ஹெரோடடஸ் வரலாற்றின் தந்தை என அறியப்படுபவர். பொது நூற்றாண்டு தொடங்குவதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் (500 BCE) இருந்தவர். இவர் எழுதிய ‘வரலாறுகள்’ புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. எந்த இனம் பழைய இனம் என்பதை ஆராய்ச்சி செய்த எகிப்திய ஃபாரோ ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் இப்புத்தகத்தில் தருகிறார். இரண்டு பிறந்த குழந்தைகளை ஆடு மேய்ப்பவரிடம் கொடுத்து மொழிப் பரிச்சயமே இல்லாமல் ஃபாரோ வளர்க்கச் சொன்னார். அவர் ஒழுங்காக வளர்க்கிறாரா என்பதும் கண்காணிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து குழந்தைகள் ஒருநாள் ‘பெக்கோஸ்’ என்று சொல்லிக் கொண்டு ஓடி வந்தன. ஃபாரோ ‘பெக்கோஸ்’ என்ற சொல்லுக்கு ஃப்ரீஜியன் மொழியில் ரொட்டி என்று பொருள் என்பதை அறிந்தார். எனவே ஃப்ரீஜியன் இனம் எகிப்திய இனத்தை விட முந்தையது என்ற முடிவிற்கு வந்தார்.
இச்சோதனை அறிவுப்பூர்வமானது என்று சொன்னால் இன்று நம்ப முடியுமா? ஏன் நம்பக் கூடாது? முதலாவது, இது யாரோ சொன்ன கதை. இரண்டாவது, குழந்தைகள் சொன்னது ‘பெக்கோஸ்’தான் என்பதும் மேய்ப்பவர் சொல்லித்தான் தெரிகிறது. இது போன்ற ஆதாரங்களை வைத்துக் கொண்டு எந்த முடிவிற்கும் வர முடியாது என்றுதான் இன்றைய அறிவியலை அறிந்தவர்கள் சொல்வார்கள் ஆனால் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் ஹெரோடடஸ் பேசுவதைப் போல தமிழில் சில அறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பில் தொலைக்காட்சிகளில் மொழிகளின் பழமையைப் பற்றி அவர்கள் உளறுவதைக் கேட்டால் தமிழ்நாட்டில் அறிவுப்பூர்வமான விவாதங்கள் நடைபெற என்றும்வாய்ப்பே இல்லை என்ற உணர்வுதான் மேலோங்குகிறது.
தமிழ் உலகிலேயே மிகப் பழமையான மொழியா? அல்லது சமஸ்கிருதம் என்று அறியப்படும் வடமொழி உலகிலேயே மிகப் பழமையான மொழியா? அல்லது பிராகிருதம் பழமையான மொழியா?
மொழி என்றால் என்ன?
நம் எல்லோருக்கும் எழுத்துக்கு முன் பேச்சு வந்து விட்டது என்பது தெரியும். எப்போது மனிதன் பேசத் தொடங்கினான்? சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் முன்னால் இருக்கலாம் என வல்லுனர்கள் கருதுகிறார்கள். மனித குலம் ஹோமோ சேபியன்ஸ் என்று அறியப்படும் நிலையை அடைய பல லட்சம் ஆண்டுகள் ஆயின என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால். ஒரு லட்சம் ஆண்டுகள் என்பது மிகவும் சமீபத்தியது. மனிதன் எழுதுவதற்கு முன்னால் வரையத் துவங்கி விட்டான். அவன் விட்டுச் சென்ற மகத்தான ஓவியங்களை – நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை – இன்றும் காணலாம். இதற்கு அடுத்தபடியாக அவன் தான் கொன்ற மிருகங்கள் எத்தனை என்பதற்குக் கணக்கு (மரத்திலோ அல்லது எலும்பிலோ செதுக்கி) வைத்துக் கொள்ளத் துவங்கினான். இம்முறை தோன்றி சுமார் முப்பதாயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன. அடுத்த வளர்ச்சியாக குறியீடுகள் பிறந்தன. களிமண் வடிவங்களால் அவன் குறியீடுகளைச் செய்யத் துவங்கினான். உதாரணமாக பந்து வடிவம் ஆட்டைக் குறிக்கலாம். மூன்று பந்துகள் மூன்று ஆடுகளைக் குறிக்கலாம். இவ்வாறு துவங்கித்தான் எழுத்திற்கும் பேச்சிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு மொழிகள் வளர்ச்சியடைந்தன. அவை இருபரிமாணங்களில், சுவர் களிமண் சதுரம் போன்ற தளங்களில், எழுதப்படத் துவங்கின. தரப்படுத்தப்பட்ட எழுத்துக்கள் உருவாக பல நூறாண்டுகள் எடுத்திருக்க வேண்டும். உதாரணமாக நான் இங்கு ஆடு என்று தமிழில் எழுதினால் இதைப் படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் நான் குறிப்பிடுவது ஆடு என்று உடனே புரிந்து விடும். அதை மாடு என்று தவறாக யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு தரப்படுத்தப்பட்ட எழுத்துக்களைக் கூட்டாகச் சேர்த்து எழுதுவது பிறந்து அதிக ஆண்டுகள் ஆகி விடவில்லை. சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் அவை பிறந்தன.
மிகச் சமீப காலம் வரை உலகில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்தாம் அதிகம் இருந்தார்கள். எல்லா நாகரிகங்களிலும் எழுத்து என்பது சமூகத்தின் உயர்நிலையில் இருந்தவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. 1820ல் உலகில் 12% சதவீத மக்கள் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். 15ம் நூற்றாண்டு பிரான்சில் 6% மக்கள் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். இந்தியாவிலும் இதை விட அதிகமாக இருக்க வாய்ப்பே இல்லை. அச்சடித்த புத்தகங்கள் பரவலாக வந்தபிறகுதான் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் அதிகமானார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன்வரை குறைந்த பட்சம் 95% இந்தியர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சதவீதத்தினருக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் அது ஆச்சரியம். தமிழகத்திலும் இதே நிலைமைதான் இருந்திருக்க வேண்டும். காதால் கேட்பதை மனதில் வாங்கி அதைத் திரும்பச் சொல்வதுதான் பலருக்குக் கல்வியாக இருந்திருக்க வேண்டும்.
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் முன்னால் பேசத் துவங்கிய நாம், எழுத்துக்களை கிட்டத்தட்ட முழுவதும் நமதாக்கிக் கொண்டது மிகச் சமீபத்தில்தான். உரசிக்கொள்ளும் தூரம்தான்.
உலகின் பழைய மொழிகள் யாவை?
தமிழ் முதல்முதலாக எப்போது பேசப்பட்டது என்பதற்கு நம்மிடம் எந்தத் தரவுகளும் இல்லை. நமக்குக் கிடைத்திருக்கும் தமிழின் எழுத்து வடிவங்கள் என்று அறியப்படுபவை சுமார் 2300 ஆண்டுகள் பழமையானவை. 2500 ஆண்டுகள் என்றும் சிலர் சொல்கிறார்கள். எகிப்து மொழி எழுத்துக்கள் கொண்ட கல்லறைகள் அந்நாட்டில் தடுக்கி விழுந்தால் கிடைக்கின்றன். இவை மிகப்பழமையானவை. பல இன்றைக்கு 4700 ஆண்டுகளுக்கு (2700 BCE) முந்தையவை. அதாவது தமிழுக்கு 2200 ஆண்டுகள் பழமையானவை. இந்த 2200 ஆண்டுகளில் உலகெங்கும் சுமார் இருபத்து ஐந்து மொழிகளில் எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் நமக்குப் பரிச்சயமான பழைய மொழிகளான எகிப்து, சுமேரியன், சீனம், அராமிக், ஹீப்ரூ, ஃபோனிஷியன், ஹிட்டைட், அக்கேடியன், கிரேக்கம் போன்ற மொழிகள் அடங்கும். இவற்றில் எழுதப் பட்டிருப்பவற்றில் பல வரலாற்றுத் தகவல்களைத் தருபவை. அக்கேடியன் மொழியில் 3800 ஆண்டுகளுக்கு முன்னால் பதிக்கப்பட்ட ஹம்முராபியின் சட்டம் (code of Hammurabi) 282 சட்டங்களை எழுத்து வடிவில் தந்திருக்கிறது.
தமிழ் மொழி குமரிக்கண்டத்தில் செழித்து வளர்ந்து கொண்டிருந்த்து அதன் இலக்கியச் செல்வங்களைக் கடல் அழித்து விட்டது போன்ற கதைகளை யாரும் நம்ப மாட்டார்கள். இதே போன்ற கடலால் அழிக்கப்பட்ட கதைகள் உலகெங்கும் புழங்கி வருகின்றன. எந்த மொழிக்கும் இக்கதையைச் சொல்லி அதன் பழமையை நிறுவலாம்.
எனவே இன்று வரை கிடைத்திருக்கும் எழுதப்பட்ட மொழிகளைப் பற்றிய தரவுகளின் அடிப்படையில் தமிழ் உலகின் மூத்த மொழியில்லை என்று உறுதியாகக் கூற முடியும். முதல் இருபத்து ஐந்தில் கூட வருமா என்பது சந்தேகம்தான். தமிழ்மொழிதான் உலகில் முதலில் பேசப்பட்ட மொழி என்று சொல்லலாமா? சொல்லலாம். ஆனால் அது அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படாது. நமக்குள்ளே சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.
இதே போன்று சமஸ்கிருதமும் உலகின் பழமையான மொழி என்று சொல்ல முடியாது.
இந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் எவை?
மொழிகளைப் பற்றிப் பேசும் முன்னால் நாம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். பண்டைய வரலாற்றைப் பொறுத்த அளவில் சான்றுகள் என்று நமக்கு அளிக்கப்படுபவற்றில் பல எதையும் ஆணித்தரமாக நிறுவ உதவுவதில்லை. வேறு ஏதும் கிடைக்காததால் இவற்றைக் கட்டி அழ வேண்டியிருக்கிறது. இவற்றைப் போன்ற சான்றுகளை அறிவியற் துறைகளில் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார்கள். எனவே சான்றுகள் கிடைத்து விட்டன, தமிழ் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழி, சமஸ்கிருதம் உலகிலேயே மூத்த மொழி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மேலும் கீழும் குதிப்பது நகைப்பிற்குரியது. பெரும்பாலான சான்றுகள் இப்படி நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று சொல்வதற்கு உதவியாக இருக்கின்றனவே தவிர, இப்படித்தான் நடந்தது என்று அறுதியாக நிறுவுவதற்கு உதவுவதில்லை. உலகம் முழுவதும் இதே கதை என்றாலும் இந்தியாவில் பண்டையக்காலத்தைக் குறித்து கிடைக்கும் சான்றுகள், எல்லோராலும் ஏற்கத்தக்க சான்றுகள் மிகவும் குறைவு. இந்திய வரலாற்றில் குறிப்பாக கால ஆராய்ச்சியும், மொழி ஆராய்ச்சியும், யார் எங்கிருந்து எங்கு சென்றார்கள் என்பது பற்றிய ஆராய்ச்சியும் பெரும்பாலும் ஊகங்களில் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. அவை துறை வல்லுனர்களால் ஒப்புக்கொள்ளக் கூடிய ஊகங்களாக இருக்கலாம், அல்லது ஆமைகளைத் தொடர்ந்து தமிழன் உலகம் முழுவதும் சென்றான் போன்ற ஊகங்களாக இருக்கலாம்.
அறிவியல் என்ன சொல்கிறது?
தொல் இந்தியர்கள் என்று அறியப்படுபவர்கள் சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு சேர்ந்தடைந்தவர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பியவர்கள். நம் மரபணுக்களில் ஐம்பதிலிருந்து அறுபது சதவீதம் மரபணுக்கள் தொல் இந்தியர்களைச் சார்ந்தவை என்று சோதனைகள் சொல்கின்றன. நமது பழங்குடி மக்களிடமிருந்து, தாங்கள் மிகவும் சுத்தமான பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வரை இது பொருந்தும்.
அறிவியல் சான்றுகளைக் கொண்டு வல்லுனர்கள் செய்யும் ஊகங்கள் என்ன?
இந்தியாவிற்கு வடமேற்கிலிருந்து வந்தவர்கள் (குறிப்பாக ஸக்ரோசியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் –இரான், தென்கிழக்கு துருக்கி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்) தொல் இந்தியர்களுடன் கலந்து ஹரப்பா நாகரிகத்தை அமைத்தார்கள். இவர்களே தெற்கே வந்து இங்குள்ள தொல் இந்தியர்களுடன் கலந்து இன்று தென்னகத்தில் பரவலாக இருக்கும் தொல் தென்னிந்தியர்களாக (Ancestral South Indian) உருவானார்கள். இதே போன்று வட இந்தியாவிலும் இங்கிருப்பவர்களும் இன்று காகேசியர்கள், ஐரோப்பியர்கள், மத்திய ஆசியர்கள் என்று அழைக்கப்படுப்வர்களும் கலந்ததால் தொல் வட இந்தியர்களாக (Ancestral North Indians) உருவானார்கள். (இந்தியாவின் உயர்சாதி என்று அறியப்படுவர்களிடம் தொல் வட இந்தியர்களின் மரபணுக் கூறுகள் அதிகம் இருக்கின்றன, மற்றவர்களிடம் தொல் தென்னிந்தியர்களின் கூறுகள் அதிகம் இருக்கின்றன என்பதும் அறிவியல் பூர்வமாகத் தெரியவருகிறது).
இந்தச் செய்தி முக்கியமான ஒன்றைச் சொல்கிறது. திராவிடர்கள் என்று நாம் இன்று சொல்லிக் கொள்ளும் தொல் தென்னிந்தியர்களும் வந்தேறிகள் பரம்பரைதான். இவர்கள் முன்னால் வந்தார்கள். தொல் வட இந்தியர்கள் பின்னால் வந்தார்கள். அவ்வளவுதான்.
தொல் இந்தியர்கள் இந்தியாவிலிருந்து மற்ற இடங்களுக்கு பரவியிருக்க முடியாதா?
முடியாது என்றுதான் அறிவியற் தரவுகள் சொல்கின்றன. தொல் இந்தியர்களின் மரபணுக் கூறுகள் இந்தியாவிற்கு வெளியே அனேகமாக இல்லை.
இனி மொழிகளுக்கு வருவோம்.
இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் பேசும் மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளைச் சார்ந்தவை. சுமார் இருபது சதவீத்த்தினர் திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். திராவிட மொழிகள் தொல் திராவிட மொழியிலிருந்து பிறந்தவை.
தொல் திராவிட மொழி எங்கிருந்து வந்தது?
தெற்கே வந்த தொல் தென்னிந்தியர்கள் தங்களோடு மொழியையும் கொண்டு வந்திருக்கலாம். சில ஆராய்ச்சியாளர்கள் இம்மொழி ஸாக்ரோசியப் பகுதியிலிருந்து வந்த்து என்று கருதுகிறார்கள். தொல் ஸாக்ரோசிய மொழி தொல் எலாமைட் மொழியாவும் தொல் திராவிட மொழியாகவும் பிரிந்தன. இதில் எலாமைட் மொழியிலிருந்து ப்ராஹுய் வந்தது (தொல் திராவிடத்திலிருந்து அல்ல). தொல் திராவிட மொழி தொல் வட திராவிட மொழியாகவும் தொல் தீபகற்பத் திராவிடமொழியாகவும் பிரிந்தது. குருக் மொழியும் மால்டோ மொழியும் (மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மாநிலங்களில் பேசப்படுபவை) தொல் வட திராவிட மொழியிலிருந்து பிறந்தன. தமிழ் போன்ற மொழிகள் தொல் தீபகற்ப திராவிட மொழியிலிருந்து பிறந்தன.
தொல் ஸார்கோசிய மொழி
|
தொல் எலாமைட் – தொல் திராவிடம்
| |
ப்ராஹூய் வட திராவிடம் – தீபகற்ப திராவிடம்
| |
குருக் மற்றும் தமிழ், தெலுங்கு
மால்டோ மற்றைய மொழிகள்
தமிழனின் மூதாதையர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள், தமிழ்மொழியின் தாய்மொழியும் வெளியிலிருந்து வந்ததுதான் என்று இம்மொழியியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்!
வேத சமஸ்கிருதமும் வெளியிலிருந்து வந்ததுதான். வேத சமஸ்கிருதத்திற்கும் மூலமொழி இந்தோ-இரானியன் மொழி. இது அவெஸ்தா மொழியாகவும் வேத சமஸ்கிருதமாகவும் பிரிந்த்து என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். சொல்லப்போனால் தமிழ் வெளியிலிருந்து வந்தது என்பதற்குக் கிடைத்திருக்கும் சான்றுகளை விட, சமஸ்கிருதம் வெளியிலிருந்து வந்தது என்பதற்குக் கிடைத்திருக்கும் சான்றுகள் அதிகம்.
சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மொழி என்ன?
சிந்துச் சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் 2600-1900 BCE காலகட்டத்தில் தழைத்திருந்தது என்று வரலாறு சொல்கிறது. இன்றுவரை சிந்துச் சமவெளி நாகரிகத்தின் எழுத்துகள் என்ன சொல்கின்றன என்பதை யாராலும் அறிய முடியவில்லை. அது எழுத்துக்களே இல்லை, வெறும் வடிவங்கள்தாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எழுதப் படிக்கத் தெரியாத மக்களிடையேயும் பெரிய நாகரிகங்கள் வளர்ந்து செழிக்க வாய்ப்பு இருக்கின்றன என அவர்கள் கருதுகிறார்கள். தமிழ் மொழியின் வரலாற்றை எழுதிய டேவிட் ஷுல்மான் அது திராவிட மொழியாக இருக்க முடியாது என்று கருதுகிறார். ஆனால் பல ஆராய்ச்சியாளர்கள் அது திராவிட மொழிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். அவர்களில் திரு ஐராவதம் மகாதேவன் ஒருவர்.
மகாதேவன் சொல்கிறார்.
1. சிந்துச் சமவெளி நாகரிகம் நகரத்தைச் சார்ந்தது; வேதகால ஆரிய நாகரிகம் மேய்ப்பர்கள் உலகத்தைச் சார்ந்தது
2. குதிரைகளே இல்லாதது, சிந்துச் சமவெளி நாகரிகம், ஆனால் வேதங்கள் குதிரைகளைப் பற்றியும் தேர்களைப் பற்றியும் பேசுகின்றன.
3. சிந்துச் சமவெளி முத்திரைகளில் புலிகள் காணப்படவில்லை. புலியைப் பற்றி எந்தப்பதிவும் ரிக்வேதத்தில் இல்லை.
இச்சான்றுகளால் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் இல்லை என்று நிறுவலாம். ஆனால் அதன் மொழி திராவிட மொழி நிறுவ என்று அவர் கடைசிவரை முயன்றார். ஆனால் முடியவில்லை.
ராகிகடி (Rakhigarhi) என்ற இடத்தில் கிடைத்த ஹரப்பா காலத்திய எலும்புக்கூட்டின் மரபணுக் கூறுகள் ஸாக்ரோசிய விவசாயிகளுக்கும் ஹரப்பாவில் இருப்பவர்களும் இடையான கலப்பு என ஆராய்ச்சி நிறுவுகிறது என்று ‘பழங்காலத்திய இந்தியர்கள்’ புத்தகத்தில் டோனி ஜோசஃப் சொல்கிறார். ஊடகங்களும் உலகப்புகழ் பெற்ற ‘ஸயின்ஸ்’ (Science) பத்திரிகை ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிடப் போகிறது என்ற செய்தியை வெளியிட்டன. ஆனால் பல மாதங்கள் ஆகியும் கட்டுரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. இல்லை, எலும்புக்கூடு ஆரிய எலும்புக்கூடுதான் என்று சிலர் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்.
இதுவரை கிடைத்த சான்றுகளின் மூலம் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்கள் தொடர்பு இல்லாதது என்றோ, திராவிட நாகரிகத்திற்கு முன்னோடி என்றோ நிச்சயமாகச் சொல்லி விடமுடியுமா? சொல்ல முடியாது. இன்னும் தரவுகள் வேண்டும். ஆனால் அவ்வாறு ஊகிக்க முடியும். இதே போன்று சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மொழி என்ன என்பதையும் ஊகம்தான் செய்ய முடியும். ஐராவதம் மகாதேவன் செய்தது போல. அது தொல் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
ஆனால் ஒன்றை இங்கு சொல்லியாக வேண்டும். சிந்துச் சமவெளி மொழி என்று சொல்லப்படுவது திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்பது நிறுவப்பட்டாலும், சமஸ்கிருதம் அடங்கிய இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தைச் சார்ந்த பல மொழிகள், இதே காலகட்டத்தில் புழங்கி வந்திருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஊகங்களுக்கு அதிக இடம் கொடுக்க வேண்டிய தேவையே இல்லாமல் ஹிட்டைட் மொழியைச் சேர்ந்த கல்வெட்டுகள் படிக்கப்பட்டு விட்டன. எனவே தொல் திராவிட மொழி பழைய மொழியா அல்லது தொல் இந்தோ-ஐரோப்பிய மொழி பழைய மொழியா என்ற கேள்விக்கு உறுதியாக விடை கிடைப்பது கடினம்.
சிலர் சிந்துச்சமவெளி நாகரிகம் தோன்றும் முன்பே தொல் திராவிடமொழி பேசுபவர்கள் தெற்கே வந்தடைந்து விட்டார்கள் என்று கருதுகிறார்கள். மேய்ப்பர்களாக வந்த அவர்கள் பின்னால் விவசாயம் செய்யத் துவங்கியிருக்கலாம். இன்று வரை, சிந்துச் சமவெளியிலிருந்து தென்கோடி வரை Savannah Zone என்று அழைக்கக் கூடிய மேய்ச்சல் நிலங்கள் தொடர்ச்சியாக இருக்கின்றன.
எது எப்படியிருந்தாலும் தெற்கே இருந்து வடக்கே மொழிகள் சென்றிருக்கலாம் என்பதற்குச் சான்றுகள் அதிகம் இல்லை. வடக்கே இருந்து மொழிகள் தெற்கே வந்தன என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. எனவே ஒருவகையில் பார்க்கப்போனால் தமிழும் வடமொழிதான்.
வேதகால மொழி
சிந்துச் சமவெளி நாகரிக கால எழுத்துக்கள் என்று அறியப்படுபவைகளுக்குப் பின் இந்தியாவில் எழுத்துகள் மௌரியரகள் காலம் வரை கிடைக்கவில்லை. இடைவெளி சுமார் 1500 வருடங்களுக்கும் மேல் இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில்தான் வேதங்கள் வந்தன, ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. வேதங்களில் மிகப்பழமையான ரிக்வேத்த்தின் காலம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். எழுதாக்கிளவியாக பல நூற்றாண்டுகள் இருந்த வேதங்களின் சமஸ்கிருதம் வரி வடிவத்தில் மிகவும் பின்னால் எழுதப்பட்டது. வேதம் எழுதப்பட்ட மிகப் பழைய ஏடுகள் இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருக்கின்றன. ஆனால் வேதங்களையும் உபநிடதங்களையும் எதிர்த்துத் தோன்றிய மதங்களான பௌத்தமும், ஜைனமும் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அசோகரின் கல்வெட்டுகள் 2300 ஆண்டுகளுக்கு முந்தையவை. அவை பிராமணர்களைப் பற்றிப் பேசுகின்றன. மதங்களைப் பற்றிப் பேசுகின்றன. “.
வேதங்கள் எழுதப்பட்டவை சமஸ்கிருதத்தில். வேதகால சமஸ்கிருத்த்திற்கும் பின்னால் வந்த சமஸ்கிருதத்திற்கும் (பாணினியின் அஷ்ட்த்யாயிக்குப் பிறகு) வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் பின்னால் வந்த சமஸ்கிருதம் வேதகால மொழியிலிருந்து முற்றிலும தொடர்பற்றது என்று தற்குறிகள் மட்டுமே சொல்வார்கள். இரண்டிற்கும் பிரிக்க முடியாத, நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சமஸ்கிருதம் இந்தியாவில் குறைந்தது 3500 ஆண்டுகள் புழங்கி வந்திருக்கிறது. பெரிடேல் கீத் சொல்வது போல புத்த ஜாதகக் கதைகள் பிராமண ஆசிரியர்கள் பிராமண, க்ஷத்திரிய, வைசிய வகுப்புகளுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதைப் பற்றிப் பேசுகின்றன. ராமாயண மகாபாரதக் கதைகள் புத்தர் காலத்திலேயோ அதற்குச் சற்று முன்போ வாய்மொழியாகப் புழங்கத் துவங்கி விட்டன என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த இக்கதைகளுக்கும் சமஸ்கிருத்த்திற்கும் உள்ள தொடர்பை நாம் ஒதுக்கி விட முடியாது. சமஸ்கிருத்த்திற்கு குறைந்தது 3500 வருடங்களுக்கு முன்பிருந்தே இலக்கியம் இருந்திருக்கிறது. பின்னால் பௌத்தர்களும் ஜைனர்களும் கூட சமஸ்கிருத மொழியில் தங்கள் படைப்புகளை எழுதத் துவங்கினார்கள்
இனி பிராகிருதத்திற்கு வருவோம்.
- 20 செப்டம்பர் 2019