடி ஆய்விற்கான விதை போடப்பட்டது.
கீழடி அகழ்வாய்வுப் பனிகளில் அமர்நாத் இராமகிருஷ்ணன்.பின்னர் நடுவண் அரசினால் 2014 ம் ஆண்டிலிருந்து மூன்று கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதில் முதலிரு கட்டங்கள் அமர்நாத் ராமகிருசுணனால் சிறப்பாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலக்கணிப்பினைச் செய்வதில் நடுவண் அரசானது வேண்டுமென்றே பல குளறுபடிகளைச் செய்தது. முதலில் கண்துடைப்பிற்காக வெறும் இரு பொருட்களை மட்டுமே ஆய்விற்கு அனுப்பியது. அதுவும் கீழ் மட்டங்களில் கிடைத்த பொருட்களை தெரிவுசெய்யாமல் (எப்பொழுதும் தொல்லியல் மேடுகளில் கீழ் மட்டத்திலேயே மிகப் பழைய காலப் பொருட்கள் கிடைக்கும்), வேண்டுமென்றே இடை மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொருட்களையே ஆய்விற்கு அனுப்பியது. அதன் பின்னரும் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்த தயங்கியே வந்தது. நாடாளுமன்றத்தில் நா.உ (MP ) கனிமொழி கேள்வி எழுப்பிய பின்னரே ஆய்வு முடிவினை வெளியிட்டது.
அதில் அப்போதே கீழடித் தொல் பொருட்கள் பொ.மு 2ம் நூற்றாண்டைச் (BCE 2nd cent) சேர்ந்ததவை எனக் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் சிறப்பாகச் செயற்பட்ட அமர்நாத் ராமகிருசுணன் வேண்டுமென்றே இடமாற்றப்பட்டு, சிறீராம் என்பவரின் தலைமையில் 3 -ம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ‘சிறீராம்’ என்பவர் தனது பெயரிற்கேற்ப ‘பொலோ ஜெய் ஸ்ரீராம்’ எனக் கூச்சலிடும் குழுவின் தாளத்திற்கேற்பவே ஆடினார். உண்மையில் முதலிரு கட்ட ஆய்வுகள் சுட்டிய பாதையில் தொடராமல், அதற்கு எதிர்த்திசையிலேயே வெறும் எட்டு குழிகளை மட்டுமே தோண்டி, அங்கு குறிப்பிடும்படி எதுவுமேயில்லை எனக்கூறி ஆய்வினை நிறுத்திக்கொண்டார். நடுவண் தொல்லியல் துறையானது இதே காலப்பகுதியில் குச(ஜ)ராத், உத்திரப்பிரதேசப் பகுதிகளில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளிற்குக் கொடுத்த முதன்மையினை கீழடிக்கு இறுதிவரைக் கொடுக்கவேயில்லை.
இந்த நிலையிலேயே தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நான்காம் கட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்தது. இப்போது ஐந்தாம் கட்ட ஆய்வும் முடிவுறும் வேளையிலுள்ளபோதும், வியாழன் அன்று வெளியானது நான்காம் கட்ட ஆய்வின் அறிவியல் சான்றுகளுடனான அதிகாரபூர்வ முடிவுகளேயாகும். இதுவே பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வில் தெரியவந்தவை:
நான்காம் கட்ட ஆய்வு முடிவுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையானது ‘கீழடி -தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி’ என்ற தலைப்பிலான ஒரு நூலாகவே வெளியிட்டுள்ளது. அந்த நூலின் PDF வடிவமானது இக் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை அமெரிக்க ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் ஆய்வுகூடத்திற்கு அனுப்பி AMS (Accelerated mass spectometry) முறையில் மேற்கொள்ளப்பட்ட கரிமச் சோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் காலம் பொ.மு 6-ம் நூற்றாண்டு (BCE 6th cent) எனக் கண்டுள்ளார்கள். மேலும் ஆய்வு முடிவானது பின்வரும் வழிகளில் முதன்மை பெறுகின்றது.
படிக்க:
♦ சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !
♦ தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்
சங்ககால பின்நோக்கிய காலவரையறை – சங்க காலமானது பொ.மு ஆறாம் நூற்றாண்டுவரைப் (BCE 6th cent) பின்நோக்கிச் சென்றுள்ளது. எனவே இனிச் சங்ககாலம் என்பது பொ.மு 600 (BCE 600) இலிருந்தே தொடங்கும்.
தமிழர்களின் நகர நாகரிக காலம் – இதுவும் முதலில் கூறிய காலத்திற்கே (BCE 600) செல்லும். மேலும் இக் காலப்பகுதியிலேயே சிந்துவெளி நாகரிகத்திலும் இரண்டாம் நகர உருவாக்கப்பட்டிருந்த காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழி எழுத்தின் காலமும் BCE 6-ம் நூற்றாண்டே – இங்கு கிடைத்த பானை ஓடுகளிலுள்ள எழுத்துகளது காலமும் பொ.மு 6ம் நூற்றாண்டு (BCE 600) என சான்றுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதலில் எழுத்துகளைப் பயன்படுத்தியோர் தமிழர்களே என்பதும், அசோகரின் பிராமி எழுத்துகளை விட தமிழி 300 ஆண்டுகள் பழமையானவை என்பதும் சான்றுபடுத்தப்பட்டுவிட்டது.
எழுத்துகளின் பரவலான பயன்பாடு – எழுத்துகள் சிலரால் மட்டுமல்லாமல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கீழடி அகழாய்வில் 1001 ஓடுகள் இத்தகைய எழுத்து வரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட அகழ்வாய்வில் மட்டுமே 56 தமிழி எழுத்துகளைக் கொண்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. இந்த எழுத்துகள் பெரும்பாலும் பானைகளின் கழுத்துப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. பானையில் கிடைக்கும் எழுத்துகள் பெரும்பாலும் பானை செய்வோரால் சுடுவதற்கு முன்பாக ஈர நிலையில் எழுதப்படும். கீழடியில் பானைகள் சுடப்பட்டு, உலர்ந்த பிறகு எழுதப்பட்ட எழுத்துகள் கிடைத்துள்ளன. அவற்றின் எழுத்தமைதி (கையெழுத்து) ஒரே மாதிரியாக இல்லை. ஆகவே வெவ்வேறு ஆட்கள் இவற்றை எழுதியுள்ளமை தெரியவந்துள்ளது. இதனால் எழுத்துகளின் பரவலான பயன்பாடு தெரியவந்துள்ளது.
சிந்துவெளி நாகரிக எழுத்திற்கும்-தமிழிற்குமிடையேயான தொடர்பு – பொதுவாக மனிதனின் படிமலர்ச்சி பற்றிப் பேசும்போது ‘விடுபட்ட இணைப்பு’ {Missing link in human evolution} ஒன்று பற்றிப் பேசப்படும். அதுபோன்றே, எழுத்துகளின் படிமலர்ச்சியிலும் சிந்துவெளி வரி வடிவத்திற்கும், தமிழிற்குமிடையே ஒரு விடுபட்ட தொடர்பு இருப்பதாகக் கருதுவார்கள். அதற்கான வெளிச்சம் இப்போது கிடைத்துள்ளது.
சிந்து சமவெளி மற்றும் கீழடி எழுத்துக்கள் ஒரு ஒப்பீடு.வேளாண்மை – திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு போன்றவற்றின் எலும்புகள் மக்கள் வாழ்விடங்களில் கிடைத்ததன் மூலம் அவ் விலங்குகளை வேளாண்மைக்குப் பயன்படுத்தியிருப்பதனை அறியமுடிகின்றது. இதன்மூலம் சங்ககால சமூகம் வேளாண்மையினை முதன்மைத் தொழிலாகவும், கால்நடை வளர்ப்பினையும் ஒரு துணைத் தொழிலாகவும் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மேலும் தானியங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் பானைகளும் கிடைத்துள்ளன.
கைத்தொழில் – முதன்மையான கைத்தொழிலாக பானை வனைவு காணப்படுகின்றது. பானைகளைப் பொருத்தவரையில் தண்ணீர் சேமித்து வைக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பானையோடுகள் இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்திற்கு (Universita Di Pisa) அனுப்பிச் சோதனைசெய்யப்பட்டதில், உள்ளூர் மண் பயன்படுத்தப்பட்டுள்ளமையும், தனித்த பானை வனைவு நுட்பம் பயன்படுத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது. மேலும் கருப்பு சிவப்பு நிற பானையோடுகளிலிருந்து பானை செய்வதற்கு இரும்புத்தாதுப் பொருளான கேமடைட் – Hematite (சிவப்பு நிறக் காரணம்), கரியினையும் (கருப்பு நிறக் காரணம்) பயன்படுத்தி 1100 பாகை செ வெப்பநிலையில் சுட்டுப் பானைகளை உருவாக்கியுள்ளார்கள். மேலும் பைசா பல்கலைக்கழக அறிக்கையில் 4 நூற்றாண்டுகளாக (BCE6th cent – BCE 2nd cent) இத்தகைய நுட்பத்தினைப் பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது. நெசவுத் தொழில் நுட்பத்தினை வெளிக்காட்டும் வகையில் நூல்களை நூற்கும் தக்களி, எலும்பிலான தூரிகைகள் (துணியில் வடிவங்களை வரைய), தறியில் தொங்கவிடப்படும் கருங்கல், சுடுமண்ணிலான குண்டு, செம்பிலான ஊசி என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
படிக்க:
♦ துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019
♦ கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு
கட்டிடக்கலை – கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்புச்சாந்து, கூரை ஓடுகள் என்பன வேலூர் பல்கலைக்கழகப் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டதில் சங்ககால மக்களின் கட்டிடத் தொழில்நுட்பம் தெரியவந்துள்ளது. செங்கற்களில் 80% -இற்கும் கூடுதலாகச் சிலிக்காவும், பிணைப்பிற்காக 7 % சுண்ணாம்பும் கலந்துள்ளார்கள். சுண்ணாம்புச் சாந்தில் 97 % சுண்ணாம்பு இருந்துள்ளது. இத்தகைய கலவைகளை நுட்பமாகப் பயன்படுத்தியதாலேயே கட்டிடங்கள் நீண்டகாலம் நிலைத்து நின்றிருக்கின்றன. களிமண்ணால் அமைக்கப்பட்ட தரைத்தளங்களும் , கூரையில் பயன்படுத்தப்பட்ட ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், கூரைகளில் மரங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என உய்த்துணர முடிகின்றது. ஓடுகளில் மழை நீர் வடிந்தோடக்கூடிய வகையில் சிறு பள்ளங்களும் உள்ளன. தச்சு வேலையும் இருந்துள்ளது.
வணிகம் – கீழடி அகழ்வாய்வில் குசராத் போன்ற வட இந்தியாவில் கிடைக்கும் அகேட் மற்றும் சூதுபவளம் போன்ற மணிகள் கண்டுபிடிக்கப்பட்டமையும், உரோமன் நாட்டு அரிட்டைன் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டமையும் தமிழர்களின் வணிகத் திறனை வெளிக்கொண்டுவந்துள்ளன. {இவ்விடத்தில் ஐந்தாம் கட்ட ஆய்வில் செப்பு-வெள்ளிக் காசுகளும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது 4ம் கட்ட ஆய்வறிக்கை என்பதால் காசுகள் இங்கு குறிப்பிடப்படவில்லை}. வணிகத்தின் மூலமாகப் பொருட்கள் மட்டுமன்றி, தொழில்நுட்ப இறக்குமதியும் நடைபெற்றுள்ளமை வியப்பிற்குரியது. இங்கு கிடைத்த ரௌலட்டட் பானை ஓடுகள் முன்னர் உரோம நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பானை ஓடுகள் என்றே கருதப்பட்டன. ஆனால், பிந்திய முடிவுகள் உரோமன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டவை என மண்ணின் மாதிரி ஆய்வுகள் மூலம் கண்டுகொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருட்களை மட்டுமல்லாமல் தொழில்நுட்பத்தினையும் இறக்குமதி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கலையுணர்வும், அழகுணர்வும் – அக் கால மக்கள் அணிகலன்களாக தங்கத்திலான அணிகலன்கள், செப்பு அணிகலன்கள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், பளிங்கு கற்களிலான மணிகள், சங்கு வளையல்கள், தந்தத்திலான வளையல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியமையும் தந்தத்திலான சீப்பினைப் பயன்படுத்தியமையும் தொல்லியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. சுடுமண் உருவங்களை உருவாக்கியமை பழங்காலத் தமிழர்களின் கலைக்குச் சான்றாகவுள்ளன. கீழடி அகழ்வாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட 13 மனித உருவங்களும், 3 விலங்கு உருவங்களும் கிடைத்துள்ளன.
விளையாட்டுகள் – தாயத்தில் பயன்படுத்தப்படும் பகடைக் கட்டைகள் , வட்டச்சில்லுகள் போன்ற விளையாட்டுப் பொருட்கள் 600-ற்கும் கூடுதலான பொருட்கள் கிடைத்துள்ளன. இங்கு விளையாடப்பட்ட ஒரு வகையான விளையாட்டே இன்றும் ‘பாண்டி’ என்ற பெயரில் 2600 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றது. சிறுவர்கள் இழுத்து விளையாடும் வண்டிகளின் சில்லுகளும் கிடைத்துள்ளன.
இவ்வாறு கீழடி அகழ்வாய்வு 4 -இன் முடிவானது பல்வேறு வழிகளில் வியப்பினை ஏற்படுத்துகின்றது. {மேலும் வியப்படைய கட்டுரையின் கீழுள்ள இணைப்பினைப் பார்க்க}.
படிக்க:
♦ சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !
♦ கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !
சங்க இலக்கியங்களை மெய்ப்பிக்கும் கீழடி ஆய்வு :
சங்க இலக்கியங்கள் என்பன வெறும் கற்பனையல்ல, அவை அக் கால மக்களின் வாழ்க்கையினை வெளிக்காட்டும் கலைப் படைப்புக்களே என்பதற்கான சான்றுகளும் கீழடி ஆய்வில் கிடைத்துள்ளன. சங்ககாலப் பாடல்களில் உயர்வு நவிற்சி, உவமை போன்றவை இடம்பெற்றிருந்தாலும், அவற்றினை அணுகிப் பார்ப்பதன் மூலம் அக் கால மக்களின் வாழ்வியலினையும் அறிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாகப் பின்வரும் சங்ககாலப் பாடலைப் பாருங்கள்.
`அற நெறி பிழையாது, ஆற்றின் ஒழுகி,
குறும் பல் குழுவின் குன்று கண்டன்ன
பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல்,
பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி,
மலையவும், நிலத்தவும், நீரவும், பிறவும்,
பல் வேறு திரு மணி, முத்தமொடு, பொன் கொண்டு,
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்` – { மதுரைக் காஞ்சி 500-505}
பொருள் – பயிர்செய்து பெற்ற பொருள்களைப் ‘பண்டம்’ என்றும், கைவினைப் பொருள்களைப் ‘பண்ணியம்’ என்றும் இப் பாடற்பகுதி தெளிவுபடுத்துகிறது. பண்டங்களையும் , பண்ணியங்களையும் விற்பனை செய்வோர் அறநெறி பிழையாமல் நன்னடத்தை கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களது வீடுகள் குன்றுகள் போன்றவை. பருந்துகள் அமர்ந்து இரை தேடும் அளவுக்கு உயரமான அடுக்கு மாடிகளைக் கொண்டவை.
இங்கு வேளாண்மைத் திறன், கைவினைத் திறன், வணிகம் என்பனவற்றின் சிறப்புகள் பேசப்படுகின்றன. இவற்றுக்கான சான்றுகளை ஏற்கனவே இக் கட்டுரையில் ஏற்கனவே பார்த்துள்ளன. மேலும் உயர்ந்த கட்டிடக்கலை பற்றியும் ஏற்கனவே பார்த்துள்ளோம்.
இன்னொரு பாடலையும் பாருங்கள் :
’மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொருது இரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் நாளங்காடி’ -(மதுரைக்காஞ்சி 425)
பொருள் – வேற்று நாட்டிலிருந்து எவ்வளவுதான் கப்பல் கப்பலாகப் பொருள்களைக் கொண்டுவந்து குவித்தாலும், அல்லது கப்பல் கப்பலாக இங்குள்ள பொருள்களை அள்ளிச் சென்றாலும், அவற்றால் மதுரை நகர நாளங்காடி (பகற்கடை) நிலை மாறுபடவில்லையாம்.
இதுவும் வெறும் வெற்றுப்பெருமையல்ல என கீழடி ஆய்வுகளை அணுகிப் பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவை மட்டுமன்றி மதுரை நகர் பற்றிய பல சங்ககாலப் பாடல்களை உண்மை என மெய்ப்பிக்கும் வகையில் கீழடி ஆய்வு அமைந்துள்ளது.
விளையாட்டுக்கள் பற்றிய சங்ககாலப் பாடல்களைப் பார்ப்போமா!
`முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம்
பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள்` – (கலித்தொகை136)
இங்கு இடம்பெறும் வரிகளின் பொருள் – முத்துப் போன்ற மணலில் நீ என் தலைவிக்கு அருள் செய்தாய். அப்போது அவள் கவறு விளையாட்டில் “பத்து” எண்ணிக்கை உருவம் பெற்றவள் போல மகிழ்ந்தாள்.
இன்னொரு கலித்தொகைப் பாடலையும் பாருங்கள் :
முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம்
இடைத் தங்கக் கண்டவன் மனம் போல, நந்தியாள்`
பொருள் – முடம் பட்டிருந்த தாழை மர முடுக்கில் நீ இவளுக்கு அளி செய்தாய். அப்போது அவள் வித்தாயம் பெற்றவள் போல மகிழ்ந்தாள். {ஒன்று தெரிந்தால் அதனைத் தாயம் (வித்தாயம்) என்று குறிப்பிடுவர்}.
மேற்கூறிய இரு பாடல்களிலும் குறிப்பிடப்படும் தாயக் கட்டைகள் கீழடி-4 ஆய்வில் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாம் செய்யவேண்டியவை :
இவை எல்லாம் எமது முன்னோர்களின் பெருமையே. இப்போது நாம் என்ன செய்யலாம். முதலில் சங்ககால எழுத்துகளை இனி ‘தமிழி’ என்றே (தமிழ் பிராமி அல்ல) அழைப்போம்.
♦ கீழடிப் பெயர்களை { ஆதன் , சேந்தன், உதிரன், திசன், இயனன், குவிரன், கோதை…..} நாளாந்தப் பயன்பாட்டிற்குக் (குழந்தைகளின் பெயர் + நிறுவனப் பெயர்கள் + புனை கதை மாந்தர்களின் பெயர்கள்… என) கொண்டு வருதல் வேண்டும்.
♦ மேலதிக ஆய்வுகளிற்காகக் குரல்கொடுப்பதுடன், அது தொடர்பான தேடல்களில் ஈடுபடுதலும், அவற்றினை ஏனையோரிற்குக் கொண்டு செல்லவும் வேண்டும்.
♦ இற்றைக்கு 2600 ஆண்டுகளிற்கு முன்னரே சாதி மதமற்ற மனிதர்களாகத் தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்ற செய்தி மூலம் சாதி-மத இடைச்செருகல்களைத் தவிர்த்து மனிதர்களாக வாழவேண்டும்.
♦ இறுதியாக, எல்லாவற்றையும் விட ஒரு மொழியின் தொன்மையினை விடத் தொடர்ச்சியே முதன்மையானது. எனவே முடிந்தளவிற்குத் தமிழை வாழ்க்கையில் பயன்படுத்துவதுடன், இதனை வருங்காலத் தலைமுறைகளிற்கும் கடத்தவும் வேண்டும்.
குறிப்பு – நான்காம் கட்ட ஆய்வு முடிவுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையானது ‘கீழடி -தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி’ என்ற தலைப்பிலான ஒரு நூலை வெளியிட்டிருந்தது, அதன் PDF வடிவம் தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழுள்ள இணைப்பில் உள்ளது.
♦ கீழடி -தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி தமிழ் நூலை தரவிரக்கம் செய்ய அழுத்தவும்.