New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !! சுபாஷ் சந்திரன். ப


Guru

Status: Offline
Posts: 24811
Date:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !! சுபாஷ் சந்திரன். ப
Permalink  
 


 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !!

சுபாஷ் சந்திரன். ப 

May 27, 2017

 

Siragu pirappokkum1

வள்ளுவன் இயற்றிய உலகப் பொதுமறையில் பெருமை என்ற அதிகாரத்தின் 2 வது குறள் -

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்” !!

பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று.

ஆனால் பிறப்பில் பேதம் கற்பிக்கும் சாதி தமிழ்ச் சமூகத்தில் நுழைந்து நம்மை பிளவுபடுத்தியது. சாதி என்பது ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஒரு சமூக அவலம், அது ஒரு உரிமை மீறல், பாகுபடுத்தி நடத்துதல், ஒரு வன்முறை என்பதை பலரும் உணரவேயில்லை. சாதிய படிநிலையில் மேல் சாதி உயர்ந்த சமூக நிலையும், கீழ் சாதி தாழ்ந்த சமூக நிலையும் கொண்டவர்களாக கருதப்படுகின்றார்கள். இந்நிலையான வேறுபாட்டை நிலைநாட்டும் வண்ணம் பல்வேறு சமூக மரபுகளும் சடங்குகளும் அம்மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கின்றது.

இன்று தமிழர்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளனர், அக்காலத் தமிழர் கடல்  கடந்து வாணிபம் செய்தனர், இக்காலத் தமிழர் கணினித் துறையில் பணியாற்றுகின்றனர். ஆனால் சாதி எனும் பிறப்பினால் பேதம் கற்பிக்கும் இழிநிலையை இந்த தகவல் தொழில் நுட்பப் புரட்சிக் காலத்திலும் விடுவதாக இல்லை.

குறுந்தொகை பாடல்:

யாயும் ஞாயும் யாரா கியரோ,

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,

யானும் நீயும் எவ்வழி யறிதும்,

செம்புலப் பெயனீர் போல,

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

பொருள்:

உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. ஆயினும் நாம் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் பாலை நிலத்தில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டனவே என்று பாடி காதல்கொண்ட தமிழினம், இன்று காதலை மறுத்து ஒடுக்கப்பட்டோர் தலையை வாங்குகின்றது.

கற்பொழுக்கம், களவொழுக்கம் என்பதே தமிழர் பண்பாடாக இருந்தது என சங்கப்பாடல்கள் இயம்புகையில், இன்றோ ஒரு பெண்ணுக்கு தன் தலைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்த தமிழ்ச் சமூகம் மறுத்து வைத்திருக்கின்றது. இங்கு எத்துனை கொலைகள் சாதியின் பெயரால் இன்றும் நடைபெறுகின்றன என்று எண்ணிப்பார்த்தால் வேதனை தான் மிஞ்சுகிறது. அதுவே சாதி மாறிய இருவர் காதல் புரிவதையும், திருமணம் புரிவதையும் தடுக்கின்றது. இளவரசன், கோகுல் ராஜ், சங்கர் என வரிசையாக பிறப்பின் அடிப்படையில் கற்பனை வடிவான சாதியைக் கூறி கொலைகள் செய்கின்றது.

Siragu-pirappokkum4

உலகில் யார்வேண்டுமானாலும் மதம் மாறிவிடலாம், தொழில் மாறிவிடலாம் ஆனால் இந்திய சாதிய முறையில், பிறப்பால் ஒரு சாதியில் பிறந்த ஒருவர் வேறு ஒரு சாதிக்கு மாற முடியாது. அதனையே புற்றீசல்கள் போல முளைத்துள்ள சாதி சங்கங்களும் சாதி மட்டுமே நிரந்தரமானது அழிக்கமுடியாதது என கொக்கரிக்கின்றன.

இந்த கொக்கரிப்பு இந்தியாவிற்கே  எடுத்துக்காட்டாக திகழும் தமிழ்மண்ணில் எப்படி சாத்தியமானது என்று எண்ணவேண்டியுள்ளது. சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட நாட்டில், முதல் சட்டத்திருத்தம் 1951-இல் தந்தை பெரியார் அவர்களின் போராட்டத்தின் காரணமாக திருத்தப்பட்டு அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி உரிமை வழங்கப்பட்டது.

அப்படி இந்தியா துணைக்கண்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருந்த தமிழ்நாடு, இன்று சாதி வெறியர்களினால் பாழாகிறது என்ற பதைப்பு தமிழகத்தில் உள்ள அனைத்து நடுநிலையாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலை மாற என்ன செய்யவேண்டும்?. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் குரலை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து குழப்ப நிலையில் உள்ள மக்களிடம் விளக்க வேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கனியன் பூங்குன்றனார் கூறிய சிறப்புப்பெற்றத் தமிழகம் எங்கே?.

சொந்த ஊரிலேயே, மண்ணின் மைந்தர்களை கேளிர் உறவினனாக ஏற்காது கொலை செய்கிறது இன்றைய தமிழகம்.

இந்த இழிநிலை மாறவேண்டும் எல்லோரையும் உறவாக நினைத்து வாழ்ந்த நிலையில், இடையில் வந்து நம்மை பிளவுப்படுத்திய சாதி முற்றிலும் அளிக்கப்படவேண்டும்.

மக்களிடமும் மனமாற்றம் தேவை. அது சாதி ஒழிப்பு என்ற சுய சாதிப் பற்றை துறப்பதிலிருந்தும், சாதி மறுப்பு திருமணங்களில் இருந்தும் துவங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தரணி ஆண்ட தமிழினத்தில் பிறப்பில் வேற்றுமை இல்லை என்று உறக்கச் சொல்வோம் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” !!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard