New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை” தேமொழி


Guru

Status: Offline
Posts: 24791
Date:
சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை” தேமொழி
Permalink  
 


 சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை”

தேமொழி  Apr 28, 2018

 

oct25முன்னுரை:

சி.என். அண்ணாதுரை எழுதிய நூல்களுள் மிகவும் சர்ச்சைக்குரிய நூலாகவும், தடைசெய்யப்பட்ட நூலாகவும், அதையும்விட அவருக்கு ஆறு  மாதங்கள் சிறைதண்டனையும்,  700 ரூபாய் அபராதத்தையும் சென்னை மாநில அரசு விதிப்பதற்குக் காரணமாக இருந்த நூல் “ஆரியமாயை”.  சுமார் அறுபது பக்கங்களைக் கொண்ட மிகச் சிறிய நூல் இது. இந்நூலில் ஆரியர்களாகிய பிராமணர்களை அண்ணாதுரை மிகக் கடுமையாகச் சாடுவதாகவும், ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருப்பதாகவும் விமர்சனம் வைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. நூல் முழுவதும் அவர் அக்கால (1940 களில்) எதிரணியில் இருந்த ஆரியச் சார்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் பலரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு மறுமொழி அளிக்கும் விதத்திலும், தமிழர்களை நோக்கி எழுதியிருப்பதையும் காணலாம். அவ்வாறே, நூலின் சில பகுதிகளில் மாணவர்களை நோக்கியும், சில பகுதிகளில் தமிழறிஞர்களை நோக்கியும் எழுதியிருப்பதையும் காணமுடிகிறது.

மக்களிடையே கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காக வழக்கு தொடரப்பட்டு அவர் பலமுறை நீதிமன்றத்திற்கு இழுத்தடிக்கப்பட்டதை, “ஆரிய மாயை வழக்குக்காகப் பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயண சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத் தொண்டைமானைத் தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரியமாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரியமாயை, இலட்சிய வரலாறு, இராவணகாவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  அண்ணாதுரை உள்ளதைத்தான் எழுதினான் என்று அவர்களுக்கு நன்று தெரிந்ததே. சர்க்கார் நூல்களின் மீது தடைவிதிப்பதை விட்டுவிட்டு முக்கியமாகச் செய்யவேண்டிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது” என்று அவர் வாயிலாகவே அவரது மேடைப்பேச்சு ஒன்றின் மூலம் அறியவும் முடிகிறது.

இந்த நூல், விடுதலைக்கு முற்பட்ட இந்தியாவில், 1941ல் அண்ணாதுரையால் எழுதப்பட்டு 3 பதிப்புகள் வெளியான பின் 1943ல் இந்த நூல் தடை செய்யப்பட்டது. முன்னுரையில் அவர், “இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன” என்று குறிப்பிடுகிறார். ஆபி டியூபா, சர். ஜான் மார்ஷல், ஹாவல்,  பி. டி. சீனிவாச  ஐயங்கார், பாஸ்கி, இத்தாலி ஆசிரியர் செர்ஜி, டாக்டர் ஹாடன், டி.ஏ. இராமலிங்கம் செட்டியார், எம். எஸ். இராமசாமி ஐயங்கார், அறிஞர் கால்டுவெல், டாக்டர் கில்பர்ட் ஸ்லேட்டர், பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, பி. வி. கிருஷ்ணாராவ், ஏ. கெ. சாண்டர்ஸ், பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் (இவ்வரிசைப்படுத்துதல், நூலில் இடம்பெறும் கருத்து வரிசையை ஒட்டி அமைகிறது)  என்று அண்ணாதுரை மேற்கோள் காட்டும் ஆய்வாளர்கள் பட்டியலும் மிக நீளம்; அவர்கள் கூறியதாக அண்ணாதுரை சுட்டும் கருத்துகளும் பன்முகத் தன்மை வாய்ந்தவையாக ஆரியர் குறித்தும், ஆரியமாயை குறித்தும் பலகோணங்களை நம்முன்வைக்கிறது.

siragu annadurai2

ஆரிய மாயை  போற்றி பாடல்:

ஆரிய மாயை

பேராசைப் பெருந்தகையே போற்றி!

பேசநா இரண்டுடையாய் போற்றி!

தந்திர மூர்த்தி போற்றி!

தாசர்தம் தலைவா போற்றி!

வஞ்சக வேந்தே போற்றி!

வன்கண நாதா போற்றி!

கோழையே போற்றி, போற்றி!

பயங்கொள்ளிப் பரமா போற்றி!

படுமோசம் புரிவாய் போற்றி!

சிண்டு முடிந் திடுவாய் போற்றி!

சிரித்திடு நரியே போற்றி!

ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!

உயர் அந்தி உணர்வோய் போற்றி!

எம் இனம் கெடுத்தோய் போற்றி!

ஈடில்லாக் கேடே போற்றி!

இரை, இதோ போற்றி! போற்றி!

ஏத்தினேன் போற்றி! போற்றி!

ஆரியர் இயல்பு:

கேடுபயக்கும் குணமுடையோரைப் போற்றுவது மடமையன்றோ? என்போருக்கு, “ஆரிய மாயையில்” வீழ்ந்துள்ள திராவிடர் சிலர் (சற்சூத்திரர்கள்) அவர்களைப் போற்றுவது வழக்கம்தானே. அது போல எழுதப்பட்டது இந்தப் போற்றிபாடல். அவர்கள் போற்றிடும் “‘பூசுரரின்’ திருக்கலியாண குணங்கள்” இவையென  நான் சொல்லவில்லை. “ஆபி டியூபா/ஆபே டூபே (Abbe J. A. Dubois, 1765-1848)” எனும் அறிஞர் தம் நூலில் கூறியது. நான் செய்தது ஆரிய மாயையின் பிடியில் இருப்போர் கூறிக்கொண்டிருக்கும் போற்றிபாடல் போல அதை எழுதியது மட்டுமே,  என்று கூறும்  அண்ணாதுரை,  “நான் ஆரியரைப் போற்றவுமில்லை, போற்றிடக் கூறவுமில்லை! அதுபோலவே நான் அவர்களை ஏசவுமில்லை; ஏசிடும்படி உங்களை ஏவிடவும் இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்” என்ற விளக்கத்துடன் நூலைத் தொடங்குகிறார்.

Avarice, Ambition, Cunning, Wily, Double Tongued Servile, Insinuating, Injustice, Fraud, Dishonest, Oppression, Intrigue போன்ற சொற்களைக் கொண்டு ஆபி டியூபா தமது நூலில் (Hindu Manners Customs And Ceremonies, by Abbe J. A. Dubois*) பார்ப்பனர்களின் இயல்பை விவரிப்பதை எடுத்துக் காட்டுகிறார் அண்ணாதுரை. நூலில் “தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லிளித்து நிற்பது முதலியன அவர்களிடம் இயற்கையாகவே இருக்கின்றன. எப்படியாவது அரசர்களை அண்டிப் பதவிபெறுவதே அவர்கள் நோக்கம் என்று ஆபி எழுதுகிறார்.” (“Naturally cunning, wily, double-tongued, and servile, they turn these most undesirable qualities to account by insinuating themselves everywhere; their main object, upon which they expend the greatest ingenuity, being to gain access to the courts of princes or other people of high rank.”) என்று ஆபி டியூபா பார்ப்பனர்களை தம் நூலில் விவரித்துள்ளார். பிரெஞ்சுப் பாதிரியாரான ஆபி டியூபா இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து, பயணங்கள் செய்து, இந்திய மக்களின் வாழ்வு முறையை ஆய்வு செய்து தனது முடிவுகளை 1806 இல் வெளியிட்ட நூல் இது.

“இவ்வித இயல்புடைய இனத்தைத்தான், இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் சாதி என்று உரைக்கின்றனர். ‘சாமி’ என்று சாற்றுகின்றனர். என்னே அவர் தம் நிலை.” என்று கழிவிரக்கம் கொள்கிறார் அண்ணாதுரை. இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கிய “இந்து”  நாளிதழும், இன்றும் பாதிரியார் கண்ட நிலையில்தான் மக்கள் இங்கு உள்ளனர் என்றும் குறிப்பிடுவதால், இது குறுகிய மனப்பான்மை கொண்ட பாதிரியாரின் விவரிப்பு எனவும் கொள்ள வழியில்லை. இதையேதான் வரலாறும் நமக்குக் காட்டுகிறது, இன்றும் அரசு உயர்பதவிகளில் இருப்பவர் பார்ப்பனரே என்று சுட்டிக் காட்டுகிறார் அண்ணாதுரை. பார்ப்பனர்கள் திறமைசாலிகள் என்பதற்காக மட்டும் அரசர்கள் அவர்களுக்குப் பதவிகள் அளிக்கவில்லை, அவர்களிடம் மற்றவர் பணிந்து போகும் இயல்பைக் கொண்டிருப்பதும் அதற்குக் காரணம் என்றும்,  இந்த அமைப்பு அரசர்களுக்கு தொல்லைகளைக் குறைத்தது என்பதை அந்நூல் குறிப்பிடுவதைக் காட்டுகிறார்.

ஆரியர் திராவிடர் கலாச்சாரங்கள் வேறு வேறு:

ஆரியக் கலாச்சாரம் வேறு; திராவிடர் கலாச்சாரம் வேறு  என்பதை ஆய்வுகள் தெளிவாகவே காட்டுகின்றன. முதலில் மாக்ஸ் முல்லர் போன்ற ஆய்வாளர்கள் இந்தியாவை ஆரிய வர்த்தமென்று கூறியும், இந்திய நாகரிகத்தையே ஆரிய நாகரிகம் என்றும்  கருதினர்.  பேராசிரியர் சர். ஜான் மார்ஷல் போன்றோர் திராவிடப் பண்புகளை ஆராய்ந்தறிந்து கூறியபோதுதான், ஆரியர் வருகைக்கு முன்னரே ஓர் இந்திய நாகரிகம் இருந்ததை ஆய்வாளர்கள் பின்னரே  உணர்ந்தனர். இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து,  வீரம் போன்ற இயல்புகளுடன், அறிவு சார்ந்தும், அறம்  சார்ந்தும் வாழ்ந்த திராவிடரின் கோட்பாடுகள், ஆரியரின் கற்பனைப் புனைவுகள் கொண்ட தொன்மங்கள் சார்ந்த கொள்கைகளால் சீர்குலைந்தது என்பதை  ஆய்வாளர்கள் உணர்ந்தனர் என்று குறிப்பிடுகிறார் அண்ணாதுரை.

ஆனால் இந்த வரலாற்று உண்மை நம் மக்களைச் சென்றடையவில்லையே,  மாறாக உண்மையை எடுத்துச் சொல்வோர்தான், மேதாவி எனத் தங்களை நினைத்துக் கொள்ளும் நம்மவர்களால்  நையாண்டி செய்யப்படுகிறார்கள் என வருந்துகிறார். புரோகிதத் தொழிலுக்கு முழுஉரிமை பெற்றுக் கொண்டு மந்திரம் மாயம் என்று மன்னர்களை ஆட்டுவித்ததுடன் மக்களையும் அடிமைப்படுத்தினர், சுரண்டிப் பிழைத்தனர் பார்ப்பனர்கள் என்று “இந்தியாவில் ஆரிய ஆட்சி” என்ற நூலில் ‘ஹாவல்’ எழுதியதை எடுத்துரைக்கிறார் அண்ணாதுரை.

ஆரியர், திராவிடர் வரலாறும் போராட்டமும்:

வரலாற்று ஆசிரியர் பி. டி. சீனிவாச  ஐயங்கார் அவர்களால் எழுதப்பட்டு, 1923 இல் பதிப்பிக்கப்பட்ட “இந்திய சரித்திரம்” என்ற நூலின் முதற் பாகத்தில் கூறப்பட்டுள்ள இந்திய வரலாற்றைச் சுருக்கமாக கொடுத்துதவுகிறார் அண்ணாதுரை. ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதும் பரவியிருந்தவர் திராவிட இனமக்கள். வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்த அன்னியர் (ஆரியர்) தீயால் கடவுளை வணங்கும் வழக்கம் கொண்டவர். அதை ஏற்காத பூர்வீகக் குடிகளான திராவிடர்களை தஸ்யூக்கள் அல்லது ராட்சதர்கள் என்று அவர்கள் அழைத்தனர். வர்ணாசிரமக் கொள்கையான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பது யாகங்களின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து சமயம் என்ற கோட்பாடு வாழ்வில் முக்கியப்பங்கு வகிக்கத் தொடங்கியது. வர்ணாசிரமக் கொள்கையின்படி சத்திரியர்கள் சந்நியாசிகள் ஆவதற்கோ, பிராமணராகப் பிறக்காமல் மோட்சமடைவதற்கோ, ஆரிய மதத்தில் இடங்கிடையாது என்பதை உணர்ந்தபொழுது, சத்திரியத் துறவு சமயங்களான சமணமும், பௌத்தமும் எழும்பின. இவர்களும், இவர்கள் பயன்படுத்திய மொழிகள் முறையே அர்த்த மகதி, பாலி ஆகிய மொழிகளும் ஆரியர்களுக்கும் அவர்களின்  சமற்கிரத மொழிக்கும் எதிரிகளாகக் கருதப்பட்ட நிலை உருவாகியது.  மௌரியர் காலத்தில் வளர்ச்சியடைந்து செல்வாக்கு பெற்று, பெரும் போட்டியாக மாறிய இப்புதுச்சமயங்களை தொடர்ந்து வந்த ஆரிய அரசர்கள் அடியோடு ஒழித்துக் கட்ட முற்பட்டனர்.

siragu annadurai4

ஆனால் தமிழகம் வடவர்கள் ஆதிக்கத்திற்கு உட்படாது, அவர்கள்  ஊடுருவல் இன்றி தொடர்ந்து தனித்தே இயங்கியது. யாகங்களை விரும்பிய தமிழக அரசர்களின் வழி பார்ப்பனர் தமிழ அரசுகளிடம் செல்வாக்கு பெற்றனர். மன்னர்களும் தங்களை சந்திர சூரிய குலங்கள் என்றெல்லாம் ஆரியர் அடியொட்டி அடையாளப்படுத்திக் கொள்ளத் தலைப்பட்டனர். இருப்பினும் கி.பி.400 வரை தமிழர் ஆரியர் வலையில் விழவில்லை என்பதை அண்ணாதுரை தொகுத்து வழங்குகிறார்.  “சரிதமும் இலக்கியமும், சான்றோர் சொல்லும் திராவிடம் தனிநாடாக இருந்ததை மெய்ப்பிக்கின்றன. வேத காலம் முதற்கொண்டு வேற்றுநாட்டு மன்னர்கள் படையெடுப்புக் காலம்வரை, திராவிடம் தனிநாடாகவே இருந்தது!” என்றும்; ஆரியம் உச்சநிலை அடைந்திருந்த காலம் ‘பொற்காலம்’ என்று புகழ் பெற்ற நேரமும், அந்தப் பொற்காலத்திலும் திராவிடம் தனி நாடாகவே தழைத்திருந்தது என்றும்; வடக்கே இசுலாமியர் ஆட்சிக் காலத்திலும் திராவிடம் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் அடங்காது திராவிடம் தனித்து நடைபோட்டது என்றும்; திராவிடம் தனி நாடாகவே இருந்து வந்தது என்பதை வரலாறு  மற்றும் இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு அண்ணாதுரை சுட்டிக்காட்டுவதுடன்; மேற்கொண்டு ஆரிய திராவிட வரலாறுகளை அறிந்துகொள்ளப் படிக்க வேண்டிய நூல்கள் என ஒரு நூற்பட்டியலையும் தருகிறார் (கட்டுரையின் இறுதியில் காண்க) அண்ணாதுரை.

அத்துடன், ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வெற்றி பெற்று நாடெங்கும்  ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற கற்பனையைப் பகுத்தறிவு வாயிலாக ஆராய்ச்சி செய்தல் வேண்டும் என்றும்; ஆரியர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பது குறித்து மொழியியல், மானுடவியல் அடிப்படையில் பாஸ்கி, இத்தாலி ஆசிரியர் செர்ஜி, டாக்டர் ஹாடன் போன்றோர் ஆய்வுகளைக் குறிப்பிட்டும்; இந்து சமூகத்தில் உயர்ந்த சாதிகள் எனப்படுவோர் தங்களுக்குப் பெருமை தருமென்று கருதி தங்களை ஆரியர் என்று கூறிக் கொள்கிறார்களா என்றும் வியக்கிறார்.

ஆரியர் – திராவிடர்கள் வேற்றுமை என்பது உண்மையே:

ஆரியர் திராவிடர் பிரிவுகள் வெறும் கற்பனை என்போருக்குப் பதில் அளிக்கும் விதத்தில் எவ்வாறு நான்கு வருணங்களைக் கற்பிக்கும் சாஸ்திரங்களே மக்கள் வாழ்வுக்கு உரிய சட்டமாகக் கருதப்படுகிறது என்றும்;  ஸ்மிருதியில் கண்டதே சட்டமாகக் கருதும் நிலை ஏற்பட்டதால் அந்தச் சட்டம், ஸ்மிருதி அடிப்படையில் ஆளுக்கொரு நீதி வழங்கும் நிலையை உருவாக்கியுள்ளது என்றும், அதன் அடிப்படையில் பொருத்தமற்ற வகையில் நீதி வழங்கப்படுகிறது என்றும் சான்றுகள் பல தரும் டி.ஏ. இராமலிங்கம் செட்டியார் உரை ஒன்றிலிருந்தும் மேற்கோள்களுடன் காட்டுகிறார் அண்ணாதுரை.

“இனியேனும் திராவிடர்கள், உண்மையை உணருவார்களா? ஆரியர் – திராவிடர்கள் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை, புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களிலிருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும்? இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பிவிடப் படுவது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா?”  என்பது இங்கு இவரால் வைக்கப்படும் மிக முக்கியமான கேள்வி. சிந்தனைக்குரிய ஒரு கேள்வியும் கூட.

தங்கள் பெருமை மறந்த தமிழர்:

Dec-23-2017-newsletter1

கட்டுக்கதைகள் கூறும் சமயக் கருத்துக்களை, தன்மதிப்பை அழிக்கும் வழிபாட்டுச் செயல்களை, உழைப்பின்றி அடுத்தவரைச் சுரண்ட உருவாக்கப்பட்ட  ஆரியச்சடங்குகளை ஏன் தொடர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினால் முன்னோர்கள் செய்ததைத் தொடர்வதாகக் கூறுகிறார்கள் நம் தமிழ் மக்கள். ஆனால் நம் தமிழ் மூதாதையர் இத்தகைய செயல்களைச் செய்ததில்லை. அவர்களிடம் சாதிபேதங்கள் இருந்ததில்லை, அவர்களிடம் சமத்துவமும் சகோதரத்துவமும் இருந்தது என்று கூறும் அண்ணாதுரை தனது கூற்றுக்குச் சான்றாக வரலாற்று ஆசிரியர்  எம். எஸ். இராமசாமி ஐயங்கார் எழுதியுள்ள மதுரை ஜில்லா பூவருணனை நூலில் கூறியுள்ள பின்வரும் கருத்துக்களையும் மேற்கோளாகக் காட்டுகிறார்.

“ஆதி காலத்திலே திராவிடர்கள் சாதி பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்துவந்தார்கள். பின்பு ஆரியர் திராவிட நாட்டில் வந்து குடியேறித் திராவிட மன்னர்களின் தயவைப் பெற்றார்கள். ஆரியரில் சிலர் அந்த மன்னர்களுக்குக் குருவானார்கள். அதன் பின்னர்தான் தமிழ்நாட்டில் ஆரிய “நாகரிகம்” பரவத் தொடங்கிற்று. ஆரிய மதமும் தெய்வங்களும் ஆசாரங்களும் சாதி வித்தியாசங்களும் தமிழ்நாட்டில் வேரூன்றி விட்டன” எனவும், சங்க இலக்கியங்கள் வழி இக்கருத்துகள் புலப்படுவதாகவும், அக்காலத்தில் தமிழகத்தில் பெளத்த சமண மதங்கள் தமிழரிடம் பரவியிருந்ததாகவும் கூறும் எம். எஸ். இராமசாமி ஐயங்கார், மேலும், “தற்காலத்தில் குடும்பத்திலிருக்கும் ஒருவன் ஒரு மதத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவினால், அவனைச் சாதியில் சேர்த்துக்கொள்வது வழக்கமில்லை. சங்க காலத்தில் அப்படியில்லை. ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் எந்த மதத்தை வேண்டுமானாலும் அனுசரிக்கலாம். அதனால், அவனுக்கு, யாதொரு குற்றமும் ஏற்படாது. குடும்பத்தார் அவனை நீக்குவதும் இல்லை. இது (அக்காலத்) தமிழர்களுடைய விரிந்த மனப்பான்மையையும், நாகரிக உயர்வையும் காட்டுகிறது” என்றும் கூறுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
RE: சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை” தேமொழி
Permalink  
 


 

தமிழ்மொழியின் இலக்கண இலக்கியங்களிலும் ஆரிய ஊடுருவல்:

“இலக்கியங்களிலே பற்பல மூடநம்பிக்கைகள் புகுந்து பொய்ம்மை மலிந்து, மக்கள் கருத்தைப் பாழாக்குகிறது என்பது ஒருபுறமிருக்க, புலவர் பெருமக்கட்கே உரிய இலக்கணங்களின் நிலைதான் என்ன?” என்று வினவும் அண்ணாதுரை, இலக்கண நூல்களிலும் ஆரிய வர்ணாசிரமபேதம் நுழைந்துள்ளதைக் காட்டுகிறார். “பாட்டியலில், பன்னீருயிரும் முதலாறு மெய்யும் பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறுமெய்கள் அரச வருணம் என்றும், நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது” என்ற குறிப்பை எடுத்துக்காட்டி, “‘ல, வ, ற, ன”என்ற நான்கும் வைசிய எழுத்துகளாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துகளாம். இதிலும் ஓர் உண்மை விளங்குகின்றது,” என்று கூறும் அண்ணாதுரை, தமிழ் மொழிக்கே சிறப்பாகவுள்ள ஆனால்  வடமொழியில் இல்லாத எழுத்துக்கள் சூத்திர எழுத்து எனக் கூறப்படுவதன் பொருளென்ன? என்றும் கேட்கிறார்.

பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப்பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப்பாவாலும் பாட வேண்டும் என்று (இலக்கியத்தில்  வழக்கற்று இருக்கும் ஒரு முறை இது) இலக்கணத்தில் விதியாகப் புகுத்தப்பட்டுள்ளதையும்; கலம்பகத்தில் “தேவருக்கு 100 செய்யுளும், பார்ப்பனருக்கு 95-உம், அரசருக்கு 90-உம், அமைச்சருக்கு70-உம், வணிகர்க்கு 50-உம், மற்றவருக்கு 30 செய்யுளும் பாடவேண்டுமென்பது” பாட்டியல் விதிகளாகக் கூறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டும் அண்ணாதுரை “தமிழ்ப்பா இயற்றுமிடத்திலும், ஆரியத்துக்கு முதல் தாம்பூலமா?” என்றும், “மனுநீதியைவிடப் பாட்டியல் எவ்வகையில் மாறுபட்டிருக்கின்றது?” என்றும் வினா எழுப்புகிறார்.

ஆரியர் பண்பாடும் தமிழர் பண்பாடும்:

ஆரியம் கலக்கா பழந்தமிழர் காலம் எது?  என்று அறிய விரும்பினால், சோமசுந்தர பாரதியார் மொழியாய்வின் வழி கூறும், “ஆரியர் ஆதிக்கத்தைத் தமிழரிடத்துச் சுமத்தமுடியாத காலம் கி.பி. 2, 3-ஆம் நூற்றாண்டு. அதாவது ஆரியர் வருகையால் தமிழிலுள்ள சில பதங்கள் ஆரியத்திலும், ஆரியப் பதங்கள் சில தமிழிலும் ஏறத் தொடங்கிய காலம்.  அன்று தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இல்லை. அதன் பின்னர் 3-ஆம் நூற்றாண்டில்தான், தமிழில் சில ஆரியப் பதங்கள் கலக்க நேரிட்டது.  அதாவது சிலப்பதிகாரத்திற்கு முந்திய காலம். ஏன்? சிலப்பதிகாரத்திலேயே ஆரியம் கலந்த முறை வந்துவிட்டது” என்றும் கருத்தை அண்ணாதுரை நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.

ஆரியம் கலக்கும் முன் தமிழர் வாழ்வின் சடங்குகள் எவ்வாறு ஆரியரிடம் இருந்து வேறுபட்டிருந்தன என்பதையும்பழந்தமிழர் வாழ்ந்த தற்சார்புகொண்ட, காதல், இல்லறவாழ்வு, வாழ்வியல் முறைகளையும்;   அடிப்படையில் ஆரியர் குடும்ப அமைப்பும் கொள்கைகளும் தமிழரிடம் இருந்து  வேறுபட்டிருந்ததையும் அதற்கான காரணத்தையும் குறிப்பிடும் சோமசுந்தர பாரதியார், “எவ்வழி நோக்கினும், ஆரிய நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றிற்கொன்று மாறுபட்டது” என்று காட்டும் கருத்துகள்  தமிழர் தம் கருத்தில் இருத்த வேண்டியவை.

உள்ளதைத்தான் எழுதினார் அண்ணாதுரை:

“கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களும், ஆராய்ச்சி வசதி நிறைந்தவர்களுமாவது, இந்தத் துறைகளிலே சற்று உழைப்பார்களானால், திராவிட இனம் உய்ய வழி உண்டு. இல்லையேல் உலகிலே பல இனங்கள் பாழ்பட்டு மறைந்துபோனது போல, ஒரு காலத்திலே உலகப் புகழ் வாய்ந்த திராவிட இனமும் அழிந்தேதான் போகும்! எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறதோ அந்த இனம் அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்” என்று விழ்ப்புணர்வு வர அறிவுரையும் கூறி எச்சரிக்கையும் விடுக்கிறார் அண்ணாதுரை. புரட்சிக் கவி பாரதிதாசனின் ஆரிய அடிவருடியாக இருக்க மாட்டேன் என்று முழங்கும்  பாடல் வரிகளைக் கொடுத்து எழுச்சியூட்டுகிறார். “ஆரியத்தைக் குறித்து இங்குத் திரட்டித் தொகுத்துத் தரப்பட்டுள்ள விசயங்களைச் சற்றே பொறுமையுடன், அக்கறையுடன் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாருங்கள். ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிஞர்கள் தந்துள்ள அரிய உண்மைகளைக் காண்மின்! பிறருக்குக் கூறுமின்! அறப்போர் தொடுமின்! ” என்ற வேண்டுகோளையும் வைக்கிறார் அண்ணாதுரை.

காதலுக்குத் தகுதியற்ற ஒரு அழகியிடம் மயங்கி, நண்பனின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது காதல் வலையில் சிக்கிக் கட்டுண்டு, உடல் நலம் சீரழிந்த பின்னர் நண்பனிடம் புலம்பும் ஒருவராக ஆரியமாயையில் வீழ்ந்து அழிவுற்ற தமிழரையும்,அவருக்கு நல்லுரை கூறும் நண்பராகக் கழக இயக்கத்தினரை ஒப்பிட்டு உருவகப்படுத்தி  அண்ணாதுரை எழுதியுள்ள பகுதி இலக்கியச்சுவை மிக்கதும் கூட.

நர்மதை ஆற்றுக்கு மேலேதான், வடநாட்டில் ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை போன்ற குறிப்புகள் மூலம் அண்ணாதுரை வடக்கு தெற்கு என்று திசைகள் குறிப்பதற்குப் பதிலாக,  வரைபடங்களில் காணுவதைப் போல மேல் கீழ் எனத் திசையைக் குறிப்பிடும் வழக்கமுள்ளவர் என்ற தகவல் வியப்பளிக்கிறது. தனது கருத்துகள் சராசரி மக்களையும் சென்றடையச் செய்யும் நோக்கத்தினால் இது போன்ற சொற்பயன்பாடுகள் கொண்டதா அவரது முயற்சி எனத் தெரியவில்லை.

திராவிட நாட்டுப் பிரிவினை, இந்து – முஸ்லீம் ஒற்றுமை போன்ற அக்கால திராவிட இயக்கக் கொள்கைக் கருத்துகளின் தாக்கமும் நூலில் ஆங்காங்கே விரவப்பட்டுள்ளது. “மிக்க தந்திரத்தோடு, ஆரியர் காங்கிரசின் துணையை நாடியோ, இந்து மகாசபையின் துணைகொண்டோ, வெள்ளையரின்  துணை கொண்டோ, திராவிட மறுமலர்ச்சியைத் தடுக்க முயன்றால் “தாமதம்”, ஏற்படக் கூடுமே தவிர, ”தடை” யேற்படாது. முடிவு  பிரிவினைதான்!” என்று குறிப்பிடும் வரிகளின் மூலமும்;  “பாகிஸ்தானம் எப்படி வெறுங்கனவோ, அப்படியே திராவிட ஸ்தானமும் கனவுதான்” என்று கூறி, மனச்சாந்தி பெறுகிறார் சாஸ்திரியார்” என்று குறிப்பிடும் வரிகளின் மூலமும், இந்த நூல் எழுதப்பட்ட காலம்,  இந்தியா விடுதலைப் பெறாத காலம் என்பது தெளிவானாலும், அண்ணாதுரை நூலுக்காகத் தண்டனை பெற்றது விடுதலைப் பெற்ற இந்தியாவில் எனப் பிற குறிப்புகள் சுட்டுகின்றன.

முடிவுரை:

நூலைப் படித்த பின்னர் எஞ்சியிருப்பது, மனதில் நிழலாடுவது… தனது மக்களுக்கு விழிப்புணர்ச்சி வர, யாரையும் ஏசாத, ஆய்வாளர்கள் கண்ட உண்மைகளை மேற்கோள்களுடன் கொடுத்த ஒரு சிறு நூலுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் சரியா என்ற கேள்வி மட்டுமே. இக்காலத்தில் யூடியூப் காணொளிகள் வழி, சமூக வலைத்தளங்கள் வழி தரக்குறைவான எத்தனை எத்தனையோ பொய் புரட்டுக் கருத்துகளை, காது கூசும் வசைகளைத் தினசரி எதிர்கொள்வது வாழ்க்கையாகிவிட்டது. அவ்வாறு மக்களிடையே கலகம் கிளப்புவதற்குச் சான்று காட்ட எச். ராஜா என்பவர் மட்டுமே போதும்.

அண்ணாதுரை எதிரியையும் மதித்துப் பேசும் பண்பாளர் என்பதும் கூட அவரை நன்கு அறிந்த பலர் முன்வைக்கும் தகவல். யாரையும் அவமதிக்காதவாறு பிறரின் ஆய்வு முடிவுகளைத் தொகுத்து, தமிழக மக்கள் அறிய வேண்டிய வரலாற்று “உண்மைகளை” மக்கள் முன் வைத்த ஒரு நூலுக்காகச் சிறைத் தண்டனை என்பது என்றென்றும் நீதிக்கு உறுத்தல் தரக்கூடிய ஒரு தீர்ப்பு என்பதில் ஐயமில்லை. அத்துடன் இந்த நூலைத் தடை செய்வதற்கான முறையில் நூலில் எதுவும் எழுதப்படவுமில்லை.  மாறாக இது பரிசு கொடுத்துப் பாராட்டப்பட்டிருக்க வேண்டிய ஒரு நூல் என்பதே சான்றோர் முடிவாக இருந்திருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் படிப்பதில் முதன்மையானவராக இருந்தவராம் அண்ணாதுரை. உடல்நலம் குன்றிய நிலையில், அறுவைச்கிச்சைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்தை மாற்றினால் அதற்குள் படிக்கும் நூலை முடித்துவிடலாம் என்று கருதி மருத்துவரிடம் வேண்டுகோள் விடுத்தவர் அண்ணாதுரை என்பது தமிழகம் அறிந்த செய்தி. அத்தகைய நூலார்வலரான அண்ணாதுரை சிறைத்தண்டனையை இடையூறின்றி நூல்களைப்படிக்க, தாம் நினைத்ததை எழுதக் கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே மாற்றிக் கொண்டிருந்திருப்பார் என்பது திண்ணம். ஆம், சிறையில் ஆரியமாயை எதிர்க்கும் தமது வாளை அண்ணா இடையூறின்றி கூராகப் பட்டை தீட்டிட அவரது  எதிர்ப்பாளர்களே உதவி செய்துள்ளார்கள் என்பதை எவராலுமே ஊகிக்க முடியும்.

ஆரிய மாயை-நூல்:

ஆரிய மாயை, அறிஞர் அண்ணா அறக்கட்டளை

http://annavinpadaippugal.info/katturaigal/aariyamaayai.htm

https://www.scribd.com/document/361082403/Arya-Maayai

__________________

சான்றாதாரங்கள்:

* Hindu Manners Customs And Ceremonies, by Abbe J. A. Dubois, Publication date 1905, Page 289

https://archive.org/stream/in.ernet.dli.2015.280505/2015.280505.Hindu-Manners#page/n317/mode/2up/

முத்தமிழ் வித்தகர் அண்ணா…

http://keetru.com/index.php/component/content/article?id=3908

சிறுகதை வரலாற்றில் அண்ணாவின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது!  ச.தமிழ்ச்செல்வன், விகடன், 03/02/2018.

https://www.vikatan.com/news/miscellaneous/115321-literature-intelligence-of-cnannadurai.html

ஆரிய மாயை – விக்கிப்பீடியா

https://ta.wikipedia.org/s/1yui

__________________

ஆரிய திராவிட வரலாறுகளை அறிந்துகொள்ளப் படிக்க வேண்டிய நூல்கள் என அண்ணாதுரை குறிப்பிடும் நூல்கள்:

ராமேஸ் சந்திர தத் எழுதிய “புராண இந்தியா”

ராமேஸ் சந்திர மசும்தார், எழுதிய “பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்.”

சுவாமி விவேகானந்தர், “இராமாயணம்” என்னும் தலைப்பில் பேசிய பேச்சு.

1922 கேம்பிரிட்ஜ் பிரசுரித்த, “பழைய இந்தியாவின் சரித்திரம்.”

ராதா குமுத முகர்ஜி எழுதிய “இந்து நாகரிகம், ரிக்கு வேதம்.”

ஜேம்ஸ் மர்ரே எழுதிய “அகராதி”

பண்டர்கார் கட்டுரைகள்.

டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய “தென் இந்தியாவும் இந்தியக் கலையும்.”

P.T. சீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம்”

ஜெகதீச சந்தடட் எழுதிய “இந்தியா – அன்றும் இன்றும்”

A.C. தாஸ் எழுதிய “வேதகாலம்”

C.S. சீனிவாச்சாரியார் எழுதிய “இந்தியச் சரித்திரம்”, “இந்து இந்தியா”

H.G.வெல்ஸ் எழுதிய “உலக சரித்திரம்.”

சகலகலா பொக்கிஷம் என்னும் “நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா”

C.G. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு”

ஹென்றி பெரிஜ்  எழுதிய விரிவான இந்திய சரித்திரம்”

இ.பி. ஹாவெல் எழுதிய “இந்தியாவில் ஆரிய ஆட்சி”

G.H. ராலின்சன் எழுதிய “இந்தியா”

நாகேந்திரநாத்கோஷ் எழுதிய “ஆரியரின் இலக்கியமும் கலையும்”

வின்சென்ட் ஏ ஸ்மித் எழுதிய “ஆக்ஸ்போர்ட் இந்திய சரித்திரம்”

“இம்பீரியல் இந்தியன் கெஜட்”

சர். வில்லியம் வில்சன் ஹண்டர் எழுதிய “இந்திய மக்களின் சரித்திரம்.”

ராகோசின் எழுதிய “வேதகால இந்தியா”



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
பிறவிப் பெருங்கடல் இராமியா
Permalink  
 


 

பிறவிப் பெருங்கடல் 

இராமியா Feb 9, 2019

siragu piravikkadal2இந்து மதச் சாத்திரங்கள் மக்களை வருண/சாதி ரீதியாகப் பிரித்து வைத்து உள்ளன என்பதும், அந்த வருண/சாதி ஏற்றத்தாழ்வுகள் பிறவி அடிப்படையிலேயே விதிக்கப்பட்டு உள்ளன என்பதும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மைகள். ஆனால் பார்ப்பனர்கள் “இல்லையே! வருண/சாதிப் பிரிவுகள் பிறவி அடிப்படையில் இல்லையே! அவை குணத்தின் செய்கையின் அடிப்படையில் தானே நிர்ணயிக்கப்பட்டு உள்ளன?” என்று கொஞ்சமும் கூசாமல் வாதம் செய்கின்றனர்.

“குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செய்கை யற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தேன் என்றுணர்”

என்ற பகவத்கீதையின் 4வது அத்தியாயத்தின் 13வது செய்யுளை மேற்கோள் காட்டி உரக்கக் கூவுகின்றனர். பார்ப்பனர்களின் இந்த இரைச்சலுக்கு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் பலர் மயங்கி / குழம்பி விடுகின்றனர். இந்த மயக்கம் குழப்பம் இருக்கும் நிலையிலயே “வருணம்/சாதி பிறவி அடிப்படையில் இல்லாமல் குணத்தின், செய்கையின் அடிப்படையில் இருக்கும்போது இடஒதுக்கீடு சாதி அடிப்படையில் இருப்பது தவறு” என்ற நச்சுக்கருத்தை/நச்சுச்சிந்தனையை மக்கள் மனதில் விதைக்க முற்படுகின்றனர்.

ஆனால் இந்து மதச் சாத்திரங்கள் உண்மையில் வருணத்தை/சாதியைப் பிறவி அடிப்படையில் பிரித்து வைக்காமல் குணத்தின், செய்கையின் அடிப்படையிலா பிரித்துவைத்து உள்ளன? இந்துமதச் சாத்திரங்களில் கூறப்பட்டு உள்ள சில செய்திகளைப் பார்ப்போம். மனு ஸ்மிருதியின் 2ஆம் அத்தியாயத்தின் 31வது செய்யுள்,

“பிராமணனுக்கு மங்களத்தையும், க்ஷத்திரியனுக்கு பலத்தையும், வைசியனுக்கு பொருளையும், சூத்திரனுக்கு தாழ்மையயையும் காட்டுகிறதான பெயரை இட வேண்டியது”

என்று கூறுகிறது.

நன்கு கவனித்துப்பாருங்கள். வருணம் தீர்மானிக்கப்பட்ட பின்புதான் ஒரு குழந்தைக்குப் பெயரிடும் சடங்கே நிகழ முடிகிறது. வருணம்/சாதி பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் குணத்தின் செய்கையின் அடிப்படையில் அமைவதாய் இருந்தால், அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி, அவனுடைய குணத்தையும் செய்கையையும் கண்ட பிறகுதான் அவன் எந்த வருணத்தை/சாதியைச் சேர்ந்தவன் என்று தெரிந்து கொள்ளமுடியும். ஆனால் பிறந்தஉடனேயே செய்யும் பெயரிடும் சடங்கின்போதே வருணத்தை அடிப்படையாகக் கொண்டுதான் செய்யவேண்டும் என்றால், வருணம் பிறவி அடிப்படையில்தான் அமைகிறது என்று புரிந்துகொள்ள அடிமட்ட அறிவிலியாலும் முடியுமே?

மேலும் மனு ஸ்மிருதியின் 2ஆம் அத்தியாயம் 238வது செய்யுள்

“அன்புள்ளவன் மேலான வித்தையை சூத்திரனிடத்தில் இருந்தாலும், மோக்ஷ தருமத்தை சண்டாளனிடத்தில் இருந்தாலும், ஸ்த்திரரத்தினத்தை (அதாவது அழகான, பண்புள்ள பெண்ணை) தனக்குத் தாழ்ந்த குலத்தில் இருந்தாலும் கிரகித்துக் கொள்ளலாம்” என்று கூறுகிறது.

Siragu-pirappokkum4

குணத்தின், செய்கையின் அடிப்படையில்தான் வருணம் அமைகிறது என்றால், மேலான வித்தையை அறிந்தவன் எப்படி சூத்திரனாக இருக்கமுடியும்? மோக்ஷ தருமத்தை அறிந்தவன் எப்படி சண்டாளனாக இருக்க முடியும்? அவ்வித்தையை, அந்த அறத்தை உணர்ந்த நிலையில் அவர்களைப் பிராமணர்களாகத்தானே வகைப்படுத்த வேண்டும்? அவ்வாறு வகைப்படுத்தாமல், சூத்திரனிடத்தில் இருந்தும், சண்டாளனிடத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி இருப்பதானது வருணம் என்பது குணத்தின், செய்கையின் அடிப்படையில் அல்ல; பிறவியின் அடிப்படையில்தான் என்பதற்கான உறுதியான சான்று அல்லவா?

இந்துமதச் சட்டங்களைச் சொல்லும் இன்னொரு சாத்திரமான பராசர ஸ்மிருதியின் 8வது அத்தியாயம் 25வது செய்யுள்,

“பிராமணன் இழிதொழிலினனாகவே இருக்கட்டும்; அப்போதும் அவன் வழிபடத்தக்கவன். சூத்திரன் உயரிய நற்குணங்களே உருவானவனாயினும் சரி; அவனை வழிபடலாகாது. கன்று போட்ட பசுவொன்று துஷ்டத்தனம் பண்ணுகிறது; குட்டிபோட்ட கழுதையொன்று சாதுவாக வீட்டில் இருக்கிறது. இவ்விரண்டில் அறிஞர் பசுவை விட்டுவிட்டுக் கழுதையைக் கறந்து பாலைக் கிரஹிப்பார்களா?”

என்று கூறுகிறது.

வருணம் பிறவி அடிப்படையில் அமையாமல் குணத்தின் அடிப்படையில் அமைகிறது என்றால் இழி தொழிலினன் எப்படி பிராமணனாக இருக்கமுடியும்? உயரிய நற்குணங்களே உருவானவன் எப்படி சூத்திரனாக இருக்க முடியும்?

மனு ஸ்மிருதியும், பராசர ஸ்மிருதியும் சாதாரண மக்களிடையே வெகுவாகப் புழங்காத நூல்கள். ஆனால் பகவத்கீதை மக்களிடையே வெகுவாகப் பரப்பப்பட்டு உள்ளது. கிருத்தவர்களுக்கு விவிலியம் (பைபிள்) போலவும், இசுலாமியர்களுக்குக் குரான் போலவும், இந்துக்களுக்கு ரிக், யஜூர், சாம, அதர்வ வேதங்களைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் அவற்றை இந்து மதத்தின் ஆதார நூல்களாகக் கொடுக்காமல் பார்ப்பனர்கள் பகவத்கீதையையே முன் நிறுத்திக் காட்டுகின்றனர். அத்தகைய பகவத்கீதையின் முதல் அத்தியாயம் 41வது செய்யுள்

“கண்ணா! அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப்போகிறார்கள். விருஷ்ணி குலத்தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது”

என்று கண்ணனைப் பார்த்து அருச்சுனன் கேட்பதாக உள்ளது.

மாதர் கெடுவதற்கும் வர்ணக் குழப்பம் உண்டாவதற்கும் என்ன தொடர்பு? வர்ணம் குணத்தின், செய்கையின் அடிப்படையில் அமைகிறது என்றால், அருச்சுனனின் கருத்துப்படி “கெட்டுப்போன” பெண்களுக்குப் பிறந்தவர்களின் குணத்தின், செய்கையின் அடிப்படையில் வருணத்தை முடிவுசெய்ய முடியுமே? இதில் குழப்பம் ஏன் வருகிறது? ஏனென்றால் வருணம் பிறவியில் அமைவதால்தான் அருச்சுனனுக்குக் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் பகவத்கீதையின் 18வது அத்தியாம், 47வது செய்யுள்,

“பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று. இயற்கையிலேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்”

என்று கூறுகிறது.

வருணம் பிறவி அடிப்படையில் அமையாமல் குணத்தின், செய்கையின் அடிப்படையில் அமைகிறது என்றால், ஒருவனால் எந்தத் தொழிலைத் திறம்படச் செய்யமுடிகிறதோ அந்தத் தொழிலுக்கு உரிய வருணத்தில் அவனை வகைப்படுத்திவிட வேண்டியது தானே? அதை விட்டுவிட்டு “உன்னால் திறம்படச் செய்ய முடிந்தாலும் உனக்கு விதிக்கப்படாத அந்தத் தொழிலைச் செய்யாதே. அரைகுறையாகவே செய்ய முடிந்தாலும் உனக்கு விதிக்கப்பட்ட தொழிலையே செய்” என்று கூறினால் அவனுக்கு அந்தத் தொழில் பிறவி அடிப்படையில்தானே விதிக்கப்படுகிறது? அதாவது வருணம்/சாதி பிறவி அடிப்படையில்தானே நிர்ணயம் ஆகிறது?

வருணம்/சாதி என்பது பிறவி அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்பதற்கு இவ்வளவு வலுவான சான்றுகள் இந்துமத நூல்களிலும், நடைமுறையிலும் இருக்கும்போது பார்ப்பனர்கள் ஏன் மாற்றிக் கூறுகின்றனர்?

மகாத்மா புலே, தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் போராட்டங்களுக்குப்பின், பார்ப்பனர்கள் மட்டுமே உயர்நிலை வேலைகளில் இருக்கமுடியும் என்ற நிலைமாறி ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் சிலருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு வாய்ப்பு பெற்றவர்கள் பல இடங்களில் பார்ப்னர்களை விடத் திறமைசாலிகள் என்று மெய்ப்பித்தனர். இதனால் கிலி அடைந்துபோன பார்ப்பனர்கள் சாதி எனும் கருத்தியலில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தைத் தளர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பல வழிகளில் சிந்தித்தனர் / சிந்திக்கின்றனர். அதில் ஒன்றுதான் சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல; குணத்தின், செய்கையின் அடிப்படையில் என்ற கருத்தியலைப் பரப்புவது. இக்கருத்திற்கு வலுவூட்டி, அதன்பின் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதும், அதன்பின் வழக்கம் போல் திறமைக்குறைவான பார்ப்பனர்களையும் “திறமைசாலிகள்” என்று கூறி உயர்நிலை வேலைகளில் அமர்த்துவது, ஒடுக்கப்பட்ட வகுப்பில் உள்ள திறமைசாலிகளைத் “திறமைக் குறைவானவர்கள்” என்று கூறி அவர்களுக்கு உயர்நிலை வேலைகளை மறுப்பது போன்ற உத்திகளுக்கு உராய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும்தான் அவாளின் திட்டம்.

வருணம்/சாதி பிறவி அடிப்படையில் இல்லை என்று வெளியில் கூறினாலும், இந்து மத நூல்களும் நடைமுறையும் அதைப் பிறவி அடிப்படையில்தான் வகைப்படுத்தி உள்ளன என்பதைப் பார்ப்பனர்கள் நன்கு அறிவார்கள். இந்தப் “பிறவி” எனும் பெருங்கடலைக் கடப்பதற்காக நாம் நீந்தும் முயற்சியில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காகவே அவாள் அவ்வாறு கூறுகின்றனர். ஆனால் நாம் பிறவி அடிப்படையிலான இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து நீந்திக் கரை சேர்ந்தே ஆக வேண்டும். அதற்கு ஒரே வழி அனைத்துத் துறைகளிலும், அனைத்துத் தொழில்களிலும், அனைத்துப் பொருளாதார, சமூக நடவடிக்கைகளிலும், அனைத்து நிலைகளில் முற்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டடோர், பழங்குடியினர், மத சிறுபான்மையினர் ஆகியோருக்கு அவரவர் மக்கள்தொகை விகிதத்தில் பங்கு அளிப்பதே. கயமை நிறைந்த பொதுப்போட்டி முறையை முற்றிலும் ஒழித்துவிட்டு விகிதச்சாரப்பங்கீடு முறையைச் செயல்படுத்தினால் அந்தந்த வகுப்பில் உள்ள திறமைசாலிகள் உயர்நிலைகளிலும், அந்தந்த வகுப்பில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அடுத்த நிலைகளிலும் வேலை செய்யும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். அந்நிலையில் இப்போது உள்ள சாதி/ பிறவி அடிப்படையிலான ஒடுக்குமுறை மறைந்து நாம் “பிறவி” எனும் பெருங்கடலை நீந்தி கரைசேர்ந்து இருப்போம். அவ்வாறு இன்றி விகிதாச்சாரப்பங்கீடு கேட்கவில்லை என்றால் பிறவி அடிப்படையிலான சாதிய ஒடுக்கலில் அழுந்தியே இருக்க நேரிடும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
வகுப்புரிமை கேளா தவர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard