(2011 ல் எழுதப்பட்டது,மறுபிரசுரம்)
ஜெ.எம்,
இந்து மதம் சார்ந்த குறிப்பிட்ட ஏதோ ஒரு சாதியில் பிறந்து விட்டாலும் – மதம்,சாதி ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாகவே என் பெற்றோர் காலத்திலிருந்து எங்கள் குடும்பச் சூழல் இருந்து வந்திருக்கிறது.கோயில்களுக்குச் சென்றாலும்,விழாக்கள் பண்டிகைகள் கொண்டாடினாலும் -மத , சாதி முத்திரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் வெளியில் இருந்து அவற்றைப் பார்க்கும் நோக்கும் , சடங்குகளுக்கு முதலிடம் தராத மனப்போக்கும் இயல்பானதொரு நடப்பாகவே எங்கள் வீட்டில் இருந்து வந்தது.
பள்ளித் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிய என் அம்மாவுக்கு நெருக்கமான ஒரு கிறித்தவத் தோழி இருந்தார்.இன்றும் கூட ‘சித்தி’ என்ற உறவில் என்உணர்வுகளுக்குள் உறைந்து நிற்பவர் அவரே.
அம்மாவும் சித்தியும் எத்தனை நெருக்கம் கொண்டாடினாலும் , சித்தி வீட்டுக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நாங்கள் பங்கேற்றாலும் அந்தச் சித்தி எதையும் வலுவில் என்னுள் திணித்ததில்லை;பிரச்சினையோ நோய்களோ வந்தபோது’ஜெபம்’செய்கிறேன் என்று தொடங்கியதுமில்லை.இத்தனைக்கும் அம்மாவும் அவர்களும் ஒன்றாகச் சில ஆண்டுகள் ஒரு கிறித்தவப் பள்ளியில் பணி புரிந்தவர்கள்.
என் அம்மாவும் பைபிளை நன்கு கற்றுத் தேர்ந்தவர்;வீட்டிலேயே ஒரு வடமொழி ஆசானை ஏற்பாடு செய்து கொண்டு சுலோகங்களையும் பொருளோடு கற்றுத் தேர்ந்தவர்.அவரும் என்னை என் போக்கில் விட்டாரேயன்றி எதையும் என் மீது வலிந்து புகட்டியிருக்கவில்லை.
ஆனாலும் ஒரு சிற்றூரில் – நான் படித்த தமிழ்வழிப்பள்ளி மற்றும் கல்லூரிகளின் சூழலும், எங்கள் சுற்றுப்புறம் மற்றும் ஊர்க் கோயில்களின் சூழலும்,நான் பெற்ற தமிழ் இலக்கியக் கல்வியும் என்னைக் கிறித்தவத்தின் பால் பெரிதும் வசீகரிக்கவில்லை.
பிறகு என் வாழ்நாளின் செம்பாதி ஒருகிறித்தவ நிறுவனத்திலேயே – பணி நிமித்தம் கழிந்திருந்தாலும், அங்கும் ’தோழிகள்’ வழி சில மாயத் தூண்டில்கள் சாஸ்வதமாக வந்து கொண்டே இருந்தாலும் (அது என் தாயின் தலைமுறையில் இல்லை) என் இலக்கிய வாசிப்புக்களும், அதனால் நானடைந்திருந்த விசாலமான கண்ணோட்டங்களும் எதற்குள்ளும் எல்லை குறுக்கிக் கொள்ளாதவளாகவும்,உறுதியான நிலைப்பாட்டுடனும் என்னைக் கட்டமைத்தன.வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் என்னை வழி நடத்தி வருவது இலக்கியம் மட்டுமே என நம்பி அதற்குமட்டுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் நான். .
வீட்டுச் சூழலில் எதைப் பற்றியும் எப்படியும் பேசலாம்,விவாதிக்கலாம் என , நானும் என் தாயும் வகுத்திருந்த தாராள மனப்போக்குக்கு என் மகள் வடிவில் சோதனை வரும் வரை – இப்படியொரு விஷயம் பிரச்சினையாகும் என நான் எண்ணிப் பார்த்ததே இல்லை.
நான் பணி புரிந்த ஏழாம் நாள் அட்வெண்டிஸ்ட் பள்ளியில் பள்ளிக் கல்வியும் , ஒரு சி.எஸ்.ஐ கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பும் (நான் வேலை புரிந்தது,ஒரு கத்தோலிக்கக் கல்விநிறுவனத்தில்) பயின்றாள் என் மகள்.
பள்ளி நாட்களில் தரப்படும் பைபிள் வாசகங்களைக்கூட என் அம்மா கல்மிஷமின்றி – மிகுந்த ஈடுபாட்டோடு கற்பித்த நாட்களின்நினைவுகள் இன்னும் பசுமையாக என்னுள்.
எந்தக் கணம் அந்த மாற்றம் நிகழ்ந்ததோ…..அல்லது படிப்படியான மூளைச் சலவைக்கு அவள் சூழலும் நட்பும் அவளை ஆளாக்கியதோ தெரியாது…
கிறிஸ்து ஒருவரே உண்மையான கடவுள் என்றும் – பிற எதையும் அறிந்து கொள்ள விருப்பமில்லை – வேறு எதிலும் எந்தச் சாரமும் இல்லை -எதைப் பற்றி அறியும் நாட்டமும் இல்லை என்று கூறும் எல்லைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் சென்று விட்டாள்.
(பிறவற்றைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் தீர்ப்புச் சொல்வது எப்படிச் சாத்தியம்?எனப் பல முறை விவாதித்தபோதெல்லாம் எனக்கு எஞ்சியது கசப்பே)
நானும் பலவகைத் தத்துவங்கள்பற்றிப் பேசிப் பார்த்தேன்;நூல்கள் தந்தேன்.எதற்கும் செவி கொடுக்கக் கூட அவள் ஆயத்தமாக இல்லை.
நான் ஏசுவையோ அவரது கோட்பாடுகளையோ அவரது அன்பு வழியையோ என்றும் மறுதலித்தவளில்லை.‘எந்தரு மகானுபாவோ..’
ஆனால் எல்லாவற்றைப் பற்றியும்- நாங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்த அறிவு பூர்வமான விவாதங்களுக்கான திறந்தவழி ,ஒரு காலத்தில் என் நெருக்கமான தோழியுமாக இருந்த அவளிடம் – என் ஒரே மகளிடம்- முழுக்க முழுக்க – முற்றிலுமாய் அடைத்துப் போய்விட்டது.இனி அது அடையா நெடுங்கதவு மட்டுமே. ஒரு முட்டுச் சந்து!
20 வயது வரை படங்களை உற்சாகமாக விரும்பிப் பார்ப்பவள்..பாடல்களை ஆசையாய்க் கேட்பவள், கதைகளை விருப்பமாய் வாசிப்பவள்- பைபிள் வாசிப்பைத் தவிர – , பார்க்கும் வேலை சார்ந்த வாசிப்புக்களைத் தவிர- வேறு எந்த ஆர்வமும் அற்ற நிலைக்கு – மற்ற எல்லாம் ’பாவம்’ என எண்ணும் நிலைக்கு ஆட்பட்டு விட்டாள்.
கல்லூரிச் சூழலிலிருந்து விலகிப் பணிச் சூழலுக்கு மாறி அங்கே காதல் வயப்பட்டு விரும்பியவரையே மணந்த பின்னும் கூட (அவர் என்னைப் போலப் பிறப்பால் மட்டும் இந்து ,மற்றபடி குறுகிய கண்ணோட்டங்களிலிருந்து விடுபட்டவர்) நாளுக்கு நாள் அவளது only God பிடிப்பு இறுகிக் கொண்டுதான் போகிறதே தவிரப் பொதுவான அறிவு சால் நிலைப்பாட்டுக்கு அவள் வருவதாக இல்லை.
நல்ல காலமாக அவள் கொண்ட காதல் என்னைக் கொஞ்சம் காத்தது;மருமகன் இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனங்களுக்கு அப்பாற்பட்டவர்;ஏதோ தன் காதலால் , நல் உள்ளத்தால் அவளது கிறுக்குத்தனங்களைச் சற்றே பொறுத்தாலும் குழந்தைகள் வளரும் சூழல் -மருமகன்,நான் என எங்கள் இருவருக்குமே சற்றுக் கவலை அளிப்பதாகத்தான் இருக்கிறது.
குழந்தைகள் மீது எதுவும் திணிக்கப்படக் கூடாது என்ற எங்கள் ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் ஏதோ அரைமனதோடு அவள் ஏற்றுக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது.
அதுவும் எனக்கு சற்று பயம்தான்.
அறிவுக்கான வழிகள் அந்தப்பிஞ்சுகளுக்கு அடைபட்டுப் போனால் அது எத்தனை பெரிய கொடுமை..அது நிகழாமல் பாதுகாப்பதே எனக்குப் பெரும் பதட்டமளிப்பதாய் இருக்கிறது.
அன்பு ஜெ.எம்,மீண்டும் சொல்கிறேன்.நான் இளமையிலிருந்து அறிந்த ஏசு…,உங்கள் எழுத்துக்கள் வழி உறுதிப்பட்ட ஏசு..only God போன்ற இப்படிப்பட்ட மூடத்தனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு பெருமகனல்லவா.. அவள் ஏசு மீதும்,பைபிள் மீதும் வைத்திருக்கும் பற்றுக்கும் பிடிப்புக்கும் நான் எதிரியில்லை…அது மட்டும் புத்தியின் பாற்பட்டதாக இருந்திருந்தால்..!.
அவற்றைக் காரணம் சொல்லிக் கொண்டு ஞானம் வருவதற்கான எல்லா வாயில்களையும் இறுக அடைத்தபடி -வேறு எதையுமே படிக்காமல்…எதுகுறித்தும் தர்க்க பூர்வமாகச் சிந்திக்காமல் இப்படி அவள் இருப்பது உண்மையில் எனக்குத் திகிலூட்டவே செய்கிறது ஜெ.எம்.
தற்செயலாக ஒரு சிறிய நல்லது நடந்தாலும் – அது அவர் நிகழ்த்தும் அற்புதம் எனச் சொல்லிச் சொல்லி அவள் மாய்ந்து போகும்போது , அவள் படித்த விஞ்ஞானமெல்லாம் எங்கே போய் ஒளிந்து கொண்டது என்று எனக்குள் கூச்சமெடுக்கிறது.
இயல்பில் அவள் உல்லாசமானவள்,வேடிக்கையும் விளையாட்டுமாக இருக்க ஆசைப்படுபவள்;இப்போதும் அப்படிப்பட்ட இயல்புகள் அவளிடம் தலை தூக்காமல் இல்லை;ஆனால் வலிந்து அவற்றை அடக்கப் பார்க்கும் அவள் முயற்சி எனக்கு வேதனை தருகிறது. .
ஒரு கதையில் selling soaps and selling prayers என்று சுஜாதா சொல்வார்
கூவிக் கூவி யாரோ எதையோ விற்று விட்டுப் போனதால் என் மகள் அறிவின் மீது இப்போது அடர்த்தியான புழுதி படிந்து கிடக்கிறதே..இதைக் கழுவ எந்த அற்புதத்துக்காக நான் காத்திருக்க வேண்டும்?
நெடுநாளாக இதைத் தங்களிடம் பேச எண்ணியிருந்தேன்.
தங்கள் அண்மைப்பதிவான மெய்ஞ்ஞானம் சில்லறை விற்பனை..
இதைப் பகிரும் எழுச்சியைக் கிளர்த்தியதால் உடன் எழுதியிருக்கிறேன்.
இது என் தனி நபர் சோகமல்ல. இன்று பல சமயங்களும் சார்ந்ததாய் அறிவுத் துறை மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அராஜகத் தாக்குதல் இது என எண்ணியபடி என் சொந்த வருத்தத்தைச் சமூகம் சார்ந்த அறிவின் இழப்பாய் மடை மாற்றிக் கொள்கிறேன்.
இச்சூழலில் இதனை எதிர்கொள்வதற்கான என் நிலைப்பாடு பற்றியும்,பொதுவான நிலைப்பாடுகள் பற்றியும் நீங்கள் சில கருத்துப்பகிர்வுகள் அளித்தால் மனம் சற்று இதம் பெறும்.
எஸ்
****
அன்புள்ள எஸ்,
முதலில் நான் உங்களிடம் ஏற்கனவே சொன்னதையே திரும்பச் சொல்ல விழைகிறேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் அடுத்த தலைமுறைகளின் – மக்கள், பேரர்கள்- விஷயங்களில் அதீதமாக ஈடுபடுவது என்பது ஆழமான வருத்தத்தையே கொடுக்கும். உங்களுக்கு புரிந்த உலகம் போய்விட்டது. புதிய உலகின் கட்டாயங்களும் சிக்கல்களும் உங்களுக்கு தெரியாது. அதன் மதிப்பீடுகள் புரியாது. அந்நிலையில் அதில் ஈடுபடுவதும் சரிசெய்ய முனைவதும் தோல்விகளையும் கசப்புகளையும் மட்டுமே அளிக்கும். அதனால் ஆவது ஒன்றும் இல்லை.
ஆகவே ஒரு கட்டத்தில் முடிந்தவரை விலகிக்கொள்வதும், ஒட்டாமலிருப்பதும், ஆன்மீகமான நிறைவு அளிக்கும் விஷயங்களில் மட்டுமே ஈடுபடுவதும் மட்டுமே வழியாகும். உங்கள் லௌகீகக் கடமைகளைச் செய்துவிட்டீர்கள். அங்கே இனி உங்களுக்கு வரவுசெலவுகள் இல்லை. அங்கே நிகழக்கூடிய எதற்கும் நீங்கள் பொறுப்பு இல்லை. அடுத்த ஐம்பது, நூறு வருடங்களில் நடக்கப்போகும் அனைத்தையும் நீங்கள் சரிசெய்துவைத்துவிட்டுச் செல்ல முடியாது. உங்கள் மகளின் வாழ்க்கையை நீங்கள் முழுக்க வரையறைசெய்து கொள்ள முடியாது.
கடுமையாகவே சொல்கிறேன், சிலவருடங்களுக்கு பின் நீங்கள் இறந்துவிட்ட பின்னர் இதெல்லாம் நிகழ்ந்தால் என்ன செய்ய முடியும்? எதிர்காலத்தையும் நீங்கள் சுமக்க முடியுமா என்ன? அந்தவகையான ஒரு மனவிலக்கம் உங்களுக்கு இருந்தாலொழிய நிறைவான ஓய்வுவாழ்க்கை அமையாது.
*
அந்த மனவிலக்கத்துடன் பிற ஒருவரின் பிரச்சினையாக, ஒரு சமூகப்பிரச்சினையாக மட்டுமே இதைப்பார்ப்பீர்கள் என்றால் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்கிறேன்.
ஒருமனிதர் அவருக்கு விருப்பமான மதத்தை தேர்வுசெய்ய, அதில் நிறைவைத் தேட முழு உரிமை உள்ளவர். அதில் பிறிதொருவர் தலையிட்டு அவர்மேல் அழுத்தம் கொடுப்பது தார்மீகமானதல்ல. ஆன்மீகமான முழுமை நோக்கிச்செல்ல ஒவ்வொருவருக்கும் முழு உரிமை உண்டு.
ஆனால் இது பொதுவாக மதங்களுக்கு பொருந்தும் அளவுக்கு மதக்குழுமங்களுக்கு [கல்ட்டுகள்] பொருந்தாது என்றே நினைக்கிறேன். கிறிஸ்தவம் இஸ்லாம் போன்றவை மதங்கள். கத்தோலிக்கசபை, தென்னிந்திய திருச்சபை, இரட்சணியசேனை, லுத்தரன் சபை போன்றவை அதன் கிளைகள்.
பெந்தேகொஸ்தே சபைகள், யொகோவா சாட்சி , செவெந்த் டே அட்வெண்டிஸ்டுகள் போன்றவை மதங்கள் அல்ல, வழிபாட்டுக்குறுங்குழுக்கள். இவை ஒருவகை மனநோய் வட்டங்கள் என்றே நான் நினைக்கிறேன்.
நான் வாழும் சூழலில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிறைய உண்டு. என் அண்டைவீட்டார்கூட அவர்கள்தான். இந்த அமைப்புகள் இவற்றின் உறுப்பினர்களை மூளைச்சலவை செய்கின்றன. அவர்களை மீளமுடியாத ஒரு சுழலில் சிக்க வைத்துவிடுகின்றன. அவற்றின் வழிமுறைகள் தீவிரமானவை, ஆபத்தானவையும்கூட.
முதலில், அவை அவர்களை பிறரிடமிருந்து விலக்குகின்றன. சமூக வாழ்க்கையை முற்றாக தடைசெய்கின்றன. பிறரைச் சாத்தானின் படைகளாகச் சித்தரிக்கின்றன. என் அண்டைவீட்டில் பத்து வருடங்களாகக் குடியிருக்கும் பெண்மணியின் குழந்தைகள் இன்று வரை என் குழந்தைகளுடன் ஒரு சொல் கூடப் பேசியதில்லை. விளையாடியதில்லை. பேசுவது பாவம். பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் மாலை பாவமன்னிப்பு கோரவேண்டும். பத்துவருடம் முன் என் மகன் ஒரு சொல் பேசியதற்கு அந்த அம்மையார் வந்து மனறாடினார் ‘என் மகனை பாவத்தில் ஆழ்த்தவேண்டாம் என்று உங்கள் மகனிடம் சொல்லுங்கள்’ என்று.
அந்த மதக்குழுமத்தின் நூல்கள் தவிர பிற எதையும் வாசிப்பது தடை செய்யப்படுகிறது. பிற கருத்துக்களில் இருந்து முற்றாக அவர்கள் விலக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் மூடிய கருத்துச்சூழல் ஒன்றில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் ஒற்றை நோக்கை உடைக்கும் எதையுமே அவர்கள் அறிவதில்லை.
மேலும், சாத்தான் என்ற கருதுகோள் அவர்களை அனைத்தில் இருந்தும் விலக்குகிறது. அவர்களின் தரப்பு அல்லாத எதுவும் சாத்தானே. சாத்தான் தர்க்கத்தின் அதிபன். அழகிய வாதங்கள் கொண்டவன். ஆகவே அவர்களிடம் பிறர் விவாதிக்கமுடியாது. ஏனென்றால் நமது தரப்பு எந்த அளவுக்கு நியாயமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்கள் அதை சந்தேகப்படுவார்கள். சாத்தானுக்கு ஆயிரம் முகங்கள்!
சாத்தான் உணர்ச்சிகளை பயன்படுத்துபவன். மனதைக் கரைப்பவன். ஆகவே அவர்களிடம் நாம் கெஞ்ச முடியாது, மன்றாடமுடியாது. உணர்ச்சிகளை காட்டமுடியாது. தாயோ தகப்பனோ கணவனோ மகளோ பேச முடியாது. அவற்றையும் அவர்கள் சந்தேகப்படுவார்கள். ஆம், அவர்கள் சாத்தானின் குரலில் பேசுகிறார்கள்!
அவர்களிடம் அவர்களின் மதத்தைப்பற்றிக்கூட விவாதிக்கமுடியாது. ஏனென்றால் சாத்தானுக்குத்தான் பைபிள் மிக நன்றாக தெரியும். அவன் பைபிளைத் திரிப்பதில் நிபுணன். பைபிளைப்பற்றி வேறுஎவர் பேசினாலும் அவர்கள் சாத்தானே.
இவ்வாறு எல்லா வாசல்களையும் அடைத்துவிடுகிறார்கள். உள்ளே சென்றவர்கள் மீள்வதற்கான வழிகள் மிகமிகக் குறைவு.
*
இதன்பின்னர் இவர்கள் மனித மனங்களை மெல்ல மெல்ல மழுங்கடித்து அடிமைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள். இந்த வழிமுறைகள் உலகமெங்கும் நெடுநாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு, நுணுக்கமாகப் பயிலப்பட்டு, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டவை. மேலைநாடுகளில் இவர்களை கண்காணிக்கவும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் வழிகள் உள்ளன. இங்கே இந்தியாவில் சிறுபான்மைச் சட்டங்களால் இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
உள்ளே செல்பவர்களுக்கு இவர்கள் சொல்லும் கருத்துக்களில் முதன்மையானது இன்ப மறுப்பு. எல்லாவகையான கேளிக்கைகளும், கலைகளும், பிற இன்பங்களும் பாவத்தால் ஆனவை என்கிறார்கள். எந்த அளவுக்கு இன்பத்தை மறுக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் தூய்மையாகிறார்கள். எந்த அளவுக்கு துயரத்தை அனுபவிக்கிறார்களோ அந்த அளவுக்கு மேம்படுத்தப்படுகிறார்கள்
ஆகவே இன்பங்கள் சார்ந்த குற்ற உணர்ச்சியை ஆழமாக உருவாக்குகிறார்கள். உடைகள் அணிவது, நகைகள் அணிவது , உண்பது , காதலிப்பது, புணர்வது எல்லாமே பாவமாக ஆக்கப்படுகின்றன. சொல்லப்போனால் பிரார்த்தனை செய்வதும் மதத்தை பரப்புவதும் மட்டுமே பாவமல்லாத செயல்கள். பிற அனைத்துமே பாவங்கள், தூயமைப்படுத்திக்கொள்ள வேண்டியவை.
இந்த பாவ உணர்வில் இருந்து ஒருபோதும் நீங்காத குற்ற உணர்ச்சி உருவாக்கப்படுகிறது. ஏனென்றால் எந்த மானுட மனத்துக்கும் இன்பம் தேவையாகிறது. அது ரகசியமாகவாவது இன்பத்தை அனுபவிக்கிறது. இல்லையேல் ஏங்குகிறது. ஆகவே இவர்களுக்கு குற்ற உணர்ச்சி நீங்குவதே இல்லை.
அந்தக்குற்றவுணர்ச்சியையே இவர்கள் பெரும் சங்கிலியாக மாற்றுகிறார்கள். பாவத்தைக் களைவதற்காகப் பிரர்த்தனையும் பிராயச்சித்தமும் செய்யச் சொல்கிறார்கள். அவர்களின் அமைப்புகளுக்கு கப்பம் கட்டச் சொல்கிறார்கள். பிரார்த்தனை செய்யும்தோறும் குற்றவுணர்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது. இந்த விஷ வட்டத்தைவிட்டு அவர்களின் உறுப்பினர்கள் வெளிவருவது அனேகமாக சாத்தியமல்ல.
வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு சிறிய இழப்பும், சரிவும், துக்கமும் கடவுள் கொடுத்த தண்டனை என்கிறார்கள். இவர்களின் கடவுள் கருணையே உருவான ஏசுவோ மாதாவோ அல்ல. யெகோவா போன்ற பழிவாங்கும் கோபம் மிக்க பாலைவனத்தெய்வம்தான்.
ஆரம்பத்தில் கடவுளின் கருணையைப்பற்றி, அருள் பற்றி, அந்த பரவசம் பற்றித்தான் இவர்கள் பேசுவார்கள். ஆழமாக உள்ளே சென்றுவிட்டால் பின்னர் கடவுளின் தண்டனை பற்றிய பேச்சே அதிகமாக இருக்கும். ஒரு சிறிய சபலத்தைக்கூட , ஒரு சிறிய ஐயத்தைக்கூட அறிந்து உடனடியாக தண்டிக்கக்கூடிய கடவுளை ஒவ்வொரு கணமும் அஞ்சியபடியே இவர்கள் வாழ நேர்கிறது.அந்த அச்சத்தில் இருந்து மீட்பே இல்லை. ஏனென்றால் மீட்பு என்று எண்ணுவதே கடவுளின் தண்டனைக்குரியது!
இவர்களின் வழிபாட்டுமுறை மிக ஆபத்தான மூளைச்சலவை. அது சர்ச்சுகளில் வழக்கமாக நிகழும் சொற்பொழிவு, கூட்டுப்பாடல், பிரார்த்தனை மற்றும் சில சடங்குகள் என்ற வடிவில் நிகழ்வதில்லை. கொடூரமான ஒரு கூட்டு மனவசியம் அது. அவர்கள் ஒவ்வொருவரும் அதை பிறருக்குச் செய்யக்கூடியவர்களாக ஆகிவிடுகிறார்கள். அந்த குழுவில் சேரும் புதிய ஒருவர் மிக எளிதில் அந்த மனவசியத்துக்கு ஆளாகிறார்.