பின் தென் கிழக்காய் திரும்பி, திண்டுக்கல், மதுரை மாநகர், சிவகங்கை வழியாக, இராமநாதபுரம் மாவட்டத்துள் நுழைந்து, வங்காள விரிகுடாவின், பாக் நீரிணைப்பில் கலந்து, தன் பயணத்தை நிறைவு செய்கிறது, இந்தப் பெரு நதி.
வைகை ஆறு
வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ.
பொதுவாக வடகிழக்குப் பருவ மழைக் காலங்களில் மட்டுமே, நீர் நிரம்பியோடும் ஆறு, இந்த வைகை ஆறு.
ஒரு சிறு குழுவினர், 2013–14 ஆம் ஆண்டில், வைகை ஆற்றின் ஆதி முதல் அந்தம் வரை, நதியின் இருகரைகளிலும் தங்கள் ஆய்வைத் தொடங்கினர்.
ஆற்றின் இரு புறமும் 8 கி.மீ சுற்றளவிற்கு, ஒரு அடியைக் கூட விடாது, ஆய்வு செய்தனர்.
ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் ஐநூறு கிராமங்களை ஆய்ந்தனர்.
500 கிராமங்களில், 293 கிராமங்களில், தொல்லியல் தடயங்களைக் கண்டனர்.
293 கிராமங்களையும் மீண்டும், அலசி ஆராய்ந்து, இவற்றுள் 90 கிராமங்கள், இன்று நேற்றல்ல, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே, மக்கள் வாழிடப் பகுதிகளாக இருந்தவை என்பதை உணர்ந்தனர்.
90 கிராமங்களையும் மேலும், மேலும் துருவித் துருவி ஆராய்ந்து, சல்லடை போட்டுச் சலித்து, ஒரே ஒரு கிராமத்தை மட்டும் தேர்வு செய்தனர்.
அகழாய்வைத் தொடங்கினர்.
தோண்டத் தோண்ட, மேலெழுந்து வந்தது, நம் நாகரிகம்.
வைகை நதிக்கரை நாகரிகம்
தமிழர் நாகரிகம்
சங்க காலத் தமிழர் நாகரிகம்
தமிழின் தொன்மையை, பழமையை, பெருமையை, சங்ககால இலக்கியங்களை ஆதாரமாக வைத்தே, நெஞ்சம் நிமிர்த்தி, முழங்கி வந்த நமக்கு, முதன் முதலாக, சங்ககாலத் தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட, 74 பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன.
பானை ஓடுகள்
கல்வெட்டுக்களில் அல்ல, பானை ஓடுகளில், அதுவும் தமிழ் பிராமி எழுத்துக்கள், சங்ககால எழுத்துக்கள், 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துக்கள், பொறிக்கப் பட்ட பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன.
கல்வெட்டுகள், அரசர்களால் நிறுவப் படுபவை.
ஆனால் பானை ஓடுகளில் எழுத்துக்கள் என்பது, பொது மக்களைச் சார்ந்ததாகும். மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், பானைகள் என்பவை, பெரும்பாலும் பெண்களோடு தொடர்புடையவை.
எனவே சங்ககால மகளிர் கல்வியில் சிறந்து விளங்கினர் என்பதற்கு இப்பானை ஓடுகளே சிறந்த சாட்சிகளாக விளங்குகின்றன.
மேலும் பானை ஓடுகளில் எழுதப் பயன்படும் எழுத்தாணிகளும் கிடைத்திருக்கின்றன.
இவையெல்லாம் நம் சங்க கால மக்கள் வாழ்ந்த, வளமான, செழுமையான வாழ்விற்கு ஆதாரங்களாகும்.
வணிக நோக்கில் பயன்படுக் கூடிய, சுடுமண்ணால் ஆன முத்திரைகள் கிடைத்திருக்கின்றன.
ஆந்திரா, மகாராஷ்டிரா, இலங்கை மற்றும் ரோமானிய நகரங்களோடு, சங்ககால மக்கள் தொடர்பில் இருந்ததற்கான எண்ணற்ற ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.
அகலாய்வு மேற்கொள்ளப்படுகின்ற இடங்களில், செங்கல் கட்டுமானங்கள், கண்டுபிடிக்கப் பட்டால்தான், இன்றைய அறிஞர்கள், அவ்விடங்களில், நகர நாகரிகம் இருந்ததாக ஏற்றுக் கொள்கின்றனர்.
இதுநாள் வரை, வட நாட்டினரும், பிற நாட்டினரும், தமிழ் நாட்டில் இருந்தது நகர நாகரிகமே அல்ல, அரைப் பழங்குடி நாகரிகமே என்றே கூறி வந்துள்ளனர்.
இவர்களுடைய கூற்றை முற்றிலுமாய் தகர்க்கும் வகையிலும், சங்ககால இலக்கியங்களுக்கு வலு சேர்க்கும் வகையிலும், புறந்தள்ள இயலாத, சங்ககாலக் கட்டிடங்கள், சுட்ட செங்கற்களால் ஆன, நகர நாகரிகம், வணிக நாகரிகம் இருந்ததற்கானப் பெரும் பெரும் கட்டிடங்களின் அடித்தளங்கள் கிடைத்துள்ளன.
வைகை நதியானது, ஆண்டிற்கு நான்கு மாதங்கள் மட்டுமே, நீர் நிரம்பியோடும் நதியாகும்.
இந்நதிக்கரையில் வாழ்ந்த மக்கள், இந்த சங்ககால மக்கள், நான்கு மாதங்கள் மட்டுமே கிடைக்கும், நீரினைக் கொண்டு, வருடம் முழுவதும் எப்படி வாழ்வை நகர்த்தியிருப்பார்கள் என்பதற்கான ஆதாரங்கள், நீர் மேலாண்மையில், சங்ககால மக்கள், எந்தளவிற்குச் சிறந்து விளங்கி இருக்கிறார்கள், என்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றன.
10 ஏக்கர் நிலத்தில், நான்கரை கிலோ மீட்டர் சுற்றளவில், 102 அகழாய்வுக் குழிகள் தோண்டப் பெற்றுள்ளன.
முதலாண்டில் 43 அகழாய்வுக் குழிகளும், இரண்டாமாண்டில் 59 அகழாய்வுக் குழிகளும் தோண்டப்பட்டுள்ளன.
102 அகழாய்வுக் குழிகள் தோண்டப் பட்டிருப்பது, தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும்.
இந்த 102 அகழாய்வுக் குழிகள் மூலம் கிடைத்திருக்கும், சங்ககாலப் பொருட்களின் எண்ணிக்கை, நமக்குப் பெரு வியப்பை ஏற்படுத்தும்.
ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு நூறு இரு நூறல்ல, முழுதாய் 5,500 சங்ககாலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால் வேதனை என்ன தெரியுமா?