New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சமணர்கள் பேராசிரியர். க.பூரணச்சந்திரன்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
சமணர்கள் பேராசிரியர். க.பூரணச்சந்திரன்
Permalink  
 


 சமணர்கள்

பேராசிரியர். க.பூரணச்சந்திரன் 

Oct 17, 2015

samanargal2ஏறத்தாழ கி.மு. 500-400 காலப்பகுதியில்தான் வடநாட்டுக் கருத்துகள் தமிழ் இலக்கியத்தில் புகுந்திருக்க இயலும். பொதுவாகச் சங்க இலக்கியத்தின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டு முதலாக கி.பி. முதல் நூற்றாண்டு வரை கணிக்கப்படுகிறது. சங்க இலக்கியம் இருவேறு இழைகளால் பின்னப்பட்டிருக்கிறது. குறுநில மன்னர்கள், பழங்குடி இனத்தவர்கள், நாட்டுப்புறங்களிலும் காட்டுப்புறங்களிலும் வாழ்ந்த மக்கள் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்கள் ஒருபுறம். மூவேந்தர்கள், நகர்ப்புற வாழ்க்கை, மருதநில வாழ்க்கை, கிழார்கள் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்கள் மறுபுறம். சுருங்கச் சொன்னால், மூவேந்தர்களுக்கு முந்திய வாழ்க்கை, மூவேந்தர்களுக்குப் பிந்திய வாழ்க்கை என்ற இரு பகுதிகளைச் சங்க இலக்கியத்தில் (அகநூல்கள் உட்பட) தெளிவாகக் காண இயலும்.

மூவேந்தர்களுக்குப் பிந்திய வாழ்க்கையைச் சித்திரிக்கும் இலக்கியப் பகுதிகளில் வடமொழிக் கருத்துகள் (யாகம் போன்றவை பற்றிய செய்திகள்) விரவியுள்ளன. வடமொழிச் சொற்களும் கலந்திருக்கின்றன. வடமொழிக் கருத்துகளின் தாக்கம் தமிழகத்தில் ஏற்பட்ட சமயத்தில் அல்லது அதற்குப் பிறகு சங்க இலக்கியத்தின் இந்தப் பகுதிகள் எழுந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது. வடநாட்டிலிருந்து பிராமணர்களும் பிறரும் தென்னாடு நோக்கிவந்து தமிழ்ப்பண்பாட்டுடன் கலந்து விட்ட காலம் ஏறத்தாழ கி.மு. நான்காம்-மூன்றாம் நூற்றாண்டு அளவில் இருக்கலாம். குறிப்பாக, ஜைன, பௌத்த மதங்களின் சிந்தனைகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுவதால், ஏறத்தாழ மகாவீரர், புத்தர் போன்றோரின் காலத்தை ஒட்டியே இத்தகைய கலாச்சாரப் படையெடுப்பு நிகழ்ந்திருக்க இயலும். ஒரு மதம் தோன்றியவுடன் அதைப் பரப்பவேண்டும் என்ற வேகம் காணப்படுவது இயற்கை ஆதலின், இப்புதிய மதங்களின் கருத்துகளைப் பரப்பவேண்டும் என்ற ஆவல் மிக்கவர்களும், தென்னாடு நோக்கி அதுவரை வராத வேதப்பண்பாட்டைச் சேர்ந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டு அளவில் தமிழகத்துக்கு வந்துசேர்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில் சமணக் கவிஞர்களும் பௌத்தக் கவிஞர்களும் உள்ளனர். தமிழின் ஆதிநுலான தொல்காப்பியமும் தமிழின் தலைசிறந்த இலக்கியமான திருக்குறளும் ஜைனர்களால் (சமணர்களால்) இயற்றப்பட்டவை என்று சொல்லப் படுகின்றன.

இந்து மதம் என்பதற்கு அடிப்படையாக இருக்கும் கருத்துகளில் கர்மவினை, மறு பிறப்பு பற்றிய சிந்தனைகள் முதன்மை வகிக்கின்றன. கூடிய விரைவிலோ அல்லது சற்றுப் பின்னரோ யாராவது நிச்சயமாக கர்மவினை பற்றிய கருத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள் என்ற அளவுக்கு அதற்கு வேத அடிப்படை இருக்கிறது. அதைத் தெளிவாக வெளிப்படுத்தியவை உபநிடதங்கள். ஆனால் ஜீவான்மாவையும் பரமாத்மாவையும் ஒன்றுபடுத்தி நோக்குவது, மறுபிறவி, மறுபிறவியிலிருந்து துறவின் வாயிலாகவும் கடுநோன்பின் வாயிலாகவும் விடுதலை எய்துதல் ஆகிய சிந்தனைகளுக்கும் வேதங்களுக்கும் தொடர்பில்லை. ஆகவே சங்க இலக்கியம் உட்படத் தமிழ்ச் சிந்தனையில் காணப்படும் இவை நம்மை வேதத்திற்கு அப்பாலான மூலங்களைத் தேடுமாறு விதிக்கின்றன.

உபநிடதங்களின் காலம் ஏறத்தாழ கி.மு. 500-400 காலப்பகுதி என்று கருதப்படுகிறது. வேதச்சார்பற்ற, நாட்டார் தொல்வழக்குகளிலிருந்து தோன்றிய, அல்லது வேதங்களைப் புறக்கணிக்கக்கூடிய பல கடுந்துறவு இயக்கங்கள் அக்காலப்பகுதியில் இருந்தன. இந்த இயக்கங்கள் கண்டிப்பாக உபநிடதங்களுக்குள் நுழைந்திருக்கலாம், அல்லது அவற்றை பாதித்திருக்கலாம். வினைக்கோட்பாட்டின் முக்கியமான பல விவரங்கள் ஜைன மதத்திற்குள் வளர்ச்சிபெற்றவை. அதிலிருந்து அவை பௌத்தத்திற்கும் பிறகு இந்து மதத்திற்கும் வந்தன. சான்றாக, ஜைனர்கள் சைவ (மரக்கறி) உணவுண்ணலை மிகத்தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்கள். மிகச்சிறிய பூச்சிகளைக்கூடக் கொல்லலாகாது என்பது அவர்கள் கொள்கை. இது மிக அதிகமாக இந்து மதத்தைப் பாதித்திருக்கிறது.

வேதநோக்கிலான பார்வையில், ஜைனமதம், பௌத்த மதம், ஆஜீவகம் போன்றவை புறக்குழுக்கள் அல்லது விடுபாட்டுக் குழுக்கள். இவை யாகத்தைக் கடுமையாக வெறுத்தன, வேதங்களை மறுத்தன, பிராமணர்களின் போதனைகளை ஒதுக்கின, ‘தெய்விக அதிகாரத்துக்குத் தலைமை தாங்களே’ என்ற பிராமண உரிமையைக் கேள்விக்குள்ளாக்கின. (ரொமிலா தாப்பர், The Early India). வேதம்சார்ந்த மக்களிலிருந்து இவர்களை வேறுபடுத்திய மூன்று முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:

1. பௌத்தர்கள் தனிப்பட்ட ஆன்மா உண்டு என்பதை மறுத்தனர்.

2. இந்திராதி தேவர்களையும் தேவையற்றவர்கள் அல்லது கீழான நடத்தை கொண்டவர்கள் என வெறுத்தனர்.

2. பிறப்பைவிட நடத்தை தான் உண்மையான மேன்மையை (பிராமணனை) நிச்சயிக்கிறது என்றனர். இக் கருத்து சில உபநிடதங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அக்கால இந்துக்கொள்கைகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் இவை யாவும் வேறுபட்டவை. பௌத்தத் துறவிகள் தங்கள் மடங்களில், முதலில் மழைக்காலங்களில் மட்டும், பிறகு எல்லாக் காலங்களிலுமே ஒன்றாக வாழ்ந்தனர். இந்து சந்யாசிகள் இக்காலப்பகுதியில் பிற மனிதத் தொடர்பின்றித் தனியாக அலைந்தனர். பல குழுக்கள் இச்சமயத்தில் நட்புமுறையில் வாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் இந்து மதத்தின் ஆறு முக்கியத் தத்துவப் பிரிவுகளாக-மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம் என வளர இருந்தவற்றின் விதைகள் இந்தக் காலத்தில் காணப்படுகின்றன.

ஆஜீவகர்கள், தன்னிச்சையான (சுதந்திரமான) சுயம் (Free Will) என்பதை மறுத்தவர்கள். ஜைனர்கள், பௌத்தர்களின் சமகாலத்தினர். சுதந்திரமான சுயம், விருப்புறுதி என்பது வினைக்கோட்பாட்டுக்கு அடிப்படையானது. சங்க இலக்கியங்களில் ஆஜீவகச் சிந்தனைகளின் தாக்கம் மிகுதியாக உள்ளது.

samanargal1பலபேர் நாத்திகவாதம், பொருள்முதல் வாதம் என்பவை ஏதோ இருபதாம் நூற்றாண்டில், பெரியாரும் பொதுவுடைமையினரும் வந்த பிறகு தோன்றியவை என்று நினைக்கின்றனர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே இச்சிந்தனை இந்தியா வில் தோன்றிவிட்டது.

லோகாயதர்கள், சார்வாகர்கள் ஆகியோர் பொருள்முதல்வாதிகள். மறுபிறப்பை இவர்கள் மறுத்தனர். உடல் இறக்கும்போது, அதற்கென(த் தனிப்பட) உருவான உயிரும் இன்மையில் கரைந்துவிடுகிறது என்பது இவர்கள் கொள்கை. பௌதிகப் புலன்களால் கிடைக்கும் தகவல்கள் மட்டுமே அறிவுக்கு அடிப்படை என்றவர்கள் இவர்கள். “வேதங்கள் என்பவை போக்கிரிகளின் பிதற்றல், அவற்றில் உண்மையின்மை, உள்முரண்பாடு, பயனற்ற திரும்பக்கூறல் என்ற முக்குற்றங்களும் உள்ளன” என்று கூறினர் (லோகாயதா, தேவி பிரசாத் சட்டோபாத்யாய எழுதிய நூல்).

ஆனால் பொருள்முதல்வாதிகள் பற்றி நாம் அறியக்கூடியதெல்லாம், அவர்களின் எதிரிகளான வேதச்சார்பினர் எடுத்துக்காட்டுகின்ற செய்திகள்தான், எனவே அவை அவர்களுக்கு நியாயம் வழங்குவன என்று சொல்லமுடியாது. பாலியல் தாராளத்தன்மையை அனுமதிக்கின்ற காமசூத்திரம்கூட (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) பொருள் முதல்வாதம் பற்றிய மிகக் குறுகிய பார்வையையே அளிக் றது. “பொருள்முதல் வாதிகள் சொல்கிறார்கள்: “மக்கள் மதச்சடங்குகளை ஆற்றக்கூடாது, ஏனெனில் அவற்றின் பலன்கள் மறுபிறப்பில்தான் தெரியவரும், மறுபிறவி என்பது சந்தேகத்துக்குரியது.” (1.2.2-3). பொருள் முதல்வாதிகளும், சாதாரணப் பொதுமக்கள் வகையினரான நாத்திகர்களும் (நாஸ்திகர் என்ற சொல்லுக்கு வேர், ந + அஸ்தி என்பது. தேவலோகமோ தேவர்களோ இல்லை என்பவர்கள்.)

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் பொது விவாதக்களங்களில் வேகம் பெற்ற அறிவார்த்தக் கலக இயக்கங்கள் பல தோன்றின. பிராமணர்கள் என்ற சொல் லுக்கு எதிராக உருவான சொல் ஸ்ரமணர்கள். (இதன் பொருள், சிரமப்பட்டு ஊர் ஊராக நடப்பவர்கள், அலைந்து திரிபவர்கள், கடும் நோன்பிகள் என்பது) ஸ்ரமண என்ற சொல், ஆசீவகர்கள், நாத்திகர்கள், லோகாயதர்கள், சார்வாகர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் எல்லாரையும் குறித்தது. (இச்சொல்தான் தமிழில் சமணர்கள் என்று திரிந்து வழங்குகிறது.) ஆனால் பிருகதாரண்ய உபநிடதம், ஸ்ரமணர்கள் என்பவர்களைத் திருடர்கள், கருக்கலைப்பவர்கள், சண்டாளர்கள், புல்காசர்கள் (பறையர்கள்), கடுநோன்பிகள் என்று குறித்தது. (பிருகதாரண்யம், 4.3.22). காலப்போக்கில் ஸ்ரமணர்கள் என்ற சொல், கீழானவர்கள், தீயவர்கள், அல்லது இறுதியாக நிர்வாணத் துறவிகள் ஆகியோரைக் குறிக்கலாயிற்று.

ஸ்ரமணர்களும் பிராமணர்களும் கீரியும் பாம்பும்போல அல்லது பூனையும் நாயும் போலச் சண்டையிட்டுக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது. (ரொமிலா தாப்பர், The Early India). பிராமணர்களுக்குப் பிழைப்பாக இருந்த யாகமுறையை வெறுத்து, காட்டில் தவம்செய்யச் சென்ற, வேதத்துக்குப் புறம்பான ஸ்ரமணர்களை பிராமணர்கள் வெறுத்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் உபநிடதங்களுக்கு பிராமணர்களும் ஸ்ரமணர்களும் அக்காலத்தில் இரு சாராருமே கேட்போராக (ஆடியன்ஸ்) இருந்திருக்க வேண்டும். அவைகளில் சிலவற்றுக்கு அவர்கள் வெவ்வேறு முறைகளில் விளக்கமளித்தனர். பொதுவாக மேல்வகுப்பினரான பிராமணர்கள், கர்ம வினையை விடுதல் என்பதற்கு வேதச் சடங்குகளை விடுதல் என்று பொருள் கொள்வர். ஆனால் புத்தர் உபதேசித்த மாகதி மக்களுக்கு எல்லாச் செயல்களின் பலனையும் கைவிடுதல் என்று அச்சொல் பொருள்பட்டது.

கடைசியாக ஸ்ரமணர்களின் சவால்களுக்கு எதிராக, பிராமணர்கள் துறவின் இலட்சியங்கள் பலவற்றை ஏற்றுக்கொண்டனர், தூய்மை, சுயமறுப்பு, சுயகட்டுப்பாடு இவற்றை உடைய மேல்சாதிச்சார்பான துறவை மட்டும் ஏற்றுக் கொண்டனர், கீழ்ச்சாதிகளிலிருந்து துறவு மேற்கொண்டு அலைந்து திரிந்தவர்களைக் கடுமையாகத் தாக்கினர்.

பிராமண, ஸ்ரமணக் கருத்துகள் யாவுமே உபநிடதங்களை வளப்படுத்தியிருக்கின்றன, எப்போதும் போலவே, இந்தியாவின் வட்டார நம்பிக்கைகள், வழக் காறுகள் தந்த கொடையும் உள்ளது. இன்று இந்துக்களிடம் காணப்படும் உலகளாவிய ஜீவாத்மா பற்றிய கோட்பாடு, மறு பிறப்பு, ஆன்மா ஈடேறுதல் போன்றவை அறிப்படா இடத்திலிருந்து, அறியப்படாத மூலங்களிலிருந்து கிடைத்தவை என்று ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், சிந்துவெளி நாகரிகத்திலிருந்து வந்த கருத்துகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. சிந்துவெளி நாகரிகச் சிந்தனைகள், வேதத்திற்கு தீவிரமான எதிர்க் கருத்துகளின் களஞ்சியம். அதைப் பலர் ஆதிவாசிகளின் கருத்துகளோடு அல்லது தமிழர்களின் கருத்துகளோடு ஒத்தவை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். தனிமனித ஈடேற்றம் அல்லது மோட்சம் என்ற கருத்துக்கும் வேதம் மூலமல்ல. வேதச் சிந்தனைகளின் வளர்ச்சியாக இம்மாதிரிக் கருத்துகளைப் புகுத்தியிருக்கக் கூடியவர்கள் வேத மக்கள் சாராத யாராகவும் இருக்கலாம். தமிழ்ச் சிந்தனையாகவும் இருக்கலாம்.

சங்க இலக்கியத்தில் சமணச் சிந்தனைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன என்ப தில் ஐயமில்லை. வினைக்கோட்பாடு, வீடுபேறு போன்ற கருத்துகள் அவற்றில் உள்ளன. ஆனால் பொதுவாகத் தமிழ் இலக்கியங்கள் இவை எல்லாவற்றையுமே நான்மறை (சார்ந்த சிந்தனைகள்) என்று குறித்துவிடுகின்றன. சங்க இலக்கியத்தை அடுத்துவந்த பக்திக்காலத்தில் இது மிகுதியாயிற்று. பக்தி இலக்கியத்தில் சமணர் மிகுதியாக வெறுக்கப்படுவது, அவர்கள் வேதமரபைச் சேர்ந்தவர்களால் கொல்லப்படுவது போன்றவை அடுத்த காலகட்டத்தில் பார்க்கப்படவேண்டியவை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard