பெரும்பான்மையின மக்களுக்கு கிறிஸ்தவ சபைகளே கல்வியறிவை வழங்கின என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
கடலூர் துறைமுகத்தில் 1717-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சி.எஸ்.ஐ. தூய தாவீது மேல்நிலைப் பள்ளி தனது 300-ஆவது ஆண்டு விழாவை அடுத்த ஆண்டு கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மாநாடு, பள்ளிக்கான அடிப்படை கட்டமைப்பு செய்தல் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் இசட்.ஞானக்கண் செல்லப்பா தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அதிமுக மூத்தத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு இருவரும் பரிமாறிக் கொண்ட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கி.வீரமணி பேசியதாவது: சமுதாயத்தில் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது. உழைக்கும் மக்கள் கீழ்ஜாதியாக்கப்பட்டு அவர்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. இதனை மாற்றி பெரும்பான்மை மக்கள் கல்வியறியவு பெறுவதற்கு பாடுபட்ட பெருமை கிறிஸ்தவ மத சபைகளுக்கு உண்டு. இந்தப் பள்ளியை உருவாக்கிய சீகன்பால் தமிழை உலகுக்கு கொண்டு சென்றவர். தமிழில் முதல் புத்தகம் உருவாகுவதற்காக ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரம் கொண்டு வந்தவர். கல்வி, தொண்டு ஆகியவையே நம்மை இணைத்துள்ளது. இதனை கிறிஸ்தவம் செய்துள்ளது.
திருக்குறளை வெளிநாட்டுக்கு கொண்டுசென்றவர் ஜி.யூ.போப். திராவிட ஒப்பிலக்கணம் தந்தவர் கால்டுவெல். இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக வந்தவர்கள் என்று சொல்லப்பட்டபோதிலும், அவர்கள் தமிழக்கு அதிகமாக தொண்டாற்றி உள்ளனர் என்றார் அவர்.
பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது: 7-ஆம் வகுப்பில் தோல்வியடைந்தபோதிலும், எஸ்எஸ்எல்சி தேர்வில் பள்ளியில் முதல் மாணவராக நான் தேர்வு பெற்றதற்கு ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் போதித்ததே காரணம். கல்வியை பரவலாக்கிய பெருமை கிறிஸ்தவ மதத்தைச் சேரும். அதற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. தரமான கல்வி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அதுவரையில் எனது அரசியல் பணி தொடரும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பேராயக் கல்வி அலுவலர் எஸ்.அருள்நாதன், முன்னாள் மாணவர்களான டி.பாலு, நேரு இளையோர் மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.சேஷாத்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் ஜெ.பிரின்ஸ் நன்றி கூறினார்.