திருஞானசம்பந்தப் பெருமான் மங்கையர்க்கரசியாரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு எழுந்தருளுகின்றார். மதுரையின் எல்லைக்கு வந்தவுடன் விண்ணுயர்ந்த திருவாலவாய்க் கோபுரம் தெரிகின்றது. உடன் வந்த அடியார்கள் இதுதான் திருவாலவாய் என்று காட்டுகின்றனர். ஆலவாய் அழகனோடு அவனுக்கு நாளும் பணிசெய்து ஏத்தும் பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் ஆகிய இருவரும் ஞானபோனகரின் நினைவுக்கு வருகின்றனர். இருகை மலர்களையும் எடுத்து உச்சிமேல் வைத்துப் பணிந்து பேரன்பால், “மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை” என்றெடுத்து, மங்கையர்க்கரசியாரையும் குலச்சிறையாரையும் சிறப்பித்துத் திருப்பதிகம் பாடினார். திருப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியும் இவ்விருவரால் பணிசெயப்பெறும் புகழுடைய “ஆலவாயாவது இதுவே” என முடிகின்றது. இத்திருப்பதிகத்தின் ஒற்றைப்படையெண்ணுள்ள பாடல்கள் மங்கையர்க்கரசியாரையும் இரட்டைப்படை எண்ணுடைய பாடல்கள் அமைச்சர் குலச்சிறையாரையும் போற்றுகின்றன.
குலச்சிறையாரின் திருப்பணியைப் போற்றும் இப்பதிகத்தின் இரண்டாவது பாடல்:
“வெற்றவே யடியார் அடிமிசை வீழும்
விருப்பினன் வெள்ளைநீ றணியும்
கொற்றவன் தனக்கு மந்திரி யாய
குலச்சிறை குலாவிநின் றேத்தும்
ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன்
உலகினில் இயற்கையை ஒழித்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவனுறை கின்ற
ஆலவா யாவதும் இதுவே”
அற்றவர்க்கு அற்ற சிவன்
திருஞானசம்பந்தப் பெருமானின் இந்தத் திருப்பாடலில், ‘உலகினில் இயற்கையை ஒழித்திட்டு அற்றவர்க்கு அற்றசிவன்’ என்ற சொல்லாட்சியின் பரந்த பொருளில் உள்ளத்தைக் கொள்ளை கொடுத்தார், வடலூர் வள்ளலார். “ஞானசம்பந்தப் பெருமான் உரைத்த ‘அற்றவர்க்கு அற்ற சிவன்’ என்ற பொன் போலப் பாதுகாக்க வேண்டிய மந்திர மொழியினை உலகத்தவரின் ஏனைய வீண்மொழியினைப் போல மறந்து விட்டாயே,” என்று குருநாதனாகிய சிவபரம்பொருள் பச்சாதாபத்துடன் பரிந்து தம்மை இவ்வாறு ஏசியதாகக் கூறுகின்றார்.
“எம்பந்த மேநினக்குஇங்கு, இல்லைஎன்றான் மற்றையவர்
தம்பந்தம் எவ்வாறு தங்கியதே – சம்பந்தர்
அற்றவருக் கற்றசிவ னாமெனும்அப் பொன்மொழியை
மற்றைமொழி போன்று மறந்தனையே”
(நெஞ்சறிவுறுத்தல் 524,525)
என்பது வள்ளலார் வாக்கு.
உலகத்தின் இயற்கை
“இன்னா தம்மவிவ் வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.”
(புறநானூறு 194)எனச் சங்கப் புலவன் அறிந்து உரைத்தபடி,
உலக இயற்கையின் உண்மை இயல்பு, உற்று நோக்கினால், தன்னலமும் இம்சையும் பலாத்காரமுந்தான். இயற்கையில் எல்லா உயிர்களின் இயல்பும் சுயநலமே. தன்னை நிலைநிறுத்திக் காப்பாற்றிக் கொள்வதற்கே இயற்கையில் முதலிடம். இந்த உந்துதலின் காரணமாக உயிர் எது செய்தேனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் தீவிரமாக முனைகின்றது. தன்னை முதலில் நிலைநிறுத்திக்கொள்ள அருகில் உள்ளதன்மேலும் ஆதிக்கம் செலுத்தத் தயங்குவதில்லை. அருகில் உள்ளதும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடத் தயங்குவதில்லை. ஆக்கிரமிப்பும் போராட்டமும் இயற்கையின் இயக்கம் ஆகின்றன. வெற்றி பெற்றது தன்னை இருத்திக் கொள்கின்றது. தோற்றது அழிகின்றது. வலிமை உடையது வெல்லுகின்றது; வலிமையற்றது தோற்கிறது; சுருங்குகின்றது; இறுதியில் அழிகின்றது.
கபடமும் வஞ்சனையும் கூட வலிமையற்றதற்குச் சிலசமயங்களில் தன்னை இருத்திக் கொள்ளத் துணையாகின்றன. சூழலுக்கும் நேரத்திற்கும் தக்கபடி கபடமும் வஞ்சமும் உயிரை நெழிவு சுழிவுகளுடன் வாழக் கற்பிக்கின்றன. அச்சமும் போலித்தனமும் பொய்ம்மையும் வாழ்க்கையின் அடித்தளம் ஆகின்றது. பச்சோந்தித்தனம் இயற்கை நியதி ஆகின்றது.
‘கூர்தல் அறம்’ என்றும் ‘உள்ளது சிறக்கும்’ (survival of the fittest) என்றும் ‘பரிணாமம்’ என்றும் அறிவியல் இதில் ஓர் ஒழுங்கைக் காண முனைகின்றது.
உலக நியதி
உலக நியதியும் இந்த இயற்கை நியதியைப் பெரும்பாலும் நியாயப்படுத்துகின்றது.
சிலப்பதிகாரம், வேட்டுவ வரியில், தெய்வமுற்று ஆடின சாலினி என்னும் மறக்குடிப் பெண்ணின் வாயிலாக இந்த உலக நியதியை எடுத்தியம்புகின்றது.
“கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன்
வல்வி லெயினர் மன்றுபாழ் பட்டன
மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது
அறக்குடி போல அவிந்து அடங்கினர் எயினரும்”என்று இயற்கை வழிப்பட்ட உலகநியதியைச் சாலினி என்ற மறக்குலப்பெண் அறிவிக்கின்றாள்.
.. .”வலிய வில்லுகளை உடைய எயினர் மன்றுகள் இன்று பாழ்பட்டன; பகைவர்களுடைய ஊர்களில் திரண்ட ஆநிரைகள் மிக்கன. எயினர் தங்களுக்கு வழிவழியாய்க் குலத்தொழில்களாகி வருகின்ற வழிப்பறி, பசுக் கவர்தல், கொள்ளை முதலியவற்றால் வருகின்ற செல்வம் குன்றி ‘அறக்குடிகளை’ப் போலச் சினங் குறைந்து செருக்கு அடங்கிவிட்டார்கள்” என்று கூறுகின்றாள்.
இப்பகுதிக்கு உரை எழுதிய குறிப்புரை ஆசிரியர், ‘மறக்குடி அறஞ்செய்யக் கெடும்’ என்று ஒரு வரி எழுதி வைத்திருத்தலை மனத்தில் கொள்ள வேண்டும்.
அறக்குடிபோல மறக்குடி வாழலாகாது. சினம் அடங்குவதும் உயிர்க்கொலைக்கு அஞ்சுதலும் பிற உயிர்களின் வருத்தத்தைக் கண்டு மனமிரங்குதலும் மறக்குடிக்கு ஆகாது. இயற்கை நியதிப்படி இந்த அறவொழுக்கம் மறக்குடியை அழித்துவிடும்.
‘புலி ஆட்டைக் கொல்லாமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால் நானும் கொள்ளையடிக்காமல் இருப்பேன்’ என்று கலைஞர் ஒருகாலத்தில் எழுதிய திரைப்பட வசனம் இந்த இயற்கை நியதி உலக நியதியாகும் போக்கினை எடுத்துக் காட்டுகின்றது.
பசியும் வறுமையும் உடையவன் பசியைப் போக்கிக் கொள்ளவும் வறுமையை நீக்கிக் கொள்ளவும் உணவையும் பொருளையும் வைத்திருப்பவனிடம் அடித்துப் பிடுங்குவதையும் நியாயப்படுத்துவது இந்த இயற்கை நியதியே. கம்யூனிசம், கேபிடலிசம் முதலிய இசங்களின் வளர்ச்சியை இந்த இயற்கை நியதியின் அடிப்படையில் காண முடியும். இயற்கையான தன்னலம் பேணுதலுக்கு இந்த ‘இசங்கள்’ தத்துவார்த்தங்கள் கற்பிக்கின்றன.
சிறியரும் பெரியரும்
திருவள்ளுவர் மக்களை பெரியர் என்றும் சிறியர் என்றும் இருவகையாகப் பிரித்துப் பேசுகின்றார். ஒத்த பிறப்பினராகிய மக்களுள் செய்தற்கெளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்பவர்கள் பெரியர் என்றும் எளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யாதவர்கள் சிறியர் என்றும் மக்களைப் பிரித்துத் தெய்வப் புலவர் பேசுகின்றார்.
சிறியர் மனம்போனவாறே செயல்களைச் செய்பவர்கள். சிறியோர் செயல்களாவன மனத்தைப் பொறிவழிகளால் புலன்களிற் செலுத்துதல், பிறர் பொருள்களின் மேல் ஆசைகொண்டு கவருதல், இவை போன்றன செய்வதற்கு இடையூறாக இருப்பவர்கள் மேல் சினங்கொள்ளுதல், இடையூறைக் களையக் கொலையும் செய்தல் போன்றன.
இந்தச் சிறியர்கள் இயற்கை உணர்வின் வழி வாழ்வதே இன்பம் என்றும் வீடுபேறு என்பதொன்று இல்லவே இல்லை; இந்த உண்மையை அறியாத மடையர்கள், இல்லாத வீடுபேற்றை நினைந்து மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள், பட்டினி முதலியவற்றால் வருந்துவர் என்றும் அறவொழுக்கம், இன்னாசெய்யாமை, கற்பு முதலியன உடல் வலிமை இல்லாத புத்திசாலிகளால் கற்பிக்கப் பட்ட நியமங்கள்; கற்பு பெண்ணுக்கு விலங்கு, ஆணாதிக்க அடையாளம் என்றும் தண்ணீர்ப் பந்தல் வைத்தல் அன்னதானம் செய்தல் போன்ற அறச்செயல்களை உயர்த்திக் கூறும் நூல்கள் பசித்துன்பம் முதலியன அனுபவித்த வழிச்செல்வோரால் கூறப்பட்டன; அறச்சாலைகள் சோம்பேறிகள் மடங்களாகும் என்றெல்லாம் பகுத்தறிவு பேசுவர்.
சிறியர் சிந்தனைக்கு ஏதுவாக இருப்பது புலனுகர்ச்சியும் யான் எனது என்னும் உடைமைச் சிந்தனையும்தாம் என்பது ஆன்றோர் கருத்து.
திருக்குறள் முதலான அறநூல்களில் கண்டிக்கப்படுகின்ற சினம், அழுக்காறு, அவா, கள்ளம், திருட்டு முதலிய தீக்குணங்களுக்கு அடிவேர் தன்னைப் பேணல் என்ற இயற்கைநியதியில்தான் அடங்கியுள்ளது.
புலன் நுகர்ச்சி
புலன் என்ற சொல்லுக்கு அறிவு என்று பொருள். புலவர் என்போர் அறிவுடையவர். ஐம்புலன் என்பது உயிருக்கு ஐந்து வழியாக வருகின்ற அறிவு.
புலன் நுகர்ச்சி ஏன்?
உயிர் அறிவுடையதென்றாலும் அந்த அறிவு, உயிருக்கு மெய் முதலாகிய கருவிகள் கூடுவதனாலேயே வெளிப்படுகின்றது. ஐம்பொறிகளில் உள்ள ஐம்புலனுகர்ச்சி வாயிலாகத்தான் உயிர் வெளி உலகை அறிகின்றது. ‘சப்த பரிச ரூப ரச கந்தங்களாகிய’ புலனுகர்ச்சிக்குக் கருவியாகிய இந்திரியங்களையே அறிவுக்கருவி அல்லது ஞானேந்திரியம் என்று சாத்திரங்கள் பேசுகின்றன. எனவே உயிரின் அறிவு இப்புலனுகர்ச்சியின் வாயிலாகவே வெளிப்படுகின்றது. மன அறிவுக்கும் புலனறிவே அடிப்படை. புலனறிந்ததைத்தான் மனம் நினைவு கொள்ளுகின்றது; சித்தம் சிந்திக்கின்றது..
புலன்களையும் அவற்றின் இருப்பிடங்களாகிய பொறிகள் அல்லது இந்திரியங்களைக் கொடுத்த இறைவன் புலன் நுகர்ச்சியாகிய அறிவனுபவத்தில் உயிர் விருப்பம் கொள்ள அதற்கு அப்புலனுகர்ச்சியில் சுவையும் கூட்டினான்.
புலனுகர்ச்சியின் வழியாகவே உயிருக்கு அறிவு தோன்றுகின்றது என்று எடுத்துக் காட்டிய தொல்காப்பியர், அந்த அறிவு வளர்ச்சியடைகின்ற வரிசைமுறையில் உயிர்களை ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் என அறுவகையாக வகைப்படுத்தினார். (தொல்காப்பியம் மரபியல், நூற்பா எண்27)
முதலில் உற்றறிவு (ஸ்பரிசம்) அதனொடு நாவுணர்வு (ரசம்), அவற்றொடு நாற்றவுணர்வு (கந்தம்),கண்ணுணர்வு (ரூபம்) , அவற்றொடு செவியுணர்வு (சப்தம்) அதன் பின் மனவுணர்வு என்ற இந்த முறையிலேயே மனிதக் குழந்தைக்கும் அறிவு வளர்ச்சியடையும்.
புலனுகர்ச்சி வழியே பாசப் பிணைப்பு
பிறந்த குழந்தை தாயின் அரவணைப்பில் பெற்ற பரிசவுணர்வில் முதலில் உலகை உணர்கின்றது. அவளது மார்பில் ஊற்றெடுத்த அமுதத்தின் சுவையில் ஈடுபட்டு உடல் வளர்கின்றது. இந்த இரு செயல்களாலும் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே பாசப் பிணைப்பு ஏற்படுகின்றது. பிரபஞ்சத்தில் உயிர்ப் பெருக்கத்தினையும் அவற்றின் வளர்ச்சியினையும் இந்தத் தாய்ப்பிள்ளைப் பாசப்பிணைப்பின் வழியே கடவுள் வளர்த்துதலால், மணிவாசகப் பெருமான், “தாயே ஆகி வளர்த்தனை போற்றி” எனத் துதிக்கின்றார். ‘தாய் போல’ என்று கூறாமல், “தாயே ஆகி” என்று கூறியதன் நுட்பத்தை அறிதல் வேண்டும். இறைவனே நேரில் தாயின் உடலில் அதிட்டு நின்று மகவை வளர்க்கின்றான். இந்த நுட்பத்தை உணர்ந்தால், ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை’, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ முதலிய மூதுரைகளின் பொருள் நன்கு விளங்கும்.
பாசமே உயிரைப் பாலிக்கும் இறைநெறி
பாசப்பிணைப்பினால் பல்லுயிரையும் பாலித்துப் பிரபஞ்சத்தை இயக்கும் இறைவனின் கருணையை வியந்து, உமாபதி சிவம் ‘போற்றிப் பஃறொடை’ என்னும் சித்தாந்த சாத்திர நூலில்,
“நல்ல அறிவொழிந்து நன்குதீது – ஒல்லையுறா
அக்காலந் தன்னிற் பசியையறி வித்துஅழுவித்து
உக்காவி சோரத்தாய் உள்நடுங்கி – மிக்கோங்குஞ்
சிந்தை உருக முலையுருகுந் தீஞ்சுவைப்பால்
வந்துமடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் – பந்தித்த
பாசப் பெருங்கயிற்றால் பல்லுயிரும் பாலிக்க
நேசத்தை வைத்த நெறிபோற்றி”
எனப்போற்றித் துதிக்கின்றார்.
பிறந்து மண்ணில் விழுந்த குழவி அறிவற்றதொரு பிண்டம்;. தனக்கு என்ன தேவை என்பதொன்றையும் அறியாது. பிறந்த குழந்தை உலகில் தங்கி வளர அதற்கு முதலில் வேண்டியது பால். எனவே இறைவன், பிறந்த குழந்தையின் பசியைத் தூண்டி, ‘உனக்குப் பசிக்கிறது, நீ அழு’ எனப் பசியை அறிவித்து அழுவிக்கின்றான். குழந்தையின் அழுகையொலி கேட்ட மாத்திரத்தில், தாய் இந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கத் தான் அநுபவித்த துன்பங்களையெல்லாம் மறந்து, ‘அஞ்சி ஆவிசோரும்படி உள்ளே நடுங்கி மிகுந்து ஓங்கிய அன்பினாலே அவள் சிந்தையிரங்கி உருகப் பச்சையுடம்பிலிருந்த இரத்தம் சிவப்பு நிறம் மாறி வெண்ணிற அமுதமாய்க் கொங்கையில் வந்து சுரக்கின்ற அந்தத் தீஞ்சுவைப் பாலைப் பிள்ளை வாய்வைத்துக் குடித்து முகஞ்செழித்திருப்பதுகண்டு தாய் மகிழ்ந்திருக்கும்படி’ இறைவன் தாயிடம் அன்பு நிகழச் செய்தான். இறைவன் இப்படிப் பிள்ளையாசை என்கின்ற பெருங்கயிற்றால் கட்டிச் சகல உயிர்களுக்குங் குழந்தைகளை வளர்க்கும்படிக்கு உயிர்கள் தோறும் நேசம் எனும் உயர்ந்த பண்பை வைத்தருளிய நெறி (இறைவன்) எம்மைக் காக்க என உமாபதி சிவம் தோத்திரிக்கின்றார்.
வஞ்சப்புலன்
உயிர்களுக்கு அறிவனுபவத்தைக் கொடுக்க இறைவன் அளித்த ஐம்புலன்களைத் திருமுறைகள் வஞ்சப்புலன்கள் என்று பழிப்பதேன்?
இறைவன் உயிர்களுக்குப் புல நுகர்ச்சியை அளித்ததன் நோக்கம் உயிர்களுக்கு அறிவனுபவம் ஊட்டுவதற்கே. உயிர் எதனையும் அழுந்திதான் அறிய முடியும். பட்டறிவு (experience) நூலறிவின் வேறுபட்டது.
அறிவநுபவத்திற்கு என அளிக்கப்பட்ட புலநுகர்ச்சியைச் சுவையனுபவத்திற்குக் கருவிகளகப் பயன்படுத்துவதால் கேடு விளையும் என அற நூல்கள் கூறுகின்றன. முறையற்ற புலன்நுகர்ச்சி பந்தமாகும். இதனை, ‘ஐம்புலப்பந்தனை’ என்றும், ‘வஞ்சப்புலன்’ என்றும் சமய நூல்கள் பேசும்; புலனுக்கு அடிமையாகக் கூடாது என அறிவுரை கூறும்.
பஞ்சேந்திரியங்கள் ஆன்மாவை அதன் விருப்பத்துக்கு மாறாக மயக்கித் தீய வழியில் அழுத்திவிடுவதால் வஞ்சப்புலன் என்றும் கள்ளப் புலன் என்றும் திருமுறைகள் கூறுகின்றன.
இறைவனின் உள்ளக் குறிப்பு
இறைவனுக்குச் சிவம் என்பதொரு பெயர். சிவம் என்பதற்குப் பொருள், ‘செம்மை’ (perfection), ‘மங்கலம்’ (bliss), ‘குறைவிலா நிறைவு’ (Absolute), ‘அந்தமிலா ஆநந்தம்’, ‘வீடுபேறு’. உயிர்களைத் தன்னைப்போலச் சிவமாக்கி அந்தமிலா ஆனந்தம் அளிப்பதுதான் இறைவனின் குறிக்கோள். ‘சிவமாக்கி எனையாண்ட அத்தன்’என்றார், மணிவாசகர்.
புலன் நுகர்ச்சி பிறப்பிறப்பினைக் கொடுக்கும். புலனறுத்தல் பிறப்பிறப்பினை அறுக்கும். புலன் நுகர்ச்சி இயற்கை. அந்த அநுபவத்தைப் பெற யாரும் சொல்லித்தர வேண்டியது இல்லை. இயற்கைவழி உரிய பருவத்தில் அந்த அனுபவங்கள் தாமே வந்து சேரும். அறநூல்கள் வகுத்த முறைப்படி அனுபவிக்கும் புலன்நுகர்ச்சி இன்பம் இம்மை நலன் அளிக்கும்; முறைதவறிய புலனுகர்ச்சி இம்மையில் துன்பமும் மறுமைக்குப் பாவமுமாகும்.
தெய்வப் புலவர் ஐம்புல இன்பநுகர்ச்சியைக் குறித்துப் பல அதிகாரங்களில் பேசுகின்றார்.
தலைவியிடம் தலைவன் தான் பெற்ற இன்பத்தை வியந்து,
“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள”
என்று பாராட்டுவது இயற்கைநெறிப்பட்டது. பெண்ணிடத்தில் ஆணுக்கு இந்த ஈர்ப்பு உரிய பருவத்தில் தானே இயல்பாக நிகழும். இந்த அனுபவத்தைப் யாரும் கற்பிக்க வேண்டியதில்லை.
இப்படி இயற்கையாகத் தோன்றும் ஐம்புலன் நுகர்ச்சியின் இயல்பினை அறிவுடையோன் ஆராய்ந்து பார்த்து அறிய வேண்டும் என்பதை,
“சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவன் கட்டே உலகு”
என்றும்,
இயற்கை உணர்வின் வழியே ஐம்பொறிகள் செல்லாமல் காப்பவனின் பெருமையை,
“உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பன்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து”
என்றும்,
வஞ்சப்புலனைத்தையும் வென்றவனின் ஆற்றலை,
“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி”
என்றும் நீத்தார் பெருமையில் கூறிய சிறப்பினை அறிய வேண்டும்.
நீத்தார், எதனை நீத்தார்? உலக இயற்கையின் உந்துதலை நீத்தவர்கள். உலக இயற்கையின் உந்துதலை வென்றவர்கள். புலன் வழிச் செல்லாதவர்கள். இத்தகையோர் வாக்குகளே சத்தியமாக இருக்கும்.
“Unless a man renounces everything , his teachings cannot be accepted by all” —( Sri Ramakrishna paramahamsa) .
இவர்கள் செய்கை இயற்கைக்கு மறுதலை.
இறைவன் இயல்பாகவே ஐம்புலன்களை வென்றவன் என்றும் அவன் இயற்கை நியதியாகிய பந்தத்திலிருந்து உயிர்கள் விடுதலை பெற ஒழுக்கநெறியை வகுத்துள்ளான், அந்த ஒழுக்கநெறியில் நின்றவர்கள் பிறப்பிறப்பின்றி எக்காலத்தும் ஒருதன்மையராய் வாழ்வார் என்பதையும் தெய்வப் புலவர்,
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்”
என்ற திருக்குறளில் இயம்புகின்றார்.
பொய்தீர் ஒழுக்க நெறி
பிறப்பறுக்க வேண்டுவாருக்கு பிறப்பிறப்பற்ற ஒருவன்தான் வழிகாட்ட வேண்டும். அவனைத் திருவள்ளுவர் ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்று கூறினார். அவன் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளை வழியாகவுடைய ஐந்து அவாவினையும் அறுத்தவன். அறுத்தவன் என்பதற்கு ‘இயல்பாகவே இந்த ஐந்து அவாக்களும் இல்லாதவன்’ (free from these blemishes) என்பது பொருள். அவன் ஓர் ஒழுக்க நெறியை வகுத்துள்ளான். அதனைத் தெய்வப்புலவர் ‘பொய்தீர்நெறி ஒழுக்கநெறி’ என்று பெயரிட்டு அழைத்தார். ‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி’ என்பதற்கு பொறிவாயில் ஐந்தினையும் அவித்தானது பொய்தீர் ஒழுக்கநெறி என்பது பொருள்.
பொய்தீர் ஒழுக்கநெறி இயற்கைக்கு மாறானது
பிறப்பறுக்கும் வேட்கையுடையாருக்கு உரிய இந்த மெய்யான ஒழுக்க நெறியை புலனுகர்ச்சியான இயற்கை அறிவில் பெறமுடியாது. நல்ல குரு ஒருவரைச் சார்ந்தே பெறுதல் வேண்டும். இந்த உண்மையைத் தெய்வப் புலவர்,
“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி”
என உணர்த்தினார்.
‘இம்மக்கட் பிறப்பின்கண்ணே உபதேசமொழிகளை அனுபவமுடைய தேசிகர்பாற் கேட்டு அதனால் மெய்ப்பொருளை உணர்ந்தவர் மீண்டும் இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர்’ என்பது இம்மறைமொழிக்குப் பொருள்.
பிறப்பிறப்பில் சலிப்பு ஒருகாலத்தில் ஏற்படும். ‘இத்தாவர சங்கமத்தில் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்’ என்ற சலிப்பு ஏற்பட்டவர்களுக்கே புலன்நுகர்ச்சியில் உவர்ப்பு ஏற்படும்.
பந்தித்த பாசப் பெருங்கயிறு
இறைவனே உலகவிருத்திக்காகப் பாசப் பெருங்கயிற்றால் பல்லுயிரையும் பந்தித்து வைத்துள்ளான். இந்த பாசபந்தம் இயற்கை நியதி. ஆனால் இந்தப் பாசபந்தம் கைகால்களில் இடப்பட்ட விலங்கு போல் அமைந்து, இறைவனின் திருக்குறிப்பை அறிவதைத் தடுக்கின்றது.
ஆன்ம முன்னேற்றத்தைத் தடுக்கும், அந்த விலங்கை குருதேசிகர் ‘பொய்தீர் ஒழுக்கநெறியை’ப் போதிக்கும் ஞானநூல்களாகிய அரத்தால் சிறிதுசிறிதாகப் பைய அராவித் தூள்தூளாக்கி வீடுபேற்றுக்கு ஆளாக்குவார் எனச் சித்தாந்தப் பஃறொடை என்னும் ஞானநூல் கூறுகின்றது.
“— சீவகத்தால்
பாசம் பதியைப்பரவாமல் பல்லுயிர்க்கும்
நேசமாய் நிற்கும் நிகளத்தைத் – தேசுற்ற
நூலரத்தால் தேய்த்தஅருள் நுட்பத்தான்”
என்று அந்தநூல் குருதேசிகர் செய்த அருளை வியந்து போற்றுகின்றது.
இருவகைப் பரிணாமங்கள்
அறிவியலாளர் பெரிதாகப் பேசும் பரிணாமம் (Evolution) இயற்கை நியதியை விளக்குவது. அது சூழ்நிலைகளுக்கு ஏற்ப உயிர்களின் உடல் உறுப்புக்களில் தேய்வு வளர்ச்சி மாற்றங்களைக் கருத்தில் கொண்டது. அறிவியலார் கூறும் பரிணாமம் இயற்கை நியதியை ஒட்டி அமைவது.
ஆன்மவியலார் கூறும் பரிணாமம் உடல்வளர்ச்சியை அன்றி ஆன்ம உணர்வில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்களைக் கருத்தில் கொண்டது. இது இயற்கை நியதியை மறுத்து அமைவது.
இல்லற இன்பம் இயற்கை நியதியை ஒட்டியது; துறவறம் இயற்கை நியதியை மறுத்து அமைவது. சைவ சந்நியாச பத்ததியை விளக்கும் நூல்கள் “பல்லுயிர்க்கும் நேசமாய் நிற்கும் நிகளத்தைத், தேய்த்து விடுவிக்கும் தேசுற்ற நூலரங்கள்” ஆகும்.
காவி ஆடை, புலனழுக்கற்ற அந்தணாளர்களே, புலனை வென்றமைக்கு அடையாளமாத் தரிக்கும் உடை. நெருப்புப் போன்ற வைராக்கியத்துக்கு (ஆசையின்மை) அடையாளம் காவியாடை. புலனை வெல்லமுடியாதவர்கள், புலனுகர்ச்சிக்கு அடிமையானவர்கள் காவியாடைக்குத் தகுதியுடையரல்லர். (இன்று தியானம் யோகம் பேசும் ‘கார்பொரேட் சாமியார்கள்(?) செந்நிற சில்க், செயற்கைப் பட்டாடையே அணிகிறார்கள். காவிக்கல் பூசைப்பட்ட ஆடை அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்பதில் என் போன்றோருக்கு ஒரு மனநிறைவு.)
அற்றவர்க்கு அற்ற சிவன்
சிவன் பிறவாயாக்கைப் பெரியோன். அதாவது யாக்கையில் வந்து பிறவாத மகாதேவன். ஆதலால் இயல்பாகவே அவன் புலன்களை வென்றவன். அவனை வழிபடுகின்ற கிரியைகளிலும் புலன் நுகர்ச்சிக்கு உரிய பொருள்கள் தேவைப்படுவதில்லை. நீரும் பச்சிலையுமாகிய எளிய பூசனையை ஏற்றுக் கொண்டு வீட்டுலகமாகிய பெரிய செல்வத்தை அன்பர்க்கு அளிப்பவன்.
“குடங்கை நீரும் பச்சிலையும் இடுவார்க்கு இமையாக் குஞ்சரமும்;
படங்கொள் பாயும் பூவணையும் தரும்” பரமேட்டி அவன்.
(திருவிளையாடற் புராணம், இசைவாது வென்ற படலம்).
எளிதில் மகிழ்ச்சி கொள்பவன் எனும்பொருளில், ‘ஆசுதோஷக:’ எனும் திருநாமமும் சிவனுக்கு உண்டு.
பரமயோகியாகிய அவனை வழிபடுவோரும் புலனை வெல்வர். மாதுசொன்ன சூளால் இளமையைத் துறந்த திருநீலகண்டநாயனாரை, “வென்ற ஐம்புலனில் மிக்கீர்” என இறைவனே அழைத்ததாகத் தெய்வச் சேக்கிழார் பாடுகின்றார்.
உலகியல்பினை வென்று அகப்பற்றும் புறப்பற்றும் விட்டுத் தன்னை அன்புசெய்யும் அன்பர்க்குத் தானும் அத்தகைய அன்புடையனாவன் சிவன் என்பதே, காழிப்பிள்ளையார் அருளிய, “உலகினில் இயற்கையை ஒழித்திட்டு, அற்றவர்க்கு அற்ற சிவன்” என்ற வாக்கின் பொருளாகும்.
திருஞானசம்பந்தரின் இந்த அற்புதத் தொடரில் ஈடுபட்ட மற்றொரு ஞானி தாயுமானவர். எந்நாட்கண்ணிகளில் அறிஞர் உரை என்னும் பகுதியில்,
“‘அற்றவர்கட் கற்றசிவ னா’மென்ற அத்துவித
முற்றுமொழி கண்டருளின் மூழ்குநாள் எந்நாளோ?”
என இத்தொடரை வியந்து போற்றுகின்றார். இந்தத் தொடர் சுத்தாத்துவித முத்தியை உணர்த்தும் மெய்ம்மொழி என்பதும், ‘முற்றத் துறந்தவர்கட்கும் பிரிவற நின்றபெருமான்’ என்பது இத்தொடரின் பொருள் என்பதும் தாயுமானாரின் கருத்து.