தமிழர்கள் வைதீகத் திருமணத்தினை ஏற்கக்கூடாது என்றும் “தாலி அடிமைச்சின்னம்” என்றும் “பகுத்தறிவு அட்டை கத்திகள்” கண்டுபிடித்துள்ளன. இதற்குக் காரணம் வைதீக திருமணங்கள் பிராமணர்களால் நடத்தி வைப்பதும், பிராமண வெறுப்பிலிருந்து உண்டான பிராமண எதிர்ப்பு வெறியுமே காரணம்.
திராவிட கழக தலைவர் ஈ.வே. ராமசாமி முதல் இன்றைய கி.வீரமணி வரை “தாலி அடிமை சின்னம்” என்றும் அதற்காக தாலி அறுப்பு போராட்டங்களும் நடத்தினார்கள் / பேசினார்கள். தாலி தமிழ் திருமணங்களில் கூடாது என்றனர். தாலி பார்பனீய அடையாளம் என்பதும் இவர்களது கண்டுபிடிப்பு.
உண்மை என்ன எனில் தமிழ் சங்க இலக்கியங்கள் காட்டும் திருமண முறை வைதீக திருமணம் தான், இரண்டாவதாக இவர்கள் சொல்லும் “தாலி” என்பது வைதீக தொடர்புடையது அல்ல,
வேதவழி வைதீக திருமணங்களில் தாலி கிடையாது என்பதால் பகுத்தறிவாளர்கள் தாலி குறித்து கொண்டுள்ள கருத்து ஆராய்ச்சி இல்லாத அறைவேக்காட்டுத்தனம்.
சங்கத்தமிழ் இலக்கியங்களில் திருமணம் மற்றும் சடங்குகள் குறித்து என்னதான் சொல்லியுள்ளது பார்ப்போமா...
தொல்காப்பியம் என்பது பழமையான தமிழ் இலக்கண நூல். திருமணங்களை இரு வகையாக கூறுகிறது இந்நூல். அதாவது கற்புத்திருமணம், “கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன், கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே“ (தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல்-1)
இரண்டாவது “களவுத்திருமணம்” அதாவது மணப்பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமல் தலைவன் தன் ஊருக்குப் பெண்ணை அழைத்துச் சென்று செய்து கொள்ளும் திருமணம். களவுத் திருமணத்தினை தொல்காப்பியம் கற்புத்திருமணமாகச் சொல்லவில்லை, “கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான” (தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் 2)
ஆனால் கற்புத்திருமணமானாலும், களவுத்திருமணமானாலும் திருமணச்சடங்குகள் உண்டு என்கிறது தொல்காப்பியம்.
வர்ணங்கள் நான்கு என்பதையும் அதில் கீழ் மேல் உண்டு என்றும், அந்தணர் அரசர் வணிகர் என்னும் மூவர்க்கும் ஏற்பட்ட சடங்குகள் அவர்கட்கு கீழ்பட்டவர்களுக்கும் அதே சடங்குகள் உண்டு என்கிறது சங்கத்தமிழ் இலக்கியம் “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே” (தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் 3)
திருமண சடங்குகளில் தற்போது முக்கியமானதாக கொள்ளப்படுவது “மாங்கல்யதாரணம்” அதாவது தாலிகட்டும் / அணிவிக்கும் சடங்குக்கு “மாங்கல்யதாரணம்” என்று பெயர். அதற்காகத்தான் “முகூர்த்த லக்னம்” குறிக்கப்படுகிறது, ஆனால் பெண் கழுத்தில் தாலி கட்டும்படி வேதம் சொல்லவில்லை. “மாங்கல்யம் தந்துநாநேந” எனத்துவங்கும் தாலி கட்டும் போது சொல்லப்படும் மந்திரம் வேதமந்திரம் இல்லை. இது ஒரு ஸ்லோகம் மட்டுமே .
வேத மந்திரங்கள் எந்தஎந்த கர்மங்களில் கூறவேண்டுமோ அவைகளை ஸூத்திரக்காரரான ஆபஸ்தம்பர் இயற்றிய க்ருஹ்ய ஸூத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் அதில் மாங்கல்ய தாரணத்தின் போது சொல்லப்படும் மாங்கல்யம் தந்துநானேன என்ற வரிகள் இல்லை ஏனென்றால் அது வேத மந்திரம் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை.
மேலும் இன்றும் நீங்கள் வைதீக திருமண பத்திரிகையில் பார்த்தால் பாணி கிரஹணம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும் அதாவது கையைப் பிடிப்பது இது விவாத்தினை குறிப்பது. ஸ்ரீ ராமாயணத்தில் ஜனகர் ஸ்ரீ ராமரிடம் சீதையை பாணிக்ரஹணம் செய்து கொள்ளுமாறுதான் கேட்கிறார்.
வேத மந்திரங்கள் எந்தஎந்த கர்மங்களில் கூறவேண்டுமோ அவைகளை ஸூத்திரக்காரரான ஆபஸ்தம்பர் இயற்றிய க்ருஹ்ய ஸூத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் அதில் மாங்கல்ய தாரணத்தின் போது சொல்லப்படும் மாங்கல்யம் தந்துநானேன என்ற வரிகள் இல்லை ஏனென்றால் அது வேத மந்திரம் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை.
மேலும் இன்றும் நீங்கள் வைதீக திருமண பத்திரிகையில் பார்த்தால் பாணி கிரஹணம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும் அதாவது கையைப் பிடிப்பது இது விவாத்தினை குறிப்பது. ஸ்ரீ ராமாயணத்தில் ஜனகர் ஸ்ரீ ராமரிடம் சீதையை பாணிக்ரஹணம் செய்து கொள்ளுமாறுதான் கேட்கிறார்.
வேதம் சொல்லாத தாலி காட்டும் பழக்கத்தினை வேதநெறி எனத் தவறாக எண்ணிய, பகுத்தாராயாத பகுத்தறிவு அட்டைகத்திகள் தாலி, பிராமணீய சடங்கு என்றும், தாலி அடிமைச்சின்னம் என்றும் பேசி வந்தன. இதில் மேலும் வேடிக்கை என்னவெனில் பெண்சுதந்திரம் பற்றி பேசும் பலரும் இதற்கு ஆராய்சி இல்லாது ஆமாம் சாமி போடுவது.
அப்படியானால் “தாலி” யாருடைய பழக்கம்? யாருடைய சடங்கு?
தமிழ்நாட்டு மக்களின் பழக்கம்தான் தாலி, தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய, கிறிஸ்துவ, மதத்தினரிடையேயும் கூட, இன்றும் தாலி அணிவிக்கும் பழக்கம் காணப்படுகிறது. உலகமெங்கும் பரவியுள்ள இஸ்லாமிய கிறிஸ்துவ மதத்தினரிடையே மதபிடிமானம் அதிகம். ஆனால் உலகில் வேறு எங்கும், ஏன் பாரத தேசத்திலேயே கூட தமிழகம் அல்லாத மற்ற மாநிலங்களில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள் என அனைவரிடமும் காணப்படாத தாலி என்னும் சடங்கு தமிழகத்தில் மட்டும் அனைத்து ஜாதி, மதத்தினரிடமும் காணப்படுகிறது.
“கருமணித்தாலி” தமிழக இஸ்லாமியர்களிடையே, ”சிலுவைத்தாலி“ தமிழக கிருஸ்துவர்களிடையே, “தங்கத்தாலி” பிராமணர் அல்லாதவர்களிடையே பிராமணர்களிடையே தமிழகத்தின் கலாசார அடையாளமான தாலி மட்டும் இரண்டு தாலியாக அணிவிக்கப்படுகிறது, ஆம்! பெண் வீட்டினர் சார்பில் ஒன்று மாப்பிள்ளை வீட்டின் சார்பில் ஒன்று எனத் தமிழ் கலாச்சாரத்தினை மற்றவர்களைவிட ஒருபடி மேல் சென்று போற்றுகின்றனர் பிராமணர்கள்.
தேவையற்ற தாலி அறுப்பு போராட்டங்களை அதாவது தமிழ் கலாச்சாரத்தினை புரியாமல் எதிர்க்கும் பழக்கமும், விபரம் புரியாது “பிராமணீயம்” என்று முத்திரை குத்தி வெறுக்கும், எதிர்க்கும் முட்டாள்தனத்தினையும் பகுத்தறிவு அட்டைகத்திகள் கைவிடவேண்டும்.
தங்கத்தாலான தாலியில் தான் வேட்டையாடி கொன்ற புலிப்பல்லினையும், ஒலிக்கும் மணிகளையும் இணைத்து உருவான தாலி அணிந்தவள் பற்றிய குறிப்பு அகநானூறு 7ஆம் பாடலில் 17, 18 வரிகளில் “ பொன்னோடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி “ என உள்ளது.
“ஈகை யரிய இழையணி மகளிர்” என புறநானூறு தாலி பற்றிய குறிப்பை காட்டுகிறது. தமிழ் சங்க இலக்கியங்கள் தாலி பற்றியும் அது தமிழ்நாட்டின் பண்டைய கலாசாரம் என்றும் தெளிவாக்குகிறது.
திருமணத்திற்கு நாள் நட்சத்திரம் பார்த்தல் தமிழ் சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ளது “தீய கோள்களின் தொடர்பு நீக்கிய வளைந்த வெண்மையான சந்திரனைக் கேடற்ற சிறந்த புகழினையுடைய உரோகிணி என்னும் நாள்வந்து அடைந்த நல்ல நாள் அது” என்று மணநாள் பற்றி பதிவு செய்கிறது “கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென” அகநானூறு 86வது பாடல் 6,7 வரிகள்.
அந்த தெளிந்த ஒளியையுடைய திங்களை உரோகிணி கூடியதனால் எல்லாத்தோஷமும் நீங்கிய சுபநாள் சேர்க்கையில் திருமண வீட்டை அலங்கரித்துக் கடவுளைப்பேணி என்பதாக திருமணத்திற்கு நல்லநாள் பார்த்தல் முதல் கடவுளை வணங்குதல் வரை உள்ள நிகழ்வுகளை பதிவுசெய்கிறது “புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள் ஒளி அம்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக் கடினர் புனைந்து கடவுட் பேணிப்” அகநானூறு 136வது பாடலின் 3-6 வரிகள்
மணப்பெண்ணை ”வது” என்று அழைப்பது வழக்கம் இந்த சொல் பிராமணர்களிடையே வழக்கில் உள்ள வடமொழி சொல் “வதுவை நன்மணம்” என்கிறது அகநானூறு 86-17வது வரி. வது என்னும் சொல் பருவம் அடையாத கன்னிப்பெண்ணை குறிக்கும், அகநானூறு மூலம் இன்று பலராலும் ஏன் சாரதா தடுப்பு சட்டத்தாலும் தடை செய்யப்பட்டுள்ள “குழந்தை திருமணமே” வைதீக முறைபடியும் தமிழ் மரபுபடியும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
திருமணத்தின் சம்ஸ்க்காரங்களில் ஒன்றான முதலிரவு எனப்படும் ‘சாந்திமுகூர்தம்” அன்று பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்படும் புடவையை பெண் அணிவித்துக்கொள்வது இன்றும் பிராமணர்களிடையே உள்ளது. இந்த புடவைக்கு “கோடிப்புடவை” எனப்பெயர். ஸ்ரீ ஆண்டாளும் தனது நாச்சியார் திருமொழியில் “மந்திரக்கோடியுடுத்தி” (6-3) எனத் தனது திருமண நிகழ்வை பதிவு செய்கிறாள். இந்த வைதீக நெறியினையே அகநானூரில் சங்க தமிழக / தமிழர் திருமண மரபாகவும் பார்க்க முடிகிறது.
முதலிரவின் அறையில் மணமாகிய பெண் முதுகினை வளைத்துக் கொண்டவளாக குனிந்தபடி கோடிப்புடவைக்குள்ளே அவள் நாணமுடன் இருந்ததை “கொடும்புறம் வளைஇக், கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த” அகநானூறு (86 – 21,22) விவரிக்கிறது.
தமிழ்வழி / தமிழர்வழி / சங்க இலக்கியம் காட்டும் திருமணம் வேதநெறி கொண்ட திருமணங்கள் தான். சங்ககாலம் முதல் நடந்துவரும் வைதீக திருமணத்தினை எதிர்ப்போர் சங்க இலக்கியத்தினையும், உண்மையான தமிழ் கலாச்சாரத்தினையும் எதிர்ப்பவர்கள் என்னும் பழியை ஏற்க நேரிடும். தமிழர் நெறியே வைதீக நெறிதான்.