New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கற்பு நெறியும், கற்புசார் புனைவுகளும் முனைவர் மு.பழனியப்பன்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
கற்பு நெறியும், கற்புசார் புனைவுகளும் முனைவர் மு.பழனியப்பன்
Permalink  
 


 கற்பு நெறியும், கற்புசார் புனைவுகளும்  முனைவர் மு.பழனியப்பன்  Aug 20, 2016

Siragu karpu1

தமிழ்ச் சமுதாயத்தில் வரையறுக்கப்பெற்றுள்ள, அக இலக்கண மரபுகள் என்பன தனித்தன்மை வாய்ந்தன. தமிழர்கள் தங்களுக்கு அமைத்துக்கொண்ட இல்வாழ்க்கை முறையின் செறிவுகள் அக இலக்கண மரபுகளாக உறுதிப்படுத்தப்பெற்றன. தமிழ் இலக்கண நூல்களில் அகத்திணை பற்றிய பொதுவான செய்திகள் தரப்பெற்று, அதன் பின்னர் களவு, கற்பு என்று இரண்டு வாழ்க்கை முறைகள் அமைத்துக் கொள்ளப்பெற்றுள்ளன. அகத்திணை பற்றிய பொதுவான செய்திகள் என்பதில் முக்கிய இடம்பெறுவன குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை போன்ற திணைப் பகுப்புகள் ஆகும். இவற்றிக்கென தனித்த இடம், பொருள், ஒழுக்கம் உண்டு. அவை காலந்தோறும் மாற்றமடையாமல் ஏற்கப்பட்டு வருகின்றன. தற்போது இவ்வொழுக்க நடைமுறை தளர்ந்து அனைத்து நிலமும் ஒன்று கலந்து நின்றாலும் படிக்கவும் பண்பாட்டை அறிந்து கொள்ளவும் இவை அடையாளங்களாக நிற்கின்றன.

இதற்கு நிலையில் கைகோள் எனப்படும் இரு வாழ்க்கை நிலைகளை அக இலக்கண நூல்கள் காட்டுகின்றன. கைக் கொள்ளப்பெறும் வாழ்க்கை முறை கைகோள் ஆகின்றது. காதல் சார்ந்த வாழ்க்கை முறை களவு எனவும், திருமணம் முடிந்து இல்லறத்தை நல்லறமாக வாழும் கணவன் மனைவி வாழ்க்கை முறை கற்பு எனவும் கொள்ளப்பெறுகின்றது.
அகத்திணையின் பொதுநிலையில் காட்டப்பெற்ற குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை போன்றன களவு வாழ்க்கை சார்ந்தனவா அல்லது கற்பு வாழ்க்கை சார்ந்தனவா அல்லது இரண்டிற்கும் பொதுவானவையா என்ற நிலையில் சிந்தனை செய்து பார்த்தால் சில புரிதல்கள் கிடைக்கும்.

குறிஞ்சியில் நடைபெறும் புணர்தல் என்ற ஒன்று களவிலும், கற்பிலும் நிகழ வாய்ப்புண்டு. முல்லையின் ஒழுக்கமான பிரிந்து சென்ற தலைவன் வரும் வரை ஆற்றியிருத்தல் என்பது இரு கைகோளிலும் நிகழ வாய்ப்புண்டு. இருந்தாலும் கற்பு என்ற கைகோளில் அதற்கு பெருத்த வாய்ப்பு உண்டு. மருதத்திற்கு உரிய ஊடல் என்பதும், நெய்தலுக்குரிய இரங்கல் என்பதும் தலைவன் தலைவிக்கு உரிமையான பின்னர் மட்டுமே அதாவது திருமணம் ஆன பின்னரே நிகழத்தக்கன என்பது குறிக்கத்தக்கது.

ஒரு தலைவி தலைவன் மீது ஊடல் கொள்ளுதல் என்பது இலக்கணங்களைப் பொறுத்தவரையில் பரத்தை மாட்டுத் தலைவன் சென்று வந்தமை அறிந்து தலைவி ஊடல் கொள்ளுதல் என்பதாகவே கொள்ளப்பெற்றுள்ளது. தலைவன் கடலில் மீன் பிடிக்க சென்ற காலத்தில் தலைவி அவனுக்காக இரங்கி அவன் வரவிற்காக வெளிப்பட இரங்கி நிற்பது என்பது கற்பு காலத்தில் மட்டுமே நிகழத்தக்க வாய்ப்புடையது. பாலையில் தலைவியைத் தலைவன் களவு காலத்தில் பிரிகின்ற பிரிவிற்கு ஓரளவிற்கு வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் தலைவனும் தலைவியும் உடன் போக்கு செல்லும் நிலையில் அது கற்பு சார்ந்ததாகிவிடுகிறது.

Siragu karpu4

தலைவனும் தலைவியும் கணவன் மனைவி ஆன பின்பு இல்லற காலத்தில் ஏற்படும் பிரிவே பெரும்பாலும் ஏற்கத்தக்கதாக உள்ளது. கைக்கிளை என்பது ஒரு தலைக்காமம் சார்ந்தது. கைக்கிளையை இலக்கண நூல்கள் களவின் ஆரம்ப நிலை என்று கொள்கின்றன. இதன் காரணமாக கைக்கிளை என்பதை களவு சார்ந்தமைவது என்று கொள்ளலாம். பெருந்திணை என்பது பொருந்தாக்காமம். வயது பொருத்தமில்லாத நிலையில் அமைவது என்பதால் இதுவும் களவின் பாற்பட்டது இவ்வளவில் களவுக்கும் கற்பிற்கும் பொதுநிலையில் காட்டப்படும் குறிஞ்சி முதலான திணைகளில்  பெரும்பாலானவை கற்பு வாழ்க்கை சார்ந்த நிலைப்பட்டனவாகவே அமைந்திருக்கின்றன என்ற முடிவினுக்கு வர முடிகின்றது. அதாவது முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன கற்பு என்ற கைகோள் வழிச் சார்புடையன என்பது அறியத்தக்கது. எனவே கற்பு வாழ்க்கை என்பது மகிழ்தல், ஆற்றி இருந்தல், ஊடல், இரங்கல், பிரிவு என்ற பிரிவுகளை உள்ளடக்கியது என்று கொள்வதில் மாறுபாடு தோன்றப்போவதில்லை.

இதனையே நம்பி அகப்பொருள்
“பொற்புஅமை சிறப்பின் கற்பு எனப்படுவது
மகிழ்வும், ஊடலும், ஊடல் உணர்தலும்,
பிரிவும், பிறவும் மருவியது ஆகும்”
( நம்பியகப்பொருள். நூற்பா.எண். 200)

என்று வகைப்படுத்திக் காட்டுகின்றது. இவ்வகைப்படுத்தல்களில் குறிஞ்சி, முல்லை, மருதம் போன்ற நிலங்களின் உரிப்பொருள் அமைந்திருப்பதைப் பின்வரும் பட்டியல் காட்டுகின்றது.
மகிழ்வு (புணர்ச்சி) – குறிஞ்சி
ஊடல்           – மருதம்
பிரிவு           – பாலை
பிற (முல்லை, நெய்தல்)     – இருத்தல், இரங்கல்
என்ற நிலையில் ஐந்து திணைகளையும் கற்பியல் சார்ந்தன என்று கொள்வது தகுந்ததாகின்றது.

இதே நூற்பாவை இலக்கண விளக்கம் அப்படியே வழி மொழிகின்றது. (இலக்கண விளக்கம் 549), இதனை மிகச் சிறிதாய் வேறுபடுத்தி அமைக்கிறது முத்துவீரியம்.
“பொற்பமை சிறப்பின் கற்பெனப்படுவ
மகிழ்வும், ஊடலும், ஊடல் உணர்தலும்
பிரிவும் பிறவும் மருவியதாகும்” (முத்துவீரியம், நூற்பாஎண். 853)

இதன் காரணமாக கற்பு என்பது ஒரு வாழ்க்கை முறை என்பதாக இலக்கண நூல்கள் கொண்டுள்ளன என்ற முடிவிற்கு வரமுடிகின்றது.

Siragu karpu2

தலைவனும் தலைவியும் கணவனும் மனைவியுமாக ஆகிறார்கள். அவர்கள் புணர்வில் மகிழ்கின்றனர். இவ்வின்பம் தவிர்த்து மற்றவள் இன்பம் கருதித் தலைவன் பிரிவதால் இவர்களுக்குள் ஊடல் வருகிறது. இந்த ஊடலை உணர்த்த, களைய தோழி போன்ற வாயில்களின் உதவி தேவைப்படுகிறது என்பது இலக்கண நெறி. இதுவே ஊடல் உணர்தல் ஆகின்றது. பிரிவு என்பது கல்வி, போர் கருதி பிரிகின்ற பிரிவுகள் பற்றியது.

கற்பு நிலையில் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் வாழ்வில் மாற்றாளாகிய பரத்தையை நாடித் தலைவன் செல்லும் நிலையில்  ஊடல் தோன்றுகிறது. இந்த இடத்தில்தான் கற்பு பெண் வயப்பட்டதாக மட்டும் உரு மாறுகின்றது. தலைவன் இன்னொருத்தியை நாடிச் சென்றாலும் தலைவி ஏற்கிறாள். ஆனால் தலைவி இன்னொருவனை நாடிச் செல்வதில்லை. தலைவனுக்குத் தரப்படும் புணர்வு விடுதலை தலைவிக்கு இல்லை. ஏன் இல்லை என்ற கேள்விக்கு அடிப்படை உண்டு. தமிழ்ச்சமுதாயத்தில் பெண்களின் உடல் இயற்கை கருதி சில நாள்கள் தலைவனின் மகிழ்விற்கு உரியவளாக அமையாத நிலையில் தலைவன் வெளியேறுகிறான். அவனின் உடல் தேவையை நிறைவேற்ற முடியாத தன் உடல் இயற்கையை எண்ணி அமைதி காக்க வேண்டிய நிலைக்கு அன்றைய தமிழ் உலகம் அவளைக் கட்டுப்படுத்தியுள்ளது.

தலைவனின் நாள்தோறுமான வேட்கைக்கு மற்றொரு பெண் இடம் தருவது என்பது அவளின் பொருள் தேவை கருதியதாகி விடுகின்றது. இந்நிலையில் தலைவன் அனைத்துப் பொருளையும் அவளிடத்தில் இழந்துவிடாது இருக்கத் தலைவி ஊடல் கொள்கிறாள். ஊடலைக் கைவிட மறுக்கிறாள். பின்னர் ஏதோ ஒரு வகையில் தன் கணவனைத் தன்னுடன் இருத்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுகிறாள். இந்நிலையில் தான் கற்பு வாழ்க்கை என்பது தலைவிக்கு நெறி பிறழாத் தன்மையை அளித்துவிடுகிறது. தலைவனுக்கு அதில் இருந்து விலக்கு அளித்துவிடுகிறது.
“கற்பெனப்படுவது கற்பினை வழுவாது
தற்கொண்டானையும் தன்னையும் பேணி
இல்லறத்து ஒழுகும் இல்லறக் கிழத்தி
நல்லறத்தவர் மதிநன்மாண்பதனோடு
மகிழ்ச்சியும் ஊடலும் ஊடல் உணர்தலும்
மகிழ்ச்சியில் பிரிவுடன் பிறவும் இயன்ற
மகிழ்ச்சியின் எய்தி இல் பொருந்துவதாகும்”
(மாறன் அகப்பொருள், நூற்பா எண். 225)
என்று மாறனகப்பொருள் கற்பிற்கு இலக்கணம் வகுக்கிறது.

இந்நூற்பாவைக் கூர்ந்து நோக்கினால் இது தலைவியை முன்னிலைப்படுத்திச் சொல்லியது என்பது தெரியவரும். இருவருக்கும் பொதுவான கற்பு வாழ்க்கை முறை, தலைவிக்கு மட்டுமே உரியதாக மாறிய மாற்றத்தின் அடையாளம் இந்த நூற்பாவாகும். கற்பினை வழுவாது, தற்கொண்டானையும் தன்னையும் பேணி இல்லறத்து ஒழுகும் இல்லறக் கிழத்தி| என்ற நிலையில் இந்நூற்பா கற்பு நெறி என்பதைப் பெண்ணுக்கு மட்டும் ஆக்கி நிற்கிறது.
தொல்காப்பிய காலத்தில்
“கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
(தொல்காப்பியம், நூற்பா.எண். 1088)

என்ற நிலையில் மட்டும் அமைந்திருந்தது. அதாவது ஒரு தலைவியை தலைவனிடம் அவனின் இணையாகத் தருவது என்பது மட்டுமே தொல்காப்பிய நெறி. கற்பு தலைவனுக்கு உரியது, அல்லது தலைவிக்கு உரியது என்ற அழுத்தங்கள் அதில் இல்லை. கற்பு என்பது ஒரு வாழ்க்கை முறை. அவ்வாழ்க்கை முறையைக் கடைபிடித்து ஒழுகுவது இருவரின் கடன் என்பதாகவே தொல்காப்பியம் கொள்கின்றது.

ஆனால் பின்னால் வந்த இலக்கண இலக்கியங்கள் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் உரியது என்று  வரையறைகளை உருவாக்கிவிட்டன.

Siragu karpu3

இந்தப் பின்னணியில் கற்புடைய பெண்ணின் இலக்கணங்களாக உலகியல் வழக்கிலும், இலக்கியங்களிலும் பல புனைவுகள் புனையப்பெற்றன. அவற்றின் பெருக்கத்தைக் காணும் போது பெண்ணிற்கான வரையறை தமிழ்ச்சமுதாயத்தில் எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளமுடிகின்றது. பின்வரும் அத்தனையையும் இம்மியும் பிசகாமல் காப்பற்றவேண்டிய கடப்பாடுடையவள் முழுமை பெற்ற கற்புடைய பெண்ணாகிறாள்.

1.    கற்பென்பது கணவனினும் தெய்வம் வேறில்லையென வெண்ணிக் கலங்காது அவனை வழிபடுவது இவ்வகை வழிபட்டார் அருந்ததி, உலோபமுத்திரை, மேனை, சுநீதி, சாவித்திரி, அநசூயை முதலியோர்.
2.    கற்புடைய மங்கையர் நாடோறும் தமது இஷ்டதெய்வத்தையும் கணவரையுந் தொழுது எழுந்து காலைக்கடன்களை முடித்து இஷ்ட தெய்வத்தைத் தொழுது அலகால் வீடு முதலியவைகளைப் பிராணிகளுக்கு இம்சை இல்லாமல் பெருக்கிப் புதிய நீரில் பசுவின் சாணத்தைக் கரைத்து மெழுகிட்டு உலந்த பின் கோல முதலியவற்றையிட்டு வீட்டு வேலைகளை முடித்துக் கணவனுக்கு ஆகாரதிகள் உண்பிக்கும் முயற்சியில் மடைப்பள்ளி சேர்ந்து அன்னஞ் சமைத்து கணவனுக்கிட்டு அவன் உண்டபின் உண்பர். பின் அவனுக்கு இதமான தொழில்களைச் செய்து முடித்து அவனுறங்கியபின் உறங்கி எழுமுன் எழுவர்.
3.    கணவன் முன் அழகிய அணி முதலிய அணிவரேயன்றி அவன் வேற்றூர்க்கு நீங்கிய காலத்து அணியார்.
4.    கோபத்துடன் பேசுகையில் எதிர்பேசார். கோபித்து எதைச் சொல்லினும் குணமாகக் கொள்வர்.
5.    தன் நாயகன் பெயர் கூறின் நாயகனுக்கு ஆயுள் குன்றுமெனப்பெயர் கூறார்.
6.    நாயகன் தன்னணிகளைச் சக்களத்தி முதலியவர்க்குக் கொடுக்கினும் மனக்கிலேசமடையார்.
7.    தங்கள் வீட்டைவிட்டு செல்லார். அவ்வாறு செல்லுமாதர் முகங்காணினுங் கோபிப்பர்.
8.    புருஷன் இதைச்செய்க எனின் செய்து முடித்தேன என்பர். திருவிழாக்காணல்,
9.    விரதங்களனுட்டித்தல், சுத்தநதியாடல், தேவரைத் தொழல் ஆகிய இக்காரியங்களைக் கணவரேவலின்றிச் செய்யார்.
10.    வயது முதிர்ந்தவருடனன்றித் தனியே எங்குஞ்சேரார்.
11.    புருஷன் இருந்த பின் அன்றித் தாம் உட்காரார்.
12.    புருஷன்  வைத்த சேடத்தை அமிர்தம் போலுண்பர்.
13.    தம் நாயகன் சொற்படி துறந்தார், தென்புலத்தார், தெய்வம், விருந்து சுற்றம், பசு முதலியவர்க்குப் பகுத்துண்பர்.
14.    நாயகன் விரும்பியவற்றைக் குறிப்பறிந்து செய்வர்.
15.    நாயகனை அவர்தூற்றும் பெண்கள் முகத்தையும் நோக்கார்.
16.    இல்லறத்திற்கு வேண்டுவன செய்வர்.
17.    தகாத காரியங்களைச் செய்து விருதாவாக அழியார்.
18.    காதலர் ஆயுள் வெருக வேண்டி மஞ்சள் பூசுவர்.
19.    கணவன் அழகிலானாயினும், நோய் கொண்டவனாயினும், கிழவனாயினும், பழுதுகூறாது கூடியிருப்பர்.
20.    நாயகன் இறப்பின் தாமிறப்பர்.
21.    அவன் நோய் கொண்ட காலத்துத் துன்பமுறுவர்.
22.    அவன் களிப்புடனிருக்கையில் களத்திருப்பர்.
23.    நாயகன் காலலம்பு நீரைக் கங்கையாக நினைப்பார்.
24.    கற்புடையார் பூத்த மூன்றுநாளும் கணவனைப் பாரார், பேசார்.
25.    நீராடிய பின் நாயகனை நோக்குவர். தாம்பூத்து நீராடுநாட்களில் நாயகன் தம்மூரில் இல்லாவிடில் நாயகனை மனத்தில் நினைத்துச் சூரியனைக் கண்டு துதிப்பார்.
26.    மாமன் மாமியார் அருகிருக்கில் பரிகாச முதலிய சேட்டை புரியார்.
27.    தாம் உண்ணுங்காலத்துக் கணவனழைத்திடில் உண்பது அமுதமேனும் விடுத்துச் செல்வர்.
28.    தந்தை, தாயர், தம்குமரர் முதலியோரினும் கவணவரிடம் அதிக அன்புடன் நடப்பார்.
29.    உரலினும், அம்மியினும், உலக்கையினும், வாசற்படியினும், முறத்தினும் இலக்குமி நீங்குவள் என உட்காரார்.
30.    நாயகனைப் பணியாது தெய்வம் பயணிவோர் நரகமடைவர்.
31.    நாயகன் பழியைப் பிறரிடங்கூறுபவரும், அவனுடன் எதிர்த்துப் பேசுபவரும் நரியாகவும், பெட்டை நாயாகவும் பிறப்பர்.
32.    நாயகன் கோபித்து வசைகூறுங் காலத்து எதிர்வசை கூறுவோர் புலியாகப் பிறப்பர்.
33.    சக்களத்தியைக் கோபிப்பவர் கோட்டனாகப்பிறப்பர்.
34.    தன்னாயக னல்லாதான் எழில்கண்டு களிப்பவர் பைசாசமாவர்.
35.    நாயகன் பசித்திருக்க உண்பவர் பன்றியாகப் பிறப்பர்.
36.    நாயகனிறந்த காலத்து உடனிறப்பவர் அசுவமேதபலடைவர்.
37.    நாயகன் பாபியாயினும் அவனிறந்த காலத்துத் தீக்குளிப்பவர் அந்நாயகனை நரகத்தினின்று மீட்பர். நாயகனுடன் மரணமடைந்த கற்புடையார் தங்கள் தேகத்தில உரோமவரிசைகள் எவ்வளவு உண்டோ அவ்வளவு காலம் கணவனுடன் சுவர்க்கத்துறைவர்.
38.    கற்புடைய மங்கையர் தாங்கள் பிறந்த குலத்தையும் புகுந்த குலத்தையும் சுவர்க்கத்திற் சேர்ப்பர்.
39.    இவ்வகை ஒழுக்கமுள்ள கற்புடையார்கள் கால்வைத்த இடங்கள் பரிசுத்த தலங்களாம். இவர்கள் நீராடுதலால் நதி முதலிய புண்ணியமடையும்.
40.    பொன் மாளிகையாயினும் கற்புடையாள் வசிப்பதில்லையேல் அது பேய் வாழ்க்கையாம்.
41.    வாயு, சூரியன் , சந்திரன் அக்நி முதலிய கற்புடையாளைத் தொடுங்காலத்து மனம் நடுங்குவர்.
42.    கணவரிறந்தபின் மங்கலமிழந்த பெண்கள் தங்கள் கூந்தலை முடிப்பின் காலதூதல் கணவனைப் பாசத்தாற் பிணித்து இழுப்பர்.
43.    கணவனையிழந்த மங்கையர் பகலில் ஒரு போதுண்டு தாம்பூலம், படுக்கை வெறுத்துப் பூமியிற்படுத்து விரதங்களையநுட்டித்துத் தேவதார்ச்சனை செய்து கந்த மூலாதிகளைப் புசித்து உடம்புவிட்ட பின் புருஷலோகமடைந்து கணவனைச் சேர்ந்து சுகித்திருப்பர்.      (அபிதான சிந்தாமணி, பக். 463-464)

என்ற இக்கட்டளைகள் கற்புடைய பெண்கள் கைக்கொள்ள வேண்டிய ஒழுக்கங்களாகக் கருதப்படுகிறது. தற்காலத்தில் இவ்வழக்கங்கள் மீள் பார்வைக்கு உரியன என்றாலும் இந்தப் புனைவுகள் கற்பு என்னும் பெயரால் பெண்கள் ஒரு கட்டுக்குள் வைக்கப்படுவதைக் காட்டுவனவாக விளங்குகின்றன.

கற்பு என்பதை மகிழ்தல், ஊடல், ஊடல் உணர்த்தல், பிரிதல் ஆகியன கொண்ட வாழ்க்கைமுறையாக இலக்கணங்கள் கொண்டிருக்கின்றன. ஆனால் இலக்கியங்களும், உலக வழக்கும் கற்பு என்னும் பெயரில் பெண்களை ஆண்கள் சார்ந்து வாழும் வாழ்க்கை நடைமுறைக்குக் கொண்டு சென்றுள்ளன என்பதை உணரமுடிகின்றது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard