Written by LONDON SWAMINATHAN
Date: 13 JUNE 2018
Time uploaded in London – 11-14 am (British Summer Time)
Post No. 5105
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
மன்னர்களின் விநோதப் பெயர்கள்_ யானை, கழுதை, குதிரை! (Post No.5105)
காரவேலன் என்ற கலிங்க மன்னன் மிகவும் புகழ்பெற்றவன். அவன் கலிங்க நாட்டை ஆண்டவன்; இப்பொழுதும் அவனுடைய ஹத்திகும்பா (யானைக் குகை) கல்வெட்டைக் காணலாம். இது ஒரிஸ்ஸாவில் உதயகிரி- கண்டகிரி மலையில் உளது. புவனேஸ்வரத்துக்கு அருகில் பிராக்ருத மொழியில், பிராஹ்மி லிபியில் எழுதப்பட்ட இக்கல்வெட்டு 2200 ஆண்டுப் பழமை உடைத்து. தமிழர்களின் கூட்டணியை உடைத்ததாகவும் பாண்டிய மன்னரிடமிருந்து ரத்தினக் கற்களைக் கப்பமாகப் பெற்றதாகவும் இவன் பெருமை பேசுவதால், தமிழ் வரலாற்றுக்கும் இவன் கல்வெட்டு துணைபோகிறது. இவனிடம் தோற்றுப்போன தமிழ் மன்னர்கள் யார் என்று தெரியவில்லை.இது ஒரு புறம் இருக்க இவனுடைய பெயர் கழுதையா என்ற ஒரு ஆராய்ச்சியும் 1940ஆம் ஆண்டு வூல்நர் நினைவு மலரில் (Woolner Commemoration Volume, year 1940) வந்துள்ளது. அதை ஆராய்ந்து எனது கருத்தையும் முன்வைப்பேன்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜே.பிரஸிலுஸ்கி (J.Prezyluski) எழுதிய கட்டுரையில் சொல்லும் விஷயம் பின்வருமாறு:
கார+ வேல= கருப்பு வேல் என்று இருக்கலாம் (தமிழ்ப் பெயர் என்று கொண்டால்)
காரவேல = கர+வெல்லக= பாகற்காய் (ஸம்ஸ்க்ருத பெயர் என்று கொண்டால்)
அக்காலத்தில் முண்டா மொழிகள் அப்பகுதியில் இருந்ததால் அதன் செல்வாக்கும் இருக்கக்கூடும்.
இம்மன்னன் பற்றிய தகவல்கள் வேறு எங்கும் இல்லாததால் பெரும் இடர்ப்பாடு நிலவுகிறது. ஆயினும் இவன் சொல்லும் சதகர்ணி, மற்றும் இந்திய-யவன (Indo-Greek) அரசன் ஆகியோர் உண்மையில் இருந்தவர்கள். ஆகையால் இந்த மன்னன் ஆண்டதில் கேள்விக்கு இடமில்லை. பெயர்தான் பிரச்சனை தருகிறது.
‘கர’ என்றால் கழுதை என்ற பொருள் உண்டு (கர்த்தப). ஸம்ஸ்க்ருதத்தில் மிருகங்களின் பெயர்கள் ‘ப’ அல்லது ‘வ’ என்னும் எழுத்தில் முடிவடைவதால் கழுதை (கரவ) என்று கொள்ளலாம்.
விஷ்ணு புராணத்தில் ‘கர்த்தபில்லா’ வம்சம் பற்றிய செய்தி உளது. இவர்கள் ஆந்திரர்களை அடுத்து ஆட்சிக்கு வந்ததாக புராணம் விளம்பும்.
சமணர்களின் நூலான ‘கால்க கதா’வில் கர்த்தபில்லா பற்றிய கதை வருகிறது அவன் காலகாசார்யா என்னும் சமண முனிவரை அவமானப் படுத்தியதால், அவர் கோபித்துக் கொண்டு போய் சக வம்ச மன்னர்களத் தூண்டிவிட்டு, உஜ்ஜையினி நகர கர்த்தபில்லா ஆட்சியை விழுத்தாட்டியதாக விஷ்ணு புராணம் விளம்பும். இவனுடைய பெயரும் கழுதையின் (கர்த்தப) பெயரே.
காரவேலனும் ஒரு சமண மன்னன். கர்த்தபில்லா பெயரின் பொருள்= கழுதைக்குப் பிறந்தவன். அது போல காரவேல என்பதும் கழுதைப் பயல்- கழுதை மகன் என்று இருக்க வாய்ப்பு உண்டு. அதாவது ஒரு தெய்வீக கழுதைக்கும் சாதாரண ராஜாவுக்கும் பிறந்தவனாக இருக்கலாம் — என்று சொல்லி பிரெஞ்சு கட்டுரையாளர் கட்டுரையை முடிக்கிறார் (வூல்நர் கம்மமொரேஷன் வால்யூம், 1940)..
Hathigumpa Caves
எனது கருத்து:
கழுதை போல உதடு இருப்பதால் இப்படிப் பட்ட பெயர் வந்து பின்னர் நிலைத்து இருக்கலாம்; கரோஷ்டி என்ற வடமேற்கு இந்திய லிபிக்கும் ‘கழுதை உதடு’ என்றே பொருள்- அதன் எழுத்துக்கள் அப்படித் தோன்றுவதால் பட்டப்பெயர் நிலைத்துவிட்டது.
காரவேலன் பெயரைத் தமிழ் பெயர் என்று கொண்டால் ‘கூர் வேல்’ என்று திருப்பாவையில் வரும் சொல்லையும் பொருத்தலாம். ‘கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்’–
திருப்பாவை 1
காரவேலன், தான் வென்ற பகைவர் நாட்டில் கழுதை பூட்டி ஏர் உழுதான் என்று அவனுடைய கல்வெட்டு கூறுகிறது. இதனாலும் ‘கழுதை பூட்டி ஏருழுதவன்’ என்பது காரவேலன் என்று மருவி இருக்கலாம். இது ஸம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டுக்கும் பொருந்தும் வியாக்கியானம்!
எனது முந்தைய கட்டுரையில் உள்ள பகுதி இதோ:–
சங்க இலக்கியத்தில் கழுதை
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை புலவர் நெட்டிமையார் பாடிய பாடலில் கழுதையைப் பூட்டி ஏர் உழுதல் பற்றிப் பாடுகிறார். இதையே காரவேலன் ( 193 BC to 170 BC) கல்வெட்டும் கூறுகிறது.
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி
பாழ் செய்தனை, அவர் நனந்தலை நல் எயில்;
(புறம் பாடல் 15, நெட்டிமையார்)
முது குடுமிப் பெருவழுதி தன் பகைவர் நாடுகளை வென்று, தேரோடிய தெருக்கள் வழியாக ஏர்பூட்டிய கழுதைகளை நடத்திச் சென்று உழுதான் என்று புலவர் பாடுகிறார்.
அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியின் புகழ் பாடிய அவ்வையாரும் இதையே கூறுகிறார்:
அணங்குடை மரபின் இருங்களந்தோறும்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! (புறம் 392, அவ்வையார் )
இதன் பொருள்: திறை கொடாத மன்னரின் மதில்களை வஞ்சனையின்றிப் பொருது அழித்துப், போர்க்களத்திலே கடும் போர் இயற்றிக், கழுதை பூட்டி உழுது, கவடியும் வேலும் விதைக்கும் இடையறாத போர் வெற்றி நிறைந்த வேந்தனே!
இதிலிருந்து ஒரு மன்னனை அவமானப்படுத்த, அவன் ஊரைப் பாழ்படுத்துவதோடு, அங்கே கழுதைகளை அனுப்பி ஏர்பூட்டி உழுதல் வழக்கம் என்றும் அதிலும் வெள்ளை வரகும், கொள்ளும் பயிரிடுதல் வழக்கம் என்றும் தெரிகிறது. இது நாடு முழுதும் இருந்த பாரதீய பண்பாட்டின் ஒரு அம்சம்.
எல்லோரும் வெறுக்கும் மூதேவியின் வாஹனம் கழுதை
xxx
Hathigumpa Caves
மத்திய இந்தியாவிலும் பீஹாரிலும் ஆட்சி செய்த காளசூரி மன்னர்களும், காஸி நகர் காஹத்தவாலாவும், வங்காளத்தை ஆண்ட பால மன்னர்களும் பண்டல்கண்ட் பகுதியை ஆண்ட சண்டேளா மன்னர்களும் அஸ்வபதி,கஜபதி, நரபதி- என்று பட்டம் வைத்துக் கொண்டனர். குதிரைப் படைத்தலவர், யானைப்படைத் தலைவர், காலட்படைத் தலைவர் என்று பட்டம் வைத்துக்கொண்டனர்.
தமிழிலும் கூட கரிகாலன் (கருகிய கால் உடையவன்) போன்ற விநோதமான காரணப் பெயர்கள் உண்டு.
–சுபம்–