வரிவடிவம் என்னும் சொல் எழுத்துகளின் வடிவையும் குறிக்கும். இதனுடன் எழுத்துகளுக்குரிய வரிசை முறையையும் குறிக்கும். எழுத்துகளின் வடிவ நிலையை அறியத் தமிழைப் பொறுத்த வரையில் கல்வெட்டுகளே பெரிதும் உதவுகின்றன. சிற்சில நிலைகளில் இலக்கண நூல்கள் உதவுகின்றன.
எழுத்துகளின் வரிசை முறையை அறிதலைப் பொறுத்த வரையில் இலக்கண நூல்களே பெரிதும் உதவுகின்றன. கல்வெட்டுகளில் வரிசை முறை தொடர்பான சிந்தனை இடம்பெறத் தக்க சூழல் உருவாகவில்லை.
1.5.1 தொல்காப்பியமும் வரிவடிவமும்
தமிழ் மொழியின் தொன்மை மிக்க இலக்கண நூலாகக் கிடைக்கும் தொல்காப்பியத்தில் தமிழ் எழுத்து வடிவம் தொடர்பான சில கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அவை :
(1) மெய் எழுத்துகள் புள்ளி இட்டு எழுதப் பெறும். (2) உயிர் எழுத்தோடு இணையும் மெய் எழுத்து, புள்ளி இன்றி எழுதப் பெறும். (3) உயிர் எழுத்துகளில் எ, ஒ ஆகிய இரண்டு எழுத்துகளும் குறில் எனில் புள்ளி இட்டு எழுதப் பெறும்.
இம்மூன்று கருத்துகளுமே தமிழ் எழுத்து வடிவ வரலாற்றில் மிக முக்கியமானவை; தொடக்கக் காலத் தமிழ்க் கல்வெட்டுகள் வழி மீட்டுருவாக்கம் செய்ய முடியாதவை.
எழுத்துகளின் மேல் புள்ளி இட்டு எழுதினால் ஓலை கிழிந்து விடும். இதனால் புள்ளி இன்றியே ஓலைச் சுவடிகளில் எழுதுவர். ஓலைச் சுவடிகளை வாசிக்கும் நிலையில் பொருள் நோக்கில் தான் எ, ஒ - குறில் வடிவங்களையும், மெய், உயிர்மெய் வேறுபாட்டையும் அறிய இயலும். தொடக்கக் காலத் தமிழ்க் கல்வெட்டுகளிலும் புள்ளி இட்டு எழுதியதாகத் தெரியவில்லை. இவற்றால் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள எழுத்துகளின் வடிவம் தொடர்பான கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.
1.5.2 வீரமாமுனிவரும் வரிவடிவமும்
தமிழ் உயிர் எழுத்துகளில் எ, ஒ - ஆகியவற்றையும், அவ்வெழுத்துகள் மெய் எழுத்துகளோடு சேர்த்து எழுதப் பெறும் நிலையையும் வீரமாமுனிவர் மாற்றி அமைத்ததாகக் கருதுவர். வீரமாமுனிவர் எழுதி உள்ள கொடுந்தமிழ் என்னும் இலக்கண நூலில் இந்த மாற்றம் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வீரமாமுனிவர்தான் இம்மாற்றத்தை முதலில் செய்தார் என்பதற்கு உரிய சான்றுகள் இல்லை. பிற்காலக் கல்வெட்டுகளில் இம்மாற்றங்கள் காணப் பெறுவதாகவும் குறிப்பிடுகின்றனர். இதனால் வீரமாமுனிவர் தமிழகத்துக்கு வருவதற்குச் சற்று முன்னர் அறிமுகமான அச்சு வடிவத் தமிழ் எழுத்துகளில் மேற்குறிப்பிடப் பெற்ற மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்பர். ஆக, வீரமாமுனிவர் வருகையை ஒட்டி நிகழ்ந்த தமிழ் வரிவடிவ மாற்றங்களைக் கீழ்வரும் வரைபடத்தின் வழி அறிந்து கொள்ளலாம்.
தமிழ் எழுத்து வடிவ மாற்றம்
வீரமாமுனிவர் வீரமாமுனிவர்
வீரமாமுனிவர் வருகைக்குப் பின்பு
1. எ், ஒ் - குறில்கள் 2. எ, ஒ - நெடில்கள்
1, எ, ஒ - குறில்கள் 2. ஏ, ஓ - நெடில்கள்
தமிழ் எழுத்து வடிவ மாற்றம்
இந்த வடிவ மாற்றத்திற்கு அறிஞர் கருத்தில் கொண்ட அடிப்படைச் சிந்தனைகள் இரண்டு. அவை,
(1)
தமிழ் எழுத்து வடிவத்தில் புள்ளி இடப்பெற்றால் மாத்திரை அளவு குறைகின்றது என்பது பொருள்.
எ.டு:
க - என்ற எழுத்துக்கு ஒரு மாத்திரை. இந்த எழுத்தின் மேல் புள்ளி இட்டு க் என்று எழுதினால் மாத்திரை குறைகின்றது; அரை மாத்திரையாக அமைகின்றது.
(2)
தமிழ் எழுத்து வடிவத்தில் நீட்சியை உருவாக்கினால் மாத்திரை அளவு கூடுகின்றது என்பது பொருள்.
எ.டு:
கி - என்ற எழுத்துக்கு ஒரு மாத்திரை. இந்த எழுத்தை நீட்டிக் கீ என்று எழுதினால் மாத்திரை கூடுகின்றது ; இரண்டு மாத்திரையாக அமைகின்றது.
இந்த இரு அடிப்படைச் சிந்தனைகள் வழிதான் தமிழ் எழுத்து வடிவங்களில் குறில், நெடில் வேறுபாடுகள் எல்லாம் வெளிப்படுத்தப் பெறுகின்றன. இந்த அடிப்படையில் தான் எ, ஒ எழுத்துகள் மீது புள்ளி இட்டுக் குறில் எழுத்துகளாக எழுதி உள்ளனர். எ, ஒ எழுத்துகளை வடிவ நிலையில் நீட்டித்து நெடில் எழுத்துகளாக எழுதி உள்ளனர். இவற்றில் வீரமாமுனிவர் காலத்தில் உருவாக்கப் பெற்ற எ, ஒ - நீட்டித்து நெடில் குறில் வேறுபாட்டை உணர்த்தும் முறை, தமிழ் எழுத்துகளின் பொது வடிவ அமைப்புச் சிந்தனையுடன் ஒத்துள்ளதைக் கவனிக்கலாம்.
• மரபிலக்கணமும் வரி வடிவமும்
தமிழ் எழுத்து வரிசை முறையை நாம் அறிந்து கொள்ள மரபிலக்கண நூல்கள் பெரிதும் உதவுகின்றன. தமிழ் எழுத்துகள் அகர முதல் னகர இறுவாய் என்றே தொல்காப்பியத்தில் அறிமுகம் செய்யப் பெற்றுள்ளன. மேலும் எழுத்துகளின் பிறப்பு முறையை விளக்குகையிலும் அகர வரிசை தெளிவாகப் பின்பற்றப் பெற்றுள்ளது. பிற்காலத்தில் ஒரு சில இலக்கண நூல்களில் தமிழ் எழுத்துகள் 5ஆம் எழுத்து, 15ஆம் எழுத்து என்று அவற்றின் வரிசை இடத்தின் அடிப்படையில் குறிப்பிடப் பெற்றுள்ளன. இது போன்ற தமிழ் எழுத்துகளின் வரிசை முறைச் சிந்தனையைக் கல்வெட்டுகளில் காண்பது அரிது.
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=866 தமிழ் எழுத்து எப்பொழுது தொடங்கி எவ்வாறு வளர்ந்தது? 2006ம் ஆண்டில் கிடைத்த கி.மு. பதினைந்திலிருந்து கி.மு இருபதாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்திய கற்கோடாரியில், சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட 'Indus' எழுத்துருவில் சில வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலிரு வடிவங்கள் முருகன் என்ற பொருளைக் கொடுப்பதாக திரு. ஐராவதம் மகாதேவன் கூறுகிறார், மேலும் Indus எழுத்துரு தமிழ்தான் என்றும் கருதுகிறார். இவர் கருத்தை ஆதரித்து இந்தியா முழுமைக்கும் எழுத்துமுறை தந்தவன் தமிழனே என்று பல அறிஞர்களும் கருதுகின்றனர். இந்த 'Indus' எழுத்துரு உண்மையிலேயே தமிழாக இருந்தால், காலத்தால் முற்பட்ட தமிழ் எழுத்து இதுவேயாகும்.
இந்த Indus எழுத்துருவைத் தவிர்த்து நமக்கு இப்பொழுது கிடைத்துள்ள கல்வெட்டுச் சான்றுகளின் படி தமிழ் எழுத்துகளிலேயே மிகவும் தொன்மையானது 'தமிழ் பிராமி'யேயாகும். தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் பானை ஓடுகளில் உள்ள எழுத்துக் கீறல்கள் இவற்றின் காலத்தை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்ததில், இவ்வெழுத்துமுறை கி.மு 4ம் அல்லது 3ம் நூற்றாண்டிலுருந்து (அ.கு.1) கி.பி. 4ம் நூற்றாண்டுவரை வழக்கிலிருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கி.பி. 4ம் நூற்றாண்டிற்குப் பின், இவ்வெழுத்துமுறை மாற்றமடைந்து வட்டெழுத்தாகவும், பிறகு நாம் இப்பொழுது பயன்படுத்தும் நவீன தமிழ் எழுத்துகளுக்கு முன்னோடியான எழுத்துமுறையாகவும் வளர்ச்சியடைந்தது. தமிழ் பிராமி எழுத்துகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
கண்டுபிடிப்பு
20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் சில புரிந்துகொள்ள முடியாத கல்வெட்டுகள் கிடைத்தன. இவற்றைப் பல அறிஞர்கள் ஆய்வு செய்தனர். அவ்வறிஞர்களுள் வெங்கய்யா என்பவரே இவை அசோகச் சக்கரவர்த்தி கால பிராமிக் கல்வெட்டுகளை ஒத்திருப்பதை உணர்ந்து, இவை பிராமிக் கல்வெட்டுகள் என்று கண்டுபிடித்தார். ஆனாலும் இவரும் இன்னும் பிற அறிஞர்களும் இவை வடமொழி அல்லது பிராகிருத மொழிக் கல்வெட்டுகள் என்றே நினைத்தனர். தமிழ் மொழிக்கே உரித்தான ழ, ள, ற, ன முதலிய எழுத்துகள் இக்கல்வெட்டுகளில் இருப்பதை கே. வி. சுப்பிரமணிய அய்யர் எனும் அறிஞரே முதன்முதலில் கண்ணுற்றார். மேலும் அவர் வடமொழி எழுத்துக்கள் சில இக்கல்வெட்டுகளில் இடம்பெறாமல் இருப்பதையும் உணர்ந்து, இவை தமிழ் மொழிக் கல்வெட்டுகளாகலாம் என்று மொழிந்தார். பின்னாளில் பல அறிஞர்கள் இக்கல்வெட்டுகளை படிக்க முயன்று பாடங்களை வெளியிட்டனர். ஆயினும் அக்கல்வெட்டுகளின் தெளிவில்லாத புகைப்படங்கள் மற்றும் மசிப்படிகளை மட்டுமே கொண்டு படித்த காரணத்தால் அப்பாடங்களில் பல தவறுகள் நேர்ந்தன. சில வருடங்களுக்கு முன்பு ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் மிகவும் முனைந்து, இக்கல்வெட்டுகள் எல்லாவற்றையும் முடிந்தவரை நேரில் பார்வையிட்டு, மேலும் மசிப்படியில்லாமல் புதிதாக 'Tracing' முறை கொண்டு கல்வெட்டுகளைப் படியெடுத்து இக்கல்வெட்டுகள் அனைத்தும் ஒரு சில பிராகிருத சொற்கள் தவிர முழுதும் தமிழ் மொழியிலேயே இருப்பதை ஐயமின்றி நிரூபித்துள்ளார். தமிழ் பிராமியைப் பற்றி இதுவரை தெரிந்த எல்லா விவரங்களையும், இவர் புதிதாகக் கண்டுபிடித்த விவரங்களையும் "Early Tamil Epigraphy" என்ற புத்தகத்தில் விரிவாகக் கொடுத்துள்ளார். மேலும் அப்புத்தகத்தை வெளியிட்ட தேதிவரை கிடைத்த அனைத்துத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளின் படங்கள் மற்றும் கல்வெட்டுப் பாடங்களையும் இப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.
தோற்றம்
தமிழ் பிராமி எழுத்துமுறை அசோகரின் பிராமி-யிலிருந்து தோன்றியது என்று சிலவருடம் முன்பு வரை எண்ணப்பட்டு வந்தது. ஆயினும் சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்கும் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பானைக்கீறல்கள் மற்றும் தேனியில் கிடைத்த கி.மு. 4 அல்லது 3ம் நூற்றாண்டின் நடுகற்கள் இவற்றிலிருந்து அசோகர் காலத்துக்கு முந்தைய காலத்திலேயே தமிழ்-பிராமி எழுத்துமுறை வழக்கில் இருந்தது என்று கருதப்படுகிறது. கீழே தமிழ் பிராமி எழுத்துக்களின் அட்டவணை (கையெழுத்துப்பிரதி) கொடுக்கப்பட்டுள்ளது.
எழுத்துக்கள்
தமிழ் பிராமியில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ இவற்றை குறிக்க 6 எழுத்துக்களும், எ மற்றும் ஏ இவ்விரண்டையும் குறிக்க ஒரு எழுத்தும், ஒ, ஓ இவையிரண்டையும் குறிக்க ஒரு எழுத்தும் ஆக மொத்தம் 8 உயிரெழுத்துக்கள் இருந்தன. ஔ இடம்பெறவில்லை. 18 மெய்யெழுத்துக்களையும் சேர்ந்து 26 எழுத்துக்களே இருந்தன. க், ம் முதலிய எழுத்துக்களைக் குறிக்க முற்காலத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் புள்ளிகள் காணப்படவில்லை. ஒருசில பிற்கால தமிழ் பிராமி கல்வெட்டுகளில் அரிதாக புள்ளி காணப்படுகிறது. முற்கால வட்டெழுத்துக்கல்வெட்டுகளில் இப்புள்ளிகள் அதிகமான அளவில் காணப்படுகின்றன.
வளர்ச்சி
தமிழ்-பிராமி கி.பி 4ம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்தாலும், எழுத்துக்கள் சில காலத்திற்கேற்ப மாற்றமடைந்தன. திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள், தமிழ் பிராமி தோன்றியது 3ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 2ம் நூற்றாண்டு என்ற கருத்தில் கி.மு 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 1ம் நூற்றாண்டு வரை இருந்தது முற்கால தமிழ் பிராமி எனவும், கி.பி. 2ம் நூற்றாண்டிலிருந்து 4ம் நூற்றாண்டுவரை இருந்தது பிற்கால தமிழ் பிராமி எனவும் பகுத்துள்ளார். இப்பகுப்பில் கி.மு 2ம் நூற்றாண்டு என்பதை திருத்தம் செய்து கி.மு. 4ம் அல்லது 3ம் நூற்றாண்டு எனப் படிப்பது சரியாக இருக்கும். தமிழ்-பிராமி எழுத்து கி.பி 5-6ம் நூற்றாண்டில் முற்கால வட்டெழுத்தாக மாற்றமடைந்தது.
கல்வெட்டுகள்
மாங்குளம், அரிட்டாபட்டி, அரச்சலூர், எடக்கல், அழகர்மலை, சித்தன்னவாசல், திருமலை, ஜம்பை முதலிய பல இடங்களில் முற்கால தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், ஆனைமலை, புகளூர், குன்னக்குடி, குடுமியான்மலை முதலிய பல இடங்களில் பிற்கால தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் கிடைத்திருக்கின்றன.
இக்கல்வெட்டுகள் பல சுவையான தகவல்களைத் தருகின்றன. உதாரணத்திற்கு, புகளூரிலுள்ள ஒரே செய்தியைத் தரும், ஒரு சில வித்தியாசங்கள் தவிர மற்றபடி ஒன்று போலவே இருக்கும் இரு கல்வெட்டுகள் கோ ஆதன் செல்லிரும்பொறை, அவர் மகன் பெருங்கடுங்கோன் மற்றும் பெருங்கடுங்கோனின் மகன் இளங்கங்கோ ஆகியோரின் பெயர்களைத் தருகிறது. இப்பெயர்கள், சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர அரசர்களாக முறையே செல்வக்கடுங்கோ வாழிய ஆதன் எனவும், அவரை அடுத்து அரசாண்டவர்களாக பெருஞ்சேரல் இருப்பொறை மற்றும் இளங்சேரல் இரும்பொறை ஆகியோரின் பெயர்களைத் தருகிறது. பதிற்றுப்பத்தில் வரும் அரசர்கள் தாம் கல்வெட்டிலும் இடம்பெற்றவர்கள் என்று கருதக்கூடியதாக இருக்கின்றது.
முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய் கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் [இ*]ளங் கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல்
இதுமட்டுமல்லாது புறநானூறு மற்றும் அகநானூறுப் பாடல்கள் காட்டும் குதிரைமலையின் அரசரான சேரப்படையின் தளபதி பிடன் மற்றும் அவரின் மகன் பிடன்கொற்றன் இவர்களை அதே புகளூரில் உள்ள மேலும் சில கல்வெட்டுகளில் முறையே பிடன் அல்லது பிடந்தை என்றும் மகனை கொற்றந்தை எனவும் குறிப்பிடுவதாகக் கருதமுடிகிறது. இதிலுள்ள மற்றுமொரு கல்வெட்டு பிடனின் மகளாகக் கொற்றி என்பவரைக் காட்டுகிறது.
மேலும் பாண்டிய நெடுங்செழியன் மற்றும் சங்க இலக்கியம் காட்டும் அதியமான் நெடுமானஞ்சி ஆகியோரின் பெயர்களெனக் கருதத்தக்க வகையில் மாங்குளம் மற்றும் ஜம்பையிலுள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகளில் இப்பெயர்கள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் காட்டும் இவ்வரசர்கள் இருந்ததற்கான மேலுமொரு சான்றாக இக்கல்வெட்டுகள் இருக்கின்றன.
பின்வரும் கல்வெட்டுப் படத்தைப் பாருங்கள்:
கல்வெட்டுப் பாடம்:
முதல் வரி - அ ன் ஊ ர் அ த ன்
இரண்டாம் வரி - ன் அ ன் க ல்
செய்தி
இக்கல்வெட்டு தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி தாலுகாவில் புளியம்கொம்பை என்ற ஊரில் கிடைத்துள்ள மூன்று நடுகற்களுள் ஒன்று. அ த ன் என்பதை ஆதன் என்று படித்து (பல கல்வெட்டுகளில் குறில் நெடில் எழுத்துகள் வித்தியாசம் இல்லாமல் ஒன்று போலவே குறிக்கப்பட்டுள்ளது). ஆதன் என்ற ஒருவரின் நினைவாக நட்ட கல் என்று பொருள் கொள்ளலாம். கல்வெட்டு முழுவதும் கிடைக்காததால் ஆதனின் முழுப்பெயர், ஊர் மற்றும் முழு செய்தியும் தெரியவில்லை.
மண்பானைக் கீறல்கள், காசுகள், மற்ற பொருள்கள் உறையூர், அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல் மற்றும் பல இடங்களிலும் 2005ம் ஆண்டில் ஆதிச்சநல்லூரிலும் தமிழ்-பிராமி எழுத்துகள் பொறித்த மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவை தவிரத் தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த பல காசுகளும், மோதிரங்களும் அகழாய்வுகளில் முக்கியமாகக் கரூர் அமராவதி நதிப்படுகையில் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, ஆந்திராவில் சாலிகுண்டம் பகுதியிலும் மற்றும் இலங்கையிலும் பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் எகிப்து நாட்டில் சிவப்புக் கடற்கரையிலுள்ள ரோம் நாட்டினர் குடியிருந்த பகுதிகளின் அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்து பொறித்த ஒரு பானை ஓடு கிடைத்திருக்கின்றது. அதுபோல தாய்லாந்து நாட்டில் தமிழ்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பொற்கொல்லர் உபயோகித்த உறைகல் ஒன்று கிடைத்திருக்கிறது.
பின்வரும் ஹிந்து நாளிதழ் செய்தியில் வெளியிடப்பட்டிருக்கும் பானைக்கீறல் படத்தினைப் பாருங்கள்.
முதல் எழுத்து உ போல் உள்ளது ஆயினும் சரியாகத் தெரியவில்லை. தமிழ் பிராமியில் உ மற்றும் ந எழுத்துகள் இரண்டுமே 'L' வடிவில் இருக்கும், 'ந' எழுத்தில் கீழுள்ள கோடு இடது பக்கமும் நீண்டிருக்கும். பிற்கால பிராமி கல்வெட்டுகள் சிலவற்றில் இந்த நீளல் காணப்படவில்லை. இவ்வெழுத்தை திரு ஐராவதம் மகாதேவன் 'ந' என்று படித்துள்ளார். அடுத்து வரும் எழுத்து 'க',
மூன்றாம் எழுத்தை திரு ஐராவதம் மகாதேவன் 'ன' என்று படித்துள்ளார். கீழே உள்ள படத்தில் 'ன' எழுத்து முற்கால மற்றும் பிற்கால தமிழ் பிராமியில் எப்படி இருந்தது என்பதும். பானைக்கீறலில் உள்ள எழுத்து எப்படி இருக்கிறது என்பதும் காட்டப்பட்டுள்ளது. 'ன' எழுத்தை தவறாக அப்படிப் பானையில் கீறியிருக்கலாம்.
நான்காம் எழுத்து படத்தில் பார்ப்பதற்கு 'ந' போல் இருந்தாலும் உற்றுப் பார்த்தால் அது 'உ' தான் என்பது புலப்படும். இடது பக்கம் நீண்டிருப்பதாகத் தோன்றும் கோடு உண்மையில் 'original' பானைக்கீறல் இல்லை. அடுத்து வரும் எழுத்துக்கள் 5) ற 6) ல.
சேர்த்துப்படித்தால்: ந க ன உ ற ல,
செய்தி
இதை திரு ஐராவதம் மகாதேவன் 'நாகன் ஊறல்' என்று படித்து, இப்பானை நாகன் என்பவரின் ஊறல் பானை அதாவது பனையில் பாளையைக் கீறி அதிலிருந்து ஊறும் நீரை சேமித்து இறக்கப் பயன்பட்ட பானை என்று கருதுகிறார். நாகன் என்பவர் பனையிலிருந்து பதநீர் இறக்கும் தொழிலாளியாக இருந்திருக்கலாம்.
கிடைக்கும் செய்திகள்
மேலே குறிப்பிட்டுள்ள படி அரசர்களின் பெயர்களும், அக்காலத்து ஊர் மற்றும் ஊர்சபையின் பெயர்கள், பொற்கொல்லர் போன்று பலவித தொழில் செய்வோரின் பெயர்கள், ஜைனத்துறவிகள் மற்றும் பள்ளிகளின் பெயர்கள், இளயன், குறவன், நாகன் போன்ற இனப்பெயர்கள், பல சொந்தப் பெயர்கள், வேளாண்மை பற்றிய விவரங்கள் போன்று சமயம் மற்றும் சமுதாயம் சார்ந்த பல விவரங்களை இக்கல்வெட்டுகள் மற்றும் பானைக்கீறல்களை ஆராய்ந்து அறிய முடிகிறது.
எகிப்து, தாய்லாந்து முதலிய இடங்களில் கிடைக்கும் தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானையோடு மற்றும் உறைகல் இவை அந்நாளில் தமிழ்நாட்டினர் மற்றைய நாடுகளுடன் கொண்டிருந்த வாணிபத் தொடர்பிற்குச் சான்றாக உள்ளது.
தமிழ்நாட்டில் காணப்படும் இக்கல்வெட்டுகள் தமிழ் தெரியாத புத்த, ஜைனத் துறவிகளால் வடமொழியில் எழுதப்பட்டதாக ஒரு கருத்து நிலவியது. இப்பொழுது இக்கல்வெட்டுகள் தமிழ்மொழிக் கல்வெட்டுகள்தாம் என்று ஐயமுற நிரூபிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானைக்கீறல்களில் பொதுமக்களின் பெயர்களும் அவர்கள் தம் பெயரால் பொறித்துக்கொண்டதாக உள்ள தமிழ் எழுத்துகளும், மிகப்பழமையான காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் எழுத்தறிவு மேல்தட்டு மக்களிடம் மட்டுமல்லாது சாமானிய பொதுமக்களிடமும் பரவலாக இருந்தது என்று கருத இடமளிக்கிறது. மேலும் சங்க இலக்கியங்களைப் பாடியோர் மற்றும் தொகுத்தோரில் சமுதாயத்தின் பலதரப்பட்ட தளங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் இருப்பதையும் சான்றாகக் கொண்டு சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் முதல் அறிவொளி இயக்கம் மிகப்பரவலாக நடைபெற்றது என்று திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் கருதுகிறார்கள்.
அடிக்குறிப்பு
1) தேனியில் கிடைத்த நடுகற்கள் கி.மு. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று ஒரு சாராரும், கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சிலரும் கருதுகின்றனர்.
பார்வை நூல்கள்
1) Early Tamil Epigraphy - Iravatham Mahadevan 2) சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - திரு. ஐராவதம் மகாதேவன், வரலாறு ஆய்விதழ் 6. 3) தன்னிகரில்லாத தமிழ் - ச. கமலக்கண்ணன் & தமிழ்சசி, வரலாறு.காம் இதழ் 23 4) "Discovery of a century" in Tamil Nadu - T.S. Subramanian, The Hindu dated May 01, 2006. 5) "The tale of a broken pot" Iravatham Mahadevan and S. Rajagopal, The Hindu dated May 13, 2008.
பிராமியில் தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் "எ""ஒ" இல்ல்லை. ஆனால் அனுராதபுரம் மற்றும் தமிழக பானை கீரல் உருகளை எழுத்தாய் படிப்போர் சொல்வது பல வடமொழி சொற்கள் வட மொழி வர்க்க எழுத்தோடு உள்ளது. தமிழில் உயிரில் இவ்வெழுத்துக்கள் மாறியது 18ம் நூற்றாஆண்டில் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) பின் தான் என தெள்ளிவாகிறது.
இந்தியாவில் அறிவு சார் இணைப்பு மொழியாய் வடமொழி தான் இருந்தது. வடமொழியில் மெய் எழுத்து க் என்கையில் k,kh, g, gh 4 வர்க்கம் உண்டு இது போல் மற்றவை எனவே 33, தமிழில் 18. தமிழில் உள்ள ழ, ள, வடமொழியில் இல்லை. வடமொழி உயிர் எழுத்துகளில்ல் குறுக் எ - ஒ கிடையாது, இதுவும் கல்வெட்டுகளில் இல்லை. எனவே பிராமி உருவாக்கப் பட்டது வடமொழிக்கு, தமிழ் தனக்கு அதை பயன்படுத்திக் கொண்டது. இதுவரை பானைக் கீறிறல்களின் மிகத் தொன்மையிலும் கூட வடமொழி வர்க்க எழுத்தோடு உள்ளது.
பிராமி எழுத்து ஒலிக்கான முறையில் வர்க்க எழுத்தோடான வடமொழிக்கு உருவானது என்பது தெளிவு. கொடுமணல், பொருந்தனை, கீழடி எல்லா பானை கீரல் படிப்பில் பிராமி என கூறுகையில் - வர்க்க எழுத்தோடும் உள்ளது. இவை தமிழ்பொறிப்பா, வடமொழியா என்பதே கூட விவாதத்திற்கு உரியது
அகழ்வு குழியில் கிடைத்த சோதனைக்கு அனுப்பப்பட்ட பொருள் காலம் - அந்த அகழ்வின் அனைத்து பொருளிற்க்கும் சேராது. பானை கீரறல்கள் எழுத்தா வெறும் சித்திரமா(சிந்து போல) என்பதிலேயே இன்னும் அறிஞர்கள் இடையே முழுமையான கருத்தொற்றுமை இல்லை. தமிழில் இதுவரை பிராமியில் கிடைத்துள்ள அனைத்தையும் ஒரு A4 வெள்ளை தாளில் அடக்கலாம், ஆனால் அசோகருடைய கல்வெட்ட்டில் மட்டும் தம்மம் விளக்கமாய் உள்ளது. அது தவிர பல பெரிய கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் தமிழில் பொ.ஆ 6 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும் கல்வெட்டுக்கள் மிகச் சிறியவை. பூலாங்குறிச்சிக் கல்வெட்டு தான் சற்றே பெரியது. தமிழில் இதுவரை பிராமியில் கிடைத்துள்ள அனைத்து கல்வெட்டுகள்படி அ முதல் ன வரை எழுத்துக்களின் தோற்றம் வளர்ச்சி.
அறிஞர்கள்படி தமிழில் 40% சம்ஸ்கிருத சொற்களும்; சம்ஸ்கிருத மொழியில்33% தமிழ் சொற்களும் உள்ளன, இரண்டும் சகோதரிகள், சம்ஸ்கிருத இலக்கியத்தில் பெரும் பங்கு தமிழர் பணி உள்ளது, ஆனால் தொன்மையில், இலக்கிய வளர்ச்சியில்ல எழுத்து உரு உருவாக்கலில் பல நூற்றாண்டுகள் முன்பே வடமொழி வளர்ச்சி பெற்ற மொழி இன்று வரை உள்ள தரவுகள் காட்டும் உண்மை.