சாதியைப் பற்றித் தமிழ்ஹிந்துவிலும் பிற தளங்களிலும் எழுதப்படும் கட்டுரைகளிலும் மறுமொழிகளிலும் சைவநாயன்மார்கள் அறுபத்துமூவரில் ஒருவரான, திருநாளைப்போவார் நாயனார் என்று போற்றப்படுபவரான நந்தனார் பற்றிக் கட்டாயம் பேசப்படுகின்றது.
மூதறிஞர் இராஜாஜி போன்றவர்களால் சமூகஒற்றுமை குறித்து நந்தனார் வரலாறு பேசப்பட்டால், பகுத்தறிவாளர் என்றும் சமூகப்புரட்சியாளர் என்றும் தம்மைப் பிரகடனப் படுத்திக் கொள்வோரால் சமூகக் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் பார்ப்பன சமூகத்தின்மீது வெறுப்பை உமிழ்வதற்கும் அச்சமூகத்தை சாதிக்கொடுமைக் காவலர்களாகவும் மனிதநேயமற்ற அரக்கர்களாகவும் காட்டுவதற்கும் பயன் படுத்தப்படுகின்றது.
நந்தனார் வரலாற்றை முதன்முதல் முழுமையாகக் கூறும் தெய்வச்சேக்கிழாரின் உள்ளக் கருத்திலிருந்து இவர்கள் எத்துணை தூரம் விலகிச் செல்லுகின்றார்கள், நந்தனாரைத் தங்கள் சமயத் தலைவராக, நாயனாராக ஏற்று வழிபடும் சைவர்கள் எப்படி நோக்குகின்றார்கள் என்பன சிந்திக்கத் தக்கனவாகும்.
தொகை வகை விரி:
திருநாளைப்போவார் நாயனாரை, முதன் முதலில் நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்திநாயனார், தம்முடைய திருத்தொண்டத் தொகையில்,
‘செம்மையே திருநாளைப் போவார் அடியாருக்கும் அடியேன்’
என்று குறிப்பிடுகின்றார். இத்தொடரில் உள்ள ‘செம்மை’ இங்குச் சிவனிடத்தில் அவருக்கு இருந்த நீங்காத பத்திநிலையை உணர்த்தும். செம்மைபுரி சிந்தையராய்த் திருநாளைப்போவார் என்ற பெயர் வாய்ந்த பெரியவருக்கும் நான் ஆளாவேன்’ என்பது இத்தொடரின் பொருளாகும்.
திருத்தொண்டத் தொகை எழுந்தவரலாறு திருத்தொண்டத்தொகைக்குத் தமிழ்ச் சைவர்கள் தரும் ஏற்றத்தை விளக்கும்.
‘மாதவஞ்செய் தென்திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டத் தொகைதர’,
நம்பியாரூரர் திருவெண்ணெய்நல்லூரில் சைவவேதியர் குலத்தில் திருஅவதாரம் செய்தார்.
நம்பியாரூரர் தம்முடைய சாதியாகிய சைவவேதியர் குலத்தில் தோன்றிய புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாரின் திருமகளாரைத் திருமணம் செய்துகொள்ளும்போது மறையவராக இறைவர் வந்து தடுத்தாட்கொண்டார். அப்பொழுது நம்பியாரூரர் தம்முடைய பிறப்பின் வழிச் சாதியை உயர்த்திப் பேசும் முறையில் “ஓரந்தணன் மற்றோர் அந்தணனுக்கு அடிமையாகும் வழக்கு உலகில் உண்டோ” என்று வாதிட்டார்.
சைவராஜதானியாகிய திருவாரூரிலே, திருத்தேவாசிரிய மண்டபத்திலே, ‘மண்மேல் மிக்கசீர் அடியார் கூடி , எண் இலார் இருந்த போதில்’ அவர்களைகண்டு, ‘இவர்க்கு யான் அடியேன் ஆகப் பண்ணும் நாள் எந்நாள்? ‘ என்று பரமர்தாள் பரவிச் சென்றார். பிறப்பால் தோன்றிய சாதி வேறுபாடு, ‘பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழும்’ தொண்டக் குலத்தில் அழிந்து விடும் என்று சிவபரம்பொருளே உணர்த்த, ‘ஓரந்தணன் மற்றோர் அந்தணனுக்கு அடிமையாதல் இல்லை’ என்றுதன் சாதிப் பெருமை பேசிய சுந்தரர், ‘திருநீலகண்டக் குயவனாருக் கடியேன்’, பாணனாருக் கடியேன்’ எனச் சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ள சாதியில் பிறந்த அடியாருக்கும் அடியேன்’ என்று தம் அடிமைத் திறத்தை வெளியிட்டார்.
சிவதொண்டர்கள் இருபிறப்பாளர். தாய்தந்தையரால் வந்த பிறப்பு ஒன்று. அது சாதியைக் குறித்த பிறப்பு. சிவத்தொண்டராதல் இரண்டாம் பிறப்பு. அது பிறப்பால் தோன்றிய சாதியை அழித்துத் தொண்டர் அனைவரையும் ‘சிவகோத்திரத்தினர்’ ஆக்குகின்றது.
நம்பியாரூரர் திருத்தொண்டத்தொகை பாடியருளும்போது, ‘திருநாளைப் போவார்’ என்ற திருநாமம் மட்டுமே இறையருளால் அறியப் பெற்றிருந்தது. அவருடைய இயற்பெயர் முதலியன எதுவம் அறிய வராநிலையில், நம்பியாரூரர், ‘திருநாளைப் போவார் அடியாருக்கும் அடியேன்’ என்று பாடியருளினார்.
நம்பியாரூரருக்குப் பின் , திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையார் திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளுக்குத் திருநாளைப் போவாரைப் பற்றிய மேலும் சில செய்திகள் தெரிய வந்தன. நம்பிகள் தாம் அருளிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’யில் திருநாளைப் போவாரின் வரலாற்றை ஒரு பாடலில் பாடினார். அப்பாடல் –
“நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்
போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலை போய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே”
(திருத்தொண்டர்திருவந்தாதி, 20)
இந்தப் பாடலில் நாம் பெறுகின்ற செய்திகள்:
1. திருநாளைப்போவாரின் பிறப்பிடம் பொழில்கள் சூழ்ந்த ஆதனூர்.
2. புலைச்சாதியினர்.
3. தில்லையம்பலவாணரின்மேல் அளப்பரும் பத்தி உடையவர்.
4. தில்லையம்பலவாணர் அருளால் புன்புலை நீங்கப் பெற்றார்.
5. தில்லை மூவாயிர அந்தணரும் கைகுவித்துத் தொழும்படியான முனிவராயினார்.
6. ‘புறத்திருத் தொண்டன்’ என்றமையால் அவரது மரபும், தொண்டராயின நிலையும், மரபுக்கு ஏற்ப அவர் செய்த திருத்தொண்டுகளும் குறிக்கப்பட்டன.
நம்பியாண்டார் நம்பிகள் கூறிய செய்திகளுக்கு மேல் தெய்வச்சேக்கிழார், – அவர் சோழப்பேரசின் முதலமைச்சர் என்னும் தகுதியினார், பலசெய்திகளை அறிந்து, திருநாளைப் போவாரின் வரலாற்றை விரிவாகப் பாடினார். இவருடைய இயற்பெயர் நந்தனார் என்பதைச் சேக்கிழார்தாம் முதலிற் கூறினார்.
புலைச்சாதியிற் பிறந்து தம்முடைய முன்னுணர்வினால் சிவபத்தியை வளர்த்துக் கொண்ட நந்தனாரின் மனநிலையை சேக்கிழார் மிகத் தெளிவாகவும் யதார்த்தமாகவும் எடுத்துக் காட்டியுள்ளார்.
நந்தனாரின் மனநிலையை எடுத்துப் பேசும் முன் அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் புலைப்பாடியின் நிலைமையை சேக்கிழார் சொல்லோவியமாகத் தீட்டுகின்றார். அவர் பிறந்த குடியும் வாழ்ந்த சூழ்நிலையும் அவருடைய மனநிலையை உருவாக்கின.
இலைக்கூரை வேயப் பெற்ற குடிசைகள், அவற்றின் மீது சுரைக்கொடிகள், ஒழுங்கற்ற தெருக்கள், அவற்றில் குஞ்சுகளுடன் அலைந்து திரிந்து மேயும் கோழிகள், வார்கள் நெருங்கிய முற்றங்கள், அங்குக் கூரிய நகங்களையுடைய நாய்களின்குட்டிகளைக் கவர்ந்து அலைத்து விளையாடும் இரும்புக்காப்பணிந்த சிறுவர்கள், அந்த நாய்க்குட்டிகளின் மெல்லிய குரைப்பு சிறுவர்கள் இடுப்பில் அணிந்துள்ள இரும்புச் சதங்கையின் ஒலியை அடக்கி ஒலித்தல், பள்ளப்பெண்கள் மருதமரத்தின் கிளையில் கட்டித் தொங்கவிட்டுள்ள தோலாலான தொட்டிலில் குழந்தைகளை உறங்குவித்தல், வஞ்சி மரங்களின் மெல்லிய நிழலடியில் புதிக்கப்பட்ட பானைகளில் கோழிப் பெடைகள் முட்டையுடன் அடைகாத்தல், வார்க்கட்டினை உடைய தோற்பறைகள் தொங்குகின்ற மாமரங்கள், வங்குள்ள தென்னை மரங்கள், அவற்றினுள் அண்மையில் ஈன்ற குட்டிகளுடன் உறங்கும் தாய் நாய்கள், கடைஞர்களை வினை செய்யக் கூவும் கொண்டையுடைய சேவல்கள், காஞ்சிமரத்தின் நிழலில் நெல்குறும் புலைமகளிரின் பாட்டொலி, நெற்கதிர்களைக் கூந்தலிற் செருகிய மள்ளத்தியர் பறையொலிக்கு ஏற்ப கள்ளூண்டு களிக்கும் மள்ளருடன் கூத்தாட்டயருதல் எனும் இத்தகைய சூழலில் நந்தனார் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்றார்.
நந்தனாரின் வாழ்க்கைப் போராட்டம்
இத்தகைய இயல்புடைய புலைப்பாடியில் பிறந்து வளர்ந்த நந்தனார், இப்பின்னணியில் வாழும் மக்களைப் போலவே வாழ்தல்தான் இயற்கைநெறி. இந்தச் சூழ்நிலையை எதிர்த்து வாழ்ந்தால், அந்த வாழ்க்கை போராட்டமாகத்தான் ஆகும். அத்தகைய போராட்ட வாழ்வை விரும்பி நந்தனார் மேற்கொண்டார். இவ்வாறு புலைப்பாடியை வருணித்த சேக்கிழார், “ நந்தனார் என ஒருவர் உளரானார் “ எனக் கூறினார். அந்தப் புலைப்பாடியின் சூழ்நிலைக்கு ஒத்தியங்கி வாழ்ந்த பிறரெல்லாம் மறைந்து போக, எதிர்நீச்சலிட்டுச் செயற்கரிய செய்த பெரியோராகிய நந்தனார் இன்றும் உளரானார் என்பது சேக்கிழார் கருத்து.
அந்தப் புலைப்பாடியில் வாழும் மக்களின் மனநிலைக்கு முற்றும் வேறுபட்ட மனநிலையில், “பிறந்து உணர்வு தொடங்கியபின்” சிவபிரானிடத்தில் “சிறந்து எழுங்காதலினால் , செம்மைபுரி சிந்தையராய், மறந்தும் அயல் நினைவு இன்றி” வாழ்ந்தார். (செம்மை என்றால் சிவம்பதம்.’செம்மையேயாய சிவபதம் அளித்த செல்வமே’ திருவாசகம்)
நந்தனார், தம் குலத்தில் தோன்றிய பிறரைப் போலவே ‘பறைத்துடவை’ எனும் மானியம் பெற்று ஊரிலே பறையடித்தல் முதலிய தம் குலத்துக்குரிய தொழில்களைச் செய்து வாழ்ந்தார். இவர் குலத்தொழில் செய்வதனைச் சேக்கிழார், ‘சார்பினால் தொழில் செய்வார் தலைநின்றார் தொண்டினால்’ என்றார். புலையர் பிறவியின் சார்பினால் வரும் மரபுத் தொழிலைச் செய்தாரென்றாலும் தம் சாதி மக்களிலிருந்து வேறுபட்டுச் சிவதொண்டிலும் தலைநின்றார் என்பது கருத்து. ‘கூரிலைய முக்குடுமிப் படையண்ணல்’ கோவில்கள்தோறும் பேரிகை, முரசு முதலிய இசைக்கருவிகளுக்கு வேண்டிய தோல் , வார் முதலியனவற்றையும், யாழுக்கும் வீணைக்கும் தேவைப்படும் நரம்புகளையும், சிவபெருமானுடைய அருச்சனைகளுக்குரிய கோரோசனை ( கோரோசனை பசுவின் வயிற்றினின்றும் எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ளதொரு வாசனைப் பண்டம். இது இறைவனது திருமெய்ப்பூச்சுச் சந்தனக் குழம்புக் கலவைக்கு உதவுவது) முதலியவற்றை உதவி வந்தார்.
வார், தோல், கோரோசனம் முதலியன இவருடைய குலத்தொழிலில் எளிதாகக் கிடைப்பன. இப்பொருள்களை விற்றுத் தம் வயிறு வளர்க்கும் பொருள்களாக்காமல் சிவன் திருக்கோவில்களுக்கு அளித்துச் சிவத்தொண்டுக்கு உரிய பொருள்கள் ஆக்கினார் . சிவார்ச்சனைக்கு உதவுவது முற்பிறப்பின் உணர்வினால் நந்தனார் உள்ளத்தில் பெருகிய ஆசையின் விளைவாகும். அந்த ஆர்வத்தைத் தூண்டியது, ஆதனூரில் இருந்த சிவன் திருக்கோவில். ஆதலின், ஆதனூரின் பெருமையை, “ நீற்றலர்பே ரொளிநெருங்கும் அப்பதி” என்றார், சேக்கிழார். (அப்பகுதி நீறுபூசும் அடியார்கள் கூட்டம் மிகுந்துள்ளது, திருநீற்றுச் சார்பினால் உளதாகும் சிவஞானப் பேரொளி நந்தனார், திருநாளைப் போவார் நாயனார் ஆக ஏதுவாக அமைந்தது என்பது குறிப்பு) இவை உடலால் அவர் செய்த சிவத்தொண்டு. பிறந்தது புலைப்பாடி யென்றாலும் புலைப்பாடியில் வாழும் ஏனையோரின் மனநிலைக்கு வேறுபட்ட மனநிலையுடையராய், சிவனடியாராய் வாழ்வதற்கு ஏதுவாக அமைந்தது, திரு ஆதனூர் சிவன் திருக்கோயில்)
அத்துடன்,
‘பாடவேண்டும் நான்போற்றி நின்னையே,
பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்-
காடவேண்டும் நான்”
என மணிவாசகர் விரும்பியபடியும்,
“ஆடுவதும் பாடுவதும் ஆனந்தமாக நின்னைத்
தேடுவதும் நின்னடியார் செய்கை பராபரமே”
எனத் தாயுமானார் கூறும் படியும், நந்தனார், சிவன் திருக்கோயில்களில் திருவாயில் புறம் நின்று, ”மெய்விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும், அவ்வியல்பில் பாடுதலும்” செய்தார். இவ்வாறு ஊனும் உயிரும் கலந்து சிவத்தொண்டில் நந்தனார் ஈடுபட்டிருந்தார்.
இவ்வாறு இவர் வாழும் நாளில் இவருக்குத் தில்லைத் திருத்தலத்தைத் தரிசிக்கும் ஆவல் மூண்டெழுகின்றது. தில்லை சைவர்களுக்கெல்லாம் பெருங்கோவில் அல்லவா!
நந்தனாரின் மனநிலை
அவருக்குத் தில்லையைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை என்று பிறந்ததோ அன்றுமுதல் அவருடைய மனம் அவருடைய விருப்பத்திற்கு எதிராக நின்றது. அவருடைய மனமே அவருக்கு எதிரியாக இருந்தது.
இரவெல்லாம் துயிலாது கண்விழித்துத் தில்லையையே நினைந்திருப்பார். புலர்ந்தவுடன், ‘ அத்திருத்தலத்தில் சேரும் தன்மை நான் பிறந்துள்ள எனது குலத்தினொடு பொருந்துவதில்லை’ என்று எண்ணி, ‘இதுவும் எம்பெருமானுடைய ஏவலே’ என்று தில்லைக்குப் போகும் முயற்சியை ஒழித்திடுவார். ஆயினும் ஆசை மேன்மேலும் அதிகரிக்க ‘நாளைப்போவேன்’ என்பார். ‘நாளைப் போவேன்’ என நாட்கள் பல கழிந்தன. இக்காரணத்தாலேயே இவருக்குத் திருநாளைப் போவார் நாயனார் என்ற காரணப் பெயரும் தோன்றியது.
தில்லையைத் தரிசனம் செய்தவர்களுக்குப் பிறவி இனி இல்லை என்ற மரபுவழி சொல்லப்படுகின்ற மொழியை நினைந்து, தில்லைத் தரிசனமாம் நற்செயல் செய்வதில் இனிக் காலம் தாழ்க்கலாகாது எனப் ‘பூளையின் பூப்போன்ற பிறவியாகிய பிணிப்பு’ ஒழிய’ அங்குப் போகத் துணிந்து எழுந்தார். வழியிலுள்ள திருநின்றியூர், திருநீடூர், திருப்புள்ளிருக்குவேளூர் முதலிய தலங்களில் முன் கூறியவாறு வழிபட்டார்.
நந்தனார் தில்லையின் மருங்கு அணைந்தார். தில்லையின் திருவெல்லையை வணங்கி எழும்பொழுதில், அங்கு வேதியர் ஆற்றும் வேள்விச் செந்தீயில் எழுகின்ற புகைப் படலத்தைக் கண்ணுற்றார். வேதியர்கள் மறைகளை ஓதுகின்ற திருமடங்களும், அந்தணச் சிறார்கள் வேதம் பயிலும் பெருங்கிடைகளும் கண்டார். அங்கு மறையோதும் ஒலியையும் செவியுற்றார். இவை அவருடைய மனத்தில் அவர் பிறந்த குலத்தின் நிலையை நினைவூட்டின. ‘தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்.’ என்று சேக்கிழார் கூறுகிறார். குறைவுடைய தமது குலச் சார்பினால், வேள்விச்சாலைகள், வேதம் பயிலும் இடங்கள் ஆகியவற்றின் அருகில் செல்லலாகாது என்று நடைமுறையில் இருந்துவரும் விதி வழக்கம் பற்றி அவர் அவற்றின் அருகில் செல்ல அஞ்சினார்.
தில்லைக்கு நந்தனார் புறப்படுமுன், மனம் எழுவதும் தவிர்வதும் ஆகப் பலநாட்கள் கழிந்தன. ஆயினும் பெருகுகாதலால் உந்தப்பட்டு தில்லையின் எல்லையை அடைந்தபோது வேள்விச்சாலைகளும் மறையோதும் கிடைகளும் அவற்றின் பெருமைகளையும் (காணாராயினும் கேட்டறிந்தமையால்) நந்தனார் நினைந்தார். அப்பெருமைகள் பற்றிய நினைவுகள் அவர் அங்குச் செல்லத் தடைகளாயிருந்தன. இந்தத் தடைகளே தில்லைத் தரிசனம் பற்றிய அவருடைய ஆராக்காதலை மேலும் முருகி எழச் செய்தன. அதனால் தில்லைப் பதியைப் பலமுறையும் வலம் வருவாராயினார்.
பெரியபுராணத்திற்குப் பேருரை வரைந்த சிவக்கவிமணி அவர்கள் நந்தனாரின் இந்த மனநிலையை அழகுற எடுத்துக் காட்டுகின்றார்.
“மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வில்” பெருங்காதலாய் எழுந்த ஆசை இன்னபடித்தென்று சொல்லமுடியாத அளவில் வளர்ந்து மேலும் ஓங்கிற்று. தான் பிறந்த குலத்தைப் பற்றிய தாழ்வுணர்ச்சியும் வேதியர்களின் ஒழுக்கம் பற்றிய பயபக்தியும் அவரைத் தில்லைநகரினுள் புகாதவாறு தடுத்தன. ஆதலால் ‘ உள்ளே போகவும் முடியாமல், விட்டு நீங்கவும் முடியாமல், தேனடைத்த பாண்டத்தினைச் சுற்றும் எறும்பு போலச் சுற்றிச்சுற்றி வருவாராயினர். தாய்ப்பசுவினை ஒரு வீட்டின் உள்ளே வைத்து அடைத்துக் , கன்றினை வெளியே நிறுத்தினால், அக்கன்று அவ்வீட்டினைச் சுற்றிச்சுற்றி வரும் இயல்பு போல’ நந்தனாரும் தில்லைநகரைச் சுற்றிச் சுற்றி வருவாராயினார்.
இவ்வாறு நாட்கள் பல கழிந்தன. ‘மன்றின் நடங் கும்பிடுவது எவ்வண்ணம், திருநடம் கும்பிட இன்னல் தரும் இந்தப் பிறவி ஒருதடை ” என்ற ஏக்கத்தோடு நந்தனார் உறங்கும்போது, “மன்னுதிருத் தொண்டரவர் வருத்தமெலாந் தீர்ப்பதற்கு”, ஒருநாள், அம்பலத்தாடுவார் அவர்கனவின்கண் முறுவலுடன் அருள்செய்தார். “ இப்பிறவி போய் நீங்க, எரியினிடை நீமூழ்கி , முப்புரிநூல் மார்பருடன் என் முன் அணைவாய்” என அம்பலவாணர் மொழிந்தார்.
தில்லைத் திருக்கோயிலுக்குள் நந்தனார் புக அவருடைய மனமே அவருக்குத் தடையாக இருந்தது என்ற உண்மை பெரியபுராணத்தில் திருநாளைப்போவார் புராணத்தில் நன்கு வெளிப்படுகின்றது. நந்தனாருடைய மனத்தினில் சில எண்ணங்கள் நன்கு அழுத்தமாகப் பதிந்து போயிருந்தன (obsession).
அவையே அவருடைய வருத்தங்களுக்குக் காரணமாகவும் இருந்தன.
அவையாவன:.
1. தான் பிறந்த குலம் இழிகுலம்.
2. இழிகுலத்தில் பிறந்த தன்னுடைய உடம்பும் இழிந்தது.
3. இழிந்த இந்த உடம்புடன் தில்லைத் திருக்கோயிலில் நுழைவதும் இறைவன் திருமுன்னர் நிற்பதும் ஆகாது.
4. வேள்வி செய்யவும் மறை ஓதவும் தில்லையம்பலவாணனுக்கு நெருக்கமாக இருந்து தொண்டு செய்யவும் உரிமையுடைய மறையோர் பிறப்பே பிறப்புக்களில் உயர்ந்த பிறப்பு..
தில்லையம்பலவனுடைய திருநடங் கும்பிடப் பெறுவதற்குத் தம்முடைய இழிபிறவியே தடை என்று அவருடைய எண்ணத்தில் ஆழப் பதிந்து இருத்தலினால், அத்தாழ்வுணர்ச்சியினால், இறைவனே அழைத்தாலும் அவர்முன்னே இவர் போகத் துணியார். இந்தத் தாழ்வுணர்ச்சியின் காரணமாக அவர் அடியார்கூட்டத்திலும் தம்மை இணைத்துக் கொள்ள இயலவில்லை.
எனவே, ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான்’ ஆகிய பெருமான் இவருடைய இழிபிறப்பைப் பற்றிய மன அழுத்தத்தை முதலில் போக்க வேண்டும்; அவர் உயர்ந்ததாக நினைக்கும் மறையவர் கோலம் தருதல் வேண்டும். பின்னர் அவரைத் தம் முன்னர் வருவிக்க வேண்டும் எனக் கருதினான். எனவே, இறைவன் “இப்பிறவி போய் நீங்க, எரியினிடை நீமூழ்கி, முப்புரிநூல் மார்பருடன் என் முன் அணைவாய்” என்று அருளிச் செய்து தில்லைவாழ் அந்தணருக்கு எரி வளர்க்க ஆணையிட்டார்.
இறைவனுடைய கட்டளையைக் கேட்ட தில்லைவாழ் அந்தணர்கள் “ அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டினர்” அம்பலவருடைய திருவருளுக்கு ஆளாகிய அன்பரை இதுகாறும் அறியாது இருந்துவிட்டோமே என்னும் வருத்தமே அவர்களுடைய அச்சத்துக்குக் காரணம். “எம்பெருமான் அருள்செய்த பணிசெய்வோம்” என்று தம் அன்பு பெருக திருத்தொண்டனாராகிய நந்தனாரிடம் சென்றனர். சென்று , “ஐயரே! அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந்தோம், வெய்ய அழல் அமைத்து உமக்குத் தரவேண்டி” என விளம்பினர். ( வெய்ய – வெம்மை, விருப்பம்).
மறையவர்கள் அவ்வாறு அறிவித்தபின் நந்தனார், மறையவர்கள் நெருப்பு அமைத்த குழியை எய்தினார்; இறையவர் தாளை மனத்தினில் தியானம் செய்துகொண்டே எரியை வலம் வந்தார். இறைவனின்கழலை உன்னி அழலினுள் புகுந்தார். எரியினுட் சேர்ந்த தீயினிடத்து,
“…… இம்மாயப்
பொய்தகையும் உருவொழித்துப் புண்ணியமா முனிவடிவாய்
மெய்திகழ்வெண் ணூல்விளங்க வேணிமுடி கொண்டெழுந்தார்.”
அதாவது, மாயாகாரியமாகிய பொய் பொருந்திய உருவினை ஒழித்துப் புண்ணிய உருவமுடைய முனிவர் வடிவம் கொண்டு, மார்பினில் வெண்புரிநூல் விளங்கச் சடைமுடியும் கொண்டு மேலெழுந்தனர். செந்தீயின் மேல் வந்து எழுகின்றபோது செம்மலரின் மேல் வந்து எழுந்த அந்தணன் (பிரமன்) போலத் தோன்றினார்.
எரியில் நந்தனார் மூழ்கினார் என்ற செய்தி புத்தாராய்ச்சினருக்குப் பல்வேறு எண்ணங்களை எழச் செய்துள்ளது. தில்லைவாழந்தணர்கள் தில்லைக் கோவிலுக்குள் நுழைவதற்குத் துணிந்த இழிகுலத்தினராகிய நந்தனாரைச் சுட்டெரித்துக் கொன்றுவிட்டனர் என்றும், கீழவெண்மணி நிகழ்ச்சி அன்றே தொடங்கி விட்டது என்றும், சிவபெருமானும் அந்தணச் சார்புடையனாய் நந்தனை பூணூல் தரித்த பர்ப்பனனாய் ஆக்கியே தம் முன் வர அனுமதித்தான் என்றும் இன்னும் பலவாறு திரித்துக் கூறினர். இன்னும் , சிவபெருமான் அனுமதித்தும் நந்தி இழிகுல நந்தனைத் திருக்கோவிலில் நுழைய அனுமதிக்கவில்லை என்றும், சிவன் ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்” என நந்தியை விலகியிருக்கச் செய்ததாகவும் திருப்புன்கூர் நிகழ்ச்சியைத் தில்லை நிகழ்ச்சியாகவும் இவ்வாறு கதையினைத் திரித்தும் உரைத்தனர்.