களப்பிரர்களின் வருகை சங்க கால மூவேந்தர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி ஆறாம் நூற்றாண்டு வரைக்கும் களப்பிரர்களின் ஆட்சியின் கீழிருந்த தமிழகத்தை பாண்டியர்களும் பல்லவர்களும் பாதாமிச் சாளுக்கியர்களும் மீட்டார்கள். சேர, சோழ, பாண்டியர்கள் அதன் பிறகே மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்தார்கள். களப்பிரர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள் என்ற விவாதங்களுக்கு இன்னும் அறுதியான பதில்கள் கிடைக்கவில்லை என்றாலும், அவர்களது காலத்தில்தான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை எழுதப்பட்டன. காவிரியும் வைகையும் பொருநையும் வளங்கொழிக்கச் செய்த அன்றைய தமிழகத்தின் மீது படையெடுத்து வென்றவர்கள், தங்களது மொழிகளை தமிழகத்திலும் வேர்பரவச் செய்தார்கள் என்றாலும், தமிழுக்கான இடத்தை அவர்கள் மறுத்ததில்லை. அப்போது வெளியிடப்பட்ட செப்பேடுகளும் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளும் ஆட்சி நிர்வாகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்குச் சான்றுகள்.
பல்லவர் பட்டயங்கள்
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நுழைந்த பல்லவர்கள் சுமார் நான்கு நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி, தொண்டை நாட்டின் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டிருந்தது. பல்லவர்களின் கீழ் சோழர்கள் சிற்றரசர்களாகவும், பாண்டியர்கள் தனித்தும் ஆண்டுவந்தனர். பல்லவர்கள் காலத்துச் செப்புப் பட்டயங்களில் பெரும்பாலானவற்றில் பிராகிருதம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தன. துவக்கக் காலத்தில் பல்லவர்கள் பிராகிருத மொழியைச் செப்புப் பட்டயங்களில் எழுத கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தினர். அதேபோல், சம்ஸ்கிருதத்தையும் கிரந்த எழுத்துகளில் பதிவாக்கினர். நில தானங்கள் பற்றிய இந்தப் பட்டயங்களில் தமிழும் இடம்பெற்றிருந்தது.
கல்வெட்டுகளிலோ தமிழ், சம்ஸ்கிருதம், பிராகிருதம் என ஒவ்வொரு மொழிக்குமாக மூன்று கல்வெட்டுகள் எழுதப்பட்டிருந்தன. ஆனால், இந்தக் கல்வெட்டுகளில் மொழிக்கலப்பும் இருந்தது. உதாரணமாக, ‘மத்தியஸ்தன்’ எனும் வார்த்தையை ஒரு தமிழ்க் கல்வெட்டில் கிரந்த எழுத்துகளில் எழுதியுள்ளனர். இதற்கு மத்தியஸ்தன் என்பது சம்ஸ்கிருத வார்த்தை என்பதால், அதை அப்படியே கல்வெட்டில் எழுதியுள்ளனர். இதே முறையைப் பிற்காலத்திய பல்லவ, சோழ, பாண்டியர்களும் பின்பற்றினர்.
இதற்கு ஆதாரமாகப் பல்லவ சாசனங்களிலே நமக்குக் கிடைத்தவற்றுள் மிகவும் பழமையான மயிதவோலுச் செப்புப் பட்டயத்தைச் சொல்லலாம். இதை வழங்கிய பல்லவ மன்னன் சிவஸ்கந்தவர்மன், ஹீரஹடஹள்ளி பட்டயத்தையும் வழங்கியுள்ளார். இரு பட்டயங்களும் பிராகிருத மொழியிலேயே உள்ளன. பல்லவ சிம்மவர்மன் தனது ஆறாம் ஆட்சியாண்டில் வெளியிட்ட பள்ளன் கோயில் செப்பேடு சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிப் பட்டயமாகும். தமிழ்நாட்டிலிருந்து கிடைப்பவற்றில், அரசனின் உத்தரவைத் தமிழிலே கொண்ட செப்பேட்டுச் சாசனங்களில் இதுவே காலத்தால் முற்பட்டது.
முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 615-630) காலத்திலிருந்தே தமிழகத்தில் பல்லவர் சாசனங்களான செப்பேடுகளும் கல்வெட்டுகளும் கிட்டுகின்றன. ஆனால், பள்ளன் கோயில் செப்பேடு மகேந்திரனின் பாட்டனுடையது. அதாவது, கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தது. ஐந்து செப்பேடுகளைக் கொண்ட இந்தப் பட்டயம், முதல் ஏட்டின் முதல் பக்கமும் ஐந்தாம் ஏட்டின் பின் பக்கமும் நீங்கலாக எட்டுப் பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது. மூன்று பக்கங்களில் மட்டுமே சம்ஸ்கிருத மொழியிலும் ஏனைய ஐந்து பக்கங்கள் தமிழ் மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. சம்ஸ்கிருதத்தில் பல்லவர் குலப்பெருமை விரிவாகவும் தானம் பெறுபவர், வழங்கப்பட்ட ஊரின் பெயர் முதலியன மிகச் சுருக்கமாகவும் இடம்பெற்றுள்ளன. தமிழில் மன்னனின் ஆணை, அதைச் செயல்படுத்தும் முறை, தானமாகக் கொடுக்கப்பட்ட ஊர், அதன் நான்கு எல்லைகள் போன்றவை விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.
திருவரங்கத்தில் தேவராயர்
தெலுங்கர்களான விஜயநகர மன்னர்கள் 15-ம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் நுழைந்தனர். விஜயநகர மன்னர்கள், தங்களின் கோயில் மற்றும் ஏனைய கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டுகளில் சம்ஸ்கிருதம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியைப் பயன்படுத்தினார்கள். மன்னர்கள் மட்டுமின்றி அவர்களது அதிகாரிகளான மண்டலேசுவரர், மகாமண்டலேசுவரர், சேனாபதி, ராயர், நாயக்கர் போன்ற அதிகாரிகளும் தம் கல்வெட்டுகளில் விதிவிலக்கின்றி அதே முறையைப் பின்பற்றினர். தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் இந்த அதிகாரிகள் நில தானம் மீதான கல்வெட்டுகளைக் கட்டாயமாகத் தமிழில் எழுதினர்.
விஜயநகர மன்னர்களில் புகழ்பெற்ற கிருஷ்ண தேவராயர் தமிழகத்திலுள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு கி.பி. 1517-ல் தரிசிக்கச் சென்றார். அப்போது ஐந்து கிராமங்களை அக்கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்தக் கல்வெட்டு முழுவதும் தமிழில் உள்ளது. அதே நாளில் அவர் பல நகைகளையும் கொடையாக வழங்கிய செய்தி தெலுங்கு மொழியில் கல்வெட்டாக வடிக்கப்பட்டுள்ளது. கி.பி. 1526-ல் இதே ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மன்னர் அச்சுதராயர் வழங்கிய பொருட்கொடையைச் சொல்லும் கல்வெட்டு முழுவதுமாக சம்ஸ்கிருதத்தில் உள்ளதே தவிர, தமிழில் கிடைக்கவில்லை. கிருஷ்ண தேவராயர், இரு மொழிகளில் கல்வெட்டுகளைப் பொறித்துள்ளதைக் கொண்டு, அவரது காலத்தில் தமிழும் நிர்வாக மொழியாக இருந்துள்ளது எனக் கொள்ளலாம்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத மன்னர்களின் ஆட்சிக்காலத்திலும் நிலக் கொடைகள் குறித்த விவரங்களை தமிழிலேயே வெளியிட்டதற்கு முக்கியக் காரணம், பெரும்பான்மை மக்கள் தமிழிலேயே பேசிவந்தனர் என்பது மட்டுமல்ல, ஆட்சி நிர்வாகத்தில் இருந்தவர்களும் தமிழ் மொழியையே தொடர்ந்து பயன்படுத்திவந்துள்ளனர். அதாவது, அரசனின் மொழி எதுவாக இருந்தபோதும் அதிகாரிகளும் பொதுமக்களும் தமிழ் மொழியே தங்களின் நிர்வாக மொழியாக அன்று கொண்டிருந்தனரா என்கிற சிந்தனையை இந்த வரலாற்றுச் சான்றுகள் நமக்குத் தருகின்றன.
தஞ்சை மராத்தியர்
கி.பி. 17, 18-ம் நூற்றாண்டுகளில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மராத்திய மன்னர்கள் ஆட்சிசெய்தனர். அவர்கள் காலத்திய செப்பேடுகளிலும் தமிழ் மொழியைக் காண முடிகிறது. ஒரு சிலவற்றில் சம்ஸ்கிருதத்துக்குப் பதிலாக மோடி எழுத்துகள் (மராத்தி எழுத்து வடிவம்) காணப்படுகின்றன. எனினும், பல்லவர்கள், விஜயநகர ஆட்சிக்காலத்தைப் போலவே செப்பேட்டின் முக்கியப் பகுதியான தானத்தின் விவரங்களை தமிழிலேயே எழுதியுள்ளனர். ஹாலந்து அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் ஒரு வெள்ளிப் பட்டயம், வாணிபத்தின் பொருட்டு வந்த டச்சுக்காரர்களுக்கும் மராத்திய மன்னருக்கும் இடையிலான ஓர் உடன்படிக்கை பற்றியது. ஓர் ஐரோப்பிய நாட்டுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைப் பற்றிய இந்தப் பட்டயமும் தமிழில்தான் உள்ளது.
எஸ்.சாந்தினிபீ,
வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர்,அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.