கோவையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்பும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோவையில் உள்ள நிர்மலா அரசு உதவிபெறும் தனியார் பெண்கள் கல்லூரியில் ஆசிரியரல்லாத 44 பணியிடங்களை நிரப்பிக் கொள்ள, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி கல்லூரி நிர்வாகம், காலியாக இருந்த காவலர், தோட்டக்காரர், துப்புரவுப் பணியாளர் மற்றும் தண்ணீர் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களில் 4 பேரை நியமித்தது. இந்த நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கல்லூரி நிர்வாகம், கோவை கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், அந்தப் பணியிடங்களை வெளிப்பணி அடிப்படையில் ஒப்பந்த முறையில் நியமிக்க வேண்டும் என கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து, கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் உயர்கல்வித் துறைச் செயலர், கல்லூரிக் கல்வி இயக்குனர் மற்றும் கோவை கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞர் சி.முனுசாமியும், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஐசக் மோகன்லாலும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதப் பணியிடங்களை, அவுட்சோர்ஸிங் முறையில் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடும் அதிகாரம் அரசுக்கு இல்லை என உத்தரவிட்டு, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.