WRITTEN BY S NAGARAJAN
Date: 2 November 2016
Time uploaded in London: 5-17 AM
Post No.3311
Pictures are taken from various sources; thanks.
சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 4
புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 1
BY ச.நாகராஜன்
சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான புறநானூறு 158 புலவர்களால் பாடப்பட்ட 4 அடி முதல் 40 அடிகள் வரி கொண்ட நானூறு பாடல்களைக் கொண்ட அழகிய நூல். இதில் சங்க காலத் தமிழர்களின் பொதுவான வாழ்க்கை முறை, நம்பிக்கை, சடங்குகள் ஆகியவற்றைக் காணலாம். முக்கியமாக தமிழர்களின் வீரம், அனைவரும் வாழ வேண்டும் என்ற மிகச் சிறந்த உயர்ந்த கொள்கை, கல்வி, கொடை, அறப் பண்புகள் ஆகியவை பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம். மன்னர்களைப் பற்றிய வியத்தகு செய்திகள் சுவையானவை. அதைப் பாடியவர்களோ தமிழின் அருமைச் செல்வங்கள் என்பதையும் உணரலாம்.
மிக உயரிய பண்புகள் உடையவர்களே மன்னனாக இருக்க முடியும் என்பதும் அவனது அறம் கூறும் அவையில் ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோருக்கே முதலிடம் என்பதும், ப்ழி எனின் உயிரையும் கொடுத்து அதை நீக்குவர், புகழ் எனின் உலகையும் கொடுத்து அதைக் கொள்வர் என்பன போன்ற் செய்திகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.
அந்தப் பழைய காலத்தில் அந்தணருக்கும் அவர்க்ள் ஓதும் ஆதிநூலாம் வேதத்திற்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.ஏராளமான யாகங்கள் மக்களின் நலனுக்காக மன்னனால் செய்யப்பட்டதையும் பாடல்கள் தெரிவிக்கின்றன.
மன்னர்களைப் பற்றிய செய்திகளைத் தனிக் கட்டுரைகளில் படிக்கலாம்.
நமது ஆய்வுக்கான கருப்பொருளுக்கு உரித்த பாடல்கள் என்ற விதத்தில் புறநானூறில் 2,15,26,93,166,224,361,362,400 ஆகிய ஒன்பது பாடல்கள் உள்ளன. இரு பாடல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
வேதம் அந்தணர் பற்றிய செய்திகளை மட்டும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோவத்தை – அடுக்கத்து
சிறுதலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்
முத்தீ விளக்கின் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே!
புறநானூறு பாடல் 2 (வரிகள் 17 முதல் 24 முடிய)
முரஞ்சியூர் முடிநாகராயர் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனைப் புகழ்ந்து பாடிய பாடலில் வரும் வரிகள் இவை.
பால் புளிக்கலாம். பகல் இரவாகலாம் நான்கு வேத நெறியும் திரிந்து போகலாம், ஆனால் உன்னைச் சேர்ந்தோர் மாற மாட்டார்கள். ஒழியாது நெடுங்காலம் விளங்கி துளக்கமின்றி நிற்பாயாக! சிறிய தலை, பெரிய கண் கொண்ட பெண் மான்கள், அந்தணர்கள் அந்தி வேளையில் செய்யும் கடமையில் ஆகுதியைச் செய்யு எழும் முத்தீ விளக்கில் உறங்கும். பொற்சிகரங்களை உடைய இமயமும் பொதியமும் போல நீ நீடூழி வாழ்வாயாக!
இதில் வேதநெறி ஒருநாளும் திரிந்து போகாது என்பதையும் அந்தணர் மாலை சந்தியாகாலத்தில் ஆற்றும் கடமையைப் பற்றியும் அழகுறச் சொல்கிறார் புலவர். ஆகுதியைச் சொரியும் முத்தீ பற்றிய செய்தியும் இங்கு சொல்லப்படுகிறது. இமயமும் பொதியமும் ஒரே பாடலில் அடுத்தடுத்து வருவது சங்க இலக்கியம் சுட்டிக் காட்டும் பாரத தேச ஒருமைப்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறது.
பொதியமும் ஆல்ப்ஸும் போல் வாழ்க என்று சொல்லவில்லை. ஒரே தேசத்தில் இருக்கும் போற்றப்படத் தக்க இரு மலைகள் நீடூழி காலம் இருப்பது போல நீ புகழுடன் வாழ்வாயாக என்கிறார் சங்கப் புலவர். அவர் நாக்கு தங்க நாக்கு. அந்த மன்னவன் அழியாமல் இன்றும் நம் உணர்விலும் உயிரிலும் தமிழ் வழியே கலந்து நிற்கிறான்!
பண்டு தொட்டு இருந்து வரும் புகழத் தக்க நல்ல பழக்கங்களே உண்மையே பேசும் புலவர் நாக்கில் வந்து துள்ளி விழும் என்பதற்கான எடுத்துக்காட்டுப் பாடலும் ஆகும் இது!
இந்தப் பாடலில் ம்காபாரத சம்பவமும் வருகிறது. அதை ஆய்வின் உரிய இடத்தில் காண்போம்.
இன்னொரு பாடலைக் காண்போம்:
பாடல் 93இல் வரும் வரிகள் இவை:
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புற் பரப்பினர் (வரிகள் 7,8)
இங்கு அறத்தை விரும்பிய கொள்கையை உடைய நான்குமறைகளை உடைய அந்தணர் நல்ல கூற்றிலே பொருந்திய பசுமையான தர்ப்பைப் புல்லைப் பரப்பினர் என வருகிறது.
அதியமான் நெடுமான் அஞ்சியின் வீரத்தைப் போற்றிப் பாடும் பாடலில் வரும் வரிகள் இவை.
அந்தணர்கள் வாழ்க்கை என்பதே அறத்தைப் போற்றி கடைப்பிடிக்கும் வாழ்க்கை என்பது அந்தக் காலத்திலேயே தர்ப்பையைப் பயன்ப்டுத்தும் பயன்பாடு இருந்ததும் இதிலிருந்து தெரிய வருகிறது.
இன்றும் அந்தணர் பவித்ரம், கூர்ச்சம் ஆகிய தர்ப்பையிலான விசேஷ பசும்புல்லைப் பயன்படுத்துவது தொன்று தொட்டு இருந்து வரும் பழைய பண்பாட்டுச் சடங்குகள் அறுதலின்றித் தொடர்கிறது என்ற வியப்பூட்டும் செய்தியை விளக்குகிறது.
இந்த அந்தணர், அற வாழ்க்கை, தர்ப்பைப் பயன்பாடு என்பதெல்லாம் தமிழர் வாழ்க்கை ஏற்றுக் கொண்ட ஒரு அங்கம். அது பொய்யில் புலவர்கள் போற்றும் பொருளாக இருந்ததையும் சங்க இலக்கியம் உணர்த்துகிறது.
இரண்டு பாடல்களிலேயே சில வரிகளிலேயே இவ்வளவு செய்திகள். இன்னும் சில பாடல்களை அடுத்துக் காண்போம்.
-தொடரும்
குறிப்பு: சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் (1950இலிருந்து) எழுந்த விளக்கவுரைகளில் பெரும்பாலானவை ஒரு விளக்கத்தையும் தராது என்பதை சுலபமாக பழைய உரைகளை ஒப்பிட்டுக் கண்டு விடலாம். இதை ஒரு செயல்பயிற்சியாக வைத்து பல உரைகளையும் ஒப்பு நோக்கி ஆராய்பவர் விளக்கவுரைகளை எழுதுபவரின் ‘அறிவை’ நன்கு அறிய முடியும் என்பது திண்ணம். பாடலை நாமே படிப்பது எப்போதுமே பயன் தரும். வல்லார் வாய் விளக்கம் கேட்டால் அது உட்பொருளையும் கண்டுணர வழிவகை செய்யும்..