New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மொழி வளர்ச்சிக்கு உதவிய சமயப்பணி முயற்சிகள் தேமொழி


Guru

Status: Offline
Posts: 24762
Date:
மொழி வளர்ச்சிக்கு உதவிய சமயப்பணி முயற்சிகள் தேமொழி
Permalink  
 


 மொழி வளர்ச்சிக்கு உதவிய சமயப்பணி முயற்சிகள்

தேமொழி 

Feb 20, 2016

 
 

mozhi valarchchikku8“ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே யேசு கிறித்து அவ்வனடே புத்ரனே ஒருவனே. சுத்தமான சித்தத்தினொடெய கருணே கொண்டு கெற்பம் ஆயி: கன்னியாஸ்திரி மரியத்தில் பெறந்தவன்: போஞ்சியு பிலாத்து விதித்த விதிகொண்டு வெசனப்பட்டு: குருசினில் தூக்கிச் செத்தான்: குழில் வைத்து…”

இவ்வரிகள் காணப்படுவது 438 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் தமிழ் எழுத்துருவிலேயே அச்சிலேறிய முதல் தமிழ்ப் புத்தகத்தில். போர்த்துக்கீசிய மொழியில் இருந்து ‘ஃபிரான்சிஸ் சேவியர்’ (Francis Xavier) தமிழில் மொழிபெயர்த்த மறை நூலைப் போர்த்துக்கீசியரான ‘ஹென்றிக்ஸ் பாதிரியார்’ (Portuguese Jesuit priest, Henrique Henriques, 1520–1600) பதிப்பித்தார். தமிழ் அச்சு நூலின் தந்தை எனவும் இவர் போற்றப்படுகிறார். இவர் முயற்சியால் கொல்லத்தில் தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு, கோவாவில் உள்ள அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு, கொல்லத்தில் 1578-ஆம் ஆண்டில் (October 20, 1578) வெளியான இந்நூலின் பெயர் “தம்பிரான் வணக்கம்” (Doctrina Christam en Lingua Malauar Tamul / Thambiran Vanakkam). இந்நூல் உருவாக நிதியுதவி அளித்தவர்கள் தூத்துக்குடியில் வாழ்ந்த மீனவர்கள். இந்திய மொழி ஒன்றில், அந்த மொழியின் எழுத்துருவிலேயே அச்சிடப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியது இந்தத் தம்பிரான் வணக்கம் நூல்.

mozhi valarchchikku1தமிழுக்கு இப்பெருமை மட்டுமல்ல, ஐரோப்பிய மொழிகளைத் தவிர்த்து, முதன் முதலில் அச்சேறிய உலகமொழிகளில் முதன்மையான மொழி என்ற பெருமையைக் கொண்டதும் தமிழ் மொழியே. ‘கார்டிலா’ என்ற தமிழ் நூல் தம்பிரான் வணக்கம் நூலிற்கு முன்னரே அச்சிடப்பட்ட ஒரு தமிழ் நூல். ஆனால் அதன் எழுத்துகள் ரோமன் எழுத்துகளால் ஆனவை. இக்கால ஃபேஸ்புக்கில் ‘வணக்கம்’ என்பதைத் தமிழ் மக்கள் ஆங்கில எழுத்தில் ‘vanakam’ என ஒலிபெயர்த்து (transliteration) எழுதிக் கொண்டிருப்பது போல ரோமன் எழுத்துகளில் தமிழ் அச்சிடப்பட்டது. கோவாவில் முதலில் அச்சுக்கூடம் அமைப்பதற்கும் முன்னரே இந்தியாவின் எல்லைக்கு வெளியே, 1554 ஆம் ஆண்டு (February 11, 1554) லிஸ்பன் நகரில் அச்சிட்டு வெளியானது கார்டிலா என்ற ‘லூசோ சமய வினா விடை’ என்ற இந்த நூல் (Carthila e lingoa Tamul e Portugues). இதுவும் கிறித்துவ சமய நூலே, இந்த நூல் தமிழறியாத போர்த்துக்கீசிய பாதிரியார்கள் தமிழ் உச்சரிப்பில் வேத வாசகங்களைக் கூறுவதற்காக ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்டது. எனவே, 450 ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழின் அச்சு நூல் வரலாற்றின் துவக்கம்தான் கார்டிலா. மலபார் தமிழில் எழுதப்பட்டது என்ற குறிப்பு கொண்ட இந்த நூலின் உருவாக்கத்தில் பங்கேற்றவர்கள் தூத்துக்குடியில் வாழ்ந்த வின்சென்ட் நாசரேத், ஜோஜ் காவல்கோ, தாமஸ் குரூஸ் (Vincente de Nazareth, Jorge Carvalho and Thoma da Cruz) என்ற மூன்று தமிழர்கள். இந்த வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொணர்ந்தவர் தனிநாயகம் அடிகள் ஆவார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மண்ணின் மக்களே தமிழ் அச்சு நூல் உருவாக்கத்தில் நன்கொடையும், உழைப்பையும் நல்கியிருக்கிறார்கள் என்பது வியப்பைத் தரும் ஒற்றுமை.

Bartholomaus Ziegenbalgபோர்த்துக்கீசியரான ஹென்றிக்ஸ் பாதிரியார் போன்றே, ஜெர்மன் மொழி விவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்துப் பதிப்பித்தவர் ஜெர்மானிய பாதிரியார் ‘பர்த்தலமேயு சீகன்பால்கு’ (Bartholomäus Ziegenbalg,1682 – 1719) ஆவார். சமயக் கருத்துகளை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழைக் கற்றுக் கொண்டு விவிலியத்தை தமிழில் மொழி பெயர்த்தார். இவர் 1706 ம் ஆண்டு தமிழ் நாட்டில் தரங்கம்பாடியில் தமிழகத்தின் முதல் பிராட்டஸ்டண்ட் திருச்சபையைத் தோற்றுவித்தவர். ஜெர்மனியில் இருந்து அச்சு இயந்திரமும், காகிதமும் வரவழைத்து, அச்சுக்கூடம் அமைத்தார். ஜெர்மன் மொழியில் இருந்து தான் மொழிபெயர்த்த தமிழ் விவிலியத்தை அச்சு நூலாகப் பதிப்பித்து 1715ஆம் ஆண்டு ஜூலை15 ஆம் நாள் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். இவரது அச்சுநூல் விவிலியப் பதிப்பின் வரலாறு 300 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அந்த நூலில் காணப்படும் வரிகள், வரிகள் மாறாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப்பூலோகத்திலேமனுஷனாய்ப்பிறந்தவிசேஷங்க

ளையும்போதிவிச்சஞான உபதேசங்களையும்செய்தஅ

ற்புதங்களையும்மனுஷருக்குவேண்டிபாடுபட்டு

எல்லாரையும்மூண்டுரெஷ்சித்தவத்தவானங்களையும்

உயிரோடேஎழுந்திருந்துபரலோகத்திலேமகிமையாக

ஏறினத்தையும்அவருடையசீஷர்களாகிறஅப்போஷ்

த்தலமார்கள் லோகமெங்கும்போய் இப்படிக்கொத்த

ச்சுவிவிசேஷங்களைச்சகலச்சனங்களுக்கும்பிறசங்க

ம்பண்ணினதையும்வெளிப்படுத்துகிறபுதுஏ

ற்பாட்டினுடையமுதலாம்வகுப்பாகிற

அஞ்சுவேதபொஷ்தகம்

________________________________________________

கிறீஷ்துபிறந்தஆயிரத்துஎழுதூத்துபதினாலாம் வரு

ஷமாகிறபோதுயிதுதரங்கன்பாடியிலேயிருக்கிற

பாதிரிமார்களுடையஅச்சிலேபதிக்கப்பட்டது.

________________________________________________

தொழிற்புரட்சிக்குப் பிறகு, பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சு இயந்திரத்தை ‘கட்டன்பர்க்’ (Gutenberg) வடிவமைத்த பிறகு, முதலில் அச்சு இயந்திரம் வழியாக உருவான அச்சுப்புத்தகம் கிறித்துவ சமய நூலான விவிலியம். அது போல அச்சு இயந்திரத்தில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் நூலும் கிறிஸ்துவ சமய நூல்தான்.

G.U.Popeமேற்குறிப்பிட்ட போர்த்துக்கீசிய, ஜெர்மானிய ஐரோப்பியர்களைத் தவிர்த்து, இத்தாலியர்களான ‘இராபர்ட் தெ நோபிலி’ (Roberto De Nobili, 1577-1656) மற்றும் வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்ட ‘கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி’ (Constanzo Beschi / Constantine Joseph Beschi 1680–1747) ஆகிய கத்தோலிக்க மத குருக்களும் கிறிஸ்துவ சமயக் கருத்துகளை தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் தமிழ் கற்று இறைப்பணியாற்றினார்கள். இவர்களில் வீரமாமுனிவர் சிறந்த இலக்கண, இலக்கியவாதியாகத் திகழ்ந்து “தேம்பாவணி”, “பரமார்த்த குருவின் கதை” போன்ற இலக்கியங்களையும், “தொன்னூல் விளக்கம்”, “கொடுந்தமிழ் இலக்கணம்” போன்ற இலக்கண நூல்களையும், அகராதித் தொகுப்பில் ஈடுபட்டு சதுரகராதியையும் படைத்தார். மேலும், உரைநூல்கள் எழுதுவது, மொழிபெயர்ப்பது, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என மேலும் பலகோணங்களில் தமிழ்ப்பணியாற்றினார் வீரமாமுனிவர். சமயப்பணி புரிவதற்காக தமிழகம் வந்து மக்களுடன் தொடர்புகொள்ள தமிழ் கற்று, அதன் மூலம் தமிழிலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் ஆங்கிலேயர் ஜி. யு. போப் (George Uglow Pope, 1820 – 1908) . அயர்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் கால்டுவெல் (Bishop Robert Caldwell, 1814-1891) ஆங்கில மொழியில் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதினார். இவர் தமிழ் கற்றதன் நோக்கமும் சமயப் பணிக்காகவே.

இவர்கள் யாவரும் செய்த தமிழ்ப்பணிகள் தமிழின் வளர்ச்சிக்கு உதவின என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் இவர்களது நோக்கம் தமிழ் வளர்ப்பதன்று. தமிழ் மக்களிடம் தங்கள் சமயக் கருத்துகளை எடுத்துச் செல்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு தமிழ் கற்றனர், கற்ற தமிழைக் கொண்டு மக்களிடம் சமயக் கருத்துகளைப் பரப்பினர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதன் மூலம் தங்கள் கருத்தை மக்களிடம் பரப்ப வேண்டும் என்றால் மக்கள் மொழியிலேயே அதனைப் பரப்ப வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். சமயம் பரப்புவதை மக்கள் மொழியிலேயே கொண்டு செல்வதை இந்தியாவில் தோன்றிய சமண, பௌத்த சமயத்தினரும் கடைப்பிடித்தார்கள். அவர்களைப் போலவே, ஐரோப்பியரும் கிறித்துவ மதத்தைப் பரப்ப தமிழ்மொழி கற்க விரும்பியிருப்பது தெரிகிறது. மக்களை அடைய வேண்டுமானால் அவர்கள் மொழியில் பேசத் தேவை என்பதைப் பன்னாட்டு நிறுவனங்களும் இக்காலத்தில் உணர்ந்து தங்கள் விளம்பரங்களை வட்டார மொழியில்தான் வெளியிடுகின்றன.

“சம்மர் இன்ஸ்டிடுயூட் ஆஃப் லிங்குவிஸ்டிக்ஸ்” என்று முன்னரும், இந்நாட்களில் “எஸ்.ஐ.எல். இன்டர்நேஷனல்”(SIL International; formerly known as the Summer Institute of Linguistics) என்று கிறித்துவ சமய அடிப்படையில் இயங்கும் அமெரிக்க நிறுவனம், மொழிகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்யும் ஒரு நிறுவனம். இவர்களது குறிக்கோள், உலகில் பேசும் அனைத்து மொழிகள் பற்றிய தகவல்களை சேகரித்து அறிவதன் மூலம், அதிகம் பேசப்படும் மொழிகளிலும், சிறுபான்மையினரிடம் மட்டும் புழங்கும் மொழிகளிலும் அவர்களின் தேவைக்கேற்ப கிறிஸ்துவ விவிலிய நூலை மொழிபெயர்த்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது. சமயத்தைப் பரப்புவதற்கும், பொருளாதார அடிப்படையில் எந்த மொழிக்கு முன்னுரிமை கொடுத்து மொழிபெயர்ப்பது என்ற அடிப்படையிலும் தகவல் சேகரிக்கும் நோக்கத்தில் 82 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிறுவனம் துவக்கப்பட்டது. இந்நிறுவனம் “எத்னோலாக்” (Ethnologue: Languages of the World) என்ற மொழிகளைப் பற்றிய உலக அறிக்கையைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 7,469 மொழிகளைப் பற்றிய புள்ளிவிவரங்களைத் தொகுத்து வழங்குவது இந்த அறிக்கை. எனவே, எத்னலாக் என்பது ஒரு விரிவான மொழி அட்டவணை (comprehensive language catalogue) ஆகும். உலகளவில் மொழியியல் வல்லுநர்களுக்கும், மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது ஒரு இன்றியமையாத பட்டியல். பொதுவாக மதத்தினை பரப்பும் பொருட்டு தங்கள் மறை நூல்களை/விவிலியத்தை மொழிபெயர்க்கும் பணிகளுக்கு பெரும் பொருளைச் செலவு செய்ய எண்ணும் மதநிர்வாகத்தினர் இந்தப் பட்டியலின் துணையுடன் ஒரு குறிப்பிட்ட மொழியின் தற்கால நிலையை அறிந்து அதற்கேற்ப பொருட் செலவு செய்வதைப் பற்றி முடிவெடுப்பார்கள். இது போன்ற மற்றும் பல மொழி சார்ந்த திட்டங்களுக்கும் இப்பட்டியல் தரும் புள்ளி விபரங்கள் உதவும். இந்தப் பட்டியல் 1951 ஆண்டு முதற்கொண்டு வெளியிடப்படுகிறது.

mozhi valarchchikku5பல மொழியியல் வல்லுநர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் தொகுக்கப்பட்ட எத்னோலாக் விரிவான மொழி அட்டவணை. இப்பட்டியல் உலகில் உள்ள அனைத்துப் புழக்கத்தில் உள்ள மொழிகளையும், 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு மறைந்த மொழிகளையும் பற்றிய செய்திகளைத் தரும் ஒரு தகவல் களஞ்சியம். இப்பட்டியல் தரும் புள்ளி விபரங்களில் ஒரு மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட பிரிவின் மக்கட்தொகை, அவர்கள் கல்வியறிவின் நிலை, உலகின் எப்பகுதிகளில் அம்மொழி பேசப்படுகிறது, அதன் தற்கால வளர்ச்சி நிலை போன்ற பல தகவல்கள் அடங்கும். ஏறத்தாழ ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட ‘எத்னலாக்’ பதிப்பு முன்னர் வெளியிடப்பட்டது. தற்காலத் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக, தகவல்களைத் தொகுப்பதும், இணையவழியாக வழங்குவதும் சுலபமானதால், ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்மொழி தினத்தை ஒட்டி புதிய, இற்றைப்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டின் “உலக தாய்மொழி தினம் – 2016″ (International Mother Language Day 2016, Sunday, February 21) அன்று எத்னலாக்கின் 19 வது பதிப்பு வெளியிடப்படுகிறது. இப்பதிப்பு இணையத்தின் வழியாக மொழியியல் துறை வல்லுநர்கள் மட்டுமின்றி, மொழியைப் பற்றிய ஆர்வலர்கள் அனைவரும் உபயோகிக்கும் வகையில் கிடைக்கிறது.

mozhi valarchchikku7விவிலியத்தினை பரப்பும் திட்டத்திற்கு உதவியாகத் தொடங்கப்பட்ட திட்டம் இன்று மொழி ஆய்வாளர்களுக்குப் பெரிதும் ஆய்வில் உதவுகிறது. மொழியின் வளர்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள எத்னோலாக்கின் புள்ளிவிவரங்கள் பயன்படுகின்றன. எத்னோலாக் ஒரு மொழியின் தற்கால நிலையை, உலகின் மற்ற பிற மொழிகளின் நிலையுடன் ஒப்பிட்டு ஒவ்வொரு மொழிக்கும் ஒரு “மொழிமேகம்” (language cloud) என்ற வரைபடமும் தருகிறது. ஒரு மொழி உலகமொழியாக, பல நாட்டவராலும் பேசப்பட்டு, தேசிய மொழியாகவும், அலுவல் மொழியாகவும் இருப்பது மிக உயர்ந்தநிலை. அந்நிலையில் இன்று ஆட்சி செய்வது ஆங்கிலம். இந்த நூற்றாண்டின் பொருளாதாரம் உலகமயமான நிலை, தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவு பல மொழிகளின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் ஒரு மொழியானது கல்வி பயிற்றுவிக்கும் மொழியாகவும் அல்லாமல், குறைவான மக்கள் எண்ணிக்கையில் உள்ளோர் மத்தியில் மட்டும் பேசப்படும் மொழியாக இருக்க நேர்ந்தால் அது அழிவுப் பாதைக்குத் திசை திரும்புகிறது. சில தலைமுறைகள் கடந்து அந்த மொழியைப் பேசத் தெரிந்தவர், படிக்க அறிந்தவர் ஒருவருமின்றி போனால் அவை மறைந்துவிடும். அத்துடன் அந்த மொழியினரின் கலாச்சாரம், பண்பாடு, கலை, வரலாறு, மற்றும் அறிவுச் செல்வம் அனைத்துமே மறைந்துவிடும். சிந்து சமவெளியின் எழுத்துக்களை வைத்துக் கொண்டு அவற்றை நாம் படிக்க முடியாமல் தவிப்பது போன்ற நிலை இந்நாளில் அழிவுப் பாதையில் திரும்பிவிட்ட பல மொழிகளுக்கு அடுத்த நூற்றாண்டில் ஏற்படக்கூடும்.

ஒரு மொழி உருவாவதும், அதன் கலாச்சார வளர்ச்சியும் எளிதானதல்ல. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பற்பல தலைமுறையினரின் உழைப்பு ஒரு மொழியின் வளர்ச்சியில் அடங்கியிருக்கிறது. இதனை நாம் உணர்ந்து அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை என அறிந்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நமது தாய்மொழியில் பேசுவது, எழுதுவது, படிப்பது அவசியம் என்பதை நாம் உணர்ந்தால் மொழிகளின் அழிவு பற்றியக் கவலையும் தேவையில்லை. அதனை நமக்கு உணர்த்த ஒரு உலக நிறுவனம் “உலக தாய்மொழி தினம்” பற்றிய நினைவூட்டவும் அவசியமில்லை.

எத்னோலாக் பதிப்புகளில், 13 ஆம் பதிப்பு (1996) மற்றும் 18 ஆம் பதிப்பு (2015) ஆகிய இருபதாண்டுக் கால இடைவெளியில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கையைப் பற்றிய ஒரு ஒப்பீடு:

mozhi valarchchikku6

______________________________________________

மேலும் தகவலுக்கு:

[1] தமிழின் முதல் அச்சு புத்தகம், ஆனந்த விகடன் 25Oct, 2006

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=74658&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=1

[2] Tamil saw its first book in 1578

http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-saw-its-first-book-in-1578/article476102.ece

[3] Printing in Tamil language

https://en.wikipedia.org/wiki/Printing_in_Tamil_language

[4] Ethnologue: Languages of the World

13 th Edition – 1996 (http://web.archive.org/web/20000816061247/http://www.sil.org/ethnologue/countries/Inda.html)

14 th Edition – 2000 (http://archive.ethnologue.com/14/show_language.asp?code=TCV)

15 th Edition – 2005 (http://archive.ethnologue.com/15/show_language.asp?code=tam)

16 th Edition – 2009 (http://archive.ethnologue.com/16/show_language.asp?code=tam)

17 th Edition – 2014 (http://www.ethnologue.com/17/language/tam/)

18 th Edition – 2015 (http://www.ethnologue.com/language/tam)

19 th Edition – 2016 (http://www.ethnologue.com/)



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
RE: மொழி வளர்ச்சிக்கு உதவிய சமயப்பணி முயற்சிகள் தேமொழி
Permalink  
 


Pannir Selvam

438 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் தமிழ் எழுத்துருவிலேயே அச்சிலேறிய முதல் தமிழ்ப் புத்தகத்தில். போர்த்துக்கீசிய மொழியில் இருந்து ‘ஃபிரான்சிஸ் சேவியர்’ (Francis Xavier) தமிழில் மொழிபெயர்த்த மறை நூலைப் போர்த்துக்கீசியரான ‘ஹென்றிக்ஸ் பாதிரியார்’ (Portuguese Jesuit priest, Henrique Henriques, 1520–1600) பதிப்பித்தார். தமிழ் அச்சு நூலின் தந்தை எனவும் இவர் போற்றப்படுகிறார். இவர் முயற்சியால் கொல்லத்தில் தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு, கோவாவில் உள்ள அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு, கொல்லத்தில் 1578-ஆம் ஆண்டில் (October 20, 1578) வெளியான இந்நூலின் பெயர் “தம்பிரான் வணக்கம்” (Doctrina Christam en Lingua Malauar Tamul / Thambiran Vanakkam). இந்நூல் உருவாக நிதியுதவி அளித்தவர்கள் தூத்துக்குடியில் வாழ்ந்த மீனவர்கள். இந்திய மொழி ஒன்றில், அந்த மொழியின் எழுத்துருவிலேயே அச்சிடப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியது இந்தத் தம்பிரான் வணக்கம் நூல்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard