தலைவனும் தலைவியும் காதல் மொழி பேசி மகிழ்ந்து இருக்கின்றனர். அப்படி இல்லாத காலங்களில், தலைவனின் பிரிவை எண்ணி தலைவி வருந்தி வாடுகின்றாள். அதன் காரணமாக பசலை கொண்டு உடல் இளைத்து, தோல் வெளுத்து விடுகின்றாள். அவள் கைகள் மெலிந்து வளையல்கள் அணிய முடியாது கழன்றுவிடுகின்றன. அவளின் களவொழுக்கத்தை அறியாத தலைவியின் தாயும், செவிலித் தாயும், கட்டுவிச்சியை அழைத்து குறிச் சொல்ல வேண்டுகின்றனர்.
கட்டுவிச்சி என்பவள் குறிஞ்சி மலையில் வாழும் அகவன் மகள். அவள் அரிசியைத் தூவி அந்த அரிசிகள் விழும் அமைப்பைக் கொண்டு குறி சொல்கின்றாள். குறிஞ்சி நிலக் கடவுள் முருகனின் அணங்கினால் தலைவிக்கு பாதிப்பு என கூறுகிறாள். முருகனின் கோபம் தணிய வேலனை அழைத்து வந்து வெறியாட்டம் ஆட வேண்டும் எனச் சொல்கிறாள் வேலன் என்பவன் குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு வழிபாட்டுக்கு தேவையானவற்றை செய்பவன்.
தொல்காப்பியம் கட்டுவிச்சி, வேலனை பற்றிக் கூறும்போது, ‘களவு அலர் ஆயினும், காமம் மெய்ப்படுப்பினும், அளவு மிகத் தோன்றினும், தலைப்பெய்து காணினும், கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும் ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்’ (தொலகாப்பியம், பொருளதிகாரம் 115). என்கின்றது.
வீட்டிற்கு முன் புது மணல் பரப்பி, மலர்ப்பந்தல் அமைத்து இரவில் வெறியாட்டம் நிகழ்த்தப்படும். வேல் ஒன்றைத் தரையில் நட்டு அந்த வேலுக்கு கடம்ப மலர் மாலை அணிவிக்கப்படும். தரையில் அரிசிப்பொரித் தூவப்பட்டு பின் முருகனுக்குச் செந்தினையைக் குருதியுடன் வேலன் படையிலிடுவான். பின் கழங்கினைத் தரையில் தூவி அது விழுந்த அமைப்பைக் கொண்டு குறி சொல்லப்படும். ஆட்டுக்குட்டி ஒன்றும் பலியிடப்படும். பின் வேப்ப மாலையினை அணிந்து, முரசும் பிற இசைக் கருவிகள் ஒலிக்க, வேலன் வெறியாட்டம் ஆடி தலைவியின் கையில் தாயத்து ஒன்றை கட்டுவான்.
வேலனின் வெறியாட்டம் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியப் பாடல்களில் உண்டு. பெரும்பாலும் குறிஞ்சித்திணையில் தான் வேலனின் வெறியாட்டப் பாடல்கள் அமைந்திருக்கும். பெரும்பாலும் தலைவியின் கூற்றாகவோ அல்லது தோழியின் கூற்றாகவோ தான் அமைந்திருக்கும். வெறியாட்டம் பற்றி குறிப்பிடும் சில சங்க இலக்கியப் பாடல்கள்.
பாடல்: முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல! சினவல் ஓம்புமதி! வினவுவது உடையேன்! பல் வேறு உருவில் சில் அவிழ் மடையொடு சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி வணங்கினை கொடுத்தியாயின், அணங்கிய விண் தோய் மா மலைச் சிலம்பன் ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே?
பொருளுரை: முருகனை வழிபட்டு வந்த அறிவு வாய்ந்த வேலனே! என் மீது சினம் கொள்வதை தவிர்ப்பாயாக! உன்னை ஒன்று கேட்கின்றேன். பல்வேறு நிறத்தையுடைய சில சோற்றையுடைய பலியுடன், சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, தலைவியுடைய நறுமணமுடைய நெற்றியைத் தடவி, முருகனை வணங்கி, பலியாகக் கொடுக்கின்றாய். அப்படிக் கொடுப்பதால் தலைவியைத் துன்புறுத்திய வானத்தைத் தோய்க்கும் பெரிய மலையின் தலைவனின் ஒளியுடைய மாலையை அணிந்த மார்பு நீ கொடுக்கும் பலியை உண்ணுமோ? எனக் கேட்கின்றாள்.
வெறியாடலை வழிபட வந்த மகளிர் கைகோர்த்து குரவைக் கூத்தாடினர் எனும் குறிப்பை மதுரைக்காஞ்சியில் உள்ள குறிப்புகள் மூலம் அறியலாம். ‘சீர்மிகு நெடுவேள் பேணித் தரூஉம் பிணையூஉ மன்று தொறும் நின்ற குரவை சேரிதொறும் உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ வேறு வேறு கம்பலை வெறிகொள்பு மயங்கி’’
வெறியாடலை ஒத்த நிகழ்ச்சி பல இனக்குழுச் சமூகங்களில் இன்றும் காணப்படுவதாக மானுட வியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலத்தின் (அன்றைய சேர நாடு) பகுதிகளான மலபார், காசர்கோடு மாவட்டங்களில் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் வேலன் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் பூசாரி இனத்தவர் இன்றும் வாழ்கின்றனர். அவர்கள் ‘வேலன்மார்’ என்று அழைக்கப் பெறுகின்றனர். குறிப்பிட்ட விழாக்காலங்களில் இவர்கள் வேலன் கோலம் அணிந்து ஆடுகின்றனர். அது வேலனாட்டம் அல்லது தெய்யம் (தெய்வம்) என்று அழைக்கப்படுகின்றது.
அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்து உள்ளது. அதே போல பழங்காலத் தமிழர் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில் மதங்கள் தோன்றியிருக்கின்றன. தமிழ் மொழி ஒரு சமயச்சார்பற்ற மொழி என கால்டுவெல் எனும் மொழியியல் அறிஞர் குறிப்பிட்டு உள்ளதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அந்த வகையில், சங்க இலக்கியப் பாடல்களைப் படிக்கின்றபோது, நடுகல் வழிபாடு நம் தமிழர்களின் வாழ்வியல் முறையாக இருந்திருக்கின்றது எனத் தெரிய வருகின்றது. வீரர்களுக்கும், மன்னர்களுக்கும் அவர்கள் இறந்தபின் நடுகல் வைத்து வணங்கும் பழக்கம் நம்மிடையே இருந்திருக்கின்றது. மதம் என்ற நிறுவனமயம் ஆக்கப்பட்ட அமைப்பு நம்மிடையே சங்க காலத்தில் இல்லை. திணை வழிபாடு இருந்துள்ளது. இயற்கையை தமிழர்கள் வழிபட்டிருக்கின்றனர். ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கின்றது என்றோ அது தான் இயற்கையை, மனித வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றது என்றோ, மனிதர்களை ஒரு கடவுள் தான் படைத்தார் என்ற கருத்து முதல்வாதம் எந்த மதம் சார்ந்தும் வாழாத தமிழர்களிடம் ஆதியில் இல்லை.
நடுகல் வழிபாடு எனப் பார்க்கின்ற போது சங்க இலக்கியத்தில் அதியமான், கோப்பெருஞ்சோழன், சோழன் ஆகியோர்களுக்கு நடுகல் இருந்ததாக நாம் பாடல்களின் மூலம் அறிந்து கொள்கின்றோம். அதே போல் ஆண்களுக்கு மட்டுமே நடுகல் நடப்பட்டதாக குறிப்புகள் கிடைக்கின்றது. புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியப் பாடல்களில் நடுகல் பற்றிய குறிப்புகள் உண்டு.
நடுகல் மீது மயில் இறகு கொண்டு அலங்கரித்தல், கள் ஊற்றுதல், ஆடுகளை துடி அடித்து பலி கொடுத்தல் எனும் வழக்கம் இருந்துள்ளது. இன்றும் ஈழத்தில் இறந்த மாவீரர்களுக்கு நடப்பட்ட நடுகல் வணக்கத்தை நாம் பார்க்கின்றோம்.
புறநானூற்றுப் பாடல் 335 இல் மாங்குடி கிழார் எழுதியப் பாடலின் மூலம் நடுகல் சிறப்பை அறிந்துகொள்ள முடியும்.
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவின் அல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு 335)
ஒத்துப் போகாத பகைவர்களை (தெவ்வர் = பகைவர்) எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்டிய கல்லைத் தான் நாங்கள் வழிபடுவோம். நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது என நடுகல் வழிபாட்டின் சிறப்பினைக் கூறுகின்றது.
அதே போன்று கோப்பெருஞ்சோழன் இறந்தபின் அவனுடைய நண்பரான பொத்தியார் அவனை நினைத்து வருந்திப்பாடுவதாக புறநானூற்றுப் பாடல் 221 இன் மூலம் அறிந்து கொள்கின்றோம். நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று பைதல் ஒக்கல் தழீஇ அதனை வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர் நனந்தலை உலகம் அரந்தை தூங்கக் கெடுவில் நல்லிசை சூடி நடுகல் ஆயினன் புரவலன் எனவே (புறநானூறு 221) நம்முடைய புரவலன் இறந்ததால் இந்த பெரிய உலகம் வருந்துகின்றது. குறையில்லா நல்ல புகழையுடையவன் நடுகல்லாகி விட்டானே என வருந்துகின்றார்.
மலைபடுகடாம் எனும் ஆற்றுப்படை நூலில் ஒரு பாணர் மற்றொரு பாணரை அரசனை கண்டு பரிசில் பெற ஆற்றுப்படுத்துவார், அதில் வழி நெடுக நடுகல் இருக்கும் எனும் அடையாளத்தைக் கூறி வழி கூறுவார்.
ஒன்னார்த் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர் செல்லா இல்இசைப் பெயரொடு நட்ட கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக … 390
புகழுடைய பெயர்களோடு நடுகற்கள் பல உண்டு வளைந்த பாதையில். உங்களுடைய பாட்டு இன்பத்தைத் தரும் வகையில் தாளத்தோடு பாடுங்கள். தொன்றுதொட்டு வழங்கும் மரபு முறைப்படி உங்கள் யாழை இயக்கி, நடுகற்களை வணங்கி விட்டு நீங்கள் செல்லுங்கள் என ஆற்றுப்படுத்துவதாக அந்தப் பாடலில் குறிப்புகள் காணப்பெறுகின்றது.
அதே போன்று ஐங்குறுநூற்றில், ஓதலாந்தையார் எனும் புலவர் யானையின் தும்பிக்கையின் சொர சொரப்பை எழுத்துகள் பொறித்த நடுகல்லோடு ஒப்பிடுகின்றார். விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப் பெருங்கை யானை (ஐங்குறுநூறு 352) அகநானூற்றுப் பாடல் 343 இல் மதுரை மருதன் இளநாகனார் பாலை நிலத்தில் இருக்கும் உடைந்த நடுகல் ஒன்றைப் பற்றி குறிப்பிடுகின்றார். மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப், புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்(அகநானூறு 343)
சங்க இலக்கியத்தில் தமிழர்களின் திருமணங்கள் எப்படி பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்தது என்பதற்கு சான்றாக இரண்டு முக்கிய பாடல்களை நாம் பார்க்கலாம், ஒன்று அகநானூறு 86 வது பாடல் மற்றும் 136 வது பாடல்.
அகநானூறு 86 வது பாடல் நல்லாவூர் கிழார் எனும் புலவரால் எழுதப்பட்டது. வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது பற்றி சொல்லும் பாடல்.
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால் தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி மனை விளக்குறுத்து, மாலை தொடரி, கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென, உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர், பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர, புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி, ‘கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!’ என, நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, வதுவை நல் மணம் கழிந்த பின்றை, கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து, ‘பேர் இற்கிழத்தி ஆக’ எனத் தமர் தர, ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல், கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ, முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப, அஞ்சினள் உயிர்த்தகாலை, ‘யாழ நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை’ என, இன் நகை இருக்கை, பின் யான் வினவலின், செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர, அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து, ஒய்யென இறைஞ்சியோளே மாவின் மடம் கொள் மதைஇய நோக்கின், ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.
இந்தப் பாடலின் பொருள் உழுந்தம் பருப்பைக் கூட்டிச் சமைத்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளை உண்ணுதல் ஆரவாரத்துடன் நிகழ, வரிசையாகக் கால்களையுடைய (கம்பங்கையுடைய, தூண்களுடைய) பெரிய பந்தலில், கொணர்ந்து இட்ட புதிய மணலைப் பரப்பி, மனையில் விளக்குகளை ஏற்றி வைத்து, மாலைகளைத் தொங்கவிட்டு, தீயக் கோள்களின் தொடர்பு நீங்கிய, வளைந்த வெண்ணிலாவை குற்றமற்ற சிறந்த புகழையுடைய உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில், மிக்க இருள் நீங்கிய அழகான காலை நேரத்தில், தலை உச்சியில் குடத்தை வைத்திருப்பவர்களும், புதிய அகன்றப் பானைகளைத் தூக்கி வைத்திருப்பவர்களும் ஆகிய திருமணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவாகவும் பின்னே தருவனவாகவும் முறையே தந்திட, புதல்வர்களைப் பெற்ற, தேமலுடைய அழகிய வயிற்றையுடைய, தூய அணிகளை அணிந்த நான்கு பெண்கள் கூடி, நல்ல பேறுகளைத் தந்து உன்னை எய்தியக் கணவனை விரும்பிப் பேணும் பெண்ணாக நீ ஆக’ என்று தண்ணீருடன் கூடிய ஈரமான இதழ்களையுடைய பூக்களை நெல்லுடன் அவளுடைய அடர்ந்தக் கருமையான கூந்தலில் தூவி வாழ்த்தினர். இவ்வாறு திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய சுற்றத்தார் ஒலியுடன் விரைந்து வந்து, ‘பெரிய மனைக் கிழத்தி ஆவாயாக நீ’ என்று அவளை வாழ்த்தி, என்னிடம் அவளைத் தந்தனர் என்கிறான் தலைவன் .
மேலும் நாங்கள் இருவரும் புணர்ச்சிக்குரிய ஓர் அறையில் தனிமையில் இருந்தோம் (முதலிரவு அறை) தன் முதுகினை வளைத்து, நாணத்துடன் தன்னுடைய புத்தாடையில் ஒதுங்கினாள் அவள். அவளை அணைக்கும் விருப்பத்துடன், நாணத்தினால் அவள் தன் முகத்தினை மறைத்த ஆடையை நான் நீக்க, அவள் அஞ்சி பெருமூச்சு விட்டாள். ‘உன் நெஞ்சில் உள்ளதை மறைக்காது என்னிடம் கூறு’ என்றேன் நான். இனிய மகிழ்ச்சியுடன், நாங்கள் ஒன்றாக இருந்த அந்த நொடிகளில், மானின் மடப்பத்தையும், பெருமையான பார்வையையும், ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலையும் உடையவளாக, சிவப்பு மணிகள் பதித்த காதணி தன் அழகிய காதுகளில் அசைய, நெஞ்சில் மிக்க மகிழ்ச்சியுடன், விரைந்து தலைகுனிந்தாள் அந்த மாமை நிறத்துடைய பெண்.
கனையிருள் அகன்ற – பூர்வபக்கத்தையுடைய காலை. கொடும் புறம் – நாணத்தால் வளைந்த உடம்பு. சதுர்த்தியறை – நான்காம் நாள் பள்ளியறை. மதைஇய நோக்கு – செருக்கின பார்வை மாமை -கருமை
இந்தப் பாடலில் முழுதும் ஆரிய சடங்குகள் இல்லை, ஐயர் எனும் நபர் இல்லை, தாலி இல்லை. ஆனால் நாள் பார்த்து சுற்றத்தார் சூழ திருமணம் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது.
அதே போன்று வீட்டு முற்றத்தில் போடப்படும் திருமணப் பந்தலில் வெண்மணல் பரப்புவது, பூச்சரம் கட்டுவது இன்றும் யாழ்ப்பாணத்தில் வழக்கில் இருந்து வருவது எண்ணி வியக்கத்தக்கது.
அதே போன்று அகநானூறு 136, இதை எழுதியவர் விற்றூற்று மூதெயினனார், இப்பாடலின் திணை மருதம் – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது.
மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு, வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப், புள்ளுப் புணர்ந்து, இனிய ஆகத் தெள் ஒளி அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்துக், கடி நகர் புனைந்து, கடவுள் பேணிப், படு மண முழவொடு பரூஉப்பணை இமிழ, வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக்கணும் இமையார் நோக்குபு, மறைய, மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணு மணி அன்ன மா இதழ்ப் பாவைத் தண் நறு முகையொடு வெந்நூல் சூட்டித், தூ உடைப் பொலிந்து, மேவரத் துவன்றி, மழை பட்டன்ன மணன் மலி பந்தர், இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித் தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின், உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம் படுவி முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப், ‘பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர் உறு வளி ஆற்றச் சிறு வரை திற’ என, ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென நாணினள் இறைஞ்சியோளே, பேணிப் பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச் சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.
குற்றம் உண்டாகாதபடிச் சமைக்கப்பட்ட நெய் மிக்க வெள்ளைச் சோற்றை எல்லை இல்லாத வள்ளன்மைப் பண்புடன் சுற்றத்தார்க்கும் சான்றோர்களுக்கும் உண்ணக் கொடுத்து அவர்களைக் கவனித்து, (இதனை சிலர் ஊண் சோறு என்றும் குறிப்பிடுவர்)
புள் நிமித்தம் (நல்ல நேரம்) பொருந்தி இருக்கும் இனிமையான வேளையில், உரோகிணிக் கூடிய குற்றமற்ற நல்ல நாளில், மணமேடையை அழகுப்படுத்தி, கடவுளை வழிபட்டு, (எந்தக் கடவுள் என்ற குறிப்பு இல்லை என்பது கவனிக்கத்தக்கது)
ஒலிக்கும் மண முரசுடன், பணை முரசும் ஒலிக்க (பல விதமான முழவு போன்ற முரசுகள் சங்க இலக்கிய பாடல்கள் மூலம் அறியமுடிகின்றது , அந்த வகையில் பணை முரசு ஒருவகை பெரிய முரசு)
தலைவியை நீராட்டிய பெண்கள், தங்களின் மலர் போன்றக் கண்களால் இமைக்காமல் அவளை நோக்கி, பின் விரைந்து மறைய, முதிய கன்று மென்மையான மலர்களையுடைய வாகை மரத்தின் புல்லிய (சிறப்பு இல்லாத) பின்புறத்தையுடைய பிரிவு உடைய இலைகளை உண்டப் பள்ளத்தில் படர்ந்துள்ள, ஒலிக்கும் வானின் முதல் மழைக்குத் துளிர்த்த கழுவிய நீலமணியை ஒத்தக்கரிய இதழ்களையும் கிழங்கையும் உள்ள அறுகம்புல்லின் குளிர்ந்த நறுமணமான அரும்புடன் தொடுத்த வெள்ளை நூலை அவளுக்குச் சூட்டி, மேகம் ஒலித்தாற்போல் ஒலியுடைய திருமணப் பந்தலில், அணிகளைச் சிறப்புடன் அணிந்த அவளின் வியர்வையைத் துடைத்து, அவள் குடும்பத்தார் அவளை எனக்குத் தர, முதல் நாள் இரவில், வெறுப்பு இல்லாத கற்புடைய அவள், என் உயிர்க்கு உடம்பாகப் பொருந்தும் அவள், கசங்காத புத்தாடையால் தான் உடலை முழுக்கப் போர்த்தியிருக்க, “உன் பிறை நெற்றியில் அதிகப் புழுக்கத்தினால் அரும்பியுள்ள வியர்வையைப் போக்க, உன் ஆடையைக் கொஞ்சம் திற” என்று கூறி ஆர்வ நெஞ்சத்துடன் மூடிய அவளுடைய ஆடையை நான் கவர, உறையினின்று எடுத்த வாள் போல அவள் உருவம் வெளிப்பட்டு விளங்க, மறைக்கும் வழியை அறியாதவள் ஆகி, விரைவாக நாணம் அடைந்து, வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கும் அழகிய நிறம் பொருந்தியப் பருமனான ஆம்பல் மலர்ச் சரம் அணிந்த தன்னுடைய கருமையான அடர்ந்தக் கூந்தலால், தன் உடலை மறைத்து என் முன் தலைக் குனிந்தாள் என்று தலைவன் தன் நெஞ்சத்திடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
இந்த இரு திருமண பாடல்களிலும் குறிப்பிடத்தக்கது என்ன என்றால்?
பொருள் புரியாத வட மொழி மந்திரங்கள் இல்லை, புரோகிதர் இல்லை, எரி ஓம்பல் இல்லை, தீவலம் இல்லை, அம்மி மிதித்தல் இல்லை, அருந்ததி காட்டல் இல்லை, கோத்திரம் கூறல் முதலியன இல்லை என்பதை உணர்ந்து தமிழர் திருமணம் எந்த மூடப் பழக்கத்திற்கும் ஆட்பட்டு இருக்கவில்லை என்பதே உண்மை.