உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் அவர்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றிய நம்பிக்கைகள் பலவிதமானதாகக் காணப்படுகிறது. அவற்றில் சிலவற்றை இன்றும் வழக்கொழியாமல் பாதுகாத்து பின்பற்றி வருகின்றனர். தங்களது எண்ணத்திற்குத் தக்கபடி ஏற்படுகின்ற குறிப்பினுக்குத் தக்கவாறு நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அக்குறிப்புகள் நன்மை சார்ந்ததாகவோ அல்லது தீமை பற்றிய குறிப்பினை வெளிப்படுத்துவனவாகவோ இருப்பதாக பழந்தமிழர்கள் கருதியும் வந்துள்ளனர். அவைகள் பற்றிய பதிவுகளையும் இட்டுச் சென்றும் உள்ளனர். தமிழர்களது இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மட்டுமல்லாது, பிற காப்பிய நூலான சிலப்பதிகாரம் உட்பட சில நூல்களிலும் இவை காணக்கிடைக்கின்றன. அவை பற்றி இப்பகுதியில் காண்போம்.
நாளும் கோளும்:
பழந்தமிழர் தங்களது வாழ்வில் ஏதேனும் ஒரு முக்கிய செயலை தொடங்கும்முன் நல்ல நாள் பார்த்தும், நல்ல வேளை பார்த்தும் தொடங்கினர் என எண்ணுதல் தகும். ஏனெனில் இன்றைக்கும் வீட்டில் ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற, நாள் கிழமை பார்ப்பது, தொடர்ந்து வாழ்வியலோடு தொடர்வது நாம் அனைவரும் அறிந்தது. இவ்வழக்கமானது இடையில் புகுத்தப்பட்டதன்று. பொதுவாய் ஒரு பழக்கம் என்பது உடனடியாகப் புகுத்தக் கூடியதும் அல்ல. அவை பல்வேறு மாறுதல் அடைந்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருவதாகும். அவ்வகையில் பழந்தமிழர்கள் நாளும் கிழமையும் பார்த்து தங்களது செயலினை ஆற்றியுள்ளனர்.
சங்ககால நூலில் போர் தொடங்குவதற்குமுன் நல்ல நாள் பார்த்தனர் என்றும், அதற்கென அரண்மனை கணியர் என அழைக்கப்படும் நாளை கணித்துச் சொல்பவர்கள் இருந்துள்ளனர் என்றும் புறநானூறு கூறுகின்றது. இதற்கு தொல்காப்பிய நூலிலும் சான்று உள்ளது. “வாள் நாள் கோல் குடை நாள் கோல்” என கூறுவதன் மூலம், போர் தொடுத்து செல்ல வேண்டிய திசையை நோக்கி, நல்ல நாளில் தன் வலிமையான வாளினை வலம் வரச் செய்தனர் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. நல்ல வேளையை முழுத்தும் என அழைத்தனர். அதுவே தற்போது சுபமுகூர்த்தம் என வழங்கப்படுகின்றது.
புலவர்களும் மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறவேண்டி, நாளையும் கோளையும் பார்த்துச் சென்றனர் என புறநானூறு மூலம் நாம் அறியலாம்.
“ நாளன்று போக்கிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்” (புறம்-124)
திருமணச் சடங்குகளையும் நல்ல நாள் பார்த்தே நடத்தினர் என்பது, அக இலக்கியமான அகநானூற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பழந்தமிழர்கள் தங்கள் இல்லில் நடைபெறும் திருமணங்களை திங்களும் உரோகினியும் கூடிய நாளில் நடத்தியுள்ளனர்.
“கனையிருள் அகன்ற கவின்பெறு காலை
கோல்களால் நீங்கிய கொடு வெண்டிங்கள்
கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென” (அகம்-86)
இவ்வரியில் “வெண்டிங்கள் (திங்கள்) மற்றும் கேடில் விழுப்புகழ் (உரோகினி) நாடலை” என்ற பதங்கள் உணர்த்தி வருவதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட பதங்களுக்கு வலுசேர்க்கின்ற விதமாக மற்றொரு பாடலிலும் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“இருவிசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்
கடிநகர் புனைந்து கடவுட் பேணி
படுமண முழவோடு பரூஉப்பணை இமிழ” (அகம்-136)
திங்களும் உரோகினியும் கூடிய நாளை குற்றமற்ற நன்னாள் என, நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் என்றும், அத்தகைய நாளிலேயே பெரும்பாலான திருமணங்கள் நடைபெற்றன என்பது தெளிவு. (திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் – திங்களை உரோகினி கூடிய நன்னாள்).
வெள்ளியும் பிற கோளும்:
“மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மறுங்கின் வெள்ளி ஓடினும்”
இவ்வரிகளானது தூமகேது (கரந்துறை கோள் எனவும் கூறுவர்) எனும் கோளின் தோற்றம் உலகிற்கு பெருந்தீங்கு என்பர். மைம்மீன் ஆனது சனிக்கோளைக் குறிப்பதாகும். புறநானூற்றில் பாரி மன்னனின் பண்புகளைப் பாடுகின்றபோது, ‘சனிமீன் புகையினும்’ – எல்லா திசையிலும் புகை தோன்றி, வெள்ளி தெற்கே நோக்கி ஓடினால் உன் நாட்டில் மழை தவறாது பொழியும் என்று புலவர் கபிலர் போற்றிக் கூறியுள்ளதன் மூலம் இத்தகைய நம்பிக்கை இருந்துள்ளது எனத் தெரிகின்றன.
மேற்கண்ட கருத்தினையே கி.பி 2ம் நூற்றாண்டில் தோன்றிய முத்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் இளங்கோவடிகள். அவை,
“கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினம்” (சிலப்பதிகாரம்)
ஏன், பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலமும் இந்நம்பிக்கையானது தொடர்ந்து வந்துள்ளதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. (கரியவன்-சனி கோள்).
பல்லி சகுணம் பார்த்தல்:
பல்லியின் சத்தத்தைக் கேட்டு சகுணம் பார்த்தல், இன்றும் நம்மிடையே தொடர்ந்து வருவதை நாம் அறிவோம். தற்காலத்தில் அவற்றிற்கென பஞ்சாங்க நூல்கள் கூட விற்கப்படுகின்றன. அவற்றில் மேனியில் பல்லி விழுகின்ற இடத்தினைப் பொறுத்து பஞ்சாங்கம் குறிக்கப்பட்டிருக்கின்றன.
சங்ககால நூல்களிலும் இவைகள் பற்றின நம்பிக்கைகளை மக்கள் கொண்டிருந்தனர் என பல சான்றுகள் காணக்கிடைக்கின்றன. அவை
“மையல் கொண்ட மதன்ழி இருக்கையள்
பகுவாய் பல்லி படுதொறும் பரவி
நல்ல கூறுகென நடுங்கி” (அகம்-289)
இவ்வரிகளானது தலைவனைப் பிரிந்த தலைவி, தன் அன்புக் காதலன் வரும் நாளை எதிர் நோக்கியிருக்கும் வேளையில், பல்லியானது நிலைக் கதவுகளிலும், சுவர்களின் மீதும், இருப்பதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள், பல்லியை நோக்கி நல்ல பலன் கூறுதல் வேண்டும் என தன் மனதில் எண்ணிக் கொள்கின்ற விதமாக அமைந்திருப்பதிலிருந்தே, அக்கால மக்களின் நம்பிக்கைகளின் ஒன்றில் முக்கியமானதாக இவை இருந்துள்ளது எனவும் அறிய முடிகிறது.
பல்லியின் சொல் கேட்டு தன் பயணத்தை சிறிது நிறுத்தி பின்னர் பயணத்தைத் தொடர்ந்தனர் எனவும் தெரியவருகின்றது. அகநானூறு நூலில் 389ம் பாடல் கூறுகின்றது.
கண்கள் துடித்தல்:
பெண்களுக்கு இடக்கண்ணும், ஆண்களுக்கு வலக்கண்ணும் துடித்தால் நன்மை என இன்றும் நம் தமிழர்களின் வழக்குகளில் இருப்பதைக் காண்கிறோம். சிலப்பதிகாரத்தில் இதற்குத் தகுந்த சான்று கிடைத்துள்ளது. அவை,
மேற்கண்ட வரிகள், கண்ணகி கோவலனைப் பிரிந்து வருத்தமுற்றிருந்தபோது, இந்திர விழாவில் கோவலனும் மாதவியும் கலந்து இன்புற்றிருக்கின்ற அவ்வேளையில், கண்ணகிக்கு வலக்கண்ணும் அதே நேரத்தில் மாதவிக்கு இடக்கண்ணும் துடித்தன என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதன் மூலமும் பழந்தமிழர் வாழ்வில் நீண்ட பழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். எனினும் ஏனைய சங்க நூல்களில் இதனைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். எனினும் இந்நூல் கி.பி 2ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாலும் இப்பழக்கமானது அம்மக்களிடையே தொடர்ந்து வந்துள்ளமைக்கு கால ஆதாரமே சாட்சியாக நமக்குக் கிடைக்கின்றது.
குயிலும் காக்கையும்:
தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் விரைவில் வருவான் என்று முன்னறிவிக்கும் செயலாக குயில் கூவுதல் நல்ல சகுனமாகப் பார்க்கப்பட்டிருப்பதனை அறியலாம். அவை,
போருக்குச் செல்லும் வீரர்கள் சில பறவைகளின் ஒலியைக் கேட்டும் சகுனம் பார்த்திருந்தினர் என சில பதிவுகளின் வாயிலாக கிடைக்கின்றது. மேலும் அவை வீரர்களுக்கு உற்சாகத்தையும் கொடுத்துள்ளன என்பதை அறிகிறோம்.
“புள்ளிடை தட்ப” (புறம்-124)
“புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை” (204)
ஆகிய வரிகளிலிருந்தே நமக்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.
கரிக்குருவியும் பிறவும்:
கரிக்குருவியின் ஒலி அழிவுக்கு அறிகுறி என்று பொதுவான கருத்தாக நிலவியிருந்தன என்பதை பதிற்றுப்பத்து நூல் காட்டுகின்றது. ஆந்தையின் அலறலை தீய சகுனம் எனக் கருதினர்.
முரசுக் கடவுளுக்கு பலிகொடுத்து அவற்றை காக்கையும் பருந்தும் உண்டால் பெரும் வெற்றி கிட்டும் எனவும், மேலும் பேய் பற்றிய நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் எனவும் “கருங்கண் பேய் மகள் கைபுடைய” எனும் வரியின் மூலம் நாம் அறியலாம்.
விரிச்சியும் உன்னமும்:
ஒரு செயலை தொடங்குகின்ற பொழுது பிறர் கூறும் சொற்களையே சகுனமாகக் கொள்வதாகும். இன்றைக்கும் நாம் இம்முறையைக் காண்கின்றோம். இம்முறையானது பழந்தமிழரின் வாழ்வியலில் இருந்துள்ளது என தெரிகிறது. விரிச்சி என்பதன் பொருள் நற்சொல் கூறுதல் என்பதாகும்.
“நெல்நீர் விரிச்சி யோர்க்கும்
சேம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா” (புறம்-280)
ஆகிய வரிகள் நமக்கு தக்கச் சான்றாக அமைந்திருக்கின்றன. முல்லைப் பாட்டிலும் இதற்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன. அவை
“நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்லை-9-11)
இன்றைக்கும் தமிழர்களது வீட்டின் நிகழ்ச்சிகளில் முதலில் வாழ்த்துபவர்களாக முதுமை வயதான பெண்களே இருக்கின்றனர். ஒரு செயலைத் தொடங்கும் முன் பெரியோர்களிடம் ஆசிபெறுதல் இதனுடன் சேர்ந்ததாகும். இம்முறை இன்றும் வழக்கத்தில் இருந்துவருவதனையும் காண்க.
ஊனம் என்பது ஒருவகை மரம் ஆகும். இம்மரம் தழைத்து வளர்ந்திருக்குமாயின் தாங்கள் தொடங்க இருக்கின்ற செயல் வெற்றி பெறும் எனவும், வாடி இருக்குமாயின் தீய செயலில் முடியக்கூடும் என குறிப்பு உணர்த்துவதாகக் கருதப்பட்டுள்ளது.
இவ்வரிகள் மேற்சொன்ன கருத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதைக் காண்க.
கனவும் நிகழ்வும்:
கனவு என்பது குறிப்பிட்ட ஒரு நிகழ்வினை உணர்த்துவதாக இருக்கின்றன என இலக்கியங்களின் வாயிலாக நாம் பல்வேறு இடங்களில் காணலாம். இன்றும் இது குறித்து ஜோதிடம் பார்க்கப்படுகின்றன.
சிலப்பதிகாரத்தில் மதுரைக்கு செல்லும் முன் கண்ணகி கனவு கண்டாள் என இளங்கோவடிகள் பதிவு செய்கின்றார். அக்கனவானது இருவரும் வேறொரு நாட்டிற்குச் செல்வதும், அங்கே கோவலன் கொலை செய்யப்படுவது போன்ற தீய கனவினைக் கண்டாள் என்றும் கூறுகிறார் ஆசிரியர்.
என்ற வரியின் மூலம் இளங்கோவடிகள், கனவு நம் வாழ்வில் நிகழப்போகும் மற்றொரு வினைக்குக் குறிப்புணர்தலாக இருப்பதாக அவர் இதன் மூலம் தெரியப்படுத்திவிடுகிறார்.
புறநானூற்றிலும் கனவினால் ஏற்பட்ட ஓர் அச்சத்தைப் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை,
“எயிறு நிலத்து வீழவும் எண்ணெய்ஆடவும்
களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
வெள்ளி றோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவின் அரியன கானா நனவின்” (புறம்-41)
இப்பாடல் வரிகள், சோழன் கிள்ளி வளவனின் பகைவர்களுக்கு வற்றிய மரம் தீப்பிடித்து எரிவது போலவும், எரிகொல்லி விழுவது போலவும், யாரோ ஒருவர் தன் தலையில் எண்ணெய் வார்ப்பது போலவும், தன் படையானது முழுமையாக வீழ்ந்தன போலவும் கனவு கண்டதாக புலவர் கோவூர் கிழார் பதிவு செய்திருத்தலின் மூலம் கனவில் நிகழ்ந்த நிகழ்வு அவர்களது எதிர்கால வினைகளுக்கு குறிப்புணர்வாக அமைந்திருப்பதனை இங்கே காணமுடிகிறது. மேலும் கனவு நிகழ்வின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர் என இங்கே தெளிவு.
பழந்தமிழர்களின் நம்பிக்கைகளிலிருந்து அவர்கள் வானியல் சார்ந்த அறிவியலிலும் சிறந்து விளங்கியிருந்தனர் என்பதற்கு கோள்களைக் கொண்டு ஆராய்ந்தறியும் திறனையும் பெற்றிருந்தனர் என்பதையும் நம்மால் மறுத்துவிடமுடியாது. மேலும் தமிழரின் நம்பிக்கைகள் பல நம்மை அறியாமலேயே நம்முடன் தற்போதும் தொடர்ந்து வருகின்றன. அவற்றிற்கு ஆதாரமாக புறநானூறு மற்றும் அகநானூறு, சிலப்பதிகாரம் போன்ற நூல்களின் வாயிலாக நம்பத்தகுந்த சான்றுகளின் மூலம் நாம் அறிந்தும், அவற்றினை அனுபவ ரீதியிலும் காண்கிறோம். இப்பழக்கங்கள் பன்னெடுங்காலமாக தமிழர்களின் வாழ்விலும் தொடர்ந்து வருபவை என இங்கே அறியவும் முடிகிறது.
பார்வை நூல்கள்:
தமிழ் மொழி இலக்கிய வரலாறு – டாக்டா மா.ராசமாணிக்கனார்
தமிழர் நாகரீகமூம் பண்பாடும் – அ.தட்சிணாமூர்த்தி
புறநானூறு மூலமும் உரையும் – புலியூர்க்கேசிகன்
அகநானூறு மூலமும் உரையும் – புலியூர்க்கேசிகன்
முல்லைப் பாட்டு மூலமும் உரையும் – கதி முருகு.
பதிற்றுபத்து மூலமும் உரையும் – ஒளவை சு.துரைசாமி பிள்ளை.