ஸ்ரீ காசிமடம்,
திருப்பனந்தாள் - 612 504,
தஞ்சை மாவட்டம்,
தமிழ்நாடு.
நூலாக்கம் :- “கயிலைமாமுனிவர்” ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்.
அதிபர், ஸ்ரீ காசிமடம், திருப்பனந்தாள் - 612 504.
முன்னுரை
‘ஓமத் தோடயன் மாலறி யாவணம்
வீமப் பேரொளி யாய விழுப்பொருள்
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே.’
- நாவுக்கரசர்.
தில்லையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், 2010 பிப்ரவரி 5,6,7 தேதிகளில் தமிழக சைவ ஆதீனகர்த்தர்கள், திருமடங்களின் தலைவர்கள், உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த சைவப்பெருமக்கள்ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்ற பன்னிரண்டாவது உலகச் சைவ மாநாட்டு அழைப்பிதழில் குறிப்பிடப்பெற்ற ‘வேத, ஆகம, புராண, இதிகாச, திருமுறை, சித்தாந்த, சாத்திர, அடிப்படையில்’ என்ற நோக்கங்களுக்கும், மாநாட்டு இறுதியில் - மூன்றாம் நாள் நிறைவு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதலாவது “வேத, ஆகம, புராண, இதிகாச, திருமுறை, சித்தாந்த சாத்திரங்களின் கருத்துக்களுக்கு மாறுபடாமல் அவரவர்கள் நடந்துகொள்ள வேண்டும்” என்பதற்கும் மாறாக, மரபுப் பிறழ்ச்சிகள், மீறல்கள் செய்ய முயலும் பேச்சுகள், செயல்களுக்கு இனி வாய்ப்பில்லை எனக் கருதப்பட்டது.
ஆனால், மாநாட்டுத் தீர்மானத்திற்குப் பின்னும் சிலர், சைவ மரபுகள் எப்படிப் போனாலென்ன? நம்முடைய வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்வோம் என்ற தன்னல நோக்குடன் செயற்படுவதைக் கண்டு “நெஞ்சு பொறுக்குதில்லை” - சைவ சமய - திருநெறியத் தமிழ் மரபின் மாட்சிகளைத் தொடர்ந்து எழுதிவருகின்றோம். மாநாட்டு நோக்கங்களுக்கும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் விரோதமாக அரங்கேறிவரும் செய்கைகளைச் சைவப் பெருமக்கள் உணரவேண்டி, “வேத நெறி தழைத்தோங்க ! மிகுசைவத் துறை விளங்க’ எனும் தலைப்பில் ஸ்ரீ குமரகுருபரர் திங்கள் இதழில் (கார்த்திகை - 2010) எழுதப்பெற்றதைச் சில திருத்தங்கள் செய்து, தனி நூலாக இந்நூல் வெளியிடப்படுகிறது.
தருமையாதீனம் வெளியிட்டுள்ள பெரியபுராணம் முதற்காண்டத்தின் ஆசியுரையில் ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள், ‘வேதம், சிவாகமம், புராணம், இதிகாசம், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்களே நமது சைவ சமயத்தின் அடிப்படைச் சட்ட நூல்களாகும். சிவநெறி கடைப்பிடிப்போர் இந்நூல்களின் வரையறைகளின்படியே நடக்க வேண்டும். நடவாதார், சைவத்திற்குப் புறம்பானவராவர்’ என்று அருளியுள்ளார்கள்.
இறைவன் அருளிய சட்ட நூல்களை எந்த மானுடரும் மாற்றவோ, திருத்தவோ அதிகாரம் பெற்றவர் இல்லை. அப்படி மாற்றுவோர், திருத்துவோர், அவர்தம் செயல்களுக்குத் துணைபோவோர் அனைவருமே சைவ சமயத்துக்குப் புறம்பானவர்கள். “மறை வழக்க மிலாத மாபாவிகள்” என்பது தமிழ் ஞானசம்பந்தர் திருவாக்கு - இறை வாக்கு.
வேதங்களும், மிகுசைவத்துறையாகிய சிவாகமங்களும் தழைத்தாலன்றி, மானுடவர்க்கமாகிய பூதபரம்பரையும் செம்மை நெறியில் பொருந்திநிற்கமாட்டா. தமிழின் பெயராலும், தமிழ்த் திருமுறை, சாத்திரங்களின் பெயராலும், அவற்றின் உன்னதத்தைக் குலைக்க விரும்புவோர் சிலர் நிலையில்லாத தங்கள் சுயநிலத்திற்காக, சுய பெருடைக்காக பாடுபடுகிறார்கள். இத்தயை நிலை சில ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, பல போலிச் சைவர்கள் துணைகொண்டு, இன்று தலை விரித்து ஆடுகிறது.
சைவ ஆதீனங்களுக்கும், திருமடங்களுக்கும், இதை வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அடக்கி, ஓடுக்கி, அப்புறப்படுத்த வேண்டிய தலையாய கடப்பாடு இருக்கின்றது. இதில் எள்ளளவும் மெத்தனம் காட்டல் கூடவே கூடாது.
பிரச்சாரங்கள் போலியாக இருந்தாலும் அவற்றால் விளையும் கேடு மிகக் கொடுமையாகவே இருக்கும். களைகள் தாட்சண்யம் இல்லாமல் களைந்தெறியப்பட வேண்டும். இச்சிவகைங்கர்யத்தில் அனைத்து சைவ மக்களும் ஒருங்கிணைந்து கருத்து வேறுபாடு இல்லாமல் பாடுபடல் வேண்டும். செயத்தக்கவை செய்யாமையானும் கெடும்.
‘தருமத்தை நாம் காத்தால்தான் தருமம் நம்மைக் காக்கும்” என்பது ஓர் ஆப்த வாசகம். இப்போதுள்ள சூழ்நிலையைக் கண்டு சைவர்கள் மனச்சோர்வு கொள்ளலாகாது. ‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் ; தருமம் மறுபடி வெல்லும் ;………. காலம் மாறும், தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.’ கெட்ட காலம் நல்ல காலமாக மாறுவதற்குத் தொண்டர்கள் பாடுபட வேண்டும். அத்தகு செயலுக்குத் தெய்வம் துணை நிற்கும். வெற்றி அருளி வாழ்த்தும்.
சைவத் திருமுறைகளை மேற்கோள் காட்டி, அவற்றிக்கு ஒவ்வாத பொருள் கற்பித்துச் செயல்படுவோர் திருமுறை விரோதிகள். இவர்கள் நிகழ்த்தும் ஆரவாரப் படாடோபங்கள் பொருளற்றவை. இவர்கள் இயற்றும் செயல்களும், சடங்குகளும் தீமைகளை அபரிவிதமாகத் தோற்றுவிக்கும்.
கவர்ச்சி சிவணிய பொய்ப் பிரச்சாரத்தில் சிக்கவைக்கும் விரோதிகளின், சுயநலமிகளின் வலைவீச்சுக்குள் ஆட்படாமல் இருப்பதற்கு எச்சிரிக்கைக் குரல் கொடுப்பதற்காகவே இச்சிறு நூல் வெளியிடப்படுகிறது.
இதை உலகெங்கும் உள்ள சைவத் தமிழர்கள் போற்றி, பயின்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நம் குறிக்கோள். ஏற்றுப் போற்றுவோர் நூல் முழுதுமோ, பகுதியோ பயன்படுத்திக்கொள்ள, மொழிபெயர்க்க உரிமை உடையவராவர்.
தீமைகளிலிருந்து விடுபட்டு, சைவர்கள் செவ்விய வாழ்வு வாழ்தல் வேண்டுமென்று ஸ்ரீ செந்திலாண்டவனை வணங்கி வாழ்த்துகிறோம்.
ஆழ்க தீயது ! எல்லாம் அரண் நாமமே சூழ்க! வையகம் துயர் தீர்க !
- சிவ சிவ
“ சைவத்தின் மேற்சம யம்வே
றிலையதிற் சார்சிவமாந்
தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனும்
நான்மறைச் செம்பொருள்வாய்
மைவைத்த சீர்த்திருத் தேவார
முந்திரு வாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர்பொற்
றாளெம்மு யிர்த்துணையே !”
- சைவ எல்லப்ப நாவலர். திருவருணைக் கலம்பகம்.
நம்பிக்கை
கடவுள் என்ற சொல், இரண்டு செய்திகளை நமக்குத் தருகிறது. கடந்தது, உள்ளது, கடவி நிற்பது என்பன அச்செய்திகள், உயிருக்கு உயிராய் இருந்து இறைவன் உயிரை (ஆன்மாவை) செலுத்தி வருகிறான். யாவற்றையும் கடந்தது என்றால், அதை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதை, ‘உள்ளது’ என்று சொல்ல அதிக பலம் வாய்ந்த நம்பிக்கை வேண்டும். ‘பரம்’ என்று அதைக் குறிக்கும்போதும், நம்பிக்கையின் ‘இருப்பு’ அதிகமாகத் தேவைப்படும். ‘தத்துவாதீதன்’ என அந்த மூல முதற் பொருளைக் குறிப்பதும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஆகும்.
கடவுளியலும், அதையொட்டிய சமயமும், சடங்கு சம்பிரதாயம், கிரியைகள், வழிபாடுகள் யாவும் நம்பிக்கை என்னும் ஆணிவேர் உடையனவே ஆகும். ‘யார் சொன்னால் நம்ப வேண்டும் ?’ என்பதில் தெளிவு இல்லையென்றால் ‘நம்பிக்கை’ அர்த்தமற்றதாகிவிடும், நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு.
‘சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது’ - பெறுதற்கரிய நல்லூழ் காரணமாகச் சைவமாம் சமயம் சாரப் பெற்றவர்கள் சமயம் தொடர்பான செய்திகளை யார் சொன்னாலும் நம்புவது என்ற போக்கில், எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருத்தலாகாது.
நம் சமயத்திற்கு ஆசாரியர்கள் நால்வர். அவர்கள் என்னென்ன அருளிச் செய்தார்களோ அவற்றையே சைவம் ஏற்கும் ; அவர்களின் திருவாக்குகளையே உண்மைச் சைவம் நம்பும்; அவர்களின் இறை மொழிகளுக்கே சைவம் கட்டுப்படும். அவர்கள் வரைந்த கோடே நம் பற்றுக்கோடு.
நம் உயிர்ச் சைவத்தின் முன்னோர்களாகிய அருளாளர்கள், குருமார்கள் அத்தனைபேரும், ஆசாரியர்கள் வகுத்தளித்த பாதையை விட்டு ஓர் அடிகூட விலகி நடந்ததில்லை; விலகி நடக்க விட்டதுமில்லை. ஆகவேதான் “நால்வர் பொற்றாள் துணை” என்று ஓதி வருகிறோம்.
வேத உடன்பாட்டுச் சமயம்
நம் சமயாசாரியர்கள் அருளிய எட்டுத் திருமுறைகளிலும் அந்நெறியிலேயே அமைந்த மூன்று திருமுறைகளிலும், இவை யாவற்றிக்கும் காலத்தால் முற்பட்ட திருமந்திரத்திலும் - ஆகப் பன்னிரண்டு திருமுறைகளிலும் நம் சமயம் வேத உடன்பாட்டுச் சமயமாகவே சொல்லப் பெற்றுள்ளது. பன்னிரு திருமுறைகளிலுமாகச் சற்றொப்ப ஆயிரத்து இருநூறு இடங்களில், வேதங்க்ள் ஆகமங்கள் போற்றப்படுகின்றன. சைவ இலக்கியங்கள், சாத்திர நூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் என்று, தொகு மொத்தமாக வைத்து எண்ணிக்கை செய்தால் இது இன்னும் பன்மடங்காகப் பெருகும்.
சமயாசாரியர்கள் மட்டுமன்றிச் சந்தானாசாரியர்கள் நால்வரும், நம் சமயத்தினருக்கு உத்தரவிடும் உரிமையுள்ளவர்கள் ஆவர். அவர்கள் நம் சமயத்தின் தத்துவங்களை - மெய்ப் பொருளியலை - மிகத் துல்லியமாக வரையறுத்து வழங்கினார்கள். இந்த வரையறை, பதின்மூன்றாம் நூற்றாண்டு முதற்கொண்டு சைவர்களுக்கு மேல் வரிச் சட்டமாக அமைந்தது. மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் இவையும் சைவத்தை வேத உடன்பாட்டுச் சமயமாகவே வரையறுத்து வற்புறுத்துகின்றன.
சைவத் திருமுறைகள், சாத்திரங்கள், அருளாளர்களின் இலக்கியங்கள், புராணங்கள் முதலியன எல்லாவற்றிலும் வேதங்கள், ஆகமங்கள் பற்றிக் கூறப்படும் செய்திகளை ஒருசேரத் திரட்டிப் பார்த்தால் கீழ்வரும் உண்மைகளைஅறியாலம்:-
1. நான்கு வேதங்களும் சைவத்திற்கு உடன்பாடானவை. சைவம் ஆகம நெறியிலான செயற்பாடுகளை உடைய சமயம். வேதங்களையும் ஆகமங்களையும் நமக்காக நம்பெருமானே அருளினார். வேதம், பொது. ஆகமம். சிறப்பு.
2. மிக நுட்பமான வேதங்களை வகுத்தளித்தவர் வியாசர். வியாசர் அருளிய பதினெண் புராணங்களை அங்கங ;கும் உள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்தவர் சூத பௌராணிகர். ஆயிரம் அந்தணர்களுக்குச் சமமான அப்பெரியார் ஒரு சூத்திரர். ஆபிதான சிந்தாமணி காண்க.
3. சிவாகமங்கள், திருக்கோயில் அமைப்பு, இறை திருவுருவங்கள், நாட்பூசைகள், சிறப்பு வழிபாடுகள், வேள்விகள் முதலிய அனைத்தையும் கூறுவன. அவ்வாகமங்களில் வல்ல சிவாசாரியர்களே பரார்த்த வழிபாடாகிய திருக்கோயில் வழிபாடுகள் செய்ய உரியவர்கள் ஆவர்.
4. வேதங்கள் சொல்லும் இருபத்தொரு வேள்விகளும் சிவபரம்பொருளை நோக்கியே அமைவன. அவற்றில் ஏழு, பாகயக்ஞங்கள். ஊன் வேள்விகள் - அவை சிவாகமங்களில் கூறப்படவில்லை. பிற வேள்விகள் பலவும் வேறுபாடு உடையனவே.
5. வேதத்திற்கு நிருத்தம் என்னும் அங்கத்தின்வழி - வேதமொழியின் ஆதிநிகண்டின்படி - தத்தம் மொழிப் புலமைக்கேற்ப விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. வேதம் இறைவனை முற்ற உணரவில்லை ; வேத சூட்சுமங்களை மனிதர்கள் யாரும் முற்ற உணரவில்லை. ‘வேதத்திற்குப் பொருள் அருளிய படலம்’ எனத் திருவிளையாடற் புராணத்தில் வருவதைக் கொண்டு, பெருமானே தாம் அருளிய வேதத்திற்குத் தாமே பொருள் சொன்னாலொழிய வேதம் முற்ற உணர இயலாத அதி சூட்சுமமானது என அறியலாம். வேதத்;திற்குப் பொருள் சொல்வதில் ஏற்பட்ட வேறுபாட்டாலேயே, பல சமயங்கள் கிளைத்தன.
6. ‘வேதத்தை விட்ட அறமில்லை’இ வேதத்தில் சொல்லப்படாத தர்மம் வேறில்லை.
7. வேத நிந்தனை செய்வதைச் சமய விரோதச் செயலாக - மாபாதகச் செயலாகக் கருத வேண்டும். வேத நிந்தனை, வேத விரோதச் செயல்கள் செய்வோரைச் சைவம் புறப்புறச் சமயத்தினராகவே கருதுகிறது. சமணர், பௌத்தர், புறப்புறச் சமயிகள், வைணவர், ஏகான்மவாதிகள் புறச்சமயிகள்.
இவை சுருக்கம். இவற்றின் அடிப்படையில், மேலும் சில தெளிவுரைகளை, இனிக் காண்போம்.
இறைவன் அருளிய பொதுவும் சிறப்பும்
பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில்,
‘வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல் ;
ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன ;
நாதன் உரை அவை நாடில், இரண்டு அந்தம்
பேதம் அது என்னில் பெரியோர்க்கு அபேதமே’ (8-28)
என ஒரு மந்திரம் உள்ளது. இதில் ‘வேதம் ஆகமம் ஆகியன இறைவனால் அருளப்பட்டவை’ என வருகிறது. நேர் நிரல் நிறை இலக்கணப்படி, வேதம் பொது நூல் என்றும், ஆகமம் சிறப்பு நூல் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் அடியில் மீண்டும் ‘நாதன் உரை அவை’ என்று தௌ;ளத் தெளிவாக உறுதிசெய்து அறிவித்தருளினார் திருமூல தேவ நாயனார்.
இரண்டு அந்தம், வேதாந்தம் சித்தாந்தம். வேதத்தால் மட்டுமே இறைபணிகள் செய்யும் மார்க்கம், வேதாந்தம். அந்நெறியில் திருக்கோயில் வழிபாடுகள் மையப்படுவதில்லை. ஒரோவழி உண்டென்றாலும் அதை வேத மந்திரங்களை மட்டுமே பின்பற்றும், சித்தாந்தம் ஆகமவழிப்பட்ட வழிபாடுகளைக் கடைப்பிடிக்கும். ஆகமங்களில் வேத மந்திரங்களும் உள.
ஆகம நூல், ‘சைவ நூல்” எனச் சித்தியார் கட்டளையாகச் சொல்கிறது. வேத நூலை ‘அநாதி’ என்றும் சித்தியார் பிரகடனப்படுத்தியுள்ளது (சிவ.சித்.சுப.சூ.7.பா.15) சாத்திரம் என்பது கட்டளை; உத்தரவு. சைவ சமயத்தின் உத்தரவை - கட்டளையை மீறுபவர்கள் சைவர்களாக நீடிக்க முடியுமா?
சிவனை வழிபடும் வேறு கிளைச் சமயத்தினருக்கு, நம் சைவத்தின் சித்தாந்தக் கட்டளைகள் இல்லை. அவர்கள்
சொல்வதை, நம் சமயத்தினர் கேட்டு நம் தோத்திர - சாத்திர விதிகளை -மரபுகளை - கட்டளைகளை நாம் மீறலாகுமா?