தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்
அண்மையில் பன்னிரண்டாம் வகுப்புப் புத்தகத்தில் தமிழைவிடத் தொன்மையான மொழி சமற்கிரதம் (தமிழ் 2300 ஆண்டுகள், சமற்கிரதம் 4000 ஆண்டுகள்- தொன்மை) எனக் குறிப்பிடப்பட்டதனைத் தொடர்ந்து எது தொன்மையானது என்ற வழக்காடல் இடம்பெற்றுவருகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பலரே சமற்கிரதத்திற்காக பொய்ப்பரப்புரையில் ஈடுபட்டிருப்பதேயாகும்.
சமற்கிரதத்தின் தொன்மைக்காக வழக்காடுபவர்கள் எல்லோருமே அறிவியலிற்குப் புறம்பாக வெறும் புராணங்களையும், கட்டுக்கதைகளையும், புரட்டல்களையுமே சான்றாகக் கொண்டுள்ளார்கள். இவை பற்றிய ஒரு விளக்கமாகவே இக்கட்டுரை அமையவுள்ளது. முடியுமானவரை நான் எனது ஆய்வுகளைக் குறித்த பெயரிலிருந்தே தொடங்குவதனை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையிலேயே இதனையும் அணுகுவோம்.
தமிழ் – சமற்கிரதம் ஆகியவற்றுக்கான பெயர்க் காரணம் :
முதலில் தமிழைப் பார்த்தால், தமிழின் பெயர் இயற்கையாகவே அமைந்துள்ளது. “தமிழிற்கு அமிழ்து என்று பெயர்” என்று பாரதிதாசன் பாடியிருப்பார். இந்த ‘அமிழ்து’ என்ற சொல்தான் தமிழிற்கு அடிப்படை. இதனை விளக்கிய புலவர் இரா.இளங்குமரனார் பின்வருமாறு விளக்கியிருப்பார்.
“ஒரு குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் குடிக்கமுனையும் போது அம்மு, அம்மு என ஓசை எழுப்புவதால் அம்மா என்ற சொல் பிறந்தது; அதிலிருந்தே அமிழ்தம் (தாய்ப்பால்) என்ற சொல் பிறந்தது . அமிழ்வதால் (உள்ளிறங்கி சுவையீட்டுவதால்) அமிழ்தம் எனப்படும்”. இச் சொல்லானது வடமொழியிலுள்ள அ+மிர்த் என்பதிலிருந்து வேறுபட்டது {அமிர்த்= சாவற்ற வாழ்வு என்ற பாற்கடல் கடைந்த கற்பனைக்கதை, இரண்டிற்குமுள்ள பலுக்கல் (ஒலிப்பு) ஒற்றுமையினைக் கொண்டு, இரண்டும் ஒன்றல்ல}. அமிழ்து என்ற சொல் தோன்றியதனை மேலே பார்த்தோம். இப்போது அமிழ்து என்ற சொல்லை இடைவிடாமல் விரைவாக மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
அமிழ்து,அமிழ்து……. தமிழ், தமிழ் ‘தமிழ்’என்ற சொல் வந்துவிட்டதா!
அம்மாவிலிருந்து மலர்வது எவ்வாறு அமிழ்(து) ஆகின்றதோ {அம்+இழ் = அமிழ், இழ்-இதழ்}, அதே போன்று தம்மிலிருந்து மலர்வது தமிழ் {தம்+இழ்=தமிழ்} ஆகின்றது. இவ்வாறு இயற்கையாக வாழ்வியலோடு இணைந்து தமிழ் மொழிக்கான பெயர்க் காரணம் காணப்படுகின்றது.
அடுத்து சமற்கிரதத்தினைப் பார்ப்போம். சமற்கிரதம் என்பதற்குச் செயற்கையாக நன்றாகச் செய்யப்பட்ட மொழி என்பதே பொருள் {‘Sanskrit’ is derived from the conjoining of the prefix ‘Sam’ meaning ‘samyak’ which indicates ‘entirely’, and ‘krit’ that indicates ‘done’}. எவ்வாறு நன்றாகச் செய்யப்பட்டது?
படிக்க:
♦ சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !
♦ நூல் அறிமுகம் : தமிழ் மொழியின் வரலாறு
ஏற்கெனவே இருந்த மொழிகளிலிருந்து சொற்களை (Raw Form) எடுத்து, நன்றாக முழுமையாகச் செய்யப்பட்ட சொற்களே சமற்கிரத மொழிச் சொற்கள் (Refined Form). இன்னமும் விரிவாகச் சொன்னால், இங்கு ஏற்கெனவேயிருந்த பிராகிருதம், பாலி, தமிழ் போன்ற மொழிகளிலிருந்து எடுத்த சொற்களையும், தாம் ஏற்கனவே கொண்டு வந்த ஐரோப்பிய மொழிச் சொற்களையும் (இவை எல்லாமே பேச்சு வழக்கிலான சொற்களே) இணைத்து நன்றாகச் செய்யப்பட்ட மொழியே சமற்கிரதமாகும்.
இவ்வாறு ஐரோப்பிய மொழிச் சொற்களையும், இங்கிருந்த மொழிச் சொற்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட மொழியாதலாலேயே, சமற்கிரதத்தினை இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினைச் சேர்ந்த ஒரு மொழி எனப் பல அறிஞர்கள் குறிப்பிடுவார்கள்.
இப்போது சொல்லுங்கள், சமைக்கப்பட்ட மொழி தொன்மையானதா? அல்லது அந்தச் சமையலிற்கே மூலப்பொருளான மொழி தொன்மயானதா?
பேச்சுமொழி :
மொழிப் பெயர்க் காரணத்தினைப் பார்த்தோம், இப்போது பேச்சு வழக்கில் எந்த மொழி தொன்மையானது எனப் பார்ப்போம். பேச்சு வழக்கில் எந்தமொழி தொன்மையானது எனக் கண்டறிவது இலகுவானதல்ல, ஏனெனில் சைகை மொழியானது (அசைவு மொழி) சில வகையான ஒலிக்கோவைகளாக மாறிப் பின்னரே பேச்சுமொழியாகப் படிமலர்ச்சி பெறும். மேலும், பேச்சுமொழிக்கான தொல்லியல் சான்றுகளும் காணப்படமாட்டாது. எனவேதான் பேச்சு வழக்கிலான மொழிகளில் எது தொன்மையானது எனக் கண்டறிவது கடினமானது.
இங்கு எங்களிற்குச் சார்பாக அமைந்துள்ள விடயம் யாதெனில் இன்று மரபணு ஆய்வுகள், தொல்லியல் உடற்கூறு ஆய்வுகள் போன்ற அறிவியல் முறைகள் மூலம் சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்றும், அது ஆரியர்கள் வருகைக்கு முற்பட்டது என்பதும் ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றிச் சான்றுப்படுத்தப்பட்டுவிட்டது. குறிப்பாக இங்கிலாந்திலுள்ள ஒரு பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த 16 அறிவியலாளர்கள் (16 scientists led by Prof. Martin P. Richards of the University of Huddersfield, U.K.) மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஆரியர்களின் இந்தியப் படையெடுப்பு ஐயத்திற்கு இடமின்றி சான்றுப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அரியானாவின் ராகிகடி ஆய்வும் இதனையே வலியுறுத்தியிருந்தது(“An Inconvenient Truth” என்ற தலைப்பில் இந்தியா டுடே’ 2018 செப்.10-ல் வெளிவந்தது).
இவ்வாறான ஆரியர் வருகைக்கு முன்னரே சிந்துவெளி நாகரிகத்தில் தமிழ் இருந்தமைக்குமான சான்றுகளும் இன்று பெருமளவில் கிடைத்துள்ளன. சிந்துவெளி நாகரிக எழுத்துகளிற்கும் (தொல் தமிழி) தமிழிற்குமுள்ள தொடர்புகளும் வெளிவந்துவிட்டன. எனவே ஆரியர் வருகைக்கு முன்னரே பேச்சு வழக்கில் தமிழ் இருந்தது என்பது உறுதியாகிவிட்டது. சிந்துவெளி நாகரிகம் தழைத்தோங்கிய பகுதிகளில் இன்றைக்கும் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட பல ஊர்கள் (கொற்கை, வஞ்சி, தொண்டை…. ) இருக்கின்றன.
படிக்க:
♦ சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !
♦ பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்
இவ்வாறு ஏற்கனவே செழிப்புற்றிருந்த சிந்துவெளி நாகரிகத்தினை அப் பகுதிக்கு வந்து சேர்ந்த ஆரியர்களே அழித்தாக ஒரு கருத்து உள்ளது. இதனை ரிக் வேதம் (Rig vedda 1.51.11) ‘அசுரன் பிப்ருவின் கோட்டைகளை (Pur) இந்திரா ஆரியர்களிற்காக அழித்தார்’ எனச் சுட்டுவதாக வரலாற்றாசிரியர் டி.டி.கோசம்பி ‘இந்திய வரலாறு ஒரு அறிமுகம்’ எனும் நூலில் (தமிழாக்கம் பக்கம் 150) குறிப்பிடுவார். இதனையே க.கைலாசபதி தனது ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’ எனும் நூலில் “வச்சிராயுதம் ஏந்திய இந்திரன் மட்பாண்டங்களை உடைப்பது போல எதிரிகளை வென்றான் என்று வேதங்கள் பாடுவது சிந்துவெளி நாகரிகத்தை அழித்தான் என்பதனையே குறிக்கும்” என்கின்றார் (பக்கம் 6).
வேறு சில ஆய்வாளர்கள் வறட்சியால் சிந்துவெளி நாகரிகம் அழிந்த பின்பே ஆரியர் வந்தாகக் கூறுவார்கள். எது எவ்வாறாயினும் ஆரியர்கள் வரும்போதே இங்குள்ள மக்கள் மொழி அறிவுடனேயே இருந்துள்ளார்கள் என்பது உறுதியாகின்றது. எனவே பேச்சு வடிவத்திலும் தமிழ் மொழியானது சமற்கிரதத்தை விடத் தொன்மையானது என்பது தெளிவாகின்றது.
எழுத்து வடிவம் :
எழுத்து வடிவில் எந்த மொழி தொன்மையானது எனப் பார்ப்பதே அறிவியல் சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இலகுவானதும், நடைமுறை வாய்ப்பு உள்ளாதுமான ஒரு முறையாகும். ஆனால் இந்த முறையான ஒப்பீட்டிற்கு, வட மொழித் தாங்கலாளர்கள் வரவே மாட்டார்கள். ‘பல்லில்லாதவன் தனக்கு பக்கோடா பிடிக்காது’ என்ற மாதிரி தமது வேதங்கள் ‘எழுதாக் கிளவி’ / ‘எழுதா மறை’ என்பார்கள். (உண்மையில் அவை எழுத்து வடிவம் இல்லாத மறைகளே).
ஏற்கெனவே இருந்த சிந்துவெளி (தொல் தமிழி) எழுத்து வடிவம், பிராகிரத பிராமி (அசோகர் கல்வெட்டு வடிவம்), தமிழி போன்ற வரி வடிவங்களிலிருந்து தமக்கு என ஒரு எழுத்து வடிவத்தினை (Sanskrit Nagari ) CE 1ம் – 4ம் நூற்றாண்டுகளிற்கு இடைப்பட்ட காலத்திலேயே உருவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் பெரிதும் பயன்படுத்தும் தேவநாகரி வரிவடிவம் CE 4ம் நூற்றாண்டிலேயே உருவானது {சான்று- Gazetteer of the Bombay Presidency at Google Books, Rudradaman’s inscription from 1st through 4th century CE found in Gujarat, India, Stanford University Archives, pages 30–45, particularly Devanagari inscription on Jayadaman’s coins pages 33–34}} . தமக்கு என ஒரு சொந்த எழுத்து வடிவம் இல்லாது இன்றும் தேவநாகரி எழுத்துவடிவினையே பயன்படுத்திவருகின்றார்கள்.
இந்த `தேவநாகரி` என்ற சொல்லே தே+நகர் (Devanagari=Deva+Nagari) என்ற இரு சொற்களையே அடிப்படையாகக் கொண்டவை. இவையிரண்டுமே தமிழ்ச் சொற்களையே அடியாகக் கொண்டவை என்பது தெரிந்தால் நீங்கள் வியப்படையக் கூடும். தே என்ற சொல் தெய்வம் என்பதனைத் தமிழில் குறிக்கும். அதே போன்று மக்கள் நகர்ந்து சென்று (move ) உருவாகும் இடமே நகர் {ஊர்ந்து சென்று உருவான ‘ஊர்’ என்பது போல}. இவ்வாறு உருவான தேவநாகரி வடிவமானது வடமொழியில் 7-ம் நூற்றாண்டுக்குப் பின்னரே பொதுப் பயன்பாட்டிற்கு வருகின்றது (சான்று- Oxford University Press, ISBN 978-0195356663, pages 40–42). 12-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் மிகப் பெருமளவில் எழுதிக் குவித்த அவர்களின் திறமையினை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும், ஆனால் அவற்றினைக் காலத்தால் முன் கொண்டு செல்ல முயல்வது நேர்மையற்ற செயலேயாகும்.
அவர்களின் எழுத்து வடிவத்திற்கு பல நூற்றாண்டுகளிற்கு முற்பட்ட தமிழி எழுத்து வடிவங்களிற்கான பல சான்றுகள் {அறிவியல்ரீதியில் சான்றுப்படுத்தப்பட்ட பல சான்றுகள்} எமக்கு இன்று கிடைத்துள்ளன.
கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டு. (ஜம்பை)1. 1970-ல் கொற்கைத் துறையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு 2.6 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு குழியில் (KRK 4), மரக்கரித் துண்டு (charcoal) ஒன்று தோண்டி எடுக்கப்பட்டு, கரிமக்கணிப்பு (கார்பன் 14) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் BCE (கி.மு).850 முதல் BCE(கி.மு)660 வரை) என கணிக்கப்பட்டது. அதே குழியில்( KRK 4), 2.44 மீட்டர் ஆழத்தில், பண்டைய தமிழி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதால், அந்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலமும் BCE755 ஆகத்தான் இருக்கவேண்டும் என்கிறார், தொல்பொருள் ஆய்வாளர் நடனகாசி நாதன் அவர்கள். ஆகவே அந்த ‘தமிழி’ எழுத்துப் பொறிப்பின் காலம் BCE 8 ஆம் நூற்றாண்டு என ஆகிறது.
(SOURCE: Tamil’s Heritage , PAGE: 31).
2. கொடுமணல் தமிழ் பொறிப்பின் காலம் BCE 400
(SOURCE: முனைவர் கா.ராஜன் “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” பக்: 66)
3. பொருந்தல் அகழாய்வில் கிடைத்த நெல் மாதிரி ஒன்று, அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass Spectrometry by the Beta Analytic Lab , USA ), அதன் காலம் BCE 450 என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் இன்னொரு நெல் மாதிரி ஒன்று அதே ஆய்வு நிலையத்தில் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் BCE 490 என கணித்தறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். அந்த மட்பாண்டங்களிலும் தமிழி எழுத்துக்கள் காணப்பட்டன. இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழி காலம் BCE 5-ம் நூற்றாண்டு என்பது ஐயத்திற்கு இடமின்றி சான்றுபடுத்தப்பட்டுவிட்டது. மேலும் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், தமிழ் எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது (அசோகர் பிராமியின் காலம் BCE 3-ம் நூற்றாண்டு ஆகும்) என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழி உருவாகவில்லை என்பதும் திண்ணம் என்கிறார் முனைவர் ராஜன் அவர்கள்.
(Source : Hindu Newspaper Dated 15.10.2011, porunthal Excavations prove existence of Indian scripts in 5th century BC : expert)
4. வடஇலங்கையில் (ஈழம்) தமிழி கல்வெட்டுகளும், தென் இலங்கையில் பிராகிருத பிராமி கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவைகளில் சில அசோகர் காலத்திற்கும் முந்தியவை என இலங்கை பிராமிக் கல்வெட்டுகளின் தந்தை எனக் கருதப்படும் பரனவிதான கணித்துள்ளார். இலங்கை அறிஞர்கள் கருணாரத்னா, பெர்ணான்டோ, மற்றும் அபயசிங்கி ஆகியோர் அசோகர் பிராமிக்கு முன்பே, பண்டைய தமிழி எழுத்து, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்துவிட்டது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். டாக்டர் சிற்றம்பலம் அவர்கள் தனது ‘யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு’ என்ற நூலில் BCE 4ம், 3ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புகள் இலங்கையில் கிடைப்பது குறித்து தெரிவித்து உள்ளார்.
(SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 34)
இவ்வாறு சான்றுகளை அடுக்கிக்கொண்டே செல்லாம். மேற்கூறிய சான்றுகளைக் கொண்டு University of Cambridge இனைச் சேர்ந்த பேராசிரியர் திலிப் கே. சக்ரபர்த்தி (Dilip K.Chakrabarti ) அவர்கள் தான் வெளியிட்ட An Oxford Companion to Indian Archaeology, Indian Archaeological History ஆகிய இரு நூல்களிலும் தமிழி ஆனது அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்று தெரிவித்துள்ளார். எனவே தமிழியே எழுத்து வடிவில் தொன்மையானது என்பது யாருமே மறுக்கமுடியாது. இந்தியாவில் கிடைத்த பழங்கல்வெட்டுகளில் 65 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவை தமிழிலேயே இருப்பதும் கவனிக்கத்தக்கது. அண்மையில் கீழடி அகழ்வாய்விலும் பல தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சான்றுகள் பெருமளவிற்கு கிடைத்துவருகின்ற போதும், அவற்றினை உரியமுறையில் ஆய்வுகளிற்கு உட்படுத்த நடுவண் அரசு முட்டுக்கட்டை போட்டுவருவது தெரிந்ததே.
மொழியின் சிறப்பு :
தொன்மை மட்டுமல்ல, மொழியின் சிறப்பிலும் தமிழே உயர்ந்தது. தமிழ் இயற்கையாக வாழ்வியலோடு ஒன்றி அறிவியல் மொழியாகக் காணப்பட, சமற்கிரதமானது புராணங்களை அடியாகக் கொண்ட ஒரு ஆதிக்க மொழியாகவேயுள்ளது. ‘எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பிய விதியோ, தமிழ்மொழியிலுள்ள வேர்ச்சொல் விளக்கங்களையோ சமற்கிரதத்தில் எண்ணிப் பார்க்கவே முடியாது.
எடுத்துக்காட்டாக Planet எனும் ஆங்கிலச் சொல்லிற்கான தமிழ்ச்சொல் (கோள்) – சமற்கிரதச்சொல் (கிரகம்) என்பவற்றினையே எடுப்போம். இங்கு கிரகம் என்பது ஆளுகைக்காரர் என்ற பொருளில் சோதிட நம்பிக்கையினையும், கோள் என்ற அறிவியற்சொல் தாமாக ஒளிராமல் விண்மீன்களிலிருந்து ஒளியினைக் கொள்வதால் {மின்னுவதால் ஏற்பட்ட மின்- ‘மீன்’ ஆனது போல, கொள்வதால் ஏற்பட்ட கொள் – ‘கோள்’} கோள் என அறிவியலையும் (சங்க காலத்திலேயே) பேசியுள்ளது. ஒரு புறத்தில் ‘பிறப்பொக்கும்’ என சம-அறம் பேசும் தமிழ் எங்கே? ‘சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ என சாதி முறையினைக் கடவுளே படைத்தாகக் கூறும் வடமொழி எங்கே?. மொழியின் பெருமை பேசினால் பதிவு நீளும் என்பதால் இத்துடன் முடிப்போம்.
தமிழும் சமற்கிரதமும் இரண்டு கண்களா?
இரண்டு கண்களேயானாலும் ஒரே நேரத்தில் இரு காட்சிகள் காண முடியாது. பிற மொழிகளை அழிப்பதனையே தொழிலாகக் கொண்ட சமற்கிரதம் (மொழி பேசுவோர்), எவ்வாறு அழிக்க முயற்சிக்கப்படும் மொழியான தமிழுடன் ஒன்றாக முடியும். சில நூற்றாண்டுகளிற்கு முன்னர் வரை ஒன்றாகத் தமிழாகவிருந்த மலையாளம் இன்று எவ்வாறு பிரிந்துபோனது?
சிலப்பதிகாரத்தில் காணப்படும் தமிழர் இசை வடிவங்கள், நடன வடிவங்கள் எல்லாம் இன்று எமது கையினை விட்டுப்போனது எவ்வாறு? மேற்கூறியனவற்றுக்கு எல்லாம் ஒரே காரணம் ஆதிக்க மொழியான சமற்கிரதமே (உண்மையில் அம்மொழித் தாங்கலாளர்களே). ஆதிக்க மொழியும், அற மொழியும் ஒருபோதும் ஒன்றாகமுடியாது. அவ்வாறு பேசுவோர்கள் ஒரு மறைமுகத் திட்டத்தினூடாக தமிழை அழிக்க / சிதைக்கவே முனைவார்கள்.
பாடநூல் குழப்பம் :
இறுதியாக, மீண்டும் பாடப் புத்தகத்திற்கு வந்து, ஏன் அவ்வாறு குறிப்பிடப்பட்டது எனப் பார்ப்போம். உண்மையில் இது அறிஞர் George L. Hart என்பவரின் கருத்தாகும். அவர் சமற்கிரதத்தின் தொன்மையினைக் கணிக்கும்போது ஆரியர்களின் படையெடுப்பின் முதல் அலையான 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தினையும் (BCE 2000) , தமிழின் தொன்மையினை தமிழி எழுத்துகளின் முந்திய கண்டுபிடிப்புக் காலத்தையும் (BCE 300 ) {உண்மையில் அதனையும் தாண்டிய பல தமிழி எழுத்துகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றினை BCE 300 இற்குள் அடக்கும் முயற்சி ஒன்று இந்திய நடுவண் அரசால் அசோகரின் கல்வெட்டினையே முந்தியதாகக் காட்ட மேற்கொள்ளும் முயற்சியாக மேற்கொள்ளப்படுகின்றது} கவனத்திற்கொண்டுள்ளார்.
அதாவது சமற்கிரத்தின் பேச்சு வடிவத் தொடக்க காலத்தையும் (BCE 2000 ), தமிழ் மொழியின் எழுத்துவடிவம் கிடைத்துள்ள காலத்தையும் (BCE 300) ஒப்பிட்டுத் தொன்மையினைக் கணித்துள்ளார். இது முற்றிலும் தவறு. ஒன்றில் இரு மொழிகளின் பேச்சுத் தொன்மையினை ஒப்பிட்டிருக்கவேண்டும் அல்லது சான்றுகள் அடிப்படையிலான எழுத்து வடிவத்தினையே ஒப்பிட்டிருக்க வேண்டும். தமிழ் – சமற்கிரத பேராசிரியரான அவர் இன்னொரு இடத்தில் புத்தகம் என்ற சொல்லைச் சமற்கிரதச் சொல்லாகவே கூறுகின்றார். உண்மையில் அது ஒரு தமிழ்ச்சொல். பழங்காலத்தில் ஓலைச் சுவடிகளைப் பழுதடையாமல் காப்பதற்காக பொத்தி வைப்பதால் ஏற்பட்ட பொத்தகம் என்ற சொல்லே மருவி புத்தகம் ஆகியது. அதனை எடுத்து ‘ஸ்’ என்ற எழுத்தை நுழைத்து ‘புஸ்தகம்’ என வடமொழியாக்கிக் கொண்டார்கள். அச் சொல்லினைத் தவறாகக் கருதியது போன்றே, இந்த ஒப்பீட்டினையும் தவறாகவே அணுகியுள்ளார்.
அவரின் பிழையான ஒப்பீட்டினை அப்படியே பாடநூலில் உள்வாங்கியிருப்பதனை என்ன சொல்வது! முன்பொருமுறை மோடியே ‘தமிழே சமற்கிரதத்தை விடத் தொன்மையானது’ எனக் கூறியிருக்க, மோடியின் அடிமையான தமிழக அரசு இவ்வாறு பாடப்புத்தகத்தை வெளியிடுவதனை என்ன சொல்வது? ‘More loyal than the king’ என்பதுதானே நினைவிற்கு வந்துதொலைக்கின்றது.
சுருக்கமாகக் கூறினால், மேலே தமிழே சமற்கிரதத்தைவிடத் தொன்மையானது என மொழிப்பெயர், பேச்சு வடிவம், எழுத்து வடிவம் என்பவற்றைக் கொண்டு நிறுவினோம். மொழியின் தொன்மையினை விடத் தொடர்ச்சியே முதன்மையானது. எனவே நாம் அதில் கவனம் செலுத்தி, தமிழை அறிவியல்- வாழ்வியல் முறைகளில் பயன்படுத்துவோம். அதுவே இப்போது எமது மொழிக்கு நாம் செய்யக்கூடிய ஒன்றாகும்.
வி.இ. குகநாதன்