இந்தியா அல்லது இலங்கையிலிருந்து மேலை நாடுகளுக்கு யாரேனும் சோதிடர்கள் வந்தால் அங்கே பெரிய தமிழர்கள் கூட்டத்தைக் காண முடிகிறது. இந்த சோதிட நம்பிக்கை தமிழர்களை ஆட்கொண்டது இன்றோ நேற்றோ அல்ல. ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் சோதிட நம்பிக்கையில் மூழ்கியுள்ளனர். பழந்தமிழ் நூலான தொல்காப்பியம் முதல் இன்று வரும் நூல்கள் வரை எல்லாவற்றிலும் சோதிடக்குறிப்புகளைக் காண முடிகிறது.
இன்று நாம் மூட நம்பிக்கைகள் என்று முத்திரை குத்திவிட்ட பல நம்பிக்கைகள் உலகில் எந்த ஒரு சமுதாயத்திலும் ஆதி, காலத்தில் இருந்தே வந்துள்ளன. சங்கத் தமிழ் நூல்களில் அக்காலத் தமிழரின் விநோத நம்பிக்கைகள் விரவிக்கிடக்கின்றன.
இடி ஓசை கேட்டால் பாம்பு நடுங்கும் அல்லது இறந்துவிடும் என்றும், மயிரை இழந்துவிட்டால் கவரிமான் உயிர் வாழாது என்றும், புலி வேட்டையாடுகையில் இடப்பக்கம் விழும் இரையை உண்ணாது என்றும் தமிழர்கள் நம்பினார்கள். நாகப்பாம்பு மாணிக்கத்தை உமிழ்ந்து அதன் ஒளியில் இரை தேடும் என்றும், நிலவை அரவு (பாம்பு) தீண்டுவதே கிரகணம் என்றும், ஆமைக்குட்டி தன் தாயின் முகத்தைப் பார்த்துக்கொண்டே வளரும் என்றும் பழந்தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.
போர்க்களத்தில் காயமடைந்தவர்களை பேய்கள் சூழ்ந்து நிற்கும் என்றும் பிறந்த குழந்தைகளைத் தீய சக்திகள் தாக்காமலிருக்க வெண்கடுகைப் (ஐயவி) புகைத்து ஐம்படைத்தாலி கட்டவேண்டும் என்றும் நம்பினார்கள். இறந்தவர்களுக்கு நடுகல் நட்டு அதற்கு மாலை, பீலி சூட்டீ பயபக்தியுடன் வழிபட்டனர். மலைகள், காடுகள், ஆறுகளில் அணங்குகள் வாழ்வதாகவும் அவை மனிதர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குத் தீங்கு செய்யும் என்றும் கருதினார்கள்.
சங்கத் தமிழ் நூல்களிலும் தொல்காப்பியத்திலும் எண்ணற்ற சோதிடக் குறிப்புக்களைக் காண முடியும். சங்ககாலத் தமிழர்கள் பறவைகள் பறக்கும் திசை, எழுப்பும் ஒலி ஆகியவற்றைக் கொண்டு (புள் நிமித்தம்) ஆருடம் கூறினார்கள். பல்லி சொல்லுக்குப் பலன் கண்டனர். இடது கண் துடிப்பதைக் கொண்டு சகுனம் பாரத்தனர். பெண்ணின் மனநோயைக் (உண்மையில் காதல் நோய்) குணப்படுத்த கட்டுச்சிவியைக் கொண்டு “விரிச்சி” கேட்டனர். வேலனைக் கொண்டு வெறியாடினர். நல்லநாள் பார்த்துத் திருமணம் செய்தனர். சில பெண் சோதிடர்கள், அவர்கள் பையிலுள்ள கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர். இது போன்ற செய்திகளைத் தக்க சான்றுகளுடன் காண்போம்:-
1. திருமண முகூர்த்தம்:-
நல்லநாள் பார்த்துத் திருமணம் செய்யும் வழக்கம் இன்றுபோல அன்றும் இருந்தது. இணைபிரியாத காதலர்க்கு உவமையாக சந்திரனையும், ரோகிணியையும் வடமொழி நூல்கள் குறிப்பிடுகின்றன. தமிழ் நூலான அகநானூறும் இதைக் குறிப்பிடுகிறது. திங்களும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நல்ல நாளில் திருமணம் நடந்ததாக அகம் 86, 136 ஆகிய பாடல்கள் கூறுகின்றன. இவ்விரு பாடல்களும் தமிழர்களின் திருமணச் சடங்குகளை மிக அழகாக வருணிக்கின்றன. நெடுநல்வாடையும் திங்கள்-ரோகிணி பற்றிக் குறிப்பிடுகிறது.
2. பல்லி சொல்லுக்குப் பலன்:-
வீட்டில் வசிக்கும் பல்லி ஒலி எழுப்பினால், அது நல்ல சகுனம் என்று தமிழ்ப்பெண்கள் நம்பினார்கள். இதை அகம் 9, 151, 289 ஆகிய பாடல்களிலும் நற்றிணை 98, 169, 333 ஆகிய பாடல்களிலும் கலித்தொகை 11-ஆம் பாடலிலும் காணலாம்.
3. தும்மலும் காதலனும்:-
யாரேனும் தும்மல் போட்டால் மேலை நாடுகளிலுள்ளோர் “பிளஸ் யூ” (Bless You) என்று சொல்வதைக் காணலாம். இந்தியாவில் “தீர்க்காயுஸ்” (நீடூழி வாழ்க) என்பர். யாராவது நம்மைத் தவறான எண்ணத்துடன் நினைத்தால் நமக்குத் தும்மல் ஏற்படும் என்று நம்பினார்கள் போலும்! காதலன் தும்மல் போட்டவுடன் காதலி வெகுண்டெழும் காட்சியைத் திருவள்ளுவர் பல குறள்களில் வருணிக்கிறார். “உன்னை வேறு ஒரு பெண் நினைக்கிறாள். யார் அந்தக் கள்ளக் காதலி?” என்று தலைவி சீறுகிறாள். இந்தக் காட்சியை குறள் 1312, 1317, 1318, 1203, 1253 ஆகியவற்றில் படித்து இன்புறலாம். இந்தக் கருத்தை சங்கப் பாடல்களில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
4. பட்சி சாஸ்திரம்:-
பறவைகளைக்கொண்டு ஆருடம் கூறுவதை புள் நிமித்தம் என்று கூறுவார்கள். இதைக் கொண்டு இனி நடக்கப் போவது என்ன என்பதை அறிய முடியும். இந்த நம்பிக்கை இமயம் முதல் குமரி வரை இருந்ததை வடமொழி நூல்களால் அறிய முடிகிறது. தமிழில் புறநானூறு 20, 68, 124, 204, 280, அகநானூறு 151 முதலிய பாடல்கள் இதை விளக்குகின்றன. தொல்காப்பியமும் 6,7 இடங்களில் நிமித்தம் பற்றிப் பேசுகிறது.
5. நாளும் நட்சத்திரமும்:-
போர் செய்யப் போகும் மன்னன், நல்ல நாளில் குடையும் வாளையும் செல்ல வேண்டிய திசையில் எடுத்து வைப்பான். வாள் நாள் கோள், குடைநாள் கோள் என்று தொல்காப்பியரும் இதைக் குறிப்பிடுகிறார். ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந்தமிழகத்திலும் இருந்தது போலும்! புறம் 24-ஆம் பாடலில் பிறந்தநாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. பொருநராற்றுப் படையில் முடத்தாமக் கண்ணியாரும் இதைக் குறிப்பிடுகிறார். “நாளும் ஓரையும்” என்ற தொல்காப்பிய சூத்திரமும் குறிப்பிடத் தக்கது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராஜராஜசோழன் அவனது பிறந்த நாளான சதய நட்சத்திர நாளன்று பெரிய விழாவை எடுத்ததாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. வால் நட்சத்திரம் (தூமகேது) தோன்றினால் மன்னருக்குத் தீங்கு நேரிடும் என்றும் கருதினர். ஒரு தூமகேது (COMET) தோன்றிய ஏழாம் நாளில் சேரமன்னன் யானை கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்ததைப் புறம் 229 பாடுகிறது.
1. கனவு சகுனங்களில் நம்பிக்கை:-
தற்காலத் தமிழ்த் திரைப்படங்களில் யாரேனும் ஒருவர் இறந்ததையோ இறக்கப்போவதையோ காட்ட விரும்பும் இயக்குநர் ஒரு விளக்கு அணைவதைக் காட்டுகிறார். இவ்வாறு விளக்கு அணைவது, ஆந்தை அலறுவது, வால் நட்சத்திரம் தோன்றுவது, விண்கற்கள் விழுவது முதலியவற்றைத் தமிழர்கள் தீய நிமித்தங்களாகக் குறிப்பிட்டுள்ளனர். இவைகளைப் புறம் 41, 229, 238, 280, 395, அகம் 141 முதலிய பாடல்கள் எடுத்துரைக்கின்றன. “உன்னம்” என்னும் மரத்தைக் கொண்டும் சகுனம் பார்த்ததை (பதிற்றுப் பத்து) ஏழாம் பத்து குறிப்பிடுகிறது.
2. பலி இடுதல்:-
இறந்தோரை (தென்புலத்தார்) திருப்தி செய்வதற்காக அவர்கள் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல்லிற்கு அஞ்சலி செய்வதை எண்ணற்ற சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. இது தவிர காகத்திற்கு 7 பிண்டம் (உருண்டை) அரிசிச் சோறு பலியிடுவதை வடமொழி நூல்களும் குறிப்பிடுகின்றன. ஆடு பலியிட்டு வழிபடுவதைக்குறுந்தொகை 362-ஆம் பாடலில் காணலாம்.
3. வெறி ஆடல்:-
காதல் நோயால் பீடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல் மெலிந்து போவதைக்கண்ட அவளது தாய் அந்ந்தப் பெண்ணை அணங்கு பிடித்துக்கொண்டது என்று எண்ணி வேலனைக்கொண்டு வெறி ஆடுவதும் கட்டுவிச்சியைக் கொண்டு விரிச்சி கேட்பதும் எண்ணற்ற பாடல்களில் வருகின்றன. ஏறத்தாழ முப்பது பாடல்களில் இக்குறிப்புகள் வருகின்றன. (சில இடங்களில் இந்த வழக்கத்தை எள்ளி நகையாடுவதும் படித்து இன்புறத் தக்கது.)
4. வெள்ளி கிரகமும் வறட்சியும்:-
மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் (VENUS) உள்ள தொடர்பை எண்ணற்ற சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்கு திசைக்குச் சென்றால் பஞ்சமும், வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர். வடமொழி நூல்களும் இதே கருத்தைக் கூறுகின்றன. புறம் 117, 384, 385, 386, 388, 389, பதிற்றுப் பத்து 13, 69 மற்றும் பட்டினப்பாலை ஆகிய பாடல்களில் வெள்ளி கிரகம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
5. பேயும் சுடுகாடும்:-
பேய் பற்றிய நம்பிக்கைகள் ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன. சுடுகாட்டில் பேய் மகள் இருப்பாள் என்றும் சுடுகாட்டிற்குப் போனால் அதைத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டும் என்றும், போர்க்களத்தில் காயமடைந்து உயிர் நீக்கப் போகும் வீரர்களைச் சுற்றிப் பேய்கள் நிற்கும் என்றும் தமிழர்கள் நம்பினார்கள். கலிங்கத்துப்பரணி முதலிய பரணி வகை இலக்கியங்களில் இவை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. சங்ககால நூல்களில் புறம் 356, 363 குறுந்தொகை 231 முதலிய பாடல்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. பேயும் தீய சக்திகளும் தாக்காமல் தடுக்க ஐயவி எனப்படும் வெண்கடுகைப் புகைக்க வேண்டும், மணி அடிக்க வேண்டும், வேப்பிலையைப் பயன்படுத்த வேண்டும் என்ற தகவல்களை அரிசில் கிழாரும், (புறம் 281) வெள்ளை மாறனாரும் (புறம் 296) தருகின்றனர். நோன்புக்கயிறு கட்டுதலைக்குறுந்தொகை 218-ஆம் பாடல் தருகிறது.
6. கண் துடிப்பும் கழங்கும்:-
பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது என்ற நம்பிக்கைப் பழந்தமிழர்களிடையே இருந்தது. வால்மீகியும், காளிதாசனும், அவர்களது காவியங்களில் பலமுறை குறிப்பிடும் இச்செய்தியை வடமொழி நூல்களில் காணலாம். கலித்தொகையில் பாலை பாடிய பெருங்கடுங்கோவும், முல்லை பாடிய சோழன் நல்லுருத்திரனும் இதைப் பாடியுள்ளனர். நெல் பரப்பி கட்டுவிச்சி குறி சொல்வதை நற்றிணை (288, 373) குறுந்தொகை (181), முல்லைப்பாட்டு ஆகிய பாடல்களில் காணலாம். கழங்கு மூலம் சோதிடம் கூறுவதை ஐங்குறுநூறு 245-8-இல் கபிலர் வருணிக்கிறார். “பாக்கத்து விரிச்சி” என்று தொல்காப்பியரும் குறிப்பிடுகிறார்.
இப்படி எத்தனையோ சுவையான செய்திகள் சங்கத்தமிழ் நூல்களில் இருக்கின்றன.