திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் ஆற்றின் கரையிலுள்ளது கொடுமணல் கிராமம். சங்க காலத்தில் வணிக பெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான் அருங்கலம்' என்ற பாட்டில், மிகச்சிறந்த தொழிற்கூடங்கள் அமைந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இது, சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், வணிக தொடர்புக்கு பயன்பட்ட மேலைக்கடற்கரை துறைமுகமான, முசிறி பட்டணத்தையும், இணைக்கும் "கொங்கப்பெருவழி'யில் அமைந்துள்ளது.கொடுமணல் பகுதியில், தொல்லியல் துறை, செம்மொழி உயராய்வு மையம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலை
பேராசிரியர் ராஜன் தலைமையிலான குழுவினர், கடந்த இரண்டு மாதமாக ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின்போது, தமிழ்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள்; ஆட்பெயர்கள், குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்பிராமி எழுத்துக்கள், இலக்கண பிழையின்றி உள்ளன. இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் படிப்பறிவில் சிறந்தவர்களாக இருந்ததற்கு சான்றாக, இவை கிடைத்துள்ளன. பிற நாடுகளுடன் வணிக தொடர்புகளை வைத்திருந்ததற்கு சான்றாக வெள்ளி முத்திரை நாணயங்கள், வடக்கத்திய கருப்பு வண்ணம் மெருகேற்றப்பட்ட மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன.
விலை உயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற்கூடங்கள், நெசவுத்தொழில், நூல் நூற்க பயன்பட்ட தக்களி, தந்தத்தால் செய்யப்பட்ட நூல் நூற்க பயன்படும் உபகரணம், இறந்தவர்களை புதைக்கும் ஈமக்காட்டில், பெருங்கற்படை ஈமச்சின்னங்கள், சுடுமண் தக்கலி, சுடுமண் மணிகள், தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், கூரை ஓடுகள்,
கார் நீலியன் எனப்படும் சூதுபவள மணிகள், பளிங்கு கற்கள், வைடூரியம், வீடு, தொழிற்கூடங்கள், 218 மணிகள், சங்கு அணிகலன்கள் என நூற்றுக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மொத்தம் 50 ஏக்கர் பரப்பளவுள்ள வாழ்விட பகுதியில், 9 அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில், நடுகல், வட்ட கல் என 100 ஈமச்சின்னங்கள் உள்ளன. இதில், ஒரு ஈமச்சின்னமும் தோண்டப்பட்டுள்ளது. இதில், மூன்று அறைகள், வடமேற்கு மூலையில் உயர் வெண்கல குவளை, கீழ் பகுதி சல்லடை போல் அமைப்பும் இருந்தது.இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் சிறந்த விளங்கிய நகர், தோண்டி எடுக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் கல் மணி அணிகலன்கள் மற்றும் உலோக அணிகலன்கள், சங்கு அணிகலன்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கியதும், ஒரு குழுவாக வாழ்ந்ததும், பண்டை காலத்திலேயே, உலக அளவில், மதிப்புமிகு பொருட்கள் உற்பத்தி செய்து வணிக தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
ஆய்வுக்குழு தலைவர்,பேராசிரியர் ராஜன் கூறியதாவது:
கொடுமணல் பகுதியில், விலை உயர்ந்த, சிறந்த தொழில் நுட்பங்களை கொண்ட அணிகலன்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் இருந்துள்ளன. "சபையர்' எனப்படும் நீலக்கல், "குவார்ட்ஸ்' எனப்படும் பளிங்கு கற்கள், "பெரில்' எனப்படும் வைடூரியங்கள் மற்றும் கல் மணிகளை அறுக்கவும், மெருகூட்டவும் பயன்படும் குறுந்தம் கல் வகைகளும் இங்கு இருந்ததால், இங்கு தொழில் சிறப்பாக இருந்துள்ளது.
மேலும், கார்னீலியன், அகேட் ஆகிய மணிகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள், குஜராத் பகுதியில் இருந்தும், "பிளாக் கேட் ஐ' எனப்படும் பூனைக்கண் மணிகள் இலங்கையில் இருந்தும், லேபிஸ் லஸ்லி மணிகள், ஆப்கானிஸ்தானில் இருந்தும் வந்துள்ளன. அதோடு, சங்கு அறுத்து, அணிகலன்கள் தயாரித்ததும், துணி உற்பத்தியும் சிறந்து விளங்கியதற்கு சான்றாக உபகரணங்கள் கிடைத்துள்ளன.இங்கு, 500 ஆண்டுகள் செழிப்பாக இருந்துள்ளன. அரசியல்,
வணிக வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், நகரம் அழிந்துள்ளது. வணிகர்கள் அதிகளவு வந்து தங்கியிருந்ததும், 1912ம் ஆண்டு, ஐந்து கல் தொலைவில் உள்ள கத்தாங்கண்ணியில் கிடைத்த ரோமானிய நாணய குவியலும், வணிக தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன.
தமிழ் பிராமி எழுத்து பொறித்த மண்பாண்டங்கள் கிடைத்ததும், எழுத்து இலக்கண பிழையில்லாமல் உள்ளதால், 2,500 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்களின் கல்வி அறிவை விளக்குகிறது.வடக்கத்திய கருப்பு வண்ணம் மெருகேற்றப்பட்ட மண்பாண்டங்கள், பிராகிருத மொழியில் பெயர் பொறித்து ஆட் பெயர்கள், பெருங்கற்படை சின்னங்கள், இனக்குழு சார்ந்த வாழ்வியலையும், அவர்களுக்கு தேவையான உணவு உற்பத்திக்கு, வேளாண் தொழில் மேற்கொண்டதற்கான உழவு, அறுவடைக்கான உபகரணங்கள்,சேமிப்பு கிடங்குகள், கால்நடை எலும்புகள் அதிகளவு கிடைத்துள்ளதால், கால்நடை வளர்ப்பும் சிறந்து விளங்கியுள்ளது.ஆட்பெயர்களில், மாகந்தை, குவிரன், சுமனன், ஸம்பன், ஸந்தைவேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர்களும், பெரும்பாலும் சாத்தன், ஆதன் என முடிவடைகின்றன. கண்ணகியின் கணவர் பெயர் சாத்தன்; சேர அரசர்களின் பெயர் சேரலாதன் என முடிவடைவதும், இந்நகரின் காலத்தை குறிக்கிறது.
விலை உயர்ந்த மணிகள் உற்பத்தி
நகரமாக இருந்ததாலும், ஆயுதங்கள், கோவில்கள் தென்படவில்லை. இதிலிருந்து போர் முறை, கடவுள் வழிபாடு, பிந்தைய காலத்தில் உருவானது என தெரியவருகிறது.
அறிவியல் சார்ந்த கார்பன் ஆய்வு, அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், கொடுமணல் காலம் கி.மு., ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தையது என தெரிந்துள்ளது.கொடுமணல் என்ற நகரம், மிகச்சிறந்த தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழிற்கூடங்களை கொண்ட நகரமாகவும், உள்நாடு, வெளிநாடு வணிக உறவுகளை கொண்ட வணிக நகரமாகவும், சமூக, பொருளாதார, எழுத்தறிவு பெற்ற நகரமாகவும் விளங்கியுள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.இவ்வாறு, ராஜன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், கொடுமணல், தொல்லிடத்தில் நடக்கும் அகழாய்வுப் பணியில் பல பழைமையான அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய தொல்லியல் துறையில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட அகழாய்வுப் பிரிவு -6 சார்பில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை ஒன்றியம், கொடுமணலில் அமைந்துள்ள பழங்காலக் குடியிருப்புமேட்டில், கடந்த ஜனவரி 8-ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
கொடுமணலில் 1981 முதல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழகத் தொல்லியல் துறை, புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் மூலமாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கொடுமணல் தமிழகத் தொல்லியல் வரைபடத்தில் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறது. பேராசிரியர்கள் சுப்பராயுலு, கா.ராஜன் ஆகியோரின் சீரிய ஆராய்ச்சியால் இவ்விடத்தின் தொல்லியல், தொன்மைச் சிறப்புகள் உலக அளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
ஆய்வு குறித்து, பெங்களூரு, இந்திய தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பிரிவு 6-இன் தொல்லியல் கண்காணிப்பாளர் பு.சு.ஸ்ரீராமன் கூறியதாவது:
கொடுமணல் ஒரு சிறந்த தொழில் வினைஞர்களின் கூடமாக இருந்திருக்கிறது. இங்கு தயாரிக்கப்பட்ட பொருள்கள் அக்காலத்திலிருந்த வணிகவலைத் தொடர்புகளின் மூலம், இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் தயாரிக்கப்பட்ட பொருள்களும் கொடுமணலுக்கு வந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
கடந்த அகழ்வாராய்ச்சிகளில் கொடுமணலில் பண்டைய காலத்தில் இரும்பு, எஃகு, செம்பு பொருள்கள், மணிகள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இதைத் தவிர, வேறு தொழிற்கூடங்கள் இருந்தனவா என்ற கேள்வியும் எழுகின்றது.
பேராசிரியர் கா.ராஜன் கருத்தின்படி, குறிப்பாக கொடுமணலிலும் பொதுவாக தென்னிந்தியாவிலும் பிராமி எழுத்துகளின் துவக்கம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் துவங்கியது. இக்கால நிர்ணயம் கொடுமணல், பொருந்தலில் கிடைத்த சி-14 கால நிர்ணயங்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆயினும், இக்கருத்தைச் சில தொல்லியல் அறிஞர்கள் சி-14 கால நிர்ணயங்கள் இல்லாததால் ஒப்புக் கொள்ளத் தயங்குகின்றனர். ஆகவே, அதிக அளவில் கரித்துகள், களிமண் மாதிரிகளை அகழ்வாராய்ச்சியின் மூலம் எடுத்து சி-14 கால நிர்ணயம் செய்ய வேண்டும்.
இதைக் கருத்தில்கொண்டு, அவற்றுக்கான விடைகளைஅறிய இந்தியத் தொல்லியல் துறையின், பெங்களூரைத் தலமையிடமாகக் கொண்ட பிரிவு-6 கொடுமணலில் 2018 ஜனவரி முதல் அகழ்வாராய்ச்சியை பரந்த பரப்பளவில் மேற்கொண்டது. இந்த அகழ்வாராய்ச்சி இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.
முதல் அகழ்வாய்விடத்தில் 25 குழிகள் (5-க்கு 5 மீ.) தோண்டப்பட்டன. கீழ்மட்டத்தில் ஒரு பந்தல்கால் நடுகுழிகளோடு கூடிய ஒரு சதுர வடிவிலான வீடு/ தொழிற்கூடம் கண்டறியப்பட்டது. அதிக அளவில் இப்பகுதியில் வெண்கற்களும், மணிகளைப் பட்டை தீட்டுவதற்குரிய கல்லும் கிடைத்ததால் இத்தரைத் தளம் மணிகள் தயாரிக்கும் தொழிற்கூடமாக இருந்திருக்கும்.
இரண்டாம் அகழ்வாய்விடத்தில் 13 குழிகள் (5-க்கு 5 மீ.) தோண்டப்பட்டன. இப்பகுதியில் அதிக அளவில் சிறப்பு வாய்ந்த தொல்பொருள்கள் கிடைத்தன. அவற்றுள் சிறந்த தொல் பொருள்களின் விவரங்கள் வருமாறு:
அரிச்சுவடி பானை ஓடு: ஒரு சிறிய சென்னிற பானை ஓட்டின் மீது அ, ஆ, இ, ஈ என்ற தமிழ் மொழியின் முதல் நான்கு உயிரெழுத்துகள் பிராமி வரி வடிவத்தில் எழுதப்பட்டுள்ளன. இதில் ஆ, இ என்ற எழுத்துகளின் பிராமி வரி வடிவங்கள் முதல் முறையாகத் தமிழகத்தில் கிடைத்துள்ளன.
சுடுமண் முத்திரை: சுமார் 2 செ.மீ அளவு கொண்ட இம்முத்திரையின் அடிப்பகுதியில் 'லவஸ' என்ற பிராமி எழுத்துகள் காணப்படுகின்றன. தமிழக தொல்லியல் அகழாய்வுகளில் இதுபோன்ற முத்திரை முதன்முறையாக கொடுமணலில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தச்சரின் துளை ஊசி: சுமார் 10 செ.மீ. நீளமுள்ள இரும்பாலான முறுக்கப்பட்ட, மரத்தில் துளையிட தச்சர்களால் பயன்படுத்தப்பட்ட துளை ஊசி ஒன்று முதன்முறையாக கொடுமணலில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்பருவ அகழ்வாய்வில் 1,000-க்கும் மேற்பட்டதொல்பொருள்கள் கிடைத்தன. இவற்றுள் 203 பொருள்கள் இரும்பாலானவை. 45 செம்பினாலானவை. 6 தங்கத்தினாலானவை. 144 தந்தம்/எலும்பிலானவை. 84 சுடுமண்ணாலானவை. இப்பருவ அகழ்வாய்வில் 300-க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் தமிழ், பிராகிருத ஆண் பெயர்கள் காணப்படுகின்றன.