New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மிஷனரிவரலாறு


Guru

Status: Offline
Posts: 24788
Date:
மிஷனரிவரலாறு
Permalink  
 


மிஷனரிவரலாறு, மதம், கடிதங்கள்


 
Save
Share10
 

அன்புள்ள ஜெ,

மிஷனரி வரலாறு என்ற ஒரு புதுச் சொல்லாட்சியை அளிக்கிறீர்கள். மிஷனரிகள் சொன்னவை எல்லாமே உள்நோக்கம் கொண்டவை என்று சொல்கிறீர்களா? அவர்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க உங்களால் முடியுமா என்ன?

ஜான் செல்வா

அன்புள்ள செல்வா,

நான் மிஷனரி வரலாறு என்று சொல்வது அந்த வரலாறு குறித்த ஓர் எச்சரிக்கை தேவை என்பதனாலேயே. அந்த வரலாற்றெழுத்தில் உள்ள மிஷனரி பார்வையை கணக்கில் கொண்டே நாம் அந்த வரலாறுகளை வாசிக்க வேண்டும் என்பதனாலேயே

மிஷனரி வரலாற்றின் அடிபப்டைகள் இவை

1. உலகை கிறித்தவ மீட்பு கொண்ட பகுதி கொள்ளாத பகுதி என பிரிக்கும் இரட்டை நோக்கு.

2. கிறித்தவ மீட்பு கொள்ளாத பகுதி என்பது இருளடைந்ததாக ஞானமும் நாகரீகமும் அற்றதாக மட்டுமே இருக்க முடியும் என்ற நோக்கு

3. ஐரோப்பியமையவாதம். ஐரோப்பிய சமூக இழிவுகளை தீங்குகளை காணாமல் இருப்பது. பிற சமூகங்களில் உள்ள சமூக தீங்குகளைக் கண்டு நீதியுணர்ச்சி எழப்பெறுவது

4 தங்கள் அறிதலின் வட்டத்துக்குள், பெரும்பாலும் மொழிபெயர்ப்பாளர்கள் வழியாக, வந்த அறிதல்களையே முழுமையான தகவல்களாக எண்ணி முன்வைப்பது

இந்த குறைகளை கருத்தில் கொன்டபின் அவர்கள் சொல்லும் தகவல்களைப் பரிசீலிப்பதில் பிழை ஏதும் இல்லை

மேலும் இன்னொரு விஷயம். மிஷனரிகள் இரு நூற்றாண்டு முன்பிருந்த மனநிலையை வெளிக்காட்டியவர்கள். அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் எல்லாம் மிஷனரிகளின் நோக்கைப்பற்றிய விமரிசனங்களை அதிகாரபூர்வமாகவே ஏற்றுக்கொன்டார்கள். ஆனால் இந்தியாவில் இப்போதும் ஒரு மதவெறி குழுவினரால் மிஷனரி வரலாறு மூர்க்கமாக முன்வைக்கப்படுகிறது. அனைத்துவகையான ஊடக சாதனங்கள் மூலமும் பரப்ப படுகிறது

அறிவியல்நியதிகளுக்கும் அறநெறிக்கும் ஒத்துவராத இந்தப்போக்கை எந்த ஓர் அறிவுஜீவியும் நிராகரித்தே ஆகவேண்டும். நியாயத்தில் மனம் ஊன்றிய கிறித்தவ அறிவுஜீவிக்கு மேலதிக கடமை உண்டு. நான் ஒரு கிறித்தவ அறிவுஜீவியின் நேர்மையை அவர் இந்த விஷயத்தில் என்ன நிலைபாடு எடுக்கிறார் என்பதை வைத்தே மதிப்பிடுவேன்

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெயமொகன்
மெல் கிப்சனின் “அபகொலிப்டோ” படம் பார்த்திருக்கிறீர்களா? ஐரோப்பிய மிஷினரிகளின் வருகைக்கு முன்பான அமெரிக்க மாயன்  பண்பாட்டை பற்றிய படம். மிகுந்த நுடபத்துடனும் சினிமா அழகியலுடனும் எடுக்கப்பட்ட ஒரு படம். ஆனால் படம் முடியும் போது அதனுள் இருக்கிற அரசியல் பிடிபடும்.
மாயன் பண்பாடு முழுக்க முழுக்க காட்டுமிராண்டிப் பண்பாடு என்கிற ஒரு சித்திரம் தான் அதில் உள்ளது. மிஷினரிகளின் வருகை அவர்களை மாற்றியிருக்கும் என்கிற ஊகத்துடன் படம் முடியும். இதே சித்திரத்தை தான் இந்திய பூகோளத்திற்கும் மிஷினரிகள் உருவாக்க முனைந்தார்களோ?
 
நாம் இன்று அறிகிற தகவல்கள் கட்டிட கலை மற்றும் இயற்கை சார்ந்த நுண்ணறிவில் மாயன் பண்பாடு மிக ஆழமானது என்பது.
 
சந்தோஷ்
அன்புள்ள சந்தோஷ் 

 

அபாகலிப்டா மிக ஆபத்தான படம். உண்மையான ‘காட்டுமிராண்டிகளை’ நவீன
மனிதர்களாகச் சித்தரிக்கும் கிறித்தவர்களின் வழக்கமான
வெறுப்புப்பிரச்சாரம் அது. பக்கம் பக்கமாக மேலைநாட்டினரே அதைப்பற்றி
எழுதித்தள்ளிவிட்டார்கள்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்
 
ஓவியர் எம்.எஃப். ஹுசைன் பற்றிய உங்கள் பார்வை என்ன? அவருக்கு எதிராக மிகப்பெரிய காம்பைன் பண்ணிக்கொண்டிருக்கிற அமைப்பின் சுட்டியை கீழே தருகிறேன்.
 
அன்புடன்
சந்தோஷ்
 



http://ensanthosh.wordpress.com/

 

சுருக்கமான ஒற்றைவரி– இந்துதாலிபானியம். இங்கே பாமியான் சிலைகளை விட ஆயிரம் மடங்குபெரிய சிலைகளை; கிருஷ்ணன் முதல் காந்திவரை வரிசையாக ஒரு பத்தாயிரம் ஞானிகளை; நிற்கவைத்துச் சுடுகிறார்கள்.
ஜெ


__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

கிறித்தவ மதமாற்ற அமைப்புகள் இந்தியா குறித்து செய்துள்ள அவதூறுப்பிரச்சாரம், அதற்காக அவை உருவாக்கும் ஒருங்கிணைந்த அமைப்பு ஆகியவற்றை பற்றி காந்தி , அம்பேத்கார் போன்றவர்கள் சொன்னவற்றின் கால்வாசி அளவுக்கு, பத்துசதவீதம் கடுமையாகக்கூட, நான் சொல்லிவிடவில்லை. அவர்கள் அதில் தெளிவாகவே இருந்தார்கள்.

பொதுவாக இந்த விஷயம் கண்ணெதிரே அப்பட்டமாக நடந்துகொண்டிருக்கிறது. நான் குமரிமாவட்டத்தில் இருப்பதனால் அனேகமாக தினமும் கிறித்தவ இதழ்களில், கூட்டங்களில் காந்தி மீது நம்பவே முடியாத அளவுக்கு மடத்தனமான அவதூறுகள் பிரச்சாரம் செய்யப்படுவதை காண்கிறேன். கிறித்தவ அமைப்புக்குள் இருந்து கொண்டு எவரும் அதற்கு ஒரு மாற்றுக்கருத்தைச் சொல்ல முடிவதில்லை. அவற்றைச் சுட்டிக்காட்டி ஆதாரபூர்வ மறுப்பைச் சொல்ல வரும் பிற எவரையும் அவர்கள் கிறித்தவ விரோதிகள், மதவெறியர்கள் என ஆள் வைத்து எளிதாக முத்திரை குத்திவிடுகிறார்கள். ஆகவே பெரும்பாலாலும்  எவரும் வாய் திறப்பதில்லை.

 

என்னைப்பொறுத்தவரை என் கருத்தைச் சொல்ல எந்நிலையிலும் தயங்கக்கூடாது என எனக்கே ஆணையிட்டிருப்பவன். எந்த முத்திரை, எப்படிப்பட்ட வசை, அவதூறு வந்தாலும் பாதகமில்லை. இனிமேல் புதிதாக எவரும் ஏதும் சொல்வதற்கில்லை, சொன்னதைத்தானே திரும்பச் சொல்லப்போகிறார்கள்  என்ற எண்ணமும் இப்போது உருவாகியிருக்கிறது. இந்த அவதூறுகளையும் முத்திரைகளையும் தாண்டி எவருக்கேனும் என் எழுத்துக்கள் ஆர்வமூட்டினால் அவர்கள் போதும் , என் வாசகர்களாக.

 

நான் எந்த அமைப்பையும் ஏற்காமல் எல்லாவற்றின் மேலும் என் விமர்சனங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.  இன்றைய காந்தி நூலுக்குப் பின் காந்திய அமைப்புகளை அறிமுகம் செய்துகொண்ட போது அவையும் எனக்கு கசப்பையே உருவாக்கின.  இது என் பிரச்சினையாகவும் இருக்கலாம். என் வாசகர்களில் ஒரு பெரும்சாரார் ஏதாவது அமைப்பை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள்.  ஆசார இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், திராவிட இயக்கத்தினர், இடதுசாரிகள்…..  அவர்கள் அந்த பிடிப்பை தாண்டிவந்து யோசிக்கவேண்டும் என நினைக்கிறேன். யோசிக்காவிட்டல் இழப்பு எனக்கில்லை.

 

புண்படுவது என்பது எப்போதும் உண்டு.  ‘ஆன்மீகம் போலி ஆன்மீகம்’ எழுதியபோது நித்யானந்தரின் சீடர்களான வாசகர்கள் புண்பட்டிருக்கிறார்கள். சத்ய சாயிபாபா பக்தர்கள் சாபங்கள் அனுப்பியிருக்கிறார்கள். இன்று என்னைப்பற்றி இணையத்தில் வரும் வசைகளில் ஒருபகுதி நான் காஞ்சி மடம் பற்றியும் சந்திரசேகர சரஸ்வதி பற்றியும் எழுதிய கருத்துக்களால் உருவானது. அதையெல்லாம் எண்ணினால் ஒருபோதும் எழுத்தாளன் எழுதமுடியாது. கருத்தே சொல்லாமலிருக்கும் யுவன் சந்திரசேகர், எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளை வாசித்து புண்படுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

 

கடைசியாக, இத்தகைய விமர்சனங்களை நான் கிறித்தவம் மேல்தான் வைப்பேன். என் கிறித்தவ நண்பர்களிடம் நேரில் இதைவிட கடுமையாக பேசுவேன். இரண்டு காரணங்கள் . ஒன்று நான் ஏசுவை என் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டவன். அது என் குரு எனக்களித்த வழிகாட்டல். என் தியானங்களில் அவர் என்றுமுண்டு. ஆகவே ஒருவகையில் மானசீகமாக நானும் கிறிஸ்தவனே. இரண்டு, நான் கிறிஸ்தவர்களை நம்புகிறேன். அவர்களிடம் விவாதிக்க முடியும் என நினைக்கிறேன். பலநூற்றாண்டுக்கால உள்விமர்சனங்கள் மூலம் வளர்ந்த ஒரு மரபு அவர்களுக்குண்டு. அவர்கள் அனைவரும் மதமாற்ற அரசியலில் இருப்பவர்களும் அல்ல.

 

இஸ்லாமிய வழிமுறைகள் சார்ந்து விமர்சனங்கள் இருந்தாலும் அவர்கள் அதை விவாதத்தில் எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.  அந்த மதத்தில் அதற்கு இடமில்லை.  அவர்கள் அதை மதத்தாக்குதலாக மட்டுமே காண்கிறார்கள்.  என் அனுபவங்களும் கசப்பானவை. அவர்களுக்கு அது உணர்ச்சிகரமான பிரச்சினை, சிநிதிப்பதற்கானது அல்ல. ஆகவெ பேசி பயனில்லை.  எவரையும் புண்படுத்துவதில் எனக்கு ஆர்வமில்லை.இதை முன்னரும் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

 

இஸ்லாம் பற்றி அந்த நம்பிக்கை காந்திக்கும் இருக்கவில்லை என்பது காந்தியின் எழுத்துக்களில் தெரிகிறது. இஸ்லாம் பற்றி அம்பேத்கார் முன்வைத்த அதே கடுமையான கருத்துக்கள்தான் காந்திக்கும் இருந்திருக்கும். காந்தி அவற்றைச் சொன்னதில்லை.

 

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

அன்னியர்கள் அளித்த வரலாறு


 
Save
Share5
 
V._S._Srinivasa_Sastri_1921.jpg

வி.எஸ்.நீலகணட சாஸ்திரி

என் வீட்டு நூலகத்தில் நானே நூல்களைத் தேடிப்பிடிப்பது ஓர் இனிய அனுபவம். வேறு எதையோ தேடிக்கொண்டிருந்தபோது அகப்பட்டது ‘தமிழக வரலாறு’. நெல்லை சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் 1954இல் வெளியிட்ட நூல்24-1-1954ல் தருமையருள்பெறு நெல்லை அருணகிரி இடைக்கழகத்தின் எட்டாம் தமிழ்த் திருவிழாவில் நிகழ்த்திய உரைகளின் தொகுதி இது. என்னிடம் வந்துசேர்ந்திருப்பது முதல்பதிப்பு. நெல்லையில் 1989இல் பழைய புத்தகக் கடையில் வாங்கி படிக்காமல் ஜோதியில் கலக்கவிடப்பட்ட நூல்

இந்த நூல் உருவான காலகட்டத்தை வைத்தே இதைப்புரிந்துகொள்ளவேண்டும். சுதந்திரப்போராட்ட அலை ஓய்ந்தபின்னர் ஒவ்வொரு இந்திய மொழிவட்டாரமும் தன்னை ஒரு தனித்த கலாச்சார தேசியமாக உருவகித்து வளர்த்தெடுக்க முயன்ற காலகட்டம் இந்தியாவெங்கும் ஏறத்தாழ. ஒரேகாலகட்டத்தில்தான் இது நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முக்கியமாக நான்கு படிகள் உள்ளன.

image002.jpg

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

ஒன்று, ஐரோப்பிய அறிஞர்கள் ஒருமொழியின் தனித்தன்மையை கண்டறிந்து நிறுவுதல். தமிழில் வீரமாமுனிவர், எல்லிஸ், கால்டுவெல் என ஒரு வரிசை ஐரோப்பியத்தமிழறிஞர்களால் தமிழின் தனித்தன்மை நிறுவப்பட்டது. மலையாளத்தில் இதே பணியை ஹெர்மன் குண்டர்ட் ஆற்றினார்

இரண்டு, ஆங்கிலக்கல்வியும் அச்சுமுறையும் உருவாக்கிய விழிப்புணர்ச்சி காரணமாக பழைய நூல்களை அச்சுக்குக் கொண்டுவரும் இயக்கம். தமிழில் உவே.சாமிநாதய்யர், சி.வை. தாமோதரம்பிள்ளை, சௌரிப்பெருமாள் அரங்கன் போன்றபலரால் இவ்வியக்கம் முன்னெடுக்கப்பட்டது

மூன்று, வட்டாரமொழிகளில் தனித்த நவீன இலக்கிய இயக்கம் உருவாகி வலுப்பெறுதல். தமிழில் பாரதியைப்போல மலையாளத்தில் குமாரனாசானையும் வள்ளத்தோளையும் கன்னடத்தில் குவெம்புவையும் குறிப்பிடலாம்

Sathasiv+Pandarathar.jpg

சதாசிவப் பண்டாரத்தார்

நான்கு, சுதந்திரத்திற்குப்பின்னர் உருவான கலாச்சார சுயத்தேடல். இந்தியா மொழிவழி மாநிலங்களாக பிரிந்தபோது உருவான எண்ண ஓட்டம் இது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனிவரலாறு, தனிக்கலைமரபு, தனிப்பண்பாட்டுக்கூறுகள் என ஒவ்வொன்றாக உருவகித்து நிலைநாட்டப்பட்டன. ஆயிரத்து எண்ணூறுகளின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்பதிப்பியக்கம் தமிழ்நூல்களை புத்துயிர் பெறச்செய்தது என்றால் இந்த இரண்டாவது இயக்கம் அந்நூல்களில் இருந்து இன்றும் நாம் பேசிக்கொண்டிருக்கும் வரலாற்று, பண்பாட்டு கருத்துருவாக்கங்களை திரட்டி எடுத்து முன்வைத்தது

அந்தக்காலகட்டத்தில் தமிழில் இந்நோக்குடன் பல்லாயிரம் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. செந்தமிழ்ச்செல்வி போன்ற இதழ்கள் அவ்வியக்கத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன. பதிப்பகம் என்றவகையில் அதில் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் பங்களிப்பு மிகமுக்கியமானது. இந்நூலும் அதில் ஒன்று

இந்நூலை இன்று வாசிக்கும்போது அன்று எப்படியெல்லாம் வரலாற்று உருவாக்கம் நிகழ்ந்திருக்கிறது என்பதை ஊகிக்கமுடிகிறது. இந்நூல் முழுக்கமுழுக்க தமிழாசிரியர்களால் உருவாக்கப்பட்ட வரலாற்று நூல் என்பது சுவாரசியமான விஷயம். அன்றைய தமிழக வரலாற்று ஆய்விலும் வடிவாக்கக்கத்திலும் தமிழாசிரியர்களுக்கு முக்கியமான பங்களிப்பு என ஏதுமில்லை. வரலாற்றாய்வுக்கான முறைமையோ அடிப்படைத்தேவையான சமநிலைப்பார்வையோ தமிழாசிரியர்களிடமிருக்கவுமில்லை. அவர்கள் தமிழின்பெருமையை நிலைநிறுத்தும்பொருட்டு தமிழ்வரலாற்றை கற்றவர்கள். ஆனால் அவர்களே இன்றும் புழக்கத்தில் இருக்கும் தமிழ்வரலாற்றுச் சித்திரத்தை மக்களிடையே நிலைநாட்டியவர்கள். அது எப்படி நிகழ்ந்தது என்பதற்கான சான்றாக இந்நூலைக் கொள்ளலாம்.

நூலுக்கான அணிந்துரை இராம கனகசபாபதிப்பிள்ளை- நெல்லை அருணகிரி இசைக்கழக அமைச்சர். முன்னுரை, பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை. சங்ககலம் பற்றி மண்டித வித்வான் தா.மாசில்லாமனிநாடார் எழுதியிருக்கிறார். பல்லவர்காலம் வ. பொன்னுச்சாமிப்பிள்ளை -துணைத்தலைவர் ம.தி .தி.தா. இந்துக்கல்லூரி திருநெல்வேலி. சோழர்காலம் ரெ.சேஷாசலம் .பாண்டியர்காலம் அவ்வை ஞா. துரைசாமிப்பிள்ளை -சாஃப்டர் உயர்நிலைப்பள்ளி திருநெல்வேலி . நாயக்கர்காலம் ஆ.செபாரத்தினம்- தூய யோவான் கல்லூரி பாளையங்கோட்டை . ஆங்கிலேயர் காலம், சிவ இராமச்சந்திரன் -ம தி தா இந்துக்கல்லூரி திருநெல்வேலி.

Ka%2Bappathurai.jpg

கா. அப்பாத்துரை

முன்னுரையிலேயே தங்கள் நோக்கம் தமிழர்களுக்கு ‘ஒளிமிக்க’ வரலாற்றை கண்டு அளிப்பதுதான் என சொல்லிவிட்டே ஆரம்பிக்கிறார்கள். ‘வரலாறு கண்ட முதல் நிலம் தமிழகம். ஆனால் நாம் அதற்கு இன்னும் முழுதுறழ் வரலாறு காணவில்லை. அது எந்நாட்டுக்கும் முற்பட்ட, எந்நாட்டையும் விட நீடித்த தொடச்சியான வரலாறு உடையது’ என ஆரம்பிக்கிறார் கா.அப்பாத்துரை. அனேகமாக அத்தனை தமிழறிஞர்களும் இதே முன்முடிவை முதலில் சொல்லிவிட்டே பேச ஆரம்பிக்கிறார்கள்.

மாசில்லாமணி நாடார் மட்டும் விதிவிலக்கு. அவர் விவிலியத்தின் தொன்மையில் இருந்து ஆரம்பிக்கிறார் ‘வானும் வளியும் நெருப்பும் நீரும் நிலமும் முறையே தோன்றின’ என விவிலியத்தை ஆதாரம் காட்டி விளக்கும் நாடார் ‘நிலம் தோன்றிய காலத்தே உடன் தோன்றியது தமிழகம்’ என வரையறைசெய்கிறார் ஒப்புநோக்க சமநிலை கொண்ட வரலாற்று நோக்கு என்பது வ.பொன்னுச்சாமிப்பிள்ளை பல்லவர் காலம் பற்றி எழுதியது மட்டுமே.

அக்காலத்திலேயே தமிழகத்தின் வரலாற்று வரைபடம் முன்னோடி தமிழ் வரலாற்றாய்வாளர்களான ஜெ.எச்.நெல்சன், நீலகண்டசாஸ்திரி, சதாசிவப்பண்டாரத்தார், சத்தியநாதய்யர் போன்றவர்களால் எழுதப்பட்டுவிட்டது. அந்த வரலாற்றுவரைபடத்தில் இன்றுவரை நம் வரலாற்றாய்வாளர்கள் மேலதிகமாக எதையும் எழுதிச்சேர்க்கவுமில்லை. சில கள ஆய்வுகள் மட்டுமே மேலதிகமாக நிகழ்ந்துள்ளன. இந்நூல் அந்த முன்வரைவை அப்படியே எடுத்துக்கொண்டு, அந்த தரவுகளை ஏராளமான கற்பனைகளுடன் கலந்தும், விருப்பப்படி விளக்கியும் இடைவெளிகளை வெறும் ஊகங்களால் நிரப்பியும், ஒரு தமிழ்ப் பொன்னுலக வரலாற்றை உருவாக்க முயல்கிறது.

இந்நூல் முழுக்க கால்டுவெல், ஹீராஸ்பாதிரியார் முதலியவர்கள் கிட்டத்தட்ட மறுக்கமுடியாத வரலாற்று மாமேதைகளாக முன்வைக்கப்பட்டு அனைத்து ஆய்வுகளும் அவ்வெளிச்சத்திலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன. குமரிக்கண்டம், லெமூரியா போன்றவை எல்லாம் உறுதிசெய்யப்பட்ட வரலாறாகவே எழுதப்பட்டுள்ளன.

இன்றுவரை தமிழ்வரலாற்றை நிதானமான பார்வையில் எழுதமுடியாமல் தடுக்கும் நோய்க்கூறுகளாக உள்ளவை அனைத்தும் இச்சிறுநூலில் உள்ளன. பல்லவர்காலம் பற்றிப்பேசும் பொன்னுச்சாமிப்பிள்ளை ‘பல்லவர்காலம் தமிழர் வரலாற்றில் மிக முதன்மைவாய்ந்ததொரு காலமாகும். தமிழகம் தமிழகமாக உருவான காலகட்டம் அது’ என்கிறார்

Avvai_duraisamy_pillai.jpg

அவ்வை துரைசாமிப்பிள்ளை

ஆனால் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் முன்னுரையில் ’இதன்கண் நம் பழந்தமிழகத்தில் ஆட்சி செலுத்திய சேர சோழ பாண்டிய மன்னர்களின் செங்கோல் மாட்சிச்சிறப்பும்,பிற்கால பல்லவர் நாயக்கர் ஆட்சிநிலைகளையும், அப்பால் ஆங்கிலேயர் ஆட்சித்தன்மைகளையும்’ இந்நூல் விளக்குகிறது என்கிறது பல்லவர்களும் நாயக்கர்களும் அன்னியர்கள் என்ற பிரக்ஞை, அவர்களின் ஆட்சிக்காலச் சாதனைகளை பின்னுக்குத்தள்ளி மூவேந்தர்களை மட்டுமே கொண்டு ஒரு தமிழ்பொன்னுலக வரலாற்றை உருவாக்கும் முனைப்பு அன்று முதல் வலுவாக நீடிக்கிறது.

இதன் நீட்சியே நாயக்கர்கள் பற்றிய ஆ.செபாரத்தினம் அவர்களின் கட்டுரை. அப்பட்டமான இனவெறுப்பு மட்டுமே கொண்ட எழுத்து. ‘திராவிட நாடுகள் நாயக்கர் காலத்தில் பிளவுபட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில் மீண்டும் ஒருவாறு சேர்க்கப்பட்டன. இப்போது மீண்டும் பிரிந்து இயங்குகின்றன. ஆனாலும் திராவிடர் என்ற போர்வையில் நாயக்கர் இயக்கம் ஒன்று தமிழகத்தில் நிலவுகிறது. அண்மையில் நெல்லையில் நடந்த சென்னைமாகாணத் தமிழ்ச்சங்க மாநாட்டிலே புலவர் அவைக்கு தலைமைதாங்கிப்பேருரை நிகழ்த்திய நாவலர் சோமசுந்தர பாரதியார் தற்காலத்தில் தமிழுக்கு அயலான நாயக்கர் ஒருவர் தமிழ் மக்களுடைய எழுத்துக்களையும் இலக்கியங்களையும் சிதைக்க முன்வந்திருப்பதை எடுத்துரைத்தது இங்கே நினைக்கற்பாலது. மொழியழித்த சமூகம் எங்கேனும் வாழ்ந்ததுண்டோ?’ என்று தன் கட்டுரையை முடிக்கிறார்

அவர் சொல்லும் திராவிட நாடுகள் வரலாற்றுக்காலம் முழுக்கவே தனித்தனி நாடுகளாகவே இயங்கின என்றும் சாதவாகனப்பேரரசுக்குப்பின் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் மட்டுமே அவை ஒருகுடைக்கீழ் ஆளப்பட்டன என்றும் தென்னகத்தின் அத்தனை கலாச்சாரச் சின்னங்களும் நாயக்கர்களின் கொடைகளே என்றும் அவர்கள் இல்லையேல் அத்தனை கலாச்சாரச் சின்னங்களும் அழிந்து வட இந்தியாபோல ஆகியிருக்கும் தமிழகமும் தென்னாடும் எனறும் எவரேனும் அன்று சொல்லியிருப்பார்களா? வெள்ளையர்கள் திராவிடத்தை ஒன்றுசேர்த்த புண்ணியவான்கள் என்ற செபாரத்தினத்தின் கூற்றை எவரேனும் மறுத்திருப்பார்களா?

அன்றுமுதல் இன்று வரை தமிழறிஞர்கள் அன்னியர்களைக் கண்டுபிடிப்பதன் வழியாகவே தங்கள் பண்பாட்டுசெயல்பாட்டை நிகழ்த்தியிருக்கிறார்கள். அன்னியர்களை களப்பிரர் காலம் வரைக்கும் சென்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அன்னியர்களைக்கொண்டு தமிழகத்தை வரையறைசெய்ய முயலும் ஒரு வரலாற்று நூல் என இதைச் சொல்லமுடியும்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard