சைவம் அத்துவிதக் கொள்கையது:
அருணகிரிநாதப் பெருமான் ‘சுருதிமுடி மோனஞ்சொல்’ எனத்தொடங்கும் பழநிமலைத் திருப்புகழில் முருகப் பெருமானை, ‘வேதமுடிவாய் மோனநிலையைக் காட்டும் சிற்பரம ஞானமாயதும், சிவசமய வடிவாய் வந்ததும், அத்துவிதமான பரசுடரொளியாய் நின்றதும், நிட்கள சொரூபமுதலானதும் ஆன ஒரு வாழ்வே’ எனத் துதிக்கின்றார்.
‘சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர’ என்று முருகனைத் துதித்ததால் சிவசமயம் அத்துவிதக் கொள்கையினது என்பதை அருணைமுனிவர் வலியுறுத்துகின்றார்.
அத்துவிதம் – சொற்பொருள்:
அத்வைதம் என்பது வடசொல். அது தமிழில் அத்துவிதம் என்று வழங்கும். அத்துவிதம் என்னும் சொல் ஆன்மாக்களிடத்து முதல்வன் நிற்கும் முறைமையைக் கூறுவது என்பது சைவசித்தாந்திகளின் கொள்கை.
எனவே, அத்துவிதம் என்றசொல் ஆன்மாவுக்கும்சிவத்துக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை உணர்த்துவதே யன்றி, உள்ள பொருள் ஒன்றா, இரண்டா, அவை ஒன்றுக்கொன்று விரோதமானவையா, பேதமா, அபேதமா, பேதாபேதமா, என்பனவற்றை ஆராய்வதன்று.
சைவசித்தாந்தத்தில் ‘அத்துவிதம்’ என்னும்இச்சொல் இம்மூன்று நிலைகளுக்கும்பொதுவானது.
‘அத்துவிதம்’ – வடமொழி இலக்கணத்தின்வழிகொள்ளும் பொருள்.
அத்வைதம் என்னுஞ் சொல் அ+த்வைதம் எனப் பிரிக்கப்படும். த்வைதம் என்ற வருமொழி முன் ‘த்’ என்னும்மெய்யெழுத்து உள்ளதாகையால், வடமொழி இலக்கணத்தின்படி, நகரத்தின் மெய்யெழுத்தான ’நகரம்’ கெட்டு அகரம் மட்டும் நின்று அத்துவிதம் என ஆகும். ந+துவிதம்= அத்துவிதம்.
‘ந’ என்னும் முன்னொட்டு எதிர்மறைப் பொருளில், அடுத்துவரும் சொல்லின் பொருளை மறுப்பது. வடமொழி இலக்கணத்தின்படி ‘ந’ ‘அ’வாகும்.
எதிர்மறை முன்னொட்டு ‘அ’ ஆறு பொருளில் வரும் என வடமொழி இலக்கண ஆசிரியர்கள் உரைப்பர். அவற்றுள் மூன்று முக்கியமானவை. அவையாவன:
- . தத்ஸாத்ருச்யம் = ஒப்பு. அதுபோன்றது. ‘அ’ அன்மைப் பொருளைத் தரும். அப்ராஹ்மணன் என்னும் சொல் பிராமணனைப் போன்றவன், பிராமணனுக்கு ஒப்பானவன் என்றபொருளைத் தரும். ஸத்ருச்யம்= சமம். (இப்பொருளையே சைவசித்தாந்தம் அத்துவித சம்பந்தத்தை விளக்க மேற்கொண்டுள்ளது. சிவமும் சித்து. ஆன்மாவும் சிவத்தைப் போலவே சித்து. ஆனால் சிவம் அன்று.)
- . அபாவம். – இன்மை. அஸ்ருங்க : மநுஷ்ய: மனிதன் கொம்பில்லாதவன்.
- ததந்யத்வம். தத்+அந்யத்வம். வேற்றுமை. பேதம் அநாகாச:பூ:= பூமி ஆகாயத்தினும் வேறு
தென்னாட்டு சைவசித்தாந்தம் ‘தத் ஸாத்ருச்யம்’ என்னும் ‘ஒப்பு’, அல்லது ‘அதுபோன்றது’ என்னும் அன்மைப் பொருளையே கொள்கின்றது.
சிலர் அபாவம் என்னும் இன்மைப் பொருள் கொண்டு ‘இரண்டு இல்லை’ உள்பொருள் ‘ஒன்றே’ என்பர். அதாவது, பிரமம் ஒன்றே உள்பொருள் என்பர்.
‘ஏகம் அத்விதீயம் ப்ரமம்’- சைவசித்தாந்தம் கொள்ளும் பொருள்.
‘ஏகமத்விதீயம்” என்பது வேத வாக்கியம்.. ஒன்று என்ற பொருளை உணர்த்த ‘ஏகம்’ என்ற சொல் இருக்க, வேதம் ‘அத்துவிதம்’ என்ற பதத்தையும் பயன்படுத்தியதன் பொருள் யாது?. பதிப்பொருள் ஒன்றே. ஆதலினால் அவன் ஒருவன்; ஒப்பிலாதவன் என்பது பொருள். ‘அத்துவிதீயன்’ தனக்கு ஒப்பாக இரண்டாவதாக ஒருவனை இல்லாதவன் என்பது பொருள். இது சைவசித்தாந்தம்கொள்ளும் பொருள்.
அன்மை இன்மை வேறுபாடு
சைவசித்தாந்திகள் இன்மைப் பொருளைச் சொல் இலக்கணத்தின்படி மறுப்பர். அன்மைக்கும் இன்மைக்கும் உள்ள வேற்றுமையை நன்கு உணரவேண்டும். ‘புத்தகம் இல்லை’ என்றால் புத்தகம் இன்மையைத்தான் உணர்த்துமேயன்றி வேறுபொருளைத் தராது. ‘புத்தகம் அல்ல’ என்றால், அது புத்தகம் அல்ல, புத்தகத்தினைப் போன்ற வேறொன்று என்ற பொருளைத் தரும். இது உலகவழக்கிலும் காணலாம். அறையில் இருப்பது இராமன் இல்லையென்றால் இராமன் அறையில் இல்லை என்றுதான் பொருள்படும். அறையில் இருப்பவர் இராமன் அல்ல என்றால், இராமன் அல்ல, வேறொரு மனிதனென்று பொருள்படும். அவ்வாறே, அத்துவிதம் என்ற சொல் ஒன்றுமல்ல இரண்டுமல்ல என்றே பொருள்படும்.
இதனை, முத்துத்தாண்டவர் மிகஎளிமையாக, ‘ஆடினதெப்படியோ நடனம் நீர் ஆடினதெப்படியோ’ என்ற கீர்த்தனையில்,’ஒன்றல்ல, ரெண்டல்ல ஒன்றிரண்டுமல்ல, மன்றில் மரகதவல்லி கொண்டாடநின்று ஆடினதெப்படியோ’ எனப்பாடினார்.
மேலும், எண்ணுப் பெயருக்கு முன்வந்த எதிர்மறை நகரம் இன்மைப் பொருளை உணர்த்தாது, அன்மைப் பொருளையே உணர்த்தும் என்பதும் இலக்கண விதி. ந+ஏகம் = அநேகம். இச்சொல் ‘ஏகம்’ ஒன்று என்பதை மறுக்காது, பல என்னும் பொருளைத் தருதல் காண்க. “ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க’ என்னும் சிவபுராணத் தொடர். ‘ஏகன்’ என்றால் இருமை என்னும் எண்ணுப் பொருளைத் தரும் ‘துவிதம்’ என்னும் பதத்துக்கு முன் வந்த எதிர்மறை(ந) அகரம் இன்மைப் பொருளைத் தந்தால், அது ‘துவிதம்’ இல்லை என்ற பொருளைத் தருமேயன்றி ‘ஏகம்’ (ஒன்று) என்ற பொருளைத் தராது. அநேகன் என்ற சொல் பல என்றபொருளைத் தருதலை நோக்குக.
எனவே, ‘அத்துவிதம்’ என்றசொல் ‘ஏகம்’ என்ற பொருளை உணர்த்தும் என்றும், அது பிரமப்பொருள் ஒன்றே உளது, வேறு ஒன்றும் இல்லை’ என்றும் கூறுவதைச் சைவசித்தாந்தம் ஏற்றுக் கொள்வதில்லை.
உவமைகளும் பொருளும்
அத்துவிதம் என்ற சொல்லுக்கு அபேதப் பொருள் கொள்ளுவோர், பொன்னும் ஆபரணமும்போல் என உவமை கொள்வர். இவர்கள் பிரமமே பிரபஞ்சமாயிற்று என்பர்.
பேதப்பொருள் கொள்வோர் இருளும் ஒளியும்போல் என உவமைகொண்டு பிரமமும் ஆன்மாவும் ஒன்றாகா என்பர். பிரமமும் ஆன்மாவும் மறுதலைப் பொருள்கள் என்றால் பிரமத்தினால் ஆன்மாவுக்கு எந்தவிதப் பயனும் இல்லை எனவாகும்.
பேதாபேதப் பொருள் கொள்வோர் சொல்லும் பொருளும்போல ஒருவகையால் பேதமும் மற்றொருவகையால் அபேதமும் ஆம் என்பர். ஒருபொருளுக்குமாறுபட்ட இரு குணம் இருக்க முடியாது.
சைவசித்தாந்தம் இந்த பேதாபேத வாதத்தில் ஈடுபடாமல் சிவத்துக்கும் ஆன்மாவுக்கும் இடையே அத்துவித சம்பந்தத்தைப் பேசுகின்றது. இந்த அத்துவித சம்பந்தத்தில் ஆன்மா எந்தநிலையிலும் சிவத்தை விட்டுப் பிரிந்துநிற்பதில்லை. இந்த அத்துவித சம்பந்தத்தை முதலில் எடுத்தோதியவர் நான்மறைவல்ல ஞானசம்பந்தர். அவர் தம்முடைய திருவீழிமிழலைப் பதிகத்தில்,
“ஈறாய் முதல் ஒன்றாய் இருபெண்ஆண் குணம் மூன்றாய்
மாறாமறை நான்காய் வரு பூதமவை ஐந்தாய்
ஆறார் சுவை ஏழோசையோடு எட்டுத் திசைதானாய்
வேறாய் உடனனான் இடம் வீழி மிழலையே”
எனப்பாடினார்.
பிரிவரும் அத்துவிதம் – சுத்தாத்துவிதம்
முதல்வனுக்கும் உயிருக்கும் இடையே உள்ள அத்துவிதசம்பந்தம் கலப்பினால் ஒன்றாயும் (அபேதம்), பொருள் தன்மையினால் வேறாயும் (பேதம்) உடனாதலினால் (பேதாபேதம்) என மூன்றையும் உள் அடக்கியது.
கலப்பினால் ஒன்றாதல் அபேத சம்பந்தம். அது பொன்னும் ஆபரணமும் போலன்று; உடலும் உயிரும்போல்.
வேறாதல் பேத சம்பந்தம். இருளும் ஒளியும் போலன்று; கண்ணொளியும் சூரியனொளியும் போல். கண்ணுக்கு ஒளியிருந்தாலும் பொருளை அறிவதற்குச் சூரியனொளி இன்றியமையாமல் வேண்டப்படும். காணும் ஒளியும் காட்டும் ஒளியும் என அவை வேறாம்.
உடனாதல் பேதாபேத சம்பந்தம். சொல்லும் பொருளும் போல அன்று. ஆன்மபோதமும் கண்ணொளியும் போல். கண் கண்டாலும் ஆன்மபோதமும் உடன் நின்று கண்ணுக்கு இன்னபொருள் என அறிவிக்கின்றது.
இம்மூன்று நிலையும் முதல்வனுக்கும் உயிருக்கும் எப்பொழுதும் உண்டு. அதனால் தான் தமிழில் முதல்வனுக்கு இறை, இறைவன் என்றபெயர் வழங்குகிறது. இறைவன் என்றால் தலைவன் என்ற பொருளுடன் எங்கும் எதிலும் தங்கியிருப்பவன் என்றும் பொருளாம்.
சிவம், பசு பாசம் எனும் இரண்டிலும் கலந்தே இருக்கும். சிவம் இவ்வாறு ஒன்றாய் வேறாய் உடனாய்க் கலந்திருப்பதனால்தான் பசு பாசங்களுக்கு இருப்பும் இயக்கமும் உளவாகின்றன.
இக்காரணங்களால் சைவசித்தாந்தம் கூறும் அத்துவிதம் ‘பிரிவரும் அத்துவிதம்’ என்றும், ‘சுத்தாத்துவிதம்’ அழைக்கப்படுகின்றது. இதனைப் “பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவிதம்” என்றார், தாயுமான சுவாமிகள்.
மண்டலப்ராஹ்மணோபநிடதம், “தந்மநோ விலயம்யாதி தத்விஷ்ணோ: பரமபதம்|தல்லயாச் சுத் தாத்வைதஸித்தி: பேதபவாத்: ஏததேவ பரமதத்வம்||” என்றோதியது. இதனால் தென்னாட்டு சைவ சித்தாந்தம் கூறும் அத்துவிதம் வேதத்துக்கும் ஏற்புடையதே என்பது பெறப்படுகின்றது என்பதோடு ‘அத்துவிதம்’ என்றசொல் இந்தியத் தத்துவஞானத்தில் ஒரு பிரிவுக்கே உரியதெனும் அறியாமையும் விலக்கப்படுகின்றது.