சங்க இலக்கியங்களில் புராணக் கதைகள் -கோ.இமயவரம்பன்
சங்க இலக்கியங்களில் ஆரியர் தம் வருணாசிரமக் கருத்துக்கள், வேத வேள்விகள், மூடப்பழக்க வழக்கங்கள் முதலியன எப்படிக் குடி புகுந்து விட்டனவோ அதுபோலவே வடமொழி இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றில் காணப்படும் செய்திகள் கருத்துக்கள் ஆகியவைகளும் சங்கஇலக்கியங்களில் காணக்கிடக்கின்றன.
இராமாயணக்கதைச் செய்திகள்
இராமன் சீதையை இலங்கையினின்று மீட்டுவரும் பொருட்டு வானர சேனைகளுடன் தனுஷ்கோடியில் ஓர் பெரிய ஆலமரத்தின்கீழ் அமர்ந்து அலோசனை நடத்தினான். அப்போது அம்மரக்கிளையில் தங்கி இருந்த பறவை இனங்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. இதனால் இராமனுடைய மந்திராலோசனைக்குத் தடை ஏற்பட்டுவிட்டது.
உடனே இராமன் தனது கையினைக் குவித்து அப்பறவைகளின் ஒலியினை அடக்கினான். இப்படி அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகின்றது.
வெவ்வெல் கவுரியர் தொன்முதுகோடி
முழங்கு இரும் பெளவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல வீழ் ஆலம் போல - பாடல் 70 : 13 -16
புறநானூற்றுப் பாடல் ஒன்று “இராமன் காட்டில் சீயுைடன் வசிக்கும்போது இலங்கை வேந்தனான இராவணன், சீதையினை இராமன் அறியாவண்ணம் தூக்கிச் சென்றான் என்றும், அப்போது சீதையானவள் தன்னுடைய ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி வழிநெடுகப் போட்டுக்கொண்டே போனாள் என்றும், இந்தக்காட்சியினைக் கண்ட குரங்குக் கூட்டங்கள் அந்த ஒளிமிக்க ஆபரணங்களைக் கண்டு மிக்க வியப்படைந்தன ” என்றும் கூறுகின்றது.
கடதெறல் ராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வவ்விய ஞான்றை
நிலம்சேர் மதர் அணிகண்ட குரங்கின்
செம்முகப் பொருங்கினை - பாடல் 378 : 18 -21
இராவணன் கைலை மலையைப் பெயர்த்த செய்தி
கலித்தொகை பாடல் ஒன்றில் “சிவபெருமான் உமாதேவியுடன் கைலைமலையில் வீற்றிருக்கும் போது, பத்துத் தலைகளை உடைய அரக்கனான இராவணன், தனது வலிமைமிக்க கைகளால் அம்மலையினை எடுக்கத் தலைப்பட்டான் என்றும் அது கண்டு சிவபெருமான் தனது கட்டை விரல் நுனியினால் அம்மலையினை அழுத்த - அதனுள் அகப்பட்டு இராவணன் வருந்தினான்” என்றும் கூறப்படும் புராணக்கதை குறிக்கப்பட்டுள்ளது.
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
தொடிப்பொலி தடக்கையின் கீழபுகுத்து அம்மலை
எடக்கல் செல்லாது உழப்பவன் போல - பாடல் 38 : 1 - 5
மகாபாரதக் கதைச்செய்திகள்
மேற்கண்ட இராமயணக் கதைகளின் செய்திகள் போலவே, மற்றொரு இதிகாசமான பாரதக் கதைச் செய்திகளும் பல காணப்படுகின்றன.
அரக்குமாளிகைக்குத் தீயிட்டது
துரியோதனன் அரக்கினால் பொய்யாக ஓர் மாளிகை அமைத்து அம்மாளிகைக்குப் பாண்டவர்களை அழைத்து இருக்கச்செய்தான் என்றும், அப்படி அவர்கள் தங்கி இரவில் உறங்கிக் கொண்டு இருக்கும் நேரத்தில், அவன் அந்த அரக்குமாளிகைக்குத் தீ இட்டான் என்றும் கூறப்படும் புராணச் செய்தியும் கலித்தொகை நூலில் காணப்படுகிறது.
வயக்குறு மண்டலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
அய்வர் என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக
கைபுனை அரக்கில்லைக் கதழ்எரி சூழ்ந்தாங்கு - பாடல் 25 : 1-4
அரக்குமாளிகை தீப்பற்றி எரியும் காலத்தில் தருமன் , அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரெளபதை ஆகிய அய்வரும் நன்கு உறங்கிக்கொண்டு இருந்தார்கள் என்றும், அதுசமயம் விழித்துக்கொண்ட பீமன், அந்த அய்வரையும் தோளின் மேல் தூக்கிப் போட்டுக்கொண்டு சுரங்கத்தின் வழியாக வெளியேறி, காப்பாற்றினான் என்றும் கூறப்படும் செய்தி மேற்படி பாடலிலேயே உள்ளது.
ஒள்ளுரு வரக்கில்லை வளிமகன் உடைத்துத்தன்
னுள்ளத்துன் கிளைகளோ டுயப்போகு வான்போல - என்று வந்துள்ளது.
மேலும் பீமன் துர்ச்சாதனன் நெஞ்சத்தைப் பிளந்து தன் சபதம் முடித்த செயல், கலித்தொகையில் பாடல் 101 : வரிகள் 18 - 20 லும், போர்க்களத்தில் துரியோதனன் தொடையினை பீமன் அறுக்கும் செய்தி, பாடல் 52 : வரிகள் 2 - 3 லும், அசுவத்தாமன் தன் தந்தையாகிய துரோணச்சாரியனைக் கொன்றவனைத் தன் தோள்வலியினால் கொன்ற செய்தி, பாடல் 101 : வரிகள் 30 - 32 உள்ளன.
பரசுராமன் சூளுரை
பரசுராமன் “இம்மண்ணுலகிலேயே Bத்திரிய அரசத் தரப்பினர் ஒருவர்கூட இல்லாமல் பூண்டோடு ஒழிப்பேன்” என்று சபதம் செய்து, மிக்க முயற்சியோடு ஓர் பெரிய வேள்வியைச் செய்து முடித்தான் என்ற செய்தி
மன்மருற் கறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல ” அகப்பாடல் 220 : 5-8
கிருஷ்ணன் ஆயர் பெண்களின் ஆடைகளை ஒளித்தல்
ஆயர் பெண்கள் யமுனை ஆற்றின் கரையில் ஆடைகளையெல்லாம் வைத்துவிட்டு, நதியில் நீராடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் அறியாவண்ணம் கண்ணன் அவர்களது உடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அருகில் இருந்த குருந்த மரத்தில் ஏறிக்கொண்டான்.
அது கண்ட ஆயர்மகளிர் தங்கள் கைகளால், தங்கள் அங்கங்களை மறைத்துக்கொண்டு, உடையினைத் தரும்படி கண்ணனை வேண்டிக் கொண்டனர். கண்ணணோ எல்லோரும் தங்கள் இரு கைகளையும் நீட்டி வெளியில் வந்து கேட்டால் தருவதாகக் கூறிக்கொண்டு இருக்கும்போது, கண்ணனுக்கு மூத்த பலராமன் அவ்விடம் வந்தான். அது கண்ட கண்ணன் குருந்த மரத்தின் கிளையினை மிதித்து அதனைத் தாழும்படி செய்து அதில் அப்பெண்களை மறைத்துக் கொள்ளும்படி செய்தான். இச்செய்தியும் அகநானூற்றில் காணப்படுகின்றது.
வடா அது வண்புனல் தொழுதை
வார்மணல் அகன்றுறை அண்டர்மகளிர்
மரஞ்செல மிதித்த மாஅல் போல ”
அகநானூறு பாடல் 59 : வரிகள் 3 - 6
இவைமட்டும் அல்லாமல் சங்க இலக்கியங்களில் அருந்ததி, அகலிகை, பிரகலாதன் பற்றிய செய்திகள், சிவன் விஷ்ணு, பிரம்மா, முருகன், பலராமன் ஆகியவர்கள் பற்றிய புராணக்கதைகள் ஆகியவைகளும் ஆங்காங்கு காணப்படுகின்றன. இவற்றினைச் ‘சங்க இலக்கியங்களில் கடவுள்கள்’ என்ற தலைப்பின் கீழ் அடுத்துக் காண்போம்.
எனவே இதுகாறும் மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளில் இருந்து சங்க காலம் எனப்படும் இன்றைக்கு சற்றேறக்குறைய 1800 அண்டுகளுக்கு முன்னமேயே தமிழகத்தில் வடமொழிப் புராணக் கதைகள் நன்கு பரப்பப்பட்டு இருந்திருக்கின்றன எனத் தெரிய வருகிறது. பண்டை இலக்கியங்களில் இச்செய்திகளை எடுத்தாளும் அளவுக்கு இவைகள் செல்வாக்குப் பெற்று இருக்கின்றன என்பதனைப் பார்க்கும் போது ஆரிய ஆதிக்கம் எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வேரூன்றி இருந்தது என்பது விளங்கும்!
இந்தக் காலத்தில் எப்படி நமது மந்திரிகள், சட்டசபை உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், ஆங்கிலம் படித்த மேதாவிகள், பட்டதாரிகள் எனக் கூறப்படுபவர்கள் புலவர்கள் ஆகியவர்கள் மூடநம்பிக்கையும் புராண நம்பிக்கையும் உடையவர்களாக இருந்து வருகின்றனரோ - அது போலவே சங்ககாலத்துப் புலவர்கள், அரசர்கள், பொதுமக்கள் ஆகியவர்களும் மூடநம்பிக்கை உள்ளவர் களாகவே இருந்திருக்கின்றனர். இப்படி, பன்னெடு நாட்களுக்கு முன்னமேயே நம் நாட்டில் குடிபுகுந்து வேரூன்றிய ஆரிய ஆதிக்கம், இன்று செழித்து வளர்ந்து, பூத்துக் காய்த்து, கனிந்து காணப்படுகின்றது.
சங்க இலக்கியங்களில் புராணக் கடவுள்கள்
பண்டைய தமிழர்கள் “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற உயரிய நெறி நின்று ஒழுகி வந்தார்கள் என்றும், அவர்கள் பல்வேறு தெய்வங்களைக் கொண்டவர்கள் அல்லர் என்றும் தாங்கள் தாம் தமிழ்பற்றுக்கும், தமிழ் நாகரீகத்துக்கும் கர்த்தாக்கள் என்று எண்ணிக்கொண்டு சிலர் எழுதியும் கூறியும் வருகின்றனர்.
தமிழன் என்றைக்குமே ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற உயரிய கொள்கையினைக் கொண்டு வாழ்ந்தான் என்று பெருமை பாராட்டிக்கொள்ள நமக்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது, சங்ககாலத்திற்கு மிகப் பிந்திய காலத்தில் வாழ்ந்த திருமூலரின் திருமந்திரத்தின் ஒரு பாட்டின் ஒரு அடியில் வரக்கூடியதை மட்டும் எடுத்துக்கொண்டு பெருமிதப்பட்டால் போதுமா ?
இலக்கிய ஆதாரமென்ன?
இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் இலக்கிய ஆதாரங்களை வைத்துக் கொண்டு பார்த்தால் காலத்தால் முற்பட்ட தொல்காப்பியத்தில் ஆகட்டும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களில் ஆகட்டும் தமிழன் ஏகதெய்வ வணக்கத்துடன் வாழ்ந்தான் என்பதற்கு ஆதாரமே இல்லை.
அவன் ஆரியர்களின் இதிகாசங்களிலும், புராணங்களிலும் காணப்படும் சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், கொற்றவை (துர்க்கை), இந்திரன், பலராமன் போன்ற தெங்வங்களை வணங்கியதோடு சிறுதெய்வங்களையும், துஷ்ட தெய்வங்களையும் வணங்கி வந்திருக்கின்றான். மேற்கூறிய செய்திகள் பற்றி இக்கட்டுரையில் ஆய்வோம்.
சிவன்
சிவன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன்; காளை வாகனன்; கங்கையைச் சடையில் கொண்டவன்; நெற்றியில் பிறைச் சந்திரனைத் தரித்தவன்; உமையொருபாகன்; நீலகண்டன்; திரிபுரம் எரித்தவன்; முக்கண்ணன்; மழுப்படையை உடையவன்; கொடுகொட்டி, பாண்டுரங்கம், கபாலம் முதலிய கூத்துக்களை ஆடுபவன் ” என்பவைகள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளமையினை இங்கு காண்போம்.
தேவர்களும் - அசுரர்களும் மேருமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு அமிர்தம் வேண்டிக் கடல்கடைந்த போது, வாசுகி என்ற அந்தப் பாம்பானது வலி பொறுக்க மாட்டாது நஞ்சைத் திரண்டுவரும் அமிர்தத்தில் கக்கிவிட்டது.
அதுகண்ட தேவர்கள் கலங்கினர். சிவன் அந்த விஷத்தை எடுத்து உண்டான். உமாதேவி அதுகண்டு பயந்து ஓடிப்போய், அவனது கண்டத்தினைப் பிடித்தாள். அதனால் அந்த நஞ்சானது கண்டத்திலேயே நின்றுவிட்டது. இதன் காரணமாக சிவன் நீலகண்டன் என்று பெயர் பெற்றான் என்பது புராணக்கதை.
நீலமணிமிடற்று ஒருவன் போல - புறநானூறு : 91 -6
மறுமிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த - பரி பாடல் 8 : 127
பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆகிய மதிற் சுவரைக் கொண்ட மூன்று கோட்டை களையுடைய அவுணர்கள் தேவர்களை துன்புறுத்தினர். தேவர்கள் எல்லாம் பிரம்மாவினிடம் சென்று முறையிட, பிரம்மா தேவர்களை கூட்டிக்கொண்டு சிவனிடம் சென்று முறையிட்டான்.
அப்போது சிவன் பூமியை இரதமாகவும், தேவங்களை குதிரைகளாகவும், பிரம்மாவைத் தேரோட்டியாகவும், விஷ்ணுவை அம்பாகவும், மேரு மலையை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளையும் தகர்த்து, அவுணர்களையும் அழித்தானென்பது புராணக்கதை. இதுவும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது.
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்- திருமுருகாற்றுப்படை 153
மிக்கொளிர் தாழ்சடை மேவரும் பிறைநுதன்
முக்கண்ணா னுருவேபோன் - கலித்தொகை 104 : 11-12
இது மட்டுமல்லாமல் கலித்தொகை என்னும் சங்க இலக்கிய நூலுக்குக் கடவுள் வாழ்த்தாகக் கூறப்பட்ட பாட்டில் சிவன் ஆடியதாகக் கூறப்படும் கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம் ஆகிய கூத்துக்கள் கூறப்பட்டு உள்ளன.
கொடு கொட்டி
இது சிவன் உலகை எல்லாம் அழித்து நின்று கை கொட்டி ஆடும் கூத்தாகும்.
சங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு – மயிலை பாலு by admin · April 2, 2017
அவைதிகம் என்பதற்கு வைதிகம் அல்லாதது என்று பொருள், வைதிகம் என்றால் வேதங்கள் மற்றும் அவற்றின் பக்கவிளைவுகளான உப நிடதங்கள்.
புராணங்கள், மந்திர தந்திரங்கள் உள்ளிட்ட மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் உண்மை என சாதிப்பது. அவைதிகம் என்பது இவற்றை யெல்லாம் நிராகரிப்பது. சுருங்கச் சொன்னால் நாத்திகம் என்பதே அவைதிகம் எனப்படும். இதற்கு சான்றாகச் சிலர் அளித்துள்ள விளக்கங் களைக் காணலாம். தத்துவ ஆய்வறிஞர் தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா “இந்திய நாத்திகம்” என்ற நூலில் இவ்வாறு விளக்கம் தருகிறார், “உலகாயதம்” துவேகம் ஆகியவற்றின் பொருண்மைநாத்திகவாதமேஆகும்.இவற்றோடு சாங்கியம், புத்தம். சமணம். மீமாம்சம். நியாய வைசேசிகம் ஆகியவையும் கீழ்காண்பவற்றை மையக் கருத்துக்களாக கொண்டிருந்தன.
வேத வேள்விகளையும் வருணா சிரமங் களையும் பல கடவுள் வழிபாட்டையும் மறுத்தன. உபநிடதங்கள் உரைக்கும் ஒரு கடவுளுண்மை வாதத்தையும் உடன் படவில்லை. வேதங்கள் விளம்பும் இயற்கைச் சக்தி களுக்கும் உபநிடதங்கள் உரைக்கும் பரம்பொருளுக்கும் பதிலாக அண்ட அமைப்பியல் நியதிகளை வரை யறுத்தன. இயற்கை இறந்த ஆற்றல்களைப் புறக் கணித்தன. அண்டத்தில்இயற்கைவிதியின்ஆட்சியை மதித்தன. உடன்பாட முறையில் நோக்கினால் அவைதிக அல்லது நாத்திக தத்துவங்கள் அமைப்பியல் நியதிகளை வ ரையறுத்தன; அண்டத்தின் இயற்கை விதியின் ஆட்சியை மதித்தன. செயற்கையாக முன் வைக்கப்பட்ட கடவுள், இயற்கை கடந்த ஆற்றல் இன்ன பிறவற்றை அவை ஏற்க மறுத்தன என்கிறார் சட்டோபத்யாயா.
நாத்திகம் குறித்த தந்தை பெரியாரின் கருத்தும் இங்கு ஒப்பு நோக்க தக்கது.
“இன்றைய தினம் நாத்திகன் என்ற பதத்திற்குக் கடவுளை இல்லை யென்பவன் என்றாக்கிவிட்டார்கள்” தர்க்கரீதியில் புத்தியை உபயோகப்படுத்தி விஷயத்தை ஆராய்ச்சி செய்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் நாத்திகன் தான் என்கிறார் பெரியார்.
தனது கருத்துக்கு ஆதரவாக அவர் பவுத்தம் புத்தம் என்ற சொற்களுக்கான விளக்கத்தை முன்வைக்கிறார்.
“சொந்த புத்தியைக் கொண்டு வேத சாஸ் திரங்களைத் தர்க்கம் செய்பவன் நாத்திகன் அப்படிப்பட்ட புத்தியை உபயோகப்படுத்து கிறவன் புத்தன்.
“அபிதான சிந்தாமணி” என்சைக்கிலோபீடியா ஆகிய நூல்களில் பவுத்தம் என்பதற்குப் “புத்தியைக் கொண்டு -அறிவைக் கொண்டு பார்ப்பவர்கள் ;
கண்மூடித்தனமாக நம்பாதவர்கள் என்றே பொருள் சொல்லியிருக்கிறார்கள்”
(பெரியார் களஞ்சியம் – தொகுதி 4 பக்கம் : 236)
இந்திய தத்துவக் களஞ்சியம் என்ற நூலில் முனைவர் சோ.நாகந்தசாமிஅவர்கள் நாத்திகம் என்பதற்கு அளித்துள்ள சில விளக்கங்களையும் காணல் தகும்.
“பாணினி இலக்கண விதிக்கு (வீஸ் – 460) பதஞ்சலி செய்த மாபாடியத்திற்கு விளக்கவுரை எழுதிய சாயாதித்தர் ஆத்திகர் – பரத்தை உடன் பட்டவர்;
நாத்திகர் – அதனை நம்பாதவர்” என்று விளக்கம் கூறினார்.
“மனு. நாத்திகரை விளக்கும் பொழுது வேதக் கொள்கைளை நிந்தனை புரிபவர் என்று குறித்துள்ளார்.
“சுக்கிர நீதியில் கற்பதற்குரிய கலைகளில் “நாத்திகமும்சாத்திரமும்(அழுத்தம்.மூலநூலில் உள்ளது ) ஒன்றாக எண்ணப்பட்டது.
இச்சாத்திரம் சுபாவ வாதத்தைக் கூறு வதுடன் தருக்க வாதங்களை வலிமையாகக் கொண்டது. வேதங்களையும் கடவுளையும் மறுத்துரைப்பது” (அழுத்தம் கட்டுரையாளருடையது )
இந்த விளக்கங்கள் வழி நாம் ஒரு முடிவுக்கு வரலாம் பொதுவாக நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு என்று சொல்லப்பட்டாலும் வேத மறுப்பு மேலுலக மறுப்பு. சடங்கு மறுப்பு போன்ற வற்றையும் உள்ளடக்கியதாகும். இந்தப் புரிதலை அடியற்றி செவ்வியல் இலக்கியங்களில் நாத்திக அல்லது அவைதிக மரபுகள் பதிவாகியிருப்பதைக் கண்டுகாட்ட முற்படுவதே கட்டுரையின் நோக்கமாகும்.
நந்றிணை. குறுந்தொகை. ஐங்குறுநூறு. பதிற்றுப்பத்து. பரிபாடல். கலித்தொகை. அகநானுறு. புறநானுறு என எட்டுத் தொகை நூல்களும். திருமுருகாற்றுப்படை. முல்லைப் பாட்டு. நெடுநல்வாடை. குறிஞ்சிப்பாட்டு. பட்டினப் பாலை. மலைபடுகடாஅம் எனப் பத்துப்பாட்டு நூல்களும் செவ்வியல் இலக்கியங்கள் எனப்படுபவை. காலப் பழமை கருதிஇவற்றோடு சிலப்பதிகாரம்.மணிமேகலை. சீவக சிந்தாமணி. வளையாபதி. குண்டலகேசி, எனும் ஐம்பெருங் காப்பியங்களையும் நீலகேசி. சூடாமணி. யசோதார காவியம். நாக குமார காவியம். உதயணகுமார காவியம் என்ற ஐஞ்சிறுங் காப்பியங்களையும் இணைத்துக் கொள்ளலாம் இவற்றுக்கெல்லாம் ஆதி நூலாக விளங்குவது தமிழுக்கான இலக்கணத்தை மொழியியல் வாழ்வியல் அடிப்படையில் கூறும் தொல் காப்பியம் ஆகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட இவ்விலக்கண நூல் உலகத்து உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டவை என்கிற அடிப்படை வைதிகமரபை ஏற்கவில்லை. மாறாக உயிர்களின் பரிணாம வளர்ச்சி என்கிற அறிவியலுக்கு முன்னுரைஎழுதியுள்ளது. ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர் வரையிலான வகைப்பாட்டினைத் தொல்காப்பியம் எடுத் துரைக்கிறது.
“ஒன்றறிவதுவே உற்றறிவதுமே இரண்டறிவதுவே அதனொடு நாவே மூன்றறிவதுவே அவற்றொடு முக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனே சேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினனே (தொல், பொருள். மரபியல் நூற்பா 27) பொதுவான உயிர் வகைமைகளைக் கூறி நிறுத்தலாம்.
“புல்லும் மரனும் ஓரறிவினவே” ‘‘நத்தும் முரளும் ஈரறிவினவே” ‘‘சிதலும் எறும்பும் மூவறிவினவே” ‘‘நண்டும் தும்பியும் நான்கறிவினவே” ‘‘மாவும் மாக்களும் ஐயறிவினவே” ‘‘மக்கள் தாமே ஆறறிவுயிரே” (தொல். பொருள் மரபியல் நூற்பாக்கள் 28 -33)
என்று விளக்கம் தருகிறது. ஒருசெல் தாவரங்களிலிருந்தே பரிணாம வளர்ச்சி துவங்குகிறது. இதன் இறுதி வடிவமே மனிதன் என்று அறிவியல் கூறுவதன் முன்னோட்டம் போலவே தொல்காப்பிய நூற்பாக்கள் அமைந்துள்ளன. உலகின் உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டவை என்ற ஒற்றை வரியோடு நின்றிருந்தால் தொல்காப்பியம் வைதிகத்தின் வழிப்பட்டதாகி இருக்கும்” அதிலிருந்து விலகி நிற்பதால் தமிழர்களின் அவைதிக மரபுக்குத் தொல்காப்பியம் வழி திறந்திருக்கிறது எனலாம்”
அது மட்டுமல்ல. உலகத்தைப் படைத்து கடவுள் அல்லஎன்பதானகருத்தையும் தொல்காப்பியம் முன்வைக்கிறது.
“நிலம். தீ. நீர், வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆகலின்” (தொல். பொருள் மரபியல் நூற்பாக்கள் 635) தொல் காப்பியத்தைப் பின்பற்றுவது போன்ற கருத்துக்கள் புறநானூறு தொகை நூலிலும் காணப்படுகின்றன. மன்னனைப் புகழ்ந்து பாடுவதென்றபெயரால்தங்களின்கோட்பாட்டு சார்புநிலையைப்புலவர்கள்சொல்வார்கள்.இவ் வகையில் உறையூர் முதுக்கண்ணன் சாத்தான் சோழன் நலங்கிள்ளியின் குணநலன்களைக் கூறுவதுபோல உலகின் ஐம்பூதத்தியற்கையைப் பதிவுசெய்கிறார்.
ஆரம்பத்தில் உலகாயதர் என்றும் பின்னர் சாருவாகர் என்றும் அறியப்பட்ட ஆதிச் சிந்தனையாளர்களில் ஒருபிரிவினர் முன்வைத்த இயற்பண்பு (ஸ்வாபம்) வாதத்தை இந்தப்பாடலில் காணமுடிகிறது. இப்புலவரின் இன்னொரு பாடலும் வானியலை அளந்து கூறுவதாக இருக்கிறது.
“செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்று அளந்து அறிந்தோர் போல என்றும் இனைத்து உன்போரும் உளரே புறநானூறு -30)
ஞாயிறு எனும் சூரியனின்பயணம், அதனைச் சூழ்ந்தமண்டலம், (பிறகோள்கள்) காற்றின்திசை,. காற்றேஇல்லாத ஆகாயம் என இவற்றையெல்லாம் நேரில் சென்று அளந்தது போல கணித்துச் சொல்வோரும் உள்ளனர் என்பது இப்பாடலின் கருத்தாகும். ஞாயிற்றின் மண்டிலம் என்ற அறிவியல் முன்னோட்டத்தை மேம்படுத்த மறந்ததாலும் – வைதிகக் கருத்தாளர்கள் மறைத்ததாலும் நவக் கிரங்ககளைச் சுற்றிவந்து பூசனை செய்யும் கருத்து திணிக்கப்பட்டது. பூமியிலிருந்து மேற் செல்லச் செல்ல குறிப்பிட்ட தூரத்திற்குப்பின் சுவாசிக்கத் தேவையான காற்று கிடைப்பதில்லை புவியீர்ப்பு விசை இல்லையாகிறது என்ற இன்றைய ஆய்வுகளுக்குக் கட்டியம் கூறுவதுபோல இருக்கும் தொடர் “வறிது நிலைஇயகாயமும்”என்பதாகும்.அனைத்துக்கும் மேலாக இவற்றையெல்லாம் நேரில் சென்று அளந்ததுபோல் கணித்துச் சொல்வோரும் உள்ளனர் என்று சொல்லியிருப்பது புலவரின் காலத்தோடு ஒப்பு நோக்கி மதிக்கத்தக்கதாகும்.
ஆகாயத்தில் பரலோகம் இருக்கிறது. சொர்க்கம் இருக்கிறது. முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். தேவேந்திரனும் முப்பெருங்கடவுளரும் தேவியரும் இருக்கிறார்கள் என்றெல்லாம் இன்றும் சொல்லி நம்பவைத்துக் கொண்டிருக்கும் வைதிகப் புராண மரபை அன்றே உடைத்தெறிந்திருக்கிறார் முதுகண்ணன் சாத்தனார். இவரது பெயரைக் கொண்டே இவர் புத்தமதச் சார்பாளர் என்று கொள்ள இடமுண்டு புத்தமதம் உள்ளிட்டநாத்திகசமயங்கள் அண்ட அமைப்பியல் நியதிகளை வரையறுத்தன. அண்டத்தில் இயற்கையின் ஆட்சியை மதித்தன என்ற சட்டோபாத்யாயாவின் நிர்ணயிப்பையும் இதுபோன்ற கருத்துக்கள் மெய்ப்பிக்கின்றன.
மழைக்கு ஓர்கடவுளைக் படைத்தது வைதீகம். மழை என்பது இயற்கையின் கொடை அதனைப் பெறும்போது பாதுகாத்து வைத்துக்கொள்ள மனிதர்களான நாம் முயற்சிசெய்ய வேண்டும். திட்டமிட வேண்டும். ஆனால் வருண பகவானுக்கு மழைவேண்டி யாகம் வளர்க்கும் அவலத்தை இன்றும் நாம் காண்கிறோம்”ஆனால் சங்ககாலப் புலவரான குடபுலவியனார்.
“நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம்” (புறநானூறு – 18)
என்ற உணவின் இன்றியமையாமையை எடுத்துரைக்கிறார் மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்,அதாவதுஇயற்கையில்கிடைத்ததை உண்டு வாய்பப்பு கிடைத்தவரை வாழ்ந்த காலத்திலிருந்து மாறி, உணவு உற்பத்தி சேமிப்பு என்ற கால கட்டத்திற்கு வந்துசேர்ந்த காலம் சங்ககாலம் என்பதை அறியமுடிகிறது. உணவு உற்பத்திற்குஉயர்தேவையாகஇருப்பதுதண்ணீர். அந்தத் தண்ணீரைப் பாதுகாப்பது மன்னனின் கடமை என்று அறிவுறுத்துகிற நிலையில் இருக்கிறார் புலவர்.
இயங்கிக் கொண்டிருக்கிற உலகத்தில் செல்வ வளம் வேண்டும் என்றாலும் இந்த உலகில் தனிப்பட்ட வல்லமை கொண்ட அரசாக (வல்லரசு என்கிறார்களே அது போல) விளங்க வேண்டும்,என்றாலும்சிறந்தபுகழைநிலைநிறுத்த வேண்டும் என்றாலும் என்ன செய்ய வேண்டும்., நான் சொல்வதைக் கேள் என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனுக்குப் புலவர் குடபுலவியனார் என்ன அறிவுரை கூறினார் தெரியுமா?
நிலம் நெளிந்தது கிடக்கின்ற இடத்துப் பள்ளமாக இருக்கும் இடத்தில் தண்ணீரைப் பாதுகாக்கும் பணியைச் செய், அது தான் உனக்கு செல்வத்தையும் ஆட்சிவல்லமையையும் நிலைத்த புகழையும் தரும் என்று அவர் கூறுகிறார். இன்றைய மனநிலையோடு இந்தப் பாடலையும் கருத்தையும் அணுகினால் மிகச் சாதாரணாமாகவே தெரியும். ஆனால் எல்லாம் இறைவன் செயல் என்ற வைதிகக் கருத்தை நிலைநாட்டி மன்னனைப் போற்றி பாடி கொடைபெற்று வாழ்ந்து விட்டதோடு போகாமல் இன்றுவரை சிக்கலாக இருக்கும் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்வது பற்றி ஆலோசனை கூறியிருப்பதை அறிவியலின் ஒரு பகுதியாகவே காணவேண்டும், இந்த உலகத்தில் நல்லவை செய்தால் மேலுகத்தில் நன்மைகள் கிடைக்கும்,. சொர்க்கத்தில் இன்பங்களைஅனுபவிக்கலாம்.இல்லாவிட்டால் நரகம்தான் கிடைக்கும் என்றெல்லாம் இன்றும் சொல்லப்படுகிறது.; நம்பவும் படுகிறது.. இப்படிப்பட்ட எண்ணத்தை சங்ககாலப் புலவர் ஒருவர் மறுதலிக்கிறார் என்றால் அது வியப்புக்குரியது மட்டுமல்ல பெருமதிப்பிற்கும் உரியது, கடையெழுவள்ளல்களில் ஒருவனாக வைத்தெண்ணப்படுபவன் ஆஅய் அண்டிரன். இவனது கொடைச் சிறப்பை எடுத்துரைக்கின்றார் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர். ஆஅயின் வள்ளல் குணம் அவனது முன்னோர் வழிவந்ததாகும். அதுவன்றி இந்தப் பிறவியில் செய்யும் கொடை அடுத்த பிறவிக்கு உதவியாக இருக்கும் என்பதற்காகச் செய்கின்ற வணிக குணத்தால் அல்ல என்கிறார்.
“இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் ஆலன் பிறரும் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே” (புறநானூறு – 134)
இம்மை மறுமை என்ற கருத்து நிலையை மறுத்ததோடு, அறச் செயலை விலை பேசும் வணிக நிலைக்குத் தள்ளிவிடுகின்ற வைதிகத்திற்குப் பெரும் எதிர்ப்பை இதன் வழி காட்டியிருக்கிறார்.
இந்த உலகம் அழியாமல் பாதுகாக்கப் படுவதற்குக் காரணம் என்ன என்று ஒரு சனாதனியிடம் கேட்டால் ஆக்கல் காத்தல் அழித்தல் எனும் முச்செயலையும் முக்கடவுள் முறையாகச் செய்து வருவதால்தான் என்று பதில் சொல்வார். அவைதிகரை அல்லது கடவுள் மறுப்பாளரைக் கேட்டால் அழிவுக்கு எதிராகத் தொடர்ந்து சமர் புரிகின்ற மனிதர்களால் என்றுதான் சொல்வார். தான் என்கிற அகம்பாவஎண்ணம்கொண்டமனிதர்களுக்கும் அத்தகையோரின் அரசுகளாலுமே அழிவுகள் ஏற்படுகின்றன. சாதி, சமயம், இனம், மொழி என்பதோடு நிற்காமல் முதலாளித்துவத்தின் லாபவெறியும் மனிதகுல அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. இதையெல்லாம் கண்டிராத காலமாக இருந்தாலும் சங்கப் புலவர் ஒரு பொது விதியைக் கூறுகிறார்.
அமிழ்தம் இனிது என்றாலும் தனித்து உண்ணாமல் பகிர்ந்து கொள்வோரால் -கண்துஞ்சாது உழைப்போரால் -பிறர் அஞ்சுகின்ற தீயவற்றுக்கு அஞ்சுவோரால்நல்லதுக்காக உயிரையும் ஈகம் செய்வோரால் -பழிவரும் என்று தெரிந்தால் உலகத்தையே தருகிறேன்என்றாலும்செயலைத்தவிர்ப்போரால் -இவற்றுக்கெல்லாம் மேலாக தன்னலம் கருதாதுப் பிறர் நலம் கருதுகின்ற பெரியோரால் இந்த உலகம் நிலைத்து இருக்கின்றது என்று சொல்கிறது ஒரு புறப்பாடல்.
என்கிற பாடலைப் பாடியிருப்பவர் ஒரு புலவர் அல்ல. கடவுளுமாயிருந்த இளம் பெரும் வழுதி என்கின்ற மன்னன் ஆவான். மன்னனைக் கடவுளுககு நிகராக வைத்துப் போற்றிய பண்டைச் சமூகத்தில் ஒரு மன்னனே அந்த உலகம் நிலைத்திருப்பதற்குக் காரணம் சுயநலம் கருதாது பொதுநலன் நாடும் மனிதர்கள்தான் என்றுகூறியிருப்பதுகடவுள் மறுப்புக்குசரியான எடுத்துக்காட்டேயாகும்,சங்கஇலக்கியங்களைத் தொகுத்து நோக்கும்போது புலவர்கள் கடவுள் வாழ்த்து என்ற நிலையைக் கைக் கொள்ளதது மிகமுக்கியமானதுஎட்டுத் தொகைநூல்கள் பல புலவர்கள் பாடிய அல்லது எழுதிய பாடல்களின் தொகுப்பு என்பதால் கடவுள் வழ்த்தினைத் தனியரு புலவர் பாடாதிருந்திருக்கலாம். இருப்பினும் தொகுக்கப்பட்ட பின் வந்தவர்கள் இதனை ஒரு குறையாகக் கருதும்போக்கு உருவாகியிருக்கிறது எனவே பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற புலவர் வலிந்து கடவுள் வாழ்த்து என்ற செய்யுளை எழுதி எட்டுத்தொகை நூல்களில் இணைத்திருக்கிறார்.
பத்துப் பாட்டு என்பது தனித்தனிப் புலவர்களால் நூல்போல் ஆக்கப்பட்டவை என்றாலும் எந்தப் புலவரும் கடவுள் வாழ்த்து என்ற காப்புச் செய்யுளைப் பாடவில்லை என்பது எண்ணத்தக்கது. இதனால் பத்துப் பாட்டு தொகை நூலில் முதலாவதாக திருமுருகாற்றுப்படையை வைத்து அதையே கடவுள் வாழ்த்தாகக் கருதிக்கொள்ளளுமாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எதை எழுதினாலும் செய்தாலும் ஏன் கல்வி பயிற்றும் காலத்தில்கூட கடவுள் வாழ்த்தொன்று தொடங்க வேண்டும் என்ற வைதிக மரபை நமது சங்ககால முன்னோர்கள் கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது, கடவுளைக் கேலி செய்கிற -கடவுள் பெயரால் சடங்கு செய்வோரை நேரடியாகவே கிண்டல் பேசுகின்ற போக்கினையும் சங்க இலக்கியங்களில் காண்கிறோம்.
இளம்பெண்கள் காதல் வயப்பட்டு காதலனை சந்திக்க முடியாமல் தடை ஏற்படுத்தப் பட்டாலோ மனநிலை பாதிக்கப்படுவது இயல்பு. இதற்கு ஒன்றும் அறியாதவர் உண்மை உணராதவர்கள் பெண்ணுக்குப் பேய் பிடித்து விட்டதாகச் சொல்வார்கள். இதற்குத் தீர்வாக மாந்திரீகம்செய்வது,பூசாரியைக்கொண்டுபோய் பேயோட்டுவது போன்ற நிகழ்வுகள் இன்றும் காணப்படுகின்றன. இதனை எள்ளி நகையாடியத் தமிழ் மரபு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காணப்படுவது என்பது பெருமைக்குரியது அல்லவா?
முற்கால இளம்பெண்களுக்கு காதல் மயக்கத்தால் ஏற்படும் மனப் பிறழ்வைப் போக்க வெறியாட்டு நடத்தப்பட்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன. இதற்கு வேலன் என்ற பூசாரி வருவான் இவன் மீது முருகக் கடவுள் இறங்கிவந்து பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாகக் கருதப்பட்டது.
இதற்கு நெல்லினைப் பரப்பிவைத்து அதிலே ஒருகுட்டி ஆட்டினை நிறுத்தி வைத்திருப்பார்கள். பின்னர் வேலன் என்ற அந்த பூசாரி மீது முருகன் ஏற அவன் குட்டி ஆட்டினை அறுத்து அதிலிருந்த வெளிப்படும் இரத்தத்தை எடுத்துப் பெண்ணின் நெற்றியில் தடவுவான் இப்படிச் செய்வதால் பெண்ணிடமிருந்து பேய் அகன்று ஓடி விடும் என்பது மூட நம்பிக்கை. இதனை அப்படியே பதிவு செய்திருந்தால் நாம் பேச வேண்டிய தேவை இருக்காது, ஆனால் இளம் பெண்ணின் தோழி இந்த வெறியாடும் வேலனைப் பகடி செய்வதாக இலக்கியம் படைக்கப்பட்டிருப்பது மிகமுக்கியமானது.
நான் கேட்கின்றேன் என்று கோபித்துக் கொள்ளாதே. முருகனுக்குப் பலி கொடுப்பதாகச் சொல்லி ஆட்டுக் குட்டியைக் கொன்று அந்த இரத்தத்தைத் தலைவியின் நெற்றியில் தடவுகிறீர்களே இந்த பலியிடுதலை குறிஞ்சி நிலத் தலைவனான சிலம்பனின் மார்பு உண்ணுமோ ? என்று தோழி கேட்கிறாள் எவ்வளவு நாசுக்கான நக்கலான மொழியில் தோழி பேசுகிறாள் பார்த்தீர்களா? தலைவிக்கு நோய் தந்தவன் குறிஞ்சி நிலத் தலைவன் அவனை அழைத்து மணமுடிப்பதை விடுத்து முருகனுக்குப் பலிகொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே என்று நேரடியாகப் பளிச்சென பேச வேண்டியதைத் தான்அடக்கமாகமாற்றிப் பேசுகிறாள்,ஒரேஒரு புலவர் மட்டுமல்ல வெறிபாடி காமக் கண்ணியார் பாடல்தரும்(அகநானூறு22,98)குறுந்தொகை111, 263, 360 ஐங்குறுநூறு 138, 156, 232, 272 நற்றிணை 34 ஆகிய பாடல்களும் வெறியாட்டினை இகழ்ந்தே பாடப்பட்டுள்ளன.
குறிஞ்சி நிலத் தேய்வம் முருகன் என்று ஒரு பக்கம் கூறினாலும் மறு பக்கம் அந்த மருகனின் பெயரால் நடக்கும் மூடச் சடங்குகளைப் பெண்களே எதிர்த்ததாகப் புலவர்கள் பதிவு செய்திருப்பது அவைதிக மரபுகளை அவர்கள் உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது, சங்க இலக்கியங்களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இயற்றப்பட்டதான காப்பியங்கள் பெரும்பான்மையும் சமண. பவுத்த சார்புடைய புலவர்களின் படைப்புகளாகும் இவற்றில் நமக்கு முழுமையாகக் கிடைத்திருப்பவை சிலப்பதிகாரம், மணிமேகலை சீவக சிந்தாமணி நீலகேசி ஆகியவையே மற்றவை பெரும் சிறும் காப்பியங்கள் என்ற பட்டியலில் இருந்த தாலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத் திருப்பதிலும் மணிமேகலைக்காப்பியமே முழுக்க முழுக்க தத்துவ விளக்க நூலாக இருக்கிறது. சிலப்பதிகாரத்தின் கணிகைப் பாத்திரமான மாதவி கோவலனைப் பிரிந்தபின் புத்தமதத்தைத் தழுவுகிறாள். அவளது மகள் மணிமேகலையும் புத்த பிக்குணியாகிறாள்,. மணிமேகலையின் மூலமாக புத்த சமயக் கருத்துக்கள் நிலை நாட்டப்படுகின்றன. பலவகையான சமயவாதங்களை வாதத்ததால் நிராகரிக்கும் பகுதியாக “சமயக் கணக்கர்தம் திறம்கேட்டகாதை”விளங்குகிறது, மணிமேகலை காப்பியத்தின் மையநோக்கமாக விளங்குவது
மனித சமுதாயத்தின் பசிப்பிணி தீர்ப்பது. இந்தப் பிணிக்கு மருந்தாக அவளுக்குக் கிடைப்பது அட்சய பாத்திரமாகும். . இந்தப் பாத்திரத்தின் மூல நாயகனாக இருப்பவன் ஆபுத்திரன் அதாவது பசுவின் மைந்தன். இந்த ஆபுத்திரன் கதைவழியேவைதிகமரபுகளைஅம்பலப்படுத்தி அவைதிக கருத்துக்களை நிலைநாட்டுகிறார். வேத சமயத்தின் மீதும் வேள்வி முறைகள் மீதும் கடுமையான நேரடித் தாக்குதலைத் தொடுக்கிறது ஆபுத்திரன் கதை.
வாரணாசியில் அபுஞ்சிகன் எனும் மறையோன் இருந்தான் இவனது பார்ப்பன மனைவி சாலி அவள் ஒழுக்கம் தவறியதால் குமரியில் நீராடப் புறப்படுகிறாள் (இக்காலத்தில் குமரியிலிருந்து வாரணாசிக்கு (காசிக்கு) செல்கிறார்கள் அக்காலத்தில் வாரணாசியிலிருந்து குமரிக்கு வந்தார்கள் என்பது எண்ணத்தக்கது) வருகிற வழியில்முறைகேடாகஉற்றகருவிலிருந்துகுழந்தை பிறக்கிறது. அதனை சிசுக்கொலை செய்யாமல் மறைவான ஒரிடத்தில் போட்டுவிட்டுப் போகிறாள். பின்னர் குழந்தை பசியால் அழுகிறது அழுகிறவனுக்கு இரங்கிய பசு ஒன்று அங்கு வந்து குழந்தைக்குப் பால் கொடுத்துப் பாதுகாக்கிறது.
இப்படி வளர்ந்த குழந்தைக்குப் பெயர்தான் ஆபுத்திரன் எனப்படுகிறான், பின்னர் இளம்பூதி என்கிற மறையோனும் அவனது மனைவியும் ஆபுத்திரனை வளர்க்கிறார்கள். அவன் வாழ்த்த ஊரில் மறையவர்களால் வேள்விக்கு ஏற்பாடு செய்யப்படுகிறதுஅந்தயாகத்தீயிலேபோடுவதற்கு பசு ஒன்று கட்டப்பட்டுள்ளது அந்த பசுவின் நிலையையும் ஆபுத்திரனின் தவிப்பையும் இப்படி சொல்லோவியம் ஆக்குகிறார் சீத்தலைச் சாத்தனார், “கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி வலையிடைப் பட்ட மானே போன்று அங்கு அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு நெஞ்சு நடுக் குற்று நெடுங்கணீர் உகுத்தான்”ஆபுத்திரன் மனம் பொறுக்காத அவன் அந்தப் பசுவை இரவோடு இரவாக அவிழ்த்துச் சென்று விடுகிறான். மறையவர்கள் அவனையும் பசுவையும் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.
தாய் தந்தையின் பெயர் அறியாததால் அவனைப் “புலைச் சிறுமகனே” என்று இழிவாக விளித்தார்கள் கொன்று விடுவோம் என்று கோல்கொண்டு அடிக்கிறார்கள்.
‘அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை” என்று வேதங்கள் -அரியவை நன்னூல் என்றெல்லாம் புகழ்ந்து கூறி அஃதறியாமல் இகழ்ந்துவிட்டாய்என்றும்கோபப்படுகிறார்கள். பசுமாட்டினை வேள்வியில் இடச்சொன்னதுதான் அருமறை நன்னூல் என்பதை இங்கே நினைவில் நிறுத்த வேண்டும். இதற்கிடையே அந்தப் பசு அங்கே இருந்த தலைமை மறையவனைக் கொம்பால் குத்தி தள்ளிவிட்டு காட்டுக்குள் ஓடி விடுகிறது. வேதங்களின் அருமை பெருமைகளை இவன் அறியாதற்குக் காரணத்தையும் கண்டறிந்து விட்டவர்கள்போல் “ஆமகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்” என்கிறார்கள், இதுவரை பொறுமை காத்த ஆபுத்திரன் ஆவேசம் அடைகிறான். வைதிகமரபில் செல்லப்பட்டுள்ள மறையவர்களின் பிறப்புத் தன்மைகளைப் பட்டியலிட்டு சொல்கிறான், இருடி (ரிஷி) கணங்கள் என்று உங்கள் குலத்தில் உயர்வாக செல்லப்படுகிற அசலன் என்பவன் பசுவின் மகன். சிருங்கி என்பவன் மானின் மகன். விரிஞ்சி என்பவன் புலியின் மகன். கேசகம்பளன் என்பவன் நரியின் மகன் என்ற பட்டியலைச் சொல்லி விட்டு பசு வளர்த்தால் நான் மட்டும் இழிந்த குலம் ஆகிவிடுவேனா? நான்கு வேதங்களை நல்ல நூல் என்றீர்களே அதில் அப்படித்தான் சொல்லப் பட்டிருக்கிறதா என்றுசாடுகிறான்,அதுமட்டுமல்ல வேதங்களில் நிறைந்தவர்கள் என்று சிலரைச் சொல்கிறீர்களே அவர்களின் நிலை என்ன? அகத்தியர் வசிஷ்டர் என்று கூறப்படும் இரண்டு அந்தணர்களும் யாருடைய பிள்ளைகள்?
(திலோத்தமை என்ற) கணிகைக்குப் பிறந்தவர்கள் சொல்லுங்கள் நான் சொல்வதில் ஏதாவது பொய்யிருக்க நிலைமை இப்படி இருக்கும்போது என்தாய் சாலி என்ன தவறு செய்து விட்டாள்? என்று கேள்விகளை அடுக்குகிறான்.
முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய கடவுட் கணிகை காதலஞ்சிறுவர் அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் புரிநூல் மார்பீர் பொய்யுரை யோமோ
சாலிக்கு உண்டோ தவறு மணிமேகரை ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை ; வரிகள் 63, 69, 93, 99 என்று கோபம் கொப்பளிக்கப் பேசும் ஆபுத்திரன் பாத்திரத்தின் வழியாக வேள்விகளை அம்பலப்படுத்தி ரிஷிகள் என்றும் வேத விற்பன்னர்கள் என்றும் போற்றப்படுவோரின் பிறப்புண்மைகளை வெளிப்படுத்தியும் சாடுகிறார் சீத்தலைச் சாத்தனார்.
பசுக்களைப் பாதுகாப்பதற்காகவே பிறந்திருப்பதுபோல் இப்போதும் காட்டிக் கொள்வோரின் முன்னோர்கள் வேள்விகளில் இளம் பசுக்களைக் கொல்வதற்கு என்னமாய்த் துடித்திருக்கிறார்கள்!பசுவைக்காப்பற்றியஆபுத் திரனை எப்படித் தாக்கியிருக்கிறார்கள் இழிவு படுத்தியிருக்கிறார்கள். என்பதைமணிமேகலைக் காப்பியம்எடுத்தியம்புகிறது..சென்றநூற்றாண்டில் தந்தை பெரியார் அவர்கள் வேதமரபினரின் பிறப்புகளை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறுவோர் இத்தகைய எதிர்கருத்து நிலையை சொல்வதுகாலம்காலமானமரபுதான்என்பதை உணரச் செய்கிறது, பண்டையச் சமூக மரபில் கடவுள் மறுப்பு என்பதோடு கடவுளை நிலை நாட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளான வேத மறுப்பு . சடங்கு மறுப்பு என்பதுதான் நாத்திகத்தின் வேராக பார்க்கப்படுகிறது.
வேதாந்தங்களான உபநிடதங்கள் பிறவும் கடவுளின் கிருபை அவற்றிற்குச் செய்ய வேண்டிய சடங் குகளை விரித்து ரைக்கின் றன. இவற்றையெல்லாம் வேதமறுப்பாளர்கள் பகடி செய்ததற்கான தரவுகள் இலக்கியங்களில் ஏராளமாக இருக்கின்றன
“கங்கையில்மூழ்கினால்பாவம்தீரும்என்றால் கங்கைக்குள்ளே கிடக்கும் மீன்களுக்கு அது பொருந்தாது.”
இறந்தபின் வானுலகம் சென்றதாக நம்புகின்ற உறவினர்கள் வீட்டில் சடங்கு செய்து உணவு படைக்கிறார்கள். மேலுலகத்தில் இருக்கும் உறவினர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறார்கள்..அப்படியெல்லாம்வீட்டின்தரைத் தளத்தில் ஒருவன் உணவுண்டால் முதல்தளத்தில் இருப்பவனுக்கு பசி போய்விடுமா என்றும் பேசி வைதீகச்சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இதனைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் வாதத்தால் வென்றதில்லை மாறாக வசை மாரி பொழிந் திருக்கிறார்கள்.
ஆனால் வேதங்களு ம் அவற்றிற் கு விளக்கங்களாக வந்த பிற நூல்களும் முரண்பட்டுக் கிடக்கின்றன அவற்றால் பயனில்லை என்றாள் நீலகேசி. ஆத்திரமடைகிறான் பூதகன். வேத வேதாகமங்களை மறுத்துப் பேசிய நீலகேசி பற்றி பூதகன் எடுத்து சொல்லும் வார்த்தை மிகவும் கவனிக்கத்தக்கது, “சூத்திரி நீ அது வல்லை அலாமையின்சொல்லுகிறாய்”வாதிட்டுவெல்ல முடியாதவன் வர்ணாசிரமத்திற்குள் புகுந்து விடுகிறான்.
நீ சூத்திரி என்பதால் உனக்கு வேதத்தில் வல்லமை இல்லை அதனால்தான் அப்படிச் சொல்கிறாய்என்கிறான்,இப்படித்தான்வாதிட்டு வெல்லமுடியாத வைதிக மரபினர் வசை மொழியைவன்முறையைக்கையிலெடுக்கிறார்கள். அவைதிகர்கள் காலந்தோறும் உண்மைகளை உரக்கப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் கோவிந்த் பன்சாரே போன்றோரை அண்மைக் காலத்தில் இழந்திருக்கிறோம் இடைப்பட்ட காலத்தில் எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டு கொல்கிறார்கள். அதற்கும் முற்பட்ட காலத்தில் எதுவும் நடக்கவில்லை என்று எண்ணிவிடக் கூடாது.
“ஒன்று புரிந்து ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முது நூல் இகல்கண்டோர் மிகல் சாய்மார்” (புறநானூறு 166)
என்ற ஆவூர் மூலங்கிழாரின் புறநானூற்றுப் பாடல் வரிகளுக்கு விளக்கம் அளிக்க வந்த பழைய உரையாசிரியர் ‘வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலான புறச்சமயத்தோரது மிகுதியைச்சாய்க்க வேண்டி என்கிறாள் (சாய்த்தல் / வீழ்த்துதல்) சாய்த்தல் என்பது கருத்துக்களை அல்லது கருத்துக் கொண்டிருந்தவர்களை கொள்கை பரப்பியவர் களை வீழ்த்துதல் என்பதை வரலாற்றின் வழி அறிந்து கொள்கிறோம்.
அவைதிக மரபுகளை முன்னெடுத்தல் என்பது எல்லாக்காலத்திலும் இருந்திருக்கிறது என்பதையும் அதற்கு எனவசை பொழியப்பட்டிருக்கிறார்கள், களப் பலியாகியிருக்கிறார்கள் என்பதையும் தொல்காப்பியகாலம்தொடங்கி நீலகேசிகாலம் வரை நெடுகக் காண்கிறோம் அதன் நீட்சியை வளரவொட்டாமல் வெட்டத் துடிப்பவர்கள் வைதிக மரபினர்.. வெட்ட வெட்ட மேலும் கிளர்ந்து துளிர்த்துக் கொண்டே இருப்பார்கள் அவைதிக மரபினர். ஏனெனில் அவைதிகம் என்பது அறிவின்பாற்பட்டது,
(கட்டுரையாளர் – பத்திரிக்கையாளர் – மார்க்சிய சிந்தனையாளர்) நிமிர் மார்ச் 2017 இதழ்