New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈவெ ராமசாமி நாயுடுவின் சுயசாதி வெறி -கீழ்வெண்மணி படுகொலை அம்பலப்படுத்தும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
ஈவெ ராமசாமி நாயுடுவின் சுயசாதி வெறி -கீழ்வெண்மணி படுகொலை அம்பலப்படுத்தும்
Permalink  
 


https://www.facebook.com/ramkumar.thakkurajaram/videos/3583289241697260/?t=110

கீழ்வெண்மணி படுகொலை அம்பலப்படுத்தும் ஈவெ ராமசாமி நாயுடுவின் சுயசாதி வெறி -அதிர்ச்சி தரும் நாயுடுவின் அறிக்கை!!!

சோழ நாடு சோறுடைத்து, யானை கட்டை போரடித்த தஞ்சை, தமிழ் நாட்டின் நெற் களஞ்சியம் என்றெல்லாம் புலவர்களாலும், இலக்கியங்களாலும், வரலாற்றாலும் போற்றி புகழப்பட்ட தஞ்சை எழுதி, மறைத்து விட்ட, அதன் கருப்பு அத்தியாயமே கீழ் வெண்மணி படுகொலைகள்! 1968 கிறித்துமஸ் தினத்தன்று அரை மரக்கா நெல்லை கூடுதல் கூலியாக கேட்டு போராடியதற்காக, நிலச்சுவான்தார் கோபால கிருஷ்ண நாயுடுவும், சக நிலப் பிரபுக்களும் சேர்ந்து கண்மூடித்தனமாக சுட்டு, தப்ப இயலாத பெண்களையும், குழந்தைகளையும் அவர்கள் தஞ்சம் அடைந்திருந்த குடிசையோடு பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நிகழ்வே அந்த கீழ் வெண்மணி படுகொலைகள். இறந்தவர்களில் 20 பேர் பெண்கள், இரண்டு பேர் கர்ப்பிணிகள்; 19 பேர் சிறுவர்கள், 13 வயதிற்கும் குறைவானவர்கள், ஒருவர் 70 வயது பெரியவர். மொத்தம் 44 பேர் படுகொலை செய்யப்பட்டனர்!

தீயிலிருந்து வெளியே ஓடிவந்த குழந்தையை மீண்டும் அதே நெருப்புக்குள் வீசிய கொடுஞ் செயலும், கரிக்கட்டையாகி கிடந்த பெண்ணின் மார்போடு ஒரு குழந்தை அணைக்கப்பட்டு இருந்ததும் சீன வானொலி மூலம் உலகெங்கும் பரவியது. அந்த கோபால கிருஷ்ண நாயுடு இன்று பெரியார் என்று புனையப்படும் ஈவே ராமசாமி நாயுடுவின் உற்ற நண்பர். ஈவெரா தஞ்சை பகுதிக்கு செல்லும் போதெல்லாம் கோபால கிருஷ்ண நாயுடுவின் பண்ணையில்தான் தங்குவது வழக்கம். ஈவேரா, அவர் வீட்டில் தங்கி இருந்து அப்பகுதிகளில் கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு பயிற்சி பட்டறைகள் நடத்தி இருக்கிறார். அந்த நாயுடு நடத்திய வெறியாட்டம் குறித்து ஈவே ராமசாமி நாயுடு விடுதலை ஏட்டில் வெளியிட்ட பேரதிர்ச்சி தரும் அறிக்கை பெரும்பாலும் வெளி உலகுக்கு கிட்டாதவாறு தணிக்கை செய்யப்பட்டு மறைக்கப்பட்டு இருந்தது. அதை அறிந்த ஒரு சிலரும் (ஈவெரா ரசிக போராளிகளும்) வெற்று ஆட்சேபத்துடன் அதை எளிதாக கடந்து சென்றார்கள்!

ராமசாமி நாயுடு வெளியிட்ட அறிக்கையின் சாரம் இதுதான். அப்பாவி விவசாய கூலிகளை தூண்டி விட்டு கம்யுனிஸ்டு காலிகள் அவர்களை சாகடித்து விட்டார்கள். அரசுகளின் ஸ்திரத்தன்மையை கெடுக்க கம்யுனிஸ்டுகள் இந்த காலித்தனத்தை செய்கிறார்கள். திராவிட இயக்கத்தையும், காங்கிரஸ் கட்சியையும் தவிர்த்து மற்ற கட்சிகளை தடை செய்ய வேண்டும், முக்கியமாக கம்யுனிஸ்டுகளை தடை செய்ய வேண்டும். பார்ப்பனர்கள் இருக்கும் வரை சாதி கலவரங்களை தடுக்க முடியாது, மனித சமுதாயத்தில் ஒழுக்கம் கெட்டு விட்டது, காந்தி கெட்டவர். தமிழ் நாட்டை மீண்டும் வெள்ளைக்காரன் ஆள வேண்டும். மேலும், புதிய பொதுவுடமை தத்துவமாக ஒன்றை சொல்கிறார், அதாவது கூலியை உயர்த்துவதால் அடிமைகளின் வாழ்வு சிறக்காது, ஏனெனில் முதலாளிகள் கூலியை உயர்த்திவிட்டு, பொருட்களின் விலையையும் உயர்த்தி விடுவார்கள். எனவே, கூலி கேட்டு போராடுவது வீணான முட்டாள் தனம்.

 

இப்படியாக அந்த பச்சை படுகொலைக்கு காரணமாக ஏவாள் ஆப்பிளை கடித்ததில் துவங்கி, நெற்கதிரை சேதப்படுத்தும் பொகையான் வரை விமர்சித்து குற்றம் சாட்டும் திரு. ராமசாமி நாயுடு, மருந்துக்கும் கோபால கிருஷ்ண நாயுடு பெயரையோ, ஆதிக்க சாதி வெறியாட்டத்தையோ கண்டிக்கவில்லை. மாறாக, கீழ்வெண்மணி படுகொலைகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாத விடயங்களை அறிக்கை என்ற பெயரில் திரு. நாயுடு அவர்கள் பிதற்றுவது திராவிட வரலாற்றின் துவக்கமே இப்படித்தான் இருந்திருக்கிறது என்பதையும், ஈவெராவின் உண்மையான மாணவர்கள்தான் இன்றைய கருணாநிதி வகையறாக்கள் என்பதையும் பறைசாற்றுகிறது. அந்த அறிக்கை இதோ கீழே...

I. கீழ் வெண்மணிக் கொடுமைகளைத் தடுக்கும் வழிமுறைகள் (‘விடுதலை' 28.12.1968)

ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது. காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி(த்தான்) ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது! சட்டம் மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் கார்யத்தை சாதித்துக் கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் விட்டார்கள்.

‘புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன' மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக்கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆக வேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது. எந்த மனிதனும் ‘அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத' நிலை ஏற்பட்டு விட்டது. ‘சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்தியாகவும் மற்றும் மந்திகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும்' என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகி விட்டது. இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்று கூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன.

அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால்: 1. காந்தியார் கொல்லப்பட்டார், 2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன, 3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர், 4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும், நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன, 5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டு கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட கார்யங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான கார்யங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற கார்யங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது. சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதி ஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுய நலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள். அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் அமைச்சர்கள் ‘நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதி ஸ்தலங்களும், நீதிபதிகளும் ‘எங்களுக்கு மேலாக' இருப்பதால் எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை' என்கிறார்கள்.

மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றத்தன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள். அவற்றைக் கண்டுபிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதி ஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதி ஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.


II. இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம்தான் கோலோச்சும்

பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம்' இருந்து வருகிறது.

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு, 'அரச நாயகம்' ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்' ஆட்சி புரிகிற வரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனிததர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும். அதுவும் ரஷ்ய ஆட்சி அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும்; அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையரின் ஆட்சிதான் வேண்டும்.

அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்று போலத்தான் இருக்கும், இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது 1. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும். 2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும். 3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும்.

அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய - பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும். பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும். முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக்கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையென்றும் திட்டம் செய்துவிட வேண்டும்.

எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும். இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில், இந்த நிலையில் எப்படி இருந்தாலும் ‘நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும்' என்பது, அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும். "Patriotism is the last refuge of a scoundrel'' -"தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்'' -ஜான்சன்

(கீழ்வெண்மணியில் தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை ‘விடுதலை' 28.12.1968)

நன்றி: தலித் முரசு

 https://www.facebook.com/notes/krishna-muthukumarappan/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/706960362700540/

நன்றி: தலித் முரசு

 

PS: தலித்துகள் கொல்லப்பட்டார்கள் என்பதையோ, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் மீது திராவிட சூத்திரர் நடத்திய தாக்குதல் என்பதையோ நுட்பமாக தவிர்த்து விட்டு இருக்கிறார். இதை கண்டன அறிக்கை என்று யார் சொல்வார்? பகுத்தறிவு பகலவன் ஒரு வேக்காடு இல்லாத ஆலோசனையை, தீர்வை முன்வைக்கிறார். இந்த இடத்தில் கோபால கிருஷ்ண நாயுடுவின் பெயர் கோபால கிருஷ்ண ஐயராக இருந்திருந்தால் ஈ வே ராமசாமியின் அறிக்கை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதுவும் தன்னுடைய இறுதி அந்திம காலத்தில் எழுதிய அறிக்கையாதலால், நாயுடு அவர்கள் தன வாழ்நாள் இறுதிவரை சாதி ஒழிப்பில், தலித்துகள் மீதான பார்வை போன்றவற்றில் கொண்டிருந்த உண்மையான நிலைப்பாடு தெளிவாகிறது. இவரா பெரியார், யாருக்கு பெரியார்?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard