அசோகரின் கிர்னார் இரண்டாம் பெரும்பாறைக் கல்வெட்டு
முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை
Dr.MBAVANI
Assistant Proffessor,
Department of Epigraphy and Archaeology,
Tamil University
Thanjavur
Dr.MBAVANI
Assistant Proffessor,
Department of Epigraphy and Archaeology,
Tamil University
Thanjavur
அசோகரது கிர்னார் இரண்டாம் பெரும்பாறைக் கல்வெட்டு குஜராத் மாநிலம் கத்தியவாரில் கிடைக்கப்பெற்ற முக்கியமான ஒரு கல்வெட்டாகும்.
அரசன் : அசோகன்
வம்சம் : மௌரியர்
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு
மொழி : பிராகிருதம்
எழுத்து : அசோகன் பிராமி
நோக்கீடு : Inscriptions of Asoka by D.C. Sircar, 1957, Corpus Inscriptionum Indicarum
அசோகர் கல்வெட்டு பாடம் (தமிழில்)
1. ஸர்வத் விஜிதே(ம்)ஹி தேவாநாம்பிர்யஸ பிர்யதர்ஸினோ ராஞோ
2. ஏவமபி ப்ர சந்தேஸீ யதா சோடா, பாடா ஸதியபுதோ கேதளபுதோ ஆ தம்ப
3. பர்ணி அன்தியோகோ யோன ராஜா யே வாபி அன்தியகஸ் ஸாமிநோ
4. ராஜானோ ஸவத தேவனாம் பியஸ ப்ரிய (பிய) தஸினோ ராஞோ த்வே சிகீச்சா கதா
5. மனுஸ சிகிச்சா ச பஸீ சிகிச்சா ச ஔஸீதானி ச யாநி மனுசோபதானி ச
6. பஸோ ப கானி ச யத் யத் நாஸ்தி ஸர்வத்ர ஹாரா பிதானி ச ரோபா பிதானிச
7. முலானி ச ஃபலானிச யத் யத் நாஸ்தி ஸர்வத் ஹாரா பிதானி ச ரோபாபிதானி
8. பந்தேஸீ கூபா ச கானாபிதா வ்ருச்சா ச ரோபா பிதா பரிபோக்ய பஸீ மனுஸாநம்
செய்தி :
அசோகர் வழக்கம்போல் இக்கல்வெட்டிலும் தேவனுக்குப் பிரியமானவன் என கவுதம் குறிப்பிடப்பெறுகின்றார். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமின்றி அண்டை நாடுகளான சேர, சோழ, பாண்டிய, ஸத்தியபுத்திரர், யோன அரசரான அன்டியோகஸ் மற்றும் அவருடைய அண்டைநாடுகளுக்கும் இரு வகைச் சிகிச்சைகள் அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அதாவது மனிதருக்கும் விலங்கினங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பெறுதல் வேண்டும். எங்கெல்லாம் மூலிகைச் செடிகளும் பழம் தரும் மரங்களும் இல்லையோ, கிடைக்கும் இடங்களிலிருந்து தருவித்து இல்லாத இடங்களில் நடப்படவேண்டும் என்றும் பசுக்கள் நீர் அருந்த கிணறு போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றது. இவ்விதமாகப் பசுக்களும், மனிதர்களும் பரிபோக்யமாக, சுபமாக வாழவேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.
முக்கியத்துவம் :
இக்கல்வெட்டில் தமிழகத்தில் சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களின் வம்சம்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனால் அசோகருக்கு இணையான காலத்தில் (பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டுகளில்) தமிழ் மன்னர்கள் வாழ்ந்தது விளங்கும்.
தமிழக வரலாற்றை குறிப்பாக சங்க காலத்தை பொ.ஆ.8ஆம் நூற்றாண்டு என மிகவும் பின்னோக்கி கொண்டு செல்லும் “டிக்கன்” போன்ற அறிஞர்களின் கருத்துக்களைத் தவறானவை என இக்கல்வெட்டு கொண்டு மெய்ப்பிக்கலாம்.
தமிழ் மன்னர்கள் மட்டுமின்றி தமிழ் அரசர்களின் சிற்றரசர்காளாக விளங்கிய அதியமான் போன்றோரும் அசோகர் அறியும் வண்ணம் சிறப்புற்று விளங்கியுள்ளனர் என்பது தெளிவு.
அசோகருக்கு அண்டை நாடாகக் குறிப்பிடப்படுவதால் அசோகரின் ஆட்சியோ படையெடுப்போ தமிழகத்தில் நிகழவில்லை என்பதை அறியலாம். தமிழ் மன்னர்கள் இக்காலத்தில் மிக வலிமைகொண்டு விளங்கியுள்ளனர் எனக் கூறலாம்.
Dr. M.Bavani