மனிதர்கள் வாழ்வியல் சார்ந்தும், இயற்கைப் பொருட்களைச் சார்ந்தும் தங்களுடைய ‘அடையாளங்களை' கட்டமைத்து வந்துள்ளனர். விலங்குகளுக்கு அடிப் படையில் ஆதார நிலையில் உள்ள அடையாளங்கள் ஓர்மையற்ற விதங்களில் உருவாவதுபோல, இயற்கையிலிருந்து கடந்து எழுந்து வந்த மானிட இனத்திற்கு அவை உருவாகவில்லை; அவர்களுடைய அடையாளங்கள் அவர்களுடைய தன்னிலையாக்கங்களோடும் வாழ் விருத்தலின் உந்துதல்களோடும் ஓர்மையோடு கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன. பொருள்சார்ந்த உலகிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மாந்தரின் - மாந்தர்க்கான அடையாளங்கள், மாந்தரையும், பொருட்களையும் கட்டுப்படுத்தி வந்துள்ளன.
மானிட நாகரிக பரிணாம வளர்ச்சியில், மானிடக் குழுக்களுக்கு இடையிலான அதிகார அரசியலும், இதற்குரிய மதிப்பீடுகளும், அவ்வக்காலகட்டங்களின் வர்க்கங்கள், இனங்கள், தேசங்கள், மதக்குழுக்கள், சாதிக்குழுக்கள் ஆகியவற்றிற்கிடையிலான போராட்ட வடிவங்களாக, புனைவுகளாகக் கருத்தியல் நியாயங்களை வழங்கி வந்தன. ஒவ்வொரு மானிடக் குழுவின் இருத்தலுக்கான இந்த நியாயங்களை அந்தந்தக் குழுவின் ‘அடையாள அரசியல்' முன்னெடுத்துச் சென்றது. கருத்தியல் தளங்களை நோக்கிய அடையாளப்படுத்துதலும், அடையாள மீட்டுருவாக்கமும், அடையாள மேலாதிக்கமும் ‘வரலாற்றில்' தொடர்ந்து வந்தன. அடையாளங்கள் புதுப்பிக்கப்படலும், அடையாள உருவாக்கமும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
ஆதிக்க அரசியல் தளத்தில் அரசியல் ஆதிக்கம் சார்ந்த அடையாளங்களால் உலகெங்கும் இன்று தனிமனித அளவில் பலமற்றவராயினும், சார்ந்த அடையாளங்களால் அதிகாரம் பெற்றுவிடுவதைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டு முதல், ‘பருண்மை யான' முதலாளிகளையும், தொழிலாளிகளையும் எங்குத் தேடினாலும் நேருக்கு நேராகக் காண இயலாது. அவர்களுடைய வேலை - தொழில்தனங்களின் அடையாளங் களைத்தான் காண இயலும். கண்களுக்கும், மனங் களுக்கும் முன் பருண்மையான ஆலை மேலாண் மையையும், தொழிற்சங்க மேலாண்மையையும் பார்க்கலாம். வேறு வார்த்தைகளில் கூறினால் முதலாளி - தொழிலாளி வர்க்கப் போராட்டங்களை அந்தந்த வர்க்கங்களுடைய நலன்களே / அடையாளங்களே நடத்துகின்றன.
நவீன அடையாளங்கள் பல்வேறு வடிவங்களில், அடுக்குகளில் துரிதமாக - தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. நவீன தகவல் தொழில்நுட்ப அறிவியல் சாதனங்களால் வேகமாக உற்பத்தியாகின்றன. ஒன்று பலவாக, உள்முரண்களோடு கிளைத்துப்பரவு கின்றன. எ.கா. இந்தியன் - தமிழன் - மதத்தினன் - சாதியினன் - வர்க்கத்தினன் - பால் அடையாளத்தினன் - திராவிடன் - ஆரியன் - நடுத்தர வகுப்பினன் - பிற்பட்டவன் - தலித் - பெண்... ஆகிய அடை யாளங்கள் எல்லாம் ஒருவரிடமே சகவாழ்வு நடத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றில் இருமை எதிர் இணைகளாக ஆண் - பெண், இந்து - இஸ்லாம், திராவிடன் - ஆரியன், முதலாளி - தொழிலாளி, தலித் அல்லாத சாதிகள் - தலித் சாதிகள் என்பவை முரண் பட்ட அடையாளங்களாக முரண்பட்டவாறு உள்ளன. இவற்றை மேலும் விரித்துக்கொண்டே போகலாம்.
தமிழகத்தின் பழம்பெரும் அடையாளங்கள் நவீன காலக் கதைப்பிற்கு அவ்வப்போது பங்காற்றி வந்தாலும், அந்த அடையாளங்கள் இனிமேல் எதார்த்த வாழ்விற்கு உரிமையாகுமா அல்லது புனைவுகளாகப் போய் மறையுமா என்பதைக் காலம்தான் வரையறுக்கும். எனவே அடையாள அரசியலைத் தாண்டி, இன்றும் இனியும் வரலாறு எழுதலும் (Historiography), நவ வரலாறு (Neohistoricism), வம்சா வழித்தடவியல் (Genealogy) மட்டுமே சாத்தியமாகலாம்.
அடையாளங்களாக எவை தங்கள் தங்கள் சமூகங்களை அடையாளப்படுத்தினவோ அவற்றை அந்தக் குழுக்கள் தங்களுடைய ஆதிபத்தியத்தை முன் வைத்து, அவற்றின் பெயரால் போராடுகின்ற வழக்கம் மாந்த இனத்திற்குரியது மொழி (ஒலி), சைகை, சிலை (கல் முதலிய உலோகங்கள், கனிமங்கள்), சின்னம் (பூ, பொருள், இயற்கை), மதம் (புராதன மாந்திரீகம்) முதலான அடையாளங்கள் ஒரு காலக் குலக்குறிகளாக (totems) அல்லது விலக்குகளாக (taboos) தமிழில் சூர் அரமளிர் வதியும் பூ நீராடும் அருவி விரும்பும் மாங்கனி ஆகியன ஈராயிரம் ஆண்டுகளுக்கு வெகு முன்பு மானிடர்க்கு விலக்குகளாகத் தடைசெய்யப்பட்டு, அவை பின்னர் தெய்வீகத் தகுதி பெற்று, வழிபடு சக்தியாகின (வைதீகப் புராணங்களில் இவை ஏராளம்); அடையாளப்படுத்தப்பட்டு, பிற்காலங்களில், விக்கிரக வழிபாட்டு அடையாளங்களாகி வைதீக ஆதிக்கம் பரவிய காலங்களில் புனிதமான, வலிமை தருகிற சக்திகளாக, அடையாளங்களாக இயற்கையின் பிடியைக் கடந்து வராத ஓர் ‘அறிவு வட்டத்தின்Õ ஆதிக்க அடையாளங்களாக வழிபடலாயின. வரலாற்றில் பெரும்பாலும் போட்டியாளர் குழுக்கள், பகைக் குழுக்கள், அவற்றை எதிர் கொள்ளுகிற - சிறுபான்மைக் குழுவின் அடையாளங்களைத் தீர்மானிக்கின்றன.
இவ்வாறு அடையாளங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கிற அடையாளங்கள் மாறி மாறி முன்னிறுத்தப் படுகிறபோது ‘ஒப்பீட்டளவில் தொடர்ந்து தாமாகவே உற்பத்தியாகி (தொல் புராணகால அசுவமேதயாகம், நவீன ரத பவனியாக - உலாக்காட்சியாக உற்பத்தியாவது போல) எதிரான அடையாளங்களை உடைக்கின்ற உத்திகளை மேற்கொள்ளுகின்றன.
இது நவீன காலத்தில், பழைய - புராதன - தொல் குடிக்காலத் தொன்மங்கள் கலந்த அடையாளங்களாக மீட்டுருச் செய்யப்படுகின்றன. கல்வி அறிவும், வாழ்க் கைக்கு இன்றியமையாத தேவைகளும் பற்றாக்குறையாக உள்ள கலாச்சாரங்களில் காணப்படுகிற அடையாளங்கள் ‘அறியாமைÕயை மூலதனமாகக் கொண்டுள்ளன.
வளர்ச்சி பெற்ற நாகரிகங்களில் இத்தகைய மௌபீகமான அடையாளங்களைவிட அறிவியல் அடையாளங்கள் மேல் நிலை பெற்றுள்ளன. நவீன குடியரசுக் கொண்டாட்டங்களில் அறிவியல் ஆயுதங்களின் ஊர்வலம் நவீன கால அடையாளமாக பவனிவருகின்றதைப் பார்க்கலாம். இதில் புராணிக அடையாளங்களும், அறிவியல் வல்லாண் மையைப் பிரகடனப்படுத்தும் அடையாளங்கும் கைகோத்துக் கொள்ளுகின்றன.
மரபான அடையாளங்கள் நவீன அடையாளங் களுக்கு ஊட்டமாகச் செயல்பட்டுக்கொண்டிருக் கின்றன. இவ்விரண்டிற்கும் இடையே தொடர்ச்சியான ஊடுறவு இயங்கிக்கொண்டே இருக்கும்; இருக்கின்றன. ‘அடையாளம்Õ என்பது, மாந்த இனத்தின் தன்னிலை உருவாக்கத்தோடு சம்பந்தப்பட்டது. வலுவான தன்னிலையின் அடையாளம், அந்தத் தன்னிலையின் சுயம் சார்ந்த, நிர்ணயம் செய்கிற ஆற்றலோடு உறவு கொண்டதாக உள்ளது. மானிட சாயத்தின் சுதந்திரமான இருத்தல் சார்ந்தது. இது சாத்தியமற்ற போது சிக்கல்கள் ஏற்படுகின்றன. இத்தகைய அடையாளங்கள், மனித சுயம் தன்னிலை என்ற உளவியல் நிலைபாடுகள் நிலைப்படுகிற போது தோன்றுகின்றன; இவை ஓரினம் - சமூகம் வாழ்வதற்கும் ஆள்வதற்குமான போராட்டங்களை நியாயப்படுத்துகின்றன.
இந்தப் போராட்டத்தின் தொடக்கநிலையை மொத்த இயற்கையின் ஓர் அங்கமாக இருந்த ‘மாந்த இனம் தனது வாழ்வியல் நிர்ப்பந்தத்தால், அதிலிருந்து பிரிந்து தானும், இயற் கையும் ஒன்றோடு ஒன்று உறவாடுகின்ற தனித்தனி எதார்த்தங்களாகிய போதே மாந்த இனத்தின் நாகரிகம் ஆரம்பமாகியது. இயற்கையின் மீது கொண்ட பௌதீகச் சார்பு நிலையிலிருந்து கடந்து, அதற்குக் காரணமாகப் பிறப்பால் இயற்கை சார்ந்து உருவாகியிருந்த பால், இனம், குழு, குருதி உறவு (சாதி) ஆகிய தளைகளைத் தாண்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. இதிலிருந்து விடுபட்டுப் புதிய கலாச்சார, நாகரிக அடையாளங்களை உருவாக்கிய ‘வரலாறுÕ மாந்திரீகத் தன்மை வாய்ந்ததாகக் காணப்படுகிறது; மாந்திரீகம், சடங்கு, தொன்மம், கதைகள், நம்பிக்கைகள், புராணங்கள், உற்பத்தி முறைகள், கருவிகள், குடும்பம், மொழிக் குறியீடு... முதலானவற்றை உருவாக்கிப் புதிய அடையாளங்களைக் கட்டமைக்க வேண்டியதிருந்தது.
இயற்கையின் மாதிரிகையிலமைந்த ஆள்வோர் - ஆளப்படுவோர் என்ற ஏற்றத்தாழ்வான உறவு முறை இயற்கையானதாகக் கருதப்பட்டாலும், மாந்த இனத்தின் தனித்துவமான பரிணாமம் வளர்ச்சி இதனை மறுத்தது. பாதிக்கப்பட்டவர்களும் பாதித்தவர்களும் தங்களுடைய இனந்தெரியாத பொற்காலங்களைப் புனைந்து போராடினார்கள். அடையாளங்கள் பெருகின. இன்றைய ஆதிக்க அடையாளங்களை உறுதிப்படுத்தி நீட்டிக்கவோ, அல்லது இழந்துபோன ஆதிக்க (அல்லது சமத்துவ) நிலையை மீட்கவோ அல்லது பழைய கலாச்சாரப் புனைவுகளை அடையாளங்களாக இனம் கொண்டு புதிப்பித்து நவீனகாலத்தில் விடுதலைக்கு ஏற்ற ஆயுதங்களாக மாற்றவோ முனைகிறார்கள். இந்தியா போன்ற வேறுபாடுகள் மிகுந்த கலாச்சார - நாகரிக - இயற்கையமைப்பு - மக்கள் தொகைப்பெருக்கம் ஆகியவை கொண்ட நிலப்பரப்பில் வாழுகிற மக்கள் இனக்குழுக் கலாச்சாரத்தின் பகிர்ந்துண்ணும் பண்பு, வீரம் (மாந்திரீகம் - புனைவுகள்) பெண் வளம், மனித வளம், உடைமைக்காக இயற்கையை அழிக்காத உற்பத்தி முறை, ஆகியவற்றின் நியாயப்பாட்டை வலியுறுத்துகிறார்கள். இது இந்த புவிக்கோளை வளப் படுத்துகின்ற அரசியலாக உலக மாந்தர் அனைவரும் ஒப்புக்கொள்ளுகிற திட்டமாக இருக்கின்றது.
சுயம் சார்ந்த ஓர்மை கொண்ட தன்னிலை சாத்தியப் படாத காலகட்டங்கள் பழம்பெரும் இனக்குழுக் களுடைய காலகட்டங்களாகும். இயற்கையோடு கொண்டிருந்த பெரும் உயிரியல் பிணைப்பை ‘மனித இனம்Õ உடைத்து சுயமாக இயங்கவில்லை. தனித்த இயற்கைக்கு இணையான ஓரினமாகத் திரளுவதற்கு சுயம் - தன்னிலை - ஆளுமை ஆகியவை உருவாக வேண்டும். இதனை ஈடுபடுவதற்கு மானிட இனங்கள் இயற்கையோடு இயற்கையாக உறவுகளைக்கொண்டிருந்த கட்டத்தைக் கடந்து மேற்செல்லுவதற்கு உடனடித் தேவை இருந்தது. இதற்கு மாற்று வழி வெளியே கிடைக்காத போது மனிதர் உள்ளே உருவாக வேண்டியதிருந்தது. இயற்கை வேறு, தான் - நான் - சுயம் - தன்னிலை இவற்றின் புதிய அடையாளங்கள் வேறு என்னும் ஓர்மைகள் ஓர்மை இன்மையிலிருந்து மேற்கிளம்பியாக வேண்டிய நிலை இருந்தது. அதாவது இயற்கையின் பிடியிலிருந்து விலகி விடுபட்டு, இயற்கையை மாந்தர்க்கு உரிய வாழ்வாதாரமாக மாற்றுவதற்கு மனித இனம் இதுவரை இல்லாத அளவிற்கு அதன் அகத்திலும், புறத்திலும் புதிதாக உளவியல் அறிவியல் உடலியல் மாற்றங்களை அடைய வேண்டியதிருந்தது.
அவ்வேளையில், இந்தத் தேவை களுக்கு இயற்கையின் கட்டமைப்பு சாதகமாக இல்லாத போது அதனை மானிட வாழ்வியல் தேவைகளை நிறை வேற்றும் பொருட்டு உற்பத்தி - மறு உற்பத்தி செய்கிற ஆதாரமாக மாற்ற வேண்டியதிருந்தது. இதனால் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளை அகற்ற இன்றுவரை மாந்த இனம் போராடிக் கொண்டு இருக் கின்றது. இந்த மாபெரும் இருத்தலியல் போராட்டத்தில் அங்கம் பெற்றவையே அடையாளங்கள்; அடையாளக் கோளாறுகள். இவற்றின் வழித்தடங்களைப் பற்றிய ஆய்வுகளில் ஒன்றுதான் அடையாளங்களின் தேடல். அடையாளங்களில் மாந்தரைப்போலவே சமத்துவம் இல்லை. இவை இயங்கியல் உறவில் பகை - நட்பு ஆகியவற்றிற்கிடையில் உறவாடிக்கொண்டிருக்கின்றன.
மனித இனம், இயற்கையின் பிரபஞ்ச அளாவிய பரிணாமத்தின் பலவீனமான இனம்; இப்படிப்பட்ட ஓரினம், தான், சுயம், தன்னிலை, ஆளுமை, ஆள்வினை ஆகிய பரிமாணங்களின் உருவாக்கத்தின் பலத்தில், தன்னுடைய மேலாதிக்கத்தை நாகரிக மேம்பாட்டை - அறிவு மனம், கருத்தியல், சிந்தனை, புத்திக்கூர்மை, ஆயுதம் ஆகிய ‘கருவிகளால்Õ பெற்று வந்திருக்கின்றது!
வாழ்வதற்கும், கிடைத்தவற்றைக் கட்டி ஆள் வதற்கும் வேண்டி, நீண்ட நெடும் போராட்டங்களின் நியாயப்பாடுகளால் உருவான புத்தடையாளங்களோடு, புதிய படிமுறைச் சமூகங்களாக மாந்தர் உருமாறுவதற்கு முயற்சி செய்தனர். இயற்கையோடு பூண்டிருந்த பௌதீக சார்பு நிலைகளையும், அவற்றிற்குக் காரணமான பிறப்பின் காரணமாக இயற்கையோடு சார்ந்த பல்வேறு ‘அடையாளங்களைÕயும் (பால், இனம், இனக்குழு, கிளை, குருதி உறவு (சாதி) - அதாவது பூர்வீக அடையாளங் களைக் களைந்து வென்றெழுந்து, இவற்றை நீட்டித்திடச் சாதகமான சமூக ஒழுங்கை - அமைப்பை - நிறுவனத்தை - கலாச்சாரக் கட்டமைப்பை ஏற்படுத்தி நாகரிகத்தை உருவாக்கி வந்தார்கள். இவற்றை விளக்கினால் பெருகி விடும்.
கிடைக்கப் பெற்றுள்ள தொன்மை வாய்ந்த அகவல் அக/புறப் பாடல்களின் தொகுப்புக்களில் அடையாளங்கள் பதிவாகியுள்ளன. (எட்டுத்தொகை - 2372 பாடல்கள்; பத்துப்பாட்டு, முருகாற்றுப்படை நீங்கலாக - 3215 அடிகள்) இப்பாடல்கள் பொதுவாக நாடக மரபில் ஆண்பால், பெண்பால் பற்றிய அக, புறப் பாடல்களாகும். இவை தோன்றிய காலம் முந்தியது; கி.மு.200 முதல் கி.பி. 250 வரை என்பார்கள்.
தொகுக்கப் பட்ட காலம், நூலாக்க காலமாகும்; களப்பிரர், புதிய பாண்டியர் காலமாகும். (கி.பி. 250 முதல் கி.பி. 550-600 வரை ) இதில் பாண்டிய நாட்டின் மதுரை முக்கியப் பங்கு வகித்தது. இவற்றிற்குத் திணை - துறை இலக்கணம் எழுதுவதை நிறைவு செய்தவர் தொல்காப்பியர். இவருக்கு முன்பே இலக்கண ஆக்கங்கள் நடை பெற்றிருந்தன. மதுரையில் சமணமுனிவர்களுடைய தமிழ்ச்சங்கமாகிய ‘திரமிளசங்கம்' இருந்தது; இதனை மாதிரியாகக் கொண்டு மதுரை வைதீக இலக்கண / உரையாசிரியர்கள், புலவர்கள் வைதீகச் சார்பில் சங்க இலக்கியப் பாடல்களை முன்னிறுத்தினார்கள். பத்துப் பாட்டில், திருமுருகாற்றுப்படை என்ற வைதீகமய மாக்கப்பட்ட முருகனைப்பற்றிய நெடும் புராண மயமான பாட்டை வைதீகப் புலமையாளர்கள். இதன் தொடர்ச்சியாகப் பிற்பட்ட பாண்டியர் காலத்தில் ‘கந்தபுராணம்' உருவாக்கப்பட்டது; இது இராமாவதாரக் கதையை முன் மாதிரிகையாக வைத்து எழுதப்பட்டது; சேக்கிழாரின் ‘பெரிய புராணம்' சமணர்களுடைய மஹாபுராணத்தை முன்மாதிரியாக வைத்துப் புனையப் பட்டது.
கி.மு. 200 முதற்கொண்டு பாணர் என்ற இசைக் குடியின் மூலம் வாய்வழி மரபாகவும், ‘சான்றோர்Õ எனப் பட்ட புலவர்கள் வழியாக எழுத்து மரபாகவும் தொடர்ச்சி கண்ட பழைய அகவல் பாடல்களுக்கு கி.பி. 11-14 ஆம் நூற்றாண்டு வரை வைதீக, சமண உரையாசான்கள் தத்தம் சமயம் சார்ந்த உரைகளை எழுதினார்கள்.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப் பின்னர் தொகுக்கப்பட்ட அகவல்பாடல்கள் (கலித்தொகை, பரிபாடல் என்ற இரண்டு தொப்புப் பாடல்களும் மதுரையில் கி.பி. 500-600 வாக்கில் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்களால் கலி, பரி பாடல்கள் என்ற இசைப்பாடல்களாக இயற்றப்பட்ட மதுரைப்பாடல்கள். ‘மதுராபுரிச்சங்கம் வைத்தும்Õ என்று மதுரைச் சங்கம் பற்றிச் சின்னமனூர் கல்வெட்டு பின்னாளில் இதை உறுதிப்படுத்துகின்றது. இங்கே பாடல்கள் இயற்றப் பட்டதோடு வைதீக நூல்கள் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் பெற்ற பணியும் நடந்தது).
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு அகவல் பாடல்கள் வழியாக அன்றைய தமிழகம் கிழக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் கடல்களாலும், வடக்கிலும் மேற்கிலும் உயர்ந்த மலைகளாலும் சூழப்பட்டிருந்தது தெரிகிறது. இவ்வாறு எல்லைகளை வரையறுப்பதில் வைதீகத்தின் பிரபஞ்சவியல் இமயமலைத் தொடரிலிருந்து தொடங்கும்!
ஆண்கள் ஆள்வினையின் பொருட்டு (உடைமை சேகரிக்கும் வினையே ஆள்வினை) வடக்கு நோக்கி இயங்குகிறார்கள். அவர்களுடைய பெண்கள் வீடுகளில் உறைகிறார்கள். இயக்கமும் இயக்கமின்மையும் ஆண் பெண் ‘அடையாளங்கள்Õ; பாலியல் அடியற்றி
இந்த ‘அடையாளங்கள்' ஏற்பட்டன. தந்தை வழி ஆட்சிமுறையில் தமிழ்ச்சமூகம் இயங்கியது; ஆயினும் புராதனமான தமிழ் இனக்குழுக்கள் உடைமை நாகரிகத் திற்கு முந்தைய கலாச்சாரத்திலும் நாகரிகத்திலும் இயங்கின. இசைக்குடிகள், கலைக்குடிகள் என்ற வரையறைக்கு உட்பட்ட பாணன், பறையன், கடம்பன், துடியன் மற்றும் கூத்தர், பொருநர், கண்ணுளர், கோடியர், பெரும்பாணர், சிறுபாணர் முதலான குழுக்கள் கூட்டங்கூட்டமாகப் புதிய உடைமை யாளரான வேந்தர் முதலான புரவலர்களைத் தேடி ‘பழு மரம் தேடும் பறவைகள்' போல இயங்கினார்கள். இடத்தையும் வெளியையும் விட்டு வடக்கிருந்து வந்தேறிய வைதீகம், வேறொரு பிரபஞ்சவியலை அடையாளப் படுத்தியது. 1. வடக்கே ‘பனிபடு நெடுவரை' 2. தெற்கு ‘உரு கெழு' குமரி 3. கிழக்கே கடல் 4. மேற்கே ‘தொன்று முதிர் பௌவம்' (பெருங்கடல்) 5. கீழே மூன்றடுக்குகள் கொண்ட பாதாளம், 6. மேலே தேவர் உலகம் (மேல் - நிலம் - பாதாளம், என்ற மூவுலகம் ஒவ்வொன்றும் ஏழு பிரிவுகளைக் கொண்டதால் மூவேழ் உலகம்). தமிழகத்தை ‘ஜம்புத்தீபம்' - நாவலந்தீவு என்றது. இது மூவேந்தரான சேர, சோழ, பாண்டியர்க்கு உரியது. சேரர் சேரமான் என்றழைக்கப் பட்டனர், இப்பெயரை வடமொழியில் (பாலி / பிராகிருதம்) அசோகன் ‘கேரளபுத்திரர்' (சேர - மான்; சேர கேரள மான் - மகன், புத்திரன்) என்றும் ‘அதியமான்' வம்சத்தை ‘சதியபுத்திரர்' என்றும் குறிப்பிட்டான்.) ஆக, இமய (பனி) மலையிலிருந்து, தேவர் (புத்தேள்) உலகம் வரை பரந்த ‘பிரபஞ்சம்' வைதீக பிரபஞ்சவியலின் சொல்லாடலாகும்.
சிரமண மார்க்கங்களான சமணமும் பௌத்தமும் வட இமயப்பரப்பிலிருந்து தமிழகம், கருநாடகம், ஈழம், கடாரம், சாவகம், மணிபல்லவம்... முதலான தீப கற்பங்கள், தீவுகள் வரை பரவியிருந்தன. (இது கி.மு. 300 ஆம் ஆண்டு எதார்த்த நிலை) அப்போது தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சிகளுக்கு அருகிலேயே தொன்மையான பெருங் கற்படை நாகரிகமும், நெடுகல் - நடுகல் - பதுக்கை - தாழி முதலான ஈம வழக்கமும், சகவாழ்வு நடத்தின. இனக்குழுவாழ்க்கை முறையில் வாழ்ந் தார்கள். நீர்ப்பாசன வசதிகள் பெற்ற மருத நிலங்களில் நெல் சாகுபடியும், பிற பகுதிகளில் தினை, வரகு, எள், உளுந்து, விவசாய உற்பத்திகள் நடந்தன. தமிழகம் தாண்டிய பண்டப் பரிமாற்றங்களும், கடல் வழி வாணிபமும் நடைமுறையில் இருந்தன. அரிய மணிகள் பவளம், முத்து, பொன் முதலியவை சேகரிக்கப்பட்டுச் செம்மை செய்யப்பட்டு வித்துக்களாக விந்தியம், கடாரம், கங்கைச் சமவெளி வரை எடுத்துச் செல்லப் பட்டன. சமண பௌத்தக் குகைகளும், பள்ளி பாளிகளும் இயங்கின. வைதீக நெறி ஆள்வோர் வட்டத்தில் செல்வாக்கு பெறத் தொடங்கியது. வைதீகத்தில் துறவு வாழ்நாள் இறுதியில் ஏற்பது; சிரமணத்தில் எந்த வயதிலும் துறவும், புலன் சுக மறுப்பும் போற்றப்பட்டன.
வைதீகம் தனது ‘எழுதாக் கற்பு' எனப்படும் வேதங்கள், சூத்திரங்கள், புராணங்கள், இதிகாசத் தொகுப்புக்கள், சாஸ்திரங்கள், வேள்விச் சடங்குகள், படிநிலையான சமூக அடுக்குகள், சடங்குகள், பரிகாரச் சடங்குகள், வழிபடும் இடங்கள் வழியாக ஆள்வோர்க்கு இறையாண்மையை வழங்கி, பல்வேறு தானங்களைப் பெற்றன. பார்ப்பனச் சேரிகளின் தனி அடையாளங்கள் பேணப்பட்டன. வேந்தருடைய ஆட்சி இறையாண்மைக்கு அவர்களுடைய பௌராணிக வம்சாவழிக் கதைகளை இட்டுக்கட்டின. தீட்டுக்கள், பரிகாரங்கள், அக்கினி காரியங்கள், இறந்தோரை எரிப்பது, அரச உரிமை மகளிர் கைம்மை நோற்பது, உடன்கட்டை ஏறுவது... போன்ற விதேசிச் சடங்கு களை, வேந்தர், ஆட்சியாளர் வழியாக நடைமுறைப் படுத்தியது.
தமிழ் வீர மரபுகளை வைதீகச் சடங்கு மயமாக்கியது. ஆட்சியாளர்களுடைய ஆசியுடன் வைதீகம் ஆதிக்க அடையாளங்களைப் பெறத் தொடங்கின. சமண - பௌத்தம் வீழ்த்தப்பட்ட கி.பி. 7, 8ஆம் நூற்றாண்டுகளிலிருந்து தமிழகம் சாதி போற்றும் பூமியாகியது! நிலங்களின் உற்பத்தி சாதி வரிசைப்படி பகிர்ந்து அபகரிக்கப்பட்டது. உழைப்பாளர் சாதிகள் ஒடுக்கப்பட்ட சாதிகளாக்கப்பட்டன. இதில் சமணரும் பௌத்தரும் சாதி இறக்கம் செய்யப்பட்டார்கள். வைதீக அடையாள, அரசியலில் வைதீகத்திற்கு எந்த இழப்பும் இல்லை! சூத்திர - திராவிடரே இழப்பிற்கு ஆளான தமிழர்கள்.
தமிழரின் நீண்ட வரலாற்றில் உற்பத்தியான அடையாளங்கள் வைதீக ஊடுருவலால் பாரதூரமான கெடுதிகள் மக்களுக்கு ஏற்பட்டன. பிளவுகளுக்குப் பிறப்பும், கடவுள்களும் காரணகர்த்தாக்களாகக் கூறப்பட்டார்கள். இந்த மாபெரும் மோசடியைத் தமிழ்ச் சாதி இன்னும் நியாயம் என்று நம்புவதற்கு ஒரே காரணம் பாரதியார் கூறிய மிடிமை / மடமை / அறியாமை / உழைக்காமல் உடைமை சேர்க்கும் கயமை! இக்கட்டுரையின் நோக்கம் இதைப் பற்றியதன்று; சங்க இலக்கியம் என்று கூறப்படுகிற அகவல் (கலி /பரி) பாடல்களில் மேல்நிலைக்கு வந்த அடையாளங்களைப் பற்றிய ஒரு தொடக்கத்தை எடுத்துக் காட்டுவதுதான் இதன் நோக்கம்.
அப்பாடல்களில் தனிமனித அடையாளங்கள் கூறப்பட்டாலும் குழு சார்ந்த அடையாளங்களே பெரிதும் கவனம் பெற்றன. ஒரு சில எடுத்துக் காட்டுக் களைக் காணலாம். அன்று பெண்களை ‘மனையுறை மகளிர்Õ என்று புலவர் மரபு கூறியது. அவள் மனைக்கு (குடி, வீடு, உறவு) விளக்குப் போன்றவள்; அவள் உலகம் வீடு; அவள் கணவனுக்கு உலகம் போர்க்களம்; வீரயுகத்தில் (வேந்தர், மன்னர் உருவான காலத்தில்) மொத்த சமுதாயத்தின் ஆண், பெண்களுடைய சமூக அடையாளங்கள் இவை. இதற்கு ஏற்றவாறு ‘தனிமனித' அறங்கள் மதிப்பீடுகள் அந்த அடையாளங்களில் செறிக்கப்பட்டவை. இருப்பினும், இந்த அடிப்படை யான அமைப்பிற்குள் தொன்று தொட்டு இனக்குழு மரபினர் (இலக்கணத்தில் இவர்களைப் புலவர்கள் கருப் பொருளில் அடக்கினார்கள்) - அன்று பெரிதும் தமிழர்கள் - அவர்கள் காலமுறைப்படி குடி, குல அடையாளங்களால் இயங்கினார்கள்; எவற்றை விட்டு விட வேண்டும் என்று ஆரம்பித்தார்களோ அவற்றுக்குள் பிறப்பு, பால் அடிப் படையில் இயங்கினார்கள்.
ஆதாரமான தமிழ்ப்பரப்பின் உற்பத்தி சக்திகளாலும் உற்பத்தி உறவுகளாலும் இந்த இனக்குழு மரபினருடைய குழு அடையாளங்கள் தொடர்ந்து வந்தன. இவர்களுடைய, தமிழ்ச் சமூகத்தினுடைய அடை யாளங்கள் குலக்குறியைச் சார்ந்து விலங்கு அல்லது தாவரப் பொருட்களை இயற்கை உயிரினங்களைச் சார்ந்து அமைந்தன. இந்தக் குறிப்பிட்ட விலங்கு அல்லது தாவரத்தின் பூக்களோடு குடும்பக் கொடிவழி உறவு கொண்டவர்களாகத் தொன்மத்தைக்கொண்டு தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தினார்கள் (குறவர் - மலைவாழ் குறிஞ்சிப்பூ; ஆயர் - மேய்ச்சல் நில முல்லைப்பூ; பரதவர் கடற்கரையில் பூத்த நெய்தல் பூ; உழவர் - வயல் பரப்பில் வளர்ந்த மருதப் பூ; வீரமறவர் / வேடர் - பாலைமரப்பூ). இந்த ஐந்து இயற்கைப் பூக்களும் ஐவகை புவிப்பரப்புகளை அடையாளப் படுத்தின. இப்படியரு கலாச்சார ஊறுவினையை நவீன மனிதரால் கற்பனை செய்ய முடியுமோ தெரிய வில்லை; ஆனால் கவிஞர்களால் இயலும். இதன்
அடுத்த கட்டம், இந்தவித இனக்குழு மனோபாவம் கலையாத மக்களைத் தங்கள் ‘குடிகளாக' ஆக்கிய குழுத்தலைவர்கள், நெடுந்தகைகள், வள்ளல்கள், தங்கள் மரபுகளைப் பூக்களோடு அடையாளப்படுத்தியதாகும். சேரர்குடிக்கு வஞ்சிப்பூ, சோழர் குடிக்கு ஆத்திப்பூ (ஆர்) பாண்டியர் குடிக்குப் பனம்பூ. இவர்கள் மேற்கொண்ட போர்களைக் குறிக்கவும் பூக்கள் அடையாளக் குறியீடுகளாக நிலைபெற்றன.
ஆநிரைகளுக்காக நடந்த தாக்குதல் போருக்கு வெட்சிப்பூவும், தற்காத்து மீட்கும் போருக்குக் கரந்தைப்பூவும், மாற்றான் மண்ணை வெல்லும் தாக்குதல் போருக்கு வஞ்சிப்பூவும், தற்காப்புப் போருக்குக் காஞ்சிப் பூவும் (இது நிலையாமையைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது), கோட்டையை வளைத்து முற்றுகையிட்டுப் புரியும் போருக்கு உழிஞைப்பூவும், அரணைக் காத்து நிற்கும் போருக்கு நொச்சிப்பூவும், இருபடைகளும் புரியும் இறுதிப்போருக்குத் தும்பைப்பூவும், வெற்றிக்கு வாகைப் பூவும் அடையாளங்களாகப் பாவிக்கப்பட்டன. தமிழர் கலாச்சாரத்தில் பூக்கள் முக்கிய இடம் பெற்றிருப்பதற்கு இன்றைய அபிமானிகள் பலரும் பல விளக்கங்களையும் புகழுரைகளையும் வழங்கினாலும், இதற்கு ஆயிரக் கணக்கான நூற்றாண்டு வரலாறு உண்டு; இதற்கான காரணங்களும் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அன்றைய ஐவகை இனக்குழுக்கள் அவை தங்கி வாழ்ந்த நிலப்பரப்பின் அடிப்படையில், இயற்கைப் பூக்களின் பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டன; அவற்றால் அந்த நிலப்பரப்புக்களும் அடையாளம் காணப்பட்டன.
இது பண்பாடுகள் தோறும் காணத்தக்க எதார்த்த நிலையாகும். இது உணவு சேகரிப்பு வாழ்நிலையி லிருந்த இனக்குழுக்கள், உணவு உற்பத்திக்கு மாறிய அடிப்படையான மாற்றத்திற்கு ஆதாரமாக விளங்கியது! இயற்கையிலிருந்து மனித இனம் தனி அடையாளங் களைப் பெற்று தனி இனமாக மாறிய அந்தக் கால கட்டம் நெடியது; எதார்த்தங்களும் கற்பனைகளும், மாந்திரீகமும் தொன்மக் கதைகளும், உலகெங்கிலுமுள்ள ஆதி மனித இனங்களின் ஞாபகங்களிலிருந்து வெவ்வேறு விதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை இன்றைய அறிவியல் சூத்திரங்களால் நேரடிப் பொருள் கொள்ள இயலாது.
இந்த அடையாளங்கள் நவீனமாந்தர்க்குச் சிக்கலாகத் தோற்றம் தருகின்றன. இவர்களுடைய தருக்கம் நேர்கோட்டுத் தன்மையில் நீளுகிறது; ஆனால் ஆதிமந்தா குழுக்களின் தருக்கம் சூழல் வட்டத் தன்மையில், நீர்ச்சுழி போல இயங்கியது. அன்று அடையாளங்களால் இயங்கினார்கள்; இன்று அடையாளங் களால் அழிக்கிறார்கள்; அழிகிறார்கள். அன்றைய ஆழ் மனக் குழு உணர்வும், ஊட்டமும், கொண்டாட்டமும் இயற்கையிலிருந்து பிரிவுற்ற நிலைக்கு ஈடுகொடுத்தன. ஆனால் இயற்கையை அழிக்கவில்லை; இயற்கை அவர்களுக்கு மற்றொரு இனக்குழு மாதிரிதான். இயற்கையைத் தங்கள் மயமாக்கியதன் மூலமாகத் தாங்களும் இயற்கை மயமானார்கள்!
வளமான அடையாளங்கள், தனி உடைமை நாகரிக மயமாக்கத்தாலும், குழு வாழ்க்கைச் சிதைப்பினாலும், குரூரமான வைதீகக் கபடத்தாலும் வருண போதை யாலும் - வன்மத்தாலும் அழிக்கப்பட்டு வந்தன. குழு வாழ்க்கையில் சொத்துடைமை இல்லை, இயற்கை யோடு ஆரோக்கியமான உறவு இருந்தது. அன்றைய குழு அடையாளங்களில் மானிடமும் இயற்கையும், சடங்கு ரீதியாக, மாந்திரீக அரவணைப்பில் கலந்து முயங்கின; களிப்புற்றன. ஆனால் இயற்கையை, உடைமையை மரணத்தை வெல்ல வேண்டும் என்று நகர்ந்த போது, நகர்வதற்குத் தள்ளப்பட்டபோது, வளமான அடையாளங்கள் சிதைந்தன; எல்லாம் ஆரோக்கியத்தை இழந்தன; மனிதன் தன் சக உதிரத்தைச் சிந்த வைத்தன, இயற்கையைக் கொலை செய்தான் என்பதுதான் அதன் தாத்பரியம்.
இயற்கையோடு இயற்கையாக இருந்த போது இருந்த மனித இனம் வேறு; இயற்கையை விட்டுக் கடந்து மேல்நிலை பெற முயன்ற மனிதனுடைய முயற்சி அற்புதமானதாக இருந்தது. சர்வவல்லமை பெற்றவனாக, பெற்ற குழுக்களாக அவன் தன்னை அடையாளப்படுத்த முனைந்த போது தன்னையும், இந்த இயற்கையையும் இந்தப் புவியையும் அழிக்கத் தலைப்பட்டு விட்டான். தான் பொறுப்புள்ள ஒரு மனிதன் என்பதை மறந்து பல நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. எல்லாவற்றையும் ஆதிக்கம் செய்யும் நோயில் பீடிக்கப்படுவதற்குத்தான் அவன் இயற்கையின் பிடிப்பிலிருந்து வெளியேறினான் என்பது இன்று புரிந்து விட்டது. ஆனாலும், இதனை மாற்றத்தான் வேண்டும், காலம் கடந்துவிடவில்லை; காலம் கனியும் காலம்; மனிதர்கள் அதற்குத் தேவை இல்லை; மனித இனம் தூசியாகிப் போனபிறகும் காலத்திற்குக் கவலை இல்லை. வெளி இன்றிக் காலம் ஒரு சூனியம்; காலமின்றி வெளி வெறும் பாழ்.