பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இருபத்து நான்காவது புத்தராகக் கௌதம புத்தர் தோன்றினார். அவரின் ஞானத் தேடல் பௌத்த சமயத்திற்கு மேலும் வலுவூட்டியது.
பௌத்த சமயம் அவைதீக சமயமாகும். இது காட்சி, அனுமானம் என்ற இரு அளவைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதவாக்கியம் என்ற அளவையை ஏற்காதது. இதன் காரணமாக வேதம் சார்ந்த கொள்கைகளுக்கு முரணாக பௌத்தம் அமைந்தது.
புத்தருக்குப் பின்னால் அவரின் மாணவர்கள் அவர் கருத்துகளைப் பதிவு செய்தனர். சங்கம் அமைத்தனர். சுத்த பிடகம், அபிதம்மபிடகம், விநய பிடகம் என்ற தொகுப்புகளாகப் புத்தரின் அறிவுரைகள் தொகுக்கப்பெற்றன. புத்தருக்குப் பின்பு அவரின் கருத்துகள் இருவகை நெறிகளாகப் பரவின. ஈனயானம், மகாயானம் என்பன அவை இரண்டுமாகும். இவற்றை முறையே சிறுவழி, பெருவழி என்றும் அழைக்கலாம்.
பெருவழியும் இருவகைப் பிரிவாக வளர்ந்தது. அவை மாத்துமிகம், யோகாசாரம் என்பனவாகும். சௌத்திராந்திகம், வைபாடிகம், ஆகியன சிறுவழிப் பிரிவுகளாகும். பெருவழிப் பிரிவுகள் சீனா, ஜப்பான், திபெத் போன்ற நாடுகளுக்குப் பரவின. சிறுவழிப் பிரிவுகள் தென்னிந்தியாவில், பர்மாவில், இலங்கையில் பரவின.
துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்ற நான்கும் பௌத்த சமயத்தின் உயர் வாய்மைகள் ஆகும். துக்க நிவாரணமே நிர்வாணம் எனப்படும் நிறைநிலை ஆகின்றது. துக்க நிவாரணத்திற்கு எட்டு வழிகளைப் பௌத்தம் காட்டுகிறது. நற்காட்சி, நற்கருத்து, நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கொள்கை, நல்லமைதி ஆகிய இவ்வெட்டும் துக்க நிவாரணத்திற்கான வழிகள் ஆகும்.
பௌத்த சமயத்தில் ஐவகை நெறிகள் கடைபிடிக்க நெறிப்படுத்தப்படுகிறது. அவை கொல்லாமை, கள்ளாமை, காமமின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை, விலக்கப்பட்ட காலங்களில் உண்ணாமை, ஆடல் பாடல் கூத்துகளை நாடாமை, ஒப்பனை செய்யாமை, அதனுடன் இருக்கைகளைப் பயன்படுத்தாமை ஆகியனவாகும்.
கௌதமன் என்ற இளவரசன் ஞானத்தைத் தேடி அடைந்ததன் வாயிலாக பௌத்தம் என்ற தத்துவ நெறி ஆளுமை பெற்றது. “புத்தர் கி.மு. 573இல் பிறந்தார் என்றும், கி.மு. 563 இல் பிறந்தார் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. புத்தர் பிறந்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் வைகாசி மாதம் முழுமதி நிறைந்த நன்னாளன்று போதிஞானம் பெற்றார்” என்பது வரலாற்று ஆசிரியர்களின் முடிவு. புத்தர் கி.மு. 573இல் பிறந்தார் என்று வைத்துக்கொண்டால் கி.மு. 538 ஆம் ஆண்டளவில் ஞானம் பெற்றார் என்பது உறுதியாகும்.
கௌதமர் துறவு நெறியைக் கைக்கொள்ளுதல், ஆசிரியரைச் சார்ந்து தத்துவ விளக்கம் பெறுதல், நோன்பிருத்தல் போன்ற பல செயல்களைச் செய்தும் தாம் தேடியதை அவரால் பெற இயலவில்லை. சமணம், ஆசீவகம், வைதீக மத குருக்களை அண்டி நோன்பிருந்து உடலை வருத்தித் துக்கத்திற்கான காரணத்தை அறிய முற்பட்டார். இருப்பினும் ஒருபயனும் கிடைக்கவில்லை. தானே தன் முயற்சியின் அடிப்படையில் ஆன்மா பற்றியும், மனிதர்களின் முடிவு பற்றியும், உலகம் பற்றியும்; தெரிந்து கொள்ளப் பெரிதும் சிந்தித்தார்.
நெரஞ்சரா அல்லது நைரஞ்சரை என்று அழைக்கப்படும் என்ற ஆற்றின் கரையில் உருவெலா என்ற இடத்தில் அவர் தனிமையில் சிந்திக்கத் தொடங்கினார். அவரின் சிந்தனை ஊண் உறக்கம் இன்றி இருபத்தெட்டு நாட்கள் தொடர்ந்தன. இது நாற்பத்தொன்பது நாட்கள் தொடர்ந்ததாகவும் குறிக்கப்பெறுகிறது, அவர் ஒற்றைச் சிந்தனையில் ஆழ்ந்தார். பகலும், இரவும் உண்ணாமல், துயிலாமல் துக்க நீக்கத்திற்கான வழி யாது எனத் தேடினார். இருபத்தொன்பதாவது நாளில் புத்தர் தெளிவான காட்சிகள் சிலவற்றைக் கண்டார்.
போதி விருஷத்தினடியேயிருந்த நாட்களுள் ஒரு நாளிரவில் புத்தர் தியானஞ் செய்கையில் முதல் யாமத்திற் செய்த தியானத்திற் பழம்பிறப்பின் நிலைமைகளெல்லாம் அவருக்குத் தெரியவந்தன. இரண்டாம் யாமத்திற் செய்த தியானத்தில் அப்பொழுதுள்ள பிறப்பின் நிலைமைகளெல்லாம் அவருக்குத் தெரியவந்தன. மூன்றாம் யாமத்திற் செய்த தியானத்தில் துவாதச நிதானரூபமாகிய ஏது நிகழ்ச்சி அவருக்குத் தெரியவந்தது. நான்காந் தியானத்திற் சூரியன் உதியா நிற்கையில் முழுவதும் அவருக்குத் தெரியவந்தது என்று அவர் ஞானம் பெற்ற அனுபவநிலை குறிக்கப்பெறுகிறது.
உடலுக்கு நோயும் நோய்க்குக் காரணமும், நோயின் நீக்கமும், நோய் நீக்கும் வழியும் உளவாதல் போல, துக்கம் என்பதும் அதன் காரணமும் துக்க நீக்கமும் அவை நீக்கும் வழியும் உள. … துக்கம், துக்கத் தோற்றம் (சமுதய);, துக்க நீக்கம் (நிரோத), துக்க நீக்க நெறி (மார்க்க என்னும் வாய்மை) நான்கும் உள. இவற்றை ஒப்புக் கொள்ளாமல் மெய்ப்பொருளைத் தேடுதல் பொருளற்றதாகும். என்பதும் புத்தர் கண்ட உண்மையாகின்றது.
உலகப் புலனின்பங்களை நாடும் வைதிக நெறிக்கும், புலனின்பங்களைக் கடுமையாக ஒறுக்கும் சமண நெறிக்கும் இடைப்பட்டதான நடுவழி ஒன்றைத் தேர்ந்து, மனித குலம் முழுவதையும் நேசிக்கும் அன்பும் அருளும் பரிவுணர்வும் மிக்க புது நெறியை புத்தர் உபதேசித்தார் என்று புத்தர் கண்ட நெறி மதிப்பிடப்பெறுகிறது.
புத்தர் நிர்வாணம் அடைந்த பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவரின் வாழ்வு, கொள்கைகள் பற்றிய பதிவுகள் எழுதப்பெற்றன. இந்த நிலையில் அவ்வாறு எழுதப்பெற்ற பதிவுகள் வழியாக புத்தர் இவற்றைத்தான் கண்டிருக்க இயலும் என்ற முடிவிற்கே ஆய்வாளர்கள் வருகின்றனர்.
கௌதமர் ஞான அனுபவத்தைப் பெற்றதன் பெருமை கருதி மக்களால் பல பெயர்களால் அழைக்கப்பெற்றார். ஜினன், சர்வக்ஞன், சுகதர், ததாகதர், பகவன் என்பன அவற்றுள்ள சிலவாகும். கௌதம புத்தருக்கு முன்னதாக பல புத்தர்கள் இருந்ததாகவும் குறிப்புகள் பல கிடைக்கின்றன. சுத்த பிடாகத்தின் முதல் நான்கு நிகாயங்களில் கௌதம புத்தருக்கு முன் ஆறு புத்தர்கள் இருந்தனர் என்ற செய்தி காணப்படுகிறது. புத்தவமிசம் என்ற நூலில் 24 புத்தர்கள் இருந்ததாகக் குறிக்கப்பெறுகிறது. விபஸி, சிகி, வெஸபு, ககஸந்தா, கொன்னாகமன, கசப்பா ஆகிய அறுவரும் கௌதம புத்தருக்கு முந்தைய புத்தர்களாகக் கெர்ளளப்பெறுகின்றனர். இவர்களுள் கௌதமபுத்தர் பௌத்த சமயம் பரவ வழி செய்தவர் ஆவார்.
பௌத்த சங்கம்
புத்தர், தருமம், சங்கம் என்பன பௌத்த மும்மணிகள் ஆகும். இவற்றில் சங்கம் வழியாக பௌத்தம் பெருவளர்ச்சியைப் பெற்றது. புத்தர் ஞானக் காட்சியைப் பெற்ற பின்னர் தன்னுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடனுறைந்த ஐந்து துறவிகளைத் தேடிச் சென்றார். அவர்களுடன் தான் கண்ட நெறி குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் இறப்பை எய்தினர் என்றறிந்து புத்தர் வருந்தினார்.
கௌதம புத்தரின் கடந்த கால வாழ்வில் ஒருமுறை உருவேலாவனத்தில் தாம் கண்ட ஐந்து துறவியரை அவர் மீளவும் காணும் வாய்ப்பு தற்போது கிடைத்தது, அவர்களிடத்தில் தான் பெற்ற ஞானத்தைக் கூறினார். அவர்கள் முதலில் மறுத்தாலும் பின்னர் புத்த ஞானத்தை ஏற்று புத்தரின் சீடர்கள் ஆயினர். தன் கருத்துகளை மற்றவர்களிடம் விவாதித்து அவர்களைத் தம் கொள்கைக்கு உடன்படச் செய்தல் என்ற முறைமை இதுமுதல் பௌத்தத்திற்கு வாய்க்க ஆரம்பித்தது.
இவ்விவாதப் பண்பே புத்த சங்கம் தோற்றம் பெறக் காரணம் ஆகியது. இதன்பின் யசன் என்பவன் தன் 54 நண்பர்களுடன் புத்தரை அடைந்தான். அவரிடம் ஞானத்தைப் பயின்றான். அவரின் சீடனாகத் தான் ஆனது மட்டுமில்லாமல் தன் நண்பர்களையும் ஆக்கினான். தற்போது கௌதம புத்தரின் சீடர்களின் தொகை அறுபதை எட்டியது.
புத்தர் தன் சீடர்களுடன் உடன் உறைந்தார். அவர்களின் உள்ளும் புறமுமாகக் கலந்தார். சீடர்களுக்கு ஞான உரை வழங்குவது அவர்களுடன் உடன் உறைவது என்பது புத்தரின் அன்றாடச் செயல்பாடாகியது. புத்த சங்கம் மெல்ல வலுப்பெறத் தொடங்கியது. சீடர்களின் ஞானப் பரப்பலால் மேலும் அது தன் எல்லையை விரிக்கத் தொடங்கியது.
மழைக்காலத்தில் புத்தர் சீடர்களைத் தான் இருக்கும் தலைமை இடத்திற்கு வரச்செய்வார். தன்னுடன் சீடர்களை அமைத்துக்கொண்டு அவர்களிடம் ஞான போதனை செய்து வலுவூட்டுவார். தன் சமயப் பரப்பலில் எழும் ஏற்ற இறக்கங்களை மதிப்பிடுவார். மழைக்காலம் முடிவுற்ற பின் அடுத்து வரும் காலங்களில் அவர்களை சமயம் பரப்பும் கடமைக்கு அனுப்பிவிடுவார்.
எளிமையான வாழ்க்கை வாழ புத்த சங்கத்தார் கற்றுக்கொண்டனர். பிட்சை எடுத்து உண்ணும் வழக்கமே அவர்களின் உயிர் வாழ்க்கைக்கான உணவாக இருந்தது. அதிலும் ஒரு வேளைக்குத் தேவையான உணவை மட்டுமே பிட்சையாகப் பெற வேண்டும் என்பதும் அவர்களுக்கு விதிக்கப்பெற்றிருந்தது. பிட்சைக்குச் செல்லும்போது, இவர் வீட்டுக்குப் போகலாம், அவர் வீட்டுக்குப் போகக்கூடாது என்ற வேறுபாடு காட்டக் கூடாது. எல்லாருடைய வீடுகளுக்கு முன்பும் சென்று நிற்கவேண்டும். பிட்சை தரவேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது.
புத்த பிட்சுகளுக்கு உரிமையுடையதாக அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களில் சில மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்ற நெறியும் வகுக்கப்பெற்றிருந்தது. பிட்சை பாத்திரம் ஒன்று, துணிவகை மூன்று, இடையிற் கட்டும் கச்சைகள், கந்தை தைக்க ஊசி, சவரக்கத்தி, நீர் வடிகட்டுகிற துணி ஆகிய எட்டு மட்டுமே கைக்கொண்டவர்களாக புத்தப் பிட்சுகள் வாழவேண்டும் என்பது கட்டளையாகும்.
மாமன்னர் அசோகர் புத்தரின் சீடராக விளங்கி அவரின் கருத்துகளை இந்தியா முழுவதும் பரவ வழி செய்தான். ஆசிய நாடுகளிலும் அவர் காலத்தில்தான் பௌத்தம் பரவ ஆரம்பித்தது. மன்னர் கனிஷ்கர் காலத்தில் மகாயான பௌத்தம் பரவலான தழுவலைப் பெற்றிருந்தது.
இந்திய அளவிலான பௌத்த நூல்கள்
கௌதம புத்தருக்குப் பின்பு, அவரின் சீடர்களான சாரிபுத்தர், மௌத்கல்யாயனர், காசியபர், ஆனந்தர் போன்றோர் பௌத்த சமயம் பரவ வழி செய்தனர். கௌதம புத்தருக்குப் பிற்காலத்தில் பௌத்த சமயக் கருத்துகள் தொகுக்கப்பெற்றன. அவை த்ரிபீடங்கள் என வகைப்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் பாலி மொழியில் எழுதப்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு.
1. வினய பீடகா
2. சுத்த பீடகா
3. அபிதம்ம பீடகா
இவையே த்ரிபீடங்கள் ஆகும். புத்த பிட்சுகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றி உரைப்பது வினய பீடகா என்பதாகும். புத்தர் மற்றும் அவர்தம் சீடர்கள் வழங்கிய மதம், தர்மம் இவை பற்றிய கருத்துகள் சுத்த பீடகா எனத் தொகுக்கப்பெற்றது. இலக்கியச் செறிவுடன் எழுதப்பெற்றது அபிதம்ம பீடகா ஆகும்.
இவை தவிர வடமொழியில் எழுதப்பெற்ற நூல்களும் பௌத்த சமயத்தின் அடிப்படைகளாக விளங்குகின்றன. மகாவத்க, லலிதவிஸ்தாரா, புத்தசரிதம், ஜாடக மாலா இலங்காவதார சூத்திரம், சத்தரும புண்டரீகம், சுகாவதி வியூகம், கருணா புண்டரிகம், பிரஞ்யுபாரதமித சதகம் போன்றன இங்குக் குறிக்கத்தக்கன.
பௌத்தத்தின் அடிப்படைகள்
புத்தர் கண்டறிந்த நற்காட்சிகளின் அடிப்படையில் அவரின் பௌத்த சமயக் கொள்கைகள் அவரின் சீடர்களால் உருவாக்கப்பெற்றன. அவற்றில் குறிக்கத்தக்க சில பின்வருமாறு.
புத்தர் நிறுவிய பௌத்த மதம் நான்கு உன்னத உண்மைகளையும், எட்டு (அஷ்டாங்க) மார்க்கங்களையும் அடிப்படையாகக் கொண்டது. உலகில் நிறைந்துள்ள துன்பங்களுக்கு முதுமை, மரணம், பிறவி, மறுபிறவி, சிற்றின்பங்கள், மூவாசைகள். முற்பிறவிகளின் கர்மம், அறியாமை, உடல், உள்ளம் ஆகியவையே காரணம். நன்னெறி(சீலம்) , மனக்கட்டுப்பாடு (சமாதி), அறிவு (பிரக்ஞை) ஆகியவற்றின் அடிப்படையிலான அஷ்டாங்க மார்க்கம் மோட்சமளிக்கும். சரியான பேச்சு, சரியான செயல். அஹிம்சை, திருடாமை, பொய் சொல்லாமை, தகாத பாலுறவு தவிர்த்தல், கள்ளுண்ணாமை, சரியான வாழ்க்கை முறை ஆகியவை நன்னெறிகள். மனத்தில் தவறான எண்ணங்கள் தோன்றாமல் தடுத்தலும், மனம், மெய், மொழி மூலமாகத் தவறுகள் செய்யாமல் இருத்தலும், தியானத்தில் ஈடுபடுதலும் மனக்கட்டுப்பாடு ஆகும். நிஜத்தைச் சரியாக உய்த்துணர்தலும் சுயநலமின்மை, கருணை , பற்றறுத்தல் ஆகியவற்றைப் பற்றிய சரியான சிந்தனைகளும் அறிவு ஆகும். (கே.என். ராமச்சந்திரன், சமண சமய வரலாறும், விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும்,ப. 408)
புத்தருடைய உபதேசங்களை நான்கு சீரிய உண்மைகளாக பௌத்த மரபு கூறுகிறது.(ஆர்யசத்யம்) அவை பொருள்களின் தோற்றம் சார்ந்த கொள்கையுடன் தொடர்புள்ளவை. (பிரதீத்ய-சமுத்பாதம்) உலகத் துன்பங்களுக்கு பன்னிரெண்டு காரணங்கள் இருப்பதாகவும், நிர்வாணம் பற்றியும் நான்கு உண்மைகளில் கூறப்பட்டுள்ளன. (துவாதச நிதானம்) பிரதீத்ய சமுதாயத்தில் உலகின் நிரந்தரமற்ற தன்மை(அநித்யதா வாதம்) ஆத்மா என ஒன்று இல்லை என்பதும் (அனாத்ம வாதம்) இரண்டும் இடம் பெற்றுள்ளன.நான்கு சீரிய உண்மைகளாவன: 1. எல்லாமும் துன்பத்தில் வாழ்ந்தவை 2. துன்பத்திற்கு ஒரு காரணம் உள்ளது. 3. துன்பத்தை அழிக்கமுடியும். 4. முடிவுக்கு ஒரு வழி உள்ளது. (தேவிபிரசாத் சட்டோபத்யாயா,இந்தியத் தத்துவ இயல்) என்ற கருத்து பௌத்த அடிப்படையை விளக்குவதாக உள்ளது.
பௌத்த சமயப் பிரிவுகள்
கால வெள்ளத்தில் பௌத்த சமயத்தில் இரு பிரிவுகள் தோன்றின. அவை ஹீனயானம், மகாயானம் என்பனவாகும். ஹீனயான பௌத்தம் புத்த கொள்கையில் சிறிதும் மாறுபடாதது. மகாயான பௌத்தம் புத்தர், போதி சத்துவர் ஆகியோரைச் சிலைகளாக வடித்து அவர்களைக் கடவுளாக வணங்கும் தன்மையது. இப்பிரிவினர் தவிர,
வைபாடிகர்கள், சௌத்திராந்திகர்கள், யோகசாரர்கள், மாத்யமிகர்கள் என்ற பிரிவினரும் பௌத்த சமயம் சார் பிரிவினராக விளங்குகின்றனர்.
வைபாடிகர்கள்
காஷ்மீர் பகுதியில் விளைந்த பௌத்த சமயம் தனக்கான தனித்தன்மைகளின் வழியாக வைபாடிகம் என்னும் தனிப்பிரிவாக ஆனது. இவர்கள் காட்சி அளவையாக புற உலகைக் கண்டனர். அபிதம்ம பீடகாவிற்கு விபாஷா என்ற பேருரை செய்யப்பெற்றது. இப்பேருரை செய்யப்பெற்ற காலம் கனிஷ்கர் என்ற அரசரின் காலமாகும். இப்பேருரையின்பால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தோன்றிய பௌத்த சமயம் வைபாடிகம் ஆயிற்று. இவ்வைபாடிகமும் இருவகைப்பட்டதாக அமைந்தது. காஷ்மீரத்து வைபாடிகர், அபராந்தகர்கள் என்பன அவ்விரு பிரிவுகள் ஆகும். இவற்றில் அபராந்தகர்கள் என்பவர்கள் மேற்கு எல்லை சார்ந்தவர்கள் ஆவர்.
சௌந்திராந்திகர்கள்
குமாரலாதர் என்பவரால் உருவாக்கப்பெற்ற பௌத்த சமயப்பிரிவு சௌந்திராந்திகம் ஆகும். இவர்கள் உலகை கருதல் அளவையால் உணர்ந்தனர்.
யோகசாரம்
கருத்து முதல் கொள்கை, யோகம் பயிலல் ஆகியவற்றினைக் கொண்ட பௌத்தப் பிரிவு யோகசாரம் ஆகும். யோக சாரம் என்பது சமாதி நிலையைக் கூட்டுவிக்கிற அனுபவம் ஆகும். இது விஞ்ஞான வாதம் என்றும் கொள்ளப்பெறுகிறது. மைத்ரேய நாதர் என்பவர் இப்பகுப்பை முறைமை செய்தார்.
நாகார்ஜுணர் மூல மாத்யமகக் காரிகை என்ற நூலை எழுதினார். இதனுள் இச்சமயக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இவரின் சீடரான ஆரிய தேவர் சதுசாதிகா என்ற நூலை எழுதினார். மற்றொரு சீடரான சந்திரகீர்த்தி என்பவர் மாத்யமகக் காரிகை பெரிதும் விளக்கம் செய்தார். புத்தர் கண்ட நடுநெறியைப் பின்பற்றுபவர்கள் மாத்யமிகர்கள் ஆவர்.
இவ்வாறு சமயம் என்ற கட்டமைப்பில், பல்கிப் பெருகிப் பரவலாக மக்களிடம் செல்வாக்கு பெற்ற சமயமாக பௌத்த சமயம் விளங்குகிறது. இது தமிழகத்திற்கு கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வந்திருக்க இயலும் என்று முடிவு காண்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி (மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், ப. 2). அசோகர் காலத்தில் மகிந்தர் என்பவரால் பௌத்தம் சமயம் தமிழகத்தில் பரவச் செய்யப்பெற்றது என்பது ஆராய்ச்சியாளர்களால் ஏற்கப்பெற்ற கருத்தாகும்.
தமிழகத்திற்கு பௌத்த வருகை
தமிழகத்திற்கு பௌத்த மதம் சங்க காலத்திற்கு முன்பே பரவியிருந்திருக்கிறது. பௌத்த சமயக் கருத்துகளைப் பல சங்க இலக்கியப் பாடல்களில் காணமுடிகின்றனது. பக்குடுக்கை நன்கணியார், இளம்போதியார், சங்க வருணர், சிறுவெண்தேரையார், தேரதரன் முதலிய சங்க இலக்கியப் புலவர் தம் பெயர்கள் பௌத்தச் சார்பினவாகும். மோரியர், திகிரி, வம்ப மோரியர் போன்ற குறிப்புகள் சங்க இலக்கியத் தொகுப்பில் காணப்பெறுகின்றன. இதன் காரணமாக சங்க காலத்திலேயே பௌத்த சமயக் கூறுகள் காணப்படுகின்றன என்பது உறுதியாகின்றது. மேலும் சாத்தன் என்ற பெயரை உடைய புலவர்கள் பலர் சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றனர். அவர்களின் பாடல்களும் பௌத்தச் சார்பினைப் பெற்றனவாக அமையத்தக்கன.
புறநானூற்றில் பல பாடல்களில் பௌத்த மதக் கருத்துகள் காணப்படுகின்றன. குறிப்பாக, 360, 363 ஆகிய பாடல்களில் பௌத்தமதக் கருத்துகள் காணப்படுகின்றன.
“பெரிது ஆராச் சிறு சினத்தர் சில சொல்லால் பல கேள்வியர் நுண்ணுணாவினாற் பெருங் கொடையா கலுழ் நனையால் தண் தேறலா கனி குய்யாற் கொழுந் துவையர், தாழ் உழந்து தழூஉ மொழியர் பயன் உறுப்பப் பலாக்கு ஆற்றி ஏமமாக இந்நிலம் ஆண்டோர் சிலரே பெரும் கேள் இனி நாளும், பலரே தகை அ.து அறியாதோரே அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது இன்னும் அற்று, அதன் பண்பே அதனால் நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை பரிசில் நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி அச்சுவரப் பாறுஇறை கொண்ட பறந்தலைமாக கள்ளி போகிய களரி மருங்கின், வெள்ளில் நித்த பின்றைக் கள்ளொடு புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி, புலையன் ஏவப் புன்மேல் அமருந்துகொண்டு, ஆழல்வாய்ப் புக்க பின்னம், பலர்வாய்த்து இரா அர், பகுத்துஉண்டோரே? (புறநா. 360)
என்ற பாடலில் பௌத்த சமயக் கருத்துகளில் முக்கியமான மூன்று சுட்டப்பெறுகின்றன. செல்வம் நிலையில்லாதது, உயிரில் பொருள், உயிருள் பொருள் இரண்டும் நிலையில்லாதவை, நாளம் ஒழுக்கத்தில் குறைவு படாது வாழவேண்டும்
ஐயாதிச் சிறுவெண்டேரையர் எழுதிய 563 ஆம் பாடலில் நிலையாமை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
“இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம் உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித் தாமே ஆண்ட ஏமம் காவலர் இடுதிரை மணலிலும் பலரே சுடுபிணக காடுபதியாகப் போகித், தத்தம் நாடு பிறர்கொளச் சென்று மாய்ந்தனரே அதனால் நீயும் கேண்மதி அத்தை வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்கல் உண்மை மாயமோ அன்றே கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண், உப்பிலாஅ அவிப்புழுகல் கைக்கொண்டு, பிறக்கு நோக்காது, இழி பிறப்பினோன் ஈயப் பெற்று, நிலங்கலனாக, இலங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே, செய்ந்நீ முன்னிய வினையே, முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே” (புறநா. 363) (மேற்கோள், அறிவுராஜ்., ந. 2013 : 91) என்ற பாடலில் யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை போன்றன சுட்டப்பெற்று, துறவு நெறி வலியுறுத்தப்பெறுகிறது. புறநானூற்றுப் பாடலான “நாடாகொன்றோ காடாகொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” (ஒளவையார், புறநானூறு, பாடல்எண்.187) என்ற பாடல் தம்மபதத்தின் மொழி பெயர்ப்பு என்று ஆய்வாளர்களால் முடிவு கட்டப்பெற்றுள்ளது. “நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும் பள்ளமாக இருந்தாலும் மேடாக இருந்தாலும் எங்கே சான்றோர்கள் நடமாடுகின்றார்களோ அந்த நிலமானது எழில் நலமுடையதாகும்”
என்ற தம்மபதப் பாடல் மேற்காட்டிய பாடலுடன் ஒற்றுமைப் பட்டு நிற்கிறது. அசோகரின் தர்ம சக்கரத்தைப் பற்றிய குறிப்பு புறநானூறு 175 ஆம் பாடலில் சுட்டப்பெற்றுள்ளது. இவ்வாறு புறநானூற்றில் பௌத்த சமயக் கருத்துகள் அடங்கிய பாடல்கள் இருப்பதன் வாயிலாக சங்க காலத்தில் பௌத்தம் நிலைபெற்றிருந்தது என்பதை உணரமுடிகின்றது.
மதுரைக்காஞ்சியில் பௌத்தப்பள்ளி பற்றிய குறிப்பு தரப்பெற்றுள்ளது.
திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை ஒம்பினர்த் தழீஇத் தாம் புணர்ந்து முயங்கித் தாதணி தாமரைப் போது பிடித்தாங்கு தாமும் அவரும் ஓராங்கு விளங்கக் காமர் கவினிய பேரிளம் பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்|| (மதுரைக்காஞ்சி, 461- 468)
கணவன், மனைவி, பிள்ளை ஆகிய மூவரும் இணைந்து தாமரைப் பூக்களைப் பறித்துக் கொண்டு பௌத்தப்பள்ளிக்குச் சென்ற காட்சியை மேற்கண்டவாறு மதுரைக்காஞ்சி குறிக்கிறது.
இவ்வகையில் மணிமேகலை காப்பியத்திற்கு முன் காலமான சங்க இலக்கியத்தில் பல்வேறு பௌத்த சமயக் கருத்துகள் இடம் பெற்றுள்ள நிலையில் தமிழக மக்களிடத்தில் பௌத்தமதம் செல்வாக்கு பெற்றிருந்ததை உணரமுடிகின்றது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பரவலாக பௌத்த சமயக் கருத்துகள் விரவி வந்திருப்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர். சோ.ந. கந்தசாமி, சு.மாதவன் ஆகியோர் தம் கருத்துகள் இங்கு நோக்கத்தக்கன. பாதபீடிகை வணக்கம் வள்ளுவரால் ஏற்கப்பெற்ற பௌத்த வழிபாட்டு நெறியாகும். மேலும் கள்ளுண்ணாமை, காமமின்மை, கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை ஆகிய ஐந்து திறக் கோட்பாடுகளையும் வள்ளுவர் தம் நூலில் வலியுறுத்தியுள்ளார். மேலும் தம்மபதக் கருத்துகளான சிற்றினம் சேராமை, பெரியாரைத் துணைகோடல், நீத்தார் பெருமை, அவாவறுத்தல் ஆகியனவும் திருக்குறளில் காட்டப்பெற்றுள்ளன. இதன் காரணமாக திருக்குறள் பௌத்த சமயக் கருத்துகளை உள்வாங்கி அதனை மக்கள் நலத்திற்கேற்ற வகையில் வெளிப்படுத்தியுள்ளது என்பது தெரியவருகிறது. இன்னாசெய்யாமை, சான்றாண்மை, ஒப்புரவு அறிதல், கூடா ஒழுக்கம் போன்றனவும் பௌத்த சாயல் பெற்றன என்கிறார் மாதவன். இவ்வகையில் திருக்குறளில் பௌத்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன என்று துணியலாம்.
நாலடியாரில் பௌத்த சமயக் கருத்துக்களான பல் சமய அற ஒருமை, பேதைமை, நிலையாமை, ஐவகை நெறிகள் ஆகியன சுட்டப்பெற்றுள்ளன. சமண சமயத்தவர்களால் எழுதப்பெற்ற போதும் இதனுள் பௌத்த நெறிகளும் காட்டப்பெற்றிருப்பது குறிக்கத்தக்கது. திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்ச மூலம் ஆகியவற்றிலும் பௌத்த சமய பஞ்சசீலக கொள்கைகள் வலியுறுத்தப்பெற்றுள்ளன.
சங்கம் மருவிய காலத்திற்கு அடுத்த நிலையில் மணிமேகலைக்கு முன்னதாக எழுந்த காப்பியம் சிலப்பதிகாரம். இதனுள் பௌத்த சமயக் கருத்துகள் படைக்கப்பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்தில் பௌத்த மும்மணிகளான புத்தம், தருமம், சங்கம் ஆகியன பற்றிய குறிப்பு கிடைக்கிறது.
என்ற நிலையில் பௌத்த மும்மணிகள் சிலப்பதிகாரத்தில் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. போதி அணிதிகழ் நீழல்அறவோன் என்பது புத்தரைக் குறிப்பதாகும். திருமொழி என்பது தருமத்தைக் குறிப்பதாகும். அநதர சாரிகள் என்பது சங்கத்தைக் குறிப்பதாகும்.
கோவலன் கொலையுண்ட பிறகு, கோவலனின் தந்தை மாசாத்து:வான் தன் செல்வங்கள் அனைத்தையும் பௌத்த நிலையத்திற்கு அளித்தான் என்று இளங்கோவடிவகள் குறிக்கிறார்.
கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி மாபெருந் தானமா வான் பொருள் ஈந்தாங்கு இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு ( சிலப்பதிகாரம் 27: 91-93) என்ற நிலையில் பௌத்த விகாரம் குறிக்கப்படுகிறது.
மாதவி மணிமேகலையைப் பௌத்த சமயத்திற்கு அளித்தாள் என்பதையும் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள் அணிதிகழ் போதி அறவோன் தன்முன் மணிமேகலையை மாதவி அளிப்பவும்|| (சிலப்பதிகாரம், 15: 103-104)
என்ற பகுதியில் போதி அறவோன் என்று புத்தர் குறிக்கப்பெறுகிறார். இச்செய்திகள் தவிர காவிரிப்பூம்பட்டிணம், மதுரை, திருத்தங்கால், வஞ்சி ஆகிய ஊர்களில் பௌத்தப் பள்ளிகள் இருந்தன என்று சிலப்பதிகாரம் குறிக்கிறது. மேலும் பௌத்த கதைகளான சிபிச் சக்கரவர்த்தி கதை, மணிமேகலா தெய்வக் கதை போன்றன பற்றிய குறிப்புகளும் சிலப்பதிகாரத்தில் உள்ளன. மேலும் காப்பியத்தில் நிறைவில் வரும் பொது அறங்கள் அனைத்தும் பௌத்தசமய அறங்கள் சார்ந்தனவாகும். இவ்வகையில் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் பௌத்த சமயக் குறிப்புகள் கிடைப்பதன் வழியாக சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், சிலப்பதிகார காலத்திலும் பௌத்தசமயம் தமிழகத்தில் விளங்கிவந்த சமயமாக இருந்தது என்பதை உணரமுடிகின்றது.
இதனைத்தொடர்ந்து சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலையே பௌத்த சமயத்தின் இருப்பை நிலைநிறுத்துகிறது. இதுவே முதன் முதலில் எழுந்த பௌத்த சமய நூலாக அமைகின்றது. இதிலிருந்தே பௌத்த சமய நூல்களின் ஆக்க வளர்ச்சி தொடங்கப்பெறுகிறது.
தமிழகத்தில் எழுந்த பௌத்த சமயக் கருத்துகள் அடங்கிய நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம். முதல் வகை பௌத்தர் இயற்றிய பௌத்த சமயம் சார்ந்த நூல்கள், இரண்டாம் வகை பிற சமயத்தார் படைத்த பௌத்த சமயக் கருத்துகளைக் கொண்ட நூல்கள் என்று பிரிக்கலாம்.
பௌத்தர் இயற்றிய பௌத்த சமயம் சார்ந்த நூல்கள்
பௌத்த மதத்ததைத் தழுவியவர்களால் பௌத்த சமயப் பதிவுகளை வெளிப்படுத்த எழுதப்பெற்ற நூல்களைப் பௌத்த சமயம் சார்ந்த நூல்கள் என்ற வகையில் அடக்கலாம். அவ்வகையில் மணிமேகலை, குண்டலகேசி, வீரசோழியம், சிந்தாந்தத் தொகை, திருப்பதிகம், விம்பசார கதை, மானஓர்ப்பதிகம், அபிதம்மாவதாரம் ஆகியன அடங்கும்.
மணிமேகலை
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையே பௌத்த சமயம்சார் நூல்களில் முக்கியமானதும், தலைமையானதும் ஆகும். மணிமேகலைக் காப்பியத்தின் கதையமைப்பின்படி மணிமேகலை என்ற சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருக்கும் பெண் துறவு நிலை பெற்று ஞானம் என்ற உயர்நிலையை அடையச் செய்யும் நிலையில் படைக்கப்பெற்றுள்ளது. மணிமேகலை துறவு மேற்கொண்டது மட்டுமில்லாமல் தன்னோடு வாதம் புரிய வந்த பல சமயத்தாரையும் மதித்து அவர்கள் கருத்தைக் கேட்டறிந்து தன் பௌத்த சமயக் கருத்தை அவர்களின் முன்னிலையில் உயர்த்துகிறாள் என்பது பௌத்த சமயத்திற்குக் கிடைத்த பெருவெற்றியாகின்றது.
மணிமேகலைக் காப்பியத்தில் புத்தர் வரலாறு இடம்பெறுகிறது. பௌத்த தருமம் பற்றிய பல செய்திகள் இடம்பெறுகின்றன. மணிமேகலைக் காப்பியத்தில் சீத்தலைச் சாத்தனார் புத்தரின் பாதப் படிமைகள் காவிரிப்பூம்பட்டிணத்தில் இருந்த உவனத்திலும், இலங்கையில் உள்ள சமந்தம் என்ற மலையிலும் இருந்ததாகக் குறிக்கிறார். மணிமேகலா தெய்வம் புத்த பீடிகையை வணங்கிப் புத்தரைப் பாரட்டுகிறது.
உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி பெர்ளர் வழக்கு செவித்துளை தூர்ந்து அறிவு இழந்த வறம் தலை உலகத்து அறம்பாடு சிறக்க சுடர்வழக்கு அற்றுத் தடுமாறும் காலைஓர் இன வள ஞாயிறு தோன்றியதென்ன நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன் நீயே ஆகி நிற்கு அமைந்த இவ்வாசனம் நாமிசை வைத்தேன், தலைமிசை கொண்டேன் பூமிசை ஏற்றினேன் புலம் அறுக|| (மணிமேகலை.10: 7-15)
என்று புத்தபிரான் தோன்றிய சூழல், அவரைப் பௌத்தர் பணியும் திறம் ஆகியவற்றை அறிந்து கொள்ள மணிமேகலை காப்பியம் வழியாக வகை செய்கிறார் சாத்தனார்.
என்று துக்கம் பற்றியும் துக்க நிவாரணம் பற்றியம் துக்கமின்மை பற்றியும் மணிமேகலை காப்பியத்தின் வழி அறிந்து கொள்ளமுடிகின்றது.
மணிமேகலைக் காப்பியம் சிலப்பத்திகாரக் காப்பியத்தின் தொடர்ச்சியாக அமைந்த காப்பியமாகும். இதன் காரணமாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் கொள்ளப்பெறுகின்றன. காப்பியக் கதைத் தொடர்பு இவ்விரு காப்பியங்களையம் இரட்டைக் காப்பியங்களாக எண்ண வைக்கிறது. மணிமேகலைக் காப்பியம் கச்சி என்ற காஞ்சிபுரம் நோக்கி மணிமேகலையைச் செலுத்துவதால் காஞ்சிபுரத்தில் பௌத்தம் செழித்த காலத்தில் அது எழுதப்பெற்றிருக்கவேண்டும் என்று அறிஞர்கள் முடிகின்றனர். பௌத்த அறிஞர்களான திக்நாகர், தருமகீர்த்தி ஆகியோர் காஞ்சிபுரத்தில் இருந்த காலத்தில் மணிமேகலை எழுதப்பெற்றிருக்க வேண்டும் என்று வானமாமலை கருதுகின்றார்.
மணிமேகலை முப்பது கதைகளைக் கொண்டு ஆசிரியப்பாவினால் எழுதப்பெற்ற சமயக் களஞ்சியம் ஆகும். இதன்வழி பௌத்த சமயக் கருத்துகளையும் தமிழகத்தில் மணிமேகலை எழுதப்பெற்ற காலத்தில் நிலவிய சமயங்களின் நிலைகளையும் அறிந்துகொள்ளமுடிகின்றது.
குண்டலகேசி
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி பௌத்த சயம நூலாகும். இதனை இயற்றியவர் நாதகுத்தனார் ஆவார். இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. தற்போது ஒரு நூறு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இக்காவியத்தின் கதை பல திருப்பங்களைக் கொண்டது.
இராச கிருகம் என்ற நகரத்தைத் தலைமையாக வைத்து அரசாண்ட அரசனுக்கு மந்திரி ஒருவர் இருந்தார். அவரின் மகள் பத்திரை ஆவாள். இப்பத்திரை ஆவண நகரத்தில் வாழ்ந்த வணிகரின் மகள் என்ற கருத்தும் உளது. இவள் ஓர் இளைஞனைக் காதலித்தாள். அவன் அரசனால் குற்றவாளியாகக் கருதப்பெற்றவன் என்ற போதிலும் அவனை அக்குற்றத்திலிருந்து விடுவிக்கிறார் அமைச்சர். அதன்பின் அவனைத் தன் மகளுக்குத் திருமணம் செய்துவைக்கிறார். இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் இவர்கள் இருவருக்கும் ஊடல் வந்தது. ஊடல் வளர்ந்து பெரிதாகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய எண்ணுகின்றனர். இதில் பத்தரை கணவனை முற்றிலும் பிரிந்துவிடும் அளவிற்குச் சென்றுவிடுகிறாள். இதன் காரணமாக அவளுக்கு உலக வாழ்வின்மீது வெறுப்பு தோன்றுகிறது. அவள் சமண சமயத்தில் இணைந்து துறவியாகிறாள். சமண சமயக் கருத்துகளை அவள் பரப்பி வந்தாள். மற்ற சமயத்தாருடன் வாதம் செய்து வெற்றி பெற்றாள்.
பத்தரை தன் தலையை மழித்துக் கொண்ட போதிலும் சுருள் சுருளாக அவளின் தலைமுடி வளர்ந்தது. இதன் காரணமாக அவள் குண்டலகேசி எனப்பட்டாள். குண்டலகேசி என்றால் குண்டலம் போன்று வளைந்து சுருண்ட தலைமுடியை உடையவள் என்று பொருள். அதுவே அவளின் பெயராக மக்கள் வழங்கினர். இதுவே காப்பியத்தின் பெயராகவும் ஆனது. இந்நிலையில் ஊர் ஊராகச் சென்று சமண சமயத்தை அவள் பரப்பி வந்தாள்.
இந்நிலையில் ஓர் ஊருக்குச் சென்றபோது அங்கு சமயவாதம் புரிவதற்காக நாவல் கிளை ஒன்றை நட்டுவிட்டு அவள் தனக்கான உணவைத் தேடி பிச்சைப் பாத்திரம் ஏந்திப்புறப்பட்டாள். அப்போது அவ்வூருக்குப் புத்தர்பிரானும் தன் சீடர்களுடன் வருகை புரிந்து இருந்தார். புத்தரின் சீடர்களுள் ஒருவரான சாரி புத்தர் என்பவர் குண்டலகேசி நட்ட நாவல் மரத்தின் அருகே வந்தார். அங்கு வந்து அங்கிருந்த சிறுவர்களிடம் அந்நாவல் மரத்தைப் பிடுங்கிடச் செய்தார். அந்நேரத்தில் குண்டலகேசி வர சாரி புத்தருக்கும் அவளுக்கும் சமயவாதம் நடைபெற்றது. இவ்வாதத்தில் குண்டலகேசி கேட்ட வினாக்களுக்குச் சாரிபுத்தர் விடைதருகிறார். ஆனால் சாரி புத்தர் வினவிய வினாக்களுக்குக் குண்டலகேசியால் விடையிறுக்க இயலவில்லை. இதன் காரணமாக அவள் சாரிபுத்தரைச் சரண் அடைந்தாள். அதற்குச் சாரி புத்தர் என்னைச் சரணடைய வேண்டாம். புத்தரைச் சரணடைக என்று கூறி அவளைப் புத்தரிடம் அழைத்து வருகிறார். புத்தரை வணங்கிப் பௌத்த மதம் சார்கிறாள் குண்டலகேசி. இதுவே இக்காப்பியக் கதையாகும்.
இக்காப்பியத்தில் பௌத்த சமயக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அவையடக்கமாக வரும் பாடலில் புத்தபெருமான் பெருமை எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.
நோயாளிகள் மருந்தின் சுவை பற்றிக் கவலைப்படாது தன் நோய்தீர அதனை உண்பர். குளிரில் நடுங்குபவர்கள் புகையை ஏற்றுக்கொண்டு தீயை வரவேற்பார்கள். அரச வாழ்வைத் துறந்து மூவகைக் குற்றங்களை நீக்கிய புத்த பெருமான் தாள் பணிந்தவர்களுக்கு எக்குற்றமும் வாராது. மேலும் அவர்கள் அறியாமை நிலையில் இயல்பாகச் சொற்களைச் சொன்னாலும்கூட அவை குற்றம் உடையனவாக அமையாது என்பது அவையடக்கப்பாடலின் பொருளாகும். இதில் புத்த பெருமானின் பெருமை, செல்வத் துறப்பு எண்ணப்பெற்றுள்ளது.
வீரசோழியம்
ஐவகை இலக்கணங்களைக் கூறும் நூலுள் ஒன்று வீரசோழியம் ஆகும். இது பொன்பேத்தி என்ற ஊரைச் சார்ந்த புத்திமித்திரனால் இயற்றப்பெற்றது. வீரராசேந்திர சோழன் காலத்தில் இந்நூல் இயற்றப்பெற்றுள்ளது. இவன் பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்தவன். தான் நூல் எழுத உதவி செய்த வீரராஜேந்திரன் பெயரையே இந்நூலுக்குப் புத்தமித்திரன் சூட்டியுள்ளார். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அலங்காரம் ஆகிய பெரும் பகுப்புகளை உடையது. எழுத்ததிகாரத்தில் சந்திப்படலம் மட்டும் உட்பிரிவாக உள்ளது. சொல்லதிகாரத்தில் வேற்றுமைப்படலம், உபகாரகப்படலம், தொலகைப்படலம், தத்திதப்படலம், தாதுப்படலம், கிரியாபதப்படலம் ஆகியன இடம்பெற்றுள்ளன. பொருளதிகாரத்தில் பொருட்படலம் மட்டும் உள்ளது, யாப்பதிகாரத்தில் யாப்புப்டலமும், அலங்காரத்தில் அலங்காரப்படலமும் உள்ளன. இந்நூலின் கடவுள் வாழ்த்து மிகத்தெளிவாக இந்நூல் பௌத்தசமயம் சார்ந்தது என்பதை உரைக்கிறது.
என்ற இக்கடவுள் வாழ்த்தில் போதி மரத்தடியில் இருந்த புத்தபிரான் மெய்த்தவத்தால் மேன்மைப்பட்டவர். யாராலும் தொடர முடியாத இயல்பினைப் பெற்றவன். தூயன். அத்தக்கவன் பாதத்தைத் தலைமேல் வைத்துத் தமிழுரைக்கிறேன் என்று புத்தமித்திரன் குறிக்கிறார். இந்நூலில் பௌத்தர் அணியும் துவராடை, பௌத்த மரபுகள் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. இந்நூலுக்குப் பெருந்தேவனார் உரை வரைந்துள்ளார். இவரின் உரையில் எடுத்தாளப்பெற்றுள்ள பல பாடல்கள் பௌத்த சமயம் சார்ந்தனவாக உள்ளன.
சித்தாந்தத் தொகை என்ற பெயரில் ஒரு பௌத்த நூல் இருந்ததாகத் தெரியவருகிறது. இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. காலம் முதலானவையும் தெரியவில்லை. சிவஞான சித்தியார் என்ற சைவ சாத்திரநூலுக்கு ஞானப்பிரகாசர் என்பவர் உரை வரைந்துள்ளார். அவ்வுரையில் இந்நூலின் ஒரு பாடலைத் தருகிறார். சௌத்திராந்திகன் மதம் என்பதற்கு உரிய நூலாகச் சித்தாந்தத் தொகை அவரால் காட்டப்பெற்றுள்ளது,
என்பது சித்தாந்தத் தொகை பாடலாகக் கொள்ளப்படுகிறது. இந்நூல் பற்றிய குறிப்பு நீலகேசியின் உரை வழியாகவும் கிடைக்கின்றது. “மருடரு மனம்வாய் மெய்யிற் கொலைமுதல் வினைபத்தாமே- என்பது சித்தாந்தத் தொகை” என்று நீலகேசி, புத்தவாதச்சருக்கம் 64-ஆம் பாட்டின் உரையில் கூறப்பட்டிருக்கின்றது. இவ்வளவே இந்நூல் பற்றிக் கிடைக்கும் செய்திகளாகும். இந்நூல் புத்த சமய நெறிகளான கொல்லாமை, புலாலுண்ணாமை, பொய்யாமை போன்றவற்றை விளக்கி நிற்கும் நூலாகும்.
திருப்பதிகம்
புத்தரைப் பற்றிய தோத்திர நூலாக திருப்பதிகம் என்ற நூல் விளங்கியிருக்கலாம். இதனை எழுதியவர் பற்றிய அறியக் கிடைக்கவில்லை. இதன் காலமும் தெரிந்தில. சிவஞான சித்தியாருக்கு ஞானப்பிரகாசர் எழுதிய உரைவழியாக இந்நூல் பற்றிய செய்தி கிடைத்தது.
என்ற பாடலைத் திருப்பதிகப் பாடலாக ஞானப்பிரகாசர் குறிக்கிறார். நீலகேசியின் உரையிலும் இந்நூல் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவ்வுரையில் மற்றொரு பாடலும் தரப்பெற்றுள்ளது.
என்பது நீலகேசி உரையால் கிடைக்கும் திருப்பதிகப் பாடலாகும்.
விம்பசார கதை
நீலகேசி உரையினால் விம்பசாரன் கதை என்ற பௌத்த நூலும் இருந்ததாக அறியப்பெறுகிறது. சிவஞான சித்தியாருக்கு ஞானப்பிரகாசர் உரையிலும் இந்நூல் பற்றிய குறிப்பு காணப்பெறுகிறது. விம்பசாரன் என்பவன் ஓர் அரசன். அவன் பௌத்த மதத்தைத் தழுவியவன் ஆவான். அவனது வரலாற்றை உரைப்பது விம்பசாரன் கதை என்பது உறுதி.
கிறிஸ்து பிறப்பதற்கு ஐநூற்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு விம்பசாரன் என்ற அரசன் இராசகிருகம் என்பதைத் தலைநகராக் கொண்டு அரசாட்சி செய்துவந்தான். இவரின் நாட்டைக் கடந்து ஞானத்தைத் தேடி கௌதமர் சென்றுகொண்டிருந்தார். இவரைக் கண்ட விம்பசாரன் இவரைத் தன்னுடன் தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டான். ஆனால் கௌதமர் தான் ஞானத்தைத் தேடிச் செல்வதாகவும், ஞானத்தை அடைந்தபின் விம்பசார அரசனைக் காண வருவதாகவும் சொன்னார். விம்பசாரனும் அவரின் ஞானப் பயணத்திற்கு வழி தந்தான்.
கௌதமர் ஞானம் பெற்றுப் புத்தரானார். இராச கிருகத்துக்கு விம்பசார அரசனைக் காண வந்தார். அரசன் மிக மகிழ்ந்து அவரின் ஞான உரை கேட்டு அவரின் சீடன் ஆனான். புத்தருக்கும் அவரின் சீடர்களுக்கும் விருந்தளித்து அவர்கள் தங்கியிருக்க வெளுவனம் என்ற வனத்தை வழங்கினான்.
இந்நிலையில் விம்பசார மன்னனுக்கு அஜாத சத்ரு என்ற மகன் இருந்தான். இவன் தனக்கென தனியறிவு பெற்றவன் அல்லன். சொல்வார் பேச்சைக் கேட்டு நடப்பவன். கௌதம புத்தரது தாய் மாமன் வழியில் உறவாக அமைந்தவன் தேவதத்தன். அவனுக்கு கௌதமர் மீது பெறாமை. அவரின் உயர்நிலையைத் தான் அடையவேண்டும் என்று அவன் யோசித்தான். இதற்கு அஜாத சத்ருவை இணைத்துக்கொண்டான். அரசனிடம் இருந்து அரசாட்சியை அஜாத சத்ரு மூலம் பெறுவது. அதனோடு புத்தரையும் அழித்துத் தான் பௌத்த சங்கத்தின் தலைமையைப் பெறுவது என்பது அவர்களின் திட்டம்.
அஜாதசத்ருவின் ஆசையை அறிந்த மன்னன் விம்பசாரன் அவனுக்கு அரசாட்சியை வழங்கினார். தேவதத்தனின் ஆலோசனைப்படி அரசாட்சி மட்டும்போதாது அரசனையும் அழிக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். அதுவும் நிறைவேறியது. நிறைவேறும் நேரத்தில் அஜாத சத்ருவிற்கு ஒரு மகன் பிறந்தான். தனக்கு மகன் பிறந்து தான் தந்தை நிலையைப் பெற்றபின் அஜாத சத்ருவின் தன் தந்தையின் இன்றியமையாமை புரிந்தது. தன் தவறை அவன் உணர்ந்துத் திருந்தினான். அவன் பௌத்த மதம் சார்ந்தான். தேவதத்தனின் திட்டமும் நிறைவேறவில்லை. இதுவே இப்படைப்பின் கதையாகும்.
இப்படைப்பின் ஓர் பாடல் மட்டும் கால வெள்ளத்தில் அழியாமல் கிடைக்கிறது. அப்பாடல் பின்வருமாறு.
உலும்பினி என்பது மாயதேவி புத்தரைப் பெற்றெடுத்த வனமாகும். இவ்வரலாற்றை இக்கதை எடுத்துரைத்துள்ளது.
மானாவூர்ப்பதிகம்
நீலகேசி காப்பியத்திற்கு வாமன முனிவர் வரைந்த உரையின் வாயிலாக மானாவூர்ப் பதிகம் என்ற பௌத்த நூல் இருந்ததாகத் தெரியவருகிறது. நீலகேசி உரையில் இந்நூலில் உள்ள ஒரு பாடல் எடுத்தாளப்பெற்றுள்ளது.
என்பது மானாவூர் பதிகப் பாடலாகும். இதில் புத்த பெருமானின் கருணை எடுத்தியம்பப் பெறுகிறது.
அபிதம்மாவதாரம்
புத்தநந்தரால் எழுதப்பெற்ற பௌத்த நூல் அபிதம்மாவதாரம் என்பதாகும். இது சுமதி என்ற பெண்ணின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதப்பெற்றதாகும். புத்தரின் அவதாரச் சிறப்பினை எடுத்துரைக்கும் நூல் இதுவாகும். இந்நூலும் தற்போது கிடைக்கவில்லை.
இவை தவிர தற்கால நிலையில் பெயரளவில் மட்டுமே அறியப்படுகிற பௌத்த நூல்கள் சிலவும் தெரியவருகின்றன. ஆசாரிய புத்த தத்த மகோதரர் என்பவர் மதுராத்த விலாசீனி, வினய வினவிச்சயம், உத்தரவினிச்சயம், ஜினலங்காரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆசாரிய தருமபாலர் என்பவர் பரிமார்த்த மஞ்ஜீஸா, நெட்டிய கரணத்தகதா, பரமார்த்த தீபனீ போன்ற நூல்களை எழுதியுள்ளார். அநுருத்தர் ஆயிரம் மாத்த சங்கிரகம், பரமார்த்தாவினிச்சயம், நாமரூபப் பரிச்சேதம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். காபசதெரர் என்பவர் மோகவிச்சேதனீ, விமதிவிச்சேதனீ, விமதி வினோதினி, அநாகத வம்சதம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
இவ்வாறு பௌத்த சமய நூல்கள் பலப்பல தோன்றியுள்ளன. இவை அனைத்தும் கால வெள்ளத்தில் கிடைக்காமலிருப்பது இந்தியத் தத்துவமெய்யியலுக்குக் குறையே ஆகும்.
பிற சமயத்தார் படைத்த பௌத்த சமயக் கருத்துகளைக் கொண்ட நூல்கள்
நீலகேசி, சிவஞான சித்தியார் போன்ற நூல்கள் இவ்வரிசையில் கொள்ளத்தக்கன. இந்நூல்கள் பௌத்த சமயக் கருத்துகளை மறுத்துத் தம் கொள்கைகளை நிலைநிறுத்துவனவாகும். இருப்பினும் இந்நூல்கள் எழுந்த காலத்தில் நிகழ்ந்த பௌத்த சமய நிலையை அறிந்து கொள்ள இவை துணை செய்கின்றன.
நீலகேசி
ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றாக அமைவது நீலகேசி ஆகும். இதனை இயற்றியவர் யார் என அறியப்படவில்லை. இது பத்துச் சருக்கங்களை உடையது. 895 பாடல்களை உடையது. இது குண்டலகேசிக்கு எதிராக எழுந்த காப்பியம் என்றே கருதப்படுகிறது. பாஞ்சால் நாட்டில் இருந்த சமண முனிவர் முனிச்சந்திரருக்கும் நீலிப் பேய்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலே காப்பியமாக படைக்கப்பெற்றுள்ளது. சமண மதமே இதில் வெல்கிறது. இதனுள் அமைந்துள்ள குண்டலகேசி வாதச் சருக்கம், புத்த வாதச் சருக்கம் ஆகியன பௌத்தக் கருத்துகளைக் கொண்டுள்ளன. இதனுள் குண்டலகேசியின் நூறு பாடல்கள் அறிமுகம் செய்யப்பெறுகின்றன. நூறு பாடல்களின் முதற்குறிப்பு தரப்பெற்று குண்டலகேசியின் வாதங்கள் மறுக்கப்பெறுகின்றன. இதன் காரணமாக குண்டலகேசி மறைந்தாலும் அந்நூலில் இருந்த பௌத்த சமயப்பாடல்கள் இவை என அறிந்துகொள்ள முடிகின்றது.
என்ற நிலையில் பௌத்த மதக் கருத்துகளுக்கு இடமளித்துள்ளது நீலகேசி
நீலகேசியைத் தொடர்ந்து சைவ சமயத் திருமுறைகளில் பௌத்தசமயக் கருத்துகள் இடம்பெறுகின்றன. சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் போன்ற பலரும் பௌத்த சமயக் கருத்துகளைக்காட்டி அவற்றின் மெய்த்தன்மையை விமர்சித்துள்ளனர். திருஞானசம்பந்தர் ஒவ்வொரு பதிகத்தின் பத்தாம் பாடலிலும் சமண பௌத்த மறுப்பை வெளியிடுகிறார். மேலும் புத்தரின் வேறுபெயர்கள், புத்த மதத்தோரின் வேறுபெயர்கள் அவர்களின் பழக்கவழக்கங்கள் ஆகியனவும் சம்பந்தரால் விமர்சிக்கப்பெற்றுள்ளன. மாணிக்கவாசகர் பௌத்தரை வாதில் வென்று இலங்கை மன்னின் வாய் பேச இயலா மகளைப் பேசவைத்தும் சைவத்தை நிலைநாட்டினார் என்று திருவிளையாடற்புராணம் குறிக்கிறது. சேக்கிழாரும் பெரிய புராணத்தில் பௌத்த சமயக் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். சைவ சமய சாத்திர நூல்களில் பௌத்த சமயக் கொள்கைகள் விவாதிக்கப்பெற்றுள்ளன.
சிவஞான சித்தியார்
சித்தாந்த சாத்திரங்கள் எனப்படும் பதினான்கு நூல்களுள் ஒன்று அருள் நந்தி சிவாசாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் என்பதாகும். இது சுபக்கம், பரபக்கம் என இரு பகுதிகளை உடையதுஇ சுபக்கம் என்பது அருள் நந்தி சிவாசாரியார் ஏற்ற சமயமான சைவ சித்தாந்தத்தின் கொள்கை விளக்கமாக அமைவது. பரபக்கம் என்பது தான் கொண்ட சைவ சித்தாந்த கொள்கையை ஒரு புறத்தில் வைத்துக்கொண்டு மற்றொரு புறத்தில் வேறு சமயக் கொள்கைகளை வைத்து உண்மை நியாயம் காண்பதாகும். இதில் புத்த சமயத்தின் நான்கு வகைகள் எடுத்துக்காட்டப்பெற்று அவை சைவ சித்தாந்த நோக்கில் ஆராயப்பபெறுகின்றன.
வைபாடிகள். மாத்துமிகள், சௌத்திராந்திகன், யோகசாரர் என்ற நால்வகைப் பிரிவாக சிவஞான சித்தியார் நூல் எழுந்த காலத்தில் பௌத்தம் தமிழகத்தில் விளங்கியிருந்தது. இந்நால்வகையின் சமயக் கருத்துகளையும் எடுத்துக்காட்டி அவற்றை மறுக்கிறார் அருள்நந்தி சிவாசாரியார்.
என்று அருள்நந்தி சிவாசாரியர் புத்த மதக் கொள்கைகளை விவரிக்க ஆரம்பிக்கின்றார். வேத அடிப்படை ஏற்காத அவைதிக சமயம் பௌத்தம் என்பதை முதலடியிலேயே குறிப்பிட்டுவிடுகிறார் அருள்நந்திசிவாசாரியார். மேலும் ஐந்து சீலம், துவராடை போதி மரத்தைத் தெய்வமாக வணங்கல் போன்ற பௌத்த இயல்புகள் சிவஞான சித்தியாரில் காட்டப்பெற்றுள்ளன. சிவஞான சித்தியாரில் புத்த ஜாதகக் கதைகளின் சாரம் விவரிக்கப்பெறுகின்றது. இந்நான்கு மதங்களையும் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு அவற்றின் மறுதலையாக தன் கொள்கையை நிறுத்தும் போக்கில் சித்தியார் அமைகிறது.
பிற்காலத்தில் பௌத்த சமய எழுச்சி
கி.பி 11 ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு பௌத்தம் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இதற்குக் காரணம் உட்பகை என்று குறிக்கப்பெறுகிறது. இந்தியாவில் 1864 ஆம் ஆண்டு வாக்கில் அநாகரிக தர்மபால என்பவர் பௌத்தத்தை மீட்சி அடையச் செய்தார். இந்திய மகாபோதி சங்கம் என்ற ஒன்றை அவர் நிறுவினார். சிகாகோவில் நடைபெற்ற அனைத்து சமய மாநாட்டில் இந்தியாவின் சார்பில் அநாகரிக தர்மபால பௌத்த சமயம் பற்றி உரையாற்றினார். இதே மாநாட்டில் விவேகானந்தர் உரையாற்றினார் என்பதும் குறிக்கத்தக்கது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் பிற்கால பௌத்த எழுச்சிக்குக் காரணமாக அமைந்தவர், க. அயோத்திதாசர். இவர்1898 ஆம் ஆண்டு வாக்கில் இலங்கை சென்று பஞ்ச சீலம் பெற்று பௌத்தரானவர். இவர் இராயப்பேட்டையில் தென்னிந்திய சாக்கிய புத்த சங்கத்தை நிறுவிப் பௌத்தத்தொண்டாற்றினார். அயோத்திதாசர் பௌத்த நெறிக் கொள்கைகளை விளக்கும பத்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்திரர் தேச சரித்திரம், இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம், சாக்கிய முனிவரலாறு, புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி, புத்த மார்க்க வினா விடை, புத்தரது ஆதி வேதம் என்பன அவர் படைத்த நூல்கள் ஆகும். பௌத்த கருத்துக்களைப் பரப்ப தமிழன் என்ற வார இதழையும் இவர் நடத்தி வந்தார்.
அடுத்து அண்ணல் அம்பேத்கார் அவர்களும் பௌத்த சமயத்திற்கு தொண்டாற்றிய பெருந்தகையாளர் ஆவார். இவர் கௌதம புத்தரின் வரலாற்று நூலைக் கற்று அதன்வழி பௌத்த சமயம் சார்ந்தார். அசோகரது தூண், தர்மச் சக்கரம் ஆகிய பௌத்தச் சின்னங்களை இந்தியாவின் தேசிய சின்னங்களாக உயர இவரே காரணம். புத்த மாநாடுகள், புத்த கல்விநிறுவனங்களை இவர் உருவாக்கினார். பௌத்த கொள்கைகளை விளக்கும் ஆவணங்களை வெளிப்படுத்தினார்.
தமிழகத்திலும் இலங்கையிலும் இன்னும் பௌத்த மெய்யியல் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி இராதா கிருஷ்ணன் அவர்கள் தலைமை பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் வரலாறு என்ற நூல் இந்திய மெய்யியல் பற்றி அறிந்து கொள்ள உதவும் அடிப்படை நூலாகும். எம்.ஆர் அப்பாதுரையார் எழுதிய தம்மபதம், ஜி. அப்பாதுரையார் எழுதிய புத்தர அருள் அறம், அறிஞர் அண்ணா எழுதிய புத்தரின் புன்னகை, பி.எஸ். ஆச்சார்யா எழுதிய கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும், ஜவசாகரர் எழுதிய அறப்பண்பாடு, ஆனந்த குமாரஸ்வாமி எழுதிய கோதம புத்தர், அ.இரத்தினாபாய் எழுதிய தயோதய காவியம், எஸ். இராமகிருஷ்ணன் எழதிய கொங்குநாடும் சமணமும், தி.ராஜகோபாலன் எழுதிய அறிஞர் பார்வையில் பௌத்தம், அரங்க இராமலிங்கம் எழுதிய பௌத்தம் போற்றிய பெண் தெய்வங்கள், எஸ்.ஏ. எதிரிவீர எழுதிய புத்ததம்மம் அடிப்படை கொள்கைகள், சோ. ந. கந்தசாமி எழுதிய பௌத்தம், கிருஷ்ணதத்தபட் எழுதிய பௌத்தம், உ,வே.சா. எழுதிய புத்தசரித்திரம், பௌத்த தத்துவம், பௌத்தசங்கம், சாமி. சிதம்பரனார் எழுதிய மணிமேகலை காட்டும் வாழ்வு, சிவநேசச் செல்வன் பௌத்த மடாலய நூலகங்களினூடாககத் தெரியவரும் தமிழக ஈழ இலக்கிய உறவுகள், பிக்கு சோமானந்தா எழுதிய தம்மபதம், வீ. சித்தார்த்த எழுதிய நீயும் புத்தனே, தங்கமணி எழுதிய புத்தர் புராணக் கதைகள், தந்தைப் பெரியார் எழுதிய புத்தநெறி, தம்மிகா எழுதிய புத்தர் வசனம், தரமானந்த கோசம்பி எழுதிய பகவான் புத்தர், சோ.நடராசன் எழுதிய சித்தார்த்தன், சி.எஸ். தேவநாத் எழுதிய ஜென் தத்துவ விளக்கக்கதைகள், பால்காரஸ் எழுதிய புத்தரின் அறவழி, பிருமேந்திரர் எழுதிய புத்தனைப் பற்றி, என் ரமணி எழுதிய தம்மபதம், அரு. இராமநாதன் எழுதிய புத்தர் பொன்மொழிகள், ப.ராமஸ்வாமி எழுதிய புத்தஞாயிறு, புத்தர் போதனைகள், ப.ராமசாமி எழுதிய போதி மாதவன், கி.லஷ்மணன் எழுதிய இந்தியத்தத்துவ ஞானம், ஏ.பி. வள்ளிநாயகம் எழுதிய பவுத்த மார்க்கம் பற்றி விவேகானந்தர், மயிலை சீனி, வேங்கடசாமி எழுதிய பௌத்தமும் தமிழும், மு.கு. ஜெகந்நாத ராஜா எழுதிய பௌத்தமறைநூல், குந்தமாலா, பா. ஜம்புலிங்கம் எழுதிய சோழநாட்டில் பௌத்தம், ஜனகன் எழுதிய கவுதம புத்தர், ச. கங்காதரன் எழுதிய சைவ நோக்கில் புறச் சமயங்கள் போன்றன பௌத்த சமயத்தை வலுவூட்டும் தற்காலத் தமிழ் நூல்கள் ஆகும்.
இவ்வகையில் பௌத்த சமய நூல்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் ஒரு தொடரிழையைப் பெற்றுவந்துள்ளன. இக்காலத்தில் எழுந்த பௌத்த சமய நூல்கள் பழங்கால பௌத்தத்தை மீட்டெடுக்கும் வல்லமையைப்பெற்றுள்ளன. பௌத்த மதக் கருத்துகளால் இந்தியத் தத்துவ ஞானம் உலகம் முழுவதும் அறியப்பட்டபெருமையைப்பெற்றுள்ளது. உலக நாடுகளின் மெய்ப்பொருள் தேடலுக்கு முன்னோடியாக இந்தியா விளங்கியது என்பதையும் இதன் வழி அறியமுடிகிறது.