New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விராத்யர்கள் -தள்ளி வைக்கப்பட்ட ஜாதிகள் யார் எவர்?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
விராத்யர்கள் -தள்ளி வைக்கப்பட்ட ஜாதிகள் யார் எவர்?
Permalink  
 


தள்ளி வைக்கப்பட்ட ஜாதிகள் யார் எவர்?

Written by London swaminathan

Research Article No. 1796; 13th  April 2015

Uploaded from London at   9-12

(இந்தக் கட்டுரையை ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன்)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் பார்ப்பனன், சிவ பெருமானுடன் சண்டை போட்டார்: ஏய், சிவா உனக்கு குலம் கோத்திரம் ஏதாவது உண்டா? பிச்சை எடுப்பது தானே உன் தொழில்? என்று ஏசினார்:

சங்கு அறுப்பது எங்கள் குலம்

சங்கரர்க்கு ஏது குலம்

— என்று சொல்லி எள்ளி நகை ஆடினார். சிவ பெருமானுக்கு மஹா கோபம்; நெற்றிக் கண்ணைத் திறந்தார். அப்போதும் அந்த மதுரை ஆசாமி (நக்கீரர்) விடுவதாக இல்லை:–

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே

–என்று கொக்கரித்தார். உடல் எல்லாம் பற்றி எரிந்தது இவ்வாறு சண்டை போட்ட சங்கப் புலவன் நக்கீரனுக்கு! இதற்குப் பின்னர் அவர் சிவனுடைய தாள் பணிந்து போற்றிப் புகழ் பாடியதை திருவிளையாடல் புராணம் திரைப் படத்தில் கண்டு களித்திருப்பீர்கள்.

(சங்கறுப்பது எங்கள்குலம் சங்கரர்க்கு அங்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோமினி  — நக்கீரர்;ஆதாரம்—தனிப்பாற்றிரட்டு, ஆண்டு 1897)

நக்கீரன் எனும் பார்ப்பனர் ஒரு பெரும்புலவர். கபிலர் பரணர் என்ற வேறு இரண்டு புகழ்பெற்ற பார்ப்பனர்களுக்குச் சமமாக வைத்து எண்ணப்பட்டவர். அவர் செய்த தொழில் சங்கு அறுத்து வளையல்களை விற்பது ஆகும். புலமை வேறு; தொழில் வேறு.

அது எப்படி பார்ப்பனர்கள் இப்படி வளையல் தொழிலில் இறங்கினர்? குஜராத்தில் ஜேஷ்டிப் பிராமணர்கள் என்பவர்கள் புகழ் பெற்ற மல்யுத்த வீரர்கள். கேரளத்தில் நாடகம் நடிக்கும் (சாக்கைக்கூத்து) பிராமண ஜாதி உண்டு. அவர்களால்தான் புகழ்பெற்ற சம்ஸ்கிருத நாடகங்கள் உலகிற்குக் கிடைத்தன.

இப்படி தனது குலத்தொழிலை செய்யாமல் வேறு தொழில்களைச் செய்யும் மூன்று வருணத்தாரை விராத்யர்கள் என்று மனு சொல்கிறார். பிராமணர்களுக்குக் குலத்தொழில் என்ன என்பதை வள்ளுவரும், சங்கப் புலவர்களும் தெள்ளிதின் புகன்றனர்: “அறுதொழிலோர்” என்று குறளும் சங்க இலக்கியமும் பல இடங்களில் பகரும்:

வேட்டல், வேட்பித்தல் (யாகம்)

கற்றல், கற்பித்தல் ( வேத அத்யயனம்)

கொடுத்தல், வாங்குதல் (தானம்)

இந்த அறுதொழில் போலவே க்ஷத்ரியர்கள், வைஸ்யர்கள் ஆகியோருக்கும் மனு ஸ்மிருதி என்ன என்ன தொழில்கள் என்று சொல்லும். இந்த மூன்று வருணத்தாரும் குறிப்பிட்ட வயதுக்குள் பூணூல் அணிந்து காயத்ரி மந்திரம்( Rig Veda 3-62-10).  சொல்ல வேண்டும். அப்படி பூணூல் அணிந்து காயத்ரி சொல்லாதவர்கள் எல்லாம் தள்ளிப்போனவர்கள் – தள்ளி வைக்கப்பட்டவர்கள் அவர்கள் எல்லோரும் விராத்தியர்கள் (Manu 10-20) என்று மனு நீதி நூல் புகலும்.

வேத காலத்தில் இந்து மத விதிகளைப் பின்பற்றாதவர்களை இப்படி விராத்தியர்கள் என்றனர். இன்று அனுதினமும் முறைப்படி மூன்று முறை காயத்ரி ஜபம் செய்பவர்கள்தான் பிராமணர்கள் என்றால், விரல் விட்டு எண்ணக் கூடிய பிராமணர்களே இருப்பார்கள். பிராமணர்களே இப்படி என்றால், மற்றவர்களைக் கேட்பானேன்!!

தமிழ் நாட்டிலும் சித்தர்கள் என்போர் மஹா மேதாவிகள், தத்துவ வித்தகர்கள்; இந்துமதத்தின் காவலர்கள். ஆயினும் இவர்கள் ஆகம விதிகளைப் பின்பற்றி சடங்குகளைச் செய்யாததால், சைவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தள்ளியே வைத்தனர். இது போலத்தான் விராத்தியர்களும்.

ஆயினும் விராத்தியர்கள், மனம் திருந்தி மீண்டும் சடங்குகளைச் செய்ய முன்வந்த போது, அவர்களைத் தூய்மையாக்க சுத்திகரிப்பு சடங்கு ஒன்றையும் வேத நூல்கள் இயம்புகின்றன. அதன் பெயர் விராத்யஸ்டோம.

மூன்று வருணத்தாரும் எவ்வளவு காலத்துக்கு பூணூல் போடுவதை ஒத்திப் போடலாம் என்றும் மனு சொல்கிறார்:

பிராமணர் (புரோகிதர்கள்) -16 வயது

க்ஷத்ரியர் (ஆட்சியாளர்கள்)- 22 வயது

வைஸ்யர் (வணிகப் பெருங்குடி) -24 வயது

இது உச்சபட்ச வயது. மூவருணத்தாரும் 7, 9, 11 வயதிலேயே

பூணுல் போட்டுக் கொண்டனர்.

விராத்தியர் பற்றிய குறிப்புகள் வரும் நூல்கள்:

வேதம்  Atharva Veda (15-1-1); VS 30-8, TB; 3-4-5-1

மனு ஸ்ம்ருதி :Manu 2—38 and 39

பிராமணங்கள் Panchavimsa Brahmana (17-1-4)

.

மனு ஸ்மிருதி, ரிக் வேதம், பிராமணங்கள், பல வகை கிருஹ்ய சூத்திரங்களில் இருந்து வேத காலம் பற்றி பல அரிய பெரிய தகவல்கள் கிடைக்கின்றன:

1.வேத காலத்தில் ஜனநாயகம் தழைத்தோங்கியது. மக்களில் பலர் குலத்தொழிலை விட்டு விலகிச் சென்ர போதும் அவர்களை, ஒரேயடியாக விலக்கிவிடாமல் கர் வாபஸி (தாய் வீட்டுக்குத் திரும்பி வரும்) சடங்கு வைத்து அவர்கலை ஏற்றுக் கொண்டனர்.

2.பிராமணர், க்ஷத்ரியர், வைஸ்யர் எல்லோரும் பூணுல் போட்டுக் கொண்டு சந்தியா வந்தனம் செய்து, காயத்ரீ ஜபித்தனர். (ராமாயணத்தில் கூட ராமன் செய்த சடங்குகள் உள்ளன).

3.விராத்தியர்கள் என்போர் தாங்களாகவே ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு பல இடங்களில் குடியேறினர். அவர்கள் கருப்பு உடை , தலைப் பாகை அணிந்து மாட்டு வண்டிகளில் பாணர், கூத்தர் போல இசைக் கருவிகளுடன் உல்லாசப் பயணம் செய்தனர் – நாடோடி வாழ்க்கை நடத்தினர்.

4.மொத்தம் நாலு வையான விராத்தியர்கள் இருந்ததாக பஞ்சவிம்ச பிராமணம் சொல்லுகிறது

5.அதர்வவேதம் விராத்தியர்கள் பற்றி புதிய சித்திரம் தருகிறது.

பழங்காலத்தில் விராத்தியர்கள் பற்றி எழுதியவர்கள்,  இதிலும் ஆரிய திராவிட இனவெறி வாதத்தைப் புகுத்திப் பார்த்தனர். ஆனால் அவர்கள் வாதம் பலிக்கவில்லை. மனு திட்டவட்டமாகப் பேசியிருப்பதும், விராத்யஸ்டோம என்னும் “கர் வாபஸி” (தாய் மதம் திரும்பும் சடங்கு) இருப்பதும் அவர்கள வாதங்களைத் தூள் தூளாக்கிவிட்டது. அவர்களுக்குச் சார்பாக ஆதாரமே இல்லாமல் கட்டுரை எழுதிய இந்துக்களும் இருந்த இடம் தெரியாமல் போனார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் விராத்தியர்களும், நம் நாட்டு இந்துக்களே. இப்பொழுதும் கூட இந்து என்ற பெயருடைய கோடிக்கணக்கான பேர் பல சடங்குகளே தெரியாமல் வாழ்கின்றனர். மோரீஸ், பிஜி தீவுகள், கயானா, தென் ஆப்பிரிக்காவில் வாழும் இளம் தலைமுறையினர் ஓரளவே மதம் பற்றி அறிந்துள்ளனர். நாளும் தூரமும் அதிகரிக்க, அதிகரிக்க, மதமும் சடங்குகளும் தளர்துகொண்டே வரும். இந்தத் தாக்கத்தை எல்லா மதங்களிலும் காண முடிகிறது. இப்படி இருப்பவர்களை விராத்தியர் என்று வேதகாலத்தில் அழைத்தனர்.

–சுபம்–



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard