அண்மையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் ‘தி இந்து’ தமிழ் இதழில் சென்ற 2013 ஆம்ஆண்டு அக்டோபர் மாதம் எழுதிய ‘பாலும் அழுக்கும்’ என்னும் கட்டுரை படிக்க நேர்ந்தது. சங்க இலக்கியத்தைப் பேசவந்தவர் சைவத்தையும் சாடியுள்ளார். அதே கருத்தினை ஒருகலைக்கல்லூரியில் தமிழ்த்துறையும் செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நடத்திய பயிலரங்கில், ‘ சைவ சமயவாதிகள் இலக்கியத்திற்கு எதிராக இருந்ததால் தான் அவ்விலக்கியங்கள் மக்களிடம் பரவவில்லை’ என்று ஒரு பேராசிரியர் உரத்துப் பேசினார். இச்செய்தி தினமணி நாளிதழிலும் வெளியாகியது. இக்கருத்து எந்த அளவுக்கு உண்மை எனத் தமிழறிஞர்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த எண்ணம் உண்டாவதற்குக் காரணம்?
பேராசிரியரின் இந்தக் கூற்றுக்குக் காரணம் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்து சீலத்திரு சுவாமிநாத தேசிகர் தாம் அருளிச் செய்த இலக்கணக் கொத்து எனும் நூலுரையில் தெரிவித்துள்ளதோர் கருத்தாகலாம். அப்பகுதியாவது:
“மாணிக்கவாசகர் அறிவாற் சிவனே யென்பது திண்ணம்; அன்றியும், அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் வாக்கிற் கலந்திருந்து அருமைத் திருக்கையா லெழுதினார். அப்பெருமையை நோக்காது,சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்குவேள் மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோ டொன்றாக்குவர்… அவர் அதுமட்டோ இறையனாரகப்பொருள் முதலான இலக்கணங்களையும், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம், பட்டனத்துப் பிள்ளையார் பாடல்கள் முதலிய இலக்கியங்களையும் ஓர்பொருளாக எண்ணாது, நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங்களையும் , பத்துப்பாட்டு,எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு, இராமன்கதை, நளன் கதை, அரிச்சந்திரன்கதை முதலிய இலக்கியங்களையும் ஓர்பொருளாகவெண்ணி, வாணாள் வீணாள் கழிப்பர். அவர்களிவைகளிருக்கவே அவைகளை விரும்புதலென்னெனின் பாற்கடலுள் பிறந்து அதனுள் வாழுமீன்கள் அப்பாலை விரும்பாது வேறுபலவற்றை விரும்புதல் போல அவரதியற்கை யென்க.”
இப்பகுதியை நடுநிலையில் நின்று நோக்குவாருக்கு இரண்டு உண்மைகள் தெளிவாகும்.
1.நன்னூல் முதலிய இலக்கண நூற்களின் பயிற்சியும், சங்கநூற்கள் முதலிய இலக்கியப்பயிற்சியும் சைவர்களுக்கு ஆகா எனக் கடியப் படவில்லை. இலக்கியப்பயிற்சி அத்துடன் நின்றுவிடுவதாற் பயனில்லை. அவை கருவிநூல்களே. அப்பயிற்சியின் பயன் அறிவன் நூல்களைப் பயில்வதே. இது தமிழ் கற்கும் சைவர்களை நெறிப்படுத்துவதற்கேயாம். தொல்காப்பியர் “காமஞ் சான்ற கடைக்கோட் காலை —– — சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்று விதித்ததன் கருத்தைச் சற்று ஆழச் சிந்திக்க வேண்டும். சிறந்தது,சிறப்பு-வீடுபேறு.(திருக்குறள் 31,331)
2.சிவத்தின் திருவருள் நிறைந்து இருக்கும் இவ்வுலகில், அதனை அறிந்து துய்ப்பதற்கு வழிகாட்டும் அறிவன் நூல்களாகிய திருவாசகம் முதலிய நூல்களை அறியாது உலகியல் வழக்கே பேசும் நூல்களைப் பயில்வதோடு நின்றுவிடுகின்றனர் , மக்களுட் சிலர்.அதற்குக் காரணம் உலகியற் சுவையே அறியும் அவர்களது இயற்கையே என்க.
சைவர்களின் பொது நோக்கு:
சிவநெறியினர் இலக்கியத்துறையிலும் தத்துவத்துறையிலும் பொது நோக்குடையவரே.
நன்னூல் எனும் இலக்கண நூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர் சமணத்துறவி என அனைவரும் அறிவர். தொல்காப்பியம் ஒழிய முந்திய இலக்கண நூல்களைக் காட்டிலும் தமிழுலகம் நன்னூலைக் கொண்டாடுவதற்குக் காரணம் அதற்குச் சைவர்களாகிய சங்கரநமசிவாயரும் சிவஞான முனிவரும், பின்னாளில் ஆறுமுகநாவலரும் செய்த உரைகளேயாம். மாதவச் சிவஞானயோகிகள் நன்னூல் தெரிநிலைவினைப்பகுதி சூத்திர உரையில் பவணந்தி முனிவரின் நுண்மாண் நுழைபுலனைப் பாராட்டியதைப் போன்று வேறெவரும் செய்திலர். ‘பல்கலைக்குரிசில் பவணந்தி முனிவர்” என சிவஞானமுனிவர் பாராட்ட, “முன்னூ லொழியப் பின்னூல் பலவினுள் நன்னூலார்தமக் கெந்நூ லாரு மிணையோ வென்னுந் துணிவே மன்னுக” என்று இலக்கணக் கொத்து ஆசிரியர் சீலத்திரு சுவாமிநாத தேசிகர் நன்னூலுக்குப் புகழ்மாலை சூட்டினார். பேராசிரியர், நச்சினார்கினியர், சிவஞானமுனிவர் திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் முதலியோர் தம் உரைநூல்களில் நாலடியார், நன்னூல் முதலிய நூல்களில் மட்டுமன்றி, காமநூல் என விலக்கப்பட்ட சீவகசிந்தாமணியினின்றும் மேற்கோள் காட்டல் எச்சமயநூலாயிருப்பினும் புலமையுடைத்தெனின் போற்றும் பண்பினைக் காட்டும். உ.வே.சாமிநாதையரின் சங்க இலக்கியப் பதிப்புகளுக்கு திருவாவடுதுறையாதீனத் திருமடத்தின் உதவி அவர் எழுதிய முன்னுரைகளில் விளங்கும். சி.வை. தாமோதரம் பிள்ளை, பவானந்தம் பிள்ளை, பாகனேரி காசிவிசுவநாதன் செட்டியார், மகாவித்துவான் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஔவை துரைசாமிப்பிள்ளை, மறைமலையடிகள், பெருமழைப் புலவர் சோமசுந்தரனார், கழகப் புலவர் இராமநாதபிள்ளை. இளவழகனார் முதலாய சங்க இலக்கியங்களின் பதிப்பாசிரியர்கள் உரையாசிரியர்கள் அனைவரும் சைவர்களே.
சங்க இலக்கியமும் சைவமும்
முழுமுதற்கடவுளாம் சிவபரம்பொருளைச் சங்கப்புலவர்கள் அருந்தவத்தோன், ஆதிரைமுதல்வன், ஆலமர்செல்வன், ஆனேற்றுக் கொடியோன், கொன்றையங்கலந் தெரியலான், சீறருமுன்பினோன், செல்விடைப்பாகன், புதுத்திங்கட் கண்ணியான், பைங்கட்பார்ப்பான், மணிமிடற்றந்தணன், மணிமிடற்றெண்கையான், மழுவாள் நெடியோன், முக்கட்செல்வன் என்று சைவர்கள் இறும்பூது கொள்ளும் அளவிற்குப் பல்வேறு சிறப்புப் பெயர்களாற் புகழ்ந்து கூறினர். இப்பெயர்களெல்லாம் சிவபரத்துவத்தை விளக்கும் காரணப் பெயர்களாம்.
இச்சிறப்புப் பெயர்களால் சிவத்தைப் போற்றிப் புகழ்ந்த புலவர்களை `பொய்யடிமையில்லாத புலவர்கள்` எனப் போற்றி வணங்கியது சைவ உலகம். திருத்தொண்டத்தொகையில் நம்பியாரூரர் கூறிய பொய்யடிமையில்லாத புலவர் யாரென்பதை நம்பியாண்டார் நம்பிகள் வழிநூலாகிய திருத்தொண்டத் திருவந்தாதியில்,
“தரணியிற் பொய்ம்மை யிலாத்தமிழ்ச் சங்க மதிற்கபிலர்
பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர்
அருள்நமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவோர்களே”
என்று கூறியருளினார். ஏனைத் தனியடியார்களைப் போலச் சங்கப்புலவர்களும் சிவநேயராயாகிய நாயன்மாரெனப் போற்றப்பட்டமை நம்பிகள் வாக்கில் தெளிவாகின்றது.
சிவமணம் கமழும் சங்கப்பாடல்கள்:
எட்டுத்தொகை நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் அனைத்தும் சிவபரத்துவத்தை விளக்குவனவே. அதனை விளக்கத்தொடங்கினால் அதுவே ஒரு தனிக்கட்டுரையாகும்.
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப்பாடல், சங்காரகாரணனாகிய சிவபெருமானே மீண்டும் புனருற்பவம் செய்யும் முழுமுதற்கடவுள் என்ற உண்மையைச் சாற்றுகின்றது. தர்க்கத்தின் அடிப்படையில் சங்கார காரணனே முதல் என்ற உண்மையை முதன் முதலில் நிலைநாட்டியவர் சிவஞானபோத ஆசிரியர் மெய்கண்டார் ஆவர். ஆனால் இவருடைய திருவவதாரத்திற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்பே ஐங்குறுநூறு,
“நீல மேனி வாலிழைபாகத்
தொருவ னிருதா ணிழற்கீழ்
மூவகை யுலகு முகிழ்த்தன முறையே”
என்று எடுத்தியம்பிற்று. இவ்வாறு பாரதம் பாடிய பெருந்தேவனார் கொள்கையை மேற்கொண்டதாலல்லவோ, மெய்கண்டதேவர், சிவஞானபோதம் முதற் சூத்திரத்தில்,
“அவனவ ளதுவெனு மவைமூ வினைமையின்
தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதா
மந்த மாதி யென்மனார் புலவர்.” என்றருளிச் செய்தார்.
கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல், சிவபராக்கிரமத்தைக் கூறும் பழமரபுக் கதைகள் பலவற்றை எடுத்து இயம்புகின்றது. இப்பாடல் கூறும் ‘ஆறறி அந்தணருக்கு அருமறைபல பகர்ந்தது, தேறுநீர் சடைக் கரந்தது, திரிபுரம் தீ மடுத்தது, மணிமிடற் றந்தணனானது, மதுகையால் நீறணிந்தது, கொலையுழுவைத் தோல் அசைத்தது, பிரமன் தலையை அங்கையிற் கொண்டது’ போன்ற சிவபரத்துவத்தை விளக்கும் பழமரபுக்கதைகளை திருமுறையாசிரியர்கள் தம் திருப்பதிகங்களில் எடுத்தாண்டனர். அவற்றைப் பிற்காலத்தில் சைவ இலக்கியங்கள் காப்பியச் சுவையுடன் விரித்துக் கூறின.
புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப்பாடல், ஏனைத்தேவரை விலக்கி சிவன் ஒருவனே வழிபடத்தக்கவன் என்று உணர்த்துகின்றது. அத்தகைய உறுதியுடையோர் சங்ககாலத்தில் இருந்தமையால் அல்லவா, காரிகிழார் என்னும் புலவர் பெருமான், ‘பணியிய ரத்தைநின் குடையே முனிவர், முக்கட் செல்வர் நகர்வலம் வரற்கே” (புறம்6:17-18) எனத் தெருட்டினார்.
அகநானூறின் கடவுள் வாழ்த்துப் பாடல், சிவபரம்பொருளின் தடத்த வடிவத்தை எடுத்துக் காட்டியதுடன், ‘யாழ்கெழு மணிமிடற் றந்தணன், தாவில் தாணிழல் தவிர்ந்தன்றா லுலகே” என்றும் உணர்த்திற்று. உலகு என்றது ஆன்மாக்களுக்காக இறைவன் படைத்த எல்லா உலகங்களையுமாகும். இதனால் சங்காரகாரணனான முதல்வனே படைப்புத் தொழிலுக்கும் முதல்வன் என்பதனோடு, அவனே , `தாள்நிழல்` தரும் காத்தல் தொழிலுக்கும் முதல்வன் என்பதை இப்பாடல் உணர்த்தியது. ‘கார்விரி கொன்றை”எனத் தொடங்கும் இந்த அகநானூறு கடவுள் வாழ்த்துப் பாடலை மேற்கோள்காட்டி உரைவரைந்த இளம்பூரணர்,”– — மணிமிடற்று அந்தணனது சிவானுபூதியிற் பேருலகம் தங்கிற்று” எனப் பொருள் உரைத்தார்.(தொல் பொருளியல் 1.) சிவானுபூதி எனும் இளம்பூரணரது சொல்லாட்சியே பின்னர், “தற்போதம் முனையாதவாறு சிவஞானத்துள் அடங்கிச் சிவானுபவம் சுவானுபூதியாம்படி ஞானநிலையில் உறைத்து நிற்றல்” எனச் சிவஞானமுனிவரின் உரையிலும் இடம்பெற்றது.
பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலெனக் கருதத்தக்க ஒருபாடலை நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் –பொருளதிகாரம், புறத்திணை 26 உரையில் மேற்கோளாகக் காட்டியுள்ளார். “சூலம் பிடித்த சுடர்ப்படைக் , காலக் கடவுட் குயர்கமா வலனே”, எனக் கூறி வழுத்துகின்றது. இப்பாடலில் சிவபரம்பொருளின் குணங்குறி கடந்த, காலாதீத, விசுவாதீத நிலை உணர்த்தப்படுகின்றது.
குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல், குமார பரமேசுவரனின் கோலத்தைக் கூறி அச் ”சேவலங் கொடியோன் காப்ப, ஏம வைக லெய்தின்றா லுலகே” எனத் துதிக்கின்றது.
இவ்வாறே பரிபாடலிலும் சிவபரத்துவம் பேசப்படுகின்றது என அறிக.
சங்கநூல்களின் பாடுபொருள் அகப்பொருளும் புறப்பொருளுமாகும். உலகியல் வழக்கும் நாடகவழக்கும் கூட்டிப் புலவர்களால் நாட்டிக் கொள்ளப்பட்ட புலனெறி வழக்கைப் பாடும்போதும் போதும் சங்கபுலவர் “அரன் சேவடிக்கே பொருளமைத்து இன்பக் கவிபாடினர்” என்பதற்குத் தக்க சான்றாக அமைந்தது, நெய்தற்கலியில், “அயந்திகழ் நறுங்கொன்றை யலங்கலந் தெரியலான்” எனத்தொடங்கும் 33ஆவது பாடல்.
அந்தப் பாடலில் பொருள்வயிற் பிரிந்த தலைவனை நினைந்து ஆற்றாத தலைவியை ஆற்றுவித்த தோழி, சிவபரத்துவத்தின் குறியீடுகளான கொன்றை, ‘பிறங்குநீர்க் கரந்தசடை, எலும்பணி, புதுத்திங்கட் கண்ணி, பொற்பூணாம் பாம்பணி, விடையூர்தி,(மார்கழித்) திருவாதிரை, அம்மாதத்திற் பூக்கும் சிவனுக்குகந்த செண்பகமலர் என்பனவற்றைக் கையாண்டுள்ள சொற்றிறத்தில் கமழும் சிவமணத்தைச் சிவநெறியாளர் நுகரா தொழிவாரோ?
சங்க இலக்கியமும் பத்தி உணர்வும்:
சங்க இலக்கியங்களின் பாடுபொருளாகப் புலவர்களால் அமைத்துக் கொண்ட புலனெறிவழக்காக அமைந்தன அகப்பொருளும் புறப்பொருளும். பத்தியுணர்வு புறப்பொருளில் அடக்கப்பட்டது.
பத்தியாவது யாது? அஃதொரு மனநிலை. அன்பின் முதிர்ந்த நிலை. “அன்பு, பத்தி, காதல் என்றாற் போல்வன இச்சை மீதூர்தற் பொருளன”(சிவஞானமுனிவர்). அகப்பொருள் இலக்கியங்களில் காணப்படும் அன்புணர்ச்சியே பத்தியுணர்வாகத் திருமுறை இலக்கியங்களில் உயர்நிலை எய்தியுள்ளது;. அல்லது வளர்ந்தது எனலாம். தொல்காப்பியம் கூறும் அகப்பொருள் இலக்கணத்தை அறிந்தாலன்றித் திருமுறைகளில் உள்ள அகப்பொருட் பாடல்களின் பொருளை முழுமையாக அனுபவிக்க இயலாது. பாவை பாடிய வாயால் மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையாரைச் சங்க அகப்பொருட்பாடல்களின் வழி நின்றே சுவைத்தல் இயலும்.
“தொல்காப்பியத்திலும் சங்கச் செய்யுட்களிலும் தனித்தனித்துறைகளாகக் குறிக்கப்பட்டுள்ள அகத்துணைத் துறைகளையெல்லாம் தெய்வம் கூட்ட ஒருவரையொருவர் கண்ட காட்சி முதலாக இருவரும் ஒருவரையொருவர் இன்றியமையாக் கேண்மையராய் உலகத்தார் அறிய மணஞ் செய்து கொண்டு அன்பினால் ஊடியும் கூடியும் மகிழ்தல் ஈறாக ஒரு கோவைப்படத் தொகுத்துக், கட்டளைக்கலித்துறை யாப்பினால், கூற்றும் மாற்றமும் அமைய நாடகக் காப்பியம் போன்று பொருட்டொடர் நிலைச் செய்யுள் அகத்திணைக் கோவையாகச் செய்யப்பட்டது திருக்கோவையார் எனும் இப்பிரபந்தமாகும்.” என மூதறிஞர் க.வெள்ளைவாரணனார் கூற்று சங்கநூற் பயிற்சி , திருக்கோவையாரைப் பயிலுவதற்கு எத்துணை உதவும் என்பதைக் காட்டும்.
`கல்லாடம்’ கற்றவனோடு சொல்லாடாதே என்று போற்றப்படும் கல்லாடம் என்னும் சைவ இலக்கியமும் அகப்பொருள் மரபினையொட்டிச் சங்க அகப்பொருட்பாடல்களைப்போல அகவற்பா யாப்பினில் அமைந்திருத்தலைத் தமிழ் நாவலர் அறிவர்.
சங்கப்பாடல்களின் மீது சிவநெறியினருக்கு உள்ள ஈடுபாட்டைக் காட்டத் திருக்கோவையாரில் “பாங்கன் வினாதல்” எனும் துறையில் உள்ள ஒருபாட்டே அமையும்.
காதல் வயப்பட்ட தலைமகன் உடல் இளைத்துருகி யிருப்பதைக் கண்ட பாங்கன் அவனை நோக்கி.” சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ” என வினவுகின்றான். இந்த வினாவில் இறைவனால் ஆயத்தக்க கருத்தாழமும் பொருட்பரப்பும் உடையது சங்க இலக்கியம் என்ற கருத்தினை உடையவர் மணிவாசகர் என்ற சைவர் என்பதில் ஏதேனும் ஐயமுண்டோ? இத்தகைய சங்க இலக்கியத்தைச் சைவர் புறக்கணித்தனர் என்பது பொருளற்ற வெறுங் கூற்றே.
திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலிய திருமுறையாசிரியர்கள் பலரும் சங்கத்தையும் சங்க இலக்கியங்களையும் அறிந்தேயிருந்தனர் என்பதற்கு அவர்தம் அருளிச் செயல்களிலிருந்து சான்றுகள் கிடைக்கின்றன.
ஆளுடையபிள்ளையார் தமிழ்ச்சங்கத்தை, “அங்கழகச் சுதைமாடக் கூடலாலவாய்”(1-7-2), என்றும் “அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்”(திருப்பாசுரம்) (தொகை- சங்கம்) என்றும் அப்பரடிகள், “நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்காண்” என்றும் குறிப்பிடுதல் அறியத்தக்கது. கழகம், மதுரைத்தொகை என்பனசங்கத்தைக் குறிக்கும் சொற்களாம்.
சங்க இலக்கியத் தொடர்களையும் கருத்துக்களையும் திருமுறையாசிரியர்கள் அப்படியே எடுத்தாளுவது அறியத்தக்கது.
பெரும்பாணாற்றுப்படை, மறையோதும் அந்தணர் வாழும் ஊரில், அவர்கள் ஓதும் மறையைக் கேட்டுப் பழகிய வளைந்த வாயையுடைய கிளிகள், அவ்வேதங்களை ஓசைகெடாது மிழற்றுகின்றன என்று கூறும்.
“வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகாப்பாளர் உறைபதி” (300-1)
எனும் பெரும்பாணாற்றுப்படைத் தொடர்,
“பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்
பயின்றோதும் ஓசை கேட்டு
வேரி மலிபொழிற் கிள்ளை வேதங்கள்
பொருட் சொல்லும் மிழலையாமே” (1-132-1)
எனப் பிள்ளையாரின் வாக்கில் இடம்பெறுதல் காண்க.
சிவபெருமானே உலகங்களைப் படைத்த முதற்கடவுள் என்றும் அம்முதல்வனே எல்லாத் தெய்வங்களுக்கும் தலைவன் என மதுரைக் காஞ்சி பாடுகின்றது.
“நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்பொடு ஐந்துடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவனாக” (மதுரைக் காஞ்சி453-455). இக்கருத்துத் திருமுறைகளில் பரக்கக் காணலாம்.
முழுமுதற்கடவுள் ஒருவரே, அவர் ஒருவரே பல்வேறு உருவில் வணங்கப் பெறுகின்றார் என்றகருத்தில்,
“வேறு பல்லுருவில் கடவுட் பேணி” என்றது குறிஞ்சிப் பாட்டு.
இதனையே, திருவாதவூரடிகள்,
“வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
நூறுநூ றாயிரம் இயல்பின தாகி,
ஏறுடை யீச னிப்புவனியை உய்யக்
கூறுடை மங்கையும் தானும்வந் தருளி” (கீர்த்தித் திருவகவல்-24-26) என்றும்,
காழிப்பிள்ளையார்
“நானாவித உருவாய்நமை யாள்வான்”(1-9-5) என்றும் ஓதினர்.
“வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி” என்னும் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் வாக்கை, ஆளுடையபிள்ளையார்,
“விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக் கூன்சலிக்குங் காலந்தானும்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய மெய்யவர் வாழ்கழுமலமே”(1-129-3)
என விரித்தோதினார்.
சங்க இலக்கியங்களில், இரவில் வந்த விருந்தினை “எல்லி வந்த நல்லிசை விருந்து”(நற்றிணை 42), தவிர்த்தலாகாதென்று கூறப்படுகின்றது. இரவில் வந்த விருந்தினைத் தலைமகள் உபசரிக்கும் திறனை அவள் வாழும் ஊருக்கேற்றி, நற்றிணை 142ஆம்பாடல்,
“அல்லி லாயினும் விருந்து வரினுவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியற் குறுமகள் உறைவினூரே”
எனப்பாடுகின்றது.
இக்கருத்தினை ஏற்று வழிமொழிந்து காழிப்பிள்ளையாரும்,
“மஞ்சாரு மாட மனைதோறு மைய முளதென்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள் திருமுல்லை வாயி லிதுவே”
எனப் பாடினார். இதனையே தெய்வச் சேக்கிழார், “மாரிக் காலத் திரவில் வைகி” என இளையான்குடி மாற நாயனார் புராணத்தில் விரித்துப் பாடினார்.
பதினொன்றாம் திருமுறையில் அகத்துறைப் பாடல்கள் மல்கி உள்ளன. அவற்றின் சிறப்பைச் சங்கப்பாடல்களுடன் ஒப்பு நோக்கினாலன்றி முழுதும் சுவைத்தலரிது.
தலைவன் பரத்தையரில்லில் இருக்கின்றான். தலைவிக்கு அவன் “ஏதிலாளன்” என்று உற்றார் அலர் பேசுகின்றனர். `அவன் பரத்தையரில்லில் இருப்பினும் அவன் என்கணவனே என்பது இவ்வூர் அறியும். அதை யொன்றும் மாற்றிவிட முடியாது. அதுபோதும் எனக்கு` எனத் தலைவி பேசுகின்றாள். தலைவியின் இம் மன நிலையைக் கூறும் அப்பாடல்,
“ஏதிலாளனும் என்ப—- —-
—- —- — தெண்கடல்
கண்டல் வேலிய வூர் `அவன்
பெண்டு`என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே” (நற்றிணை 74)
சேரமான் பெருமாள் தலைவியின் இம்மனநிலையை முழுதும் வாங்கித் தாமரைக் குளத்தின் மேல் வைத்துப் பாடுகின்றார். அல்லி குவளை ஆம்பல் எனப் பல பூக்கள் குளத்தில் மலர்ந்திருப்பினும், ஒரேயொரு தாமரை மலர்ந்திருக்கும் சிறப்பான காரணத்தால் அக்குளம் தாமரைக்குளமென்றே அழைக்கப்படும். அதுபோல தலைவனுக்கு எத்துணைப் பெண்களுடன் உறவிருப்பினும் என்னுடைய கணவன் என்றே அவனை உலகம் கூறும் எனத் தலைவி கூறுகிறாள். 11ஆம் திருமுறையில் திருவாரூர் மும்மணிக் கோவையில் அமைந்துள்ள அப்பாடல்,
“திறமலிச் செந்துவர் வாயின ரெங்கையர்க்கே
மறமலி வேலோ னருளுக வார்சடையான் கடவூர்த்
துறைமலி யாம்பல் பல்லாயிரத்துத் தமியே யெழினும்
நறைமலி தாமரை தன்னதென் றேசொலும் நற்கயமே” (24)