I
தீண்டாமை எப்போது தோன்றிற்று? மிகப் பண்டையக் காலம் முதலே தீண்டாமை இருந்து வருவதாக வைதீக இந்துக்கள் சாதிக்கின்றனர். தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை பிற்காலத்தைச் சேர்ந்த ஸ்மிருதிகள் மட்டுமின்றி, காலத்தால் அவற்றுக்கு முற்பட்டவையும் சில எழுத்தாளர்களின் கூற்றுப்படி கிறித்து பிறப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முந்தியவையுமான தர்மசூத்திரங்களும் ஆதரித்திருப்பதாக இவர்கள் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
தீண்டாமையின் தோற்றம் பற்றி ஆராய முற்படும்போது பின்கண்ட கேள்வியுடன் ஆரம்பிக்க வேண்டும்: அநேகர் கூறுவது போல் தீண்டாமை அத்தனைப் பழமையானதா?
இந்தக் கேள்விக்கு விடைகாணுவதற்கு தர்மசூத்திரங்களை ஆராய வேண்டும். அப்போதுதான் தீண்டாமையையும் தீண்டாதோர்களையும் அவை எந்த அர்த்தத்தில் குறிப்பிடுகின்றன என்பதைத் தீர்மானிக்கமுடியும். தீண்டாமையை இன்று நாம் எந்த அர்த்தத்தில் புரிந்து கொண்டிருக்கிறோமோ அந்த அர்த்தத்தில் அவை அவற்றுக்குப் பொருள்கொள்கின்றனவா? அவை குறிப்பிடும் வகுப்பினர் இன்று நாம் பயன்படுத்தும் தீண்டப்படாதோர் என்ற பதத்துக்குரிய அதே தீண்டப்படாத மக்கள்தானா?
முதலில் முதல் கேள்வியை எடுத்துக்கொள்வோம். தர்ம சூத்திரங்களைப் பற்றி ஆராயும்போது அந்த சூத்திரங்கள் அஸ்பிரஷ்யாக்கள் என்னும் வகுப்பினரைப் பற்றிப் பேசுகின்றன என்பதை அந்த ஆய்வு காட்டுகிறது என்பதில் ஐயமில்லை. அஸ்பிரஷ்யாக்கள் என்னும் பதம் தீண்டப்படாதோரைக் குறிக்கிறது என்பதிலும் ஐயமில்லை. எனினும் தர்மசூத்திரங்களின் அஸ்பிரஷ்யாக்களும் இன்றைய இந்தியாவின் அஸ்பிரஷ்யாக்களும் ஒரே மக்கள்தானா என்னும், கேள்வி இங்கு இயல்பாகவே எழுகிறது. அதிலும் அந்த யாக்கள், அந்த்யஜாக்கள், அந்த்யவாசின்கள், பாஹ்யாக்கள் போன்ற இதர பல்வேறு பதங்களை தர்ம சூத்திரங்கள் பயன்படுத்தியிருப்பதைக் கொண்டுபார்க்கும்போது இந்தக்கேள்வி இன்னும் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்தப் பதங்கள் பிற்கால ஸ்மிருதிகளும் இந்தப் பதங்களை எவ்விதம் பயன்படுத்தி இருக்கின்றன என்பதை ஓரளவு தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். பின்வரும் அட்டவணை இந்தக் குறிக்கோளைக் கொண்டதே ஆகும்.
I.அஸ்பிரஷ்யாக்கள்
தர்மசூத்திரங்கள் | ஸ்மிருதிகள் |
1. விஷ்ணு V.104. | 1. கார்த்தியாயன சுலோகங்கள் 433, 783 |
- அன்த்யாக்கள்
தர்மசூத்திரங்கள் | ஸ்மிருதிகள் |
1. வாசிட்டம் (16-30) 2. ஆபஸ்தம்பம் (III.1) | 1. மனு IV.79; VIII.68 2. யாக்ஞவல்கியம் I.148-197 3. அத்திரி 25 4. லிகிதம் 92. |
III. பாஹ்யாக்கள்
தர்மசூத்திரங்கள் | ஸ்மிருதிகள் |
1. ஆபஸ்தம்பம் 1.2.3.9.18 2. விஷ்ணு 16.14 | 1. மனு 28 2. நாரதம் 1.155 |
IV.அந்த்வாசின்கள்
தர்மசூத்திரங்கள் | ஸ்மிருதிகள் |
1. கௌதமம் XXXI; XXIII 32 2. வாசிட்டம் XVIII.3 | 1. மனு IV.79; X 39 2. மகாபாரதம் சாந்தி பருவம் 141; 29-32 3. மத்யமங்கிராஸ் யாக்ஞவல்கியத்தைப் பற்றி மித க்ஷரத்தில் மேற்கோள். 3.280 |
- அந்த்யஜாக்கள்
தர்மசூத்திரங்கள் | ஸ்மிருதிகள் |
1. விஷ்ணு 36.7 | 1. மனு IV.61; VIII. 279 2. யாக்ஞவல்கியம் 12.73 3. பிரிஹத்யாம ஸ்மிருதி (யக்ஞவல்கியத்தைப் பற்றி மிதக்ஷரம் மேற்கோள் III.260) 4. அத்திரி. 199 5. வேதவியாசம் 1.12.13 |
II
அடுத்த கேள்வி அந்த்யாக்கள், அந்த்யஜாக்கள், அந்த்யவாசின்கள், பாஹ்யாக்கள் என்னும் பதங்கள் குறிக்கும் வகுப்பினரையே சொல்லிணக்கத்தின்படி தீண்டப்படாதோரைக் குறிக்கும் அஸ்பிரஷ்யாக்கள் என்னும் பதமும் குறிப்பிடுகின்றனவா? வேறுவிதமாகச் சொன்னால் இவை எல்லாம் ஒரே வகுப்பைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும் வெவ்வேறு பெயர்கள்தானா?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்க தர்மசூத்திரங்களால் இயலவில்லை என்பது துரதிருஷ்டவசமானதாகும். அஸ்பிரஷ்யாக்கள் எனும் பதம் (ஒரு முறை சூத்திரத்திலும் ஒரு முறை ஸ்மிருதியிலும்) இரண்டு இடங்களில் வருகிறது. ஆனால் இதில் என்னென்ன வகுப்புகள் அடங்கியுள்ளன என்ற விவரங்களை இவற்றில் எதுவும் தரவில்லை. அந்த்யாக்கள் எனும் பதத்தின் கதையும் இதேதான். அந்த்யாக்கள் என்னும் சொல் (சூத்திரங்களில் இரு இடங்களிலும் ஸ்மிருதிகளில் நான்கு இடங்களிலும்) மொத்தம் ஆறு இடங்களில் வந்த போதிலும் இந்த அந்த்யாக்கள் என்பவர்கள் யார் என்பது ஓரிடத்தில்கூட விளக்கப்படவில்லை. இது போன்றே பாஹ்யாக்கள் என்னும் பதம் (சூத்திரங்களில் இரண்டு இடங்களிலும் ஸ்மிருதிகளில் இரண்டு இடங்களிலும்) நான்கு இடங்களில் வருகிறது. எனினும் இந்தப் பதத்தில் என்னென்ன வகுப்புகள் இடம்பெற்றுள்ளன என்பதை இவற்றில் எதுவுமே குறிப்பிடவில்லை. அந்த்யவாசின்கள், அந்த்யஜாக்கள் என்ற பதங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இதற்கும் தர்மசூத்திரங்களைப் பொறுத்தவரையில் இவர்களைப் பற்றி பேச்சுமூச்சுவிடவில்லை. எந்த விவரங்களையும் தரவில்லை. ஆனால் ஸ்மிருதிகளில் இவர்களைப் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. அந்த்யவாசின்கள் பற்றிய விவரங்கள் மத்யமங்கிராஸ் என்ற ஸ்மிருதியிலும் அந்த்யஜாக்கள் பற்றிய தகவல்கள் அத்ரி ஸ்மிருதியிலும் வேதவியாச ஸ்மிருதியிலும் இடம் பெற்றிருக்கின்றன. அவர்கள் யார் என்பதை பின்கண்ட அட்டவணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
அந்த்யவாசின்கள் | அந்த்யஜாக்கள் | |
மத்யமங்கிராஸ் | அத்ரி | வேதவியாசம் |
1. சண்டாளர் 2. சுவபாகர் 3. ஷத்தர் 4. சூதர் 5. வைதேகர் 6. மகதர் 7. அயோகவர் | 1. நடர் 2. மேதர் 3. பில்லர் 4. இரசகர் 5. சார்மகர் 6. புருதர் 7. கயவர்த்தர் | 1. சண்டாளர் 2. சுவபாகர் 3. நடர் 4. மேதர் 5. பில்லர் 6. இரசகர் 7. சார்மகர் 8. விராத்யர் 9. தாசர் 10. பாட்டர் 11. கோலிகர் 12. புஷ்கர் |
அந்த்யவாசின்கள், அந்தயஜாக்கள் ஆகிய பதங்களைப் பயன்படுத்துவதில் எத்தகைய துல்லியமோ ஒத்திசைவோ இல்லை என்பதை மேலே உள்ள அட்டவணையிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, மத்யமங்கிராஸ், வேதவியாச ஸ்மிருதிகளின்படி சண்டாளரும் சுவபாகரும் அந்த்யவாசின்கள், அந்த்யஜாக்கள் ஆகிய இரு பிரிவுகளின் கீழும் வருகின்றனர். ஆனால் மத்யமங்கிராஸை அத்ரியுடன் ஒப்பிடும்போது அவை வேறுபட்ட வகைப் பிரிவுகளில் வருகின்றன. அந்த்யஜாக்கள் எனும் பதத்துக்கும் இது பொருந்தும். எடுத்துக்காட்டாக 1. சண்டாளரும் 2. சுவபாகரும் வேத வியாச ஸ்மிருதியின்படி அந்த்யஜாக்கள்; ஆனால் அத்ரி ஸ்மிருதியின் பிரகாரமோ அவ்வாறு இல்லை. இதேபோன்று, அத்ரி ஸ்மிருதியின்படி 1. புருதர்களும் 2. கயவர்த்தர்களும் அந்த்யஜாக்கள்; ஆனால் அதே சமயம் வேதவியாச ஸ்மிருதியின்படியோ அவர்கள் அந்த்யஜாக்கள் அல்ல. இவ்வாறே வேதவியாச ஸ்மிருதியின் பிரகாரம் 1. விராடர்களும், 2. தாசர்களும், 3. பாட்டர்களும், 4. கோலிகர்களும், 5. புஷ்கர்களும் அந்த்யஜாக்கள்; அத்ரி ஸ்மிருதியின்படியோ அப்படி இல்லை.
இதுவரை பார்த்தவற்றைச் சுருக்கிக் கூறுவோம்: அஸ்பிரஷ்யாக்கள் வகைப்பிரிவில் யார் யார் அடங்குவார் என்பதை நிர்ணயிப்பதில் தர்மசூத்திரங்களும் சரி, ஸ்மிருதிகளும் சரி நமக்கு உதவவில்லை. இதேபோன்று, அந்த்யவாசின்கள், அந்த்யஜாக்கள், பாஹ்யர்கள் ஆகியோர் அஸ்பிரஷ்யாக்கள் வகைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தானா என்பதை உறுதிபடுத்துவதற்கும் தர்மசூத்திரங்களும் ஸ்மிருதிகளும் கைகொடுக்கவில்லை. இவர்களில் எந்த வகுப்பினரேனும் அஸ்பிரஷ்யாக்கள் அல்லது தீண்டப்படாதோர் பிரிவில் வருகின்றனரா என்பதை நிர்ணயிப்பதற்கு வேறு ஏதேனும் மார்க்கம் இருக்கிறதா? இந்த வகுப்பினர் ஒவ்வொருவரைப் பற்றியும் கிடைக்கக்கூடிய எத்தகைய தகவல்களையும் ஒன்றாக சேகரிப்பது உசிதமாக இருக்கும்.
பாஹ்யாக்கள் விஷயம் என்ன? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் தீண்டத்தகாதவர்களா? அவர்களைப் பற்றி மனு குறிப்பிடுகிறார். அவர்களது நிலையைப் புரிந்து கொள்வதற்கு மனுவின் சமூக வகைப் பிரிவு ஏற்பாட்டைப் பற்றி இங்கு சுருக்கமாகவேனும் கூறுவது அவசியம். முதலில் அவர் 1. வைதேகர்களுக்கும் 2. தஸ்யூக்களுக்கும் இடையே ஒரு பரந்த பிரிவினையைச் செய்கிறார். பின்னர் வைதீகர்களை பின்கண்ட நான்கு உபபிரிவுகளாகப் பிரிக்கிறார். 1. சதுர்வருண அமைப்புக்குள் இருப்பவர்கள், 2. சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்கள், 3. விராத்தியர், 4. பதிதர்கள் அல்லது பிரஷ்டர்கள். (பார்க்க மனு 1, 45)
ஒருவன் சதுர்வருண அமைப்புக்குள் இருக்கிறானா அல்லது அதற்கு வெளியே இருக்கிறானா என்பது அவனது பெற்றோர்களது வருணத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயமாகும். அவன் அதே வருணத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவனாக இருந்தால், சதுர்வருண அமைப்புக்குள்ளே இருப்பவனாகிறான். அவ்வாறில்லாமல் வேறுபட்ட வருணங்களைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவனாக இருப்பின் அவன் சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருப்பவனாகிறான். அவன் கலப்புத்திருமணங்களிலிருந்து பிறந்த வழித்தோன்றல் ஆகிறான்; இதனை மனு வருணசங்கரம் என்று கூறுகிறது. சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்களை மனு மேலும் இரண்டு வகுப்புகளாகப் பிரிக்கிறார்; 1. அநுலோமர், 2. பிரதிலோமர். இவர்களில் அநுலோமர் (மேலது) என்பவர்கள் உயர் குலத்தைச் சேர்ந்த தந்தையருக்கும் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த தாய்களுக்கும் பிறந்தவர்கள். அநுலோமர்களும் பிரதிலோமர்களும் சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருக்கும் காரணத்தால் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள். எனினும் மனு அவர்களையும் வேறுபடுத்திக் காணமுற்படுகிறார். அநுலோமர்களை வருண பாஹ்யாக்கள் அல்லது சுருக்கமாக பாஹ்யாக்கள் என அழைக்கிறார்; பிரதிலோமர்களை ஹீனர்கள் எனக் குறிப்பிடுகிறார். ஹீனர்கள் பாஹ்யாக்களைவிடத் தாழ்ந்தவர்கள். எனினும் பாஹ்யாக்களையோ அல்லது ஹீனர்களையோ மனு தீண்டத்தகாதவர்கள் எனக் கூறவில்லை.
அந்த்யாக்கள் ஒரு பிரிவினராக மனு IV.79ல் குறிப்பிடப்படுகின்றனர். ஆயினும் மனு அந்தப் பிரிவில் அடங்கியுள்ள வகுப்புகளைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை. மேதாதிதி தமது விளக்க உரையில் அந்த்யாக்கள் என்றால் மேதர்கள் போன்ற மிலேச்சர்கள் என்று பொருள் கண்டிருக்கிறார். புஹ்லர் அந்த்யாக்கள் என்பதை கீழ்ச் சாதிக்காரர்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்.