(இந்த ஆண்டின் தொடக்கத்தில் மறைந்த அறிஞர் கமில் சுவலபில் (Kamil V. Zvelebil) செக்கொஸ்லொவாக்யா நாட்டில் பிறந்தவர். ப்ரேக் நகரின் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியவியலை முக்கியப் பாடமாகப் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் திராவிட மொழியியல் சொல்லித்தரும் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
1968ஆம் ஆண்டு செக் குடியரசை சோவியத் யூனியன் ஆக்கிரமித்தபோது, இவர் குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்கா, யூரோப்பா போன்றவற்றில் வசிக்க நேர்ந்தது. சிகாகோ பல்கலைக்கழகம், ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழகம், காலேஜ் டி ஃப்ரான்ஸ் மற்றும் வேறு சில யூரோப்பிய பல்கலைக்கழகங்களில் சுவலபில் பேராசிரியராகப் பணியாற்றினார். இறுதியாக, நெதர்லாந்து நாட்டின் யுட்ரெக்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து, 1992ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.
மொழியியல் மற்றும் இலக்கியம் பற்றி இவர் எழுதியுள்ள நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும்.
சிந்துவெளி எழுத்துகள் பற்றி, 1983ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆய்வரங்கம் ஒன்றில் கமில் சுவலபில் வாசித்தளித்த கட்டுரையின் தமிழாக்கத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. இதன் இரண்டாம் பகுதி அடுத்த இதழில் வெளிவரும். – ஆசிரியர் குழு)
தமிழில்: எஸ்.ஆர். சந்திரன்
இந்த ஆய்வுரையை இரண்டு மேற்கோள்களோடு தொடங்குகிறேன்.
ஒன்று, கீழைத் தேயத்தைச் சேர்ந்தது. ‘சோய்கு ஷிகேமத்சு’ வின் தொகுப்பிலுள்ள ஜென் புத்தமத ‘ஜகுகோ’ ஆகும். அம்மேற்கோளின் பொருள்: “ஒருவர் தனது மலத்தை, அதன் நாற்றத்தை வைத்துக் கண்டுபிடித்துவிட முடியாது.” மற்றொரு மேற்கோள் மேலைத் தேயத்தைச் சேர்ந்தது; ட்வைட் எல். போலிங்கர் 1976இல் கூறியதாகும் “மனிதப்பிறவி என்பது சிக்கல்களை, புதிர்களை அவிழ்ப்பதற்காகவே தோன்றியதாகும். மனிதர்கள், அவையவை (சிக்கலின்றி) அப்படியப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட மாட்டார்கள்.”
இவ்விரு மேற்கோள்களும் இந்த உரையைத் தயாரிக்கும்போது என் மனத்தில் இடைவிடாது தோன்றிக்கொண்டே இருந்தன. நான் ஏன் இவ்வாறு மரியாதை இல்லாமல் என் ஆய்வுரையைத் தொடங்குகிறேன் என்பதற்குத் தக்க காரணம் உள்ளது.
இந்த உரையில் நான் விவாதிக்க இருக்கிற அனைத்து அறிஞர்களுமே, உண்மையில் தங்களால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதித்துவிட்டதாக அடக்கமின்றிப் பறைசாற்றியுள்ளார்கள். ஹரப்பன் எழுத்து, மொழி ஆகியவற்றைப் ‘படித்து விளக்கப்பட்டுள்ள ‘முறை’களில் ஒன்றுகூட, எல்லா அறிஞர்களுக்கும் நிறைவு தரும் வகையில் விளக்கப்படவில்லை. இவ்வாறு நான் கூறும்போது மனித வரலாற்றின், மிக விரக்தி தரும் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதில், அதாவது, ஹரப்பன் நாகரிக மூதாதையர்களை நம்முடன் பேசவைத்து அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் இவ் அறிஞர்கள் காட்டியுள்ள கற்பனையையும், ஆற்றலையும் அவர்களின் கடும் உழைப்பையும், இம்முயற்சியில் செலவிடப்பட்டுள்ளன பெரும் நிதியையும் காலத்தையும் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று எண்ணிவிடாதீர்கள்.
தொடக்கத்திலேயே ஒன்றைக் கூறிவிடுகிறேன்.முதலாவதாக நேரமின்மை காரணமாக, மிகச்சில ஆய்வுகளையே நான் எனது விமரிசனத்துக்குத் தேர்ந்தெடுத்துள்ளேன். கி.பி. 1965க்குப் பின்னர் இவ்விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே பொருத்தமும் தகுதியும் உடைய தீவிரமான ஆய்வுகள் என்பது அனைவரும் ஏற்கக்கூடிய கருத்தாகும்.
எனவே, அவற்றையே தேர்ந்தெடுத்துள்ளேன். இரண்டாவதாக மிகச்சில விதிவிலக்குகள் தவிர ஹரப்பன் எழுத்தினைப் படித்து விளக்கப்பட்டுள்ள எந்தக் குறிப்பிட்ட பாடம் பற்றியும் நான் விவாதிக்கப்போவதில்லை. மாறாக, இவ் அறிஞர்களின் அணுகுமுறை, பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர்கள் பயன்படுத்திய அளவைகள், நுட்பங்கள், அவர்களின் முடிபுகள் – ஆகியவை பற்றி மட்டுமே விவாதிக்க இருக்கிறேன்.
இறுதியாக ஒன்று: சிந்து வெளி முத்திரைகளில் இதுவரை இருமொழி முத்திரை எதுவுமே கிடைக்காததால் இவ்வெழுத்துகளைப் படிப்பதற்கான முயற்சி என்பதே வரையறையற்ற – ஒரு கட்டுக்குள் அடங்காத – முயற்சியாக உள்ளது. டேல்ஸ் (1976இல்) குறிப்பிட்டுள்ளபடி, குறைந்தபட்சம் 42 வகையான படிப்பு வாசகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
இருப்பினும், இந்த நிமிடத்தில்கூட, இருமொழி முத்திரையொன்று அகழாய்வில் கிடைக்கக்கூடும். அல்லது யாராவதொரு அறிஞர், சிந்து வெளி எழுத்தினைச் சரியாக ஊகித்து அறிந்துவிடவும் முடியும். இருக்கும் தடயங்களைத் தவிர ஒன்றைப் புதிதாக நாமாகச் சேர்த்துவிடவும் முடியாது. இருப்பனவற்றில் ஒரு சிறிய தடயத்தையும் நீக்கிவிடவும் முடியாது. இவ்வாறு கூறிக்கொள்வதைத் தவிர நாம் வேறொன்றும் செய்ய இயலாது.