புறநானூற்றில் கல்விச் சிந்தனைகள்
முனைவர்உ.பிரபாகரன்,இணைப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை,தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர் -613 010.
முன்னுரை
தமிழ் மொழியில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் தொன்மையானவை; பண்பட்டவை; வரலாற்றுச் சிறப்புமிக்கவை என்று தோன்றி என்று வளர்ந்தது என்று இயம்ப முடியாத அளவுக்குப் பழமையானவை; பிற நாட்டினர் நாகரிக நிலையை எட்டாத காலத்திலேயே தனக்கேயுரிய கலப்பற்ற தூய இலக்கியப் போக்கினைக் கொண்டு தமிழ் இலங்கியது. இத்தகைய சிறப்புமிக்க தமிழ்மொழியை பெஸ்கி பாதிரியார் குறிப்பிடும்பொழுது, """"தமிழ்ப் புலவர்கள் ஆற்றல் சார்ந்த மொழியினைக் கையாண்டனர்"" என்று கூறியுள்ளார். இவ்வாற்றல் மிக்க தமிழில் தோன்றிய சங்க இலக்கியம் ஒரு பெருநிலம்;உழுது பயன்கொளவும் அகழ்ந்து பொன்னும் மணியும் கரியும் எரிநெய்யும் பெறவும் அமைந்த பெரும் பரப்புடைய நிலம் போலப் புதுப்புதுப் பொருள் விளைவிக்கவும், ஆழ்ந்து ஆழ்ந்து உண்மைகளை வெளிக்கொணரவும் பயன்படும் இலக்கியப்புலம். இப்புலத்தினை அக்காலச் சூழல் கொண்டு கல்வியியல் பார்வையில் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கல்வி
கல்வியைக் ‘கண் என்றும் கற்பித்தலைக் கண்திறந்து விடுதல்’ எனவும் வழங்குவர். ‘நுனரஉயவந’ என்ற ஆங்கிலச் சொல் வெளிக்கொணர்தல் என்னும் பொருளுடைய இத்தாலிய மூலத்திலிருந்து பெறப்பட்ட தென்பார் பாஸ்கல் கிஸ்பர்ட் உறங்கும் நிலையில் உள்ள அறிவை விழிக்கச் செய்தலே சங்ககாலச் சூழலில் ஏற்பட்ட கல்வியாகும். பல்வேறு தொழில்களை மேற்கொண்டிருந்த புலவர்கள் பாடிய பனுவல்கள் அவர்கள் பெற்றிருந்த கல்விக்கு நற்சான்றாகும். சங்க காலத்தில் கல்விக்கும் கற்ற புலவர்களுக்கும் பெரும் மதிப்பு இருந்தது. அக்காலத்தில் ஏழைகளுக்கும், செல்வர்களும் ஆடவரும் பெண்களும் கல்வியிற் சிறப்பெய்தி இருந்தனர். மாணவர்கள் பல காலம் முறையாகக் கல்வி பயின்றனர். சங்க காலத்தில் கல்வியில் சிறப்பெய்தி விளங்கும் ஒருவனையே தாய் விரும்பியுள்ளாள். அதுபோலவே ஒருகுடியில் பிறந்த பலராயினும் அரசன் அவர்களுள் அறிவுடைய ஒருவனையே தேர்ந்தெடுத்து அவன் அறிவுரைப்படியே ஒழுகுவான். கீழ்க்குலத்துப் பிறந்த ஒருவன் கல்வியறிவு நிரம்பியனவாய்த் திகழ்வானாயின் மேற்குலத்தைச் சார்ந்த ஒருவனும் கல்வியின் பொருட்டு அவனை வழிபட்டு தனது கல்வியறிவை வளர்த்துக்கொள்வான். மேலும் உதவி செய்தும் மிகுந்த பொருளைக் கொடுத்தும் கல்வி கற்கவேண்டும் என ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் மேன்மையைப் (புறம் 183) போற்றிப் பாடுகிறான்.
கல்வியின் நோக்கம்
கல்வியின் இன்றியமையா நோக்கம் மனிதனுடைய சிந்தனை ஆற்றலை வளர்த்தலே என்பதைக் கல்வி வல்லுநர் அனைவரும் வற்புறுத்துகின்றனர். சிந்தனையாற்றலை வளர்க்காமல் வெறும் செய்தியறிவை மட்டும் தருகின்ற கல்வியறிவை மட்டும் தருகின்ற கல்வியை அறிஞர் பாராட்டுவதில்லை. அத்தகைய கல்வியால் விளையும் பயன் மிகச் சிறியதாகும். இது உயர்ந்தது. இது தாழ்ந்தது. இது நன்மை பயப்பது. இது தீமை பயப்பது என்று பகுத்தறியும் ஆற்றலே சிந்தனையாற்றலாகும். இச்சிந்தனையாற்றலோடு செய்தியறிவும் இணைந்து கற்பனையாற்றல் வளர்கின்றது. கற்பனையில்லாவிட்டால் அறிவின் பெருக்கம் இல்லை. இதனைச் சங்க இலக்கியங்கள் நமக்கு அளித்துள்ளன. உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ கோடி மக்கள் உலகில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து இருக்கின்றனர். ஆனால் அத்தனை பேருமே உலக முன்னேற்றத்திற்குக் காரணமானவர்கள் என்று கூறமுடியாது. அவர்களுள் அவ்வப்போது தோன்றிய அறிஞர் சிலரே இன்று நாம் அடைந்திருக்கம் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணமாய் இருந்தார்கள். அவ்வறிஞர்கள் நுண்ணறிவு மட்டுமன்றி,சிந்தனையாற்றலும், கற்பனையாற்றலும் பெற்றவர்கள். மிக உயர்ந்த நுண்ணறிவைப் பலர் பெற்றிருக்கக்கூடும். ஆனால் அவர்கள் கல்வியறிவு பெறுகின்ற போதுதான் அந்நுண்ணறிவின் பயனையெல்லாம் அடையமுடியும். எனவே, நுண்ணறிவுள்ள மக்கள் கல்வியறிவு பெறுவதன் மூலம் தங்களுடைய சிந்தனையாற்றலைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இதனையே, ‘தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு’ என்று திருவள்ளுவர் இயம்புகிறார்.
சங்க காலக் கல்வி
சங்க காலத்தில் கல்வி மதித்துப் போற்றப்பட்டது. பல்வேறு தொழிலினராய் புலவர்கள் பாடிய பாடல்கள் அவர்கள் பெற்றிருந்த கல்விக்கு நற்சான்றாகும். ‘கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே’என வருணப் பாகுபாட்டையே புறந்தள்ளும் ஆற்றல் சங்ககாலக் கல்விக்குண்டு. தூது முயற்சிக்கும்,கொலையன்ன கொடுஞ்செயல் களைதற்கும், பரிவுதப வரிதண்டும் செயல் நாணத்தக்கதென அறிவுறுத்தற்கும் கொடை நேர்க எனச் செம்மாந்து (184) (புறம்) செப்பற்கும்,அற்றைக் கல்வியாளர்களின் கல்வி பயன்பெற்றது. அறுவை வாணிகள் இளவேட்டனும், ஆசிரியன் பெருங்கண்ணனும்,கொல்லன் அழிசியும் குறமகள் இளவெயினியும் மருத்துவன் தாமோதரனும் வாணிகள் சாத்தனுமெனத் தொழில் வேறுடையார் கல்வி வாய்ந்த புலமைச் செல்வராயிருந்தனர். பெற்ற கல்வியாற் பிழைப்பு நடத்த வேண்டாது. அறிவு பெறற்கெனவே கல்வி அமைந்த அற்றைச் சூழல் போற்றத்தக்கது. கல்வி அறிவுக்கென அமையாது வயிற்றுப்பாட்டுக்கென நிலை இழியுங்கால் இதனை ஒரு சமூக மதிப்பாகக் கருதும் நிலையும் மாறும் என சங்ககாலத்தில் கருதினார்கள்.
சங்ககால ஆசிரியர்கள்
சங்க காலத்தில் கல்விக்கும் கற்ற புலவர்களுக்கும் பெரும் மதிப்பு இருந்தது. அக்காலத்தில் ஏழைகளும்,செல்வர்களும் ஆடவரும் பெண்களும் கல்வியில் சிறப்பெய்தி இருந்தனர். மாணவர்கள் புலமைசான்ற ஆசிரியர்களிடம் பல காலம் முறையாகக் கல்வி பயின்றனர். மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் (நற்.273, அகம் 102, 348), மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் (நற்.322) என்பவர்கள் சங்கப் புலவர்களுள் இருவராவார். இவர்கள் பெற்ற அடைமொழியின் அடிப்படையில் சங்க காலக் கல்வியின் தன்மையை ஈண்டு நோக்குதல் இன்றியமையாதது. இளம்பாலாசிரியன் என்பது குழந்தைகளுக்கு (இளம் பாலகர்களுக்கு) பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களைக் குறிப்பதாகும். தொடக்கக் கல்வியைத் தொடரும் இன்றைய மாணவர்கள் பெரும்பாலோர் பாலர் பள்ளியில் (டுமுழு, ருமுழு) படித்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இது போன்ற ஒரு நிலை சங்க காலத்தே நிலவியிருந்தது. அக்காலச்சூழலில் இளம் பாலர்களுக்கு தனி ஆசிரியர் கல்விக் கற்பித்து வந்துள்ளார் என்பது இப்பாடல் ஆசிரியரின் அடைமொழிவழி அறியமுடிகிறது. பிறந்த குழந்தைகள் சில ஆண்டுகள் கடந்த பின்னர் பாலர் பள்ளியில் சேர்க்கப்பட்டு அன்று பாலர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பாடம் படித்தனர் என்பதற்கு இது ஒரு சான்றாகும். மேலும் இளம் பாலர் படிப்பை முடித்தவுடன் பாலர் படிப்பை அல்லது கல்வியைத் தொடர்ந்து கற்றுவந்தது இப்பாடல்வழி அறியமுடிகிறது. மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் தொடக்ககல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்து கல்வியைப் புகட்டியுள்ளார். எனவே சங்க காலத்தில் இளம் பாலர்,பாலர், இளைஞர் என வயது அடிப்படையில் கல்வி கற்பிக்கப்பட்டது. இத்தகைய நோக்கு உளவியல் தன்மை அல்லது பார்வை சங்ககாலக் கல்வியாளர்களிடம் (ஆசிரியர்கள்) இருந்ததைப் பாடல்வழி அறியமுடிகிறது.