இறைக்கும் உயிருக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை இந்தியதத்துவ ஞானம் அத்துவிதம் என்று மொழியும். அத்துவித சம்பந்தத்தை இந்துசமயதத்துவங்கள் உவமைகள் வாயிலாக விளக்கம் செய்கின்றன. சைவசித்தாந்தத்திற்கு அத்துவிதம் குறித்துத் தனிக் கோட்பாடு உண்டு. அதன் அடிப்படை திருக்குறள், திருஞானசம்பந்தப் பெருமான் முதலாய திருமுறை ஆசிரியர்களின் திருப்பதிகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது.
அகர முதல்
அனைவரும் அறிந்த திருக்குறள் கடவுள் வாழ்த்து முதற்பா “அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு”. தெய்வப்புலவரின் இந்தக் குறளின் முதலடியைனை வழி மொழிந்து திருஞான சம்பந்தரும் ’அகர முதலானை அணியாப்பனூரானை’ என மொழிந்தார்.
கடவுள் வாழ்த்து முதற் குறளில், ‘அகர முதல’ என்ற தொடரில் ‘முதல’ என்னும் சொல்லாட்சி சிறப்பான பொருள் உடையது. ‘முதல’ என்பதற்கு, எழுத்துக்கள் வரிசை முறையில் அகரத்தை முதலாக உடையன என்பதன்று இதன்பொருள்.
ஒருவன் ஒரு தொழில் தொடங்குவதற்குச் சிறிது பொருளை முதலீடு செய்கின்றான். அந்தப் பொருள் பின்னர் வளர்ந்து பல்கிப் பெருகுகின்றது. முதலீடு செய்த பொருள், பெருகிய பொருளில் கலந்து மறைந்து நிற்கின்றது. தொழிலில் பெருகிய செல்வம் புலப்படுகின்றதன்றி முதலீடு செய்த பொருள் புலப்படுவதில்லை. அந்த முதலீடு செய்த பொருளே’ முதல்’ எனப்படும்.
ஒருவன் வாயைத் திறந்தால் இயல்பாக எழும் ஒலி ‘அ’ அல்லது அதன் நீட்டமான ‘ஆ’ வாகும். இந்த அகரமே எல்லா எழுத்துக்களுக்கும் முதல். இந்த அகரம் உயிரெழுத்து , மெய்யெழுத்து ஆகிய எல்லா எழுத்துக்களிலும் கலந்து அவ்வவ்வெழுத்துக்களை இயக்கி அவ்வெவ் வெழுத்தாகவே இருக்கும். மெய்யெழுத்துக்கள் அகரவொலியுடன் கூடியே ஒலிக்க வேண்டும்.”மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” என்பது தொல்காப்பிய விதி. எனவே, மெய்யெழுத்துக்களில் உயிர்கலந்து நிற்றலை எளிதாக அறியலாம். உயிரெழுத்துக்களில் அகரவுயிர் கலந்து நிற்றல் உய்த்துணர்வு உடையோருக்கே புலனாகும்.
அகரவுயிருடன் பிற எழுத்துக்களின் மூவகைச் சம்பந்தம்
அதாவது அகரவுயிர், அனைத்து உயிரெழுத்துக்களுடனும் தனி மெய்யெழுத்துக்களுடனும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும்.
சுருங்கச் சொன்னால், அகரவுயிர் தனித்துத் தானே இயங்கும்; பிற உயிர், மெய்யெழுத்துக்களுடன் உடனாகி அவற்றை இயக்கும்; அவற்றுடன் கலந்து நின்று அவையாகவே இருக்கும்.
அகர உயிரும் சிவமும்
அகரவுயிர் மெய்யெழுத்துக்களோடு கூடி மெய்யெழுத்தின் ஒலியைப் பிறப்பித்தல் தெளிவாகப் புலப்படுதல்போல உயிரெழுத்துக்களுடன் கூடி அவ்வவ்வுயிரொலியைப் பிறப்பித்தல் தெளிவாக அறிய இயலுவதில்லை. நுண்ணறிவுடையோர் அதனை உய்த்து உணர்வர். அதேபோல் இறைவன் உயிர்களுடன் உயிருக்குயிராக நிற்றல் நுண்ணறிவுடையோருக்கே புலனாகும்.
முதன்மைத் தன்மை உடைய அகரவுயிர் கலத்தல் இல்லையேல் ஏனைய வுயிரெழுத்துக்களுக்கும் இயக்கம் இல்லை. அவ்வாறே இறைவன் உயிருக்குயிராய் உயிர்களுடன் உடனாய் நின்று கண்டும் காட்டியும் உதவாவிடில் உயிர்களுக்கு அறிவிச்சைசெயல்கள் நிகழா. இவ்வாறு இறைவன் உயிர்களோடு கலந்து நின்று உயிர்களுக்குச் செய்யும் உபகாரத்தினைத் திருஞானசம்பந்தர்,
‘உரைசேரும் எண்பத்து நூறாயிரமாம் யோனி பேதம்
நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்”
என்றார்.
உலகுயிர்களோடு சிவமாகிய இறைவன் கலப்பினால் அவையேயாயும், பொருள் தன்மையினால் வேறேயாயும், இயங்கச் செய்ய உடனாயும் இருத்தலைச் சைவசித்தாந்தம் அத்துவித சம்பந்தம் என்று கூறுகின்றது.
இந்த அத்துவித சம்பந்தத்தைத் திருஞானசம்பந்த சுவாமிகள்,
“ஈறாய் முதலொன்றாய் இருபெண்ணாண் குணம் மூன்றாய்
மாறா மறைநான் காய்வரு பூதமவை ஐந்தாய்
ஆறார் சுவை யே ழாய்வரு எட்டுத்திசை தானாய்
வேறாய்உடனா னானிடம் வீழிமிழலையே”
என விதந்தோதினார்.
சைவசித்தாந்தம் கூறும் சுத்தாத்துவித நிலைக்கு அடிப்படை இத்திருப்பாடலேயாம்.
அத்துவிதம்– உயிர்களிடத்துச் சிவம் நிற்கும் முறைமை.
அத்துவிதம் என்னும் சொல் ஆன்மாக்களிடத்து முதல்வன் நிற்கும் முறைமையைக் கூறுவது என்பது சைவசித்தாந்திகளின் கொள்கை. எனவே, அத்துவிதம் என்றசொல் ஆன்மாவுக்கும் சிவத்துக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை உணர்த்துவதே யன்றி , உள்ள பொருள் ஒன்றா, இரண்டா, அவை ஒன்றுக்கொன்று விரோதமானவையா, பேதமா, அபேதமா, பேதாபேதமா , என்பனவற்றை உணர்த்துவதன்று. சைவசித்தாந்தத்தில் ‘அத்துவிதம்’ என்னும் இச்சொல் இம்மூன்று நிலைகளுக்கும் பொதுவானது.
பொதுவாக சங்கரரின் அத்துவிதம் அபேதம்(ஏகாத்மவாதம்) என்றும் மாத்துவர் கூறும் துவிதம் பேதவாதம் எனவும் இராமானுஜர் கூறும் விசிஷ்ட்டாத்துவிதம் பேதாபேதம் என்றும் கூறுவர்.
இதற்கு எடுத்துக்காட்டாகப் ‘பொற்பணி (பொன்னால் ஆன நகை) போல் அபேதம்; இருளும் வெளிச்சமும் போலப் பேதம்; சொல்லும் பொருளும் போலப் பேதாபேதம்’ என எடுத்துக் காட்டும் கூறுவர்.
‘அபேதம்’ என்பதற்கு மாற்றாகச் சைவசித்தாந்தம் ‘ஒன்றாயிருத்தல்’ என்று கூறும். கலப்பினால் ஒன்றாயிருத்தல். மெய்கண்டார் ஒன்றாயிருத்தலுக்குக் கூறும் எடுத்துக்காட்டு, ‘உடலுயிர்’ என்பதாம். ஒருவன் என் பெயரைச் சொல்லி அழைக்கிறான். நான் அவன் அழைப்பை ஏற்றுப் பதில் கூறுகிறேன். அந்தப் பெயர் உடலுக்கு உரியதா? உயிருக்கு உரியதா? இரண்டும் இல்லை. ஆனால் உடலும் உயிரும் கலந்து ஒன்றாக இருக்கும் அந்த நிலைக்கு உரியது. உயிரின் கலப்பு இல்லையேல் உடல் இல்லை; உடல் அழியும். அதுபோல, சிவமாகிய முதல்வன், உலகு உயிர்களுடன் கலப்பினால் ஒன்றாக இராதபோனால் அவற்றிற்கு இருப்பு (existence) இல்லை.
பேதம் – வேறாயிருத்தல்
இருளும் வெளிச்சமும் போலப் ‘பேதம்’ என்பதனைச் சைவசித்தாந்தம் மறுக்கின்றது.
இருளும் ஒளியும் தம்முள் பேதம் உடையன. அவை ஒன்று சேர்வதில்லை. அது போல இறை, உயிருலகுடன் பேதமானது; இறை உலகு உயிருடன் ஒன்று சேராது என்பர் பேதவாதிகள்.
பொருளின் தன்மையால் இறையும் ஏனை உலகு உயிரும் வேற்றுமையுடையன என்பது சைவசித்தாந்தத்திற்கும் உடன்பாடுதான். ஆயினும் அவற்றுடன் இறைக்குச் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.
மெய்கண்டார் அகரமும் ஏனைய எழுத்துக்களும் போல வேறாய் என்றார். அகரவுயிரின்றேல் ஏனைய எழுத்துக்கள் இல்லை. ஆயினும் அகரம் வேறு; ஏனைய எழுத்துக்கள் வேறு.
அவ்வாறே, இறை சேதன அசேதனப் பிரபஞ்சங்களுக்குத் தாரகமாக உள்ளது. இதற்கு மெய்கண்டார் காட்டும் உதாரணம் ‘ கண்ணும் சூரியனும் போல’ என்பது. கண் காணும் ஆற்றல் உடையது. என்றாலும் இருளில் காண இயலாது. சூரியனின் கதிரொளி பொருள்களின் மேற்படர்ந்து கண்ணொடு கலந்தால்தான் கண் காண இயலும். ஒளியின்றேல் கண் காண இயலாது. கதிரொளி கண்ணுக்கு அந்நியமாக நின்று காட்டுதலைச் செய்கின்றது.
கண்ணும் சூரியனும் என்னும் இந்த உவமையினை மெய்கண்டாரின் மாணாக்கர்களில் ஒருவராகிய திருவதிகை மனவாசகம் கடந்தார், ‘ “நின்று அருக்கன் கண்ணுக்குக் காட்டுமாப்போல உனதறிவில் நண்ணி அறிவித்திடுவோம் நாம்” என்று கூறினார்.
இந்த சம்பந்தத்தைத் திருஞான சம்பந்தர், ‘வேறாய்” என்றார். உயிர் வினை அனுபவம் பெறும் பொருட்டு, இறை, உலகுயிர்களுக்கு வேறாக நின்று காட்டும் உபகாரத்தைச் செய்கின்றது; சூரியன் கண்ணுக்கு வேறாக இருந்து காட்டுதல் போல. பிறர் ‘பேதம்’ என்பதனைச் சைவசித்தாந்தம் திருஞானசம்பந்தர் வாக்கில் ‘வேறாய்’ என்றுகூறுகின்றது.
பேதாபேதம் – ஒன்றாயிருத்தல்
இனி பேதாபேதம் என்போர் ‘சொல்லும் பொருளும் போல’ என்ற உதாரணம் காட்டுவர். சொல் வேறு அது உணர்த்தும் பொருள் வேறு என்றாலும் அவற்றிடையே காணப்பெறும் ஒற்றுமை போலப் பொருள் தன்மையினால் இறைக்கும் உலகுயிர்க்கும் வேற்றுமையுண்டெனினும் ஒற்றுமைச் சம்பந்தம் உண்டென்பர்.
சைவசித்தாந்தம் பேதாபேத சம்பந்தம் கூறாமல் ‘உடனாதல்’ என்னும் சம்பந்தத்தைக் கூறும். இதற்கு மெய்கண்டார்,’கண்ணொளியும் ஆன்மபோதமும்’போல் என உதாரணம் கூறினார். கண் ஒருபொருளைக் காணும்போது ஆன்ம சிற்சத்தியும் உடனாய் நின்று காணுகின்றது. காணுவது கண் என்றாலும் கண் சடம், அதற்கு அறிய இயலாது. கண்ணோடு உடனிருந்து காண்பது ஆன்ம சிற்சத்தி. கண்ணின் செயலும் ஆன்மசிசத்தியின் செயலும் முன் பின் அன்றி இரண்டின் செயலும் உடன் நிகழ்கின்றன. இறைவன் வேறாய் நின்று காட்டுகின்றான்; உடனாய் நின்று காணுகின்றான். ஆன்ம முன்னேற்றத்திற்கு இறைவன் இவ்வாறு காட்டும் உபகாரத்தையும் காணும் உபகாரத்தையும் செய்தருளுகின்றான். இறைவன்பால் பத்தி பெருக இவ்வுபகாரமே காரணமாகும்.
கண் சடம்;அறிவற்றது. ஆதலால், காணுதலின்பயன் உயிருக்கே. ஆனால், கண்போல உயிர் சடமன்று; ஆதலால், சிவம் கண்ணுடன் ஒற்றித்துக் காணுதலினால் பயன் அடைவது உயிரே என்ற வேற்றுமையையை அறிதல் வேண்டும்.
சைவசித்தாந்தம் பேசும் சுத்தாத்துவிதத்தில் சிவமும் உயிரும் ‘ஒன்றாய், வேறாய், உடனாய்’ இருக்கும் சம்பந்தம் உண்டு; ‘பேதம், அபேதம், பேதா பேத’ சம்பந்தம் இல்லை. சிவத்துக்கும் உயிருக்கும் இடையே உள்ள இந்த ‘ ஒன்றாய், வேறாய், உடனாய்’ அமைந்துள்ள இந்த அத்துவித சம்பந்தத்தை உமாபதி சிவாச்சாரியார் ‘ பிறிவரும் அத்துவிதம்’ என்று கூறுவார்.
வேத உபநிடதங்களில் இறைக்கும் உயிர்களுக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை பேதமெனவும் அபேதம் எனவும் பேதா பேதம் எனவும் கொள்ள மொழிகள் உள்ளன. பெரியோர் தத்தம் கொள்களுக்கேற்ற மறை மொழிகளின் அடிப்படையில் தம் கொள்கைகளை நிறுவினர். மெய்கண்டார் ஞானசம்பந்தப் பிள்ளையாரின் தென்மறைமொழியின் அடிப்படையில் வடமொழி மறையில் கண்ட வேறுபாடுகளைச் சமன்வயப்படுத்தி, அத்துவித சம்பந்தத்தை விளக்கினார். இவ்வாறு இந்திய தத்துவ ஞானத்தில் பேதாபேதக் குழப்பத்தை மெய்கண்டார் தீர்த்து வைத்தார் என்பர்.
“The service done to Indian philosophy by Sri Meikantadeva is that he cleared the air of the polemics aising out of the conflicting interpretation of the Brhma Sutras and the Upanishads by the various schools of thought and the many varieties of Bheda-bheda schools which sprang up after the great Achariyas who wrote the commentaries”.