Written by S NAGARAJAN Date: 15 December 2016
இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் முதல் பாடலில் வேதம் பற்றியும் நாவல் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..
பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1 ச.நாகராஜன்
பரிபாடல்
எட்டுத்தொகை நூல்களில் ஒன்று பரிபாடல். அதில் 70 பாடல்கள் இருந்தன. நமக்குக் கிடைத்திருப்பது இருபத்துநான்கு பாடல்களே. மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் அவர்களின் பெருமுயற்சி காரணமாக இந்த பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அதைப் பதிப்பித்து தமிழுக்குத் தந்தவர் அவரே.
பரிபாடலின் பாடல்களில் திருமாலுக்கு உரியவையாக எட்டும், முருகனுக்கு முப்பத்தொரு பாடல்களும், கொற்றவைக்கு ஒன்றும் வைகை நதிக்கு இருபத்தாறும் மதுரைக்கு நான்கு பாடல்களும் உள்ளன. ஆனால் நமக்குக் கிடைத்திருப்பதோ திருமாலுக்கு ஏழு, முருகனுக்கு எட்டு, வைகைக்கு ஒன்பது
25 அடி முதல் 400 அடிகள் வரை பரிபாடல் கொண்டிருக்கும் என்கிறது இலக்கணம். பரிபாடல அரிய இசையைக் கொண்டிருக்கும் ஒன்று. ப்ரிபாடலில் உள்ள ஒவ்வொரு பாடலையும் எழுதியவர் யார், அதற்கு இசை அமைத்தவர் யார் என்ற குறிப்பும் பாடலின் அடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிபாடலின் காலத்தை நிர்ணயிக்க விழையும் அறிஞர்கள் அது சங்க காலத்தின் இறுதியில் தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இதில் தொட்ட இடங்களிலெல்லாம் இறை ம்ணம் கமழும்.
அற்புதமான பக்தி வரிகள் மின்னும். ஹிந்து தத்துவங்கள் தவழும்.
பாடலை நாமே ரசித்துப் படிக்க வேண்டும், அப்போது தான் அதன் பெருமையை உணர முடியும்.
வேதத்தின் பல பெயர்கள்
வேதத்தை நான்மறை, மறை, வேதம், சுருதி,கேள்வி, வாய்மொழி, முதுமொழி, புலம் என்றெல்லாம் பரிபாடல் கூறி அதன் பெருமையை எடுத்துரைக்கிறது.பரிபாடலின் முதல் பாடல் திருமாலின் பெருமையை விளக்குகிறது.
ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை என ஆதிசேஷனைக் குறிப்பிட்டு ஆரம்பிக்கும் பாடலில் இறுதி மூன்று வரிகள் வேதத்தையும் அந்தணரையும் பற்றிக் கூறுகிறது.
“சேவல் அம் கொடியோய் நின் வல் வயின் நிறுத்தும் மேவலுள் பணிந்தமை கூறும்
நாவல் அந்தணர் அரு மறைப் பொருளே” (வரிகள் 11 12 13)
சேவல் அம் கொடியோய் – கருடனைக் கொடியில் கொண்டவனே!
மேவலுள் – உன் கருணையுடன்
நின் வல் வயின் நிறுத்தும் – உன் வலது பக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ள மனிதர்கள்
பணிந்தமை கூறும் – உன்னை வழிபடும் தன்மை அறிந்து வழிபடுவோர்.
நாவல் அந்தணர் – நாவில் மிகத் திறமை கொண்ட அந்தணர்கள் ஒதுகின்ற
அருமறைப் பொருளே – அரிய வேதத்தின் அர்த்தமாக விளங்குகின்றவனே!
அந்தணர்கள் வேதத்தை ஓதுகின்ற நல்ல திறன் உடையவர்கள் என்பதை மிக மிக அழகாக நாவல் அந்தணர் என்ற சொற்றொடர் விளக்குகிறது
திருமால் அரிய வேதத்தின் உட்பொருளாய் விளங்குகிறான் என்பதையும் அருமறைப் பொருள் என்ற அழகிய சொற்றொடர் விளக்குகிறது.
இப்படி முதல் பாடலிலேயே அந்தணரின் புகழையும் அவர் நாவில் தவழும் வேதத்தின் பெருமையையும் பரிபாடல் விளக்குகிறது.
இந்தப் பாடலை இயற்றிய புலவர் பெயரும் இதற்கு இசை அமைத்தவர் பெயரும் நமக்குக் கிடைக்கவில்லை.