திருமாலும் பிரமனும் சிவத்தின் அடியையும் முடியையும் தேடி அவமானமடைந்த கதையை முதலில் திருஞானசம்பந்தர் திருமுறைகளில்தான் காண்கின்றோம். திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருப்பதிகம் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குவது. அதன் ஒன்பதாவது பாடலில் இக்கதையைக் கூறுகிறார். அதனைக் குறித்து விளக்குவதற்கு முன் வாசகர்களை வேறு ஒரு பதிகத்திற்கு அழைத்துச் செல்லுகின்றேன்.
கும்பகோணத்திற்கு அருகில் திருச்சிவபுரம் என்றொரு தலம் உள்ளது. கடத்தற்காரர்களின் தயவில் அத்தலத்திலிருந்த நடராஜர் மேலைநாட்டுக்கு ஒரு ‘விசிட்’ போய் வந்ததிலிருந்து இந்தத் தலம் தமிழர் அனைவரும் அறிந்ததொன்றாகி விட்டது. இந்தத் தலத்துத் திருப்பதிகத்தின் முதலிரண்டு திருப்பதிகங்களின் பின்னிரண்டு வரிகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன்.
முதல் பாடலின் பின்னிரண்டு வரி:
“பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில னினில் நிலைபெறுவரே”
இதன் பொருள்: உயிர்கள் தத்தமது வினைக்கீடாக எய்த வேண்டிய எண்ணற்ற பிறவிகளாகிய படைப்புத் தொழிலைச் செய்ய வேண்டும் என்னு சங்கற்பத்துடன் தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனாகிய கோலங் கொண்ட சிவபெருமானது சிவபுரத்தைத் தியானிப்பதாகிய அகப்பூசை புரிபவர்கள் வீட்டுலகத்தில் என்றும் சங்கும் ‘சாயுச்சிய’ நிலையை அடைவார்கள்.
அடுத்த பாடல்:
“அலைகடல் நடுஅறி துயிலமர் வியன்பர னுறைபதி
சிலைமலி மதில்சிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே.”
இதன்பொருள்: உயிர்கள் வாழும் உலகங்கள் உரிய கால எல்லை வரையும் அவை அழியாமல் நிலைபெறும் வண்ணம் அவற்றைக் காக்கும் தொழிலைப்புரியும் திருவுள்ளமொடு திருப்பாற்கடலின் நடுவிலே யோக நித்திரை மேவியுள்ள திருமாலின் உருவம் தாங்கிக் காத்தல் புரியும் இயல்பினைக் கொண்ட சிவபெருமானது மலைகள் போன்ற மதில்களால் சூழப்பட்ட திருச்சிவபுரத்தைத் தியானம் செய்வதாகிய அகப்பூசை செய்பவர்கள் முத்தித் திருவாகிய வீட்டின்பத்தை எய்தி இன்புறுவார்கள்.
மூன்றாவது பாடல்:
“முழுவதும் அழிவகை நினைவொடு முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகும் உலகிலே”
இதன்பொருள்: உலகம் முற்றிலும் மாயையில் ஒடுங்கவேண்டும் என்ற சங்கற்பத்துடன் உலகங்கள் அனைத்தும் தோன்றுவதற்குக் காரணமாக நின்ற முதல்வனான இறைவனே அச்சங்கற்பம் செயலாவதற்குப் பொருத்தமான உருத்திரன் வடிவங் கொள்ளும் சிவபெருமான் கோயில் கொண்டுள்ள தலமாகிய செழுமையான சிவபுரநகரத்தைத் தொழுமவர் புகழ் பூவுலகிலே மேலும் மிகுதியாகும்.
எனவே, முழுமுதற் கடவுளான சிவமே நான்முகனாகப் படைத்தலையும் திருமாலாக காத்தலையும் உருத்திரனாக ஒடுக்குதலையும் செய்கின்றார் என்பதனைத் திருஞானசம்பந்தர் இம்மூன்று திருப்பாடல்கள் வழியே உணர்த்துகின்றார். எனவே சிவன் ஒருவனே இம்முத்தொழில்களை இம் மூன்று வடிவங்களைத் தாங்கிச் செய்கின்றான் என்பது பெறப்படும். இந்த உண்மையை ஏனைய திருமுறைகளும் கூறும்.
எடுத்துக் காட்டாகக் கருவூர்த் தேவர், திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில்,
“சுருதிவா னவனாம் திருநெடு மாலாம்
……… படர்சடை முக்கட்
பகவனாம் அகவுயிர்க் கமுதாம்
எருதுவா கனனாம் எயில்கள் மூன்றெரித்த
ஏறுசே வகனுமாம்”
எனப் பாடுவதை காண்க.
சிவன் தானே இம்முச்செயல்களையும் செய்யும் நிலை சம்பு பட்சம் எனப்படும். சம்- இன்பம்; பு – உண்டாக்குபவன். சம்பு என்பது இன்பம் உண்டாக்குபவன் என்ற பொருளில் சிவனுக்கு உரிய பெயர்களில் ஒன்றாம். இதுவே சங்கரன் எனவும் வழங்கும். ‘இன்பஞ் செய்தலின் சங்கரன்’ எனக் காஞ்சிப் புராணம் கூறும். சம் – இன்பம்; கரன் – செய்பவன்.
சிவமாகிய இறைவன் பக்குவப்பட்ட ஆன்மாக்களை அதிட்டித்து இம்முத்தொழில்களையும் தன் ஆணை வழியே நடத்தும் அதிகாரத்தை அளிக்கின்றான். இவ்வாறு இறைவனால் அதிட்டிக்கப்பெற்ற ஆன்மாக்கள் அணுபட்சம் எனப்படுவர். அணு என்பது ஆன்மாவைக் குறிக்கும். இறைவன் ஆணை வழி நடக்கும் ஆன்மாக்களாகிய இவர்களுக்கும் பிரமன், திருமால், உருத்திரன் என்ற பெயர் உண்டு. இவர்களை மணிவாசகர் ‘சேட்டைத் தேவர்’ என்னும் பெயரால் குறிப்பிடுவார்.
அணுபட்சத்தில் உள்ள ஆன்மாக்களாகிய அயனும் அரியும் பிற தேவர்களும் பிறப்பிறப்பிற்பட்டு உழல்பவர் என்றும் சிவன் ஒருவனே பிறப்பிறப்பில்ல முழுமுதல் என்றும் திருமுறைகள் கூறும்.
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடி நாராயண ரங்ஙனே;
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்;
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே” (அப்பர்)
சம்புபட்சம், அணுபட்சம் பற்றிய விரிவான செய்திகளை சிவஞானபோதம் – இரண்டாம் சூத்திரத்து மாபாடியத்தில் காணலாம்.
சம்புபட்சத்தின்படி சிவனே பிரமன், சிவனே திருமால், சிவனே உருத்திரன். சிவனே பிரமனாகத் தன் முடியையும் திருமாலாகத் தன் அடியையும் தேடினான் என்பது அபத்தம்.
பின் சிவனின் அடிமுடி தேடிய பிரமனும் திருமாலும் யாரெனில் அந்த உயர் நிலையடைந்த ஆன்மாக்களே ஆவர். அணுபட்சத்தினராகிய அவர்கள் அசுத்த மாயையின் ஆட்சிக்கு உட்பட்டனவே. அந்த மாயையின் மயக்கினால் அறிவு மயங்கிக் குற்றமிழைத்துத் தண்டமும் பெறுவர். அந்தக் கதைகளை நாம் புராணங்களில் காண்கிறோம். கடும் முயற்சிக்குப் பின் பெரிய பதவியை அடைந்து பதவிச் சுகத்தால் பெருந்தவறு இழைப்பவர்களை உலகியலிலும் காண்கிறோம்..
திருஞானசம்பந்தர் தம்முடைய திருப்பதிகங்களில் ஒவ்வொரு ஒன்பதாம் பாடலிலும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு முதலும் ஈறும் இல்லாத சிவபரம்பொருளின் அடிமுடிகளைக் காண முற்பட்டுப் பங்கப்பட்டவர்களாகக் கூறப்பட்டவர்கள் பிரமன் திருமால் பதவியில் இருந்த ஆன்மாக்களே.
எப்படி சக்தி வழிபாடும், முருகவழிபாடும், விநாயக வழிபாடும் சிவவழிபாடோ அப்படியே திருமால் வழிபாடும் சிவவழிபாடே. சைவதத்துவ அடிப்படையில் அந்த மூன்றையும் தனித்தனியே பிரிந்து போகாமல் சைவம் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. திருமாலைத் தனியாகப் பிரித்துக் கொண்டு போனவர்களைத் தடுக்க முடியவில்லை.
ஆனால் திருமால் வழிபாடு சிவவழிபாட்டில் ஓரங்கமாகவே இன்றும் இருந்து வருகின்றது. சிவனை விட்டுப் பிரியாத, குணகுணி சம்பந்தமுடைய அவனுடைய திருவருளே சிவசத்தி எனப் பெண்பாலாகப் பேசப்படுகின்றது. அந்தத் திருவருளே ஆண்வடிவில் திருமாலாகச் சைவம் கொள்ளுகின்றது. எனவே, பழைமையான சிவன் திருக்கோவில்களில் அம்பிகையின் சந்நிதிக்கருகில் திருமால் சந்நிதி கட்டாயம் இருக்கும்.
சைவம் போற்றும் சப்தகுருமார்களில் (குருக்கள் எழுவர்) தலைமைக் குருவாகத் திருமால் வழிபடப்படுகின்றார்.
“திருமால் இந்திரன் பிரமன் உபமனியன்
தபனன் நந்தி செவ்வேளாதி
தருமமுது குரவருக்குந் தனதருளால்
ஆசிரியத் தலைமை நல்கி
வருமெவர்க்கும் முதற்குருவாய் மெய்ஞ்ஞான
முத்திரைக்கைம் மலரும் வாய்ந்த
உருவழகும் குறுநகையும் காட்டியருள்
தருஞ்சிவனை உளத்தில் வைப்பாம்”
– சிவதத்துவ விவேகம், பாயிரம்.
சிவதத்துவ விவேகம் அப்பைய தீட்சிதர் அவர்களால் இயற்றப்பட்ட நூல். இது திராவிட மாபாடிய கர்த்தர் மாதவச் சிவஞானயோகிகளால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. நாராயணன் முதலிய திருமாலின் நாமங்கள் சிவனுக்கு உரியனவேயாதலால் சைவர்கள் அந்தப் பெயர்களைச் சூட்டிக் கொள்வது இன்றும் உண்டு.
விஷ்ணுவுக்குச் சைவசமயம் எத்தகைய இடத்தைத் தந்துள்ளது எனத் தெளிவிக்க மற்றொரு சான்று. இது சைவ சாத்திரமான பரிபூரணானந்த போதம் கூறுவது.
”சைவத்து அச்சுதனை உயிரெனச்
சாற்றினுந் தாவில்
மெய்வத்து ஆயசிவ சத்தியின்
மேனி இஃது என்றும்
தொய்யற் றூயசிவ பேதமுள்
ஒன்று என்றும் சொலலால்
பொய்வத்து அன்றுஇது என்றுஉரன்
கோடலும் பொருந்தும்”
இதன்பொருள்: சைவநூல்களில் விட்டுணுவைப் பசு (ஆன்மா) என்று கூறினாலும், அழிவற்ற உண்மைப் பொருளாகிய சிவசத்தியின் உருவம் இது என்றும், ஆனந்த சுத்தசிவத்தின் ஒன்பது பேத வடிவங்களில் ஒன்று என்றும் கூறப்படும் சம்பிரதாயம் உண்டு. ஆதலால் விட்டுணு கற்பித தெய்வமன்று.
“சம்பு மார்க்கம் ஏய்ப்பவே
சனார்த்தனன் நெறிக்கணும்
அம்பரத்தை மேவு ஞான
வான்களோடுய் அன்பரும்
உம்பர் வாழ்த்த வேயு ளாரென்று
ஓது நூலுணர்ந் துளோர்
வம்பு பேசிடார்மெய்ஞ் ஞான
வாழ்விற் பேத மில்லையே”
இதன்பொருள்:சைவமதத்திலே ஞானாகாசத்தை அடந்துள்ள ஞானவான்களோடு, பத்தி மார்க்கம் பற்றி வாழும் அடியரும் தேவர்களும் வாழ்த்தும்படி உள்ளமை போல, வைணவத்திலும் அத்திறமுள்ளவர்கள் உள்ளார் என்று உரைக்கும் நூல்களை அறிந்தோர் குதர்க்க வாதத்தில் தலையிடார். ஞானத்தாலாகும் முத்தி வாழ்க்கையில் பேதமில்லை.
இந்தச் சான்றுகளால் திருமாலைச் சிவசத்தியின் ஒருவடிவமாகப் போற்றுகின்றதென்பதும் ஞானமார்க்கத்தைக் கைக்கொண்டு ஒழுகும் வைணவரும் சைவம் கூறும் முத்தியை அடைவர் என்றும் ஞானத்தாலாகும் முத்தியில் சைவ வைணவ பேதமில்லை என்பதும் சைவத்தின் கொள்கை என்பது தெளிவாகும்.
எனவே இந்தக் கதை சமயச் சண்டையைத் தூண்டும் என்பது அறியாமை.
இதற்கு முன்பு வந்த ஒரு கட்டுரைக்கான ஒரு மறுமொழியில் குறிப்பிடப் பட்ட புத்தூரார் கூறியது பற்றிக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. மற்றொரு மறுமொழியில் போற்றுதற்குரிய சுவாமி சித்பவானந்தா அவர்கள் கூற்றாக இவ்வாறு குறிப்பிடப் பட்டது – “தற்பெருமை பூண்டிருந்த திருமாலும், படைப்புத் தெய்வமும் பரமனுடைய அருளுக்குப் பாத்திரமாகாது என்றென்றும் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்னும் கருத்தையும் திருவாசகத்தில் அவர் அடுத்தடுத்து சில இடங்களில் இயம்பியுள்ளார். தத்துவத்துக்கு ஒவ்வாத இக்கருத்து சமயப் பிணக்கை வளர்க்கும்; சான்றோர்க்கு இது ஏற்புடையதாகாது.” இவ்வாறு கூறியது சரியல்ல. சுவாமி சித்பவாநந்தா அவர்களால் இந்து மதத்திற்குப் பொதுவான பல நன்மைகள் விளைந்தன என்பது உண்மையே. ஆனால் அவர் திருமுறைகளையும் சைவசித்தாந்த சாத்திரங்களையும் முறையாகப் பயின்றவர் அல்லர். தத்துவ விளக்கத்திற்கே இந்தக் கதை கூறப்பட்டது. இதனால் மாணிக்கவாசகரின் உள்ளத்தை அவர் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகின்றது.