அன்புள்ள ஜெமோ,
முதலில் கீழ்க்காணும் செய்திக்கட்டுரையை ஒருமுறை படித்துவிடவும் (இதுவரை உங்கள் கண்ணிற்பட்டிராவிட்டால்).
Annihilation of Caste என்ற சிறுநூலை வாசித்துள்ள எளிய ஒருவராலேயே சட்டென அடையாளங்கண்டுகொள்ளப்பட்டுவிடமுடியும் என்ற அளவுக்கான ஒரு புளுகுமூட்டைக் கட்டுரையை எப்படி அரவிந்தன் நீலகண்டன் இத்தனைத் துணிவாக எழுதியிருக்கிறார்! சொல்லப்போனால் அவரது எழுத்தை நம்பிப் படிப்பவர்களுக்கு இழைத்துள்ள துரோகம். தன் பிற கட்டுரைகள், ஆய்வுகள்மீதும் ஐயத்தையும் நம்பிக்கையின்மையையும் கொள்ளச்செய்யும் என்ற அளவில், அவர் தனக்குத்தானே செய்துகொண்ட துரோகமுங்கூட எனலாம்.
இத்தனைத் தில்லாலங்கடிகள்செய்து அம்பேத்கரை இந்துமதத்தின்மீது soft corner கொண்டவர்போலவும் இஸ்லாம், கிறித்தவத்தைத்தான் அவர் மிகுதியாக வெறுத்தாரெனவும் காட்டுவதற்கு வலதுசாரி அறிவுஜீவிகள் ஏன் அண்மைக்காலமாக மும்முரம் காட்டுகிறார்கள்?
செய்வதை கொஞ்சம் மெனக்கெட்டு ஒழுங்காகச் செய்தாலும் பரவாயில்லை. பெரிய அம்பேத்கரிய ஆய்வாளர்தான் என்றில்லாமல் அடிப்படையான ஒருசில கட்டுரைகள், சிறுநூல் படித்தோரே கிழித்துத் தோரணங்கட்டி அம்பலப்படுத்திவிடுமளவுக்கு அசட்டையான செயல். பச்சையான திரிபுகளும், பலவற்றைத் தன்சார்புக்கேற்ப out of contextஇல் எடுத்துப் பயன்படுத்துவதுமுமாக ஒரு கட்டுரை.
தாங்கள் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்? தங்களது எண்ணங்களையும் அறியவேண்டுகிறேன்.
நன்றி.
அருண்குமார் சூரியமூர்த்தி
***
அன்புள்ள அருண்,
அரசியல்தரப்புக்களை எடுத்துக்கொண்டு முழுமூச்சாக விவாதிப்பவர்களின் எல்லா வாதங்களும் இத்தகையவையே.
அம்பேத்கர் எழுந்திய பல ஆயிரம் பக்கங்களில் இருந்து ’சாதி ஒழிப்பு’ ‘காந்தியும் காங்கிரசும் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்தது என்ன?” என்னும் இரு சிறுநூல்களை மட்டும் அம்பேத்கரின் அறிவுத்தரப்பாக இந்தியா முழுக்க கொண்டுசென்ற ஓர் அரசியல்ச் செயல்பாடு எழுபதுகள் முதல் இங்கே நாற்பதாண்டுகளாக நிகழ்ந்தது. அந்நூல்களை அம்பேத்கரின் அறிவுச் செயல்பாட்டுப் பரப்பில் இருந்து பிரித்துத் தனித்துக் காட்டுவதைப்போல மாபெரும் திரிபுவேலை பிறிதில்லை.
அம்பேத்கரின் கருத்துக்களின் வரலாற்றுப்பின்புலம், அவருடைய உணர்வுநிலைகள் அந்நூல்கள் உருவான சூழல் ஆகிய அனைத்தையும் தவிர்த்துவிட்டு அந்நூல்கள் அவருடைய கொள்கைப்பிரகடனங்கள் என்றே முன்வைக்கப்பட்டது இத்தரப்பால். அவ்விரு நூல்களின் வரிகளில் இருந்து மேலும் அவருடைய கருத்துக்களைத் திரித்து அவர் மதமாற்றத்தை ஊக்குவித்தார் என்றும் , ஆகவே கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களுக்கு தலித்துக்கள் மாறவேண்டும் என்றும் [கவனிக்க பௌத்தமதத்திற்கு அல்ல] வாதிடும் அறிவுஜீவிகளின் மிகப்பெரிய அணி ஒன்று இங்கே உருவானது.
அம்பேத்கர் கிறித்தவ ,இஸ்லாமிய மதங்களை விரிவாக நிராகரித்தே பௌத்தத்தை தழுவ முன்வந்தார் என்பதை இவர்கள் மழுப்பிவிடுகிறார்கள். அவருக்கு கிறித்தவ மதத்தின் நிறுவன அமைப்புமேல் ஆழமான ஐயம் இருந்தது. இஸ்லாம் மீது மேலும் கடுமையான கண்டனங்கள் இருந்தன. அவற்றை அவர் மிகவிரிவாக, தெளிவாக பதிவுசெய்திருக்கிறார். ஆனால் அம்பேத்கர் கிறித்தவ இஸ்லாமிய மதங்களை கறாராக அணுகி நிராகரித்தார் என்பதையே ஓர் அறிவுச்சமூகம் முழுமையாக மறைத்தது. கூடுமானவரை திரித்தது.
காரணம் தலித்துக்களை மதம் மாற்ற முனையும் கிறித்தவ , இஸ்லாமியத் தரப்பின் ஆதரவை அது நாடி நின்றது. கேசவ குகா கூட இச்சிறு கட்டுரையிலேயே அந்தத் திரிபுகளைச் சாமர்த்தியமாகச் செய்கிறார். அம்பேத்கர் ஒரு கடுமையான எதிர்வினையில் இந்துமதத்தின் ஒடுக்குமுறையுடன் ஒப்பிடுகையில் கடந்தகாலத்தில் நிகழ்ந்த கிறித்தவ இஸ்லாமிய மதங்களின் கட்டாயமதமாற்றம்கூட தலித்துக்களுக்கு நல்லதே செய்தது, அவர்களை அது அவர்களின் சூழலில் இருந்து விடுவித்தது எனலாம் – என்று சொல்வதை தலித்துக்களுக்கு அம்பேத்கரின் பரிந்துரை அது என்று காட்ட முயல்கிறார்.
கேசவ் குகா போன்றவர்களின் தரப்பு எப்போதுமே சுற்றிச்சுற்றி ‘மதமாற்றத்தை அம்பேத்கர் ஊக்குவித்தார்’ என்னும் ஒற்றைப்புள்ளியிலேயே தான் சென்று நிற்கும். அவருக்கு பௌத்தம் என்ன, அம்பேத்கர் கூட ஒரு பொருட்டு அல்ல.
இவர்களின் தரப்புக்கு நேர் எதிராக அரவிந்தன் நீலகண்டனின் தரப்பு மிகச்சமீபகாலமாக எழுந்து வந்துள்ளது. அது அம்பேத்கர் இஸ்லாம் குறித்துச் சொன்ன மிகக்கடுமையான விமர்சனங்களை, நிராகரிப்புகளை எடுத்து தொகுத்து முன்வைக்கிறது. கிறித்தவத்தின் நிறுவன அமைப்பு குறித்த அவருடைய விமர்சனங்களை தொகுக்கிறது. அவற்றின் விவாதச்சூழலில் இருந்து வெட்டி மேற்கோள்களாக எடுக்கிறது. அதாவது முதல் தரப்பு செய்த அதே செயல்களை அதே பாணியில் இவர்களும் செய்கிறார்கள்.
அம்பேத்கர் இந்துமதத்தை அதன் சாதிய அடிப்படையின்பொருட்டு, அதன் கொள்கையாளர்கள் சாதியை விட்டுவிட பிடிவாதமாக மறுத்தமையினால் கசப்புற்றுதான் நிராகரித்தார். கிறித்தவ இஸ்லாமிய மதங்களின் அடிப்படைகளை நிராகரித்த அம்பேத்கர் இந்துமதத்தின் மெய்ஞானத்தையோ தத்துவத்தையோ நிராகரிக்கவில்லை, பௌத்த தரப்பில் நின்று மறுத்துவாதிடுகிறார்.
அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துத்துவர்களின் சிக்கல் அடுத்தபடிக்குச் சென்று இந்துமதத்தை மட்டும் அல்ல இந்துத்துவ அரசியலையே அம்பேத்கர் அப்படியொன்றும் நிராகரிக்கவில்லை என்று காட்டுவது எப்படி என்றுதான் ஆகவே இந்த மேற்கோள்திரிபு
அரசியல்தரப்புகள் எதுவானாலும் மேற்கோள்களைக் கொண்டு விளையாடுவதையே தங்கள் வழிமுறையாகக் கொண்டிருக்கும். ஏனென்றால் அரை உண்மையை வாதத்திறன் மூலம் முழு உண்மையாக ஆக்க அவர்கள் முயல்கிறார்கள். இதில் கேசவ குகா போன்றவர்களின் தரப்புக்கு அரைநூற்றாண்டு பயிற்சி உண்டு என்பதனால் நுட்பமாக , கூட்டாக அதைச் செய்கிறார்கள். இவர்கள் மூர்க்கத்துடனும் வேகத்துடனும் ஒற்றைக்குரல்களாக இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள்.
அரவிந்தன் நீலகண்டன் காந்தி, நேரு குறித்தெல்லாம் இதேபோன்று இந்துத்துவ அடிப்படைவாதத்தின் கசப்பை கொட்டியிருக்கிறார். திரிபுகள் செய்திருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால் இன்று இதற்கு மறுபக்கமாக நிற்கும் நம் இடதுசாரித்தரப்பும் அரவிந்தன் நீலகண்டனும் அங்கே ஒன்றாகவே ஒலித்தனர் என்பதுதான். காந்தி குறித்து இடதுசாரிகள் சொல்லாத திரிபா என்ன?
இத்தகைய மேற்கோள்போருக்குள் செல்வது நம்மை இன்னொரு அரசியல்தரப்பாக ஆக்கிவிடும், நாமும் அதையே செய்யவேண்டியிருக்கும். பொதுவாசகன் இருதரப்பையும் கவனிப்பதும், அவனுடைய தர்க்கத்துக்கும் அறவுணர்வுக்கும் உகக்கும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதுமே உகந்தது.மேற்கோள்களை மயிரிழைபிரித்து மெய் நோக்கிச் செல்லவேண்டியதில்லை. சுதந்திரமான நியாய உணர்வு மட்டுமே போதும்.
ஜெ