அன்புள்ள ஜெ,
இந்தக்கருத்தை உங்கள் மீதான மாற்றுக்கருத்தாக முன்வைக்கவில்லை. எனக்கு தமிழக அரசியலில் அந்த அளவுக்கு பழக்கம் இல்லை. நான் பிறந்ததே எண்பத்திரண்டில்தான். ஆனால் வழக்கமாக கேள்விப் படும் சில விஷயங்களை தெளிவுப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன். திராவிட இயக்கத்தவரின் மேடைகளில் சொல்லப் படும் கருத்துக்கள்தான்.
அதாவது தமிழகத்தின் எல்லைகளை பாதுகாப்பதில் ராஜாஜியும் காமராஜும் தோல்வியடைந்து விட்டார்கள். காமராஜ் கவனக் குறைவாக இருந்த காரணத்தால்தான் பீர்மேடு,தேவிகுளம் பகுதிகள் பறிபோயின. முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. ராஜாஜி திருப்பதியை தமிழகத்தில் இருந்து பிரிக்க விட்டார். வட வேங்கடம் என்று சொல்லப் படும் தமிழக எல்லை இதனால் இல்லாமலாகியது. திராவிட இயக்கத் தலைவர்களான மபொசியும் பெரியாரும் சேர்ந்து போராடியதனால்தான் தமிழக எல்லைகள் இந்த அளவுக்காவது மீட்கப் பட்டன. இதெல்லாம் பரவலாகச் சொல்லப் படுகிறது.
அதேபோல ராஜாஜி பதவி வெறி கொண்டு தமிழகத்தில் கட்சிமாறல்களையும் ஊழலையும் அறிமுகம் செய்தார் என்கிறார்கள். ராஜாஜி தமிழகத்தில் குலக்கல்வி திட்டத்தைக் கொண்டுவந்து தகப்பனின் தொழிலையே மகனும் செய்தால் போதும் என்றார் என்கிறார்கள். ராஜாஜியின் ஆட்சி உண்மையில் அப்படிப்பட்டதா என்ன? உங்களுடைய கருத்து என்ன?
கெ.செல்வம்
அன்புள்ள செல்வம்
இதே கேள்விக்கு மூன்றாவது முறையாக பதில் அளிக்கிறேன் என நினைக்கிறேன். இந்த இணையதளத்திலேயே சுருக்கமான பதில்கள் உள்ளன. இன்னொரு நண்பருக்கு எழுதிய விரிவான கடிதத்தை உங்களுக்காக மீண்டும் அளிக்கிறேன். நீங்கள் சொல்லும் இந்த வரலாற்றுத்திரிபுகள் தொடர்ந்து பல்லாண்டுக்காலமாகச் சொல்லிச் சொல்லி நிலைநாட்டப்பட்டுள்ளன. அவற்றை எதிர்க்கும் அளவுக்கு காங்கிரஸ் தரப்புக்கு அக்கறையோ குரலோ இல்லை.
முதலில் ஒரு எளிய தகவல். மபொசி திராவிட இயக்கத்தவர் அல்ல.அவர் காங்கிரஸ்காரர். நாற்பதுகளில் திராவிட இயக்கத்தின் மேடைத் தமிழ்முழக்கத்துக்கு பதிலடியாக காங்கிரஸ் தரப்பில் உருவாக்கப்பட்டவர். திராவிட இயக்கத்தின் தேசிய-ஆன்மீக எதிர்ப்புக்கு மேடைமேடையாகப் பதிலடிகொடுத்தவர். அவரது தமிழரசுக்கழகம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டு அதன் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்டது.
சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே தமிழ்நாட்டில் தமிழ்ப்பெருமிதமும் தமிழ்த்தேசியம் பற்றிய ஆர்வமும் ஆரம்பமாகிவிட்டது. காங்கிரஸுக்குள்ளேயே அதற்கு ஆதரவிருந்தது. இளைஞர்களை அது கவர்ந்தும் வந்தது. ஆகவே காங்கிரஸ் தன்னுடைய தேசியப்பார்வையை கைவிடாமல் தமிழ்ப்பெருமிதத்தை கையாள நினைத்தது. தமிழ்த்தேசியத்தை இந்திய தேசியத்தின் ஒரு பகுதியாக முன்வைக்க நினைத்தது. இதன் பொருட்டே ம.பொ.சியின் தமிழரசுக்கழகம் 1946ல் தொடங்கப்பட்டது.
அதற்கு அரசியலதிகாரம் சார்ந்த ஒரு நோக்கும் உண்டு. அன்றைய அதாவது ஒருங்கிணைந்த சென்னைமாகாண [Madras Presidency] நிர்வாகத்தில் ஆந்திரர் ஆதிக்கம் அதிகமிருந்தது. கேரளர்களின் ஆதிக்கமும் இருந்தது. அதற்குக் காரணம் சென்னைமாகாணத்தின் அதிகமான நிலப்பரப்பு ஆந்திராவிலேயே கிடந்தது. மக்கள்தொகையும் அங்கேதான் அதிகம். வரிவசூலும் அங்கேதான் அதிகம். ஒரிசாவரைக்குமான கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகள் முழுக்க சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவை.
ஆகவே சுதந்திரத்தை ஒட்டி உருவாகிவந்த அரசியல் அதிகார ஆட்டத்தில் ஆந்திரர்களை வெல்லவேண்டிய தேவை காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு இருந்தது. அவர்கள் தேசியவாதிகளாகையால் நேரடியாக இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான எதையும் பேச முடியாது. ஆகவே உருவாகி வந்த அமைப்புதான் ம.பொ.சியின் தமிழரசுக்கழகம்.
ம.பொசி என்ற மனிதரும் அவரது இயக்கமும் தெலுங்கு ஆதிக்கத்துக்கு எதிராக சத்யமூர்த்தியாலும் பின்னர் ராஜாஜியாலும் முன்வைக்கப்பட்டவர்கள் என்பதே நானறிந்த வரலாறு. சுதந்திரம் கிடைத்த பின்னர் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது எல்லைப்பிரச்சினைகளில் காங்கிரஸ் நேரடியாக தலையிடக்கூடாது என்பதற்காக தமிழகரசுக்கழகம் காங்கிரஸின் குரலாக ஒலித்தது. மத்திக்கு பதில்சொல்ல தேவையில்லாதவராக இருந்த ம.பொ.சி மொழிப்பிரச்சினையை மேடைகளில் உக்கிரமாக நிகழ்த்தினார்.அது காங்கிரஸின் அரசியல் ராஜதந்திரமும் கூட. அந்தக்குரல் திராவிட இயக்கத்தினரின் குரல்களைவிட ஓங்கி ஒலித்தது
ம.பொ.சிக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருந்ததில்லை. அவர் ஒரு மேடைக்குரல் மட்டுமே. அவரது ஆதரவு வட்டம் காங்கிரஸால் ஆனது. திருத்தணி-சென்னை ஆகியவற்றை ஆந்திரர்களிடமிருந்து பெற்று தமிழகத்துடன் இணைப்பதற்காக தமிழக காங்கிரஸ் நடத்திய பதிலிப் போரின் முக அடையாளம் அவர், அவ்வளவுதான். அவர் முன்னிறுத்தப்பட்டமைக்கு காரணம் அப்போது பக்கத்து மாநிலங்களிலும் காங்கிரஸே பதவியில் இருந்தது என்பதுதான்.
இதேபோல குமரியில் திருவிதாங்கூர் காங்கிரஸ் என்ற தனி அமைப்பு நேசமணி தலைமையில் உருவாக்கப்பட்டு ‘காங்கிரஸின் கட்டளையை மீறி’ கேரளகாங்கிரஸுடன் எல்லைக்காகப் போராடியது. அவர்கள் தமிழகக் காங்கிரஸால் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் குமரிமாவட்டம் பிரிந்து வந்து தமிழகம் உருவானதும் பத்திரமாக அவர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸில் வந்து காமராஜின்கீழே சேர்ந்துகொண்டனர். நேசமணி பின்னர் காங்கிரஸில் பல தலைமைப்பொறுப்புகளை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினரும் ஆனார்.
உண்மையில் தமிழகத்தின் இன்றைய எல்லையை உருவாக்கியவர்கள் ராஜாஜியும் காமராஜரும்தான். அதில் காமராஜரின் இந்த ‘பதிலிப்போர்’ பெரிய வெற்றி பெற்றது. அந்த தந்திரம் கேரளத்துக்கும் கர்நாடகத்துக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது கேரளம் திருவிதாங்கூர் -கொச்சி- மலபார் எனமூன்று பகுதிகளாக இருந்தது. ஒட்டுமொத்த கேரளத்திற்குமான தலைவர்களும் அரசியலும் இருக்கவுமில்லை. கேரளம் ஒருங்கிணைந்த கேரளமாக ஆகி, ஒரு மாநிலஅடையாளம் பெற்றதே 1956ல் வந்த மாநில மறுசீரமைப்புப் சட்டத்துக்குப் [ States Reorganization Act of 1956] பின்னர் தான்.
ஆகவே காமராஜ் கிட்டத்தட்ட ஒருதலைபட்சமான வெற்றிகளைப் பெற்றார் என்பதே உண்மை. வேறெந்த தலைவரும் வேறெந்த அரசியல் சூழலிலும் எல்லைப்பிரச்சினைகளில் காமராஜ் அடைந்த ராஜதந்திர வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. தமிழகத்தில் அதற்குப்பின் வந்த எந்த தலைவரும் பக்கத்துமநிலங்களிடம் பேச்சுவார்த்தைமூலம் எந்த வெற்றியும் பெற்றதாக வரலாறே இல்லை. இழந்தவை எண்ணற்றவை.
மொழிவாரி பிரிவினைக்கு அடிப்படையாக முன்வைக்கப்பட்ட அளவுகோல் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் அதிகமாக தொன்றுதொட்டு வாழ்ந்துவந்தார்கள் என்றால் அந்த நிலப்பகுதிகளை இணைத்து ஒரு மாநிலம் என்பதே. அந்த அளவுகோலின்படி சிக்கலாக அமைந்தவை தமிழ்-மலையாளம் இருமொழிகளும் ஏறத்தாழ சம அளவில் பேசப்பட்ட கன்யாகுமரி, செங்கோட்டை, பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகள்.
பேச்சுவார்த்தையில் பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு போன்றபகுதிகளை விட்டுக்கொடுத்துத்தான் கன்யாகுமரிமாவட்டத்தை ஒட்டுமொத்தமாகப் பெற்றார் காமராஜ். நான்கு பெரிய அணைகள், பதினெட்டு சிறிய அணைகள், மூன்று மீன்பிடித்துறைமுகங்கள் மூன்று மழைக்காலம், 60சதவீத நிலம் மழைக்காடுகள் கொண்ட மாவட்டம் இது. ஒட்டுமொத்த தமிழக நிதிவருவாயில் கிட்டத்தட்ட 20 சதவீதம் அளிக்கும் மாவட்டம்.
இதில் மலையாளம் பேசும் பெரும்பான்மையினரைக் கொண்ட பகுதிகள், அதாவது தர்க்கபூர்வமாக பார்த்தால் கேரளத்துக்குச் சொந்தமான பகுதிகள், 40 சதவீதம். இன்றைய விளவங்கோடு கல்குளம் வட்டங்கள். அப்பகுதிகளிலேயே அணைகள் அமைந்திருந்தன. அந்த அணைகளை தமிழகத்தில் இருந்து விட காமராஜ் விரும்பவில்லை. ஆகவே காமராஜ் அப்பகுதிகளுக்காகவும் போராடினார். பாலக்காட்டைச்சேர்ந்த இருமேனன்கள் அன்று மத்தியஅரசின் மையப்பொறுப்புகளில் இருந்தார்கள் .தங்கள் மாநிலம் கேரளத்தில் சேரவேண்டுமென்ற அவர்களின் தனிப்பட்ட ஆசையை காமராஜ் பயன்படுத்திக்கொண்டார்.
கேரளத்தில் இருந்து தமிழகம் செங்கோட்டையை பெற்றது. அதேபோல ஊட்டி மேற்குமலைச்சரிவை. இந்த நிலங்கள் மழைப்பிடிப்புபகுதிகள் என அன்று காமராஜுடன் இருந்தவர்கள் அறிந்திருந்தார்கள். இவ்விரு பகுதிகள் இங்கே வந்தமையால்தான் தாமிரவருணியின் அணைகளும், குந்தா போன்ற அணைகளும் நமக்குச் சாத்தியமாகின. முல்லைப்பெரியாறு அணைப்பகுதி ஏன் தமிழகத்துடன் வரமுடியாது என்றால் அந்த அணையின் நீர்ப்பிடிப்புபகுதி, நீர் வழியும்பகுதி முழுக்கமுழுக்க மலையாளிகள் வாழும் கேரளநிலத்தில் உள்ளது. அந்த பகுதியில் தமிழர் எண்ணிக்கை 05 சதவீதம் மட்டுமே. எந்த அடிப்படையில் அதைக்கோருவது?
எந்த நிலங்களை கேரளத்துக்கு விட்டுக்கொடுத்தார்களோ அந்நிலங்களை கேரளத்துடன் பேசி ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொண்டு முற்றிலும் கேரளத்தில் பெய்யும் மழைநீரை அப்படியே தமிழகம் எடுத்துக் கொள்ளும் பரம்பிக்குளம் -ஆளியார் அணைக்கட்டுகளை உருவாக்கினார்கள் ஆர்வியும் சி. சுப்ரமணியமும். பரம்பிக்குளம் அணை கேரளத்தில் தமிழகத்தால் கட்டப்பட்டது. அதேபோல கேரள மன்னரிடம் பேசி முழுக்க முழுக்க கேரளநிலத்தில் ஓடும் நெய்யாற்றில் இருந்து குமரிக்கு நீர்கொண்டு வந்தார் காமராஜ். இதெல்லாம்தான் உண்மையான ராஜதந்திரம்.
எந்த ஒரு அரசியல்பேரத்திலும் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும், இன்று காமராஜ் சில இடங்களை விட்டுக்கொடுத்ததை ஏதோ கையாலாகாத்தனம்போலவும், கிடைத்தவை முழுக்க இங்கே மீடியாவில் சத்தம்போட்ட சிலரின் தனிப்பட்ட சாதனைபோலவும் பேசும் ஒரு அரசியலை திராவிட இயக்கம் உருவாக்கிவருகிறது. இவையே நம் பொதுஅரசியல் வரலாறாக இன்று உள்ளது. பொய்களையே சொல்லி அதன்மேலேயே உருவாகி வந்த ஓர் இயக்கத்தின் சாதனை இந்த பிரச்சார வரலாறு
மீண்டும் ம.பொ.சி. ஆந்திர எல்லைப்பிரச்சினையின்போதுதான் ம.பொ.சியின் புகழ் உச்சத்தில் இருந்தது. அன்று தமிழக அரசியலில் இருந்த இரு மாபெரும் அரசியல் சூதாட்டக்காரர்களின் கையில் அப்பாவிக் காயாக கிடந்து அலைமோதினார். ம.பொ.சி. ராஜாஜி காமராஜுக்கு எதிராக ம.பொ.சியை கொண்டுவர திட்டமிட்டார். காமராஜ் நாடார். ம.பொ.சி நாடார்களுக்கு நிகரான கிராமணி சாதி. காமராஜ் எப்படி விடுவார்? ம.பொ.சியின் காற்று பிடுங்கப்பட்டது. 1954ல் காமராஜ் ஆட்சிக்கு வந்தபோது அவர் காங்கிரஸில் இருந்து விலகினார். 1967 தேர்தலில் திராவிட முன்னேற்றகழக ஆதரவுடன் அவர் சட்டச்சபைக்கு சென்றாலும் எஞ்சிய வாழ்நாள் முழுக்க அரசியல் அனாதையாக ஆனார். இதுவே வரலாறு
*
ராஜாஜி ஊழலாட்சி செய்தார் என குற்றம்சாட்டுவது யார்? திராவிட இயக்கமா? திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே ஊழல் ஆரம்பித்துவிட்டது என்பதல்லவா வரலாறு? சர்க்காரியா கமிஷன் முதல் ஸ்பெக்ட்ரம் வரையிலான அதன் வரலாற்றை மேலோட்டமாகவாவது அறிந்த எவர் இந்த வரிகளை நம்ப முடியும்?
இந்தியச் சுதந்திரப்போரில் ஈடுபட்டு சிறைசென்றவர் ராஜாஜி எனபதாவது தெரியுமா? இன்றைய சிறையல்ல, வெள்ளையனின் சிறை. அந்தச்சிறையில் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை காண தி.செ.சௌ ராஜன், க.சந்தானம், சட்டநாதக்கரையாளர் என யாராவது ஒருவரின் சுயசரிதையை வாசிக்கலாம். பெரும்புகழும் பணமும் தந்தை தொழிலை உதறி காந்தியஆசிரமம் அமைத்து அதிலேயும் சிறைக்குச் சமானமான எளிய வாழ்க்கையைவாழ்ந்தவர் அவர்.
பதவிப்பித்து பிடித்து ராஜாஜி என்ன செய்தார்? பிள்ளையை பதவியில் அமரச்செய்தாரா? வாரிசுகளை தொழிலதிபர்களாக, கோடீஸ்வரராக ஆக்கினாரா? இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பல அடிப்படைக் கட்டுமானங்களை ராஜாஜிதான் திட்டமிட்டு அமைத்தார். அதன் பலன்களையே இன்றும் தமிழகம் அனுபவிக்கிறது. ஓசூர் தொழிற்பேட்டை அவரது கனவு. சென்னை துறைமுகவிரிவாக்கம் அவரது சாதனை. இன்றுவரை அவரது தனிப்பட்ட நேர்மைமீது எந்த ஒருவரும் ஆதாரபூர்வமான சிறு குறையைக்கூட சுட்டிக்காட்டமுடிந்ததில்லை.