சிந்து சமவெளி நாகரீகத்தில் கிடைத்த பல பொருட்களுக்குப் பிறகு வரலாற்றுக்காலத்தில் கிடைத்த சிவலிங்கங்களில் மிகப் பழமையான லிங்கங்களாகக் கருதப்பெறுபவை மூன்று லிங்கங்கள். இவை அலாஹாபாத்தின் அருகிலுள்ள பீடா, மதுரா மற்றும் ஆந்திரத்திலுள்ள குடிமல்லம் ஆகிய இடங்களிலிருந்து கிடைத்தவை. இவற்றுள் காலத்தால் பழமையானதாகக் கருதப்பெறுவது பீடாவில் கிடைத்த சுடுமண்ணாலான லிங்கம். கிட்டத்தட்ட ஐந்து முகங்களோடு எந்தையின் ஐந்து முகங்களை நினைவுபடுத்துவதைப் போல கிடைத்த இந்த லிங்கத்தின் காலம் பொயுமு இரண்டிலிருந்து பொயு ஒன்று வரையாக நிர்ணயிக்கப்பெற்றிருக்கிறது. மதுராவில் கிடைத்த லிங்கம் பொயு ஒன்றாகவும் குடிமல்ல லிங்கம் பொயு ஒன்றிலிருந்து இரண்டாகவும் கருதப்பெறுகிறது.