புறநானூற்றில் ஆட்சியியல் முனைவர் கு. கணேசன், சாகித்திய அகாதெமி எழுத்தாளர், சேலம்
உலகில் ஒப்பற்ற தாய்மொழியாம் தமிழ் மொழியை முத்தமிழ்,பைந்தமிழ், செந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் எனச் சிறப்பித்து தொன்றுதொட்டு அழைப்பர், தமிழர். தமிழ் மக்களின் வாழ்வியலை வகுத்துக்காட்டும் கருவூலமாக தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களே சங்க இலக்கியங்கள். சங்க நூல்கள் மூன்று காலங்களையும் முகிழ்க்கும் பெட்டகம். அவை தமிழர்தம் பண்பாட்டுக் கூறுகளை வாழ்வியல் கூறுகளை உள்ளடக்கியவை. இது வாழ்வியலுக்கு இலக்கணம் கண்ட நூலாகும். சங்க காலத்தின் குறைபாடுகளைக் களைந்து வெளிக் கொணர்ந்தவை திருக்குறள். அன்றைய காலத்தின் நீதியின் குரல். புதுமையை ஒளியேற்றிய சிந்தனைச் சுடர் திருக்குறள்தான்.
அகமும் புறமும் தமிழர்களின் ஒப்பில்லா கலைச்செல்வம். நிலவகைக் கோட்பாட்டில் ஐவகை நிலத்தை உணர்த்திய வாழ்வுமுறைமை. இது இயற்கையுகம் எனலாம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பொதுமை நோக்கினை நல்கிய புறநானூறு தமிழர்களின் வரலாற்று சித்திரமாயிற்று. இந்நூல் சமயச்சார்பு, மதச்சார்பு, இனச்சார்பு அற்ற பொதுவுடைமை எனில் மிகையன்று.
மொழி வளர்ச்சி ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளந்து காட்டும் அளவுகோலாகும். ஒரு மொழியில் தோன்றுகின்ற இலக்கிய இலக்கணங்களே அம்மொழியின் வளர்ச்சியினை மதிப்பிட்டுக் காட்டும். தமிழ்மொழி எப்போது தோன்றியது என்று யாராலும் வரையறுத்துக் சொல்ல முடியாது. தமிழின் இலக்கண இலக்கியங்களே உயரிய தனித்தன்மை வாய்ந்தவைகளாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை சங்க கால, இடைக்கால, நவீன கால இலக்கியங்கள் என்னும் முப்பெரும் நிலைகளாகப் பகுக்கலாம். அவற்றில் முதன்மையாக நிற்பவை சங்க இலக்கியங்கள். சங்க கால இலக்கியங்கள் தமிழர் வாழ்வின் பொற்கால இலக்கியங்களாகப் போற்றுகின்றனர்.
மனித மனத்தில் தோன்றிய விழுமிய எண்ணங்கள் எல்லாம் சங்க காலத்திலேயே தோன்றியுள்ளன. இது மிகையாகாது. சங்க இலக்கிய இலக்கணத்தின் வளமையினையும் பெருமையினையும் அஃது உணர்த்தும் என்பது உண்மையாகும். காலமாகவும், நிலமாகவும், காலமும் நிலமும் கருக்கொண்டு, கருத்துப் பெட்டகமாக வாழ்பவை சங்க இலக்கியங்கள். அகப்பாட்டையும், புறப்பாட்டையும் தமிழர்கள் இரு கண்களாகப் போற்றுகின்றனர். அக இலக்கியத்தில் ஒருவனும், ஒருத்தியும் உளமொத்து வாழ்கின்ற காதல் வாழ்வினைக் காணலாம். சங்க காலத்தில் சமுதாய மக்களிடையே இருந்த காதல் சமயக் காலத்தில் இறைவன்மீது சென்றது. அது நாளடைவில் மூட நம்பிக்கையின் இருப்பாக மாறிற்று.
புறநானூறு இந்நூல் புறப்பாடல்களைக் கொண்ட நானூறு பாடல்களின் தொகுப்பாகும். பண்டைத் தமிழர்களின் வரலாற்றை காண்பதற்கு மிக்கத் துணை புரிகின்றது. சேர, சோழ, பாண்டியர் எனும் பேரரசர்களையும், கடையேழு வள்ளல்கள், புலவர்கள் தம் வரலாறுகளையும் நாகரிகப் பண்புகளையும் நன்கு விளக்கவல்ல நூலாகும். பண்டைத் தமிழ்நாட்டில் தமிழ்ப் பெருங்குடி மக்கள் நாகரிகச் சிறப்பிலும், பண்பாட்டு மேன்மையிலும் மிகச் சிறந்து விளங்கினார்கள் என்பதை புறநானூற்றில் அறிய முடிகிறது.
வரலாற்றுச் சான்று
பாரத வரலாறு கிமு 1000ல் நடைபெற்றதாக கொள்ளலாம். இப்புறப்பாட்டில் கண்ட தருமபுத்திரன், அவனைப் பாடிய கோதமனார் இவர்கள் காலம் கிமு 1000 ஆகும்.
‘அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தாய்’ (புறநானூறு.3)
என்று பாராட்டப்பெறும் சேரர் பெருந்தகை பாரத காலத்தவன் என்பது மேற்கூறிய வரிகளால் புலனாகிறது.
‘எங்கோ வாழிய குடுமி, தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியக் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே’ (புறநானூறு. 2)
எனப் புறநானூறு வடிவலம்ப நின்ற பாண்டியனைக் குறிப்பிடுகிறது.
‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ (புறநானூறு.183)
எனக் கல்வியின் மேன்மை குறிப்பிடப்பெறுகின்றது. கீழ்க்குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் அவன் கல்வி கற்றால் உயர்ந்தவனாகின்றான். இச்செய்தியினை,
‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ள
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே’ (புறநானூறு183)
எனக் குறிக்கின்றது. புறநானூறு சிறந்த வரலாற்றுச் செய்திகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிலங்குகின்றது.
பண்டைத் தமிழகத்தில் மூன்று பேரரசுகளும், அவற்றின் அகத்தும்,புறத்தும் பல சிற்றரசுகளும் விளங்கின. மண்ணாசை, பொன்னாசை, புகழாசை முதலியவற்றால் இவர்கள் ஒருவரோடு ஒருவர் ஓயாது போர் புரிந்து வந்தனர்.
போர்முறை
‘போர்’ என்னும் சொல்லுக்குத் தமிழர் கொண்டிருந்த பொருளே அவர்கள் போர்முறைல் கொண்டிருந்த அறத்திணைப் புலப்படுத்துகின்றது. ‘போர்’ என்னும் சொல் காரண இடுகுறிப் பெயராக வழங்கப்பெறுகிறது. போர் என்னும் சொல்‘பொரு’ என்னும் வேர்ச்சொல் அடியாகப் பிறந்த பெயர்ச் சொல்லாகும். ‘பொரு’அல்லது ‘பொருதல்’ என்பதற்கு ஒப்புதல், ஒத்திருத்தல் என்று பொருளாகும்.‘பொருநன்’ என்பது ‘தனக்குப் பிறர் உவமமாவதன்றித் தான் பிறர்க்கு உவமிக்கப்படுவான்’ என்றும் பொருள் கொள்ளலாம். தமிழ் மக்கள் ஒத்த திறலுடையாரையும், ஒத்த படையுடையாரையுமே எதிர்த்துப் பொருவதே போராகும் என்ற கொள்கையுடையவர் என்பது புலனாகும்.
அறப்போர்கள்
மெலியாரை வலியார் தாக்கி வெற்றி கொள்வது இழிவாகக் கருதப்பட்டது. ஒரு வீரன் போர்க்களத்தில் படை தாங்கிப் போர்த்தினவெடுத்து நின்றான். ஒரு யானை தன்னைச் செலுத்துவோன் இன்றித் தனியே நின்றது. அந்த யானை பகைவனுடையே யானை ஆகும். பகைவனுடைய யானையாக இருந்தாலும் அதனிடத்துப் போர் புரிவது தனக்கு இழுக்கென்று கருதுகின்றான். இதைத் தவிர இன்னும் ஒரு காரணத்தை அவன் கற்பித்து கூறுகின்றான்.
‘................................ யானை
ஒருகை யுடைய தெறிவலோ யானும்
ஒருகை சுமந்து வாழ்வேன்’
என்று அவன் தனக்கு இரண்டு கைகள் இருப்பதையும் யானைக்கு ஒரே கை இருப்பதையும் சுட்டிக்காட்டி அதனோடு போரிடுவது தவறு என்று உணரும் வீரனின் செவ்வி அவன் போர் முறையில் கொண்டிருந்த அறத்தினைத் தெளிவாக்குகின்றது.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போர் முறையில் கொண்டிருந்த அறத்திணை நெட்டிமையார் என்னும் சான்றோர்.
‘ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங் கடனிறுக்கும்
பொன்போற் புதல்வர் பெறாஅ தீரும்
எம்மம்பு கடுவிடுதும் நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்’ (புறநானூறு 9)
மேற்கண்ட பாடல் போரின் கொடுமையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்களைத் தொகுத்துக் கூறுகின்றது. தாமமாக உணர்ந்து அரண் தேடிக் கொள்ளவியலாத பசுக்களைத் தாமே கவர்ந்து வந்து ஓம்பினார்.
ஆநிரைப்போர்
பகைவர் நாட்டு ஆநிரைகளைக் கவர்ந்து வருதலே போரின் முதற்கட்டமாகத்
தொல்காப்பியர் கூறியிருப்பதும் எண்ணத்தக்கது.
‘வேந்துவிடு முளைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்’ (தொல் - 5)
எனத் தொல்காப்பியர் வகுத்திருக்கும் நூற்பாவிலும் அறமணம் கமழ்கின்றது. கண்ணகி சிலப்பதிகாரத்தில் சீற்றமுற்று மதுரை மாநகரை எரிக்க முற்பட்ட பொழுதும்
‘பார்ப்பார், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி’
என்னும் இவர்களை எரிக்காது. ‘தீத்திறத்தோர் பக்கமே சேர்க’ என ஏவிய அறப்பண்பும் நினைக்கத்தகும்.
செங்குட்டுவன் போர்
சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் படையெடுத்துக் கனகவிசயரை வென்று அவர்கள் தலையிலே கல்லேற்றிய வரலாறும் உண்டு. போர் கடுமையாக நடந்து கொண்டிருந்தபோது உயிருக்கு அஞ்சிய வடநாட்டு வீரர்கள் மாறுவேடம் அணிந்து கொண்டு ஓடி ஒளிந்த கதையும் சிலம்பில் காணலாம்.
‘சடையினர் உடையினர் சாம்பற் பூசினர்
பீடிகைப் பீலிப்பெரு நோன் பாளர்
பாடு பாணியர் பல்லிய தோளினர்
ஆடு கூத்த ராகி யெங்கணும்
ஏந்து வாளொழியத் தாம்துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயின் திரிதர’
என விளங்குகின்றது. தமிழ் வீரர் சடைமுடி தரித்தாரையும் நீறு பூசினாரையும்,புத்த சமணத் துறவியர்களையும், இசைக் கலைஞர்களையும், கூத்தர்களையும் கொல்லமாட்டார்கள் என்பதனை மேற்கண்ட சிலம்புப் பகுதி உணர்த்துகின்றது.