கீழடியில் கிடைத்திருப்பவை எல்லாம் இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கீழடியில் கிடைத்த கலாச்சாரப் பொருள்களின் காலகட்டம் இன்றைக்கு 2300 ஆண்டுகளிலிருந்து 1900 ஆண்டுகள் வரை என்று அரசு எழுதிய புத்தகமே சொல்கிறது. எனவே கிடைத்தவற்றைக் கால வரிசைப்படுத்தி அவற்றின் காலங்கள் என்ன என்பதை விளக்குவது தொல்லியல் துறையின் கடமை. அதை அவர்கள் விரைவில் நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
மேலும் கீழடி நகர நாகரிகத்தை குறிக்கிறது என்பதை நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்ற கேள்வியை பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இன்னும் ஆதாரங்கள் வேண்டும். கீழடியில் இதுவரை கிடைத்திருப்பவை எவையும் வரலாற்றைப் புரட்டிப் போடுபவை அல்ல என்றுதான் சொல்கிறேன். அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படும் பித்தலாட்டங்களுக்கு நான் ஆமாம் சாமி போட முடியாது.
சரி, அகழ்வாய்வாளர்கள் நகர நாகரிகங்களை எவ்வாறு அடையாளம் காண்கிறார்கள்? கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வெளியீடான Eurasia at the Dawn of History -Urbanization and Social Change என்ற புத்தகத்தில் பத்தாவது அத்தியாயத்தின் தலைப்பு இது: How Can Arch aeologists Identify Early Cities? Definitions, Types, and Attributes? மைக்கேல் ஸ்மித் எழுதியது. அதில் அவர் நகர நாகரிகத்திற்கு 21 அடையாளங்கள் அல்லது தடையங்கள் இருக்க வேண்டும் என்கிறார்:
அவை
1.மக்கள் தொகை
2. நகரப்பரப்பு
3. மக்களடர்த்தி
4. அரண்மணைகள்
5. அரசர்கள் மற்றும் சமூகத்தில் உச்சநிலையில் உள்ளவர்களை புதைத்த இடங்கள்
6. பெரிய வழிபாட்டுத்தலங்கள்
7. பொதுக் கட்டிடங்கள்
8. கைவினைக் கூடங்கள்
9. சந்தைகள், கடைகள்
10. மதில்கள், கோட்டைகள்
11. நுழைவாயில்கள்
12. இவற்றை ஒன்று சேர்க்கும் தடையங்கள்- தெருக்கள், குளங்கள், ஓடைகள், முதலியவை
13. சிறிய வழிபாட்டுத்தலங்கள்
14. வீடுகள்
15. மக்கள் கூடுவதற்கான இடங்கள்
16. நகரின் நடுப்புற அமைப்பு
17. சமூகத்தில் உயர்ந்த ஆனால் உச்சநிலையில் இல்லாதவர்களைப் புதைத்த இடங்கள்
18. சமூகத்தின் பல தட்டுக்களுக்கான அடையாளங்கள்
19. அருகில் இருந்த நகரங்கள், கிராமங்கள்
20. நகரித்தின் உள்ளே அல்லது அருகில் நடக்கும் விவசாயம்
21. இறக்குமதிப் பொருள்கள்
நமக்கு இதே தடையங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமக்குக் கிடைத்திருக்கும் இலக்கிய, தொல்லியல் சான்றுகளை வைத்துக் கொண்டு, நமது அகழ்வாய்வாளர்களும் இது போன்ற பட்டியலைத் தயாரிக்கலாம்.
இப்போது கீழடிக்கு வருவோம். அங்கு வண்டி வண்டியாக பானைச் சிதறல்கள் கிடைத்திருக்கின்றன. குறிப்பிடத்தக்க பெரிய அடையாளங்கள் வேறு ஏதும் கிடைக்கவில்லை. நான் ஒரு அனுபவமிக்க, ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்த ஒரு தொல்லியளாளரிடம் கேட்டேன். அவர் சொன்னது இது: They are all fragmentary and not found in one structural phase. No evidence of any fortification, dwelling or contiguous structure. The habitation may be fairly large. But structural and artefactual remains are poor. அதாவது மக்கள் வாழ்ந்திருக்கும் தடையங்கள் இருந்திருக்கலாம், ஆனால் நகரக் குடியிருப்புகள் என்று நிரூபிக்க கிடைத்திருக்கும் சான்றுகள் போதாது என்கிறார்.
கீழடியில் இதுவரை நடந்திருக்கும் அகழ்வாராய்ச்சிகளில் (மத்திய மாநில அகழ்வாராய்ச்சிகள்)கிடைத்திருக்கும் எல்லாத் தடையங்களை வைத்துக் கொண்டுதான சரியான முடிவிற்கு வர வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு இடத்தில் கிடைத்ததை மட்டும் வைத்துக் கொண்டு மேலும் கீழும் குதிப்பதை அரசியல்வாதிகளும் அவர்களுக்கு கொடி பிடிப்பவர்களும் செய்யலாம். அறிவியல் அணுகுமுறையில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் செய்யத் தயங்குவார்கள்.